top of page
Search

மீண்டது டிசம்பர் , மீண்டுமோர் சஞ்சய் மார்கழி !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Nov 23, 2022
  • 5 min read

ree



டிசம்பர் ! என் சிறு வயதில் , டிசம்பர் பூ மற்றும் டிசம்பர் பனி , அரையாண்டு விடுமுறை , கிறிஸ்மஸ் கேக் இதை தவிர இந்த மாதம் குறித்து பெரிதாக ஏதும் நினைவில்லை , பதின்ம பருவத்தில் டிசம்பர் அதிகாலை பஜனைகளில் பங்கேற்றும் வீடு வீடாய் சென்று சுண்டல் , பொங்கல் இஞ்சி டீ இத்யாதிகளை உண்ட நாட்களும் உண்டு .


அக்டோபர் 2 2011க்குபின் டிசம்பர் குறித்தான என் இலக்கணம் மாறியது , அந்த மாதத்தில் கர்நாடக சங்கீத உலகில் சற்றேழத்தாழ ஆயிரம் கச்சேரிகள் சென்னையில் நடைபெறும் என்பதை உணர்த்தியது டிசம்பர் 2011 , தலைவரின் கலாரஸ்னா கச்சேரி ஜெமினி மேம்பாலம் கீழே உள்ள ராணி சீதை ஹாலில் ஸ்ரீதேவியுடன் கேட்டு பின் இந்திய நுண்கலை கழகத்தார் கச்சேரியை வள்ளுவர் கோட்டம் ஜெர்மன் அரங்கில் கேட்டேன், பின் பாரத்கலாச்சார் 31-12-2011 அன்று மீண்டும் ஸ்ரீதேவியுடன் கேட்டுவிட்டு தலைவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.


2012,2013,2014 ஆண்டுகளில்தலைவரின் சீசனின் முதல் பாதி கச்சேரி மட்டுமே கேட்கும் வாய்ப்பு , பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் 24ஆம் தேதி துவங்கிவிடும் , 2015 முதல் வேறு உத்தியோகத்தில் சேர்ந்ததால் தலைவரின் சீசனின் அத்தனை கச்சேரியும் கேட்கும் வாய்ப்பு , அதிலும் 2015இல் தலைவர் சங்கீதகலாநிதி விருது பெற்ற ஆண்டு , சென்னையின் பெருவெள்ள வருடம் , சீசன் இருக்குமா என்ற நிலைக்கு தள்ளியது பெருமழை , இருந்த போதிலும் கச்சேரிகள் வழமை போல் நடைபெற்றது , 2016 ,2017,2018 ,2019 சீசனில் தலைவரின் அத்தனை கச்சேரியும் கேட்கும் வாய்ப்பு 2019 நாரதகானசபை மட்டும் கேட்கவில்லை உறவினர் விழா மற்றபடி அனைத்து கச்சேரியிலும் ஆஜர் ஆவோம் .


2020 , 2021 உலகிலன் கருப்பு ஆண்டுகள் ,கோரோனாவின் கோரப்பிடியில் உலகமே தத்தளிக்க , கர்நாடக சங்கீதமும் விதிவிலக்கின்றி மாட்டித்தவித்தது , இருந்த போதிலும் ஆன்லைன் கச்சேரி 2020லிம் , 2021இல் தலைவரின் சஞ்சய் சபா புண்ணியத்தில் 4 கச்சேரி , தமிழிசை சங்க கச்சேரி இப்படி சென்றது .


தற்போது 2022 மார்கழி சீசன் நம் முன் வழமையான கம்பீரத்தோடு நிற்கிறது , ஆம் மனிதனின் இயல்பு ஒரு விடயம் இருக்கும் போது அதன் அருமை தெரியாது , இல்லாத போதே அந்த பழைய நாட்களின் பசுமையும் செழுமையும் செம்மார்ந்து நிற்கும் மனதில் , தமிழ் தியாகராஜர் பாபநாசம் சிவனின் வரிகளில் தலைவர் குரலில் சொல்வதென்றால் '' துன்பமோடின்பம் கலந்தது பிரபஞ்சம் வெயில் இல்லையேல் நிழலில் இன்பமும் உண்டோ '' . மீண்டும் டிசம்பர் சீசன் என்று நினைத்தாலே இனிக்கிறது , ஆனால் இம்முறை பணியிடம் பெரியபாளையம் அருகே , அங்கிருந்து 6.30 மணி கச்சேரி வர 45 கிமீ பயணிப்பதை நினைத்தாலே நடுங்குகிறது , நான்கு ஞாயிறு கச்சேரி அதையும் ஸ்ரீதேவியையும் ஒருங்கிணைத்து நினைத்தால் இன்னும் நடுங்குகிறது , ஒரு காலத்தில் சீசனில் 15 கச்சேரி இருந்த இடத்தில் இப்போது 10 அதிலும் ஒன்று நான் சென்னையில் இல்லை , மீதம் ஒன்பதை தவறாமல் கேட்க அனைத்து தெய்வங்களும் தயை புரிய வேண்டும் !


டிசம்பர் சீசன் தலைவர் மட்டுமல்ல , நம் இசை மல்லர்கள் தலையாட்டி சித்தர் நெய்வேலி வெங்கடேஷ் மற்றும் வரதாழ்வார் வரதராஜன் அவர்களின் பேரிசை தலைவரின் குரலிசையோடு இயைந்து கேட்கும் அரும்தருணங்கள் நிறைந்திருக்கும் . அவர்கள் மூவரின் நயன உரையாடல்களை பார்பதே தனி இன்பம் , ஒரு கச்சேரியில் குறைந்தபட்சம் நூறு முறையாவது அவர்களின் கண்கள் சங்கேத மொழியை பரிமாறிக்கொள்ளும் . ஒரு கச்சேரியில் அதிகபட்சமாக ஈடுபடுவது வயலின் , வாய்பாட்டின்போது ஆலாபனையிலும் வாசிக்க வேண்டும் , வயலின் ஆலாபனையிலும் வாசிக்க வேண்டும் பாடலிலும் வாசிக்க வேண்டும் , கிடைக்கும் ஓய்வு தனியின்போது தான் , ஆனால் இது வரை வரது அப்படி தனியில் ஓய்வெடுத்து நாம் கண்டதில்லை , சபாஷ் , சபாஷ் என்று நெய்வேலியார் தனிக்கு தாளம் போட்டு ஊக்குவித்துக்கொண்டிருப்பார் , அத்தகு நட்பு அவர்களின் நட்பு , நெய்வேலியார் வர்ணம் முதல் மங்களம் வரை வாசிக்கும் வாசிப்பில் அரங்கமே அரண்டுவிடும் அத்தகு மீத்திறனோடு வாசிப்பார் , தனியில் சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு அசுர வாசிப்பு , அவரோடு உபபக்கவாத்தியம் யார் வாசித்தாலும் , மிக அருமையாக ஊக்குவிப்பார் , அதே நேரத்தில் தனி என்று வந்துவிட்டால் தண்ணீர் குடிக்க வைத்து விடுவார். இந்த மூவர் கூட்டணி நம்மை வேறு உலகிற்கு இட்டுச்செல்லும்.


தலைவரின் கச்சேரி களங்களுக்கு வருவோம் , 2018முதல் தமிழும் நானும் வித்வத் சபையில் எந்த வில்லங்கமும் இல்லாமல் ஆன்லைன் டிக்கெட்டுடன் தலைவர் அருமையாக வழங்கி வரும் கச்சேரி , முதலில் ஒரு தொகுப்பு பின்னர் இரண்டு தொகுப்புக்களாக வந்து மீண்டும் ஒரு கச்சேரியாக பாரத் உத்சவ் கச்சேரி இல்லாத குறை தீர்க்க 27 நவம்பரிலேயே வருகிறது (https://www.townscript.com/v2/e/thamizhum-naanum-112022/booking/tickets ),


அடுத்து தலைவர் 9ஆம் தேதி பாடும் சபா பிரம்ம கான சபை , வழமையாக சிவகாமி பெத்தாச்சியில் நடைபெறும் நிகழ்வு இம்முறை ரஸிக ரஞ்சனி சபாவில் , புத்தாண்டு கச்சேரியும் இங்கே தான் என்று கேள்வி வலைதளத்தில் டிக்கெடுக்குள் எளிதில் பெறலாம் (https://www.mdnd.in/),


நாரதகான சபையில் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கச்சேரி அடுத்து , அந்த காரியதரிசியின் அருமையான கவிதையுடன் ( டி.ராஜேந்திரே அதிறும் லெவல் கவிதை ) துவங்கும் கச்சேரி (இந்த ஆண்டு 11ஆம் கார்திக்கையும் கேட்க முடியாது ( பெங்களூரில் உறவினார் விழா , இந்த உறவுக்காரங்க இருக்காங்களே...... )இதற்கான டிக்கெட் ஏற்கனவே வந்துவிட்டது (https://www.mdnd.in/season_ticket/mutipleSeason/42),


அடுத்து சரியாக ஒரு வாரம் கழித்து 18ஆம் தேதி வாணி மஹால் கச்சேரி , வாகன நெரிசல் மிக்க கோபதி நாராயண செட்டி சாலையில் அமைந்திருக்கும் இங்கே கச்சேரி அரங்கு சற்றே ஆம்னி பஸ் போல் இருக்கைகள் இருக்கும் ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் விதத்தில் தலைவரின் கச்சேரி அமையும் சபா சென்று தான் டிக்கெட் பெறுதல் வேண்டும் ,


20 டிசம்பர் இந்திய நுண்கலை சமூகத்தாரின் கச்சேரி அதே எத்திராஜ் திருமண மண்டபத்தில் என்று அறிகிறேன் வினோதமான அகஸ்டிக்ஸ் எனும் பெரும் சவால் காத்திருக்க தம் பங்கிற்கு சிற்றுண்டி ஏற்பாட்டாளர்களும் பாத்திரத்தில் பக்கவாத்தியம் வாசிக்க இதையெல்லாம் விஞ்சி நிற்கும் தலைவரின் பாடல்கள் அங்கேயும் நேரில் சென்றே டிக்கெட் பெற வேண்டும் ,


அடுத்து 24ஆம் தேதி டிசம்பரில் புதுக்களம் கலாசேத்திராவில் கச்சேரி , கடந்த முறை அங்கு சதுரகாமினி கல்யாணி வர்ணத்தை பாடி அசத்தோ அசத்து என்று அசத்தினார் தலைவர் இதற்கான டிக்கெட் பெரும்பாலும் ஆன்லைனில் இருக்கலாம் ,


அடுத்த நாள் 25-12-2022 தலைவரின் தற்கால வழைமையான மாதாந்திர கச்சேரி தளம் முத்தமிழ் பேரவை , சஞ்சய் சபாவின் பிரத்யோக கச்சேரி ஆன்லைன் டிக்கெட், நமக்கு அங்கு நிரந்திர இருக்கையே இருக்கிறதாக்கும் ,


27ஆம் தேதி வித்வத் சபை கச்சேரி , நல்ல நாளிலேயே நாயகம் இதிலே இரண்டாண்டிற்குப்பின் அங்கே கச்சேரி ஆக இந்த முறை நடுநிசி 2 மணிக்கு நிற்க வேண்டும் டிக்கெட்டிற்கு , எப்படி நின்றாலும் போறாது தலைவரின் பேரிசைக்கு ஈடாகாது.


29ஆம் தேதி ராஜா அண்ணாமலை மன்றம் தமிழிசை சங்க கச்சேரி இங்கே கடந்த ஆண்டு கூட கச்சேரி இருந்தது , நேரிடை டிக்கெட் என்று அறிகிறோம் , பிரம்மாண்ட அரங்கு அதிலே வண்ணவண்ணமாய் ஒளிரும் நடராஜர் , அரங்கெங்கும் தமிழிசை விற்பன்னர்களின் பிரம்மாண்ட ஓவியங்கள் என்று மிகுந்த பாரம்பரியத்தோடு நடைபெறும் கச்சேரி , இங்கே ஆண்டு தோறும் நாம் குடும்ப சகித வருகை கொடுக்க தவறுவிதில்லை ,


கிளைமாக்ஸ் போல் சனவரி 1 ஆண்டின் முதல் நாள் தலைவரின் இருமையான வாழ்த்துக்களோடு தொடங்கும் பிரம்ம சபை கச்சேரி , கடந்த ஆண்டு கோவிட்டின் தாக்கங்கள் குறையாத நிலையில் 3மணிநேரம் மட்டுமே பாடப்பட்டது , நேயர் விருப்பம் இன்றி , இம்முறை பழைய பொலிவுடன் நான்கு மணிநேர கச்சேரி நேயர் விருப்ப ஆனந்த கூச்சல்களோடு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை https://www.mdnd.in/டிக்கெட் பெறலாம் .


அடுத்து நாதசுதாவா அல்லது சஞ்சய் சபா மாதாந்திர கச்சேரி சனவரியில் உண்டா என்று மனம் கேட்குமே தவிர கையில் இருக்கும் கச்சேரிகளோடு திருப்தி படாது .ஏனெனில் சஞ்சய் ஓர் இசை அட்சய பாத்திரம் அள்ள அள்ள இசை குறையாது , தலைவர் ஒரு கடல் நாம் கேட்டது கையளவு , தலைவர் நீலவானம் ஆரம்பம் எங்கே முடிவு எங்கே என ஒரு முடிவுக்கு வர இயலாது , தலைவர் காற்று போல் , பாடல்களில் மெல்லிய தென்றாலாயும் நம்மை தீண்டுவார் , புயற்காற்றாகவும் நம்மை சுழற்றுவார் .


ஏறத்தாழ பத்து கச்சேரியிலும் ராகம் தானம் பல்லவி திண்ணமாய் இருக்கும் ,அதில் குறைந்தது எட்டில் பல்லவி தமிழில் இருக்கும் அதில் நான்காவது முண்சாடு கவி , புதுவை புயல் வரிகள் இருக்கும் , அந்த ''உலகமே ஒரு நாடக மேடை'' மீண்டும் பாடினால் நன்றாக இருக்கும் , எழுபத்தி இரண்டு மேளகர்த்தாக்களிலும் ராகம் தானம் பண்ணணும் என்று முன்பொருமுறை கூறியிருந்தார் , எனவே புதிய அரிய ராக ராகம் தானங்களையும் எதிர்பார்க்கலாம் .


கோபால கிருஷ்ணபாரதி , கவிகுஞ்சர பாரதி , கோடீஸ்வரர் , பாபநாசம் என்று தமிழ் பெருமக்கள் பாடல்கள் கட்டாயம் எதிர்பாக்கலாம் , தியாகராயர் , தீட்சிதர் , சாஸ்திரி , ஸ்வாதி மாமன்னர் பாடல்கள் என்பது வழமையான எதிர்பார்ப்பு ,அருணாசல கவியின் ராம நாடகம் , தேவாரம் , திருவாசகம் , நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று ஒருபக்கம் பக்தியில் திளைத்திடச் செய்வார் மற்புறம் பாவேந்தர் , பட்டுகோட்டை , வள்ளலார் என்று தத்துவங்களுக்கும் பஞ்சமிராது , பெட்டத மேலொந்து என்று அக்கம்மாவையும் , கண்டேனா உடுப்பிய என்று புரந்தரரையும் இன்னும் சில கன்னடப் பாடலும் எதிர்பார்க்கலாம் .


சில ஆண்டுகளாக இந்த பாடல் பட்டியல் வெளியீடு செய்வதால் அடுத்த விநாடி ஆச்சர்யம் மாத்திரம் நமக்கு கிட்டாது , பட்டியலில் இல்லாத பாடலை கச்சேரியின் கடையில் பாடினால் தான் ஆச்சர்யம் உண்டு , தில்லானா கேட்டால் வராது கேட்காமல் விட்டால் வரலாம் ,.


துக்கடாவில் கமாஸ் , சாவேரி , பெஹாக் , சிந்துபைரவி , மாண்ட் , ஜோன்புரி , சிவரஞ்சனி , பாகேஸ்ரீ இல்லாமல் இராது , காம்போதி , சஹானா , தோடி , பைரவி,கல்யாணி , நாட்டுக்குறிச்சி , கரஹரம் , கீரவாணி , மோஹனம் எல்லாம் தயாராய் காத்திருக்கின்றன தலைவர் நாவால் அரங்கை ஆக்ரமிக்க , காப்பி , பெஹாக் , தேஷ் , கன்னடா , நளினகாந்தி நாங்களும் இருக்கோம் என்கின்றன கமாஸ் , கேதார கௌளை , சாருகேசி , ரஞ்சனி ,வசந்தா , மாண்ட் தனியாக கூட்டணி அமைத்து கச்சேரி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிகிறோம். அதெப்படி எங்களை பாடாமல் விடுவார் என்று தலைவரை டாக் செய்த ட்வீட் செய்துள்ளன ரீதிகௌளை , சங்கராபரணம் , நாட்டை , ஷண்முகப்பிரியா , கானடா , ஆபோகி . யமுன்கல்யாணி , ஹமீர்கல்யாணி , மதுவந்தி , சிந்துபைரவி , சலநாட்டை ஜோக் , பஹாடி , ரவிசந்திரிகா , சிம்மேந்திர மத்யமம் ,ஹம்ஸநாதம் ஹம்ஸநந்நி ஆகியவை அட்லீஸ்ட் ராகமாலிகையாவது ப்ளீஸ் என்கின்றன , ஷம்ஸ்த்வனி எப்படியும் வர்ணத்தில் வந்துவிடுவேன் என்கிறது தன்னம்பிக்கையோடு , தனஸ்ரீ , த்வஜாவந்தி நாங்கள் இல்லாமல் தில்லானாவா என்று இறுமாப்படைகின்றன. ஒரு ராகம் மாத்திரம் அலட்டிகொள்ளமால் இருக்கிறது ஆம் நம் சௌராட்டிரம் , எனக்கு 27 நவம்பர் 29 டிசம்பர் என்கிறது மத்யமாவதி .


ராகாதி ராகங்களே ஆனால் ஒன்று , பாடுவது சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் , நான் கூறிய எதுவும் இடம் பெறாமலும் பாடல் பட்டியல் தயார் செய்து பாட வல்ல வித்வத் ஊற்று.


ஆழிப்பேரலையானாலும் சரி , ஊட்டி கோடைக்கானல் போல் பனி பொழிந்தாலும் சரி , ஸ்ரீதேவி முறைத்தாலும் சரி , அலுவலகத்தில் நம்மை இடித்தாலும் சரி இதோ நம் இசைப் பயணத்திற்கு ஆயத்தமாகிவிட்டோம் ஆன்லைன் க்யூஆர் கோடுகளோடு , காத்திருப்போம் நவம்பர் 27க்கு கானராஜாவின் தமிழும் நானும் தொடங்கி புத்தாண்டு வரையிலான இசைப்புதையலை புசிப்போம் புளகாங்கிதம் கொள்வோம். பாற்கடலில் வீற்றிருக்கும் திருமால் மீது ஆணையாக , தில்லை பொனம்பலத்திலும் தூக்கிய திருவடியானின் மீது ஆணையாக உன்னை நாங்கள் நையப்புடைப்போம் என்று என் காதில் ஓதுகிறார்கள் சைவ வைணவ பூதங்களான ஆழ்வார்கடியானும் , கோபாலகிருஷ்ணபாரதியும் கூட ரவிதாஸனும் ஒம் ஹரீம் ஹராம் வஷட்டு என்று கூறிவிட்டு ஆந்தை அலறல் விடுகிறான், இதையெல்லாம் விஞ்சும் விதத்தில் , ஸ்ரீதேவி எப்படி போறீங்கன்னு பாப்போம் என்று முறைப்பது என் மனக்கிலேசமா !

 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page