சென்னையில் இருநூறு நாட்களுக்குப்பின் நாததேவனின் நலம் தந்த நாதம் ! வழி விட்ட மாடு , கோலாகல தோடி , கொன்றை தும்பை அரங்கேற்றம் !
- ARAVINDAN MUDALIAR
- Jul 24
- 5 min read

வாழ்கையின் சுழற்சியில் சில நேரங்களில் நாம் நம்மையே மறந்து வாழ்வின் அசைவிற்கேற்ப அசைந்தோடுகிறோம் , கடந்த நவம்பரில் துவங்கிய வாழ்கை சுழல் என்னை எங்கெங்கோ கொண்டு சேர்த்துவிட்டது , தந்தையின் இழப்பு , வேலை மாறுதல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஸ்தம்பித்துப்போனேன் என்று சொல்வதா அல்லது வாழ்கை இழுத்த இழுப்பிற்கு சென்றேனா தெரியவில்லை , இந்த 9 மாத காலத்தில் நான் அதிகம் இழந்தது கர்நாடக சங்கீத இசை , சீசனின் தலைவரின் 2 கச்சேரி தவிர்த்து அனைத்திலும் உட்கார்ந்தாலும் மனம் இசையில் லயிக்கவில்லை பிசிகளி பிரசன்ட் மென்டலி ஆப்சென்ட் என்பார்களே அது போல். துயரத்திற்கு வலு சேர்ப்பது போல் சனவரி 1க்குப்பின் தலைவர் கச்சேரியே இல்லை சென்னையில், ஒரு விதமான மன அழுத்ததில் இருந்த தருணத்தில் நலம் தரும் நாதம் என தலைவர் பகிர இன்பஅதிர்ச்சியாய் அமைந்தது , நாரத சபைக்கு மாலை 5க்கு ஆஜரானோம் திருமலை அறக்கட்டளையின் அரிய பணிகளை கானோளி கண்டு , நம் பார் போற்றும் நாயகரின் கச்சேரிக்கு தயாரானோம் , வழமையான வலிமை கூட்டணி நெய்வேலியார் வரதர் , ராகுல் தம்பூரா ! நீண்ட நெடிய நாட்களுக்குப்பின் மழுமழுவென க்ளீன் ஷேவ் சஞ்சய் , மீண்டும் பழைய நாட்களுக்கு சென்ற பூரிப்பு.
1) பட்டியல் வெளிவந்த நிலையில் சித்தி விநாயகனை தொழ காத்திருந்தோம், கோபால கிருஷ்ண பாரதியும் , ஆழ்வார்கடியான் நம்பியும் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி டிக்கெட்டும் இன்றி என் இரு புறமும் அமர்ந்தனர் இம்சிக்க , தலைவர் கேதாரம் ஆலாபனை செய்தார் குரல் வளம் சோதிக்கிறாரோ என திருமலை வினவ , வலச்சி என்று நவவர்ணமாளிகை துவக்கினார் தலைவர் , எடுத்தவுடன் பல்பு எனவே வர்ண பல்பு என்றார் கோபாலர் ,பட்டிணம் சுப்ரமணியரின் நவராக மாளிகை ஷ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம் , ஆத்ம நிவேதனம் எனும் நவ பக்தியைப் போல் அரங்கை ஆக்ரமித்தது , நான் முன்பே கூறியது போல் கச்சேரியின் முதல் பாடலின் போது பலர் வந்தமர்வர் , ஒரு புறம் சீட்டு தேடிக்கொண்டு மறுபுறம் பாடலில் லயிக்கும் காட்சி நாம் என்றும் கண்டு மகிழும் நிகழ்வு. கேதாரத்திலிருந்து சங்கராபரணத்திற்கு தலைவர் அரங்கை இசை மாற்றினார் , செலுவுடைன சங்கராபரணத்தில் சதிராடியது , முக்தாய் ஸ்வரத்தில் கல்யாணி கொஞ்சியது அடுத்து பேகடா கோலோச்சியது , மீண்டும் சங்கராபரணம் , கல்யாணி , பேகடாவை அரங்கேற்றி , சரணம் பதசரோஜாவில் கம்போஜி ராஜகம்பீரம் காட்டி அரங்கை மிரளச்செய்தார் தலைவர் , என்னே ஒரு சௌக்கியம் இந்த காம்போஜியில் . சிட்டை ஸ்வரத்தில் யதுகுலகாம்போதி பிலஹரி வெஞ்சாமரம் வீசிற்று , வரதரும் நெய்வேலியாரும் அரும் பெரும் நாதத்தை வழங்கினர் வழமை போல், தொடர்ந்து மோஹனம் , ஸ்ரீ ஏன தலைவர் ஸ்வராதிகாரம் புரிந்தார் , மீண்டும் அந்த பதசரோஜாவில் வந்த முடிப்பு தந்த அழகை என் சொல்வது.
2) இசை அரங்கில் எழுந்த பக்தி அலை...தண்டபாணியார் அருளிய சித்தி விநாயகனில்அரங்கம் விழா கொண்டது!கலாவதி ராகம், நம் சிந்தையை சிலிர்த்தது...அங்கயர்க்கண்ணி சக்தியில்,தலைவர் எப்போதும் போல் நம்மைபக்தியின் உச்சிக்கே அழைத்துச் சென்றார்.வாசிப்பு வரதரும் நெய்வேலியார் —அவர் வாசிப்பே ஒரு வரப்பிரசாதம்!இந்த ஒத்திசைவிற்கு ஈடு இருக்க முடியுமா?அரங்கமே ஒரு பொற்றாமரை பூம் குளமாகமாறியது அவர் நிரவல், ஸ்வரம் தொடங்கிய தருணத்தில்...சடைமேல் வானம் தங்கிய செக்கரின் சரணத்தில்,தலைவர் தன் மேன்மையை மறந்தார் —அவருடன் நாமும் மறந்தோம் நம்மையே!சங்கதி நாயகனின் சங்கதிகள் —அருமையிலும் அருமை!தும்பிக்கை நாயகனை,நம்பிக்கையோடு தொழுதோம்,தலைவர் பாடல் வழியாக நம்மை வழி நடத்தினார்...
3) சித்தரஞ்சனி நாத தனுமனிஷம் அடுத்து , தியாகராயர் பா , அரிதிலும் அரிதாய் ராமனை விடுத்து சங்கரனை போற்றுகிறார் பாடலில் தியாகராயர் , நாதரூப சங்கரனுக்கு வணக்கம் மனமும் உடலும் ஒன்றாகச் சேர்த்து, நாத ஸ்வரூப சங்கரா , வேதங்களில் சிறந்த சாமவேதத்தின் ஆனந்த சுரபியே ,அசத்யோஜாதன் முதலான ஐந்து முகங்களில் பிறந்த,ச - ரி - க - ம - ப - த - நி எனும் ஏழு ஸ்வரங்களையும் இசையாக அளித்த ஸங்கரா நினை நான் வணங்குகிறேன்.காலனை அழிப்பவனே , தியாகராஜரின் தூயமனதைக் காப்பவனே பரமசிவா என்று பல வாறு தியாகராயர் போற்றிட தலைவர் நிரவல் ஸ்வரத்தி சித்தரஞ்சனி நம் சித்தத்திற்கு மாமருந்தாய் அமைந்தது. ஒரு கச்சேரியின் மூன்றாவது பண்ணிலேயே அரங்கை இத்தனை லயிக்கச்செய்மு மாயாவினோதங்கள் எல்லாம் தலைவர் கச்சேரியில் மட்டும் சாத்தியம் , வரதரின் நிரவல் ஸ்வர பதிலுரையும் படு பிரமாதம் .
4) அரங்கு மயிலையிலிருந்து திருப்பூங்கூருக்கு சில விநாடிகளில் பயணப்பட்டது , ஆம் தலைவர் நாட்டைக்குறிச்சி ராக ஆலாபனையை துவக்கினார் , பிரம்மாண்ட நந்தி தேவரை போல் ஆலாபனை ஆர்பரித்தது , குழைவு நிறைந்த ஆலாபனை தந்தார் தலைவர் , ஒரு வேழம் கோவில் பிரகாரத்தில் ஆடி அசைந்து வருவது போல் நாட்டை குறிச்சி ஆலாபனை தந்தார் தலைவர் , அதன் வனப்பில் ஓய்யாரத்தில் அரங்கே வியந்தது , வழமை போல் ஆலாபனையின் ஊடே வின்னகரத்தை தொட்டார் , அங்கேயே நின்று நாட்டுகுறிச்சியை அசைத்தார் , ரோணன்னாக்கள் பறந்தன , ரஸிகர்களின் உள்ளமும் பறந்தது , பிரம்மாண்ட ஆலாபனை தொடர்ந்து வரதர் அதே பிரம்மாண்டத்தை தன் பிடிலில் கொண்டு வந்து தலைவர் தொட்ட இடத்தையெல்லாம் தொட்டார் , அடுத்து அரங்கே எதிர்பார்த்த வழி மறைத்திருக்குதே துவக்கினார் தலைவர் , கச்சேரியில் அது வரை வாய்திறக்காதே கோபாலகிருஷ்ணபாரதி , பேசினார் கண்கள் மூலம் , ஆம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க பாடலில் லயித்தார் , திருமலை கூட விம்மினான் , 2012 பாரத் கலாச்சாரில் கேட்ட விநாடி முதல் இப்பாடலுக்கு நாம் அடிமை , பாவந்தீரேனோ உன் தன் பாதத்தில் சேரேனோ ஏறேனோ சிவலோகநாதா அனுபல்லவியில் அந்த சிவலோகநாதாவில் வழமை போல் நகாசு வேலைகளை காட்டினார் தலைவர் , தேரடியில்நின்று தரிசித்தாலும்போதும் கோவில்வர மாட்டேனே என்னும் வரிகளில் எத்தகைய அடக்குமறை அக்காலத்தில் இருந்துள்ளது என்பதை உணர்கிறோம் , ஆனமட்டும் வரிகளில் அசை போட்டுவிட்டு நிரவலுக்கு தயாரானோம் எத்தனை மாடு வரப்போகிறதோ என்று உற்றுப்பார்க்கச்சற்றே விலகாதோ மாடு என நிரவலை ஏறத்தாழ 8 நமிடங்கள் பிரமாதப்படுத்தினார் தலைவர் , நாதம் என்றால் அப்படி ஒரு நாதம் நெய்வேலியார தர , வரதர் பாங்குற வாசித்து கச்சேரியின் உச்சத்தை காட்டினார் , ஒவ்வொரு முறை மாடு என்ற தலைவர் பாட அரங்கில் தலைகள் ஆடிற்று , நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர் , மெல்ல மெல்ல ஸ்வரம் விஸ்வரூபமெடுத்தது , மொத்தத்தில் வழிமறைத்திருக்கிறதே எல்லோர் அகக்கண்களையும் திறந்தது .
5)குறு ஆலாபடையுடன் காங்கேய வஸனதர துவக்கினார் தலைவர் , ஹமீர் கல்யாணியில் தலைவரை விஞ்ச எவரும் உண்டோ , ஸ்வாதி திருநாளின் ஆகச்சிறந்த படைப்பான காங்கேய வஸனதர அரங்கில் வெள்ளமென பாய்ந்தது , இதமான இசை இந்த ஹமீர் கல்யாணி , அதிலும் வரதர் இசையில் கேட்கவும் வேண்டுமோ , ரங்க ஸ்தலத்திலேயே இருந்து விடலாம் போலிருந்தது அவையினருக்கு , திருமலை சொன்னான் ஆம் பெருமாள தலைவர் பாடும் அழகே அழகு என்று , கோபாலர் வாய் பேசாமல் பாடலில் உருகினார் , ரமணீயமாய் தலைவர் பாட பாட அவையில் குளுமையை விஞ்சியது இசை , மூன்றாம் சரணம் வாராயாவில் தலைவர் விளையாடி ஸரஸிஜனாப என்று உச்சரிக்க திருமலையப்பன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சைவமும் வைணவமும் மாறி மாறி கண்ணீரை உகுத்திட , பிசாசுகளே தண்ணீர் பாட்டில் கொட்டி விட்டேன் என முன்னிருக்கைக்காரர் சண்டைக்கு வரப்போகிறார் என்றேன்.
6) கச்சேரி பிரதானி தன்னேரில்லா தோடி ஆலாபனை அடுத்து , கோடி கொடுத்தாலும் சஞ்சய் தோடிக்கு ஈடாகுமா என்பது போல் பிரமாதப்பட்டது தோடி , அடேயப்பா வெப்பக்கனலை கக்கியது தலைவரின் தோடி , ராக ஆலபனையை தலைவர் படிப்படியாக கொண்டு செல்லும் அழகே அழகு , அரங்கில் இருந்த மாமாக்கள் அக்காலத்து மணி அய்யர் உள்ளிட்ட ஐஆம்பவான்களை நினைவு கூர்ந்தனர் , இளைஞர்களோ இதுபோலும் ஆலாபனை செய்யவும் முடியமா என்று வியந்தனர் , என் போன்ற பித்தர்கள் தோடிக்கு மயங்கிய ஸர்பங்களானோம் , தொடர்ந்து மகுடி வரதரின் வழங்கப்பட்டது , வயலினெனும் மகுடியால் தோடி வானளாவ இயக்கினார் வரதர் , அரங்கமே அண்ணார்ந்து பார்க்கும் அளவில் அமைந்தது வரதர் வாசிப்பு , ராகம் தானம் பல்லவியின் முடிசூடா மாமன்னர் சஞ்சய் சுப்ரமணியன் தானத்தை துவக்க அரங்கே சிலிர்த்தது , தானத்தில் அவருக்கு இருக்கும் கட்டுப்பாடு நம்மை எப்போது வியப்பின் உச்சி இட்டுச்செல்லும் ஒரு விநாடிக்கும் குறைவான காலத்தில் எப்படியெல்லாம் தானத்தை கட்டமைக்கிறார் என்று விறந்து மகிழ்ந்தோம் , வரதரும் தலைவரும் தானத்தை ஆசை தீர அரங்கருள் புரிந்தனர் , துவக்கம் போல் முடிப்பிலும் சிலிர்தது , ஆடிக்கிருத்திகை அன்று முருகப்பெருமான் குறிக்கும் பல்லவிக்கா காத்திருந்தோரும் பிரகாசமான பல்பளித்து , நாதம் என் ஜீவனே , சங்கீத நாதம் என் ஜீவனே என்று பாடி பரவசப்படுத்தினார் , முன்பு மேடை என்னும் அரங்கில் பாடியபோது , உலகமே ஒரு நாடக மேடையில் என்று சொந்தப்பல்வி பாடியவர் ஆயிற்றே , அடுத்த விநாடி ஆச்சர்யம் அது தான் தலைவர் , பல்வேறு கணக்குகளை நெய்வேலியாருடன் பல்லவியில் பாடி ஸ்வரம் துவக்கி பிரமாதப்படுத்தினார் , ராகமாலிகையில் சஹானா ஓய்யாரமாய் வலம் வர , அடுத்து காங்கேய பூஷனி ஸ்வரம் அரங்கை அமர்களப்படுத்தியது , அடுத்து தலைவரின் புதிய ராகம் உதயமானது , கொன்றை தும்பை அஃதாவது மேளகர்த்தா இராகத்தில் இரண்டு மத்யமம் வராது அப்படி இரண்டு மத்யமம் கொண்ட இராகம் இது எனவே இதற்கு கொன்றை தும்பை என்று பெயரிட்டேன் என அறிவித்தார் , தமிழ் ஆய்ந்த தலைமகனின் உயர்ந்த உள்ளத்தை என் சொல்வது , அதற்கு முன் இவர் கண்டுபிடித்த இராகத்திற்கும் திராவிட கலாவதி என்று பெயரிட்டார் , தொடர்ந்து தொடியில் ஸ்வரம் பாடி நெய்வேலியார் தனிக்கு வித்திட , தலையாட்டியார் எப்போதும் போல் குறிகிய தனி தந்தார் , உபபக்கவாத்தியம் இருந்தால் மட்டுமே 10 நமிடத்தை தாண்டுவார் அதுவும் உபபக்கவாத்தியத்திற்காக என்னே இவரின் உயர்ந்த உள்ளம் , கிடைத்த 5 நிமடங்களில் அரங்கையே புரட்டி எடுத்தார் நெய்வேலியார்.பிரம்மாண்டத்தோடி 1 மணிநேரத்தை கடந்த அரங்கை புல்லரிக்கவைத்தது.
7) வெளியிட்ட பட்டியலில் தோடி ராகம் தானம் பல்லவியோடு நிறைவுற என்ன பாடுவார் துக்கடா என எத்தனிக்க மீண்டும் ஒரு முறை ராமசாமி தூதன் நானடா அரங்கு அதிர பாடினார் , அருணாசல கவியின் ராம நாடகம் அரங்கில் தலைவரால் அருமையாக பாடப்பட சிரித்தவாறு வாசித்தார் நெய்வேலியார் , சமீப காத்தில் அதிகமாக தலைவரால் பாடப்படுகிறது இப்பாடல் , அந்த கிணற்றிலே ஏன் வீழ்கிறாய் உனக்காகவே பாடப்பட்டது என்று திருமலை என்னை பார்த்து பகுடி செய்தான். ஆதிமூர்த்திதானே உத்தண்ட மாகவந்தான் அரக்கரைமண்ட சீதையை விட்டுப்பிழைஅடா கண்ட சேதியைச்சொன்னேன்வீர கோதண்ட என தலைவர் பாடி முடிப்பில் நானடாவில் நடிகர் திலகத்தை காட்டினார்.
8) தேசம் போற்றும் தேஷில் பாரதியின் காக்கை சிறகினலே விருத்தம் பாட விம்மாத நெஞ்சமும் விம்மிற்று , தீக்குள் விரல் விட்டாலும் பரவாயில்லை இந்த தேஷ் கேட்க என அரங்கு மெய்மறந்தது , எதிர்பார்த்தாற் போல் துன்பம் நேர்கையில் பாடினார் தலைவர் , பாரதியை பாடி தொடரந்து பாரதியின் தாசனின் பாடலை பாட , அரங்கில் அத்தனை உற்சாகம் , எனது தனிப்பட்ட கருத்து , துன்பம் நேர்கையில் பாடல் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் , சீசனில் கூட இரண்டு மூன்று முறை பாடிவிட்டார் தலைவர் , எப்போதாவது பாடினால் தான் அதற்கு சிறப்பு , இதற்குள் வன்பும் எளிமையும் சூழும் நாட்டில் வரியில் அரங்கையே சாறாய் பிழிந்தார் தன் தேஷ் மூலம் , புலவர் கண்ட தமிழ் செல்வம் நம் சஞ்சய் சுப்ரமணியன்.
9) நிறைவுப்பண்ணாக அருணகிரிநாதரின் அமுதமூறும் பாடினார் தலைவர் சிந்துபைரவியில் , இதுவும் கடந்த சில பருவங்களாக தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது தலைவரால் , நாதம் லயம் கலந்த கலவையாக சொற்களை பதிவு செய்திருக்கிறார் அருணகிரிநாதர் ,அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள் தெருவின் மீதுகு லாவியு லாவிகள் என்று தலைவர் பாட பாட கோபாலர் திருமலை பல வரிகள் உன்னைத்தான் குறிக்கின்றதென்றார். மகமாயி அருள் பெற்றிட பாடல் நிறை பெற்றது.
மங்களம் பாடி முடிக்க அரங்கம் கரவொலி நிறுத்த 2 நிமடம் ஆனது , திருமலை அறக்கட்டளையின் வளர்ச்சி நிதிக்காக இந்த கச்சேரி நடத்தப்பட்டது , மனதார இந்த உன்னத சேவைக்கு நுழைவு சீட்டு பெற்று வந்தோர் எப்போதும் போல் எதிர்பார்ப்பிற்கு மிக அதகிமாகவே பெற்றனர் அதன் வெளிப்பாடே இந்த கைத்தட்டல் , இதை கேட்க நமக்கு 200 நாள் பிடித்தது , அடுத்த கைத்தட்டலுக்கு காத்திருக்துவங்கி , கைதட்டி அரங்கில் இருந்து அகன்றோம் .
コメント