பார் போற்றும் பத்துப்பாட்டு ! பிருந்தவனசாரங்க புல்லரிப்பு ! பிரம்ம சபையில் இன்னிசைத் தமிழ் அமுதம் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 20, 2023
- 5 min read

புகைப்பட உபயம் - நிழற்பட ஓவியர் ராஜப்பன்னராஜூ
டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருந்த பிரம்ம சபை கச்சேரி 19ஆம் தேதிக்கு மிக்ஜாம் உபயத்தில் தள்ளிச் சென்று நேற்று ரஞ்சனி சபையில் அரங்கேறியது. வெளிநாடு வாழ் இந்தியர் பலர் இந்த தள்ளிவைப்பால் பலன் பெற்றனர் நேற்று அரங்கம் கண்டனர். பிருந்தவாவன சாரங்க ராகம் தானம் பல்லவி என்ற கண்வுடன் மகிழ்வு உடன் கதனகுதூகலம் மேலும் குதூகலம் தர ரஸிக ரஞ்சனிக்கு ஆஜரானோம் , தலைவருடன் நெய்வேலியார் வரதர் ரேதஸ் ராகுல் இணையர் , லிப்டில் வந்து தொற்றிக்கொண்ட திருமலை கோபாலர் என அனைத்தும் தயாராக பிரம்ம சபை பிரம்மாண்ட கச்சேரி துவங்கிற்று.
நாட்டை வர்ணத்தோடு இசை நாட்டை ஆண்டார் தலைவர் , மங்களம் பள்ளி பாலமுரளி கிருஸ்ணாவின் வர்ணம் இது ஆம் நாதமே முரளி என்கிறார் பாலமுரளி , முக்தாய் முத்தாய் விழ , எத்தனை தெளிவாய் விழுகின்றன முதல் பண்ணிலேயே ஸ்வரங்கள் என்று வியந்தார் கோபாலர் , முரளி அல்லவா அப்படித்தான் என்றான் திருமலை , ஸ்பத ஸ்வரமுலு நா ஜீவமு அடுத்து சரணத்தில் எத்தனை சத்தியமான வரிகள் பாடல் எழுதியவருக்கும் பாடுபவருக்கும் வாசிப்பவர்களுக்கும் , சிட்டைஸ்வரங்கள் மத்தாப்பாய் தெரித்தது அவையெங்கும் , ஸ்பதஸ்வரங்களும் அரங்கில் அங்கே இங்கே என்று பறந்தது , ஸ்பத ஸ்வரங்களுக்கு ஏழு இனங்களாக ஸ்வரங்கள் பாடினார் , ஸரிகமபதநிச என்று இசை வேள்வியை இனிதாய் துவக்கினார் வர்ணத்தில் , நெய்வேலியார் , வரதர் இணை அதி அற்புதமாய் வாசித்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமோ !
ஒரு குறு ஸ்ரீரஞ்சனி ஆலாபனை தந்தார் தலைவர் , அரங்கு தலைவரின் இன்னிசையில் நனையை தயாராய் இருந்தது , இன்னிசை தமிழ் அமுதம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் அரும்பா பாடினார் தலைவர் , கன்னலும் தேனும் முக்கனியும் கனிந்தொழுகும் என்று வரிகளில் தான் எத்தனை இனிமை அதை தலைவர் அத்தனை அழகாய் பாடினார் , சொல் நயம் பொருள் நயம் தொடை நயம் மிக்க பாடலை அப்படியே பாட சஞ்சய் விட்டால் ஆளேது , நாத்தழும் பேறக்கவி நவநவ மாகப்பாடி தோத்திரம் செய்துன்பாதம் தொழுதிட வேண்டும் அம்மா பாடி இதிலும் அந்த அம்மாவில் அரங்கையே கலங்க வைத்தார் தலைவர் , இன்னிசை தமிழில் நிரவல் ஸ்வரம் துவக்கி இரண்டாம் பாடலிலேயே உன்னதம் காட்டினார் , தலைவரின் ஸ்வரங்கள் வரங்களாக அமைந்தது பிரம்ம சபையில் , கற்பனை குதிரையை பறக்க வைத்தார் ஸ்வரத்தில் , வழமையான சஞ்சய் தனி முத்திரை குறும்பு ஸ்வரக்கட்டுகள் வாரி வழங்கப்பட்டன.
அடுத்து ஆலாபனை பந்துவராளி , தலைவர் இந்த ராகத்தில் என்றும் உருக்கத்தின் உச்சாணி கொம்பை தொட வைப்பார் , அததகு இராகம் அத்தகு உழைப்பை இராகத்திற்கு அளிப்பார் , மேலெழுந்தவாரியாக இந்த இராகத்தை அத்தனை எளிதல் ஆலாபனை செய்து கடந்தவிட முடிநாது என்பதை தலைவர் ஆலாபனையில் உணரலாம் , வரதரின் உருக்கும் தலைவரைப்போலவே தனிப்பெரும் உருக்கமாய் அமைந்தது , உணர்வுப்பூர்வமான சுத்த சங்கீதம் வழங்குவதில் இருவரும் சளைத்தவர்கள் அல்லர் , முத்துசாமி தீட்சிதரை சீசனில் முதல் முறையாக பாடினார் தலைவர் , ராமநாதம் பாடல் , பாடலும் கருணையை தன்னுள் தாங்கி உருக்கத்தோடு கேட்க வைத்தது அவையை , அனுபல்லவி குமாரவில் தலைவர் விளையாடினார் , முத்துசாமி தீட்சிதரின் சொற்கள் அத்தனை அழகாய் ராகத்திற்கு மெட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதை அவை உணர்ந்தது , நெய்வேலியார் அருமையான பின்புலத்தில் சேது மத்ய கந்தமதன என்று சரணத்தை எடுத்தார் தலைவர் இராமேஸ்வரம் பெருந்தெய்வம் இராமநாத ஸ்வாமியை முத்துசாமி தீட்சிதரின் வழி நின்று அருமையாக பூஜித்தார் தலைவர் , பாடலில் நாம் சேதுவில் இருந்தது போல் உணர்ந்தோம்.முடிப்பில் நெய்வேலியார் கும்கி அருமை.
ஆலாபனை பைரவி , தலைவரின் வழமையான முத்திரையோடு துவங்கியது 12 நிமிட ஆலாபனை என்பதால் தலைவர் நன்கு திட்டமிட்டு தன் மனோதர்ம குதிரையை ஓட்டினார் , மேலே அநாயாசமாக சென்றார் , மெக்கனில் படிப்பில் கியர் குறித்து படிக்கும் போது அடென்டம் டிடென்டம் என்பார்கள் உச்சியும் அடியும் , தலைவரின் பைரவி அடென்டமையும் டிடென்டமையும் அலசி ஆராயந்தது , இடை இடையே தன்னுடைய நாதஸ்வர பாணியையும் கையாள தவறவில்லை , வரதர் வயலின் அடென்டம் டிடென்டம் விட்டனேனா பார் என்று ஒரு கை பார்த்தது , வரதர் வாசிப்பை அரங்கே அசந்து பார்த்தது.பாபநாசம் சிவனின் அத்தருணம் அபயம் கொடுத்தாண்டருள்வாய் எம் அம்மை அப்பா என்று பெருமாளை பாடினார் பாபநாசம் சிவன் , தீட்சிதர் சிவனை பாட சிவனோ பெருதாள பாடுகிறார் என்றார் கோபாலர் , பக்த பரிபாலகனே பரந்தாமனே பாற்கடலில் பள்ளி கொண்ட பத்மனாபனே இரங்கி என்று தலைவர் பாட பாட திருமலை கண்களில் கண்ணீர் , உத்தமப் பிறவியளித்தாய் ஊனமில்லாத உடலும் அறிவும் கொடுத்தாய் என்று பாடியுள்ளார் சிவனார் , இன்றைய தேதியில் அது ஒரு குறையாக நம் மனம் எடுக்காவிடினும் அக்காலத்தில் அதை எப்படி பார்த்துள்ளார்கள் என்பதை அறிகிறோம் எள்ளத்தனையும் நன்றியில்லேனே பரந்த அருள் அத்தனையும் நான் மறந்தேனே பக்தியும் இல்லையே சித்தசுக்தியும் இல்லாக் கொடிய பாவியானாலும் உடல் விட்டாவி பிரியத் துடிக்கும் என்று பாடி அத்தருணத்தை அங்கே கொண்டு வந்தார் தலைவர் , உத்தமப் பிறவியளித்தாய் ஊனமில்லாத உடலும் அறிவும் கொடுத்தாய் வரிகளில் நிரவல் அமைத்தார் தலைவர் , நெய்வேலியார் வரதர் அருமையாக கை கைகொடுக்க நிரவல் அளப்பரியதாய் நின்றது , மிக மிக உருக்கமான பக்தி ரசம் பொழியும் நிரவல் அது , கேட்டு கலங்காத கண்கள் இல்லை அரங்கில்.நிரவல் ஸ்வரம் பாடியிருக்கலாம் என்று அழுதான் திருமலை.
மூன்றாவது ஆலாபனையாக கதனகுதூகலம் , தலைவரின் குரு கேஎஸ்கே வால் மிகவும் விரும்பப்படும் இராகம் , தலைவர் அவர் குருவின் வர்ணம் கூட பாடுவார் , மேற்கத்திய நோட்டுகளை நினைவுபடுத்தும் ஆலாபனை தந்தார் தலைவர் , வரதர் அருமையாக தொடர்ந்தார் , ஆலாபனையின்போதும் தன் வயலின் ஆலாபனையின்போதும். கிருஷ்ண என பாரதே என்ற புரந்தரதாஸரை பாடினார் தலைவர் , பாடலுக்கு இசை அமைத்தவர் தலைவரே என்பதால் இது பருவத்திற்கான புது முயற்சி என்பதை அறிந்தோம் ஏற்கனவே இராகம் மேற்கத்திய நோட்டுக்கள் அதிலும் கன்னட சொற்கள் இன்னும் வெஸ்டர்னைஸ் ஆக்கியது , நர ஜென்ம பந்தாக என்று தலைவர் பாட நர ஜென்மம் எடுத்தவன் எல்லாம் கிருஷ்ணனை பாட வேண்டும் என்றான் திருமலை , சரணத்தில் தாம்பூலம் எல்லாம் போட சொல்லி தன்ன மந்தகமன கூடி என்று இன்னும் மேற்கத்திய நோட்டுகள் போட்டு பாடினார் தலைவர் , கிருஷ்ணனை பாடுகிறார் என்பது மாட்டும் புரிந்தது.
எவரிதோ நே தெல்புது இராமா பாடினார் அடுத்து மானவதி ராகம் தியாகராஜரின் திருப்புலம்பல் , யாரிடம் நான் சொல்வேன் இராமா , கன்னடம் போலில்லை தெலுகு கொஞ்சம் அனுமானத்தில் கூறிவிடலாம் , ஜாலியுட்ன பாடுகிறார் என்றான் திருமலை , கோபாலர் ஆங்கில ஜாலி வேறு தெலுகு ஜாலி வேறு என்று திருத்தினார் , பிள்ளையார் பிடிக்கப் போய், வெறும் குரங்காய் முடிந்ததே; குண மயமான மாயை முகிலினைக் கலைக்கும் புயலே என்று புலம்பல் தொடர்ந்தது , புலம்பலை இத்தனை அழகாய் தரவல்லவர் தலைவர் ஒருவரே .
ஆலாபனை பிருந்தாவன சாரங்கா , வாணி மஹால் பேகடா போல் நேரே செல்லாமல் பல்வேறு கோணங்களை எடுப்பார் என்று எதிர்பார்த்தோருக்கு பல்பளித்து நேரிடையாக பிருந்தவனம் கொண்டு சென்றார் நம்மை , பௌர்ணமி இரவு , மெல்லிய தென்றல் மியலாடு மான்கள் துள்ளி குதிக்க முயல்கள் தவழ அன்னம் தடாகத்தில் தவழ , மெல்லிய பனிக்காற்று ரோஜாமலர்களை தாக்க அதிலிருந்து சுகந்தம் பிருந்தாவனம் முழுதும் பரவியது போல் இருந்தது தலைவரின் பிரந்தாவன சாரங்கா ஆலாபனை ,மெய்மறந்து கேட்டோம் என்று சொன்னால் இந்த கணங்களைத்தான் சொல்ல வேண்டும், வரதர் வாசிக்க மயிலும் குயிலும் மானும் முயலும் மீண்டும் வந்தன பனிகாற்று ரோஜாப்பூவும் உள்ளத்தை உருக்கின , தானம் மிகவும் அழகாய் துவக்கப்பட்டது , தானம் என்ற சொல்லிலேயே மொத்த பிருந்தாவன சாரங்காவை காட்டினார் தலைவர் , தொடர்ந்து மெல்ல மெல்ல தானம் இருவரின் அருமையான உழைப்பால் அரங்கை அருமையாக அரவணைத்து , பல்லவி என்ன பாடுவார் என்று அரங்கு எதிர்பார்க்க தமிழன் என்றோர் இனமுண்டு பாடுவாரோ என கணிக்க பல்பளித்து பாடிபாடி பரவசம் ஆகுதே நிசபநிமப என்று வித்தியாசமான பல்லவியைத் துவக்கினார் , இதுவரை கண்டும் கேட்டிராத பல்லவி , மனிதர் இத்தனை ஞானம் இத்தனை வயது ஆனாலும் எத்தனை அழகாய் பயிற்சி எடுத்துள்ளார் இந்த பருவத்திற்கு என்று என்னும் போது உள்ளம் விம்மியது , ஸ்வரமே பாடமல் பல்லவியிலேயே ஸ்வரத்தை பாடுவதெல்லாம் தலைவரின் தனிதிறன் மட்டுமே , இராக மாலிகையில் ஆனந்த பைரவியை அப்பிடியே பாடினார் , தொடர்ந்து சஹானாவில் அரங்கையே நனைய வைத்தார் , அடுத்து பாகேஸ்ரீ ஒரு ஒரு ராகத்திலும் நிரவல் பாடி அதையே பல்லவியில் கொண்டு வந்து அரங்கையே இன்பகூத்தாட வைத்தார் , தொடர்ந்து தனி துவங்கிற்று உபபக்கவாத்தியமில்லாமல் நெய்வேலியாரே அருமையான தனியைத் தந்தார் ஏறத்தாழ 13 நிமிடம் அருமையான நாத வெள்ளத்தில் அரங்கை நனைய வைத்தார் , அவர்தம் கரங்களில் எத்தனை அற்புதம் ஆச்சர்யம் ஒளிந்திருக்கிறது என்று மலைத்தோம் இந்த மலைப்பு ஒவ்வொரு தனியிலும் தொடர்கிறது.
மீண்டும் மளிகை கடை புளிப்பு மிட்டாய் இம்முறை காம்போதி இவன் யாரோ கவிகுஞ்சர பாரதி பாடல் ,டிவிலொளி மணி கௌச்டுபமும் அனிந்து கொந்து டேரில் ஏரியே சிங்கார பவனி வாரா என்று அனுபல்லவியில் அளவளாவினார் தலைவர் காம்போதியின் பேரிசையில் , பாடல் திருமாலை பற்றியது என்று அறிந்ததும் திருமலைக்கு அத்தனை மகிழ்ச்சி பாதத்தில் ஒரு மங்கை பக்கத்தில் ஒரு மங்கை திருமார்பில் ஒரு மங்கை என்று பாட நமக்கு ஒரு மங்கையிடம் சொல்லவிட்டு கச்சேரி வருவதே பெரும்பாடாய் இருக்கிறது பாவம் திருமால் என்று நினைத்துக்கொண்டும்.என்ன அருமையான காம்போதி நாம் செய்த தவப்பயன் என்று அரங்கு அழுதது சஞ்சுகாம்போதியில்.
காப்பியும் பிரம்ம சபையும் பிரிக்க இயலாதது , எத்தனை காப்பிகள் இங்கு சுவைத்துள்ளோம் , தலைவர் நாமசுதாரஸத்தை தந்தார் இம்முறை , ஒருநாளும் ஸ்வாதி திருநாள் பாடல் இன்றி அமையாது கச்சேரி என்பதை மெய்பித்தார் , நாம் எப்போதும் மயங்கும் யாமித பிபதா மற்றும் எதி ஹரி நாமபராவில் மயங்கி கிறங்கினோம்.
அண்ணாமலை ரெட்டியாரின் சீர்வளர் பசுந்தோகை மயிலான பாடல் அடுத்து காவடிசிந்து ராகமாலிகையில் தந்தார் தலைவர் , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ,மலையில் காவடி எடுக்கும் போது சோர்வு தெரியாமல் இருக்க பாடுவதே காவடி சிந்தே இதில் எதுகை மோனையில் தான் பாட்டின் உயிர் இருக்கும் , ஒரு தங்க மாதங்க முகத்தானுக்கும் சீர்வளருக்கும் எத்தனை வேறுபாடு , அடடா அந்த வாழ்த்து குக நாகனை என்றும் ஏத்துதல் செய்வோம் மனதார .மீண்டும் அந்த சீர்வளரில் வந்த முடிக்கும் அழகே அழகு.
Comments