தமிழ் செல்வத்தின் பக்திமிகு மத்யமாவதி கருணைமிக கமனஸ்ரம புத்தாண்டு கச்சேரி !
- ARAVINDAN MUDALIAR
- Jan 3, 2024
- 9 min read

சனவரி 1 அனைவருக்கும் புத்தாண்டு , சஞ்சய் பித்தர்களுக்கோ 2014ஆம் ஆண்டு முதல் இரட்டிப்பு மகிழ்வு , ஆம் தலைவரின் பிரத்யேக புத்தாண்டு கச்சேரியை ஆண்டு தோறும் பிரம்ம கான சபை பாலு ரவி ஆகியோர் பெருமுயற்சியால் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நம் நன்றி , ஆண்டின் முதல் நாள் என்பதால் ஆலயம் சென்று கச்சேரி செல்ல வேண்டும் , கச்சேரியோ 9.30 மணிக்கு , எனவே கடந்த ஆண்டு போல் ஸ்ரீதேவி ஆதித்ய சஞ்சய் அட்சய ஸ்ரீ என அனைவரும் லஸ் சந்திப்பில் உள்ள நவசக்தி பிள்ளையார் கோவில் சென்று ஒரு துரித தரிசனம் பெற்றோம் ,தயாவான்கள் கடந்த ஆண்டு போலவே அருமையான சர்க்கரை பொங்கல் தந்தார்கள் , நெய்யொழுகும் பொங்கலை விழுங்கிவிட்டு ரஸிக ரஞ்சனி சபை விரைந்தோம் , நமக்கு முன்னே பலர் விரைந்திருந்தனர் , அந்த சாலையையே கார் பார்க்கிங் ஆக மாற்றிவிட்டனர் , அத்தனை கூட்டம். அரங்கப்பிரவேசம் புரிய , ஆன்லைனில் முறையாய் எண்ணை தெரிவு செய்து வசதியாய் தலைவர் கச்சேரி காண நாம் புக் செய்த இடத்தில் தம்பதியர் இருவர் அமர்ந்து ஆன மட்டும் தொல்லை தர , இறுதியாக வெற்றி பெற்றோம் நாற்காலிக்கான போரில் , ராமேஸ்வரம் போனாலும் ..... விடாது என்பது போல் முன் இருக்கையில் இருப்பவரின் சேரை தொட்டாலே திரும்பி திரும்பி பார்க்கும் விந்தை அரங்கேறியது , வடசென்னை படத்தில் நம் சமுத்திரகனி ஒரு டயலாக் சொல்லுவார் ' யார்ரா இவனுங்க எங்கிருந்துட வரானுங்க'' என்பது போல் நமக்கு வினா எழுப்பினோம் , ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கோபாலகிருஷ்ணபாரதியும் ஆழ்வார்க்டியானும் நம்மை வாழ்த்துகிறேன் என்ற சாக்கில் முதுகில் அடிக்க , அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே எனும் வள்ளலார் வழியில் அமைதி காத்தோம். திரை விலக தலைவருடன் நெய்வேலியார் வரதர் பின்பாட்டு ரேதஸ் தம்பூரா ராகுல் உபபக்கவாத்தியமாக நம் ஒப்பனை அரசர் திருப்பனித்துரா இராதாகிருஷ்ணன் கடம் . தலைவர் வழமை போல் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி இனிய கச்சேரியைத் துவக்கினார்.
மயக்கும் மோகன வாகனத்தில் மனமோகனா
ஒரு வழியாய் வந்து சேர்ந்தது மோஹனம் ! பருவத்தின் பதினோராம் கச்சேரியில் பாடினார் தலைவர் , இந்த தாதாவை நாம் முதன்முறையாக பாரத்தகலாச்சாரில் கேட்டுள்ளோம் , இந்த வர்ணம் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் சீடரான ராமநாதபுரம் .எஸ்.சங்கரசிவத்தின் அரங்கேற்றத்தை முன்னிட்டு இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராமநாட்டு ராஜா முத்தையா பாகவதருக்கு கனகாபிஷேகம் செய்து கௌரவித்தார்.வர்ணம் கிரீடத்தில் வைரம் போன்ற ஸ்வராக்ஷரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. என்று என்னை பேசவிடாமல் திருமலையப்பன் ஒப்பித்தான் , நான் ஆம் பாஸ்கரசேதுபதி மன்னரை போற்றும் பா என்பதால் தான் பாஸ்கர பூபாள வாரபால கானலோல என அனுபல்லவியில் வரும் அது மட்டும் அல்ல , இந்த பாடல் முழுதும் சுவராக்ஷரம் விளையாடும் கானலோல போல என நான் அடித்துவிட திருமலை திருவாயை மூடிக்கொண்டான். ஸ்வரங்களின் ராஜாதி ராஜா மனமோகனாவில் மனங்களை கொள்ளயாடித்தார் , சரணம் நீகே தகிநனிரா வேலுகோராவில் விளையாடி சிட்டைஸ்வரத்தில் அரங்கை புரட்டிப்போட்டார் , நாம் எதிர்பார்த்த தாதா வந்தது அடுத்து , தொடர்ந்து மோகனத்தின் சாரை பிழிந்தெடுத்தார் தலைவர் , வரதர் நெய்வேலி இணை ஈடு இணையில்லா நிலையில் வாசித்தனர் , இராதாகிருட்டினரும் அருமையான பின்தொடர்ந்தார்.
மீண்டும் ஒரு ஸ்வாதி திருநாள் மாமன்னர் பாடல் ஸரஸாங்கி இராகம் , ஜெயஜெய பத்மநாப முராரே , முதல் வைணவப் பாடல் சைவத்திற்கு முன் பாடப்பட்ட பாடல் என்று அளந்துவிட்டான் திருமலையப்பன் , தலைவர் நயனத்தில் நயனத்தை பாடினார் , எங்கூர் பாட்டு என அமர்களமாய் வாசித்தார் திருப்பனித்துரா , அந்த நாரத சேவிதவில் வழமையான சங்கதிகள் விளையாடின , முதல் சரணமான நிகமாகம வேத பாடினார் தலைவர் , ஸரஸாங்கி 27ஆம் மேளம் , உட்சபட்ச துள்ளலுடன் தலைவர் பாட அதை அதே வேகத்தில் நெய்வேலியார் அருமையாக வாசித்தளித்தார் , நாம் என்றும் கிறங்கும் நளினகாந்தி , கமலமனோகரியின் தாய் இந்த ஸரஸாங்கி ஆனால் மேற்கத்திய நெடி அதிகம் இருந்தது , தலைவர் அதை மேலும் நிரூபிக்க நிரவல் ஸ்வரம் துவக்கினார் ஜெய ஜெயவில் , என்றுமே ஜெயமே என்று குதித்தான் திருமலை , அடுத்த சில நிமிடங்கள் சண்டமாருதம் நிகழ்ந்தது ரஸிக ரஞ்சனி சபையில் அத்தகு கல்பனாஸ்வரம் நல்கினார் தலைவர் , எங்கிருந்தது தான் இத்தனை திறனை எடுத்து வருகிறாரோ தெரியவில்லை , அவரின் நடனத்தோடான ஸ்வரம் கேட்பதெல்லாம் ஒரு வரம் , ஸப்தஸ்வர பிரஸ்தாரம் புரிந்து அருமையாய் வயலினிடம் வழங்க வரதரும் கடமும் இன்னும் மெருகேற்றினர் , புத்தாண்டின் உச்சதைத் அடைந்தது அவை.மூன்று முழுத்தமிழ் கச்சேரி தவிர்த்து அனைத்து கச்சேரியிலும் ஸ்வாதி திருநாள் மாமன்னரை பாடிவிட்டார் தலைவர். அவரின் பற்று சொல்லில் அளக்க இயலாது , அவையில் அமர்ந்திருந்த ஸ்வாதி மாமன்னர் பெருமகிழ்வு கொண்டார்.
ஸரவெடிக்குப்பின் இளந்தென்றல் குடிகொண்டது அவையில் , தலைவர் மலையமாருதத்தை ஆலாபனைக்கு எடுத்துக்கொண்டார் , அடேயப்பா சற்று முன் நெருப்பு குழம்பாய் வெடித்த தலைவரிடம் ஜஸ்கோல்ட் ஆலாபனையாக வந்தது மலையமாருதம் , இந்த ராகம் சாருகேஸி சேயா அல்லது ராமப்பிரியா சேயா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது , மலையிலிருந்து ஒரு காற்று என்று பொருள்படும் இந்த ராகம் அதைத்தான் செய்தது தலைவரின் ஆலாபனை முழுவதும், தொடர்ந்து வரதர் தன் வயலினில் காற்று வீசினார் , மலையமாருதம் வரதர் வயலினிடம் சரணாகதி அடைந்தது , வளைத்தார் இராகத்தை அது தேமதுரமாய் அரங்கில் வீசியது , இந்த பருவம் முழுதும் அருணாசலகவியை பாடிய வண்ணம் இருக்கிறார் தலைவர் , அனுமானே சுவாமிக்கு இந்த அடையாளம் சொல்லையா பாடினார் , சீதாப்பிராட்டியை கண்ட அனுமர் கணையாழி பெறும் காட்சியை விவரிக்கும் பா , சனகி இலங்கைச் சிறையினில் தன்னுயிரைத்தானே தின்று மனதில் ராமாமுர்த சீவனம் செய்திருக்கிறாள் என்று தலைவர் அனுபல்லவியில் நம்மை அசோகவனத்திற்கே இட்டுசென்றார் , கனமான கங்கைக்கரை வனவேடன் முன்எங்களைக் காட்டியிவர் ஆரென்றுநீ கேட்டாயே குகனே உனதுதம்பி எனதுதம்பி உன்கொழுத்தி இவள் நானும் உன் ஆசைத் தோழன்என்று சொன்னாரே மகனே என்று சீதை மேலும் அத்தாட்சி தருகிறாள் , அந்த உனது எனது தம்பியில் தலைவர் அரங்கையே மிரட்சி கொள்ள செய்தார் அசுர சாரதகம் .
ரீதிகௌளை சாறலிலிருந்து பெருமழை தருணங்கள்
4. தலைவரின் ப்ரீதி கௌளையாம் ரீதிகௌளை ஆலாபனையாய் அடுத்து , தென்றலுக்கப்பின் மீண்டும் தென்றல் அது இளந்தென்றல் என்றால் இது குளிர் தென்றல் , தலைவரின் கற்பனை குதிரை என்னும் மனோதர்மத்தை கட்டவிழ்த்தார் அது கானகம் சென்றது , ஒருபுறம் ஓடும் நதி , அங்கே ஓர் பள்ளத்தாகு அங்கே நீர்விழுந்து நீர்வீழ்ச்சியானது , காற்றின் வேகத்தில் விழும் நீர் சாரலாய் நம்மை ஊடுறுவியது , அந்த சாறல் புறத்தநை குளிர்வித்தது , தலைவரின் ரீதிகௌளை நம் அகத்தை குளிர்வித்தது , தொடர்ந்து வரதர் குளிர்வித்தார் தன் பிடிலில் , சில நேரங்களில் நாமும் அந்த பிடிலாய் மாறிவிடலாம் எனத் தோன்றும் , வரதர் கரங்களில் அகப்பட்டால் ஆனாந்தம் , அவர் மீட்டினால் பரமானந்தம் , என்றும் நித்யானந்தம். மனம் த்வைத்தமு சுகமா விரும்பினாலும் தலைவர் பாடியது பட்டியலில் அறிவித்தபடி நன்னு விடச்சி கதலக்குரா , தொடர்ந்து மூன்றாவது வைணவப்பாடல் என்று அறிவித்து குடுமியை நன்றாக கட்டிக்கொண்டான் திருமலை , கோபாலரோ பாடலில் மயங்கிக்கொண்டிருந்தார் , ராமைய்ய ராமா பட்டாபி ராமா என ராமரை என்னை விட்டு அகலாதே என்கிறார் தியாகையர் , உன்னை விட்டு அரைநிமிடமும் இருக்கமாட்டேன் என்று அனுபல்லவியில் தலைவர் பாட , நாம் இந்த மாதிரி ஒரு பருவத்திற்கு இன்னமும் 12 மாதம் காத்திருக்க வேண்டுமே என கலங்கினோம். கடைசி சரணம் பாகுகா நன்னு ஏலுகோரா பாடினார் தலைவர் அந்த பாகுகாவில் தான் எத்தனை சங்கதிக்ள் எத்தனை நகாசு வேலைகள் , நெய்வேலியார் அரும் நாதம் பாடலை எங்கோ கொண்டு சென்றது . ராமைய்ய ராமாவில் நிரவல் ஸ்வரம் துவக்கினார் , ரீதிகௌளை ரோமாஞ்சனம் அடைந்தது தலைவரின் ஸ்வரங்களால் , மெல்ல சாறல் பின் தூறல் பின் மழை பின் கன மழை பின் அதி தீவிர கனமழையாய் ஸ்வரங்கள் வந்து பொழிந்தது.யாரும் மழைக்கு ஓதுங்கவில்லை மழையில் மகிழ்ந்தனர். ராமா நாமம் பாடபாட திருமலை வைணவ கச்சேரியின் வனப்பில் மகிழ்ந்தான் , அந்த முடிப்பில் நெய்வேலியார் இடக்கை மாயம் உண்மையில் வரம்.
மனக்கிலேசம் ஒழித்த காப்பி நாராயணி
5) காப்பி நாராயணியில் ஒரு குறுஆலாபனை புரிந்து தில்லைச்சிதம்பரமே பாடினார் தலைவர் , கோபாலர் திருமலை போல் துள்ளி குதிக்காமல் கைகூப்பி மகிழ்ந்தார் பாடலில் , மாரிமுத்தாப்பிள்ளையின் பாடல் , தில்லை சிதம்பரமே அல்லாமல் வேறில்லை சுதந்திரமே என்று தலைவர் பாட நான் திருமலையிடம் , புரிந்துகொள் என்றேன் அவன் முறைத்தான் பின் முழித்தான் , சொல்லுக் கெளிது நெஞ்சே நல்ல சொல்லுவாய் தலைவர் சொல்லி சொல்லி பாட பாட நெய்வேலியார் அருமாய் வாசித்தார் , சிவகாம வல்லிக் கன்புள்ள சபை வாணன் வீற்றிருக்கும் என சபையோரை முழுதாய் ஆக்ரமித்தார் பாடல் மூலம் , காசி தனில் கைலாசரென்றொரு நடராஜர் இருந்து பாப நாசம் செய்து வதிதுவே மூன்றாவது சரணத்தை வழமை போல் எடுத்து தன் வீச்சை காட்டினார் , வாசம் செய்வோருக்கு வரியில் உச்சம் சென்று வானளந்தார் , மோசம் வராது , யம பாசம் வராது , மனக்லேசம் வராது என்ற வரிகளெல்லாம் புத்தாண்டில் தனி புத்துணர்ச்சி தந்தது அவையத்து மாமா மாமிகளுக்கு , மீண்டும் ஸ்வரம் எடுத்தவுடன் கல்பனாஸ்வரத்தில் புகுந்து விளையாடினார் , அருமையான கிரியா ஊக்கிகளாக அமைந்தனர் வரதரும் நெய்வேலியாரும் , பதநிகளும் ரிகரீகளும் அவையில் ரீங்காரமிட்டன , மிக மிக அருமையான ஸ்வராட்சி புரிந்து 5 நிமிட பாடலை 10 நிமிடமாக்கினார் தலைவர்.
மனதிற்கிதமாய் மத்யமாவதி பிரளயத் தனி
6) கச்சேரி பிரதான மத்யமாவதி , தலைவரின் தெரிவை என்ன சொல்லி பாராட்டுவது , அரங்கத்து மாமிகள் கண்களில் கணப்பொழுதில் ஜலம் , மிக மிக மங்களகரமாக ஆண்டைத்துவக்கி வைத்தார் தலைவர் தன் மத்யமாவதி மூலம் , கடந்த கச்சேரி பிரதானியான கரஹரப்பிரியாவின் சேய் இந்த மத்யமாவதி , தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம் என்று குறிப்பிகள் சொல்கிறது , சரியாக நண்பகலில் தலைவர் இந்த இராகத்தை ஆலாபனை செய்தார் , மனதிற்குள் அத்தனை அமைதி , கோவிலில் நாம் இருப்பது போன்ற உணர்வைத்தந்தது ஆலாபனை முழுதும். நாதஸ்வர பிடிகள் இருந்தாலும் மிக மிருதவாக கையாண்டார் , பல்வேறு கணக்குகளை ப்ரோயோகங்களின் உணர முடிந்தது , அடுத்து தன் வயலின் கணக்கை துவக்கினார் வரதர் , வயலினிலிருந்து மத்யமாவதி அப்படியே பொங்கி வழிந்தது அவையெங்கும் , ஒரு பெரிய வனத்தில் வரதரை வாசிக்க விட்டால் போதும் , செடி கொடிகள் மரமாகி , ஏற்கனவே மரமானவற்றில் உள்ள காய்கள் கனியாகும் , வண்டினங்கள் வந்து மலரை விடுத்து வரதரின் வயலினை மொய்க்கும் அத்தகு ஆலாபனை தந்தார். எதிர்பார்த்தபடி ராஜாதி ராஜா மகுடீதட மணிராஜ விருத்தம் பாடி அம்மா பாலின்சு காமாட்சி என்று பாடினார் தலைவர் , அந்த வரதாவில் வரதரை பார்க்காமல் மேலே சென்றார் , அரங்கு வரதரை பார்த்து , காஞ்சி பெருந்தெய்வத்தை ஸ்யாம சாஸ்திரி பெருமகன் பாடிய பாடல் இது , பாலிஞ்சுவில் காத்தருள வந்தாள் காமாட்சி , அனுபல்லவியில் வேகமே காபாடு என்று தலைவர் பாட , கமாட்சி தாய் அரங்கத்தினரையும் சேர்த்து காத்தாள் , காபாடின தல்லி கத நேனு நீ பிட்டனி கதா என்று சரணத்தில் உருகினார் தலைவர, , நெய்வேலியார் அருமையான கும்கி தர ,எதிர்பார்த்தபடி காநத மகுவு வில் நிரவல் அமைத்தார் தலைவர் , அவைக்கே காருண்ய மூர்த்தியாய் திகழ்த்தார் தலைவர் , ஆசை தீர நிரவல் புரிந்து நிரவல் ஸ்வரம் துவக்கினார் , மதிய நேரத்திற்கு சொர்க்க வாசல் திறப்பு போல் அமைந்தது அவை , சீதோஷ்ண நிலையும் வெகு கச்சிதமாய் பொருந்த , இந்த பாடலிலேயே இருந்துவிடலாம் போலிருத்தது அவையினர் மனோநிலை , நிரவல் ஸ்வரம் வரைதான் தலைவரை கட்டுப்படுத்த முடியும் கல்பனாஸ்வரம் சென்றால் அவர் ஜல்லிக்கட்டு காளை , எந்த இராகமானாலும் அதில் புகுந்து விளையாடுவார் அதைத்தான் இந்த இராகத்திலும் செய்தார் , பாவில் விளையாடினார் நெய்வேலியார் வரதரோடு , மத்யமாவதி நிரவல் ஸ்வரம் இன்னும் ஓர் ஆண்டு வரை பேசும் நிலையில் பாடி சுவரப்பிரஸ்தாரம் சென்றார் , தொடர்ந்து இருபது நிமிட தனி , ஆம் பருவம் முழுதும் பத்து தனி தந்த தலையாட்டி சித்தரின் பதினோராம் தனி , ராஜபாட்டையில் வீறு நடை போட்டது , அடடா நடை என்றால் நெய்வேலியார் நடைதான் , அவர் சொன்னதையெல்லாம் கேட்டது மிருதங்கம் , இங்கே வயலினுக்கும் மிருதங்கத்திற்கும் வேறுபாடு உள்ளது , வரதர் வயலினிடம் நைசாக நயமாக பேசி வருடி வருடி சொன்னதை கேட்க செய்வார் , தலையாட்டியாரோ நன்றாக அடித்து வரவைப்பார் கேட்டதை , அடி வாங்கி மகிழ்வோடு ஒத்துழைப்பு என்றால் அது நெயவேலியார் மிருதங்கம் மட்டுமே.பிரமாதமான தனி தந்தார் நெய்வேலியார் , உடன் வாசித்த திருப்பனிதுரா இராதாகிருஷ்ணன் பன்னெடுங்காலமாய் பல தனி தந்தவர் , இருவரின் தினியும் பிரமிப்பை தந்தது ,அறுபதைக் கடந்த இருவரும் இருபதை விஞ்சினர் ஆற்றலில் திறனில் , திக்குமுக்காடியது அரங்கு இந்த அருந்தனியில்.
சும்மா இருத்தல் அரிது இந்த சும்மா சும்மா கேட்டு
7) அட்டாணாவில் ஓர் குறுஆலாபனை தந்து , சும்மா சும்மா வருகுமா சுகம் பாடினார் தலைவர் , கணம் கிருஷ்ணையர் பாடல் இது திருவையாற்றுக்கு இவர் ஒரு முறை சென்ற காலத்தில் ஸ்ரீ தியாகையரைச் சந்தித்து அவருடைய விருப்பத்தின்படி அடாணா ராகத்தில், “சும்மா சும்மா வருகுமா சுகம்” எழுதியுள்ளார் , அம்மம்மாவென்று இருந்தாவதென்ன ஆண்டவனை நினைந்து பார் இம்மாத்திரம் நீ செய்தால் சௌந்தர்ராஜனுக்கு இரங்கும் அமோகம் வைபோகம் திருவடி என சும்மா இருந்தால் ஏதும் கிட்டாது என்று புத்தாண்டு புத்திமதி சொன்னார் தலைவர் , அந்தி நேரம் தனில் முந்திக்கொள் பெண்கள் கண்ணில் சந்திக்காமலே நீ வந்து வந்து நின்றால் மந்த மாருதம் இந்த வேளை நேரம் அந்த நந்தகுமாரனை நினைந்து வணங்காமலே என்று சரணம் பாட வைணவக்கணக்கு நான்கு என்று அறிவித்தான் திருமலை , சும்மா சும்மா இது போல் கணக்கு போட்டால் உனக்கேது கதிமோட்சம் என்றார் கோபாலர் , சும்மா எதையாவது சொல்லாதேயும் என்று அவரை பார்த்து கூறிவிட்டு என் தலையில் கொட்டிவிட்டு விவேக் போல் சும்மா என்றான் ஆழ்வார்கடியான் நம்பி.
கமனஸ்ரம கணங்கள் ராகமாலிகை பொன்னலங்காரம்
8) பருவத்தின் எட்டாம் ராகம் தானம் பல்லவி கமனஸ்ரமா , மீண்டும் ஓர் மேளகர்த்தா ராகம் தானம் பல்லவி , 53வது மேளம் இந்துஸ்தானியில் இது மார்வா , ஹம்ஸத்வனி பூர்வி கல்யாணி போன்றவற்றின் தாய் இந்த கமனஸ்ரமா , தலைவர் உருக்கமாய் ஆலாபனை புரிய , மனதை உலுக்கியது அதன் வீச்சு , கருணை பக்தி உருக்கம் என பல உணர்வுகளை தூண்டியது தலைவரின் ஆலாபனை , தொடர்ந்து வயலினில் வரதர் உணர்வலைகளை மீள்பதிவேற்றினார் , தானாதி சூரர்கள் இருவரும் ஆரம்பம் முதல் படு உருக்கமான தானத்தை வழங்கினார் , நம்தத்த நம்த என்று தலைவர் தானத்தில் தலைசிறந்தவர் என்பதை உணர்த்தினார் , நீண்ட தானமாய அமைத்து அரங்கை உலுக்கினர் இருவரும். தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாவேந்தரின் வைர வரிகளை பல்லவியாய் பாடினார் தலைவர் , கூடியிருந்தோரிடம் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை , என்ன காரணம் தெரியவில்லை , தமிழ் என்றாலே அதை அரசியலாக மட்டும் காணும் பார்வை சமீப காலங்களில் உருவாகிவிட்டது என்று வேதனைபட்டார் கோபாலர் , கலங்காதீரும் விடிவு காலம் விரைவில் என்று சமாதானப்படுத்திவிட்டு தலைவரின் பல்லவியில் மகிழந்தோம் , விரைவாக ஸ்வரம் துவக்கினார் தலைவர் ,மனதார கமஸ்ரமாவில் ஆ்வரம் பாடி ராகமாலிகையில் முதலாய் பூர்ணசந்திரிகாவை ஒரு பிடி பிடித்தார் தலைவர் , ஒரு காலத்தில் தலைவர் தெலிசிராம சிந்தன பாடுவார் இந்த இராகத்தில் , மனதை வருடியது பூர்ணசந்திரிகா , ரவிசந்திரிகா என்று ஒரு இராகம் உண்டு அதில் மாகேலரா பாடுவார் என்பதை யாராவது அவருக்கு நினைவு படுத்த வேண்டும் , வரதர் பூர்ணசந்திரிகாவை பூரணமாய் வாசித்தருள அடுத்து சாருகேசியை பிரமாதப்படுத்தினார் தலைவர் , ஒரு குறு பிரளயத்தையே உருவாக்கினார் சாருகேசியில் , வரதரின் வாசிப்பில் சாருகேசியில் கரைந்தது அவை , அடுத்த மிஸ்ர சிவரஞ்சனி ஸ்வரம் , தூர்தர்ஷன் ராகம் , சௌக்கியத்தை தாங்கி வந்தது ஸ்வரங்கள் , வரதர் வயலின் பிரமாதப்படுத்திட பாங்குற அரங்கேறியது சிவரஞ்சனி. மொத்தத்தில் புத்தாண்டில் பூரிப்பை தந்தது கமனஸ்ரம ராகம் தானம் பல்லவி.
துக்கடா மாணிக்க வைடூரியங்கள்
9) அப்படியே ராமகிருஷ்ணரு மனகே பந்தரு பாடினார் திலங்கில் , ஒரு புறம் ஸ்வாதி மன்னர் போல் அனைத்து கச்சேரியிலும் தலைவர் புரந்தரதாஸரை பாடி வருகிறார் , நாம் அதிகம் மகிழும் பாடல் இது , வாயிலை திறக்க வல்ல பாடல் இந்த திலங் , மீண்டும் ஓர் வைணவப்பா என்றான் திருமலை துள்ளியபடி.
10) 2021ஆம் ஆண்டு சாஸ்திரி அரங்கில் 150 பேர் அளவில் புத்தாண்டு கச்சேரி பாடினார் தலைவர் , அப்போது அந்த வழமையான கோரிக்கைகள் வராமலிருக்க இடைவெளியின்றி அடுத்த பாடலை துவக்குவார் , அதே போல் இங்கும் தொடர்ந்தார் அகில சராசரா கமாஸில் , ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஒரு பக்கம் கமாஸ் மறுபக்கம் பாபநாசம் சிவன் , சதாசிவன் ரஞ்சனி அரங்கின் 100 மீட்டரிலிருந்து கேட்டு மகிழ்ந்தார் பரம கபாலி , திருவளர் மயிலையின் இறைவனின் அருளை அரங்கு மனதார பெற்றது , அழகும் உருவும் எழுதரிய துரீயாதீத. ஜடதிமிர திவாகர.மழு திரிசூலம் புலியதள் பூதி மயங் கெழில் வதந நிசாகர என்று பாட பாட அரங்கில் இருந்த அத்தனை பேரும் தலைவருடன் சேர்ந்து உட்கார்ந்த நிலை நடனம் புரிந்தனர் , மனம் 2014 காலங்களுக்கு மீண்டும் சென்றது.
11)அடுத்து கோரிக்கைகள் வந்து விழ இதுக்குத்தான் கேப் விடக்கூடாது என்று கூறிவிட்டு , தீர்த்த கரையிலே செண்பகத்தோட்டத்திலே விருத்தம் துவக்கினார் , புத்தாண்டில் முண்டாசு கவி முந்தி வந்தார் , நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி என பாகேஸ்ரீயில் கரைத்தார் அவையை , கண்ணம்மா அழகாய் பவனி வந்தாள் உப்பரிகையில் பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!.. பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா என்று தலைவர் பாட பாட மனம் விம்மியது , என்னே பாரதியின் கற்பனைத்திரம்.
12) அட்சயா ஆதித்த்யா மனம் மகிழ அடுத்த ராமசாமி தூதன் மீண்டும் வந்தார் , ஆம் இரண்டாம் முறையாய் அனுமான் வந்தார் அவைக்கு , துள்ளல் என்றால் அப்படி ஒரு துள்ளல் இந்த பாடலில் , ஆன்லைனில் கேட்டபோதே இந்த பாடல் நிச்சயம் தலைவரின் எவர்கிரீனில் இருக்கும் என்று ஆருடம் சொன்னார சங்கர் அது மெய்யானது , பகுதாரி படு ஜோராய் அரங்கை உசுப்பியது , அருணாசல கவியின் அருமாபாவை மீண்டும் பாடி மகிழ்வித்தார் தலைவர்.
13) மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சியாய் துன்பம் நேர்கையில் பாடினார் , துன்பம் நேர்கையில் ஒரு உயர்தர தேன் அதை அடிக்கடி தரக்கூடாது , ருசிக்காக ஏங்க வேண்டும் என்பது என் கருத்து , தலைவரோ தேனளிப்பது என் பணி மீண்டும் மீண்டும் ருசி என தந்தார் பாவேந்தரின் , தமிழ் மொழியின் இன்றுவரையிலான ஆகச்சிறந்த பாடலை , பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த இசைப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடல் 1939 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்காலத்தில் ‘யாழ்’ என்னும் இசைக் கருவி பயன்பாட்டில் இல்லை. யாழில் இருந்து வளர்ச்சி பெற்ற வீணை என்னும் இசைக் கருவியே பயன்படுத்தப்பட்டது, எனினும் இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘வீணை’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சங்க காலத்திலே தமிழர் பயன்படுத்திய ‘யாழ்’ என்னும் இசைக் கருவியையே குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்கால நாட்டியத்தைக் குறிப்பிடாமல் ‘அன்றை நற்றமிழ்க் கூத்து’ என்றே குறிப்பிட்டுள்ளார். அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். அகம், புறம் என்று வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்து அறிந்தவர்கள் தமிழர்கள். அதைச் சங்ககால நூலின் வழியில் புரிய வைக்குமாறு பெற்றோர் கேட்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார்.பாரதிதாசனுக்குக் கலை என்றால் பிற கலப்பு இல்லாத தமிழ்க் கலை தான் மகிழ்ச்சியைத் தரும்; இசை என்றால் தமிழ் இசைதான் மகிழ்ச்சியைத் தரும்; மொழி என்றால் தமிழ் மொழி தான் மகிழ்ச்சியைத் தரும். இவற்றை இந்தப் பாடலின் அடிப்படையாய் அமைத்து அவர் பாடியுள்ளதைக் காணமுடிகிறது. என்று நீண்ட நெடிய பிரசங்கம் செய்தான் திருமலை , அவனிடமிருந்த டேபை எடுத்துக்காட்டினார் கோபாலகிருஷ்ணபாரதி. சுக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை அது பழமொழி தேஷை விஞ்சிய இராகமில்லை சுப்ரமணியனை விஞ்சிய பாடகனில்லை இது புதுமொழி , அடேயப்பா முடிப்பில் என்னே ஒரு தேஷ் சாரம் , திகட்ட திகட்ட தேன் உண்டோம்.
மணி 1.10 காட்டியது 3.40 நிமிடம் முடிந்துள்ளது இன்னும் 20 நிமிடங்களில் 5 பாடல் பாடுவார் ஒரு விருத்தம் இருக்கும் என்று காத்திருந்த அவையோருக்கு புத்தாண்டின் ஆகச்சிறந்த பல்பை பரிசளித்து பவமான சுதுடுவை பற்றினார் தலைவர் , குட் ஓல்ட் டேஸ் ஆர் ஓவர் , நோ மோர் 4 அவர்ஸ் கான்சர்ட்டு என்று பழிப்பு காட்டினான் திருமலை , ஆல் குட் திங்க்ஸ் மஸ்ட் கம் டு என் எண்ட் என்றவாறு கோபாலர் திருமலையை அழைத்துக்கொண்டு நடையைக் கட்டினார் , ஆதித்யா அப்பா ஓட்டல் என்றான் , பசி என்ற உணர்வு அப்போது தான் நமக்கு ஏற்பட்டது , இனி தலைவரின் அடுத்த கச்சேரி எப்போது என்று தெரியவில்லை , உடுப்பி , டெல்லி , பெங்களூரெல்லாம் சாத்தியப்படுமா தெரியாது , அடுத்து எப்போது என்னும் அந்த காத்திருப்பு தவத்தை துவங்கினோம் , காத்திருத்தலும் ஓர் இன்பமான உணர்வே . ஆம் தம்பி என்னைப்பார் , நான் அடுத்த பருவத்திற்கு காத்திருக்கிறேன் என்றாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியார் , அதானே , ஒரு பாட்டுக்கூட படவில்லையே தலைவர் என்று உரைத்தது நமக்கு. உள் மனம் வந்தோமா கச்சேரி கேட்டோமா போனோமான்னு இருக்கனும் என்றது , எனவே சும்மா இருப்பது சுகம் என ஆண்டாளிடம் அசடு வழிந்துவிட்டு இடத்தை காலி செய்தேன்.
Comments