வசம்தா , தேனடா , இந்து நேத்ர மகா சக்கரம் , சோமுப்பிரியா தந்த சஞ்சய் சபா !
- ARAVINDAN MUDALIAR
- Dec 26, 2021
- 7 min read


வாணியைத் தொடர்ந்து வித்வத்தில் கலையரசின் கச்சேரி நேற்று , வித்வத் சபையில் தலைவர் தமிழும் நானும் தொடங்கி பிரம்ம சபை பொன்விழா வரை , அதிகாலை பனியில் காத்திருக்கும் சொதனையெல்லாம் இல்லாமலே இணையவழி முன்பதிவை முத்தாய் தொடங்கி இருந்தார் , இந்த முறையும் நம் எலியின் க்ளிக் மூலம் எளிதாய் நுழைவுச்சீட்டு பெற்றோம் , கிறிஸ்மஸில் எப்போதும் கூடும் இடம் கிருஷ்ண கான சபை ! 2020 இல் அதை நாம் இழந்தாலும் கிறிஸ்மஸ் அன்று கச்சேரி உண்டு என்கிற நிம்மதி நமக்கு பேராறுதல். ஜேம்ஸ்பாண்டு போல் தலைவரின் சஞ்சய் சபா பெயரை கும்மிருட்டில் வ பிரம்மாண்ட கோலப் பின்புலத்தில் காட்டினர் , தலைவரோடு நெய்வேலியார் , வரதர் , வெங்கட்ரமணன் கஞ்சீரா , ரேதஸ் ராகுல் இருவரும் இரட்டைத்தம்பூரா ! தலைவரின் குரு கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்த கச்சேரியை அவருக்கு அர்பணித்துள்ளார் தலைவர்.நாம் ஒரு காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளோம் , பல நன்மாணாக்கர் பல தேசங்களில் பணியாற்றி வருகிறார்கள் , பொது இடங்களில் சந்தித்தால் தேடி வந்து நமக்கு நன்றி கூறுகிறார்கள் , நாம் 11,12ஆம் வகுப்பே எடுத்தாலும் அவர்கள் இந்த நிலைக்கு உயர நானே காரணம் என்று கூறுவது அவர்கள் பெருந்தன்மை. குரு பக்தி மிக்க மாணவர்கள் இன்றும் உண்டு , தலைவர் சங்கீத உலகில் உயரத்தில் இருந்தாலும் அதற்கு காரணமான ஏணியை போற்றி ஒரு கச்சேரியை அர்பணிப்பது அவர்தம் உயரிய குணத்திற்கு நற்சான்று என்றவாறு வந்தமர்ந்தார் கோபால கிருஷ்ணபாரதி , இன்று எதிர்பார்த்தவாறு திருவாளர் கிருஷ்ணமூர்த்தியின் மாளவி , கானடா , சுத்தானந்த பாரதி , சுப்ரமணிய பாரதி , தலைவர் தாமே இயற்றிய மாரு பெஹாக் , வசந்தா , பேகடா , ஷண்முகப்பிரியா என்று மிக அருமையான பாடல் பட்டியல் . என்ன ஓய் உம் பாடல் தொடர்ந்து பாடி வருகிறார் , நீரும் ஏதனும் ஸ்பான்ஸரோ என்று கோபாலரை பார்த்து எக்களித்தான் திருமலை , கோபாலர் ஆம் நான் சங்கீத உலகிற்கு எம் ஈசன் மீது எண்ணற்ற பாடல் தந்த ஸ்பான்ஸர் என்றார் , பவுன்சர் இருந்தால் இவர்களை வெளியே அனுப்பலாம் என்று தேடிவிட்டு , தலைவர் இசைக்கு தயாரானேன்.
1) நின்னேகோரி மாளவி வர்ணம் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியின் உருப்படடி , வழக்கம்போல் விறுவிறுப்போடு ஸ்வரத்தை இறக்கினார் வித்வத்தில் , நெய்வேலியார் உற்சாகம் பொங்க வாசிக்க , வரதர் மைக்ரோபோனுடன் வாசித்தார் புதுமையாக , வித்வத்சபையின் ஒலி அமைப்பு மிகவும்பிரசித்தி ஆனால் நேற்று படு சொதப்பல் , தலைவர்அதைப்பொருட்படுத்தாமல் மதனாதசுந்தரா என்று பாய்ந்தார் சரணத்தில் , சிட்டைஸ்வரங்கள் வரங்களாக நம்மை ஆட்கொண்டன , குறுகிய வர்ணம் என்றாலும் குதூகலமாய் அமைந்தது .
2) கானடா அது சஞ்சய் பாடினால் இன்பதேனாடா என்றால் கோபாலர் , நான் பேகடாவிற்கு அப்புறம் நான் என்ன எழுதுவது என்றேன் , ஓ சரி சாரி என்றார் கோபாலகிருஷ்பாரதி . இதற்குள் தலைவர் காடனாவில் அரங்கை அப்படியே பெயர்த்து எடுத்து ஒரு ஆகப்பெரிய கப்பலில் கிடத்தி , கானடா சமுத்திரத்தில் பயணிக்க செய்தார் , மதுராபுரி பெருந்தெய்வம் சமுத்திரத்திலிருந்து எழுந்தருளி நம் பால அருள்பாலித்தது. தொடர்ந்து ஒலி பெருக்கி ஓலமிட்டபடி தொல்ல தந்தது , ஒரு நல்ல கலைஞனுக்கு இதை விட சோதனை என்ன வேண்டும் , தலைவரோ அதை பொருட்படுத்தாமல் தன் ஸ்வரமெனும் அஸ்திரத்தால் அரங்கை கட்டிப்போடார் , கட்டுண்டோம் நாம் கானடாவில் , கிருஷ்ணமூர்த்தியார் எப்படியெல்லாம் இந்த பண்ணை இயற்றியுள்ளார் என்று ஆச்சர்யப்பட்டோம். தலைவரின் ஸ்வரம் உச்சத்திற்கு செல்ல அரங்கு இன்பக்குன்றின் உச்சிக்கு சென்றது , தலைவரின் நிரவல் ஸ்வரம் தொடர்ந்து வரதரின் நிரவல் ஸ்வரம் படு அருமையாக இருந்தது , மனிதர் என்னமாய் வாசிக்கிறார் , ஒலி சற்று குறைவாக வந்தாலும் அதையும் விஞ்சி நின்றது இவரின் பேரிசை , தலைவரின் தடங்களை அனைத்திலும் தன் முத்திரை பதித்தார் வரதர் , பாடல் முடிவில் வழமை போல் நெய்வேலியார் ஒரு மினி பிரளயத்தை உண்டு பண்ணிணார்.
3) வாணி கச்சேரியில் வசந்தி அக்கா அடுத்த கச்சேரிக்கு வர இயலாது என்றார் , நான் உடனே அப்போ வசந்தா பாடுவார் என்று வம்பிழுத்தார் , சங்கர் எல்லாம் சிவன் செயல் என்று அமைதி கொள்ளுங்கள் என்றார் , தலைவர் வசந்தாவில் சுத்தானந்த பாரதியின் எல்லாம் சிவன் செயல் பாடல் பட்டியலில் தர , அடடா என்று அங்கலாய்த்தோம் , ஆனால் நேற்று வசந்தாவில் ஆலாபனை துவக்கவும் அய்யகோ என்று விக்கித்து போனோம் , வசந்தி அக்கா இல்லாத அவயில் தலைவர் வசந்தாவை ஆலாபனை தந்து , சரி இருக்கட்டும் பரவாயில்லை நீ வசந்தாவில் வசம்தா என்று ஆலாபனை புரிய வசம்தந்தோம் நாமும் அவையும்.வசந்தா ராகம் என்றும் கேட்க ரம்மியமானது , மிகவும் உணர்வுப்பூர்வமாக நம்மோடு உறவாடும் ராகம் . கேட்க கேட்க சிலிர்த்தோம் ,ஆறு நிமிடமே ஆலாபனை புரிந்தாலும் ஆழமாய் ராகம் பாடி அரங்கை தன் வசப்படுத்தினார் தலைவர். என்வசமும் படுங்கள் என்று வயலினார் வாசித்தார் வசந்தாவை , இந்த வயலினில் ஒலிவாங்கி என்னும் புதுமை முயற்சி சரியாக கைகொடுக்கவில்லை , வயலின் இசையை விஞ்சி தம்பூரா கேட்டது , வரதர் எப்படியோ சமாளித்து அருமையாக வாசித்தார் வசந்தாவை , என்னே கனிவு இவரின் வாசிப்பில். சுத்தானந்த பாரதி எல்லாம் சிவன் செயல் என்றே பாடலை தலைவர் ஒலிவாங்கியை பார்த்து சிரித்தவாறு பாட, இதுவும் இவரின் வாத்யாரின் மெட்டமைப்பு என்பதை எண்ணி பூரித்தோம். கவியோகி சுத்தானந்த பாரதியின் வரிகள் மிகவும் ஆழமாய் நம்முள் மாறுதல்களை உருவாக்கியது. பாடல் வரிகளில் நல்லது வந்தாலும் பொல்லாதது வந்தாலும் எல்லாம் சிவன் செய்ல் என்றே கவலை கொள்ளாதிருப்பாய் மடநெஞ்சே என்கிறார் , என்னே வரிகள் அதை 2021இலும் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது. பஞ்சமா பாதகர் வஞ்சனை செய்தால் வரிகளுக்கு கோபாலர் திருமலையை குறுகுறுவென்று பார்க்க அவனோ என்ன பார்த்தான் நான் அஞ்சேல் அஞ்சேல் என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். தலைவர் அஞ்சேல் அஞ்சேல் அச்சத்தை போக்கிடும் வரிகளில் நிரவலை அமைத்தார் , ஆம் அச்சத்தோடு வாழும் நாம் அஞ்சேல் என்ற சொல்லுக்காகவே காத்திருக்கிறோம். 2020 மார்ச்சு முதல் இன்று வரை நம்மை தொடரந்து அச்சத்தை தரும் கோவிட் ஒமிக்கிரானகளே இனி உங்களை கண்டு அஞ்சேல் அஞ்சேல் என்று கொக்கரித்தேன். தொடர்ந்து வரதர் நிரவல் அமர்களப்படுத்த , தலைவர் நிரவல் ஸ்வரத்தையும் பாடி வசந்தாவை படு அற்புதமாய் அவைக்கு வழங்கினார்.
4) சஞ்சய் பேகடா சுப்ரமணியன் அடுத்து ஆலாபனை துவக்கியது பேகடாவில் , சஞ்சய் பித்திற்கு காரணமான ராகங்களில் ஒன்று இந்த பேகடா , இதை இவர் ஆலாபனை செய்தால் தன்னையும் அறியாமல் ஒரு குறும்பை வெளிப்படுத்துவார் , நோ நு என்று சித்து விளையாட்டு விளையாடுவார் , ஒரு எல்லைக்குள் தலைவரை இந்த ராகத்தில் கட்டுப்படுத்த முடியாது , ஸ்பைடர் மேன் இங்கும் அங்கும் பறப்பது போல் பேகடாவில் பறப்பார் , நேற்றும் இதற்கு விதிவிலக்கல்ல , அடடா என்னே ஆலாபனை என்னே கற்பனை வளம் எத்தனை ஸ்ருதி சுத்தம் , அருமையோ அருமை , ஒருவழியாக ஒலியமைப்பும் ஒழுங்காய் அமைய , தலைவர் கட்டுப்பாடில்லா வானம்பாடியாக பாடினார் ஆலாபனையை , நேற்றைய ஆலாபனையை சரியாக சொல்வதென்றால் அது ஒரு பட்டாம்பூச்சியின் பயணம் , தன் இறக்கை விரித்து அங்கே இங்கே பறக்கும் பின் ஒரிடம் அமரும் பின் மீண்டும் பறக்கும் அதை தொடர்ந்து நாம் சென்றால் ஒரு கட்டத்தில் திரும்ப முடியாத அடர்வனத்தில் இருப்போம் அது போல் பேகடா அடர்வனத்தில் அகப்பட்டு கொண்டோம் , விடுபட விறுப்பம் இல்லாமல், வரதர் வயலினிலும் அகப்பட்டோம் அடுத்து , மனிதர் பிராமதப்படு்த்தினார் பேகடாவை , மிக மிக உன்னத வாசிப்பு , வயலினிற்கு வாய் இருப்பது போல் ஆலாபனை பாடியது இவரின் வாசிப்பில். முத்துசாமி தீட்சிதரின் தியாகராஜாய நமஸ்தே பாடினார் தலைவர் , திருவாரூர் தியாகராஜர் மீது அன்னாரால் இயற்றப்பட்ட பாடல் இது , காத்யாயனி பதே என்று பார்வதி தேவியை தலைவர் பாட அரங்கத்து மாமிகள் கண்களை ஒற்றிக்கொண்டனர். தீட்சிதர் பாடல் என்றால் ஸ்வரம் இருக்காது , மிகவும் மெதுவாக பாடல் பாடப்படும் ஆனால் இந்த பேகடாவில் அதற்கு நேரெதிராக தலைவர் நல்ல வேகத்தோடு பாடினார் ,அந்த முதுகுந்தாதியில் சங்கதிகளை போட்டு தாக்கினார் நம்மை. சோமஸ்கந்தரை தரிசிக்கச்செய்தார், சகலாகம மந்தர தந்தரவில் அரங்கே மெய்மறந்தது.
5) ப்ரபோபுராரே ப்ரணதார்திகரே , மஹா வைத்தியநாதரின் அருமையான ராகமாலிகை பாடினார் தலைவர் , அதாவது மேளகர்த்தாவில் உள்ள முதல் இரண்டு சக்கரங்களை எடுத்து செய்துள்ளார் தலைவர் , ஆனால் வைத்தியநாதர் இன்னும் பல ராகங்களில் இயற்றியுள்ளார் , நம் போல் ராகசூனியங்களிற்காகவே ராகத்தையும் குறிப்பிடுகிறார் பாடலில் , ஸ்ரீ ராகத்தில் துவங்கிய பாடல் கனகாங்கிக்கு சென்றது கனகாங்கிய ராமைய்யா என்று தலைவர் பாட தங்கமாய் மிளிர்நதது மேடை. அடுத்து ரத்னாங்கி ஸ்வரம் பாடி ரத்னாங்கய பாடினார் , அடுத்து கானமூர்தே , வனஸ்பதி , மானவதி , தானரூபி , சேனாவதி , ஹனுமதோடி , தேனுகா நாடக்பிரியா , கோகிலப்ரியா , ரூபவதி என்று தலைவர் அடுத்தடுத்து பாட அரங்கமே தலைவரின் ராகமாலிகை விஸ்வரூபம் கண்டு மிரண்டது. வழக்கமாக நாம் கோடீஸ்வர அய்யரின் பாடல்களில் காணும் ராகங்கள் இவை மொத்தத்தையும் ஒரு தங்க தாம்பாளத்தட்டில் தந்தார் தலைவர்.
6) அடுத்து தலைவர் மினி ஆலாபனை புரிந்து பாடிய பாடல் கடவுளை மறவாதே , தாண்டவம் இராகம் , எம் எம் தண்டபாணி தேசிகர் பாடல் இதை இதற்கு முன் தமிழும் நானும் மற்றும் பார்த்தசாரதி சபாவில் கேட்டுள்ளோம் , என்னே வரிகள் தண்டபாணியார் வரிகள் , கடவுளை மறவாதே என்பது முழுதும் பக்தியில் தோய்ந்து இரு என்பது போல் இருக்கும் அடுத்த வரி கடமையை மறவாதே என்கிறார் என்னே ஒரு புலமை , வறுமையினால் சிறுமை வந்தாலும் , வாழ்வினிலே தாழ்வு வந்தாலும் , பெருமையினால் புகழ் பொங்கி வந்தாலும் என்று வாழ்வின் நிதர்சனத்தை அருமையாக கூறுகிறார் பாடல். புரவலரால் பெரும் பேரு வந்தாலும் வரிகள் தலைவர் அழுத்தமாய் பாடினார் . பாடல் முழுதும் நெய்வேலியார் அருமையான நாத இன்பத்தை தந்தார்.
7) மகேஷ் மகிழ தலைவர் துவக்கினார் ராகம் தானம் பல்லவி ஷண்முகப்பிரியாவை , முன்பொருமுறை தலைவர் இதை தமிழிசை சங்கத்தில் பாட , மகேஷ் அன்று அரங்கில் இல்லை அந்த ஏக்கத்தை தீர்க்கவல்ல ஷண்முகப்பிரியா ஆலாபனை செய்தார் தலைவர் , ஆலாபனையோ ஆனைமலையா என்று பிரமிக்கத்தக்க ஆலாபனை , பிரம்மாண்டம் அதற்கு மறு பெயர் சஞ்சய் என்னும் நிலையில் ஆலாபனை , ராஜராஜ சோழன் பிரம்மாண்ட தஞ்சை பெரிய கோவிலின் கட்டினான் , அதற்கு பல நூற்றாண்டுகளுக்குப்பின் அந்த பிரம்மாண்டம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல , அதனால் வசீகரிக்கப்பட்டு , சென்னையில் வள்ளுவர் கோட்டம் , கோயம்பேடு பேருந்து நிலையம் , கோயம்பேடு காய்கறி சந்தை , புதிய தலைமைசெயலகம் , அண்ணா நூற்றாண்டு கட்டிடம் என்று பல பிரம்மாண்டங்களை காண்கிறோம் , அதுபோல் தான் மதுரை சோமுப்பிள்ளை இந்த ராகத்தில் செய்த ஆகச்சிறந்த ஆலாபனைகள் தலைவர் போல் மகா வித்வான்களால் இன்றளவும் அதே பிரம்மாண்ட்டத்தை உருவாக்க முடிகிறது , கட்ந்த சில கச்சேரிகளால் தலைவர் உச்சம் சென்று மிகவும் மெனக்கெடுகிறார் , அவரே சி பேட்டிளில் நான் ரொம்ப மேல போய் பாடும்போது கொஞ்சம் சிரமப்படுவேன் என்று கூறியுள்ளார் , ஆனால் சமீபத்து கச்சேரிகளில் மேலே சென்று பிரம்மாண்டத்தையும் விஞ்சி நிற்கிறார் , அடுத்த நாள் கச்சேரி பாட வேண்டும் என்பதையெல்லாம் புறந்தள்ளி விட்டு என்னமாய் உழைக்கிறார் தலைவர் என்று மிரண்டார் கோபாலகிருஷ்ணபாரதி. நாரதஸ்வரத்தை விஞ்சியது தலைவரின் ஆலாபனை என்றே கூற வேண்டும் என்றான் திருமலை , தொடர்ந்து வரதர் அருமையான ஷண்முகப்பிரியா ஆலாபனை அளித்தார் அவைக்கு , சஞ்சய் போல் வரதரும் இந்த ராகத்தை ரசித்து ரசித்து வாசித்தார் , வயலினை தன் நெஞ்சில் தாங்கி வாசிப்பதாலோ என்னவோ மனதிற்கு மிகவும் நெருக்கமாக ஆலாபனை தந்தார் வரதநாயனார். தலைவர் அடுத்து தானத்தை துவக்கினார் ஷண்முகப்பிராயவில் , ஆனாம்த் என்று ஆரம்பித்து பின் நம்தோம்ததோம் என்று டிராக் மாறினார் தலைவர் , அண்ணனும் நம்பியும் மாறி மாறி தானத்தை நிதானத்தோடு விறுவிறுப்பு கொப்பளிக்க வாசித்தனர். வழக்கம் போல் தானம் நம்மை வானம் நோக்கி செல்ல வைத்தது , மார்கழியின் பனி நம்மீத எந்த வித மாறுதலையும் ஏற்படுத்தவில்லை காரணம் தலைவரின் தானத்தின் அனல் . தானம் முடிக்கையில் சில நோட்டுக்களை போட்டு முடித்தார் , பல்லவியில் புதியதோர் உலகம் செய்வோம் பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் , அதை தலைவர் பாங்குற பாடினார் பல்லவியில் , சிறிது நேரம் பல்லவி கணக்குளை முடித்து ஸ்வரம் வந்தார் , நாமும் ஸ்வரத்தில் மகிழ்ந்து அடுத்த ராகமாலிகைக்கு காத்திருக்க , தலைவர் நெய்வேலியார் பக்கம் திரும்பி திஸ்ர கணக்கத்துவக்கினார் , தா வில் விளையாடினார் தலைவர் , நாம் எதிர்பார்த்தபடி மாப்பா மதப்பா வைப்பாடி நெய்வேலியாரை வம்பிழுத்தார் , கடந்த இரண்டு கச்சேரிகளுக்கெல்லாம் சேர்த்து வைத்து தலைவர் வம்பிழுக்க , நெய்வேலியார் சிரித்தப்படி வாசித்தார் , இவர்கள் இருவரின் இந்த வாசிப்பு காண்போரை என்றும் மகிழ்விக்கும். கணக்கின் நீளம் நீள அரங்கு ரசிப்பின் உச்சத்திற்கு சென்றது , 5 நிமிடம் தொடர்ந்த கணக்கு வழக்கு முடித்து ஸ்வரப்பிரஸ்தாரம் சென்று பல்லவியை அருமையாக முடித்தார் தலைவர், தொடர்ந்து தனி , தலையாட்டிச்சித்தரின் தன்னேரில்லா தனி அடுத்த பத்து நிமிடங்கள் வித்வத் சபையை விக்கித்திட செய்ததது , வெங்கட்ரமணரும் அருமையாக வாசிக்க , தனி தாளம் போட்டு கேட்டனர் அவையோர்.
8) அடுத்து குரு கிருஷ்ணமூர்த்தி மெட்டமைத்த புரந்தரதாசரின் கண்டேனா கோவிந்தனா பாடலை சந்திரகவுன்ஸில் பாடினார் தலைவர் , உருக்கமான பாடல் , கேசவ நாராயனவில் தான் எத்தனை நளினம் , பேளூரின் பெருந்தெய்வத்தை தலைவர் மூலம் தரிசித்தோம் , பாடலின் கடையில் அடேயப்பா என்னே ஒரு பிரளயம்.
9) அடுத்தும் வாத்யாரின் மெட்டு பாடல் பாரதியாரின் நித்தம் உன்ன வேண்டி சக்கரவாகத்தில் தலைவர் பாடினார் , ஆடுகளும் மாடுகளும் என்று விருத்தம் பாட வழங்கினார் பாடலை , பன்முறை இதை கேட்டு உருகிய மனம் மீண்டும் உருகியது , முண்டாசு கவியின் வைர வரிகளில் , ஒரு வழியாய் பாரதியை பாடும் போது அவையில் ஸ்ரீதர் இருந்தது மனதிற்கு மகிழ்வை தந்தது .
10) அரவிந்தன் நேரம் அடுத்தடுத்து இந்த சீசனில் ஆம் , தலைவர் பாடியது ரீன மதனுத்த , பெஹாக் ராகம் ஸ்வாதி மாமன்னர் பாடல் இன்னும் என்ன வேண்டும் நமக்கு , சோனி பராவில் என்னே ஓரு மயக்கம் , நீல வாரித வில் இழந்தோம் நம்மையே , போல லோசன சன்னுத காஞ்சனவில் கசிந்து கசிந்து கேட்டோம் சேலக பன்னக ராஜகுமாரரை . நாம் இந்த ஸ்வாதி மன்னரின் அவைக்கு சென்றுள்ளதால் அவரின் அத்தனை பாடலிலும் அந்த குதுரமாளிகாவின் பிரம்மாண்டம் கண் முன் வந்து செல்லும்.
11) அடுத்து சுருட்டி பாடுவார் என்றால் , கிருஷ்ணன் சாரின் சுருட்டியை அப்படியெல்லாம் எடுத்துவுடன் பாடிவிட முடியாது அது என்ன பெஹாக்கா அப்படியே பாட என்று , சிறுமணவூர் முனுசாமி முதலியாரின் மானடா மழுவாட விருத்தத்தை துவக்கினார் தலைவர் காம்போதி ஹிந்தோளம் , கல்யாணி , சிந்துபைரவி , நாட்டுக்குறிச்சி காபி சுருட்டி என்று தலைவர் விருத்தமாலை சூடினார் கிருஷ்ணருக்கு , கோபாலகிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து பாடி வரும் தலைவர் அவரின் ஆடிய பாதத்தை பாட கோபாலர் ஆனந்தம் பூணா ரே என்று மகிழ்ந்தார் , நாடும் தைபூ ரண பூசத்தி லேதில்லை நாயகனார் குரு வாரத்திலே என்று தலைவர் சுருட்டியில் பாட பாட அரங்கமே ஆனந்த்தத்தில் மகிழ்ந்தது. கோணங் கிழிந்தண்ட கோளமும் முட்ட கோபால கிருஷ்ணனும் மத்தளம் கொட்ட என்று தலைவர் பாட தலையாட்டியார் தானே மத்தளம் கொட்டுகிறார் என்று நான் வினவ கோபாலர் என் தலையில் கொட்டினார் இளித்துக்கொண்டு.
12) தலைவர் இயற்றிய மாருபெஹாக் தில்லானா அடுத்து , இதை இவர்தான் இயற்றினார் என்பதை இதே அவையில் பிரம்ம சபை பொன்விழாவில் பாடியபோது அறிந்தோம் , ஆனால் சமீபத்தில் ஆன் தட் நோட்டில் தான் திடீரென்று பாடல் எழுத ஆர்வம் கொண்டு இதை எழுதியதையும் அதை வாத்தியாரிடம் காட்ட அவர் மிகவும் பாராட்டியதாக குறிப்பிட்டிருந்தார் , தலைவர் மெய்மறந்து தில்லானா பாட மகிழ்ந்தோம் நாம் , மகிழ்ந்தது அவை. உண்மையை தொடரும் போது இன்னல்கள் வரும் போது நம் மனது சாந்தியடைய சுனாதமே உன்னை பூஹித்து பாடுவேன் மாருபெஹாக ராகத்தில் பாடுவேன் , என்னே அருமையான வரிகள் , தலைவர் மேலும் பல பாடல்கள் எழுத வேண்டும் என்றான் திருமலையப்பன்.
மங்களம் பாடி தலைவர் முடிக்க 9.26 இன்னும் ஓர் பாடல் பாடியிருக்கலாம் என்று சொல்லவிட்டு , பாரிமுனைக்கு செல்ல பயணித்தனர் கோபாலரும் திருமலையும் , மிக மிக அருமையான கச்சேரி கேட் திருப்தியுடன் நாம் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மனதார மகிழ்ந்து பால்கனியை அகன்றோம். பாரிமுனை செல்வோம் என்று பகுமானமாக சென்ற திருமலையும் கோபாலரும் எம்ஜிஎம் சாக்குப்பை பாதுஷா வேர்கடலை ஓட்டடைக்கும் சண்டையிட்டுக்கொண்டிருக்க நான் நழுவ முற்பட என் சொக்கையைப்பிடித்தார் கோபாலகிருஷ்ணபாரதி , என் பிடரியல் அடித்த திருமலை அடேய் அரவிந்தா ஏன் இன்று தியாகராஜரை பாடவில்லை இன்று என கர்ஜித்தான் , இன்னிக்குத்தான் அவரை பாடவில்லை நானும் மூணு கச்சேரியா பாக்கறேன் சியாமா சாஸ்திரியை பாடவேயில்லை என்ன கதை உங்கதை என்று என்னை கோபாலர் எனை கேட்க , சாஸ்திரிகளை பாடாவிட்டால் நானென்ன செய்வேன் நாளை தமிழிசை சங்கித்தில் பாடுவார் வாருங்கள் என்றேன், திருமலை அடேய் அவர் எப்போது தமிழ் பாடல் எழுதினார் என்று என்னை உதைப்பதற்கு முற்பட விட்டேன் ஓட்டம்.
Commenti