top of page
Search

காயகப்பிரியனின்ஏழிசை ஸ்ருதி லய யாழ் குரலிசை நாயகி கச்சேரி !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Feb 27, 2024
  • 7 min read

ree




ree



நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் தலைவர் கச்சேரி , நாயகி சபாவால் வழமையா நடைபெறும் அபிராமி சிதம்பரம் அரங்கில் கோட்டூரில் கடந்த ஞாயிறு அன்று , நாம் தலைவரை அன்பெனும் பெருவெளி இசை வெளியீட்டில் கண்டப்பின் கானும் முதல் கச்சேரி , ஆம் தலைவரை வேட்டி சட்டையில் காணும் நிகழ்வு , ஏலே மக்கா படைடயை கிளப்பிய சில தினங்களில் கச்சேரி என்பதால் என்னதான் பளீர் வெண்மையில் தலைவர் உடுத்தி இருந்தாலும் மனம் வண்ண வண்ண எண்ணங்களில் சென்றது , தலைவருடன் நிரந்திர கூட்டணி நெய்வேலியார் வரதருடன் அநிருத் இணைய ராகுல் தம்பூரா பற்றினார் , ரேதஸ் அவுட் ஆப் ஆபிஸ் , 18.15 மணிக்கு கச்சேரி துவங்கிற்று , நாயகி உறுப்பினர்களே பெரும்பாலும் ரஸிகர்கள் பித்தர் குழாமிலிருந்து ஒரு எட்டு பேர் மற்றபடி எல்லாம் பருவத்தில் காணாத முகங்களே . ஏன் என் வதனம் புலப்படவில்லையோ என்று பூதமாய் வந்திரங்கினான் திருமலை அவனைத் தொடர்ந்து கோபால கிருஷ்ணபாரதி , கொசுத்தொல்லை தாங்கலை என்று கூறிவிட்டு பலஹம்ஸாவிற்கு காத்திருந்தோம் , ஆனால் சபா காரியதரிசி சஞ்சய் சுப்ரமணியன் க்ராண்ட ஆன்ட் ருக்மணி ராஜகோபாலன் என்று நீட்டி முழக்கினார். சங்கீத கலாநிதி வாங்கி வருடம் எட்டானாலும் இந்த வாழ்க்கை குறிப்புக்கு ஒரு எண்டே இல்லையா என்று ஙேஙே என்று விழித்தோம்.


1) பட்டிணம் சுப்ரமணிய அய்யரின் பலஹம்ஸா ராக வர்ணம் நினரு ளேனி வாணி பாடினார் தலைவர் , வழமை போல் முக்தாயில் முத்திர பதித்து அரங்கை முதல் பண்ணிலேயே கட்டிப்போட்டார் தலைவர் ஒரு ராகத்தில் ஏற்படும் மாற்றங்கள் சிறியவை முதல் முதல் பெரியவை பல்வேறு வகைகளாக இருக்கலாம். சில ராகங்கள் பல ஆண்டுகளாக மறைந்துவிட்டன, சில ராகங்கள் அதன் வழித்தோன்றல் அளவில் இல்லாத ஒரு ஸ்வரத்தை விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட சில ராகங்கள் உள்ளன, மேலும் சிலவற்றுக்கு முற்றிலும் புதிய வடிவம் கொடுக்கப்பட்டது. . கடைசி மாற்றம் மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அதன் பழைய மற்றும் அசல் வடிவத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. தியாகராஜ சுவாமிகள் மற்றும் அவரது சமகாலத்தவர்கள் காலத்தில் மிகவும் பிரபலமான பாலஹம்ச ராகம் அத்தகைய 'அழிந்து போன' ராகமாகும். இந்த இசையமைப்பாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பாலஹம்சம் உண்மையில் ஒரு பெரிய 'ராகம்' நிறைய திரவ சொற்றொடர்கள் அளவைக் கடந்து செல்கிறது. இதை பாடுவதென்பது அத்தனை சுளுவான வேலையல்ல , சஞ்சய் போன்ற மேதைகளுக்கே இது சாத்தியம் என்று நீண்ட பிரசங்கம் செய்தார் கோபாலர் , இதற்குள் தலைவர் ஸரசூடவில் சரஸங்கள் புரிந்து , சிட்டை ஸ்வரத்தில் அரங்கை உலுக்கினார் , அதிலும் நெய்வேலியாருடனான அந்த கணக்குகள் நமக்கு புரியவில்லை என்றாலும் புருவத்தை உயர்த்தியது.


2) அடுத்து காயகப்பிரியாவில் ஒரு குறு ஆலாபனை புரிந்து நாதனிலை கண்டு உருக நான் அருகனா பாடினார் தலைவர் , கோடீஸ்வர அய்யர் பாடல் முன்பே பதிவிட்டபடி ஒரு மோனநிலைக்கு இட்டுச்செல்லும் இராகம் , பாடல் வரிகள் , தாள லயம் என அனைத்தும் நம்மை எங்கோ கொண்டு செல்லும் இப்பாடலில் , அருகனா , ஞானபரணா என்று வினவியபடி இருக்கிறார் கோடீஸ்வரர் , நான் மோஹன மனோஹர குககனாவில் தலைவர் விளையாடினார் இராகத்தில் , நெய்வேலியார் ரஸித்து ரஸித்து வாசித்தார் அதிலும் அந்த கடையில் அருகனாவில் ஒரு சுண்டு சுண்டினார் நம்மை இசையால் , சரணத்திற்கு முன் ஸ்வரம் அரங்கில் வரமாய் வந்தது , அநிருத் நெய்வேலியாரை பின்தொடர பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கு வரதர் உதட்டை பிதுக்கியவாறு வாசித்தார் வளமாய் , தலைவர் அருகனாவில் அடிக்கடி விளையாடி , ஏழிசை லய ஸ்ருதிக்கு சென்றார் , கானநாயக தேசிகனின் காயக்ப்பிரியா அரங்கை ஸ்தம்பிக்கச்செய்தது , தெய்வீக பேரின்பத்தை அடைய ஏங்கும் ஒருவரால் செய்ய வேண்டிய நடைமுறைகள் இந்த ஷரியை கிரியை யோக ஞான இவை யாவும் முக்திக்கான வழிகள் என்று பகர்ந்தார் கோபாலகிருஷ்ண பாரதி. சிவன் நித்தியமானவர் மற்றும் எங்கும் நிறைந்தவர். அவர் தனது அசல் தன்மையில் எல்லையற்றவர் மற்றும் உருவமற்றவர். அவர் சச்சிதானந்தம் என்று உணர்ச்சி பொங்க சிவயோகத்தை அளித்தார் கோபாலர் தலைவரோ இங்கே கானத்தில் நம்மை சிவபுரிக்கு இட்டுச்சென்றார்.


3) ஆனந்த கச்சேரியில் பரமானந்தம் அளித்திட தலைவர் அடுத்து துவக்கிய ஆலாபனை ஆனந்தபைரவி , அடடா எத்தனை கேட்டாலும் தீராது தலைவரின் ஆனந்தபைரவி ஆலாபனை , சௌக்கியத்திலும் பரம சௌக்கியம் , நாபியிலிருந்து அந்த இராகத்தை எடுத்து தருவதில் தலைவர் வல்லாருக்கெல்லாம் வல்லார் , ஜலபிரவாகம் என்பார்களே அது போல் வந்து விழுந்தது ஆலாபனை , மதுரை மணி அய்யரின் தரலல்லக்கள் இன்னும் பித்து பிடிக்க வைத்து , தொடர்ந்து வரதர் ஆனந்தத்தை அளித்தார் , அவரின் வயலினுக்கு சஞ்சய்க்கு வாசிப்பதில் படு ஆனந்தம் , பல்லை இளித்து ஒலித்தது வயலினிசை , புரந்தரதாஸரின் இராம நாம பாயசக்கே கிருஷ்ண நாம சக்கரே பாடினார் தலைவர் , மேலும் இனித்தது ஆனந்த பைரவி , அந்த விட்டல நாமவில் கரைந்தது அவை , ஆனந்த ஆனந்தவெம்போவில் அரங்கே ஆனந்தகண்ணீர் வடித்தது , தலைவர் தமிழில் பாடும் போது இருக்கும் பாண்டியத்வம் கன்னடத்திலும் இருக்கும் அத்தனை தெளிவாய் பாடுவார் என்று மகிழ்ந்தான் திருமலை , தொடர்ந்து தலைவர் நிரவல் ஸ்வரத்துவக்கினார் அவையே ராமநாமம் பாடிற்று , பலராமர் முதல் பாலராமர் வரை அனைவரும் அரங்கிற்கு வந்தாற்போல் அமைந்தது தலைவர் ஸ்வரங்கள் , தலைவரின் கிரியாஊக்கிகள் வரதரும் நெய்வேலியாரும் நன்றாய் தூண்டினர் தலைவரை , அவரும் குறும்பு கொப்பளிக்க ராமநாமத்தை பாடி பரவசப்படுத்தினார் , இன்றல்ல நேற்றல்ல நான் பல்லாண்டுகளாய் தலைவரை பார்த்தபோது எந்த வித மத குறியீடுகள் அஃதாவது திருநீறோ , திருநாமமோ இன்றி காணப்படுவார் , ஆனால் பாடும் போது , பாடலை பொருத்து , ஆழ்வாராகவே , நாயன்மாராகவோ மாறிவிடுவார். கல்பனாஸ்வரம் அரங்கை புளகாங்கிதக் கடலில் பிடித்து தள்ளியது , திக்குமுக்காடியது அவை , தலைவரின் இசைக்கு ஆடியது.


4) மீண்டும் ஓரு குறு ஆலாபனை , வராளியில் , அடடா சில நிமிடங்கள் நீடித்தாலும் நம்முள் நீக்கமற நிறைந்தது இராகம் , அத்தனை உருக்கம் , இராகத்தை மேலே எடுத்துச்சென்று நிலை நிறுத்த பாடப்போறாரா இல்லை ஆலாபனையா என்று அவை திகைக்க இரண்டுமில்லை விருத்தம் என்று விழிக்குத்துணை என கந்தர் அலங்காரத்தை துணைகொண்டார் தலைவர் , மெய்மை குன்றா இவர் இசைக்கு நாம் என்றும் அடிமை , முருகா என்றால் உருகாத நெஞ்சும் உருகும் என்பர் , உருகியது அவை , பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடனின் மயூரமுமே என பாடி காவாவா கந்தா வா என்ற பாபநாசம் சிவனின் பாடலில் அவயை முருகபக்திக் கடலில் பாய்ச்சினார் தலைவர். பழனிமலை தெய்வம் பாங்குடன் வந்தது மயூரத்தோடு அரங்கிற்கு , அந்த பழனி மலையில் நெய்வேலியாருடன் ஒரு துவந்தம் வா வா வில் ஒரு குறும்பு என்று விளையாடிவிட்டு தேவாதிதேவன் மகனே வா பரதேவி மடியில் அமரும் குகனே வா வள்ளி தெய்வயானை மணவாளா வா சரவணபவ பரம தயாளா வா என்று முருகனை அணுஅணுவாய் பாடி அழைத்தார் தலைவர் , கூவி அழைத்தால் வாராமல் இருப்பேனோ என்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தந்தார். ராம தாசன் வணங்கும் முத்தையா வரியில் , பாபநாசம் சிவனாரை வாஞ்சையோடு நினைவு கூர்ந்தோம். மீண்டும் ஒரு முறை பழனி மலையேற்றினார் நெய்வேலியாரை , நெய்வேலியாருக்கே பழநியா என்றார் கோபாலர்.


5) அடுத்து அவையே எதிர்பார்த்த சஞ்சுகாம்போதி , காம்போதி என்றோர் இராகத்திற்காகவே படைக்கப்பட்டவர் தலைவர் , காம்போதியின் தூதுவன் பாதுகாவலன் படைத்தலைவன் என என்ன சொன்னாலும் போறாது , காம்போதியின் அங்கீகரிக்கப்பட்ட அறங்காவலர் சஞ்சய் சுப்ரமணியன் , அப்படி ஒர் ஆலாபனை தந்தார் அவைக்கு , என்னே கம்பீரம் , என்னே நடை , என்னே விஸ்தாரம் , என்னே விரிவான ஆலாபனை , எத்தனை கம்போதி கேட்டாலும் , மாறுபாடு தந்தவாறு இருக்கிறார் , பட்டை தீட்டப்பட்ட வைரம் என்ற சொல்லாடலுக்கான ஆகச்சிறந்த உதாரணம் சஞ்சய் சுப்ரமணியன் காம்போதி ஆலாபனை , ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக்கொண்டே செல்கிறது , பிரம்மாண்ட ஆலாபனை பனிரண்டு நிமிடங்கள் அளித்து அரங்கை பிரம்மாண்டத்தின் உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்தார் தலைவர் , தொடர்ந்து வரத ஆலாபனை சொல்லவும் வேண்டுமா , மறுஒலிபரப்பில் வல்லாண்மை பெற்றவர் வரதர் அல்லவா , இவரின் காம்போதி கேட்க எவருக்கும் என்றைக்கு இருக்கும் அவா , முத்துசாமி தீட்சிதரின் கைலாச நாதேன பாடினார் தலைவர் , இந்த பாடலை நாம் கேட்பது இதுவே முதன்முறை , காஞ்சி மாநகர் கைலாச நாதர் கோவில் பெருந்தெய்வத்தை பாடிய பண் இது , அரங்கை கைலாச கிரி விஹாரத்தில் கொண்டு நிறுத்தினார் தலைவர் , பாவுக்கரசர் சரணே சாரு ஷரஸ்சந்திரா கலாதரணேவில் நிரவல் துவக்கி இன்னும் பிரம்மாண்டப்படுத்தினார் பாவை , ஆசை தீர நிரவல் புரிந்து , நிரவல் ஸ்வரம் துவக்கி பிரளயத்தை துவக்கினார் , தலைவர் நிதானமாக ஸ்வரம் துவக்கினால் அதன் அடுத்த பரிமாணம் விஸ்வரூபம் என்பது நமக்கு தெரிந்ததே , பா வில் விளையாடினார் தலைவர் , ப நி த , ப த நித என்று பரவசப்படுத்தினார் , ஸ்வரப்பிரஸ்தாரம் சென்று அநயாசமான வேகத்தில் ஸ்வரம் தந்து அரங்கை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்சென்றார் , தொடர்ந்து தனி எதிர்பார்த்தோருக்கு பல்பளித்து பாடலை நிறைவு செய்தார்.


6) அடுத்து ஜனாவை மகிழ்விக்க குறு ஆபாலனை ஜனரஞ்சனி செய்து முத்துத்தாண்டவரின் அம்பரசிதம்பரம் பாடினார் தலைவர் பாடல் , இந்த பாடலுக்கு மெட்டமைத்தவர் தலைவர் , ஆகவே நளினங்களுக்கு பஞ்சமிராது , பாடல் வரி போல் தலைவர் இதை பாடும் போதெல்லாம் சதானந்தமே , அந்த செம்பொன் மலை சிலை வரிகள் ஏதோ மேற்கத்திய இசை போல் பாடினார் தலைவர் , என்னே மேதன்மை என்னே நேர்த்தி , தாண்டவமாடும் நடேசன் ஆனந்த தாண்டவமாடினார் பாடலை கேட்டு , கச்சேரி சைவம் பக்கம் வெற்றி என்பதை ஊர்ஜிதப்படுத்தியவாறு கோபாலரும் திருத்தாண்டவ நடமாடினார் , அந்த ஷம்போவில் அப்பப்பா என்னே ஒர் அனுபவம் , ஸ்வரம்கட்டுக்களை தலைவர் இறக்க அரங்கம் சொக்கித்தான் போனது , கங்கை மதி அரவ வரிகள் காதில் தேனானது , தலைவர் செக்கர் சடையசையவில் நெய்வேலியார் தலை ஆடிய ஆட்டத்தை பார்க்கவேண்டுமே , அற்புதம் , அந்த கடையில் ஸ்வரம் பலே பிரமாதம்.


7) சஞ்சய் முகாரி அடுத்து , பருவத்திலும் பாடிய இராகமிதது , முகாரி உருக்க மாரி என்று நாம் முன்பே பதிவிட்டோம் , அத்தகு ஆற்றல் மிக்க இராகமிது , சோகத்தை மாத்திரமல்ல , உள்ளத்தை பிசையவல்ல இராகம் என்பதை தன் ஆலாபனையில் வெளிக்காட்டினார் தலைவர் , எந்த வர்னிந்து சபரியில் உச்சபட்ச உருக்கத்தை கேட்டுள்ள நமக்கு மீண்டு நினைவலைகள் வந்தன , வரதரின் முகாரி நம்மை மீண்டு உலுக்கியது உருக்கத்தில் கருணையில் , முரிபமு கலிகேதா என்னும் தியாகராஜர் பாடலை பாடினார் தலைவர் , இராமப்புலம்பல் பாடல் , முகாரியை விட சாலப்பொருத்தமான இராகம் ஏது , பரமபுருஷாவில் அரங்கத்து ரஸிகர்கள் கண்களில் ஜலம் , ஈடு லேனியில் பக்தியின் உச்சியை காட்டினார் தலைவர் , அரங்கம் உணர்ச்சிவயப்பட்டடது , ஈடுலேனியில் ஸ்வரம் துவக்கினார் தலைவர் , மெல்ல மெல்ல ஸ்வரம் வேகமெடுத்தது , ஆசை தீர ஸ்வரம் பாடி தனியைத்துவக்கி வைக்க , நெய்வேலியாரும் அநிருத்தும் அருமையான தனி தந்தனர் ,இவர்களின் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் தனி இன்றும் நம் நினைவில் நிற்கிறது , அனுபவமும் இளைமையும் சரியான விகிதத்தில் மாறி மாறி வாசிக்க அருமையான தனி அமைந்தது.


8) கொசுறு பாடல் அடுத்து கமாஸில் கணம் கிருஷ்ணைய்யரின் என்னமோ வகையாய் வருகுது மானே பாடினார் தலைவர் , துள்ளல் இசையென்றால் அது கமாஸ்தான் , அற்புதமாய் பாடினார் தலைவர் , இராஜமன்னாரிடம் புரிந்த மாய அவதாரங்கள் அவையை மயக்கியது . கடையில் அந்த மானேவில் ஒரு முடிப்பு அடேயப்பா அருமை.


9) தலைவரின் துக்கடாக்கள் நாம் பெறும் வரங்கள் அதை கடை வரை இருந்த பெற்று இன்பம் எய்த வேண்டும் , கிருஷ்ணன் சார் அப்போது தான் கிளம்பிச்செல்ல தலைவர் சுருட்டியில் வள்ளலாரின் பெற்ற தாய் தனை மக மறந்தாலும் விருத்தம் பாடினார் அடுத்து , திருமலைக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது , கோபாலகிருஷ்ணபாரிதி கண்களில் நீர் பெருக்கெடுத்தது ,உயிரை மேவிய உடல் மறந்தாலும் தலைவர் விருத்தத்தை நான் மறவேனே என மகிழ்ந்து கேட்டோம் , மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே என்ற வள்ளலாரின் சற்குரு மணிமாலை பாடலை தலைவர் சுருட்டியில் தொடர்ந்தார் , மாற்றுக் காணப்படாத செழுமையான பசும் பொன்னானவனே; மாணிக்கம் போலும் நிறமுடையவனே; தீச்சுடரின் அழகிய கொழுந்து போல்பவனே; சாதலறியாத பெரிய தவச் செல்வர்களின் திருவுள்ளத்தில் கோயில் கொண்டருளுகின்ற பெரிய குணக்குன்றமே; வேறொன் றில்லாத சிற்றம்பலத்தில் எழுந்தருளுகின்ற சிவக்கனியே; வித்தியா ஞானத்தில் மிக்கவர்கள் பாராட்டுகின்ற புதுமைப் பொருளே; பாடுத லறியாத என் பாட்டையும் கேட்டு மகிழ்ந்தவனே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம் என்று உருகி பாடியுள்ளார் வள்ளல்பிரான் , பிற உலோகப் பொருட்கள் தன்னிற் கலந்து கொள்ளும் இயல்புடையதாதலின், அதன் தூய்மை காண்டற்குச் செய்யும் முயற்சி மாற்றுக் காண்டல் என்பதாம். மாற்றுக் காண முடியாத தூய செம்பொன் என்றற்கு, “மாற்றறியாத செழும் பசும்பொன்” என்று சொல்லுகின்றார். பொன்னை உரை கல்லில் தேய்த்துக் காண்பது போலக் காண முடியாமை பற்றிச் சிவனது திருமேனி நிறத்தை, “மாற்றறியாத செழும் பசும்பொன்” எனப் பாராட்டுகின்றார். மாணிக்க மணி சிவந்த நிறத்தை யுடையதாதலின், அதனை ஒப்பது பற்றிச் சிவனை, “மாணிக்கமே” என்று மொழிகின்றார். அழல் வண்ணன் எனச் சிவனைச் சான்றோர் பாராட்டுவதுண்மையின், “சுடர் வண்ணக் கொழுந்தே” என்று சொல்லுகின்றார். சாகாத நிலை பெற்ற பெரிய தவச் செல்வர்களைக் “கூற்றறியாத பெருந்தவர்” என்று கூறுகின்றார். தவத்தால் கலந்த பெரியோர்களின் திருவுளத்தைத் தனக்குக் கோயிலாகக் கொள்பவன் என்பது பற்றி, “பெருந்தவர் உள்ளக் கோயில் இருந்த குணப் பெருங்குன்றே” எனக் குறிக்கின்றார். பெருமையும் சலியாமையும் சிண்மையும் உடைமை பற்றி, “குணப் பெருங் குன்றே” என்று கூறுகின்றார். சிற்றம்பலத்தின் வேறு அம்பலம் இல்லாமை பற்றி, “வேற்றறியாத சிற்றம்பலக் கனியே” என விளம்புகின்றார். வேறு அறியாத என்பது “வேற்றறியாத” என எதுகை நோக்கி மிக்கு வந்தது. வித்தை - விச்சை யென வந்தது. வித்தியா ஞானம் என்பது கல்வி ஞானம் குறித்து நின்றது. விருந்து - புதுமை. சாற்றுதல் - ஈண்டுப் பாடுதல் மேற்று. சாற்று - பாடுகின்ற பாட்டின் மேல் நின்றது; சொன்மாலை. விரும்பி யேற்றுக் கொண்டாய் என்று சொல்பவர், “களித்தாய்” எனச் சுருங்கச் சொல்லுகின்றார். ஒப்பற்ற நடராசப் பெருமானே குருமுதல்வனாய் வந்தருளினான் என்பது கருத்ததலின் “நடராச சற்குரு மணியே” என்று புகழ்கின்றார். இதனால், நடராசப் பெருமானாகிய குருபரனைப் பொன்னே, மாணிக்கமே, சுடர்க்க கொழுந்தே என்பன முதலிய ஆர்வ மொழிகளால் வழிபட்டவாறாம். என்று கோபால கிருஷ்ண பாரதி மூச்சிரைக்க உரை தந்தார் , அரங்கு தலைவர் சுருட்டியில் சுகானந்தம் பெற்றது.


10) ஸ்வாதி திருநாள் பாடல் இல்லாமல் ஒருநாளும் தலைவர் கச்சேரி இராது அல்லவா , அடுத்து வல்லபி இராகத்தில் ஜெய் ஜெய் தேவி பாடினார் தலைவர் , அந்த ஜெய் பவானி வரியில் நமக்கு மயிற்கூச்செரிந்தது , வல்வபி இராகம் இதயத்தை பிழிந்தது , வரிகள் கண்களை பனிக்கச்செய்தது , ஹஸ்த கமல் சரணத்தில் அரங்கே அழுததது அத்தகு வீச்சு தலைவரின் பாடலில் இருந்தது , அருமை ர அருமையிலும் அருமை


11) மீண்டும் ஒரு கொசுறு தந்தார் தலைவர் சுருதி முடி ஹரிகாம்பொதியில் பாடி , அருணகிரிநாதரை தலைவர் போல் பாடுவார் யார். திருப்புகழின் புகழை சஞ்சய் போல் பாரில் பாடுவார் யார் , பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில் சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் , என மீண்டும் பழநிக்கு சென்றார் தலைவர் , அப்படியே பவமான பாடி வாழிய செந்தமிழுக்கு தாவி அருமையாக முடித்தார் கச்சேரியை .


சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை ! சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை , சுப்ரமணியனை பாடுவதில் சுப்ரமணியனுக்கு மிஞ்சிய பாடகரும் இல்லை என்பதை மெய்ப்பித்த கச்சேரி ! வாழிய செந்தமிழுக்கு அரங்கே தாளம் போட்டது , கைதட்டி அரங்கை விட்டு அகன்றோம் தலைவரின் இசையில் அகலாமல் இருத்தல் வேண்டும் என்று மணதில் நினைந்தபடி , சிங்கை , அவுஸ்திரேலியா , அமேரிக்கா என்று அடுத்தடுத்த டூர்களுக்கு தலைவர் சென்றுவிடுவார் , இனி சென்னை கச்சேரி என்றோ என்ற ஏக்கத்தோடு காத்திருப்பை துவக்கினோம். சிங்கப்பூர் எம்பஸி நோக்கி படையெடுத்தனர் திருமலை கோபாலர் இணையர்.

 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page