top of page
Search

வித்வத் சபையில் குளிர்வித்த சஹானா-தெறித்த கமாஸ்-முழங்கிய மணிரங்கு , ஜோக் , பட்தீப் மாயங்கள் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 28, 2023
  • 6 min read


ree

பருவத்தின் எட்டாம் கச்சேரி என்று மற்றுமோர் கச்சேரி என்று கடந்த செல்ல இயலாத மதராஸ் வித்வத் சபை கச்சேரி , இரண்டு காரணங்கள் இருக்கும் , ஒன்று இருக்கும் சபாக்களில் மிகவும் முக்கியமானதாகவும் பெருமைக்குரியதாகவும் இந்த சபை பார்க்கப்படுகிறது (அதை விட பழமை வாய்ந்த பார்த்தசாரதி சபா இந்தியன் பைன் ஆர்ட்ஸ் அந்த மரியாதை ஏனோ தரப்படுவதில்லை ) இரண்டாவது இங்கு டிக்கெட் பெற ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வேடிக்கை ,இந்த விர்ட்டுவல் ஆன்லைன் ஏ.ஐ உலகில் கச்சேரிக்கான சீட்டை பெற நேரில் வரவேண்டும் அதிலும் காலை 6 மணிக்கு டோக்கன் 8 மணிக்கு டிக்கெட் என்றெல்லாம் இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் , 6 மணி என்றால் நடுநிசி 1 அல்லது 2 மணிக்கே சென்று காத்திருக்க வேண்டும் , இதையெல்லாம் நானும் சில ஆண்டுகள் செய்ததுண்டு கடந்த ஆண்டு முதல் எவரேனும் டிக்கெட் தந்தால் செல்வது இல்லையேல் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம் அந்த வகையில் கடந்த ஆண்டும் போல் இவ்வாண்டும் டிக்கெட் கிடைத்தது , இவ்வாண்டு அளித்த கொடையுள்ளம் எங்கெல்லாம் தலைவர் கச்சேரியோ அங்கெல்லாம் பறந்த் பறந்து கேட்கும் சஞ்சயை சுற்றும் வாலிபர் ஜனார்த்தனன் புண்ணியம் கட்டிக்கொண்டார். வழமையாக 6.45 கச்சேரிக்கு சற்று முன் செல்வது என்று இருந்தோம் இவ்வாண்டு முதல் கச்சேரி நிஷா ராஜகோபாலன் அதனாலேயே முதல் கச்சேரிக்கே ஆஜர் ,அப்போதே நல்ல கூட்டம் தலைவர் கச்சேரி துவங்கும் முன் வித்வத் சபை வளாகமே திருவிழா கோலம் பூண்டிருந்தது , அரங்கு உள்ளே கூட்டம் அலைமோதியது உத்தரத்திலும் தரை தளத்திலும் மேடையிலும் ரஸிகர் கூட்டம் , சிறுவர் முதல் முதியோர் வரை முந்தி அடித்து அமைர்ந்திருந்தனர் , தலைவருடன் நெய்வேலியார் வரதர் மோர்சிங்கில் கன்னடத்திலிருந்து ராஜசேகர் இவரை வழமையா கிருஷ்ண சபையில் காணலாம் தற்போது தலைவர் அங்கு பாடுவதில்லை என்பதால் இங்கே வாய்பளித்திருந்தார் இந்த பருவத்தில் முதன்முறையாக கஞ்சீரா இல்லாத உபபக்கவாத்தியமாய் மோர்சிங் , பின்பாட்டு ரேதஸ் தம்பூரா ராகுல் பச்சை நிற புன்பலம் போததற்கு மேடை முழுதும் பச்சை , ஏதோ புல் தலைமீது அமர்ந்திருப்பது போல் இருந்தது அத்தனை பெரிய வித்வான்கள். அனைத்தும் தயாராய் இருக்கு 6.45 மணிக்கு துவங்கிற்கு ராஜாதி ராஜர் கச்சேரி .


  1. சங்கராபரணத்து சாயை இன்னமும் விடவில்லை போலும் தலைவர் வர்ணம் சங்கராபரணத்தில் துவக்கினார் , ஆம் சுப்ரமணியர் உந்தன் பாத பங்கஜம் என்ற மதுரை சுப்ரமணிய அய்யர் பாடல் பாடினார் , ஸ்வரங்கள் வழமைபோல் சங்கராபரணத்தில் அரங்கை தாலாட்டியது , குழைவு நிறைந்த வர்ணமாக அமைந்தது , இப்பாடல் 2014இல் தமிழிசை சங்கத்தில் பாடியுள்ளார் தலைவர் , மெல்மெல் ஸ்வர்ஙகள் மேகமெடுத்தன நாத பேத கீதனே நானிலம் போற்றும் பாதனே சரணம் பாடி முழுமையாக சங்கராபரணத்து சாரத்தை பிழிந்து சிட்டைஸ்வரம் துவக்கினார் ,வர்ணம் நீண்டது இன்பமும் நீண்டது , பண்ணிசை மயிலையில் விஸ்வரூபமெடுத்தது , நானிலம் போற்றும் நம் பாதன் நாத பேதத்தை பறைசாற்றினார் , உடன்பட்டு உன்னதமாய் வாசித்தனர் மூவர் கூட்டணி .

  2. அடுத்து கவுளை ஸ்ரீ மஹாகணபதி ரவத்துமாம் முத்துசாமி தீட்சிதர் பாடல் , தும்பிக்கை நாயகனை போற்றும் பண்ணை பாடினார் , இந்த கிருதி கமலாம்பா நவவர்ணத்தைப் பாடுவதற்கு முன் மகா கணபதிக்கு ஆவாஹனம் செய்யும் கிருதியாகப் பாடப்படுகிறது. திருவாரூரில் கோயில் குளமான கமலாலயத்தின் கரையில் இவரது கோயில் உள்ளது. தலைவர் ஸ்வரத்தை துவக்கினார் கவுளையில் , அரங்கு மீண்டும் ஓர் ஸ்வர சுழலில் அகப்பட்டு அமிர்தம் பருகியது , சரணம் சுவர்ணாகர்ஷண தலைவர் பாட அனைவரும் கணபதி ராயனை மணக்கண்ணில் துதித்தனர் .

  3. ஆலாபனை வனஸ்பதி அடுத்து , ஒரு காலத்தில் வனஸ்பதியை அவ்வப்போது தந்தார் தலைவர் , ஆபோகி போல் இதும் இனித்தது , இந்து சக்கரத்து ராகம் இது 4வது மேளம் இதன் ஜன்னியத்திலு புகழ் பெற்ற இராகம் ராஸாளி , தலைவரின் வனஸ்பதி வானை அளக்கத்துவங்கியது , இந்த வித்வத் சபை ரஸிகர்கள் பல விதம் , இங்கே கச்சேரி கேட்பதை பெருமையாக நினைப்போர் , பன்னெடுங்காலமாய் வி்த்வத் சபை உறுப்பினார்கள் , வெளிநாடு வாழ் இந்தியர்கள் , சஞ்சய் பித்தர்கள் இப்படி பல்வேறு தரப்பட்ட இரசிகர்களிடையே தலைவரின் வழமையான இராக ஆலாபனை சேட்டைகள் பல்வேறு உணர்வுகளை மேலோங்கச் செய்தது , என் அருகில் இருந்த மாமி தலைவரின் ஒவ்வொரு செய்கைக்கும் மலைத்து சிரித்தார் , நீண்ட நாட்களுக்குப்பின் நேஸலாக ஆலாபனை தந்தார் தலைவர் , வரதர் வனஸ்பதி அடுத்து தலைவர் எவ்வழி தம்பி அவ்வழி என அருமையாக வாசித்தார் , தலைவரின் குரலை தன் பிடிலில் பிடித்து பிடித்த வரதர் தரும் அழகே அழகு.ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் அரிதான சமஸ்கிருதப்பாடலான வனதுர்கே வனஸ்பதி பாடினார் தலைவர் , மாதங்கியை அரங்கிற்கு அழகாய் அழைத்து வந்தார் , வாயிற்காப்பாளர் அரங்கில் உலா வரும் கிங்கரர்கள் கண்ணில் படாமல் மாதங்கி தாய் அரங்கில் உலா வந்தாள் , தொடர்ந்து மூன்றாவது பாடலாக ஸ்வரம் துவக்கினார் பதநிதபமக என்று , பராமார்த்த சுக சாரே பாபவிதாரினி தீரே ஹரிகேச சுரசாதனே பாடி அரங்கின் உச்சிக்கு சென்று வனஸ்பதி வானக்களித்தார் ,மீண்டும் நிரவல் ஸ்வரம் பாடி பிரம்மாண்டமாய் நிகழ்ந்தேரியது வனதுர்கே வனஸ்பதி .

  4. சஞ்சய் சுப்ரமணியன் என்னும் மகாவித்வானை கடந்த 12 ஆண்டுகளாக பித்து பிடித்து கேட்பதின் பிரிதோர் காரணம் அடுத்த ஆலாபனை சஹானா , அடடா என்னே இனிமை என்னே குளுமை , ஒரு காலத்தில் வந்தனமு ரகு நந்தனா அடிக்கடி வரும் அதே போல் தில்லையம்பலத்தானை எல்லாம் கேட்ட காலங்கள் உண்டு , அண்டார்டிகாவில் பனிக்கூழ் குடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது தலைவர் தம் சஹானா ஆலாபனை , தொடர்ந்து வரதர் சஹானா , வரதரின் வயலின் கம்பிகளிடையே ப்ரீஸரில் கட்டி கட்டியாய் ஜஸ் உருவாவது போல் சஹானா வாசிக்க வாசிக்க உருவாயிற்று அரங்கின் குளுமையை ஒன்றுமில்லாது செய்தது வரதர் சஹானா , அண்ணாசாமி சாஸ்திரியின் இங்கேவருன்னாரு நன்னு ப்ரோவ பாடினார் தலைவர் , இராமரை துதிப்பவரா என்று நாம் என்ன இல்ல இது ஈஸ்வரி தெய்வத்தை துதிக்கும் பாடல் என்று வந்தமர்ந்தார் கோபாலகிருஷ்ணபாரதி , திருமலை திருட்டு முழி முழித்தபடி பின்னால் வந்தான் , ஏனிந்த தாமதம் என வினவ ஒரே பாஸை வண்ணநகலெடுத்து இருவர் காட்ட முற்பட்டு மாட்டி ஒரு வழியாய் வந்து சேர்ந்துள்ளார்கள் , அனுபல்லவியில் ஸ்ரீ குசுமா குந்தளாம்பிகே வரியை அருமையாக பாடினார் தலைவர் , ஜபத ஜபத பாடலில் சுஷாமா இராகத்தை சமீபத்தில் ஒரு நடமாடும் கர்நாடக இசை பல்கலைக்கழகத்திடம் குசுமா என்று சொல்லி அசடு வழிந்த நமக்கு , அந்த குசுமா குந்தளாம்பிகே தெய்வமே வந்து கலங்காதே என்று கூறியது போலிருந்தது, நான்காவதாக ஸ்வரம் தொடர்ந்தது , சஹானா ஸ்வரங்கள் இன்ப வரங்களாய் வந்து விழுந்தன , நெய்வேலியாரின் வாசிப்பை இங்கு சொல்லியே ஆகவேண்டும் , மனிதர் என்னமாய் வாசிக்கிறார் சஹானாவிற்கு , அத்தனை சௌக்கியம் , வயலினோடு ராஜசேகரின் மோர்சிங் இன்னமும் இன்பத்தை கூட்டியது , ஜகன்மாதா ஈஸ்வரி அருளால் அருமையான சஹானா மனதார அமைந்தது.

  5. அடுத்து பசவன்னரின் களபேடா பாடல் இராகம் கோபிகாதிலகம் மெட்டமைப்பு சஞ்சய் சுப்ரமணியன் , களபேட கோளபேடா ஹசிய நுடியளுபேடா என்ற வரிகள் புரியாவிட்டாலும் அதையும் செய்யாத இதையும் செய்யாதே போலிருந்தது , அக்கம்மா தேவி போல் இதுவும் ஒரு சித்தாந்த பாடல் என அறிந்தோம் ,திருடாதே, கொல்லாதே,

  6. ஒரு காலத்தில் கமாஸ் தலைவரின் ஒவ்வொரு கச்சேரியிலும் கடையில் பாடப்படும் , பெஹாக்கிற்கும் இதற்கும் தான் போட்டி ,அப்படிப்பட்ட கமாஸ் பருவத்தின் எட்டாவது கச்சேரியில் தான் எட்டி பார்த்தது , மனம் 2014 ஆகஸ்டு மாதம் சென்னை ஐஐடியில் பாடிய அகில சராசராவிற்கு சென்றது , அதற்குள் தலைவர் கந்தன் அலங்காரத்திலிருந்து விழிக்குத்துணை திருமென்மலர் பாதங்கள் விருத்தம் துவக்கினார் அடேயப்பா சஞ்சய் விருத்தத்திற்கு ஈடு இணை தான் உண்டோ என்று மகிழ்ந்தார் கோபாலர் , மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே என்று பாட பாட அந்த மயூரமே வந்தது போலிருந்தது , வடிவேலை வகை வகையாக பாடி , சாமி மயூரகிரி வடிவேலாவிற்கு வந்தார் தலைவர் , அந்த கச்சேரியின் உச்சம் அது , அந்த குருவையும் சாமியையும் சேர்ந்து குருசாமி ஆக்கிய அழகை என் சொல்வது , சரவணபவவில் நெய்வேலியாரோடு விளையாடிவிட்டு சோமசேகர குமார வரதா சென்றார் தலைவர் , வரதர் நிமிராமல் வாசித்தார் நீங்கள் வரித்த வலையில் விழுவேனா என்று , நான் உனதிடைஅடிமறவேனேவில் கமாஸில் சொக்கவைத்தார் தலைவர் , முதன்முதலில் இந்த பாடலை கபாலி கோயிலில் கேட்டதாக நினைவு எனக்கு , சரவணபவ குருசாமி மயூரவடிவேலாவில் நிரவல் அமைத்தார் தலைவர் , நான் கூறியவாறு கச்சேரியின் உச்சமாய் அமைந்தது பாடல் , நிரவல் அரங்கையே கட்டிப்போட்டது ஏறத்தாழ 1600 பேர் அமரக்கூடிய அவையில் ஆயிரத்திற்ககும் மேற்பட்ட ரஸிகர்களை ஒரு பாடலில் முழுதுமாய் இயக்குவது சாதாரண காரியமில்லை, நிரவலைத் தொடர்ந்து சாமியிலேயே நிரவல் ஸ்வரம் தந்தார் , வரதரும் நெய்வேலியாரும் தொடர்ந்து தலைவருடன் உறுதுணை புரிகிறார்கள் இசை வேதியில் இந்த மூவருக்கும் படுகச்சிதம் , தலைவர் பநிதாத சென்றார் பநித பதநிதா என்று அரங்கிற்கே பதனி பத்நார் இசையாளுனர். ஸ்வரப்பிரஸ்தாரம் சென்று பிரம்மாண்ட கமாஸ் நிறைவு செய்தார் தலைவர்.தொடர்ந்து தனி , நெய்வேலியார் மோர்சிங் ராஜசேகர் என்னும் இரண்டு மூத்த கலைஞர்களின் முத்தாய்ப்பு தனி , இருவரும் காணாத மேடையில்லை , இருந்தாலும் அரங்கேற்ற கச்சேரிபோல் அத்தனை சிரத்தையாக வாசித்தனர் பத்து நிமிடத்திற்கும் குறைவாக வாசித்தாலும் , அரங்கை புரட்டிப்போட்டனர் தத்தம் வித்வத்தை காட்டி.

  7. மணிரங்கு ராகம் தானம் பல்லவி அடுத்து , ஆலாபனை மணிரங்கு , மாமவ பட்டாபி ரமா புகழ் இராகம் ஆனால் அதற்கு மேல் இந்த இராகத்தை யாரும் ஏதும் பெரிதாய் செய்ததாக தெரியவில்லை , தலைவர் விஸ்தாரமாய் இராகத்தை ஆலாபனையில் அலசினார் , கரஹரப்பிரியா ஜன்யத்தை தலைவர் மிகுந்த உணர்ச்சி பொங்க ஆலாபனை புரிந்தார் , அடிமுடி தொட்டு ஆலாபனையில் உச்சமடைந்தார் , மிச்சம் ஏதுமில்லை என்ற நிலையில் எட்டு நிமிடம் ஆலாபனை முடித்தார் தன் ப்ரயோகங்கள் துரிதங்கள் எல்லாவற்றையும் கலந்த தூரிகையால் வண்ணப்படம் வரைந்தார் , மணி அழகாய் ஓலித்தது இசையாய் ஒலித்தது கலையாய் மெருகேறியதொஉ , தொடர்ந்து வரதர் மணிரங்கு மலரை சுற்றும் வண்டாய் ரீங்ககாரமிட்டது ,தானம் துவக்கினார் தானாதி சூரர் , வழக்கம் போல் இருவரின் தானங்களும் உயரிய யோக நிலைக்கு இட்டுசென்றது அவையை , அரங்கின் மூலை முடுக்கெல்லாம் எங்கு திரும்பினும் தலைவரின் தானம் தெறித்தது , அகூஜா ஒலிப்பெருக்கியின் உச்சி சென்றது தானங்கள் , மறுகணம் தரைதளத்தில் தெரித்தது , ஒரு கணம் அகடமி டிடிகே அரங்கே சுழன்றது போலிருந்தது , ஆனந்த நடனம் ஆடினார் கனகசபையில் என்று ஆருத்ரா தரிசனத்திற்கு கச்சிதமாய் வாழ்நாளில் முதல் முறையாய் பல்லவி அமைத்தார் தலைவர் , தில்லைக்கூத்தனை பாடுவதில் தலைவருக்கு அத்தனை மகிழ்ச்சி என்று மகிழ்ந்தார் கோபாலர் , ஆனால் பல்லவி இரண்டரை நிமிடமே நீடித்தது , ஸ்வரம் துவக்கினார் மணிரங்குவில் ஆகா இன்று பல்வேறு ராகமாலிகை காத்திருக்கிறது என்று தயாரானோம் அள்ளி பருக , மணிரங்கு ஸ்வரம் முடித்து அடுத்த ஸ்வரம் துவக்கினார் , ஆரம்பத்தில் சலநாட்டை போல் ஒலித்தது அதற்கேற்றார் போல் பனிவிழும் போல் ககரிசாக்கள் இறக்கினார் , பின் அனுராதா கண்ணன் இல்ல இது ஜோக் என்றார் , இரண்டரை நிமிடம் பல்லவி ஜோக் ஸ்வரம் நான்கு நிமிடம் பாடினார் , புத்தாண்டு கச்சேரியில் இருப்பது போல் உணர்ந்தோம் , இசை ஞானி இருந்திருந்தால் கட்டிப்பிடித்திருப்பார் , வரதர் பதிலுரை அதே போல் சலநாட்டை சாயலை காட்டி ஜோக் நீர்வீழ்ச்சியானது , அடுத்து பஹாடியா என்று யோசிப்பதற்குள் எந்தாய் ஓலித்தது இராகத்தில் ஆம் அடுத்து பட்தீப் இரண்டுமே இந்துஸ்தானி இராகம் , இந்துஸ்தானி பாடுவதில் தலைவர் பலே கில்லாடி , படே உஸ்தாத் குலாம்அலி மெச்சுவார் அத்தகைய ஒரு பட்தீப் ஸ்வரம் பாடினார் , மிருதங்கத்தை டோலக்காக்கி வாசித்தார் நெய்வேலியார் , அவர் தான் எத்தனை அவதாரம் எடுக்க வேண்டும் சஞ்சய் கச்சேரிக்கு , பட்தீப் உச்சத்திலும் உச்சத்தை தொட்டு கமாஸை விஞ்சியது .

  8. கொசுறுக்கு காத்திருந்த அவைக்கு ஸிரித்வாகுணா புவன சுந்தர பாகேஸ்ரீயில் விருத்தம் பாடி அப்படியே ஸ்வாதி மாமன்னரின் கோபாலம் பக்திம்தேகி பாடி சைவ கச்சேரியில் சற்றே வைணவத்திற்கும் இடமளித்தார் தலைவர் , திருமலை வதனத்தில் முதன்முறையாக அமைதி திரும்பியது , தன் குடுமியை அவிழ்த்து கட்டிக்கொண்டான் .

  9. மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலனைந்தில் கோயில் பதிக வரிகளை மீண்டும் ஒர் விருத்தமாய் தந்தார் தலைவர் காப்பியில் ,தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனேஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே. என்று தலைவர் பாட கோபாலகிருஷ்ணபாரதியோடு சேர்ந்து திருமலையும் கேவி கேவி அழுதான் தலைவர் பாபநாசம் சிவனாரின் ஈசன் அன்பர்க்கு உவமை சொல்ல எவருமில்லையே பாடினார் , கைலை தெய்வத்தை சஞ்சய் சுப்ரமணியன் போல் பாட யாரும் இல்லை என்றார் கோபாலர் , வயதில் குலத்தில் வித்தையில் ஜஸ்வர்யம் தன்னிலும் சஞ்சய் நிகர் சஞ்சயே .


தலைவர் பவமான சுதுடுவை பற்றிட 9.15 காட்டியது வித்வத் சபை மணிக்காட்டி , கனகச்சிதமாய் கச்சேரி முடித்தார் 2.30மணிக்கு , வழமைபோல் திருவிழாக்களமானது வித்வத் சபை வெளிவாசல் , கச்சேரி கேட்ட அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்வு இது ஆண்டாண்டாய் அரங்கேறும் அரிய நிகழ்வு , காரணம் தலைவரின் இசை செறிவு , சைவமான இந்த பருவத்தில் தமிழிசை சங்கத்திலாவது வைணவம் ஆழ்வார்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆண்டாள் எல்லாம் தலைவர் கண்களுக்கு தெரிகிறார்களா பார்போம். அஃதே போல் பூர்விகல்யாணி , ரீதிகௌளை , நளினகாந்தி , கேதாரம் , கரஹரம் , மோஹனமும் காத்திருப்போர் பட்டியலில் வெகு நாட்களாய் உள்ளார்கள் . வண்ணமாடங்கள் சூழுமா பார்போம்.

 
 
 

Commentaires


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page