முத்தமிழ் அவையில் சஞ்சய் ராஜபாட்டை , குன்றின்மீதேறிய பெஹாக் !மருதமலை முருகா!
- ARAVINDAN MUDALIAR
- Mar 27, 2022
- 6 min read

பெஹாக் ராகம் தானம் பல்லவி ஆனால் அதை சிலாகித்து எழுத நேரமில்லை அலுவலகத்தில் ஏகப்பட்ட பணிகள் . ஒரு வாரம் கழித்து எழுதுவது முறையா அல்லது இந்த முறை விட்டுவிடுவோமா என மனப்போராட்டம் நடத்தி கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து செய்யும் இந்த ஒரு விடயத்தை விட வேண்டாம் என முடிவெடுத்து எழுதுகிறேன். ஒருநாள் தலைவர் நேரடி கச்சேரி விரைவில் என்று அறிவித்து அன்றைய தினம் இரவே தேதி இடம் ட்வீட்டினார். வாய்த்த வரத்தை இழப்போமா , விரைந்து பெற்றோம் ஆன்லைன் நுழைவுச்சீட்டை. அரங்கு புதிது ஆம் கர்நாடக சங்கீத கச்சேரிகளுக்கு புதிதுதான் , முத்தமிழ் பேரவை , டி.என்.இராஜிரத்தினம் பிள்ளை அரங்கம் , கலைஞர் மன்றம் போன்றவை 2000ங்குளுக்குப்பின் கச்சேரி கேட்போருக்கு சற்றே புதிராக இருக்கக்கூடும் , ஆனால் பல்லாண்டாய் கச்சேரி கேட்போருக்கு , கர்நாடக சங்கீதத்தில் டி.என்.ஆர் குறித்து நன்கு தெரியும் , அவர்தம் தோடி மகிமை கேட்டோருக்கு பிரமிப்பை மீண்டும் உருவாக்கும். மாலை 6 மணிக்கே அரங்கு சென்றோம் எங்கும் நிறைந்திருக்கும் பெரும்பாலான சஞ்சய் ரஸிகர் கூட்டம் அங்கும் இருந்தது , முன்போரு காலத்தில் சந்தீப் கச்சேரியில் ஒடிந்த நாற்காலிகளுடன் அழுக்கேறிய அரங்காய் கண்ட முத்தமிழ் பேரவை மிகவும் நீவினப்படுத்தப்பட்டு ஜொலித்தது. அரங்கநாயகன் தலைவர் சஞ்சய் சுப்ரமணியனோடு நெய்வேலி தலையாட்டி சித்தர் வெங்கடேஷ் , வரத நாயனார் , ராகுல் அனைவரும் வழமை போல் வெண்மையில் காட்சி தந்தனர்.அடடே குளிர்சாதனம் நன்றாய் வேலை செய்கிறதே என்று வந்தமர்ந்தனர் கோபாலகிருஷ்ணபாரதியும் , திருமலையப்பனும். தேனும் பலாவும் போல் இனிமையும் உண்டு தேளும் பூரானும் போல் இந்த இம்சையும் உண்டு. என்று சன்னமாக சொன்னதை கேட்டு சத்தமாக கர்ஜித்து முதுகில் சாத்தினர் இருவரும்.
1) வீணை குப்பையரின் நாராயனகௌளை ராகத்து மகுவநின்னே வர்ணம் பாடினார் முதல் உருப்படியாக , மாஆஆஆஆஆரூலூஊஊஊ என்று தலைவர் தன் வழமையான நளினத்தை தோய்த்து பாடினார் , ஸ்ரீ வேணுகோபாலரின் புகழ்பாடும் பண்ணை தலைவர் பதமாய் பாட இதமாய் வாசித்தார் வரதர் , நெய்வேலியார் இருவருக்கும் இணைபுரிந்தார். தலைவர் முக்தாய் சிட்டைஸ்வரங்களில் தன் நகாசு வேலைகளை தாராளமாய் காட்டி பாட , ஏராளமாய் அரங்கு ரசித்து. சின்ன நாடாடி தலைவர் பாடி எப்போதும் தனி குஷி தான் என்றான் திருமலை. தலைவர் கச்சேரியின் முதல் பாடலிலேயே அரங்கை கட்டிப்போட்டார்.
2) வைணவ பித்து மகிழ்ந்திருக்க சைவ பூதகணம் உக்கிரமடைய தலைவர் , மாயமாளவ கௌளையில் சிவலோகநாதனைக் கண்டு துவக்கினார். தலைவர் பாட பாட நம் பவபயங்கள் நீங்கியது , பாடல் இயற்றிய கோபாலருக்கோ வழக்கம் போல் கண்ணில் கண்ணீர் ஆறாகி பெருக்கெடுத்தது , அற்ப சுகத்தில் அரண் திருவடி மறந்தோர் மணம் திருந்த வேண்டும் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி திருமலைப் பார்த்தவாறு , திருமலை கற்பிதமான உபிரபஞ்சம் இது என்று என்னை முறைத்தான். தலைவர் இதற்குள் ஸ்வரம் துவக்க இதற்குத்தான் காத்திருந்தேன் என துவக்கினார் நெய்வேலியார் , தலையாட்டி இசையை , வரதர் வழமை போல் குனிந்த நிலை நிமிர்ந்த பேரிசை. தலைவர் குறும்பு ஸ்வரம் அந்த சிவலோக நாதனை என்று பரிமளிக்கத் துவங்கியது , ஸ்வரம் அடுத்தடதுத்த நகர்வுகளில் நம் இசை உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்தது, ஒரு வேள்வி போல் அந்த ஸ்வரத்தை நிகழ்த்தினார் தலைவர் , ஸ்வரப்பிரஸ்தாரம் புரிந்து வரதரிடம் தந்தார் வடத்தை , வரதர் அதை பற்றி அழகாய் இழுத்தார் , மாயமாளவகௌளை தேர் அசைந்தாடி நகர்ந்தது பிரம்மாண்டமாய்.மொத்தத்தில் சிவலோக நாதர் கைலாயத் திருக்காட்சி அருமையாக தந்தார் அவைக்கு தலைவர் செவ்விசை வழி.
3) தலைவர் அடுத்து துவக்கியது சுத்த சாவேரி ஆலாபனை , ஒரு வித துள்ளலுடன் ஆலாபனை புரிந்தார் தலைவர், மார்ச்ச மாதத்து தகிப்பிற்கு தலைவர் சுத்த சாவேரி காவேரியாய் குளுமை தந்தது , தொடர்ந்து வரதர் தென்றல் வீச அரங்கின் குளுமையை விஞ்சியது இவர்களின் சுத்த சாவேரி சாறல் , தலைவர் ஸ்ரீ வடுகநாதா பாடினார் அறிவித்தபடி , முத்துசாமி தீட்சிதர் கிருதி , அந்த தேவ தேவ க்ரியாவில் தான் எப்படி மாயம் செய்கிறார் தலைவர் என்று கசிந்து கேட்டான் திருமலை, ஆம் தீட்சிதர் சிவனைப் பாடினாலும் புளகாங்கிதமாய் கேட்டான் ஆழ்வார்கடியான். தேவ தேவக்ரியாவில் நிரவல் அமைத்தார் தலைவர். தீட்சிதரின் க்ரியாவில் தலைவர் நிரவல் க்ரியா அருமையாக அமைத்தார் வரதரும் நெய்வேலியாரும் அரும்பெரும் க்ரியாஊக்கிகளாய் அமைந்தனர். தொடர்ந்த ஸ்வரத்தில் தேவ தேவ க்ரியாவை தேவர்களும் பூலோகம் வந்து கேட்கும் நிலையில் பாடினார் தலைவர்.
4) அடுத்து குதூகலமாய் சிறிய குந்தாவராளி ஆலாபனை புரிந்து தலைவர் இராமசாமி சிவனின் கந்தனை நீ வந்தனை செய்வாய் மனமே பாடினார் , தந்தையை சமஸ்கிருதத்தில் பாடி , தமிழ் கடவுளாம் முருகனை தமிழில் பாடுகிறாய் சுப்ரமணியர் பார்த்தாயா திருமலை என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , ஹூம் தொடர்ந்து சைவம் பாடுகிறார் என்று இறுமாப்பு வேண்டாம் , என்று குதித்தான் ஆழ்வார்கடியான் , சூரனை வதைத்த மிகு தீரனைக் கம்பீரனை முன் மாறனை எரித்தவர் குமாரனைச் சிங்காரனை என் , என்று தீடீரென்று துள்ளிப்பாடினார் தலைவர் , மாணிக்கவாசகர் தம் புராணத்தைச் செந்தமிழினால் பேணிக் கீர்த்தனமாச் சொல்லும் வாணிக்கின்பம் செழித்திட , வரிகள் கலைஞர் மன்றத்தில் முத்தமிழ் பேரவையில் ஓங்கி ஒலிக்க நமக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை , சஜ்ஜனர் தம் குழுவுற்ற நற்செயலாற் குகதாசன் அர்ச்சனை புரிந்து நாளும் சொற்சுவை செய்து துதிக்கும் என்று தலைவர் சரணங்களை தொடர்ந்து அடுக்கி தமிழ் தாக்குதல் புரிந்தார் குந்தாவராளியில்.நெய்வேலியார் மிக அருமையா வாசித்தார் பாடல் முழுதும்.
5) ஆலாபனையெல்லாம் இல்ல நேரடியா பாட்டுத்தான் என்று நங்கைநல்லூர் ஸ்வாமிநாதனை ஒரு வித படபடப்பில் வைத்திருந்தோம் நாம் , ஆனால் தலைவர் விஸ்தாரமாய் ஆலாபனை துவக்கி , ஸ்வாமிநதனக்கு வழமைபோல் வாயெல்லாம் பல் , நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே போல் நாலாயிரம் செவி இல்லையே இந்த கரஹரப்பிரியாவை கேட்க என்று அங்கலாய்த்தார் மனிதர் , அப்படி ஆலாபனை தந்தார் தலைவர் , இந்த கரஹரப்பிரியா தலைவருக்கு மிக மிக நெருக்கமான இராகம் , அதை எப்போது பாடினாலும் பிரம்மாண்டம் தான் சப் மெயினாக கூட நான் இதை தலைவரிடம் கேட்டதில்லை , ஏறத்தாழ 11 நிமிடம் கரஹரத்தில் இனி ஏதும் இல்லை என்னும் நிலை வரும் வரை ஆலாபனை செய்து தள்ளினார் , வரதர் அண்ணன் காட்டிய வழியில் அழகாய் பயணித்து அருமையான கரஹர ஆலாபனை தந்தார் தன் வசியக்கருவி மூலம், எதிர்பார்த்தபடி சக்கனி ராஜ மார்கமு உண்டக பாடினார் தலைவர் , தியாகராஜர் பாடல் , இராஜபாட்டை இருக்கும் போது வேறு சந்து வழி எதற்கு , பக்தி வழியில் இராமனை நாடு என்கிறார் தியாகையர் , அனுபல்லவியில் சிக்கனி பாலு மீகட இருக்கும் போது வேறு ஆகாத பொருள் எதற்கென்கிறார் , இப்படி அழகாய் நேரடி கச்சேரி இருக்கும் போது இந்த ஆன்லைன் கச்சேரி எதற்கு என்பது போல் இருக்கிறது என்றான் வம்பம் திருமலை , தலைவர் சரணம் வந்து ஸ்வரம் துவக்கி பிரமாதப்படுத்தினார் வழக்கம் போல் , மீண்டும் ஒரு முறை ஸ்வரப்பிரஸ்தாரம் சென்று பாடலை முடித்தார் , தனி தரவில்லை ஆகவே இது மெயின் இல்லை என்றேன் ஸ்வாமிநாதனிடம்.
6) அடுத்து கன்னடத்தில் பாடினார் புரந்தரின் பாடல் எந்த செலுவகே மகளன கொட்டனு , யாகப்பிரியாவில் , வழமையாக இந்த மேளகர்த்தா ராகத்தில் கோடீஸ்வரய்யரை பாடுவார் தலைவர் , சமீபமாக இந்த பாடலை பரவலாக பாடுகிறார் , அந்த நந்தி வாகன நீலகண்டனவில் எப்போதும் நமக்கு ஒரு கிறக்கம் இருக்கும் , அதை இப்போதும் தலைவர் பிரமாதமாய் பாடினார். அடேயப்பா என்னமாய் பாடுகிறார் என்று விக்கித்துப்போனது அவை.
7) 2109இல் பார்த்தசாரதி சபையில் தலைவர் சீசனில் பாடினார் நம் பெஹாக்கை ராகம் தானத் பல்லவியாக , அன்று நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு வார்த்த விவரிப்பு இல்லை , இம்முறை பாடவிருகிறார் என்று தெரிந்து கேட்கும் போது அத்தகைய உற்சாகம் இருக்குமோ இல்லையோ என்று யோசித்தவாறு கேட்க தயாரானோம் , ஆனால் தலைவர் எடுத்த எடுப்பில் நம்மை பெஹாக்கில் முக்கியெடுக்க அயர்ந்து போனோம் இவரின் பேரிசையில் , பெஹாக்க பாடுவதில் இவருக்கு இணை யாரும் இலர் என்பதை பறைசாற்றினார் தன் 9 நிமிட ஆலாபனையில் , அரங்கமே கண்மூடி ரசித்து தேனுண்ட வண்டுக்கூட்டமானது , இவரின் இசை ஆளுமையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை , கரஹரத்தில் ஒரு வித உணர்வை தருகிறார் , பெஹாக்கில் கொஞ்சுகிறார் அடடா , கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது , திடீரென்று வறுமையின் நிறம் சிவப்பு சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் சிரிக்கும் சொர்க்கம் தங்க தட்டு எனக்கு மட்டும் ராகம் பாடி அரங்க மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் , தொடர்ந்த மிக அருமையான ஆலாபனை தந்து சஞ்சய் பெஹாக்கில் மகிழ்வித்தார், தொடர்ந்த வரதர் தேன் பாய்ச்சினார் தன் வயலின் மூலம் , எப்படி தேஷ் தலைவர் ஆலாபனை செய்தால் வரது வயலினில் தேஷ் கேட்கலாம் என்கிற இரட்டிப்பு மகிழ்வு உள்ளதோ அது போல் இதிலும் நமக்கு பெரும் மகிழ்வு காத்திருந்தது , அடேயப்பா என்னமாய் வாசிக்கிறார் இராகத்தை , காது வழி இதயத்தை தொட்டார். மனசு லேசானது.இவர்கள் இருவரின் இசை மேலானது. தொடர்ந்த தானம் துவங்கியது , பெஹாக் தானம் நமக்கு பேரானந்தம் , 6 சுற்றுக்களாய் நம்மை எங்கெங்கோ கொண்டு சென்றனர் இருவரின் இணை , பல்லவியில் நான் உன்னை காண வேண்டினேன் ஆடிப் பாடி நாடினேன்.பாடல் வரிகள் தலைவரின் சொந்த வரிகளாக இருக்க வேண்டும் , ஆனால் வரிகள் இரசிகர்களின் வரி , தலைவர் பாடிட அதை கண நாங்கள் வேண்டினோம் . வழக்கம் போல் நெய்வேலியாருடன் கணக்கு வழக்கு வம்பு செய்யாமல் நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர் , பெஹாக்குகே உரித்தான சனிப்பா சானிப்பாக்கள் வந்து விழுந்தது , மெல்ல கல்பனாஸ்வரத்தில் இறங்கி திடீரென கககா கககா என்று சனிக்கிழமை குறுஸ்வரங்கள் மூடுக்கு சென்றார் தலைவர் , பல்லவி ராகமாலிகை ஸ்வரங்களில் முதலாவதாக தலைவர் எடுத்துக்கொண்டது சஹானா , வழமையான வெஞ்சாமரம் வீசியது தலைவர் ஸ்வரங்களில் , தொடர்ந்து வயலினில் வரதர் வெஞ்சாமரம் ,நெய்வேலியார் இருவருக்கும் ஈடில்ல நாதம் தந்தார் , இந்த லயக்கூட்டணியை காண நாம் எப்போதும் வேண்டினோம் , அடுத்த தலைவர் ரவிசந்திரிகாவில் ப்ரளயத்தை உருவாக்கினார் , அடேயப்பா இந்த ராகம் பாடி எத்தனை நாளாயிற்று என்று இன்புற்றோம் , அடுத்து தலைவர் தர்பாரி கானடாவை விஸ்தாரமாய் ஸ்வரத்தில் அரங்கிற்கு கொண்டு வந்தார் , இந்த இந்துஸ்தானி ராகங்கள் மீது தலைவருக்கு தனிகாதல் உண்டு , அப்படியே திடீரென மருதமலைக்கு சென்றார் , டி.என்.ஆர் அரங்கில் மதுரை சோமுப்பிள்ளையை கண் முன் நிறுத்தினார் , அடேயப்பா என்னமாய் யோசித்து யோசித்து தருகிறார் தலைவர், ஒரு நொடி மதுரை சோமு பிடியை பிடித்தார் பாருங்கள் , பிரமாதம் , வரதர் இதுபோன்ற வாய்ப்பு வந்தால் விடுவாரா அவரும் மருதமலைக்குச் சென்று ஒரு பிடி பிடித்தார் , அரங்கமே முருகானந்தம் பெற்றது .தொடர்ந்து தனிகாட்டு ராஜாவின் தனியாவர்தனம் , நெய்வேலி வெங்கடேஷ் என்னும் மகா வித்வான் எத்தனையோ ஆயிரம் முறை தனி வாசித்திருந்தாலும் , ஒவ்வொரு முறையும் அவர் வாசிக்கும் போது அவர் காட்டும் அந்த பக்திசிரத்தையான வாசிப்பு , அர்பணித்து வாசித்தல் , அவையோரை தன் வாசிப்பில் பங்கேற்கச்செய்தல் போன்ற அருமையான கூறுகள் நாம் உணரலாம் , சம்பரதாயங்களை வாசித்து , மோரா , கோர்வையில் முடித்துவிட்டு போகாமல் நம்மை அவரின் ஓவ்வொரு அசைவிலும் ஈடுபடச்செய்யும் மாக கலைஞன் தலையாட்டிச்சித்தர் , அதைத்தான் அன்றைய தனியிலும் காட்டினார். ஹூம் 2019 , 2022 தொடர்ந்து இனி ராகம் தானம் பல்லவி பெஹாக்கிற்கு நீண்ட காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிட்டது என்பதை உணரும் போது ஒரு வித சோகம் கப்பிக்கொண்டாலும் , மனம் இந்த பெஹாகில் முழு திருப்தி பெற்றது.
8) அடுத்து பாரதிதாசன் அவைக்கு வந்தார் கமாஸில் குன்றின் மீது நின்று கண்டேன் கோலம் என்ன கோலமே அளவிட முடியாதது, ஒரு அளவுகோலில் அளக்க இயலாதது வானம். இந்த வானத்தில் தான் எத்தனை அழகுகள். பகலில் ஞாயிறு, இரவில் நிலா, விண்மீன்கள் கூட்டம், மேகங்களின் ஊர்வலம். இத்தனையும் கொண்டுள்ள இந்த வானத்தின் அழகினை, மாலை நேரத்தில் பார்த்தால், உள்ளத்தை அள்ளுகின்ற காட்சியாக இருக்கும். இந்தக் காட்சி தரும் இன்பத்தை பாவேந்தார் படியுள்ளார் , பண்ண வேண்டும் பூசை என்பார் வரிகளில் கமாஸி பறந்தார் தலைவர் , திருமலையும் கோபாலரும் பாடல் வரிகளின் வீச்சில் வியப்புற்றுன்ர , என்னமா எழுதியிருக்கிறார் புதுவைப் புயல் என்றனர் , அன்புடையார் எல்லாம் உடையார் என்று அடுத்த சரணம் பாடினார் , என்பும் தோலும் வாடு கின்றார் 'ஏழை' என்ப தெண்ணார் அன்றே! துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு சூழ்க வையம் தோழிவாழி!என்று மிக அருமையான மினதநேயத்தை உயர்த்திப்பிடிக்கும் பாடலை தலைவர் கர்நாடக சங்கீதத்தில் பாடியது பெரும் மகிழ்வை தந்தது , இந்த பாடலை மெட்டமைத்தது தலைவரின் தலைவர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் .
10) ஆழ்வார்கடியான் அகம் மகிழ தலைவர் ஸ்ரீரித்வா குணா ஸ்லோகத்தை பகேஸ்ரீயில் பாடி கோபால பக்திம்தேஹீ பாட அரங்கே தலைவர் பாகேஸ்ரீயில் கரைந்தது , ஸ்வாதி மாமன்னரின் ஆகப்பெரும் புகழ் பெற்ற பாடல் இது , தலைவர் தனது அத்தனை கச்சேரியிலும் தொடர்ச்சியாக பாடி வருகிறார் , ஸ்வாதி திருநாளை , ஸூவரத்தோடு நாரத சேவதாப்த சரணத்தோடு தலைவர் உருகி பாட மருகி கேட்டது அவை, வரதர் இந்துஸ்தானி வாசிப்பும் நெய்வேலியார் லயமும் பலே பலே .
11) பாபநாசம் சிவன் கபாலி சஞ்சய் இந்த கூட்டணி பிரிக்க இயலாதது , பங்குனி பெருவிழாவில் தலைவர் கபாலியில் பாடாத குறையாக , உன்னை நினைந்தாலே இன்பம் ஊறுதே செஞ்சுருட்டியில் பாடினார் தலைவர் , உன்னை மறந்தாலே நெஞ்சம் ஏங்குதே உலகம் இருள்மயமாய் காண்குதே என்னே வரிகள் என்று சிலாகித்தார் கோபாலகிருஷ்ணபாரதி , திருமலை ஆமாம் ஆமாம் எங்கள் திருமாலை தொழுதால் உலகமே இன்பமாய் காணும் என்று பாபநாசம் சிவனுக்கு தெரியவில்லை போலும் என்றான் , உன் திருநாமத்தை உச்சரித்தாலே உடல் முழுவதும் இனிக்குதே - ஈசா தலைவர் பாட நமோநாராயானா என்றான் சத்தமாக .
12) பட்டியலில் இல்லாத போனஸ் , ஆடும் மயிலாய் உருவெடுத்து மத்யமாவதியில் தலைவர் பாடி பாடி பாடி உருகினார் , கற்பகமே கண்பாராய் என்று பாட அரங்கமே தலையாட்டி மகிழ்ந்தது , அடையாற்றிலிருந்து ஒலித்த தலைவர் குரலோசை கேட்டு மயிலை தெப்பக்குளத்தின் கரையிலிருக்கும் மயிலை கற்பகாம்பாள் அகமகிழ்ந்தாள் , சத்துவகுணமோடு பக்திசை பவர்பவ தாபமும் பாபமும் மறையும் மயில்ல்வர சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடு , என்னமாய் ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறார் போலகம் ராமைய்யா.
மங்களம் பாடி 2.45 மணி நேர கச்சேரியை நிறைவு செய்தார் நாவுக்கரசர் , நீண்ட இடைவேளைக்குப்பின் அதாவது 69 நாட்களுக்குப்பின் தலைவர் நேரடி கச்சேரி கேட்ட மகிழ்வோடு அரங்கிலிருந்து அகன்றோம் அவரின் இசையிலிருந்து அகலாமனதோடு , மருதமலை காற்று நம்மை ஈர்ப்பது போல் இருந்தது.
Comentarios