ரஸிகப்பிரியாவில் ரஸிகப்பிரியனின் அலங்கார ஆந்தோளிக்கா , சக்கைபோடுபோட்ட சங்கராபரணக்கணக்குகள் !
- ARAVINDAN MUDALIAR
- Apr 1, 2023
- 6 min read

புகைப்பட உபயம் காமிரா சித்தர் ராஜப்பன்னா ராஜீ எனும் ஸ்ரீதர் நரசிம்மன்
நாம் படிக்க ஆரம்பித்து , படிக்கின்றோம் என்று நினைவு தெரிந்த நாள் முதல் நமக்கு பாடங்களில் பிடிக்காத ஒன்று கணக்கு , இந்த ஒரு பாடத்தில் தான் கதை விடவே முடியாது ! அடுத்த வரியிலேயே சுழித்துவிட்டு பூஜ்யத்தை பரிசளிப்பர் கணித ஆசிரியர்கள் , எந்த கணக்கிற்கு அஞ்சினோமோ அதே கணக்கு வாழ்க்கை கணக்கில் கைகோர்த்தது வேறு விடயம் , சில ஆண்டுகளுக்கு முன் 2018 என்று நினைவு , தலைவர் இந்த சென்னை கணித நிறுவனத்தில் கச்சேரி பாடினார். மீண்டும் இங்கே ரஸிகப்பிரியா சார்பில் கச்சேரி , இல்லத்திலிருந்து 51 கீ.மீ. , பணியிடத்திலிருந்து 84 கீ.மீ. இல்லத்திலிருந்தே வருவதென தீர்மானித்து , நான் ஜனா , சுவாமி அவரின் ஏகைக புத்திரன் கார்திக் ஆகியோர் மகிழுந்தை ஊபரில் பதிவு செய்து அரங்கிற்கு 4.30மணிக்கே வந்தோம் , தரமான வடை சமோசா அதிலும் சிறந்த வடிகட்டிய காப்பி என அனைத்தையும் ரூபாய் 10க்குத் தந்து இன்ப அதிர்ச்சி தந்தனர் சிற்றுண்டி நிறுவனத்தார். 4.30க்கு வந்தாலும் சரி 5.30க்கே உள் அனுமதி என்று வந்தோரையெல்லாம் வராந்தாவிலேயே இருத்தினர் இசைநிகழ்வு ஏற்பாட்டாளர் பெருமக்கள் , கிடைத்த இடைவெளியில் ராஜப்பன்ன ராஜீ பித்தர் குழாமை அழகாய் குழுப்புகைப்படம் எடுத்தார். தலைவரின் இசை அவதாரம் துவங்க அனைத்தும் தயார் நிலையில் இருக்க இருக்கைக்கு அனுமதிக்கப்பட்டோம் , சென்னையிலிருந்து வெகு தொலைவில் எட்டிப்பார்த்தால் அண்டை யூனியன் பிரதேசமாய் இருந்து மாநிலமான புதுச்சேரியே தெரியும் அளவில் அரங்கத்தின் இருப்பிடம் இருந்தாலும் , தலைவர் இசையின் வீச்சு காரணமாய் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. ஆகவே நிறைந்த அரங்கில் நம் அரங்கனை காண காத்திருந்தோம் , 5.30 மணிக்கு துவங்க இருந்த கச்சேரி குளிரூட்டி அதன் டியூட்டியை மறந்ததால் சற்றே தாமதமாய் துவங்கியது. தலைவருடன் நிரந்தர கூட்டணியான நெய்வேலியார் , வரது , அவ்வப்போது செட்டு சேரும் ஆலத்தூர் ராஜகணேஷ் , அலுவலகம் பக்கம் என்பதால் ராகுல் தம்பூராவில். எத்தனை தொலைவிருந்தாலும் உனக்குத் தொல்லை தருவதை விடோம் என ஆழ்வார்கடியான் , கோபாலகிருஷ்ண பாரதி வந்தமர்ந்தனர் எனதருகே. வழமையான அறிமுக உரையுடன் , என்னை வம்பில் மாட்டிவிட அம்பத்தூரிலிருந்து கச்சேரி வந்திருக்கின்றனர் என் காரியதரிசி அறிவிக்க , ஙேஏஏ என விழித்தோம். சீசனில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்து வித்வத் சபை கேட்டில் 3 மணிக்கு நிற்போர் முன் நாம் எம்மாத்திரம். ஒரு வழியாய் அனைத்தும் முடிந்து கச்சேரி துவங்கியது. கமலமனோகரி ஆந்தோளிகா தன்யாசி மாரரஞ்சனி ஹம்ஸாநந்தி ஆனந்த பைரவி சங்கராபரணம் சந்திரகவுன்ஸ் என மிக நேர்த்தியாய் பட்டியல் தயாரித்திருந்தார் தலைவர். ஆனால் பட்டியல் முழுமையடையாதது போல் இருந்தது. கச்சேரி முடியும் போது நமக்கு புரிந்தது.
1) கொத்தவாசல் வெங்கட்ராம அய்யர் வர்ணம் கமலமனோகரியில் கரிமா நின்னே , முக்தாய் சிட்டை என சீர்தூக்கிப்பாடினார் வர்ணத்தை தரமாய் தந்தே !வழமைபோல் பாடல் இமயமலைமீதிருந்து சறுக்கியவாறு வந்த மிரட்டியது நம்மை !இம்மை மறுமையிலும் இதுபோல் இசை கேட்க வாய்ப்பில் என்றவாறு வாசித்தனர் வரத வெங்கடர்கள் !துள்ளலும் துடிப்பும் சஞ்சய் இணைபிரியா சொத்து , பாடலை கேட்டு திற் பார்ட் ஆப் சென்னை ரஸிகர்கள் மிரண்டனர் , மத்தாப்பாய் சரவெடியாய் சிட்டை சிந்தையை குலுக்கியது . கரிமா இசைமாமருந்தாய் தந்தார் தலைவர்.
2) அரங்கை அடுத்தாட்கொண்டது தன்யாஸி , அலைகடலாய் ஆர்பரித்தது தன்யாஸி , பருவம் பார்க்க நியாயமா பாடினார் தலைவர் , ஆனை அய்யா சோதரர்கள் பாடல் , வையச்சேரி மங்களாம்பிகையை போற்றிப்பாடப்பட்ட பண் , தஞ்சை ஜில்லா பாடல் அல்லவா சௌக்கியத்திற்கு பஞ்சமில்லை , ஜிலு ஜிலு வென்று புறப்பட்டது தன்யாஸி மருவும் இந்த வையையூரில் வாழும் மங்களாம்பிகையே என்று அனுபல்லவியில் அழகாய் தேவி விலாசம் தந்துள்ளனர் ஆனை அய்யா சோதரர்கள் , பிறப்பிறப்பறும் புவியில் உனது பெருமைகள் என்றும் புகழ்ந்திராமல் திறமென்று கும்பிக்-கிரை தேடித் தீவினைக்கிடமானேன் என்று உருகினார் தலைவர் சரணத்தில் என்னே வரிகள் . இரவுபகல் உன்னிரு பதமலர் இதயமலரிற் பதியஅருள் செய் சிறு வயதில் அடிமை கொண்டிப்படிச் சிறுமை செய்வதும் பெருமையோ சொல் என்று தேவியின் கிருபை வேண்டி , உருக்கத்தோடு இயற்றப்பட்ட இப்பாடலை தலைவர் உருக்கத்தின் உணர்வலையை அரங்கினுள் பாய்ச்சினார்.
3) ஆலாபனை ஆந்தோளிகா , நீண்ட இடைவேளிக்குப்பின் தலைவர் நாவில் நடனமாடியது , கரஹரப்பிரியாவின் சேய் இந்த ஆந்தோளிகா , தாலாட்டு ஊஞ்சலாய் அரங்கில் அனைவரையும் ஆட்டிப்படைத்தார் தலைவர். அவரின் கரங்கள் போட்ட காற்றுவெளி கோலத்தை அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். என்னே ஆழமான ஞானம் என்று விடயம் தெரிந்தோர் வியந்தனர். நம் போன்ற ஞானசூனியங்கள் தலைவர் எது பாடினாலும் அழகு என்று மகிழ்ந்தோம். ஆமாம் உன்னைப்போல் பித்துக்குளிகளாய் இருப்பதே நன்று விடயம் தெரிந்தால் இராகத்தின் இலக்கணத்தை வைத்து குழப்பிக்கொண்டு ஆலாபனையை ரஸிக்க மறப்போம் என்றார் கோபாலர். தலைவர் இதற்குள் தன் முத்திரை பிருகாக்களை இறக்கிக்கொண்டிருந்தார், வரதர் உசப்பி விடும் பணியை செவ்வனே செய்தார். ஆந்தோளிகா ஆலாபனை மிக அழகாய் அரங்கை மையம் கொண்டு மையல் கொள்ளச்செய்தது. தொடர்ந்து வரதரின் ஆந்தோளிகா அனைவரையும் மீள்மகிழ்வில் ஆட்படுத்தியது . என்னே ஞானம் எத்தனை சுத்தமாய் வாசிக்கிறார் என்று வியந்தனர் , வரதரை முதன்முறை கேட்போர். ராகசுதாரஸ பாடினார் தலைவர் தியாகையர் பாடல் , சதாசிவனை இசை மூலம் அடைவதாய் பாடியுள்ளார் தியாகராஜர் , அடடே ராமர் இல்லா பாடல் நிரம்ப பாடுகிறாரே தலைவர் என்று தன் தரப்பு வாதத்தை வைத்தான் திருமலை , அனுபல்லவி யாக யோகத்தில் தலைவர் சுழன்று சுழன்று பாடினார் அடேயப்பா என்னே இவரின் இசை வீச்சு. சரணம் சதாசிவி மாயமகு மனதை வருடியது. நாத ஓம்காரத்தை இத்தனை அழகாய் யார் தருவார்.ராகசுதாரஸவில் நிரவல் ஸ்வரத்தை மிக அழகாய் அமைத்தளித்தார். அரங்கமே தலைவரின் கரங்களுக்கேற்ப தத்தம் சிரங்களை ஆட்டி ரசித்தனர். நெயவேலியார் மிக அருமையான பின்புலம் அமைக்க வரதரும் ஆலத்தூராரும் அருமையாக வாசித்தனர். லேசில் விடுவதாயில்லை என்று சுவராட்சியை தொடர்நதார் தலைவர் , அவரின் முத்திரை கல்பனாஸ்வரம் அடுத்து களமிறக்கப்பட்டது , சிறுசேரியில் மெட்ரோ வருவதாய் சொல்கிறார்கள் தலைவர் ஸ்வர மெட்ரோ அனைவரையும் மிரளச்செய்தது ,வரதரும் தலைவரும் அரங்கையே மெய்சிலிருக்கச்செய்தனர் ராகசுதாரஸவில்.
4) வடிவேல் முருகையனே பன்னிரு கையனே மாரரஞ்சனியில் கவிகுஞ்சர பாரதி பாடலை பாடினார் தலைவர் , ஆம் அப்பனை பாடிவிட்டு சுப்பனை பாடினார் சுப்ரமணியர் , அந்த ரட்சிக்க வருவாயில் அரங்கமே கேவியது , உருகி உருகி பாடி திடீரென பதநிதப என்று ஸ்வரத்தில் இறங்கினார் தலைவர் , மேளகர்த்த இராகம் என்பதால் அதன் வனப்பிற்கு பஞ்சமில்லை , ஆதிசக்தி தன்பாலாவில் நம்மை இழ்ந்தோம் தமிழ் அனுகூலா வின் இசை உலா அதன் தேன் சொரிந்த பலா ! இது போன்ற பாடலுக்கென்றே காத்திருந்து வாசித்தார் நெய்வேலியார் , அடடா என்னே வாசிப்பு , மிக அருமையாய் அமைந்தது , வடிவேல் முருகையனே .
5) ஹம்ஸாநந்தி ஆழ்ப்பேரலை அடுத்து , சுழன்றது அவை , நிறைந்தது மனது , கசிந்தது உள்ளம் , ஆலாபனையா அல்லது சண்டமாருதமா என்ற நிலையில் ஆலாபனையை ஆரம்பித்து , படிபடியாய் நம்மை இசையலையில் மூழ்கடித்தார் தலைவர். மாரரஞ்சனி மயக்கமெல்லாம் கணப்பொழுதில் காணாமல் போனது. ஹம்ஸாநந்தி நம்மை உருக்கத்தின் உச்சாணிக்கே கொண்டு சென்றது , தலைவர் வழமையா இந்துஸ்தானி பிடிகளை இடைசெருகலாய் தந்தார். பன்முறை மேலே சென்றார் , இவரின் இசை உயரத்தை அண்ணாந்து பார்பதே நாம் செய்த புண்ணியம் , ஆசை தீர 7 நிமிடம் ஆலாபனையை பாங்குற தந்து அவையை மீண்டு பாடல் கடையில் உசுப்பினார் , ராக தீபத்தை கண்ட மகிழ்வு கொண்டது அவை. வரத ஹம்ஸாநந்தி வரமாய் அவையில் தவழ்ந்தது , என்னே ஆளுமை என்னே நயத்தோடு வாசிக்கிறார் என்று வியந்தது கணக்குப்பேரவை. வரதர் உண்மையில் ஒரு உன்னதர் , வைத்துக்கொண்டு வஞ்சம் செய்வதில்லை வாரி வழங்கிவிடுவார். பாஹீ ஜெகத்ஜனனி ஸ்வாதி மாமன்னர் பாடல் , ஆக இந்த முறை மெயினில் எங்கள் திருமால் இல்லை என்று முகத்தை திருப்பிக்கொண்டான் திருமலை. தலைவரோ ஜகத்தை ஆளம் தாயை தன் இசையால் வேண்டிக்கொண்டிருந்தார் , அனுபல்லவி வாஹிநிதவசுதேவில் நம்மை இசையால் முக்கியெடுத்து மூன்றாம் சரணம் நிருப்பம சுந்தரியில் நீடித்த இன்பத்தைத்ந்தார் தலைவர். ஸாரஸகிருதநிலையே பரமசதயையேவில் நிலை கொண்டார் தலைவர் , ஸாரஸ ஆகப்பெரும் சர்ப்பமாய் அரங்கில் தன் வனப்பை காட்டியது , வரதரும் நெய்வேலியாரும் தலைவரின் வேள்விக்கு நெய்வார்த்தனர் , ஹம்ஸாநந்தி தீ அரங்கையே பற்றிக்கொண்டது , அதன் தகிப்பில் பக்திபரவசம் கொண்டது அவை.
6) முத்துசாமி தீட்சிதரின் , தியாகராஜ யோகவைபவம் பாடினார் தலைவர் , ஸதாசிவம் என்று பாட திருமலை முறைக்க , கோபாலர் குதூகலப்பட்டார். ராஜயோக வைபவம் , யோக வைபவம் , வைபவம் , பவம் வம் என்று தலைவர் பாட பாடி அரங்கு ஆனந்த பைரவியில் ஆனந்தமாய் தலையாட்டியது. ஏன் வம் மோடு விட்டார் ம் என்று பாடுவதுதானே என்று திருமலை புலம்பினான். திருவாரூர் பெருந்தெய்வம் தியாகராஜர் மீது பாடப்பட்ட பாடல் இது . ஸமஷ்டி சரணமான நாகராஜ வினுத என்று தலைவர் வரிவாய் ஆனந்த பைரவியோடு அளவளாவினார். மத்யமகால சாஹித்யத்தை தலைவர் சகலசௌக்கியத்தை கொட்டி பாடினார் , வரதரும் ஆனந்தமாய் வாசிக்க தாளம் ஆனந்தத்தாண்டவமாடியது. தத்வசொரூபத்தை அரங்கிற்கு அருமையாக காட்டினார் தலைவர் , கண்களில் ஒற்றிக்கொண்டோம்.
7) சஞ்சய் சங்கராபரண சாஸ்திரிகள் அடுத்து துவங்கியது ராகம் தானம் பல்லவி சங்கராபரணத்தை , அந்த ஆபரணத்தை பன்முறை அணிந்தாலும் தலைவருக்கு என்றுமே அழகாய் எடுப்பாய் அமையும் ராகம் இது. இந்த ராகத்தை பன்முறை பலவாறு வர்ணித்தாலும் அலுப்பு தட்டாது. காட்டாறு வெள்ளம் அறிவோம் , அந்த வெள்ளத்திற்கு பின் , அந்த நதி ஒருவாறு அமைதியாகி முழு நிலவொளியில் மெதுவாக பயிணிக்கும் போது அதில் ஒரு தோணியில் அந்த மெல்லிய காற்றில் நிலவொளியில் அடர்ந்த கானகத்தின் அரிய பல மூலிகைகள் பூக்கள் வாசத்தை நுகர்நதவாறு சென்றால் எப்படி இருக்குமோ அதற்கு ஒரு படி மேலிருந்தது தலைவர் ஆலாபனை , நேசல் ஆலாபனை துவக்கினார் , வழமைபோல் , மதுரை , செம்மங்குடி , அரியக்குடி , ஜீ.என்பி என்று அனைவரையும் வரிசைப்படுத்தினார் , எம்.டி.ஆரும் வந்து சென்றார். ஆலாபனை அழமானதாகவும் , அடிநாதத்தை தொடுவதாயும் அமைந்தது , கடையில் எங்கிருந்தோ அந்த மேற்கத்திய நோட்டுக்களை களமிறக்கி மதுரை மணி அய்யரின் நோட்டை அரைவிநாடி தந்து ஆலாபனையை நிறைவு செய்தார். தொடர்ந்து மீண்டும் தோணிப்பயணம் தந்தார் வரதர்.வனப்பிற்கும் பஞ்சமில்லை ஞானத்திற்கு வஞச்மில்லை , நெஞ்சம் நிறைந்திட தந்தார் சங்கராபரணத்தை அவரின் முடிப்பிலும் நோட்டுக்கள் வாரி வழங்கப்பட்டது. தானம் தொடங்கியது , தானாதி சூரர்கள் வழமைபோல் தானத்தை நிதானம் பிரதானம் என்று பிரத்தளித்தனர். தானம் என்பது அமைதிப்பூங்காவாய் ஆரம்பித்து அசுர வேகத்தில் பயணித்து பின் நல்லபிள்ளையாய் முடிக்கப்பட்டது. கனகசபையில் நடனம் தக்கதிமி ததிமி என்றாடினார் பாடினார், தலைவர் கச்சேரியில் இது ஒன்று தான் கணிக்க வாய்ப்பு , பெரும்பாலும் கோபாலர் தான் இப்படி எழுதுவார் என அவரை திரும்பி பார்க்க ஆம் என்றார் புன்முறுவலுடன் , திருமலை எரிப்பது போல் பார்த்தான். சும்மாவே கண்க்கில் புலி சுப்ரமணியர் , கணக்கரங்கில் விடுவாரா நெய்வேலியாரை , நீண்ட நெடிய கணக்கை துவக்கினார் பல்லவியில் , பின் ஸ்வரத்தில் கூட எடுத்த எடுப்பிலேயே கணக்குடன் துவக்கினார். பா ம கமபதநி என்று கணக்கின் பார்முலாக்கள் மூலை முடுக்கெல்லாம் பரவியது , ஸ்பதஸ்வர பிரதஸ்தாரம் பாட ஆஹா , ராகமாலிகையும் இல்லையா என்றுணர்ந்தோம், மிக குறைவான நேரத்தில் அரங்கேறினாலும் மிக அருமையான தனி தந்தனர் நெய்வேலியார் , ஆலத்தூர் ராஜகணேஷ் இணையர் , கும்கி பரண்கள் பறந்தபின் சம்பிரதாயங்கள் அடுக்கடுக்காய் நம்மை சிலிர்க்க வைத்தன.
8) அடுத்து குறுஆலாபனையோடு சந்தகவுன்ஸ் கண்டேனா கோவிந்தனா படினார் தலைவர் , புரந்தரதாஸர் போல் கிருஷ்ணனை உருகி பாடல் தருவார் யாருளர். அதை தலைவர் போல் மெய்யுறுகி பாடுவார் எவருளர்.சின்னி கிருஷ்ணனை வசுதேவ சுதனை தலைவர் பாட பாட திருமலை கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து . புருஷோத்தமனை நரஹரியை சரணாகதி அடைந்தது அவை.
9) எட்டுபாட்டுடன் நிறைவா கச்சேரி என்று நாம் எண்ண தலைவர் , இங்கே புத்தாண்டு போல் நேயர் விருப்பத்திற்கு வழிவிட்டார் , ஒருவர் மதுரை மணி அய்யர் நொட்டுஸ்வரம் கேட்க இப்போ தான பாடினேன் , பாடியாச்சு என்றார் தலைவர் , பின் ஒரு நாரிமணி சஞ்சய் ஜி துன்பம் நேர்கையில் என்றார் தலைவரும் துவக்கினார் தேஷை , அரங்கே கைதட்டி ஆரவாரித்தது , அன்பில்லா நெஞ்சை மீண்டும் அரவணைத்தார் ஆலவயானை பாடும் நம் தில்லையரசர். பாடலை அவர் இயம்பி காட்ட அரங்கே பாரதிதாசனின் பாடலுக்கு தாசனானது.
10) அடுத்த நேயர் விருப்பமாய் தலைவரின் சமீபத்திய கச்சேரி தோறும் அரங்கேறும் ராமசாமி தூதன் கேட்கப்பட , இந்த யூடியூப் பார்க்கறத விடுங்க என்று நக்கலடித்து பாடினார், கச்சேரி முடிந்ததும் ஒரு மாமா மாமியிடம் எப்படி இருந்துச்சு பார் கச்சேரி அந்தராமசாமி தூதன் சஞ்சயே எழுதிய பாட்டு என்றார். அருணாசல கவியின் இந்த பஹதாரி பாடலுக்கு மெட்டமைத்தது தலைவர், கேளடா அடடா என்று கம்பீரமாய் சென்றது பாடல் , ஆதிமூர்த்தி நானே உத்தண்டமாக வந்த சீதையை விட்டு பிழையடா என்று தலைவர் பாடி முடிக்க அவை மகிழ்வில் நீந்தியது.
11)அடுத்து சிந்துபைரவி அருணகிரிநாதர் திருப்புகழ் அமுத மூறுசொ லாகிய தோகையர் பாடினார் , கேடிகள் உலாவிகள் என்று லோக்கலாய் எழுதியிருப்பார் அருணகிரியார் . ஆனால் பாடலில் மிக அருமையாய் இருந்தது கேட்க , சமர நீலிபு ராரித னாயகி மலைகு மாரிக பாலிந னாரணி என்று தலைவர் பாட பாட அரங்கே சொக்கியது. திருவு லாவுசொ ணேசர ணாமலை முகிலு லாவுவி மானந வோநிலை சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே என்று முடிக்க பலர் கண்களில் கண்ணீர்.
12)நேயர் விருப்பத்தை முழுதாய் செய்லபடுத்தவதென்று மதுரை மணி அய்யர் நோட்டஸ்வரத்தை பாடினார் தலைவர் , மிக அற்புதமாய் வரதர் நெய்வேலியார் வாசிக்க தலைவர் குஷியுடன் பாடினார் அதிலும் கடையில் அருமையான முடிப்பு .
மங்களம் பாடி மகிழ்வான மூன்று மணி நேர கச்சேரியை முத்தாய் தந்தார் நம் முத்துவேலர். அரங்கே எழுந்து கைதட்டியது இவர் இசையை மெச்சியது. திஸ் பார்ட் ஆப் சென்னை , தஞ்சயை , திருவாரூர் , பேலூர், திருவனந்தபுரம் , என பல ஊர்கள் சென்று வந்ததது தலைவர் இசையால் , இசையில் புதுமையை கூட்டி , சலிப்பை கழித்து , நளினத்தை பெருக்கி , ஸ்வரங்களை அழகாய் வகுத்து , கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியாய் வருமென தந்தார் , எங்கேயோ நில்லுப்பா சுப்ரமணியா என்ற டி.எம்.தியாகராஜன் குரல் கேட்டது.
Nalla suvaiyaana comments.I canimagine how the Kutcher would have been. I hope the organisers recorded it. In future, it would be a great asset to the future generations. Sanjay also can be a little lenient in sharing the full length videos once in a while. He doesn't how much hard core fans he has but can't afford to attend in person.secondly fans li
Ving out station and abroad.