top of page
Search

மேடையில் மேதை சஞ்சய்ஸ்பியர்

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Nov 1, 2021
  • 10 min read

வாழ்கை என்பது , இருப்பதை அனுபவித்து உணராமல் , ஆகாயத்தில் கோட்டை கட்டும் பேராசை கனவு என்பதை இந்த கோவிட் அனைவருக்கும் உணர்த்தியிருக்கும் , நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2012இல் டிசம்பர் மாதம் என் இடது கால் எலும்பில் ஒரு சிறு முறிவு ஏற்பட்டது , ஆனால் அடுத்த 3 மாதங்களுக்கு இயல்பாக நடக்க இயலாத நிலை , அந்த மூன்று மாத காலமும் காலின் அருமை ஒவ்வொரு விநாடியும் நான் உணர்ந்தேன் . அதே போல் தலைவர் கச்சேரி என்ற ஒன்றின் அருமை இந்த 18 மாதங்கள் எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் , சர்வ சாதாரணமாக வருடத்தில் சென்னையில் ஒரு 18 கச்சேரி வெளியூரில் ஒரு 5 கச்சேரி என்று கேட்டு திளைத்த அந்த நாட்கள் மணக்கண் முன் அவ்வப்போது வந்து செல்லும் , அதிலும் கடந்த 2020 மாரகழியில் வீட்டில் அமர்ந்து ஆன்லைன் கச்சேரி கண்ட போது என்னையும் அறியாமல் ஒரு சோகம் கப்பிக்கொண்டது , ஒரு நேரடி கச்சேரி என்பது சங்கீதம் மாத்திரம் அல்ல , உடன் கச்சேரி கேட்கும் ரசிகர்கள் , டிக்கெட்டுக்கான பிரம்மப்பிரயத்தனங்கள் , அலுவலகத்திலிருந்து அடித்து பிடித்து வர்ணம் துவங்கும் முன் கச்சேரி அரங்கை அடைதல் , அங்குள்ள சிற்றுண்டி சாலை என்று பல்வேறு கூறுகளை கொண்டது ஒரு கச்சேரி , அதன் அருமை அது இல்லாத நேரத்தில் தான் நமக்கு உறுத்தியது.


காலம் இப்படி கடந்துவிடுமா இனி கச்சேரி கேட்கும் வாய்ப்பே கிட்டாத என்று எண்ணியிருந்த நேரத்தில் தலைவர் உன்குழாயில் , விரைவில் நேடி கச்சேரி என்று செவிக்கு தேனை பாய்ச்சினார் அந்த மகிழ்விலிருந்து மீள்வதற்குள் சனிக்கிழமை கச்சேரி என்று அறிவிப்பை வெளியிட , அடடா என்று அங்கலாய்த்தோம் , வீட்டிற்கு விருந்தினர் வரும் நாளில் எப்படி கச்சேரிக்கு செல்வது என்ற தர்மசங்கடம் , ஒருவழியாக விருந்தினர் வருகை ரத்தானது , ''அப்போ நீங்க வரலையான்னு '' உள்ளம் எங்கும் சந்தோஷத்தோடு உதட்டில் சோகம் காட்டி நடித்துவிட்டு , மிக குறைநத அளவிலான ரசிகர்களேயே அவை அனுமதிக்கும் என்பதால் ஆன்லைனில் அரக்கப்பரக்க டிக்கெட்டை புக் செய்தோம் , நல்ல வேளை அறிவித்த ஒரிரு மணிநேரத்தில் அத்தனையும் விற்று தீர்ந்தது இதில் விந்தை இல்லை , சங்கீத உலகின் சூப்பர் ஸ்டார் கச்சேரி 18 மாதங்களுக்குப் பின் என்றால் ரசிகர் கூட்டம் அலைமோதாதா , ஒரு வேளை நேரு அரங்கில் வைத்திருந்தாலும் அத்தனை டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்திருக்கும் அத்தனை இசை தாகத்தில் சென்னை தத்தளிக்கிறது.


டிக்கெட் புக் செய்துவிட்டு கச்சேரி செல்லும் வரை ஆராதிகே பாடலில் https://www.youtube.com/watch?v=dAezp422I_A வரும் சோபின் சாஹீர் போல் வீட்டிலும் வெளியிலும் இளித்துக்கொண்டு திரிந்தேன் , கச்சேரிக்கு முன் நாள் இரவு போல் ஓர் வரம் ஏதுமில்லை , இதற்கு முன் கனவில் ஒரு பத்து பனிரெண்டு கச்சேரி கேட்டிருந்தாலும் , அது கனவு என்று விழிப்புணர்வு ஏற்பட்டு சோகமே உருவாய் எத்தனையோ காலைகள் விடிந்திருந்தாலும் , சனிக்கிழமை மிக அருமையான விடியலாக அமைந்தது , வழக்கம் போல் சீக்கிரம் சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டு மிகச்சரியாக தாமதமாக கிளம்பினோம் , நெல்சன் மாணிக்கம் சாலையில் துவங்கிய போக்குவரத்து நெரிசல் செனடாப் சாலை வரை தொடர , சரிதான் இன்னைக்கு பல்லாண்டு நமக்கு பகல்கனவு என்று நினைத்தோம் எப்படியோ வரு வழியாக 6.10க்கு அரங்கு வளாகத்தை அடைந்தோம் , என் வாழ்வில் முதல் முறையாக இருவர் மட்டுமே செல்லும் மினதூக்கியில் இரண்டாம் தளம் வரை பயணித்து பின் மூன்றாம் தளம் சென்றால் வரவேற்பு அறையில் மிக அருமையான புகைப்படங்கள் நம்மை எங்கோ கொண்டு சென்றது , அதை கடந்து நான்கைந்து படிகள் ஏறி அரங்கில் நுழைந்தால் , சட்டென்று நம்மை கல்லூரி நாட்களில் திருநின்றாவூர் பட்டாபிராம் போன்ற புண்ணிய சேத்திரங்களில் நாம் கண்ட டூரிங் டாக்கீஸ் நினைவுக்கு வந்தது , பித்தர் குழாமின் சக பித்தர்கள் வஸந்தி அக்கா , சுந்தரா , ஜனா , நீலா மாமி என பரிச்சயமான முகங்கள் ஆஹா இவர்களையெல்லாம் கண்டு எத்தனை மாதங்கள் ஆயிற்று என்று அளவளாவி அமரந்தோம் , அதிகபட்சம் 75 நபர்களை தன்னுள் அடக்கிட வல்லது அரங்கு , அது ஒரு கருப்பு பெட்டி , மேலே பால்கனி உண்டு ஆனால் நமக்கு அனுமதியில்லை , மேடையை நோக்கி விளக்குகள் மத்தியில் சில விளக்குகள் மற்றபடி இருட்டறைதான் சரியாக கச்சேரி துவங்க 5 நிமிடங்கள் இருக்க இரண்டு பரிச்சயமான உருவங்கள் நுழைந்து அங்குமிங்கும் பார்த்துவிட்டு என்ன நோக்கி வந்து வழக்கம் போல் இடமும் வலமும் அமர்ந்து உறுமினார்கள் , ஆம் 18 மாதங்கள் கோரோனா புண்ணியத்தில் இவர்கள் இம்சையிலிருந்து தப்பித்திருந்தோம் இனி தப்பவே முடியாது என்று என் தலையில் குட்டினான் திருமலை , எடுத்தவுடன் எதற்கு குட்டுகிறாய் என்று என் முதுகில் தட்டினார் கோபாலகிருஷ்ணபாரதி . நான் சுதாரித்துக் கொண்டே சைவ வைணவ சிகாமணிகளே உங்களின் தொல்லைக்கு முடிவு கட்டத்தான் தலைவர் பாடல் பட்டியலை முதலிலேயே வெளியிட்டு விட்டாரே என்று கூறிவிட்டு நகைத்தேன் அவர்கள் முறைத்தார்கள் அதுவும் அப்படியா என்ன பாடல் என்று கேட்க பாடுவார் பொறுங்கள் என்று காத்திருந்தனே திரை விலக .


6.30 மணிக்கு விலகியது திரை மாத்திரமல்ல , கோவிட் கொடுமைகளும் தம் அனைவரின் இசை தாகமும் தான் , எங்கும் கருப்பாய் இருந்தாலும் மேடையில் வெண்மை மயம் , ரேதஸ் , ராகுல் , வரதர் , நெய்வேலியார் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு நடுநாயகமாய் அமர்ந்திருந்த நம் இசைப்பேராசான் , சங்கீத சாம்ராட் , இசையால் நம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் மகோன்னத இசை சலைஞர் சஞ்சய் சுப்ரமனியன் தன் வழக்கமான மந்தகாச புன்னகையுடன் காட்சி தந்தார் , அடடா இந்த காட்சியை காண கண்கோடு போதாது.அவையில் இருந்ததோ 75பேர் ஆனால் 750 பேர் கரவொலியை ஏற்படுத்தி எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திட , அதை கண்டு தலைவர் ரசித்தார் , வரதருக்கும் , நெய்வேலியாருக்கும் பரமானந்தம். கருப்பு அரங்கில் இந்த வெள்ளை நாயகர்கள் அடுத்த 2.30 மணிநேரம் வண்ணமயான இசையை அளிக்கத்தயாரானார்கள். கேட்க நாம் காதுகளை தீட்டிக்கொண்டோம். தலைவர் இசையின் மிகவும் முக்கியமான கூறு அடுத்த விநாடி ஆச்சர்யம் , பாடல் பட்டியல் வெளியிடப்பட்டதால் நமக்கு உள்ளூற வருத்தம் இருந்தாலும் பாடல் பட்டியல் மனதை கொள்ளை கொள்ளச்செய்தது , ஆம் நாட்டையில் பல்லாண்டு ஆனந்த பைரவி பூமேல் வளரும் அன்னையே , கல்யாணி , நீலாம்பரி ஆனந்தவல்லி , ராகம் தானம் பல்லவி காபி ஆமாம் ஒரு காலத்தில் நாம் பிரம்ம சபையில் காட்டு கத்து கத்தி வாங்கிய 1 நிமிட காப்பி இப்போது முழு நீள ராதாபவாக , துர்கா கண்டேனா , சீர்வளர் பசுந்தோகை மயிலான், நம் தேனாம்ரித பெஹாக்கில் ஆடும் சிதம்பரமே என பாடல்கள் அத்தனையும் நமது என்றும் விரும்பும் பட்டியல் பாடல்கள் , மிஸ்ர மாண்டில் அம்மா யசோதா ஒன்றே நாம் இதுவரை கேட்டில்லாத ஒன்று. பாடல் பட்டியல் கண்டது முதல் மகேஷிண்ட பிரதீகாரம் பட பாடல் மௌனங்கள் மிண்டுமோரி நேரத்துவில் வரும் எந்தன் நெஞ்சம் நீலாகாசம் போல்நெஞ்சம் ஒன்பதாவது மேகத்தில் இருந்தது (ஹி ஹி 18 மாதங்களாக தொடர்ந்து மலையாள படமாய் அமேசான் பிரமைல் பார்த்து வருவதால் கொறச்ச மலையாள நெடி ) .பாடல் பட்டியல் தெரிந்த நிமிடம் முதல் ஆழ்வார்கடியான் முகம் பல்பில்லாமலேயே பிரகாசிக்க என்ன ஓரே வைணவமாய் இருக்கிறது என்று உறுமினார் கோபாலர் , இதற்குள் தலைவர் கச்சேரியைத்துவக்கினார். மார்ச்சு 1ஆம் தேதி 2020இல் கச்சேரி கேட்டுவிட்டு மீண்டும் ஒரு கச்சேரி துவக்கத்திற்கு 18 மாதங்கள் காத்திருப்போம் என்று கனவிலும் எதிர்பாராத நமக்கு , பல்வேறு கனவு கச்சேரிகள் கண்ட நமக்கு தலைவர் உண்மையில் பாடுகிறார் என்ற உணர்வு ஒரு விம்மலை தர தவறவில்லை. தலைவர் இசை அரங்கள் அடுத்த 150 நிமிடங்களுக்கு கட்டிப்போட தவறவில்லை.



1) தமிழ்நாட்டின் தலைநகரில் ஆழ்வார்பேட்டையில் நாட்டையில் பொங்கு தமிழில் தலைவர் துவக்கினார் பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியை , அந்த வில்லிபுத்தூர் விட்டு சித்தனில் வழக்கம்போல் தன் சித்துக்களை காட்டினார் , நமோ நாராயாண என்று தலைவர் ஒலிக்க நமக்கு சிலிர்த்தது , பல்லாண்டு பல்லாண்டு இவர் இப்படி பாடவேண்டும் என்று அரங்கத்து மாமா மாமிகள் வாழ்த்த , பெரியாழ்வாரின் திராவிட வேதம் அரங்கெங்கும் ஒலித்து , வரதரும் நெய்வேலியாரும் மெல்ல பாடலில் நுழைந்து தலைவரோடு பயணித்தனர் , மல்லாண்ட தின்தோள் மணிவண்ணாவில் தலைவர் உச்சத் செல்ல தலையாட்டி சித்தர் அமர்களப்படுத்தினார் , திருமலை வழக்கம் போல் கோபலரை பார்த்தவாரே ஆனந்தக்கூத்தாடினான் , அடியோமோடு என்று தலைவர் தெள்ளுதமிழில் அரங்கை அசத்திக்கொண்டிருந்தார் , இந்த பல்லாண்டு பாடலில் மிருதங்கத்தின் பங்களிப்பு மிக அதிகம் அதை ஒவ்வொரு முறையும் பிரமாதமாக செய்கிறார் நம் தலையாட்டியார் , பாசசன்னியமும் பல்லாண்டு தலைவர் பாட பல்லாண்டு முடிவுக்கு வருகிறது என்று அனைவரும் எண்ணியிருக்க அடுத்த விநாடி ஆச்சர்ய அசுரர் தலைவர் சரிபமக பல்லாண்டு என்று ஸ்வரத்தைத் துவக்கினார் , நெய்வேலியார் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தொடர்ந்தார் , ஸ்வரத்தில் வரதர் இதோ வந்துட்டேன் என்று அநாயசமாக வாசித்தார் , ஸ்வரசரவெடி அடுத்த மூன்று நிமிடங்கள் அரங்களை மிரள வைத்தது , தலைவர் பாப் இசையும் வந்து மிரட்டியது நம்மை , ரிரிரீ ரிரிரீ என்று தலைவர் பாட அதை அப்படியே வரதர் வாசிக்க என்று ஓரே குதூகலம் கோலோச்சியது இவர்கள் மூவர் இசைக்கு ஈடேது என்பது மீண்டும் நிரூபித்தனர். ஸ்வரம் உச்சம் செல்ல செல்ல அரங்கின் அனைவருக்கு வியர்த்தது , பல்லாண்டு என்று அவர் முடிக்க நமக்கு மூச்சு வாங்கியது , நெய்வேலியாரின் பிரத்யேக முடிப்புடன் கச்சேரியின் முதல் பண் அருமையாய் அரங்கேறியது .



2) ஆனந்தத்தில் திளைத்திருந்த நமக்கு பேரானந்தம் தர ஆனந்தபைரவியில் ஆலாபனை துவக்கினார் தலைவர் , தேனை பிழிந்த ஆனாந்த பைரவி ஆனந்தமாய் அரங்கில் வலம் வந்தாள் , கருப்பு பெட்டியில் கருப்பட்டியாய் இனித்தது ஆனந்த பைரவி மிக மிக குறுகிய ஆலாபனையை வரதர் தன் வயலினில் தேனொழுக வாசித்தார் , பூ மேல் வளரும் அன்னையே ஒளி பொருந்தும் என்ற மழவை சிதம்பர பாரதி பாடலை தலைவர் பாடினார் , தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னை அகமகிழ்ந்தாள் , ஆஹா காமேவும் மலரினில் தேமேவும் சுரைநகர் வரிகளில் தான் எத்தனை நளினம் , மானே சொக்கேசர் பங்கில் தானே

வளரும் கிருபைவானே மாமுகன் மயிலின் முருகோனே தாயென்ன வளர்மீனேர் விழியே உன்னை நானே மிக வணங்கினேனே சிதம்பரம் சொல் தேனே அடடா என்ன அருமையான வரிகள் அதை எத்தனை அருமயாக பாட்கிறார் தலைவர் என்று மகிழ்ந்தார் கோபாலகிருஷ்ணபாரதி. வாணி புவி மகிழ் சர்வாணி மதுரமலர் வேணி மங்சுள வசன சுகபாணி நித்யகல்யாணி ஐந்தொழிலும் த்ராணி பெரும் சுந்தர ராணி வேதாகமப் புராணி அனுதினமும் வரிகளில் , சுந்தர ராணி வரிகளுக்க நம் சுந்தராவை கண்டு புன்னகைத்தோம் . தாயே த்ரிவித குணமாயே மலையரசன் சேயே சந்ததம் எனக்கருள் செய்வாயே

அனைத்தும் நீயே வஞ்சர் மனம் புகாயே தெரிந்திடாயே நாயேன் செய்பிழை பொறுப்பாயே அன்பர் இதயப் பூ மேல் வளரும் என்று மூன்று சரணங்களையும் பாடி தலைவர் பிரமாதப்படுத்தினார் , என்னே உச்சரிப்பு என்ன இசையாளுமை . கமலப்பூமேல் இதயப்பூமேல் என்று கடையில் ஒரு நகாசு வேலை காட்டி பாடலை முடித்தார்.


3) தலைவர் அடுத்து துவக்கியது ராகங்களின் ராணி கல்யாணி , அடடா இந்த ராகத்திற்குத்தான் எத்துனை கிறக்கும் சக்தி உள்ளது , கேட்போரை ஒரு நிமிடத்தில் தன வயப்படுத்தும் ஆற்றல் உள்ள ராகம் அதை நம் ஆற்றலூற்று ஆலாபனை செய்தால் சொல்லவும் வேண்டுமோ அரங்கில் இருந்தோர் அத்தனை பேரும் அப்படியே கட்டுண்டனர் இவரின் பேரிசைக்கு . மெல்ல மெல்ல ராகத்தின் ஊடே புகுந்து நமக்கு அதன் பரிமாணங்கள் காட்டினார் தலைவர் , வரதரும் மிக கவனமாக பின்தொடர்ந்தார் . கல்யாணி பிரவாகம் மெல்ல மெல்ல அரங்கில் தவழ்ந்தது , தண்ணீர் வெள்ளமாய் பாயும் போது ஆங்காங்கே ஒரு சிறிய சுழல் உண்டாகும் , அந்த சுழலில் சிக்கிய மலர்கள் சுழலுக்கு ஏற்ப சுழலும் அப்படி சுழன்றோம் நாம் தலைவர் கல்யாணியில் . நா நா என்று நாவுக்கரசர் கல்யாணியில் நம்மை முக்கி முக்கி எடுத்தார். இப்படி விஸ்தாரமாய் கல்யாணி ஆலாபனை கேட்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ணி மகிழ்ந்தோம்.மெல்ல மெல்ல துரிதமாக ஆலாபனையை ஆக்கிக்கொண்டார் தலைவர் , வழக்கம் போல் அவரின் சிரசு 360 கோணத்தில் சுழன்றது , உச்சம் சென்று கல்யாணியை அவையோருக்கு உயர்த்திக்காட்டினார். 12 நிமிடம் மிக அருமையான கல்யாணியை அவை கேட்டு மகிழ்வின் உச்சாணிக் கொம்பில் ஏறியது. அடுத்து வரதகல்யாணி , அண்ணன் எவ்வழியோ தம்பி தங்க கம்பி மீட்டிகாட்டினார் கல்யாணியை , அண்ணனின் சுழலில் இம்மியும் குறையாது இருந்தது வரதுவின் கல்யாணி , பல்புக்கெல்லாம் இடமளிக்காமல் தலைவர் பஜன சேயவே மனஸா பாடினார் , தியாகராஜர் கிருதி , ஆம் இராமபுராணம் தான் . அனுபல்லவியை அளவளாவி விட்டு சரணத்திற்கு வந்தார் தலைவர் முக்தி மார்கமு தெலியனி வாடா தாரகவில் நிரவல் அமைத்தார் , ஆஹா இன்றைக்கு கல்யாணியை ஒரு பிடிபிடிப்பார் என்பது உறுதியானது. வரதரும் மிக அருமையான நிரவல் வாசிக்க இருவருக்கும் தலையாட்டியார் அருமையான தாளத்தை தந்தார். தொடர்ந்து நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர். அடுத்தடுத்து சுற்றுகளில் தலைவரின் தனித்துவமான கல்பனாஸ்வரங்களை வரிசையாக களமிறக்கி நம்மை கிறங்கடித்தார். இந்த மூவர் கூட்டணியின் ஒத்திசைவிற்கு ஈடு இணையில்லை , என்னமாய் ஒரு சேர இயங்குகிறார்கள். கல்யாணி பஜன சேயவே நம்மை எங்கேயோ கொண்டு சென்றது.


4) ஆலாபனை நீலாம்பரி , ஆம் நாம் எப்போதும் கூறும் உவமை , நீலாம்பரி என்னும் அம்பாரியில் வைத்து நம்மை தாலாட்டினார் தலைவர் , அரங்கின் கருமைக்கும் நிசப்தத்திற்கும் நீலாம்பரி மிக மிக பொருத்தமாய் அமைந்தது , அரங்கே தலைவரின் நீலாம்பரியில் உருகியது . சிறிய ஆலாபனை என்றாலும் அதை நம்முள் மிகப்பெரிய பாதிப்பை தந்தது , தொடர்ந்து வரதரின் வகையான நீலாம்பரி கேட்டுவிட்டு , பாடலுக்கு காத்திருந்தோம், ஸ்வாதி மாமன்னரின் ஆனந்தவல்லி ஆனந்தமாய் அரங்கிற்குள் வந்தாள் , அந்த வல்லியில் தான் எத்தனை கிறக்கம் . தீன ஜனாப சந்தாப திமிராம்ருத வரிகளில் அப்படியே கரைந்து போனது அவை. அனுபல்லவியிலேயே ஸ்வரத்தை துவக்கி நம் கிறக்கத்தை அதிகரித்தார் தலைவர் . தலைவரின் ஸ்வரம் எப்படி இருந்ததென்றால் தேன் கூட்டில் தேனீக்களை சேகரித்த தேனை அடை அடையாக எடுத்து பிழிந்து தருவது போல் தந்தார், தேனுண்ட மந்தியாய் நாம் மயங்க எத்தனிக்க தலைவர் ஸ்வரத்தில் வேகம் கூட்டினார் , விறுவிறுப்பாய் அரங்கேறியது நீலாம்பரி அம்பாரி பயணம் , அந்த நெய்வேலியாரின் இடக்கை வாசிப்பை அப்பப்பா என்ன சொல்வது. இதற்குள் தலைவர் சரணத்தில் ஜம்பவிமத முகசேவித பநயுகளே கிரிராஜசுதே பாடி நம்மை மேலும் பரவசப்படுத்தினார் , மீண்டும் ஸ்வரம் மீண்டும் நம்மை இன்பதாக்கு தாக்க வந்தது , ஜம்புவதனவில் வந்த ஸ்வரங்கள் நாமுக்கு கிடைப்பதற்கரிய வரங்கள் . சும்மாவே வரதர் தேனை குழைப்பதில் கில்லாடி அதிலும் நீலாம்பரி என்றால் விடுவாரா , தேன் சொட்ட சொட்ட ஸ்வரம் வாசித்தார். நாதமுனி நம் நெய்வேலியார் மிக மிக உன்னதமான ஒரு தாளக்கட்டை தந்தார் பாடல் முழுதிலும். ஸ்வரங்கள் மெல்ல மெல்ல துரிதமாய் ஒரு தேன் வெள்ளத்தை உருவாக்கி பிரவாகமாய் வந்து விழந்திட தலைவர் அதை உச்சபட்ச வேகத்தில் செலுத்தி தனிக்கு வித்திட்டார். நந்தி தேவருக்குப்பின் மிருதங்க வாத்தியத்தை ஆகச்சிறந்த முறையில் கையாளும் நம் தலையாட்டி சித்தர் மிக மிக சிறிய தனி தந்தாலும் தனித்துவத்தோடு வாசித்தார் , தலைவரிடமிருந்து பலே பலே வாங்கிவண்ணம் இருந்தார் , ஒரு ஒரு பலேவுக்கும் உத்வேகம் கூடிக்கொண்டே வந்தது , எதிரில் வரது சன்னமான குரலில் பலே பலே என்று உற்சாகப்படுத்த , தலையாட்டியார் தலை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றது , விரல்களோ அதற்கு பன் மடங்கு வேகத்தில் இயங்கியது , அந்த இடை இடையே வெளிப்பட்ட நாதம் அப்பப்பா பிரமாதம்.என்னே இவரின் வித்வத் என்னே இவரின் மேதைமை. மீண்டும் ஆயிரம் பேர் கரவொலியை அங்கிருந்து 75 பேர் தந்தோம்.ஒரு மிக விறுவிறுப்பான சுறுசுறுப்பான தனி முடிவுக்கு வர தலைவர் ஸம்பு வதனவில் மீண்டும் துவக்கி சரணத்தை முடித்தார். கல்யாணிதான் மெயின் என்று எண்ணியிருந்த அவைக்கும நீலாம்பரியை பிரதானியாக்கினார் தலைவர்.


5) அன்றைய மாலையின் மிக முக்கிய தருணம் தலைவரின் ரா தா ப தருணம் , நீண்ட இடைவெளிக்குப்பின் நேரடி ராதாப அதிலும் காப்பி , அடேயப்பா இந்த காப்பிக்குத்தான் எத்தனை வசீகரம் , கேட்போரை மீண்டும் மீண்டு கேட்க தூண்டுகிறது , தலைவரின் தூண்டுதல் அத்தகையது , இருக்கும் ராகத்திலேயே வார்த்தை போல் வெளிப்படும் ராகங்கள் இந்த காப்பியும் மாண்டும் , சொற்கள் வந்து விழுவது போல் தலைவர் காப்பியை நமக்கு ரஸமாய் வழங்கினா ரஸித்து புசித்தோம் . தலைவரின் டிரேட் மார்க் காப்பி என்பது தலைவரை பன்முறை கேட்டோர் பகர்வர் , அதிலும் பிரம்ம கான சபையில் ஒரு முறை பாடிய காப்பி போல் இதையும் மிகப்பிரமாதமாய் செய்தார் , இந்த ஆலாபனையெல்லாம் அந்த கருப்பு பெடிக்கும் பின்புலத்தில் இருந்த விள்ககுகளுக்கும் புதிது. தலைவர் காப்பியில் கரைய கரைய ஆலாபனை புரிய ஒரு கணம் விளக்குகலெல்லாம் எரிவது போல் நமக்கு தோன்றியது , அன்றைய மாலையின் நான்காவது மற்றும் நிறைவு ஆலாபனை நம்மை திக்குமுக்காடச் செய்தது , வழக்கம் போல் வரதரோடு ஜாலம் செய்ய துவங்கினார் தலைவர் , வரதரும் மந்தகாச புன்னகையோடு தொடர்ந்தார் தலைவரை , கும்பகோடம் ஒரிஜினல் டிகிரி காப்பி தரமாய் அவைக்கு வழங்கப்பட , மெல்ல மெல்ல அரங்கு காப்பியில் தன்னை தொலைத்தது , நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பார்கவி பதிவேற்றம் சரிவர நடக்கிறதா என்று ஆரம்பம் முதல் பரபரப்பாய் இருந்தாலும் இந்த காப்பியில் சற்று நேரம் தன்னை மறந்து கேட்டார். எல்லா மொழிகளும் சிறந்தவை என்றாலும் தமிழ் செம்மொழி அது போல் எத்தனையோ காப்பி கேட்டாலும் சஞ்சய் காப்பிக்கேது ஈடு , அதிலும் அந்த கடையில் தலைவரின் முத்தாய்ப்பு வார்த்தை விவரிப்பிற்கு அப்பாற்பட்டது.மீண்டும் ஒரு 12 நிமிட ஆலாபனை முடித்து வரதருக்கு வழங்கினார் தலைவர் , வரதகாபி வற்றாது காப்பி என்று தெரியும் ஆரம்பம் முதலே தலைவரின் முத்திரைகளை கோடிட்டு காட்டியவாறு பயணித்தார் வரதநாயனார். அடாடா அதே நெளிவு சுளிவு உணர்ச்சி குவியல்கள் என அனைத்தும் கல்ந்த காப்பி தந்தார் வரதர். தலைவர் காப்பி தானத்தை துவக்கினார் , முதல் இரண்டு சுற்றுக்கள் நம்மை தானத்தில் முத்தெடுக்க தயார்படுத்தியது. அடுத்தடுத்த சுற்றுக்கள் வழக்கம் போல் மின்னல் வெட்டுக்கள் தீ ஜுவாலைகள் , அனல் கக்கும் சுட சுட காப்பி , என்னுடைய 43ஆம் வயதிலும் இந்த பில்டரின் அடிப்பக்கதை சூட்டோடு பிடி துணி இருந்தாலும் திறக்க முடியவில்லை அப்படி ஒரு சூடு , ஆனால் தலைவர் இந்த சூடான காப்பி தானத்தை எப்படி அசாத்தியமாக அளிக்கிறோரோ , உத்தன உத்தன உத்தன என்று தானம் என்னும் காப்பி பானம் அவைக்கு தலைவரால் வழங்கப்பட்டு அனைவராலும் சுவாசிக்கப்பட்டு மூச்சு காற்றிலேயே புகை வர , நிதானமாய் தானத்தை முடித்தார். பல்லவி பாரதியோ அல்லது தாசனோ என்று என்ன அன்றைய தினத்தின் அரும்பெரும் பல்பை தந்தார். சமயோசிதம் என்பது சஞ்சய் சுப்ரமணியனுக்கு அந்த இறையருளால் வழங்கப்பட்ட மாபெரும் வரம் , அதை சரியாக இடம் பொருள் காலம் அறிந்து பயன்படுத்துவதில் அவருக்கு ஏது இணை , பல்லவி வரி என்ன தெரியுமா '' உலகமே ஒரு மேடை அதில் ஆடுபவர் நாமே '' ஆம் மேடை அரங்கில் தலைவரின் பல்லவி இப்படி அமைக்க இவரால் மட்டுமே இயலும். அது மட்டுமல்ல இதன் பரிமாணம் , இந்த 18 மாத கோவிட்டை ஒன்றரையடியில் தலைவர் பல்லவி மூலம் நமக்கு தெரிவிக்கிறார் , கோவிடால் இந்த ஒட்டு மொத்த உலகமும் ஒரு புள்ளியில் கொண்டு வரப்பட்டது , வெறிச்சோடிய நகரங்கள் , சாலைகள் , வீட்டில் முடங்கிய மக்கள் என உலகமே ஒரு கோவிட் மேடையாய் மாறி அதில் நாம் ஆடினோம் , ஆடிக்கொண்டிருக்கிறோம் . இதற்குள் தலைவர் நெய்வேலியாரிடம் வழக்கமான கணக்குகளை தரத்துவங்கினார் , 5 விநாடி உலகமே ஒரு மேடை , 3 விநாடி உலகமே ஒரு மேடை ஒரு விநாடி பின் அரை விநாடியில் பாடிட அத்தனைக்கு ஈடு தந்து வாசித்தார் தலையாட்டியார். வரதரின் மேடையும் வசீகரித்தது நம்மை , இந்த மூன்று மேதைகளும் மேடையின் மேடையில் தங்கள் மேதன்மையை காண்பித்தனர். தலைவர் ஸ்வரத்தை துவக்கினார் உலகமே ஒரு மேடையில் , காபி ஸ்வரம் நம் காதில பாயந்தது , முழு உலகமே ஒரு மேடை என்று தலைவர் பாட அனைத்துதலைகளும் ஆமோதித்தன , காப்பி ஸ்வரங்கள் கோர்வையாக அணிவகுப்பை நடத்தின , தலைவர் என்ன தவம் செய்தனை பாட விட்டாலும் இந்த ஸ்வரங்களின் போது அதன் சாயல் வந்து சென்றது போல் இருந்தது. ராகமாலிகை ஸ்வரம் துவக்கினார் தலைவர் முதலில் நம் காதிற்கு இதம் சேர்க்கும் சஹானா அடடா இதன் ஈடு இணையற்ற விற்பன்னர் இவர்தாம் , வந்தனமு ரகுநந்தனாவை அப்படியே மணக்கண்ணில் கொண்டு வந்து நம்மை விம்ம வைத்தார். வரதரின் சஹானா சாறல் தொடர்ந்தது , தலைவர் பல்லாண்டு பாடும் போதே அரங்கை ஸ்கேன் செய்துவிட்டார் போலும் , நமக்கு ராகம் கண்டுபிடித்து சொல்லும் முக்கிய வல்லுநர்கள் அரங்கில் இல்லாததால் , நானே கண்டு கொள்ளும் ராகமாக பாடினார் ஆம் அடுத்தது ஹமீர் கல்யாணி இந்துஸ்தானியும் மேற்கத்திய இசையையும் கல்ந்தளித்தார் ஸ்வரத்தில் , மெல்ல மெல்ல கராணா இசைக்கு சென்றார் , அடேயப்பா ஒரு ராகமாலிகை ஸ்வரத்திற்கு எத்தனை மெனக்கெடுகிறார் தலைவர். வரதரும் சளைக்காமல் வாசித்தார் ஹமீரை , எடுத்த எடுப்பிலேயே சிந்து பைரவி நெடியோடு ஸ்வரம் வந்து நம்மை ஸர்பமாக்கி மகுடிக்கு மயங்கி ஆடினோம் , தலைவர் மனோரம்மா ஆச்சியை மிக மிக அழகாக காட்டினார். கமாஸ்போது ஆடும் அமர்ந்த நிலை நடனத்தை ஆடினார் தலைவர் , ஏக குஷியில் இருந்தார் என்பதை நமக்கு நன்றாக தெரிந்தது. வரதர் சிந்துபைரவி சிந்துநதியாக பாய்ந்தது அதே தலைவர் சாயல் அதே தலைவர் நக்கல் நையாண்டி எல்லாம் இருந்தது. நான்கவது ஸ்வரத்திற்கு காத்திருந்த நமக்கு போதும் என்று மீண்டும் காப்பியில் ஆடினார் தலைவர் , ராகம் தானம் பல்லவி காப்பி என்னும் மேடையில் அனைவரும் நன்றாக ஆடினோர் தலைவர் தாளத்திற்கு.


6) அடுத்து துர்கா புரந்தரதாசரின் கண்டேனா பாடல் , உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்தின் அனைத்த பிரகாரங்களையும் அங்குலம் அங்குலமாய் வர்ணிக்கும் பாடல் , பெங்களூரில் தலைவர் பாடினால் கட்டாயம் இடம்பெறும் பாடல் இது , ஒரு முறை உடுப்பியிலேயே இதை பாடினார் என்று நினைவு படுத்தினார் ஜனா . அந்த திம் திம் திம்மிக்கென்று புனித கிருஷ்ணன கண்டேவில் நாம் பரவசம் அடையாமல் இருந்ததே இல்லை , எத்தனை முறை பாடினாலும் சளைக்காத பாடல் , என்னே அற்புதமாய் பாடுகிறார் தலைவர் , இந்த பாடலுக்கு துர்கா ராகத்தில் மெட்டமைத்தவரும் தலைவரே தான்.


7) அடுத்து எங்கள் சித்தூர் சுப்ரமணியப்பிள்ளையின் அம்மா யசோதா மிஸ்ரா மாண்டில் துவக்கினார் தலைவர் , துள்ளலாய் தலைவர் பாட பாட நெய்வேலியாருக்கு குஷி பிடிபடவில்லை , மீண்டும் கிருஷ்ணப்பாடல் என்று நாம் உணரும் முன் தலைவர் மாண்டில் மாவல்ல காதம்மாவை பாடினார் , வழக்கம் போல் மங்களாங்கீரோ தொடர்ந்து பால் பெருகு வெண்ண மிகடபாகமு உப்புதெலியகனே மாயமும் சேஸாடு என்று பாடி அசத்தினார். அந்த குறும்புக்கார கிருஷ்ணனுக்கு சற்றும் குறைந்தவரல்ல தலைவர். நமக்கு இந்த தூர்த்த கோபாலுடுவில் ஒரு ரசிப்பு எப்போதும் உண்டு.


8) சீர்வளர் பசுந்தோகை மயிலான் காவடிச்சிந்துவில் அரங்கிற்கு வந்து அருளை பொழிந்தார் அடுத்து , சுப்ரமணியன் சுப்ரமிணயரை பாடுவதை கேட்க திகட்டுமா என்ன , குஞ்சர வணங்காவல் வீடா- தபடி

கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா! பைஞ்சர வணம்காவல் வீடா – வளரும் பாலன்என மாலையொடு காலைநினை வாமே. அண்ணாமலை ரெட்டியாரின் அழகுத்தமிழை அழகுற பாடினார் தலைவர் , வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, – வெருள வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு நல்ல உணர் வழியாது மட்டு – மிஞ்சு ஞான பரமானந்த மோனம் அடைவோமே ஒரு தந்த மாதங்கமுகத்தான் – மகிழ

உத்தம கனிட்டனென உற்றிடு மகத்தான் வருதந்த மாதங்க முகத்தான் – எவரும் வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செய்வோமே. என்று வேகமெடுத்து உச்சம் சென்று மீண்டும் சீர்வளரில் கொஞ்சி முடித்தார்.


9) அடுத்து உப்பும் கற்பூரம் விருத்தத்திற்காக காத்திருந்த நமக்கு ஒரு மிக மிக வேகமான பெஹாக்கை பாடினார் தலைவர் , ஆடும் சிதம்பரமே பாடல் மிக மிக துரிதமாக பாடப்பட்டது , கோபாலகிருஷ்ணபாரதியின் பாடலை தலைவர் பாட பாட அவையின் சைவப்பழங்கள் மெய்சிலிர்த்தனர். ஆடும் சிதம்பரமோ வில் பல்வேறு சங்கதிகளை காட்டி 2.30 நிமிடத்தில் பாடலை முடித்தார். பெஹாக்கும் நானும் பரவாயில்லை என்று எங்களை நாங்கே தேத்திக்கொண்டோம்.


10) தலைவர் கச்சேரியில் என்றும் நம்மை சோகம் அப்பிக்கொள்ளும் அடுத்த பாடல் பவமான சுதுடு , ஆம் மங்களம் பாடி முடித்தார் கச்சேரியை , முன்பெல்லாம் அடுத்த கச்சேரி எப்போது என்று குத்துமதிப்பாய் தெரியும் இப்போது இதுவே நாம் செய்த பாக்கியம் என்னும நிலையாகிவிட்டது என்பதால் , கரவொலியை அவரின் கால்களில் சமர்பித்து நடையைக் கட்டினோம் , மீண்டும் சொல்கிறேன் வாழ்க்கை என்பது இருப்பதை அனுபவித்து உணராமல் , ஆகாயத்தில் கோட்டை கட்டும் பேராசை கனவு , அந்த பேராசைக்கு ஒரு எல்லை கிடையாது , நான் நிச்சய் நம்புகிறேன் இந்த மார்கழி கடந்த ஆண்டை போல் வீட்டிலேயே அமர்த்திவிடாது , தலைவர் நிச்சயம் ஏதோ ஒன்ற யோசித்து வைத்திருப்பார் , நம்பிக்கையே வாழ்க்கை , வந்தனம். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று எண்ணியதருணத்தில் கோபாலர் திருமலை கூட்டணி நம்மை நோக்கி வந்தனர் , இரண்டு தடுப்பூசி போட்டாலும் இந்த தொல்லைகளுக்கு வேக்ஸீன் இல்லாததால் நான் விழித்தேன். எப்படி கச்சேரி கேட்கும்போது எந்த இடைஞ்சலும் தரவில்லை பார்த்தாயா என்றார்கள் கோரஸாக , ஆமாம் என்ன ஆச்சர்யம் என்று நான் மீண்டும் நெற்றியை சுருக்க , தமிழும் நானுமில் உன்னை பார்த்துக்கொள்கிறோம் கூறிவிட்டு மாஸ்க்கை அணிந்து மறைந்தார்கள் இருவரும் .


புகைப்பட உபயம் ; சோதரி சுந்தரா !


ree


ree

 
 
 

Comentarios


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page