மீண்டும் சஞ்சய் புத்தாண்டு - திகட்ட , திகட்ட ரஸிகர் விருப்பப் பாக்கள் இசைத்திருவிழா !
- ARAVINDAN MUDALIAR
- Jan 5, 2023
- 10 min read

2020ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி , தலைவரின் பிரம்மகானசபை கச்சேரி சிவகாமி பெத்தாச்சியில் நான்கு மணிநேரமாய் நடைபெற்றது . அன்று மகிழ்வோடு கேட்ட யாருக்கும் , அடுத்து வரும் பெருந்தோற்றின் பாதிப்பை அறிந்திடவில்லை. அதற்குப்பின் நடந்ததெல்லாம் வரலாற்றின் , குறிப்பாக இசைவரலாற்றின் இருண்ட காலம். 1 சனவரி 2021இல் நேரடி கச்சேரியே இல்லை ,2022இல் சாஸ்திரி அரங்கில் நூற்றிசொச்சம் பேர் மட்டுமே கூடிய சனவரி 1 கச்சேரி.
சென்னையை சூழ்ந்திருந்த கருமேகம் அகல , கதிரவன் ஒளிக்கிரணங்களை பாய்ச்ச , இந்த 2022 முழு சீசன் நடைபெற்றது , அதன் கிளைமேக்ஸாக தலைவரின் 2023 ஆம் ஆண்டின் முதல் நாள் கச்சேரி , பிரம்ம கான சபை ரஸிக ரஞ்சனி சபையில் நடைபெற்றது. நாம் எப்போதும் கூறும் , வெயிலில்லையேல் நிழலில் இன்பமும் இல்லை என்பதற்கிணங்க , 2021 மற்றும் 2022இன் தாக்கம் , 2023 புத்தாண்டின் மகிழ்வை இரட்டிப்பாக்கியது என்றே கூற வேண்டும்.
வழமை போல் நாம் குடும்பசகித பயணம் , ஸ்ரீதேவி தனது முத்திரை இனிப்பான ரவா லாடுவை விடுத்து , மைசூர் பாக் செய்கிறேன் என்று பிரயத்தனம் செய்து இறுதியாக அதன் பெயர் கடலைமாவு தட்டை என்று பெயரிட்டு அதை கொண்டு வந்து அனைவருக்கும் தந்துமகிழ்ந்தோம் , பித்தர் குழாம் அதை உண்டு மகிழ்ந்தனரா என்பதை நாமறியோம் பராபரமே ! மேடையில் தலைவருடன் வழமையான நெய்வேலியார் வரதர் கூட்டணி , தம்பூரா ராகுல் பின்பாட்டு ரேதஸ் , அரங்கத்தின் அத்தனை டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்தததால் , மேடையிலும் ரஸிகர்கள் அமரவைக்கப்பட்டனர்.
இந்த அரங்கம் சிவகாமி பெத்தாச்சியை விட அளவில் பெரியது , ஓலியமைப்பு துல்லியம் அதிகம். ஆனாலும் ஏனோ நமக்கு பெத்தாச்சி பால்கனி போல் மகிழ்வு ஏற்படவில்லை. தலைவர் நேயர் விருப்பம் உண்டு என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக , பாடல் பட்டியலை ராதாப வுடன் நிறுத்தி வெளியிட்டார். நாம் நமது 2019 சீசன் கொள்கையின்படி வந்தோமா கேட்டோமா போனோமாவை கடைபிடித்ததால் , கேட்பவர்கள் கேட்டுக்கொள்ளட்டும் என்று இருந்து கொண்டோம். ஆம் நான் கேட்பேன் நாராயணன் பாட்டு என்று திருமலையும் , அம்பர சிதம்பரநாதனை போற்றும் பாடல் கேட்பேன் என்று அறிவித்து அமர்ந்தார் கோபால கிருஷ்ணபாரதி.அதி அற்புத கச்சேரி தலைவரின் விஷ் யூ ஆல் ஏ வெரி ஹாப்பி நியூ யிருடன் துவங்கிற்று 9.30மணிக்கு.
1) இந்தப்பருவத்தில் தலைவர் ஸ்வாதி மாமன்னரை , தமிழிசை சங்கம் கச்சேரி விடுத்து அனைத்திலும் பாடிவிட்டார் . மஹாராஜா தமிழில் எழுதியிருந்தால் அங்கும் பாடியிருப்பார் போலும். முதல் பா ஸ்வாதி திருநாளின் ஸரஸிஜனாபாவை காம்போதி வர்ணத்துடன் துவக்கினார் தலைவர். காம்போதி ஸ்வரங்கள் கேட்போர் மயங்க படைக்கப்பட்டது. மத்தாப்பாய் தலைவர் ஸ்வரம் அரங்கவலம் புரிய நெய்வேலியார் நாதம் அருமையான பின்புலத்தைத் தந்தது , வரதர் வகையாய் வாசிக்க ஸரஸிஜனாபர் திருவனந்தபுரத்திலிருந்து திருமயிலை வந்து கேட்டு மகிழ்ந்தார். தலைவருக்கு குஷி வந்துவிட்டால் ஒரு பாடலை லேசில் விடமாட்டார் அதைத்தான் அவரின் சித்தஸ்வரம் காட்டியது , நெய்வேலியார் ஒரு கிரியாஊக்கி என்பதை வாசித்துக்காட்டினார். மிக அற்புதமாக துவங்கியது புத்தாண்டு கச்சேரி புதுப்பொலிவோடு.
2) அடுத்து நீண்டு நெடிய இடைவெளிக்குப்பின் ஜகன்மோகினி , தயபாயோநிதி மீசு கிருஷ்ணைய்யர் பண் , தலைவர் பிரமாதப்படுத்தினார் தேவி ஜகன்மோகினி வரியில். வரதர் நெய்வேலி இணை அருமையான களத்தை அமைத்துத்தர தலைவர் ஜகன்மோகினியில் ஜகத்தை ஆண்டார். ஸ்வரம் துவக்கும் நேரம் ஓலியமைப்பு ஓலமிட தலைவர் ஒரு இடைவெளி விட்டு அப்படியே விடுங்க என்று கூறிவிட்டு தொடர்ந்தார் ஸ்வரம் என்னும் வரத்தை. தலைவர் போல் மகா கலைஞர்களுக்கு இது போல் ஒலியமைப்பு சிக்கல்கள் பெரிய அளவில் மூட ஆப் செய்துவிடும். தலைவர் அதிலிருந்து விரைவாக விடுபட்டு தயாபயோநிதேவில் மின்னல் ஸ்வரங்களை களமாடச்செய்தார். நாம் இந்த பருவத்தில் கவனித்த அந்ந நேசல் நகாசு வேலைகளும் அவ்வப்போது வந்து சென்றது . வரதர் பிரமாதமான வாசிப்பை நல்கினார்.
3) அடுத்த விநாடி ஆச்சர்யம் , ஆம் தலைவர் முகாரியில் பாபநாசம் சிவனின் சிவகாம சுந்தரியைப்பாடினார் அடுத்து. ஜெகதம்பா வந்தருள் புரிந்தாள் தலைவரின் பாடலின் இனிமையால். நாம் எப்போதும் ரசிக்கும் பவரோகம் அறவேறு மருந்தேது? பழவினைகள் தொடராமல் உன்னை பஜிக்க சிவகாம சுந்தரி ! அடடா என்ன சொல்லி வர்ணிப்பது , அந்த முகாரியின் முழு சாறையும் பிழிந்தல்லவா தலைவர் பாடுகிறார். கேளாயோ என் குறைகள் திருச்செவியில் என்று தலைவர் பாட , தாய் திருச்செவியில் கேட்டாள் தலைவரின் இனியமொழியை . தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி என்று தலைவர் உருகி மருகி பாட அரங்கே பக்திபரவசத்தில் தன்வசம் இழந்தது.
4) ஆலாபனை நாராயணி இல்லையில்லை ஆலாபனை மலைஉச்சி குளிர்காற்று , அத்தனை குளிவிர்க்கும் ஆலாபனை தந்தார் தலைவர். இது சக்கரவாகத்தின் ஜன்னியம் என்றார் கோபாலர் , இனிமைக்கான காரணம் புரிந்தது , வரதர் வயலினில் நாராயணி இனிப்பளித்தார் அடுத்து , தலைவர் அக்கம்மாவின் பெத்தடமேலோந்து பாடலை துவக்கினார் நாம் பன்முறை கேட்ட பாடல் அதிலும் , கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஆர்டிஸ்ட் விலேஜில் தலைவர் சுமுத்திர தடியலொந்து மனையை மாடி நோர தொரகள அஞ்சினோதெந்தைய்யா பாட ஏற்பாட்டாளர் வாசுதேவ் ஆச்சர்யத்தில் வியக்க , அந்த நாள் ஞாபகங்கள் வந்தது. தலைவர் பெட்டதமேலொந்து மனைய மாடி பாடி , தத்துவ சாறலை அரங்கில் அமைத்தார். காட்டில் வீடமைத்து மிருகங்களுக்கு அஞ்சலாமா என்கிறார் அக்கம்மா தேவி, இங்கே காட்டை அழித்தல்லவா வீடு கட்டுகிறார்கள் என்றான் திருமலை. அடுத்து கடற்கரையில் வீட்டைக்கட்டி அலைக்கு அஞ்சலாமா என்று தலைவர் பாடிட , அதானே என்றார் கோபாலகிருஷ்ணபாரதி. சந்தையின் அருகே வீட்டைக்கட்டி சத்தத்திற்கு அஞ்சுவதேன் என்று வினவினார் அடுத்து. அக்கம்மாவின் அருமையான கேள்விகள் நிறைந்த பண் நீடித்த இன்பத்தை வாரி வழங்கியது.அந்த சென்ன மல்லிகார்ஜீன தேவாவில் தலைவர் அரங்கையே தன்னிசையால் ஆண்டார். அதையே குறு நிரவல் ஆக்கினார் தலைவர். தேவா தேவா என்று தேவரை விளிக்க நானே பந்து என்று காந்தாரா போல் வந்தார் மல்லிகார்ஜீன தேவர் . தொடர்ந்து நிரவல் ஸ்வரம் அருமையாக பாய்ந்தது. நாராயணியை லேசில் விடுவதில்லை என்று சரிபமரி யென்று கல்பனாஸ்வரத்தை துவக்கினார் தலைவர். வரதர் சிரித்துக்கொண்டே சரிபமரியை வாசித்தார். சற்றே நிதானமாக ஸ்வரம் பாட அடுத்து என்ன என்பது எனக்கு தெரியும் என்று தயாரானார் நெய்வேலியார் , தலைவரின் கணக்கிற்கு அருமையான கோர்வை அடுத்து நிகழ்ந்தேரி மீண்டும் சென்ன மல்லிகார்ஜூனாவிற்கு வந்த அழகை என்ன சொல்வது. வரதரின் சரிபமரி சரவெடியாய் தொடர்ந்தது. மொத்தத்தில் இந்தபாடலை இத்தனை அழகாய் தலைவர் செய்வார் என்று யாரும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி தந்தது ,பெட்டத மேலோந்து.
5) சுசரித்ரா ஆலாபனை அடுத்து , 67வது மேளம் , அருமையாக அரங்கேறியது , தலைவர் முன்பு ஒரு முறை 74 மேளகர்த்தாவிலும் ராகாம் தானம் பல்லவி செய்யவேண்டும் என்று கூறியது நினைவுக்கு வந்தது. மகுடிக்கு மயங்கும் சர்பத்தைப்போல் சபை மயங்கியது தலைவரின் சுசரித்ராவில். என்னே ஆழமான ஆலாபனை , ராகத்தின் மொத்த ரூபத்தையும் அலசி ஆராய்ந்து முத்தெடுக்கிறார் நம் முத்தமிழர். அடுத்து வரதர் சுசரித்ராவை அதே ஆழத்தோடு அழகு மாறாமல் ஆலாபனை புரிய தலைவர் கோடீஸ்வர அய்யரின் வேலும் மயிலுமே பாடினார். எவ்வேளையும் வெல்லும் கூட்டணியான தலைவர் வரதர் நெய்வேலியார் கூட்டணி அருமையாக தந்தது பாடலை. சித்ர கவி நக்கீரனில் தலைவர் விளையாடினார் தமிழிலும் சுசரித்ரா இசையிலும். அருமையான வரிகளை அழகாய் இராகத்தில் ஈயைந்து பாடுவது தனித்திறன் , அதை மிக எளிமையாக செய்துகாட்டுவது தான் வித்வத். அந்த வித்வத்தின் விளைநிலம் சஞ்சய்.
6) மீண்டுமோர் அறிவிக்கப்படாத இன்பத்தாக்குதலை , மீண்டும் பகுதாரியில் தந்தார் தலைவர், இராமசாமி தூதன் நானடா , அருணாசல கவி பாடல் , இராம நாடகக் தொகுப்பு, அனுபல்லவி மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிபேசனும் மதைந்துநின்று தந்த நான் அல்லடா ,புறம்பே நின்று வந்தநான் அல்லடா அருமையிலும் அருமை. மீண்டும் இந்த பாடலை கேட்டு மகிழ்வு பெற்றோம். அந்த சீதையை விட்டு பிழையட திரும்ப திரும்ப நம் மனதில் ஓடியது , ஆனால் சூர்பணகை விட்டு இருந்தால் இதெல்லாம் நேர்திருக்குமோ என்று வினவினார் கோபாலகிருஷ்ணபாரதி , திருமலை கோபமாய் ஓய் நீர் என்ன பெரிய ராமசாமி தூதனா என்று மிரட்டினான்.
7) அடுத்த பாடல் சுத்த தன்யாஸி , இவர்போல் யார் தருவார் நீ யோசி என்று சிலேடை பேசினான் திருமலை பாட்டு ஹிமகிரிதனையே தெரியுமா என்று நக்கலடித்தார் கோபாலர். அதுவும் அப்படியா என்று என்னை முறைத்தான் திருமலை என்னும் ஆழ்வார்கடியான் நான் ஹி என்று இளித்தேன். தலைவர் ஹிமகிரிதனையே ஹேமலதேவை அருமையாக துவக்கினார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பண் , பார்வதி அன்னையை அழகாய் போற்றும் பண். பாசாங்குஷேசு என்று சரணத்தை தலைவர் எடுக்க , நெய்வேலியார் அருமையான லயத்தை தந்தார். சுருதி தாய் லயம் தந்தை என்று சும்மாவா சொன்னார்கள் என்றார் கோபாலகிருஷ்ண பாரதி , திருமலை முறைத்துவிட்டு ஓய் அது சுருதி மாதா லயம் பிதா என்றான். எல்லாம் ஓன்று தான் என சமாதானப்படுவதற்குள் தலைவர் ஹிமகிரியில் அருமையான நிரவல் ஸ்வரம் அமைத்தார். தொடர்ந்து பாப்பிசை ஆம் சஞ்சய் கல்பனாஸ்வரம் , எல்லையில் அடக்க இயலா மதயானை தலைவரின் கல்பனாஸ்வரம் , அது புறப்பட்டால் அதகளம் புரியும் , அதை வாசிக்கும் வல்லாண்மை நமது வரதருக்கும் நெய்வேலியாருக்குமே உண்டு , மீண்டும் ஏதோ சம்பவம் நிகழ இருப்பது போல் தோன்ற கவனித்து கேட்டோம். இசை சாம்ராஜ்யத்தின் சகலகலாவல்லவன் சஞ்சய் சுப்ரமணியன் இளமை இதோ இதோ வை கொண்டு வந்தார் . சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள் காட்டிய அந்த சலநாட்டை குறும்பு இன்னமும் நினைவில் உள்ளது , கச்சேரிக்கும் முன் சொன்ன விஷ் யூ ஆல் ஏ வெரி ஹாப்பி நியூ யியரை மீண்டும் ஸ்வரத்தில் கொண்டு வந்தார் தலைவர். என்னே திட்டமிடல் என்ன சமயோசிதம். அதான் சஞ்சய் !
8) அடுத்து ஹரிகாம்போதி , சஞ்சய் முத்திரை காம்போதி போல் ஹரிகாம்போதியும் மிக பிரபல்யம் , மதுரை மணி அய்யர் லேஹூக்கள் நிறைந்த ஆலாபனை தந்தார் தலைவர், ப்ருஹாக்களுக்கும் பஞ்சமில்லை ,ஹரிகாம்போதியில் ஆலாபனை செய்ய இனி மிச்சமில்லை என்ற நிலையில் ஆலாபனையை கட்டமைத்தார் தலைவர். வழமை போல் மேலே சென்று அநாயாசமாக ஆலாபனையில் நின்றார், அந்த மூச்சுப்பயிற்சி எல்லாம் நமக்கு சாத்தியமே இல்லை , அந்த ஹரிகாம்போதி மாமலையின் அடிவாரத்தையும் உச்சியையும் அழகாய் கடக்கிறார் , பின்தொடரமுடியாமல் நாம் மூச்சு இறைக்கிறோம். ஒரு தவம் போல் ஆலாபனை செய்ய இந்த மாமனிதரால் மட்டுமே முடியும். வரதர் ஆலாபனை அடுத்து , மாமலை ஏற்றமும் இறக்கமும் அருமையாக அமைந்தேறியது. கமல பதமலரினை மறவாதே மீண்டும் பாபநாசம் சிவன் பாடல் , அனுபல்லவியை ஆசை தீர பாடினார் தலைவர் அதிலும் பிறவாமை தரும் வரிகளில் தான் எத்தனை பக்தி. திருமால் மருகனே சரவண பவனேவில் தலைவர் நிரவல் அமைத்தார். திருமால் சரவணபவன் சிங்காரவேலரிடம் கூற மயிலையிலிருந்து அவர் மாட்சிமை தந்தார். நிரவலின் வெற்றி மிருதங்கத்தின் கணக்குகளில் சார்ந்தது என்பார்கள். தொய்வின்றி நிரவல் வேண்டுமெனில் அந்த கணக்குகளை இல்க்கணம் மாறாமல் தருவதலும் , சபையோர் ஈர்க்கும் வகையிலும் தருதல் வேண்டும் இரண்டிலும் வல்லவர் நம் தலையாட்டி சித்தர் , பிரமாதப்படுத்தினார். தொடர்ந்து வரதர் நிரவலும் அமர்களமாய் அரங்கேறியது. தலைவர் ஸ்வரத்தைத்துவக்கி பாடலுக்கு மேலும் மெருகு கூட்டினார். தலைவரின் நிரவல் ஸ்வரஜாலத்தைத் தொடர்ந்து கல்பனாஸ்வரம் இன்னும் பிரமாதமாக களைகட்டியது. வழமை போல் பதநி தந்தார் அவைக்கு , தா வில் தலைவர் தரமாய் விளையாடினார். அரங்கமே தலைவரிட் தாவிற்கு தலை வணங்கியது , தொடர்ந்து ஸ்பதஸ்வரம் தந்து வியத்தகு மெயினை மேன்மையாக்கி தனி துவக்கினார். நெய்வேலியார் தொப்பி வாசிப்பை தந்து பிராமதப்படுத்திவிட்டு , தன் வழமையான மின்னல் வாசிப்பைக் காட்டினார் தனியில். கமல பதமலரில் தலைவரின் விஸ்வரூபம் இன்னும் பல்லாண்டுகளுக்கு பேசப்படும்.
9) அடுத்து எங்கிருந்தோ வந்தது சுபபந்துவராளி சூறாவளி அரங்கையே பக்தியில் புரட்டிப்போட்டது என்னே கருணை நிறைந்த குறு ஆலாபனை குறுஆலாபனை , நாம் யாரை நினைவில் கொண்டு வரக்கூடாது , அந்த உண்மை நம்மால் தாங்கி கொள்ள முடியாது என்று நினைத்து இந்த பருவத்தில் அவர் பணி காரணமாக வெளிநாட்டில் இருக்கிறார் என்ற மனநிலையில் வருகிறோமோ அவரை நினைவு படுத்தியது தலைவர் ஆலாபனை. கண்களில் கண்ணீர் திரை கட்ட நல்லவேளையாக தலைவர் ஸ்ரீ சத்தியநாராயாணம் பாடினார் , தீட்சிதர் பண் , ரூபக தாளம் இரண்டாம் களை , வரிகளில் சர்வம் விஷ்ணுமயம் என்று பாட நமக்கு மீண்டும் நினைவுகள் நம்மையறியாமல் வந்தவிட்டது. தலைவர் வாணி மஹாலில் ஒரு நிமிட ராக மாலிகை ஸ்வரத்திற்கே சங்கர் நினைவிக்கு வர , புத்தாண்டில் அதுவும் முழுசுபபந்துவராளியில் வராமல் இருப்பாரா. ஆம் எங்கள் பித்தர்கள் ஒவ்வொருவர் கண்ணீரிலும் சங்கர் இருக்கிறார். ஏன் அந்த அரங்கில் கூட வந்தமர்ந்திருப்பார். காம்போதியிலும் , சுபபந்துவராளியிலும் , ஒருமையுடன் பாடலிலும் எங்கள் சங்கர் எங்கும் நிறைந்திருப்பார். தலைவர் சரணத்தை உணர்வுடன் பாட பாட நம்முடைய விம்மல் நீண்டது. பத்ரிநாத் சேத்திரத்து விஷ்ணுவை போற்றி தீட்சிதர் செய்த கிருதி இது. அஃதாவது வாமன ரூபத்தை போற்றும் பாடல். வடுவேஷாதாரியாக வந்து பலியிடம் நிலத்தை வானை அளந்த வரலாற்றை கூறும் பாடல். ஒரு வேளை சங்கர் சுப்ரமணியன் பலி சக்கரவர்த்தி போல் பிறருக்கு கிஞ்சித்தும் பாவம் எண்ணாமல் வாழ்ந்ததால் , அவரை பூவுலகில் வாழ விடாமால் சொர்கத்திற்கு இட்டுச்சென்றாரோ விஷ்ணு என்று தோன்றச்செய்தது பாடல்.
10) ஓஹோ காலமே பாடினார் தலைவர் , ஆம் மீண்டும் ஓர் அறிவிக்கப்படாத பண் , சஹானா , சுபபந்துவராளியின் இறுக்கத்தை சற்றே விடுவித்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல் இது , ஓஹோ காலமே உன்போல் எவர்க்கு உண்டு இந்ரஜாலமே என்று சரணத்தில் தலைவர் சஹானாவில் சாறலில் நம்மை நனைய வைத்தார். போகமாகவே அண்டப் பூவெல்லாம் மேய்வாய் பூனை போல் இருந்து நீ புலியைப்-போல் பாய்வாய் என்று அனுபல்லவியில் தலைவர் அளவளாவினார். ஆம் காலம் தான் எத்தனை ரூபமெடுக்கிறது என்று அகல கண்களை விரித்து பகர்ந்தான் திருமலை. கல்லைப்-போல் உடம்பையும் வில்லைப் போல் வளைப்பாய் என்று தலைவர் பாட திருமலை வளை உன் உடலை என்றார் கோபாலகிருஷ்ணபாரதி. கணம் தினம் அதிகாரம் ஆண்டெனக்கிளைப்பாய் வில்லைப்போல் வதனத்தை செல்லைப்போல் துளைப்பாய் வீங்கு அழகியர்க்குத் தேவாங்கு உரு விளைப்பாய் என்று தலைவர் நான்காம் சரணத்தை நயம் தெரிக்க பாடினார். நெய்வேலியார் மிருதங்கத்தில் ஓட்டப்பந்தயமே நடத்தினார். ஓஹோ காலமே ஆஹா ! ஓஹோ !
11) ராகம் தானம் பல்லவி சாரமதி , துவக்கமே இளைய நிலா போல் இருந்தது , நடபைரவியின் ஜன்யம் இந்த சாரமதி , தலைவர் கடந்த கச்சேரியில் நடபைரவியில் நடத்திய ஜாலங்கள் கண் முன் வந்து சென்றது. தலைவர் சாரமதியை அரங்கின் மேல் தொடுக்க , கட்டுண்டோம் அவரின் இசைக்கு , சாரமதி என்றால் நினைவுக்கு வருவது மஹாராஜபுரம் சந்தானம் , சந்தானம் போல் சாரமதியை செய்வார் இல்லை என்று தன் காலத்தில் ஆளுமை கண்டவர் என்றார் கோபாலர். சந்தானமே தலைவர் ஆலாபனை கேட்டு பிரமாதம் சஞ்சய் என்று பாராட்டியிருப்பார் , அப்படி அமைந்தது தலைவர் ஆலாபனை , எப்படி சொல்லி விளக்குவது உணர்வை , ஒரு பிரம்மாண்ட யாழ் ஒன்று பூமியிலிருந்து ஆகாசம் நோக்கி நீண்டிருக்க , அதை தலைவர் ஆகாசத்தில் பறந்து சென்று மீட்டுகிறார். ஒரு ராகத்தின் எல்லைக்குட்பட்டு அதில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டுவதில் முனைப்பு அதே நேரத்தில் சாரமதிக்கான இலக்கணத்திலிருந்து பிறழாமல் ஆலாபனை என்று இரண்டையும் , தலைவர் சமநிலைப்படுத்தி சமைத்தார். மீண்டும் ஆலாபனை முடிவில் இளையநிலா வந்து சென்றது. அடுத்து வரதரின் சாரமதி ரம்மியத்தின் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை அள்ளி அள்ளி தந்தார். என்னே வாசிப்பு என்னே குழைவு அடேயப்பா , சாரமதியை வரதர் போல் ரசிக்க ரசிக்க அளிப்பாரில்லை என்றே அறுதியிடலாம். தானம் சோதரர்களின் சாரமதி தானம் துவங்கிற்று , தானத்தின் துவக்கம் கொஞ்சியது , மெல்ல மெல்ல மிஞ்சியது , பின் வேகமெடுத்தது , பின் சீறியது , பின் விண்ணப்பிளந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பயணித்தது , இந்த தானத்தை வாசிப்பது போல் கடினமான காரியம் வேறில்லை , அதிலும் சஞ்சய் தானத்திற்கு வாசிக்க தனித்திறன் மீத்திறன் வேண்டும் அது வரதரிடம் நிரம்பி இருந்ததால் , பிரமாதமான தானத்தை தந்தார் தலைவருடன் இணைந்து. கந்தனை வந்தனை செய் மனமே , தந்தையை தாயாய் வந்தருளம் வரியில் பல்லவி அமைத்தார் , பாடலாசிரியர் ஒரு வேளை தலைவரோ , முதலில் வரதருடனும் பின் நெய்வேலியாருடனும் கணக்குகளை சரிபாரத்தால் தலைவர் , ஆடிட்டரின் கணக்கு சரிபார்த்தலை நாம் பார்த்தால் போதும் , அத்தனை மகிழ்வு பிறக்கும் , தொடர்ந்து ஸ்வரத்தை துவக்கினார் சாரமதியில் , என்னே அழகாய் எடுத்துச்சென்றார் அதை எத்தனை அழகாய் வரதர் வாசிக்க நெய்வேலியார் இருவருக்கு பிரமாதமான லயத்தைத் தந்தார். ராகமாலிகையில் முதலாவதாக கேதாரம் , தலைவர் ஒரு கச்சேரியிலாவது வந்தே மாதரம் பாடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ராகமாலிகையில் தந்தார் கேதாரத்தை. அழகு என்றால் கொள்ள அழகு தலைவரின் கேதாரம். வரதர் கேதாரத்தை ஜொலிக்க ஜொலிக்க வழங்கினார் வயலினில். அடுத்து கம்பீர சிம்மேந்திரமத்யமம் ஒரு சிம்மத்தைப் போல் அரங்கவலம் புரிந்தது. வரதர் சீரிய சிம்மேந்திரமத்யமத்தை வழங்கிட , நானொரு விளையாட்டு பிள்ளையா என்றார் தலைவர் அடுத்து , ஆம் நவரச கானடா அடுத்த ஸ்வரம் , கேட்பதற்கினிய இனிய நவரசகானடா , நவரசத்தையும் காட்டி ஸ்வரம் தந்தார் தலைவர். வரதர் அதை அதே ரசத்தோடு ரம்மியத்தையும் கூட்டு வாசித்தார், சஞ்சய் இசை தர்பாரில் அடுத்து தர்பார் ஸ்வரம் ஆண்டது. அடுத்து இந்துஸ்தானி என்று மட்டும் புரிந்தது , மெல்ல மெல்ல ராகத்தை கண்டு கொண்டோம் நாம் வாயைத்திறப்பதற்குள் தலைவர் இது பட்தீப் என்றார் , பாரில் உயர்ந்த நிலம் விருத்தம் பாடி , என் தாய் வாழ் என்னும் மந்திர நாதம் பட்தீப்பில் பாடியதெல்லாம் ஒரு பொற்காலம். பட்தீப்பின் ஒட்டுமொத்தத்தையும் பாடி தீருவது என்று உட்சபட்ச வேகத்தில் உச்சத்தில் நின்று படைத்தார் பட்தீப்பை. கைத்தட்டல் நிற்க சில விநாடிகள் ஆனது. தலைவருடன் இணைந்து வாசித்து வளம் சேர்த்து அதை மறு ஒலிபரப்பில் ஓளி பரப்பினார் வரதர். புத்தாண்டில் ஒரு பிரமாமான ராகம் தானம் பல்லவி தந்தனர் மும்மூர்த்திகள்.
12) ராதாப வுடன் பாடல் பட்டியல் நிறைவுற , தலைவர் புத்தாண்டில் வழமையாக பாடும் மாவல்ல காதம்மாவிற்கு கட்டியது கூறும் அம்மா யசோதா பாடினார் மாண்டில் , சின்ன பையனாயிற்றே என்று சந்தைக்கு இட்டுச்சென்றால் இவன் குறும்பு மாவல்ல காதம்மா என்கிறார் ஆசிரியர். எங்கள் சித்தூர் சுப்ரமணிய பிள்ளை பாடல் , இது அதிலும் அந்த மங்களாகிரோவில் தலைவர் மாண்டின் உச்சியில் அமர்ந்து பாடுவார். ஜாவளி வகையைச் சார்ந்த பாடல் இது , நாட்டியத்தில் அதிகம் பாடப்படும் , யதுகுல ரமணி கூட கோபாலடு செய்த சேட்டைகள் அடுக்குகிறார்கள் தாயிடம். இந்த பாடல் ஒவ்வொரு புத்தாண்டிலும் பாடுகிறார் தலைவர்.
13) அடுத்து இவரே ஒரு இடைவெளி விட்டுவிட்டு , கேப் விடறதுக்கே பயமா இருக்கு , என்று கூற ஒருவர் , ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம் என்று கூற ஆரம்பிங்கோ என்றார் தலைவர், அதற்காகவே காத்திருந்தார்போல் மன்னுபுகழ் , பாயும் ஒளி சௌந்தர்ராஜம் , துன்பம் நேர்கையில் , திருவளர் மயிலையின் என்று கேட்க தலைவர் எந்தரோ மஹானுபாவலு பாடலையான்னு கேட்டார், தலைவர் சீசன்ல பாடாத பாட்ட சொல்லுங்கோ என்று சொல்லி விட்டு மேலும் பல பாடல்கள் கோரப்பட மனமே கணமும் மறவாதே பன்ஸிவாலே , பணமே என்று பட்டியல் நீள தலைவர் கமாஸில் அகில சராசரா என்று விருத்தத்தை துவக்கினார். இந்த முறை போதும் போதும் என்ற நிலையில் பாபநாசம் சிவனை பாடுகிறார் தலைவர், திருவளர் மயிலையின் இறைவனின் அடி பணி பாடினார். அழகும் உருவும் எழுதரிய துரீயாதீத. ஜடதிமிர திவாகர மழு திரிசூலம் புலியதள் பூதி மயங் கெழில் வதந நிசாகர வரிகளுக்கெல்லாம் மிருதங்கம் வாசிக்க தனி தெம்பு வேண்டும் 3.30 மணி நேர கச்சேரிக்குப்பின் நெய்வேலியார் பிரமாதப்படுத்தினார். கபாலியே கபாலியே என்று தலைவர் கபாலியை 100 மீட்டரில் வைத்துக்க கொண்டு பாட புத்தாண்டில் கபாலி அருள் அனைவருக்கும் கிட்டிற்று.
14) கமாஸ் காதல் இன்னமும் தொடர என்னமோ வகையாய் வருகுது மானே பாடினார் தலைவர். கணம் கிருஷ்ணையர் பாடல் , தன் வழமையான அமர்ந்த நிலை நாட்டியத்தையும் அரங்கேற்றினார்.
15) அடுத்த விநாடி ஆச்சர்யம் அதானே சஞ்சய் , மூன்றாவது கமாஸ் , பருவத்தின் முதல் ஆண்டாள் பாசுரம் , கற்பூரம் நாருமோ கமலப்பூ நாருமோ பாடினார் அடுத்து. மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமுமில் துவக்கி அப்படியே கற்பூரம் நாருமோ சென்ற அழகு அருமை. உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே என்று தலைவர் அருமையாக சூடிக்கொடுத்த சுடர்கொடியின் பாவை பாடினார்.
16) ஓவ்வொரு பாட்டு முடியவும் , ஆதித்யா சஞ்சய் நூலைப்படி நூலைப்படி என்று கத்தினான் ஆனால் அவன் குரல் உப்பரிக்கையில் இருந்தவர்கே கேட்கவில்லை, தலைவர் தொடர்ந்து பாகேஸ்ரீயில் , முண்டாசுக்கவியின் தீர்த்த கரையினிலே என்று விருத்தம் பாடி , நின்னயே சகி என்று நினைக்கிறேனடி பாடினார். விருத்தத்தில் அந்த மார்பு துடிகக்குதடியில் தான் எத்தனை உருக்கம் அப்பப்பா இவர் போல் பாரதியை மோகித்து பாடுவார் இல்லை. பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயற் பின்னையே-நித்ய-கன்னியே, மாரனம் புகலென் மீது வாரி வாரி வீச நீ பாராயோ-வந்து சேராயோ வழமைபோல் பிரமாதமாக பாடப்பட்டது .நெய்வேலியார் அருமையான பின்புலம் அமைக்க ,வரதர் இழைந்து வாசித்தார் தலைவருடன்.
17) அடுத்து பெஹாக்கில் பெற்ற தாய் தனை என வள்ளலாரின் விருத்தத்தை பாடி , மனதை உருக்கினார் தலைவர். அடடா காம்போதியில் ஒரு சுலை காப்பியில் ஒரு சுவை பெஹாக்கில் ஒரு சுவை இந்த பெற்ற தாய் தனையில் , ஆடும் சிதம்பரமோ நீண்ட இடைவெளிக்குப்பின் பாடினார் தலைவர். ஒரு வழியாக கோபாலகிருஷ்ணபாரதியை பாடிவிட்டார் உன் பெஹாக்கும் பாடிவிட்டார் என்று திருமலை பகர நானும் கோபாலகிருஷ்ணபாரதியும் கைகுலுக்கிக்கொண்டோம். பாலகிருஷ்ணன் போற்றும் பனிமடி சடையினார் தாள மத்தளம் போட தா தை தித்தை என்று தலைவர் பாட தா தை என்று குதித்தாடினோம் ஆதித்யா அட்சயாவும் இணைந்தனர் , ஸ்ரீ தேவி முறைத்தாள் இல்லை முறைத்தார்.
18) அருணகிரிநாதர் இல்லாமல் புத்தாண்டு கச்சேரியா என தலைவர் ஜோன்புரியில் மாலசை கோபம் பாடினார். வயலூர் வேலனை அனைவரும் தலைவர் பாடல் வழியாக தரிசித்தோம். வீரா கடோர சூராரி யேசெ வேளே சுரேசர் ...... பெருமாளே என்று நம் சிங்கை சுரேஷ் அகமகிழ பாடினார் தலைவர்.
19) அடுத்து மங்களமா என்று நினைக்க தலைவரின் ஆதர்ஷ பாடகர் தஞ்சை கல்யாணராமனின் திர்பாரி கானடா தில்லானா பாடினார் ,திரத ஜனு தக்க தீம் என்று தலைவர் பாட பாட நாம் மெய்மறந்தோம் , ஆர்வக்கோளரில் தனஸ்ரீ என்று நிடைத்தோம் , அடிமை என்னை ஆதரித்த ஒரு மொழி கனிந்து என்று தலைவர் எஸ்கேஆர் வரிகளை பாட அந்த மேதையை எண்ணி வியந்தோம்.
20) மணி 1.28க்காட்ட தலைவர் , மனமே கணமும் மறவாதே ஜகதீசன் மலர் பதமே என பிம்பளாஸில் (ஆபேரி) பாபநாசம் சிவன் பாடலை பாடினார். நாமறிந்தவரை பாபநாசம் சிவன் ஆண்டுவிழாவிற்குப்பின் அதிக அளவில் இந்த கச்சேரியில் சிவனை பாபநாசம் சிவன் பாடலில் பாடினார் தலைவர். மொஹம் மூழ்கி பாழாகாதெய் மய வாழ்வு ஸதம என்று அறிவுரை கூறினார் தலைவர் . நாதன் நாமம் நீ பஜை என்றால் நாள் என்பார் யாரை கண்டாய் , ஆதலால் பவரோகம் ஒடுங்கிடவே என்று நம்மை எங்கோ கொண்டு சென்றார் , நடையும் தளர தேகம் ஒடுங்க நாவது குழற கண்கள் மல்க , என்ன செய்வாய் துணை யார் வருவார் உனக்கு என்று சரணத்தில் பிரமாதப்படுத்தினார். முன்பே சொன்னார் போல் பாடலின் பொருளுக்கு நேரெதிராக பாடலில் ஒரு துள்ளலைப் புகுத்துகிறார் தலைவர்.
21வது பாடலாக மங்களம் சௌராட்டிரத்தில் பாடி புத்தாண்டு கச்சேரியை நிறைவு செய்தார் , அனைவருக்குள்ளும் ஒரு புது நம்பிக்கையை புகுத்தினார், ஆம் இனியாவது பாடல் பட்டியல் அறிவிக்காமல் பாட வேண்டும் சஞ்சய் என்று திருமலையும் கோபாலரும் கோரஸாக கூற , அப்பா ஓட்டல் என்றனர் கோரஸாக ஆதித்யாவும் அட்சயாவும்.நான்கு மணிநேர கச்சேரி செய்வதென்பது ஏதோ விளையாட்டு சமாச்சாரம் அல்ல , எத்தனை உழைப்பு எத்தனை திட்டமிடல் அதையெல்லாம் விஞ்சி ஹூம் கேளுங்கோ பாடேறேன்னு சொல்ல எத்தனை வித்வத் இருக்க வேண்டும், இந்த பருவத்தில் தலைவர் வரதர் நெய்வேலியார் 10 கச்சேரிகளில் ரஸிகர்களை மகிழ்வித்துருக்கிறார்கள் , அத்தனை கச்சேரியிலும் இருவரும் பயணித்தது இதுவே முதல் முறை , இது கண்டிப்பாக தொடர வேண்டும் , ஆம் நாம் அனுபவத்தில் கூறுகிறோம் , தலைவர் எவ்வளவு மெனக்கெட்டு கச்சேரி தந்தாலும் அதை அதே அளவில் கூட வேண்டாம் சரிபாதி அளவிற்கு கூட முயற்சி செய்யாத பக்கவாத்தியங்கள் உண்டு . தலைவரின் தனித்திறமையால் அந்த கச்சேரியை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருப்பார். ஆனால் இந்த முறை அத்தனை கச்சேரியிலும் ஒரு சிறு பிசிறு கூட பிறழாமல் அதி அற்புதமாய் கச்சேரி அமைந்ததற்கு மிக முக்கிய காரணிகளாக நம் தலையாட்டிச்சித்தர் நெய்வேலி பலராமன் வெங்கடேஷூம் , வரதாழ்வார் எனும் வரதராஜன் சந்தானமும் அமைந்துள்ளார்கள் என்று பெருமிதத்தோடு தெரிவித்தார் கோபாலகிருஷ்ணபாரதி. அடுத்த தலைவர் கச்சேரிக்கு காத்திருப்போம். அதுவரை இந்ந சீனாக்காரர்கள் அமைதியாக இருந்தால் நலம் .
Comments