வித்வத் சபையில் இசை மல்லர்! மகாவித்வான் சஞ்சய் தங்கதேஷ் ! நடபைரவி நாதவிநோதம் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 28, 2022
- 7 min read

மதராஸ் வித்வத் சபை கச்சேரி , பருவத்தில் தலைவரின் எட்டாவது கச்சேரி , இன்னபிற சபைக்கில்லா பெருமை இந்த வித்வத் சபைக்கு உண்டு , பார்த்தசாரதி , இந்திய நுண்கலை ஆகியோர்கள் 100 ஆண்டுகளை கடந்தும் இசை விழா நடாத்தினாலும் , பிரசித்தி பெற்ற வித்வத் சபை இசை விழாவிற்கு தனி மவுசு உண்டு. மிக நேர்த்தியான ஒலியமைப்பு , மிக சுத்தமான சுகாதாரமான அவை , பிரமாதமான உள்கட்டமைப்பு என்று பல பேஷ்கள் இருந்தாலும். இந்த கச்சேரி டிக்கெட் தருவதில் தொன்று தொட்டு இவர்கள் கடைபிடிக்கும் முறை சற்றே நம்மை சங்கடப்படுத்தும். அதிகாலை 2.30 அல்லது 3 மணிக்கு வந்து க்யூவில் நின்றால்தான் டிக்கெட் நிச்சயம் அல்லையேல் எல்சிடி தான் கிட்டும். இங்கு நாம் 2014 முதல் 2019 வரை அதிகாலையில் வந்திருந்து நுழைவுச்சீட்டு டோக்கன் பெறுவோம். இந்த ஆண்டு அதிலிருந்து தப்பித்து தரைதளத்திலேயே அமர்ந்தோம் , என் தந்தையார் கூறுவார் ஊஉறொஅஏனடல இருந்தாலும் போதும் எதையும் சாதிக்கலாம் அஃதாவது வித்யாகிருபையைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்று இப்போது உணர்ந்தோம். வித்வத் சபைக்கே உரிய பந்தாக்கள் , படோடோபத்துடன் திரை 6.45 விலக , தலைவர் , நெய்வேலியார் , வரதர் , வெங்கட்ரமணன், ரேதஸ் , ராகுல் காட்சி தந்தனர். மேடையில் ரஸிகர்கள் நிரம்பி வழிய நம் புல்லாங்குழல் புலி ஜெயந்த் மேடையில் தஞ்சம் புகுந்தார்.
பாடல் பட்டியல் அறிவித்து , அறிவித்து நம்மை சோதிப்பதால் , இனி இந்த பட்டியலில் மெயின் எது ? தனி மெயினில் இருக்குமா அல்லது ராதாப விலா? என்று விவாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். பட்டியல் பார்பதில்லை என்ற கருத்தியலை தொடர்வதால் , இந்த கோபாலரும் , திருமலையும் சைவம் வைணவம் என்று என் பிராணனை வாங்க அருகில் வந்தமர்ந்தனர். தரைதளம் என்பதால் பெரும்பாலும் மேட்டுக்குடி ரஸிகர்கள் , அவரவர் வதனப்புத்தகத்தில் செக்கின்னில் ஆர்வமாக இருந்தனர். நாம் சஞ்சய் எங்கு பாடினாலும் கேட்கும் ரகம் , வித்வத் சபை , சென்னை கணித நிறுவனம் போன்ற அதிநவீன அரங்கிலும் கேட்டுள்ளோம். கோவில் பிரகாரங்களிலும் , அரதல் பழசான மண்டபங்களிலும் கேட்டுள்ளோம் , இரட்டைப்பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு ஆழ்வார்பேட்டையில் அங்கு மொத்தமே 20 பேர் கூட உட்கார முடியாது ஆனால் ஏறத்தாழ் 200 பேர் கோவிலை சுற்றி அமர்ந்து கேட்போம்.
இந்த கச்சேரியில் ரஸிகர் மூன்ற வகைப்படுத்தலாம் , வித்வத் சபையில் மாத்திரம் கேட்போர், சஞ்சயும் கேட்பர் பிறரையையும் கேட்பர். இரண்டாவது ரகம் சஞ்சய் ரஸிகர்களுள் இந்த அவையில் மாத்திரம் கட்டாயம் கேட்போர். சுருங்க சொல்வதென்றால் இவர்கள் எப்பாடு பட்டாவது இங்கு மாத்திரம் வந்து கேட்டுவிட வேண்டும் என்று பிரம்மயப்பிரயத்தனம் செய்வர். மூன்றாவது ரகம் எங்கள் பித்தர் குழாம் ரகம். எங்கு பாடினாலும் , எங்கும் நிறைந்திருக்கும் எம் சஞ்சய் இசை எங்கும் நிறைந்திருக்கும் என்று கேட்போம். இப்படி விவரித்து கூறுவதின் நோக்கம் , எங்கு பாடினாலும் அவர் இசை எப்போதும் நமக்கு வேண்டியதை நல்கும் , ஓலியமைப்பு அரங்கு உள்கட்டமைப்பு ஆகியவற்றை சார்ந்திருக்கும் சாதாரண கலைஞன் இல்லை சஞ்சய் சுப்ரமணியன் எனும் மாமேதை. சமீபத்திய உதாரணம் எத்திராஜ் திருமண மண்டப ஐபாஸ் கச்சேரி , மனதில் பட்டதை கூறினேன் நேற்றைய கச்சேரி 6.45க்கு சரியாக துவக்கப்பட்டது.
1) பாபநாசம் சிவனின் நீ இந்த மாயம் தன்யாசியில் பாடினார் முதல் பண்ணாக. நீ இந்த மாயம் செய்தால் நியாயம் தானோ தயாநிதியே என்று கண்ணனை வினவுகிறார் பாபநாசம் சிவன் இந்த வர்ணத்தில். பாயும் மாரன் அம்பினாலே புண்படு பாவையைக் கண்ணால் பாராமல் இன்னும் என்று அனுபல்லவியை அருமையாக தன்யாசியில் தலைவர் வழங்க , சிட்டைஸ்வரம் துவங்கிற்று, நெய்வேலியார் , வரதர் , வெங்கட்ரமணன் அனைவரும் ஒத்திசைவு தர ஓய்யாரம் காட்டியது தன்யாசி. சிட்டைஸ்வர சாஹித்யம் நீயல்லால் துணையில்லை புவிதனிலே தயைபுரிவையே நிஜமிதுவனஜநயன பாடிவிட்டு , ஆயர்குல தீபமே அருள் தாராய் சரணத்தை பிரமாதப்படுத்தினார் தலைவர். தொடர்ந்து ஸ்வரம் அரங்கில் நர்த்தனமாட தருணமிது நினைந்து நினைந்துள்ளம் வருந்தினேன் கருணைநிதியே மனது கனிந்தருள் விரைந்து என்று தலைவர் ஆயர் குலத்தலைவனை தன்யாசியில் தரணிபோற்ற பாடினார். பாராய் புன்னகையொடென்னருகில் வாராய் நீ மனமிரங்கியெனை பரிவுடனே எனதுயிருடனொன்றென அன்று கலந்தேன் எனை இன்று மறந்தாய் பனி நிலாவில் தவழ் இனியதென்றலிலும் எனது மேனியெழில் மெழுகு போலுருக பகலிரா துயிலுறா திருவிழிகளும் பாராமுகமும் தகுமோ மனமும் சிலையோ என்று தலைவர் சரணத்தை மிக அழகாய் பாடினார் , இது வித்தியாசமான வர்ணமாய் இருக்கே என்று நாம் திகைக்க , கோபாலகிருஷ்ணபாரதி , இது நாட்டியத்திற்கு பெரிதாய் பயன்படுத்தப்படும் பண் , பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோர் இதல் நடனம் புரிந்துள்ளார்கள் என்றார்.
2) கிருஷ்ணாவதாரத்தை தொடர்ந்து ராமாவதாரம் , ஸ்ரீராமா நின்னு வினா சங்கராபரணம் , தலைவர் கடந்த சனியன்று பாடிய ராகம் தானம் பல்லவி சங்கராபரணம் இன்னும் காதில் ரீங்காரமிட , அதையும் சேர்த்துக்கொள் என்று பாடலை கட்டவிழ்த்தார் சங்கராபரணத்தில். பாடல் பட்டியலில் சக்கராபனம் என குறிப்பிடப்பட்டிருந்தது , ஆம் உண்மையான் இது சக்கரபானம் போல் இனித்தது. தியாகையர் ராமா என்னை காத்தருள் என்கிறார். காத்தருள் கருணை தா , ஏன் என்னை கண்டு கொள்வதில்லை , உன்னை விட்டால் ஏது கதி , எனக்கு யார் துணை , இதெல்லாம் இல்லாமல் தியாகராஜர் பாடவே மாட்டாரா என்று கோபாலகிருஷ்ணபாரதி பரிகசித்து சிரிக்க. திருமலை என்னை தொடையில் திருகினான். தலைவர் ராம நின்னு வினாவில் நிரவலை விரிவாக செய்ய , நெய்வேலியார் அருமையாக வாசித்தார். வேகம் ஆனாலும் கனிவு ஆனாலும் இவரை போல் வாசிப்பார் இல்லை. தலைவர் ராம நினு விநாவை பெரிதாய் நிரவல் புரிந்தார். நிரவல் ஸ்வரம் இன்னும் அற்புதமாய் அமைந்தது , சங்கராபரணம் மனதை மயக்கவல்லது ஆனால் இத்தனை சொக்கவைக்க வல்லது என்பதை நாமறியோம்.
3) சபாநாயகர் அடுத்து ஆலாபனை துவக்கியது நாயகியில். நாயகி ஆலாபனை நாம் முன்பே கேட்டுள்ளோம் . அத்தனை அழகாய் கவரும் ராகம் இது. தர்பாரும் நாயகியும் நெருங்கிய தொடர்புடையவர்கள். தலைவர் மிக அதி அற்புதமாய் ஆலாபனையை விவரித்து செய்ய அரங்கில் அத்தனை கூட்டமிருந்தும் ஒரு பேச்சோலி இன்றி நாயகியில் ஒன்றியது அவை.தொடர்ந்து வயலின் நாயகன் நாயகியை நயமாய் வாசித்தருளினார். எத்தனை அருமையாய் வாசிக்கிறார் இந்த வரதர். கண்ணும் கருத்துமான கண்மணி வாசிப்பு. தலைவர் ரங்கநாயகம் பாடினார். தீட்சிதர் கிருதி , தொடர்ந்து வைணவமாக கச்சேரி செல்ல கோபாலகிருஷ்ணபாரதி , உக்கிரபாரதியானார். அனுபல்லவியில் தலைவர் பிரமாதப்படுத்தினார். ரங்கநாதரையும் ரங்கநாயகியையும் அணு அணுவாய் துதிக்கும் தீட்சிதர் பண்ணை மிக அருமையாக செய்துள்ளார் தீட்டிதர். தலைவர் அதை மிக நேர்த்தியாக பாடினார். தினமணிகுல பவராகவாராதனம் மாமகவிதேஹ முக்திஸாதனம் மணிமயஸதனம் சசிவதனம் பணிபதி சயனம் பத்மநயனம் அகணிதசுகுண கணநதவிபீஷணம் கனதரகௌஸ்துப மணிவிபூஷணம் குணிஜனக்ருத வேதபாராயணம் குருகுஹமுதித நாராயணம் என்று பாடல் வரிகளே இசையை உள்ளடக்கி வெளிவந்தன.
4) மீண்டும் ஒரு ஸ்வாதி திருநாள் கிருதி பாஹி பர்வத நந்தினி . நல்ல வேளை பத்மநாபரை பாடவில்லை , கோபாலர் அகம் மகிழ பார்வதி தேவியை பாடியுள்ளார் ஸ்வாதி மன்னர், தலைவர் அதை நாலு கால் பாய்ச்சலாக பாடினார். மூன்றாம் சரணம் சஞ்சலதளபாடினார் தலைவர். ஆரபி ராகம் பிரவாகமாய் அரங்கில் ஓடியது. நடவஞ்சி ருபாலக வம்ஸ சுபோதயவில் நிரவல் அமைத்தார் தலைவர். என்னே அழகாய் மேலே சென்று ஆக்ரமிக்கிறார் அவையை. அதி அற்புதமாய் வரதர் நெய்வேலியார் வாசித்தருள் நிரவல் பல்வேறு பரிமாணங்களை காண்பித்தது. தலைவரின் மேதைமை சொல்லுக்கு அப்பால் உள்ளது , வார்த்தையில் விவரிக்கும் நிலையெல்லாம் அவர் என்றோ கடந்துவிட்டார்.ஆரபி அமர்களமாய் நிகழ்ந்தேறியது.
5) காயகப்பிரியா ஆலாபனை துவக்க ஓ இது தான் மெயினோ என்று நாம் சிந்தித்த விநாடி , நாதநிலை கண்டுறுகனான் அருகனா என்று பாடி பல்பளித்தார். கோடீஸ்வரர் பாடல் . தலைவர் வழமைபோல் உச்சரிப்பில் உச்சாணி கொம்பில் இருப்பவர் கேட்கவும் வேண்டுமா இப்பண்ணில். 13வது மேளம் பிரமாதமாய் தலைவரால் பாடப்பட மிக அருமையாக வாசித்தார் தலையாட்டியார். ஓது சரியை கிரியை யோக ஞான பரணா என அனுபல்லவியில் தலைவர் பண்பாட வயலின் அருமையாய் பின்தொடர்ந்தது. ஏழிசை லய சுருதிலயத்தை தலைவர் சரணத்தில் அருமையாய் வழங்கினார். பாடலின் உச்சம் தலைவரின் உச்சரிப்பில் ஒளிந்திருந்தது.
6) அடுத்து ஆலாபனை நடபைரவி , இந்த சஞ்சய் பிரயோகங்கள் கேட்போருக்கு அரிதான வரங்கள் , சுரக்கோர்வைகளை , நெளிவு சுளிவுகளை அத்தனை அழகாய் செய்தார் நடபைரவியில் . ஆலாபி அனம் ஆலாபனை என்பார்கள் , அஃதாவது ராகத்தை நாவினால் சுழற்றி பாடுதல். அதை மிக அற்புதமாய் செய்தார் தலைவர். நடபைரவியின் ஆழ அகலங்களையும் அலசி ஆராய்ந்தார் ஆலாபனையில் . அவரின் கற்பனையும் கூட்டி ஆலாபனையை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றார். ஆசை தீர ஆலாபனை புரிந்து தனக்கே உரிய பாணியான மேற்கத்திய நோட்டுக்களை ஆங்காங்கே தெளித்து ஆலாபனையை நிறைவு செய்தார் தலைவர். வரதர் ஆலாபனை ஜம்மென்று தொடர்ந்தது , தலைவர் ஆலாபனையின்போது உட்ன வாசிக்க வேண்டும் ,அதே நேரத்தில் அடுத்து ஆலாபனையில் அவரின் அத்தனை உள்ளீடுகளையும் வயலினில் காட்ட வேண்டும் , இரண்டையும் இத்தனை கச்சிதமாய் வரதர் போல் செய்வார் யார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நீ பாதமுல நம்மிதினி பாடினார் தலைவர். அம்மனை பாடுவதில் ஆகச்சிறந்தவர் அல்லவா மாவூர்வளம் பெருகும் காளியை பாடிய முத்தையா பாகவதர் , எனவே இப்பாடலில் காந்திமதியை போற்றினார். கோபால சோதரி கவுரி பாபரஹித பரமேஸ்வரி என அம்பாளை அழகாய் அனுபல்லவியில் போற்றினார் தலைவர். ஜென்மாதி பந்தஹாரினி ஸ்ரீ நடபைரவி என்று சரணத்தில் நடபைரவியை தலைவர் பாட அவையே சொக்கியது. சின்மயே மாயே ஷ்யாமளேவில் தலைவர் வரதரையும் நெய்வேலியாரையும் ஒருங்கே வம்பிழுத்தார். நீ பதமுலவில் நிரவல் ஸ்வரம் துவக்கி பிரமாதப்படுத்தினார் தலைவர். சிந்துபைரவி ஸ்வரம் போல் சாயலில் தலைவர் துவக்கினார். சரி இரண்டும் பைரவியல்லவா உறவு முறை இருக்கும் பெண் எடுத்து பெண் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டோம். தலைவரின் கல்பனாஸ்வரம் இறக்கை விரித்தால் இன்னும் கேட்கவா வேண்டும். கேட்கவே வேண்டும் இவரின் பேரிசையை. வழக்கம் போல் தேமே என்று வாசித்துக்கொண்டிருந்த நெய்வேலியாருடன் துவந்தம் துவக்கி வம்பு செய்தார் தலைவர். ஒரு கட்டத்தில் கர்நாடக மேடையா அல்லது பாப் இசையா என்பது போல் பிரமாதப்பட்டது ஸ்வரம். ஸ்வரப்பிரஸ்தாரம் புரிந்து ஆச்சர்யம் மிக்க நடபைரவியை முடித்தார் தலைவர். முடிப்பில் நெய்வேலியார் வழமை போல் சரவெடியானார்.
7) பத்ராசல ராமதஸீன் நன்னு ப்ரோவவனி செப்பவே சீதம்மா தல்லி என்று மீண்டும் ராமப்பாடலைப் பாடினார். இந்த யமுன்கல்யாணி போல் ஒரு இனிமையான ராகம் தான் உண்டா என்று மலைத்தோம். உண்டு பெஹாக் தேஷ் என்றான் திருமலை , அதானே , இருந்தாலும் என்ன இனிமை என்று மகிழ்ந்தோம் யமுனில். அத்ரீஜவினுதுடுவில் அப்படியே கரைந்தது அவை என்னே இனிமை.
8) அந்த மாலையின் மகோன்னத தருணம் , எந்த ராகம் நம் வாழ்வெல்லாம் துடர் துடைக்குமோ , எதை நாம் கேட்டால் நம்மை நாம் இழப்போமோ. கரைந்து உருகி மருகி திளைப்போமோ அந்த ராகத்தை , ராகம் தானம் பல்லவியாய் அறிவித்த விநாடி முதல் மகிந்து காத்திருந்த தருணம் துவங்கியது. கர்நாடக சங்கீத உலகின் மகாவித்துவான் , ராகச்சக்கரவர்த்தி சஞ்சய் சுப்ரமணியன் தேஷ் ஆலாபனையை துவக்கினார். இல்லை தேஷ் தேனருவியில் நம்மை நிறுத்தினார். நின்றது தான் தெரியும் அட்துத 10 நிமிடங்களும் தேன் பொழிவிலிருந்து மீள மனமின்றி அள்ளி அள்ளி பருகி திகட்ட திகட்ட அனுபவித்தோம் தேஷை. சஞ்சய் சுப்ரமணியன் ஒரு ராகத்தில் ராகம் தானம் பல்லவி செய்துவிட்டால் மீண்டும் அதை தொடுவதற்கு மூன்றாண்டுகளாவது ஆகாமு , ஆனால் கடந்த சீசனில் வாணியில் சஞ்சய் சபாவில் தந்த தேஷ் ராகம் தானம் பல்லவியை மீண்டும் வித்வத் சபையில் செய்கிறார் என்றால் அது நம் அதிர்ஷ்டம். இது வரை இரண்டு முறையே கேட்ட தேஷ் ஆலாபனையை மூன்றாவது முறையாக கேட்டு திளைத்தோம். தலைவர் ஆசை தீர தேஷை ஆலாபனை செய்து வரதுவுக்கு அளிக்க ஆஹா என்னே என் பாக்கியம் என்று வரது வாசித்தார் தேஷை. வரதர் சும்மாவே தேனிசை தென்றல் அதிலும் தேஷை விடுவாரா , தேனீக்களை ஒட்டுமொத்தமாய் தன் பாலோயர்களாக மாற்றினார் ஆலாபனையில். வண்டினமும் நாங்களும் பாலோ என்று வந்தன . அரங்கெங்கும் பலாசுளை , தேன் மணம் வீசியது , மதுவுண்ட மந்திகளானோம் இவரின் பேரிசையில். தேஷ் தானம் துவங்கியது , மழை பெய்த பின் காற்றில் ஈரப்பதம் இருக்கும். அப்படி ஒரு சோலையில் அமர்ந்திருக்கும் போது காற்று வீச அந்த சோலையில் இருக்கும் மலர்கள் மீதிறுக்கும் நீர் துளி நம் மேல் பட்டால் ஒரு குளிர்ச்சி உணறுவோமே அப்படி ஒரு குளிர்வைத் தந்தது தானம். தானம் முழுதும் துன்பம் நேர்கையில் கேட்பது போலவே அமைந்தது. அத்தனை சொக்கலாக தானம் தந்தார் தலைவர். எந்த நிலையிலும் வேகமெடுக்காத மெல்லிசை தானத்தின் முடிவில் , துன்பம் நேர்கையிலை தானமாகவே பாடி முடித்தார் தலைவர். தொடர்ந்து எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ விழி இந்திரநீலப்பூ பாடினார் தலைவர் , பாரதியார் பண் . இதை ஏற்கனவே சேஷூ மிக அருமையாக செய்துள்ளதாக கூறினார் கோபாலகிருஷ்ணபாரதி. எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ என்று தலைவர் பாட அவையில் புருவம் நெரிப்பு , பரவாயில்லையே சஞ்சய் என்று மாமா மாமிகள் பூரிப்பு . எங்கள் கண்ணாம்மா நுதல்பால சூரியன் என்று பாட சிரிப்பு பூரிப்பு சமன்படுத்தப்பட்டது , எங்கள் சூரியன் பல்லவியை பாடுவதில் சூரன் அதிலும் பாரதி என்றால் கேட்கவும் வேண்டுமோ. தொடர்ந்து பா மகரிசா என்று ஸ்வரம் துவக்கினார் தலைவர் , அடடா இந்த ஸ்வரத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம் . முதன்முதலில் பிரம்ம சபை சனவரி 1 கச்சேரியில் துவங்கிற்று இந்த ஸ்வரப்பித்து. அடுத்து ராகமாலிகை ஸ்வரத்தில் ஹம்ஸாநந்தி முதலில் என்னே அருமையான ஒரு மாறுதல் படு பிரமாதம். வரதுவின் பதிலுரை உன்மத்தம் பிடிக்க வைத்தது. அடுத்து தலைவர் துவக்கிய பத்து விநாடியில் கண்டு கொண்டோம் இது திராவிட கலாவதி என்று , அழகு பாடல் காதில் ஒலித்தது. பின் அவரே அதை அறிவிக்க அரங்கில் சிரிப்பலை , ஆம் பலருக்கு தெரியாதே சேதி இந்த ராகத்தை உருவாக்கியவர் கங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன். பெயர் திராவிட கலாவதி என்பதாலோ என்னவோ அதிகம் பாடு்வதில் , இதே அரங்கில சில ஆண்டுகளுக்கு முன் அருண் எக்ஸேலோ நவராத்திரி கச்சேரியில் பாடினார் பின்பு இப்போதுதான் கேட்கிறோம்.தொடர்ந்து வரதர் திராவிட கலாவதிக்கு மெருகேற்றினார். அடுத்து அவரின் குரு டி.வி.ஜி முன் வரிசையில் அமர்ந்திருந்ததால் , தென்றல் பாடுவாரோ என எதிர்பார்க்க தலைவர் பாலமுரளி கிருஷ்ணா அவரிகளின் உருவாக்கமான ரோஜா பூவை ஸ்வரமாக பாடினார் . மிக அருமையாக பாடப்பட்டது ரோஜாப்பூ.மணத்துடன் வாசித்தார் வரதர். தொடர்ந்து தனி வெங்கட்ரமணன் சீசனின் முதல்முறையாக கஞ்சீராவுடன் மேனாள் கஞ்சீரா கலைஞர் நெய்வேலியாருடன் தனி தந்தனர் வழமை போல் தனி அமர்க்களமாய் அருளப்பட்டது. மிருதஙக்ம தங்கமென மின்னியது கஞ்சீராவும் களமாடியது , இருவரும் மிக நேர்த்தியான சுருக்கமான ஆனால் விடயங்கள் நிறைந்த தனியைத் தந்தனர் , அரங்கமே கரவொலியில் குலுங்கியது அவர்கள் தனியில். ராகம் தானம் பல்லவி தேஷ் மிக மிக பிரமாதமாய் தந்தனர் கச்சேரி கோஷ்டியார்.
9) அடுத்து அறிவிக்காத பாடல் , அனைவரும் அறிந்த பாடல் , இந்த வித்வத் சபையில் தலைவர் இந்த ஆண்டு பாடுவது மூன்றாவது முறை , சனவரி 7 தமிழும் நானும் , மீண்டும் நவம்பர் 27 தமிழும் நானும் , மற்றும் டிசம்பர் 27 மூன்று கச்சேரிகளிலும் அறிவிக்காமல் இப்பாடலை பாடினார். மூன்று முறையும் துவக்கியவுடன் கரகோஷம் , ஆம் இத்தனையும் ஒரு பாடலுக்கே உரிய சொத்து அது பாவேந்தர் பாரதிதாசனின் காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷம் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா , ஆம் தலைவரின் தேஷ் தாகம் தீரவில்லை போலும். நல் அன்பில்லா நெஞ்சில் என்று தலைவர் பாட , இப்படி பாடி கேட்டால் அன்பிலா நெஞ்சும் உண்டோ என்று வியந்தோம். திறமை காட்டி உன்னை என்று தலைவர் பாட பாட மனம் கேவியது. நம் தமிழ் செல்வம் சஞ்சய் போல் இப்பாடலை யாரும் செய்ய இயலாது. தேஷின் குழைவை இப்படி தருவது இவர் ஒருவர் தான். அதற்குரிய காரணம் வெகு தெளிவானது. தமிழை நேசித்து சுவாசிக்கும் ஒரு கலைஞனுக்கே இது சாத்தியம்.
10) அடுத்து சாலக பைரவி ஏனுமாதிடறேனு பாடினார் தலைவர் , என்னே ஒரு உருக்கமான ராகம் இந்த சாலகபைரவி , புரந்தர தாஸரின் அருமையான பாடலை தலைவர் சுருதி சுத்தமாய் பாடினார். ரதிபதி பித நன்ன என்று தலைவர் உருகி உருகி பாட கருணை ரஸத்தில் மூழ்கியது அவை.தேஷூக்குப்பின் அத்தனை மாறுதலை உருவாக்கவல்லதாக அமைந்தது இந்த பாடல்.
11) மீண்டும் சிந்துபைரவி மீண்டும் அமுதமூறு , மீண்டும் கேடிகள் உலாவிகளை அரங்கிற்கு கோடிட்டு காட்டினார் தலைவர். திருமலை ம்கும் என்று பிகு செய்தான். மகமாயி மீண்டும் அவைக்கு வந்தார் எல்லாம் அம்பாள் மயம் என்று கோபாலர் அபிராமி தாயை வணங்கினார் . மலைகுமாரி கபாலி நனாரணி என்று பாட , ஒருவழியாய் கபாலி வந்தாச்சு என்று தேற்றிக்கொண்டார்.வேலவ பெருமாளை தொழுதோம் தலைவரின் சிந்துபைரவி மூலம். இந்த அருணகிரிநாதர் என்னமாய் சொல்லிசையோடு எழுதியுள்ளார் என்று திகைத்தோம்.
விவித பாரதி போல் நேரம் இப்போது 9.15 மணி என்று வித்வத் சபை கடிகாரம் இருமுனையிலும் காட்ட தலைவர் பவமான சுதுடு பட்டி பாடி , கனகச்சிதமாய் கச்சேரி முடித்தார் , என்னே ஒரு திட்டமிடல் , இத்தனை பாடல்களை தொய்வின்றி அத்தனை நேர்த்தியாய் தருகிறார். ஆதான் சஞ்சய் என்று எழுந்து சென்றனர் திருமலையும் கோபாலகிருஷ்ணரும். திடீரென திரும்பி வந்து என்னை மூர்கத்தனமாய் தாக்கி , உங்க தலைவருக்கு இந்த பாரில் உயர்ந்த நிலம் , சிதம்பரம் போகாமல் இருப்பேனோ , உப்பும் கற்பூரமும், நூலைப்படி , பணமே ,தில்லைச் சிதம்பரமே எல்லாம் பாடுற எண்ணம் இருக்கா இல்லையா என்று கேட்டுவிட்டு , ராஜா அண்ணாமலை மன்றத்தில் காத்திருப்பதாக சொல்லி சென்றனர் கிராதகர்கள் , அவர் பாடாததற்கு எனக்கு உதை.
Comments