வாணியில் தித்திக்கும் பேகடா திகட்டாத பெஹாக் , கர்ஜித்த கானமூர்த்தே சஞ்சயும் சைவமும் கச்சேரி !
- ARAVINDAN MUDALIAR
- Dec 19, 2023
- 7 min read

தமிழும் நானும் முடிந்து ஒரு வாரம் என்பதை நம்ப முடியாத அளவிற்கு அதன் தாக்கம் நம்முள் வியாபித்திருந்தது , அடுத்த கச்சேரி தலைவர் மயிலையைவிட்டு மாம்பலம் வந்தார் , ஸ்ரீ தியாகபிரம்ம சபையின் கச்சேரி வாணி மஹாலில் , பெரும்பாலும் வைணவம் விஞ்சி நிற்கும் பாடல் பட்டியலில் , ஆனால் தலைவர் வழி தனி வழியல்லவா , பெரும்பாலும் சிவமயம் ஏதோ பெயருக்கு கலயாமி கண்டேனா பட்டியலில் தந்திருந்தார், இசையில் தரணியாள்வாரின் கச்சேரிக்கு வாணி ஹால் அடைந்தோம் , ஜெ ஜெ என கூட்டம் சிற்றுண்டி சாலையில் வழமை போல் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கே முன்னுரிமை தந்ததால் , வாசலில் அகப்பட்ட காப்பியை சுவாமியுடன் விழுங்கிவிட்டு அரங்கில் நுழைந்தோம் , 300 ரூபாய் டிக்கெட்டில் மிக மிக சவுகரியமான கச்சேரி கண்டு களிக்கும் பொன் வாய்ப்பு , அருமையான அரங்கு , ஒலியமைப்பு , ஒளிதான் சற்று பிரகாசமாக இருந்திருக்கலாம் , மண்டையில் கொட்டு ஓங்கி ஒலிக்க , சைவ வைணவ பூதங்கள் வந்துவிட்டதை உணர்ந்தோம். சைவ பூதம் சற்றே துள்ளலுடனும் வைணவ பூதம் துவண்டும் காணப்பட்டடது , ஆபோகி பாட்டுக்காரரல்லவா என்று சிரித்தேன் , உமக்கும் கலயாமி , கண்டேனா உண்டல்லவா என்றேன் , திருமலைக்கு போதவில்லை போலும் , அடேய் இன்னமும் ஒரு தலம் இருக்கும் திமிரில் மிதவாதே என்றான் ஆழ்வார்கடியான் நம்பி , நான் எம்பி ஒரு இளிப்பு இளித்தேன் , இதற்குள் திரை விலக தலைவரின் நட்சத்திர கூட்டணியில் ரேதஸ் இல்லை , ஆலத்தூர் ராஜகசணேஷ் கஞ்சிராவுடன் காணப்பட்டார். ஞாயிறு மாலை ஞாலம் போற்றும் கச்சேரி 6.30க்கு துவங்கிற்று.
அடாடா இதுவும் வைணவம் தானே என்பதை பட்டிணம் சுப்ரமணிய அய்யரின் ஏரா நா பை துவங்கியதும் உணர்ந்தோம் , தோடி வர்ணம் , எடுத்தவுடன் கணராகத்தை தலைவர் வர்ணம் பாடி கச்சேரிக்கு வளம் கூட்டினார். மெல்ல மெல்ல தலைவர் ராகத்தை தன்வயப்படுத்தி அவையையும் தன்னிசைப் படுத்தினார். முக்தாய் ஸ்வரம் ஜூர வேகத்தில் பாய்ந்தோடி , தோடி ஜூரம் அவையை பற்றியது , குளிரூட்டி இருந்தும் அவைக்கு வியர்த்தது. தானி மாடலுவில் தோடிநர்த்தனம் ஆடினார் தலைவர் , தொடர்ந்து சிட்டைஸ்வரம் சீறியது , முதல் பண்ணிலேயே அரங்கைப்புரட்டினார் அரங்கன், தக்கவாறு வாசித்த வரதரும் நெய்வேலியாரும் அனலிடையே வாசிப்பது போல் வாசித்தனர்.
வழமையாக திருமலைக்கு அருமருந்தாய் அமைவது தியாகையர் பாடல் , அவரின் ராமப்பாடல் கேட்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவான் , ஆனால் தலைவரோ , தியாகராஜர் இயற்றிய சைவ பாடலை பங்காலா இராகத்தில் பாடினார் , கிரிராஜசுதாதனய , கணநாதனை பாடும் பாடல் இது , தலைவர் 2016இல் வித்வத் சபையில் தியாகராஜர் சிறப்பு கச்சேரியில் பாடியுள்ளார் ,வங்காள விரிகுடா கரை வரை தலைவரின் பங்காலா ஓங்கி ஒலித்தது , ஐங்கரனை தலைவர் பாடும் அழகே அகு என்று எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் கோபாலர் , திருமலை கைத்தடியை நாலாபுறமும் சுழற்றினான் , தலைவர் இதற்குள் சுரராஜவில் பங்காலவை சுழற்றினர் , அவ்வப்போது இருமினார் , இப்படி அவர் இருமி பாடி கேட்பது இந்த 12 வருடங்களில் நமக்கு இதுவே முதல் முறை , கணநாதனை நெய்வேலியார் அருமையாக வாசித்தார் , பனிராஜ கங்கனவில் தலைவர் நளினம் கொப்பளித்தது , சங்கதிகளின் மாமன்னன் அள்ளித்தெளித்தார் சங்கதிகளை , கிரிராஜவில் நிரவல் ஸ்வரம் துவக்கினார் , ஒய்யாரமாய் ஒலித்தது வரதர் வயலின் , தலைவரின் ஒவ்வொரு அசைவையும் தன் வாத்தியத்தில் கொண்டு வருவதில் வரதர் பலே பலே வித்தகருள் வித்தகர். கல்பனாஸ்வரம் கற்பனைக்கெல்லாம் விஞ்சி நின்றது , மெல்ல ஜெட்இஞ்சினை இயக்கினார் ஸ்வரத்தில் அது ஒரு கணத்தில் இந்திரலோகம் சென்று திரும்பியது , வரதரின் ஸ்வரங்கள் உண்மையில் நாம் பெற்ற வரங்கள் .
அடுத்து ஆலாபனை ஆபோகி மணக்க மணக்க தந்தார் இசைமாமல்லர் , அடடா என்னே ஓர் தேவாம்ருத ஆலாபனை என்று கோபாலர் குதூகலித்தார் , ஹூம் உம் பாடல் பாடுவாரல்லவா அப்படித்தான் இருக்கும் என்று பொருமினான் திருமலை , தலைவர் இதற்குள் தன் வழமையான நகாசு வேலைகளை தெளித்து ஆலாபனையை அலங்கரித்தார் , தொடரலங்காரம் வரதரால் அருமையாய் செய்யப்பட ஆபோகி அனைவரையும் வசீகரித்தது , சபாபாதிக்கு வேறு தெய்வம் பாடினார் தலைவர் , கோபாலகிருஷ்ணபாரதியின் முத்திரை பாடல்களில் முதன்மையானது இது , பல்வேறு தருணங்களில் இதை கேட்டிருந்தாலும் , இப்பாடலின் பொருளால் நாம் எப்போதும் கசிந்து கேட்போம் , தில்லை தெய்வத்தை கோபாலர் போல் காதலித்து போற்றி மகிழ்ந்து ரசித்து பாடியவர் எவரும் இல்லை , ஒரு வேளை அந்த நந்தன் தான் மறு ஜென்மத்தில் கோபாலகிருஷ்ணபாரதியானானோ என்னும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு பாடல் வரியும், கிருபாநிதி இவரைப் போலவே வில் நாம் என்றும் மகிழ்வோம் , ஆம் சஞ்சய் போல் கிருபாநிதி கிடைக்குமா இந்த தரணியிலே ,ஒரு தரம் சிவசசிதம்பரத்தில் நிரவல் அமைத்து அரங்கை சிவபுரியாக்கினார் ஆலவாயனை பாடும் அண்ணல் , பரகதி பெற இதுவே போதும் என்று மாமா மாமிகள் கண் மூடி தியானித்தனர் , கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை என்று தலைவர் பாடியபோது எனக்கே விம்மல் வந்தது , பாடலின் கடையில் அந்த சமா னமா குமா விற்கு காத்திருந்து கேட்ட மகிழ்ந்தோம்.
ஏற்கனவே ஒரு ஆலாபனை பண்ணியாகிவிட்டது இனி மெயினுக்கு முன் சிந்தாமணியைத்தான் ஆலாபனை செய்வார் என்று எண்ணியமாத்திரத்தில் , ஆலாபனை துவக்கினார் , அறிவிப்பில் இல்லாத ராகம் போல் தோன்ற மெல்ல மெல்ல தலைவர் குறும்பு புலப்பட்டது , சிங்கை சுரேஷ் கூற்றின்படி ஒரு சுத்து சுத்திட்டு இப்பத்தான் பேகடா வரார் , ஆம் தலைவரின் வழமையான முத்திரை பேகடா இல்ல இது , நளினம் மிக்க பேகடா சப்மெயினுக்கான அனைத்து கூறுகளையும் கொண்டதாக அரங்கேறியது , சங்கீதகலாநிதி சஞ்சய் சுப்ரமணியனுக்கு பேகடா சுப்ரமணியன் என்ற பெயர் உண்டு என்பதை பறைசாற்றும் விதமாய் பேகடாவில் இனி என்ன இருக்கு என்பது போல் தேனை தோய்த்து தோய்த்து ஆலாபனை புரிந்தார் இசை வேழம் , நாதஸ்வர பிடிகளும் வந்து ஆலாபனைக்கு மேலும் அணி சேர்த்தது , தொடர்ந்து வரதர் பேகடா அண்ணனை போலவே போக்கு காட்டிவிட்டு பேகடாவிற்கு வந்தார் தேன் மொய்க்கும் பேகடா அதை தரவல்லவர் வரதர் தானடா என்பதை மெய்பித்தார். ககலயாமி ரகுராம் பாடினார் தலைவர் ஸ்வாதி திருநாள் பாடல் , ஒருவழியாக திருமலை திருமுகத்தில் புன்னகை பூத்தது , நீலோத்பல வில் பேகடாவின் சாரத்தை கொட்டினார் தலைவர் , பரமபவித்ரமான இசை என்பது இது தான் என்று அறிவித்தான் திருமலை. சரணம் துமணிகுல திலகத்தில் தலைவர் பேகடா சுழலை மையம் கொள்ளச்செய்தார் , நிரவல் ஸ்வரத்தை துவக்கி துமணியால் வாணியில் பேகடா புயலை வீசச்செய்தார் , புயலில் வாசித்துபழக்கப்பட்ட நெய்வேலியார் அநாயசமாக வாசித்தளித்தார் அரும் நாதத்தை , பேகடா க்லபனாஸ்வர இன்பச்சுழல் அரங்கையே ஈர்த்தது , தலைவரின் நேசல் குரல் கேட்க ஏற்ற ராகம் இந்த பேகடா மெல்ல மெல்ல ஸ்வர உச்சம் பெற்று சப்தஸ்வரம் சென்று அமர்களப்படுத்தினார் , ராமரை தியாகராஜர் புலம்பலில் கேட்ட திருமலைக்கு இப்படி ஆனந்தமாய் கேட்க அவல் பாயசம் போல் இருந்தததாம்.
சிந்தாமணியில் அடுத்து தேவி ப்ரோவவே அதி வேகமே பாடினார் தலைவர் , ஸ்யாமா சாஸ்திரி பாடல் ஆம் இந்த கச்சேரியிலும் முத்துசாமி தீட்சிதர் ஏனோ இடம்பெறவில்லை , சிந்தாமணியில் ஸ்யாம கிருஷ்ண சோதரியை மனதார தரிசித்தது அவை , லோக ஜனனி சரணத்தில் லோகத்து நாயகியை தலைவர் மகிழ்ந்து பக்தியுடன் பாட கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற நிலையில் அமைந்தது பாடல். மிருதங்கம் தரும் பின்புலம் பலே அதி அற்புதம் , இரண்டாம் சரணம் நின்னுவினாவில் தலைவர் பக்தியின் உச்சிக்கு நம்மை இட்டுச்சென்றார் , கபாட்சி தெய்வத்தை கண் முன் நிறுத்தினார் என்றால் அது மிகையல்ல.
எம்.எம். தண்டபாணி தேசிகரின் தாண்டவம் இராகத்தில் கடவுளை மறவாதே பாடல் அந்ந இடர்களை நீக்கவும் இன்னிசை சேர்க்கவும் வரிகள் அப்பப்பா அருமை , வறுமையினால் பல சிறுமைகள் வந்தாலும் வாழ்வினிலே மிகத் தாழ்வு வந்தாலும் பொறுமையினால் புகழ் பொங்கி வந்தாலும் புரவலரால் பெரும் பேறு வந்தாலும் என்ற வரிகளெல்லாம் அந்த காலத்தில் தண்டபாணியார் தனக்குத்தானே எழுதியது போல் தொன்றுகிறது என்றார் கோபாலர் , தலைவர் இப்படால் பாடும் போது இருமல் மீண்டும் அவரை இம்சித்தது , மனிதர் எத்தனை வருத்தி பாடுகிறார் என்று நினைத்த போது விம்மியது மனது , பாடலின் மையமான கடவுளை மறவாதே , நம் காதில் ஒலிக்க ஒரு தன்னம்பிக்கை பிறந்தது.
ஆலாபனை கானமூர்த்தே , ஆம் ராகம் தானம் பல்லவி கானமூர்த்தே , தலைவர் தெரிவு செய்திருந்தார் இந்த கச்சேரிக்கு , மிகவும் கவனமாக இராகத்தை கையாண்டார் , தன் வழமையான பிடிகள் , பிரயோகங்களுக்கு சற்றே ஓய்வளித்து பாடந்திரமாக ஆலாபனையை அமைத்தார் தலைவர் ,கானமூர்த்தேவின் அடியை அலசி முடி வரை சென்றார் , ஒரு ஒரு நிலையாக இராகத்தை தலைவர் அலசி ஆராய்ந்தளிப்பது நமக்கு கிடைத்த வரம் , மெல்ல மெல்ல நாதஸ்வர பிடிகள் வந்து விழுந்தன , அரங்கின் ஓட்டுமொத்தை கவனத்தையும் ஈர்த்தது ஆலாபனை , அண்ணனை போல் தம்பியும் கானமூர்த்தேவை மடியாய் வாசித்தார் , கேட்போர் கருணை ரசம் கூடியது , மனம் இராகத்தில் ஒன்றியது , தானம் துவங்கியது , நிதானம் பிரதானமாய் துவக்கினார் தானத்தை , இந்த தானம் பாடுவதில் தலைவருக்கு ஏது இணை , இது செயற்கை நுண்ணறிவு செயலிகளின் காலம் , நாதம் எந்த தலைப்பு தருகிறோமா அதை கட்டுரையாக , கதையாக , கவிதையாக , ஏன் கணினி நிரல்களாக கூட ஏஐ தந்துவிடும் சில விநாடிகளில் , ஆனால் தலைவர் ஓர் இயற்கை நுண்ணறிவாளர் , பல ஆண்டுகளின் அயராத உழைப்பின் பயனாய் இந்த ராகம் தானம் பல்லவியில் தனித்துவம் பெற்றுள்ளார் , அவர் பரிசோதிக்காத ராகமில்லை , எனவே தானம் தன்னெழுச்சியாய் வந்தி விழுந்தது , வரதரும் வாசித்து வாசித்து அவரின் விரல்கள் தானே மீட்டுகிறது உயர்தானத்தை , மிக அற்புதமான தானத்தை இருவரும் தந்தனர் அவைக்கு , அடுத்து பல்லவி உன்னைக் காண வேண்டினேன் ஆடிபாடி நாடினேன் பாடினார் தலைவர் , கடவுளை அடையும் நவபக்தியில் வருபவை ஆடிபாடி என்றார் கோபாலர் , எந்த கடவுளை என்றான் திருமலை , இசைக்கடவுள் என்றேன் இருவரின் துவந்தத்தை நிறுத்த , இத்றுகுள் தலைவர் ஸ்வரம் சென்றார் , கடந்த கச்சேரி போல் ராகமாலிகை இருக்காதோ என்ற ஐயத்தோடு ஸ்வரத்தில் மனதை புகுத்தினோம் , முதலில் பைரவி ஸ்வரம் பாடினார் தலைவர் , அடேயப்பா இந்த பருவம் முழுதும் பெரும் இராகங்களையே எடுக்கிறார் தலைவர் , அடுத்து யாரும் எதிர்பாரா மா இல்லாத கல்யாணி , பாடிய சில கணங்கள் என்ன இராகம் என்ற ஐயமே எழுந்தது இந்த ராகத்தோடு பேரு என்று சொல்வார் என எதிர்பார்த்தோம் , ஸ்வரத்தின் கடையில் தான் கல்யாணி என்பதை கோடிட்டு காட்டினார் தலைவர் , நி யிலேயே விளையாடியது தலைவர் கல்யாணி , அந்த பாதபத லில்லி நன்றாக மணந்தது , அடுத்து சாநிதப மகபாத சாநிதப என்று தலைவரின் முத்திரை காம்போதி அரங்கையே மிரட்டியது என்னே அதன் கம்பீரம் என்னே அதன் அழகு , அடுத்து என் போன்ற ஞானசூன்னியங்கள் எளிதல் கண்டு கொள்ள சிந்துபைரவி அதிலும் தலைவரின் குறும்பு நிறைந்த திருவிளையாடல் புகழ் சிந்துபைரவி , அந்த சரி கா க் கா வில் தான் எத்தனை குசும்பு ஆனால் அத்று நேரெதிராக ஸ்பதஸ்வரத்தில் ஒரு அமைப்பை நிர்மாணித்தாரே அருமை என்னே ஒரு இசை ஞானம் , அருமையான ராகமாலிகை முடித்து தனியைத்துவக்கி வைத்தார் , நெய்வேலியாருடன் இன்று கூட்டாளி ஆலத்தூர் ராஜகணேஷ் இருவரும் தம் தம் வாத்தியங்களில் பிரமாதப்படுத்தினர் , இதுவரை வந்த அத்தனை உபபக்கவாத்தியங்களும் நெய்வேலியார் வாசித்த கஞ்சீரா எனவே அதற்கு தக்காற்போல் துவந்தத்தை மிக அழகாய் அமைத்தார் நெய்வேலி வெங்கடேஷ் என்னும் தலையாட்டி சித்தர். வழமை போல் சமர்த்தாய் ஆரம்பித்த சண்டமாருதமாய் அமைத்தார் முதல் சுற்றை , ராஜகணேஷ் நல்ல பதிலுரை வழங்கினார் ,இருவருமே காம்பிளிமெண்டிங் ஈச் அதர் என்பார்களே அதுபோல் அருமையாக வாசித்தனர் , தனி மெல்ல மெல்ல பிரம்மாண்டமாய் விஸ்வரூபம் எடுத்தது , வழமைபோல் மின்னல் வேக வாசிப்பு நெய்வேலியாரிடம். அவர்தம் விரல்களா அல்லது இயந்திரமா என்று தோன்றும் வகையில் அமைந்தது வாசிப்பு , தனி வாசிப்பதில் நெய்வேலியார் இசைத்தேனீ அத்தனை சுறுசுறுப்பு , அவருக்கு ஏற்ற தீனி இந்த தனி.
மீண்டுமோர் மாண்ட் தர்பாரி கானடா துர்கா ராகமாலிகையில் முதல் ராகமாய் குறுஆலாபனை புரிந்து பாரதியாரின் பகைவனுக்கு அருள்வாய் பாடினார் தலைவர் ,சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே தொடர்ந்து வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே பாடல் வரிகள் ஓவ்வொன்றும் நம்முள் பல்வேறு உணர்வை தூண்டியது , இந்த பாடலுக்கு சஞ்சய் பித்தருள் முழு உரிமையாளர் இருவர் ஒருவர் ராஜாராம் பட்டபாபிராமன் அவரின் அக்காள் வந்திருந்தார் கச்சேரிக்கு , அடுத்து தம் சங்கர் , பகைவனுக்கு அருள் நெஞ்சம் ஒரு மனிதருக்கு சாத்தியம் என்றார் அது சங்கருக்குத்தான் , தின்ன வரும் புலிதன்னையும் அன்னை பராசக்தி என்று எண்ணித்தான் சென்றாயோ என்று மனம் வெதும்பியது.
அடுத்து தலைவரின் பிரத்யோக விருப்பப்பாடல் கண்டேனா , புரந்தரதாசர் பாடல் , மெட்டமைத்தவர் சஞ்சய் சுப்ரமணியன் , உடுப்பி கிருட்டினனை எப்படி ஒவ்வொரு நிலையாக கண்டேன் என்று பாடுகிறார் புரந்தரர் தலைவர் நம்மை கோவிலுக்குள்ளேயே இட்டுச்செல்கிறார்.புமண்டலத்தில் சஞ்சய் போல் இப்படி பாடுவார் இல்லை என்று ஹேளினான் திருமலை , நீவே மாடதே அர்த்தவாகித்தில்லா என்றார் கோபாலர் , இந்த பூவுலகில் திருமால் போல் தெய்வமில்லை தலைவர் போல் பாடகரில்லை என்றான் திருமலை , நான் அவனுக்கு தண்ணீர் கொடுத்து சமுத்ரவர்ணவில் மையல் கொண்டேன் , அந்த அனந்தேஸ்வரனே நா கண்டுவில் தான் எத்தனை அழகு. வரதர் பிரமாதமாய் வாசிக்க நெய்வேலியார் அரும் பின்புலம் தந்தார். அரங்கே எதிர்பார்த்த திம் திம்மிக்கென்ற புனித கிருஷ்ணனே கண்டு வில் ஆடிபாடி நாடினோம் ஸ்ரீகிருஷ்ணனை.
அடுத்து நம் பெஹாக்கிற்கு வாயைப்பிளந்து காத்திருக்க தலைவர் கேதார கௌளையில் உப்பும் கற்பூரமும் என்று ஆரம்பித்து ஹம்ஸாநந்திக்கு சென்றார் ஊரெங்கும் பெரிதாயில் , அப்படிப்போலில் காப்பி , அந்த அல்லல் வினையில் ஒருவழியாய் பெஹாக்கிற்கு வந்து சேர்ந்தார். அய்யா சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் அவர்களே , நீங்கள் இந்த உப்பும் கற்பூரம் விருத்தத்திற்கு பேடண்ட் ஹோல்டராய் இருக்கலாம் , ஆனால் இந்த விருத்தம் பெஹாக்கிற்கு மட்டுமே உரியது என்பதை நினைவில் கொள்க , இன்னபிற ராகங்களில் பெஹாக்கை பாடுவீர்களா , பிற ராக பாடல்களின் ஜோலிக்கு என் பெஹாக் போவதில்லை அது போல் என் பெஹாக்கின் பாடலுக்கு பிறரை கூப்பிடாதீர்கள் உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும். மாரிமுத்தப்பிள்ளையின் இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்று ஒருகாலே ஏன் மலைக்கிறாய் மனமேவை தலைவர் நல்லவேளை பெஹாக்கில் தொடர மன நிம்மதி கொண்டோம் , 12 வருடங்களாக ஆண்டுகளுக்கடுத்து ஆண்டுகளாய் இவர் பின் பித்த பிடித்து நாம் ஓடும் காரணங்களில் ஒன்று இந்த பாடல் , இதை பாடல சொல்லி நாயாய் பேயாய் அலைந்து அயர்ந்து ஓடுங்கி போன காலமெல்லாம் மனம் முன் வந்து செலல்கிறது , அந்த ஏனில் தான் எத்தனை சங்கதிகள் , சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல் வரிகளில் கோபலர் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது , விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும் வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும் ஒருதாமரைக்கு ஒவ்வாது வரிகளில் எனக்கு கண்ணீர் பீறிட்டது , மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும் புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது வரியில் அரங்கே அழுதது , இந்த பாடலின் சாராம்சம் தில்லையை போல் ஒரு தெய்வம் இல்லை , எனக்கு தில்லை சஞ்சய் சுபரமணியன்.
பலசரக்கு கடைகளில் 80களில் மளிகை வாங்கினால் நாலு புளிப்பு மிட்டாய்களை பொட்டலம் கட்டி தந்தையுடன் வரும் குழந்தைக்கு தருவர் , அது போல் பட்டியலில் இல்லாத பாடலாக ஹரிகாம்போதியில் திருப்புகழ் அமுத மூறுசொ லாகிய தோகையர் பாடினார் தலைவர் அருணகிரிநாதருக்கு அடுத்து இப்பாடலை உச்சரித்து பாடுவார் தலைவர் ஒருவரே அந்த பெருமாளேவில் அரங்கே கைகூப்பியது.
இருமலின் தொல்லை இருப்பினும் மூன்று மணிநேர கச்சேரியில் ஒருவாய் கூட தண்ணீர் குடிக்காமல் பாடுவதெல்லாம் மனிதர்களுக்கு சாத்தியமில்லை சஞ்சய் ஒரு பெரும் சித்தர் என்றார் கோபாலர். ஹூம் சைவம் பாடினால் சித்தராகிவிடுவாரா , பாரும் பிரம்ம சபையில் ஆழ்வாராவார் என்று அறிவித்து இருமாப்பை காட்டினார் திருமலை திருமுகத்தில்.
Comments