top of page
Search

புத்தாண்டில் தோடிப்புதையல்,விந்தை ஹம்ஸவிநோதினி!ஜனரஞ்(சக)சனி!தேவகாந்தாரி தேன்!ஆனந்தபைரவி பாயாசம் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Jan 3, 2022
  • 11 min read

ree

ree


மாந்தருக்கு ஆண்டின் துவக்கமாம் சனவரி 1 புதுக்கனவுகளின் துவக்கம் , சஞ்சய் பித்தர் கூட்டத்திற்கோ 2014ஆம் ஆண்டு முதல் நான்கு மணி நேர கச்சேரி என்னும் உற்சாக திருவிழாவின் துவக்கம். தலைவர் சங்கீத கலாநிதி பெற்ற 2016 மாத்திரம் சனவரி 1 கச்சேரி இல்லை மற்றபடி 6 ஆண்டுகளின் ஆண்டின் துவக்க நாளில் அன்பர்கினியாரின் கச்சேரியில் மகிழ்ந்து திளைத்து அந்த ஆண்டு முழுதும் மகிழும் பெருந்தவப்பயனை நாம் பெறுவது வழக்கம் , 2021 பொல்லாத கிருமியால் அந்த வாய்ப்பு கிட்டாவிட்டாலும் , 2022இல் ஓமிக்கிரானின் பொல்லாப்பு துவக்க நிலையில் இருந்தபடியால் ஆண்டவன் புண்ணியத்தில் , தலைவர் கச்சேரியுடன் ஆண்டின் பிறப்பை கொண்டாடும் நல் வாய்ப்பு. ஆறாண்டுகள் களம் சிவகாமி பெத்தாச்சி அரங்கம் , அது நாம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் வளாகம் , இவ்வாண்டு அங்கும் இடமில்லாமல் , சாஸ்திரி அரங்கில் கச்சேரி , குறைந்தபட்சம் 500 பேர் கேட்கும் பெத்தாச்சி போல் இங்கு இயலாது என்றாலும் , 150 பேராவது கொள்ளும் அரங்கிற்கு துள்ளல் பயணம் மேற்கொண்டோம் தர்மபத்தினியுடன் , தனயனும் , புத்திரியும் அரங்கிற்கு வந்தால் , கட்டுப்படுவதும் கடினம் கட்டுப்படுத்துவதும் கடினம் , கச்சேரி கேட்பது கடினத்திலும் கடினம் என்பதால் , புத்தாண்டும் அதுவுமாக இருவரையும் வீட்டுக்காவலில் வைத்துவிட்டு அவர்களிடமிருந்து நாங்கள் பிணை பெற்று வந்தோம் சாஸ்திரி அரங்கிற்கு , சஞ்சய் சபா கச்சேரி போல் தரையில் மெத்தை , சுற்றிலும் நெகிழி நாற்காலிகள் , பின்புலம் ஏதுமில்லை , மேடையில் தலைவருடன் நெய்வேலி வெங்கடேஷ் , வரதராஜன் , வெங்கட்ரமணன், ரேதஸ் அனைவரும் காட்சி தர மாட்சிமை மிகுந்த தலைவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். என் இல்லாள் தயாரித்த ரவாலட்டை இது என்ன திரியில்லாத அணுகுண்டா என்று நக்கலடித்தும் நான்கைந்து லாடுகளை விழுங்கி விட்டு அருகில் அமர்ந்தனர் கோபாலகிருஷ்ணபாரதியும் , திருமலையப்பனும். புத்தாண்டு கச்சேரிக்காவது பட்டியல் வெளியிடமாட்டார் என்று எண்ணியோரை எள்ளி நகையாடியது தலைவர் வெளியிட்ட பாடல் பட்டியல் , ஐந்து தமிழ்பா , தியாகராஜர் , தீட்சிதர் , புரந்தரர் , ஸ்வாதி திருநாள் என மிகவும் சமன்பாடான பட்டியல் , நீண்ட நாளுக்குப்பின் நாட்டுக்குறிஞ்சி வரண்ம், ஜனரஞ்சனி , தேவகாந்தாரி , தேவமனோகரி , தோடி , இதுவரை கேட்டிராத ஹம்ஸவிநோதினி என தலைவர் மிகவும் ஆழ்ந்தாலோசித்து பட்டியல் தயாரித்திருந்தார். ஹூம் எது எப்படியாகினும் கடைசி ஒருமணிநேரம் நேயர் விருப்பம் தானே அதிலே ஒரு பத்து பாட்டு வரும் என்று உற்சாகத்தோடு கச்சேரி கேட்க தயாரானோம்.


1) தலைவர் ஓரு மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர் அவரின் உள்ளே அந்த ஆராய்சியாளர் எப்போதும் விழித்துக்கொண்டிருப்பார் , இதுவரை செய்ததெல்லாம் போதாது இன்னமும் செய்யவேண்டும் என்ற ஊந்துதல் அவரின் உள்ளத்தில் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் , பல அறியப்படாத பாக்களை சபையேற்றிய பெருமை இவருக்கு உண்டு , அப்படிப்பட்ட பரணையிலிருந்து தூசு தட்டப்பட்ட நாட்டுக்குறிச்சி வர்ணத்தை முதல் பண்ணாக எடுத்துக்கொண்டார் , பட்டிணம் சுப்ரமணியர் பாடல் சாமினி வேகமே , ஒரு மினி ஆலாபனை தந்து நம்மை தலைவர் தாலாட்டிவிட்டு வெகு நிதானமாக சாமினி வேகமே ரம்மன்னவே என்று துவக்கினார் , இது என்ன வேகமாக வரசொல்லி மெதுவாக பாடுகிறார் என்று எடுத்துவுடன் வம்பு செய்தான் திருமலை , மேலும் ஒரு ரவாலட்டு தர அமைதியாக தலையாட்டினான், மான்யுடைன வெங்கடேஷ்வரரை தலைவர் பாடிட திருமலை தெய்வத்தை தொழுதோம் ஆண்டு முழுதும் அல்லல் இன்றி வாழ வேண்டி, தலைவர் இதற்குள் முக்தாயில் அதே நிதானத்தை பிரதானமாக்கி நாட்டுகுறிச்சி ஓடத்தை இயக்கினார் , முப்பதாம் தேதி பெருமழை சென்னையில் ஓடசவாரி செய்தோம் நாம் , மெல்ல மெல்ல ஓடம் ஸ்டீம் போட்டாக்கினார் வேகமெடுத்தது வர்ணம் , ஸ்டீம்போட்டு இப்போது முழுவேகத்தில் இயங்கியது , நெய்வேலியார் பிராமதப்படுத்தினார் , மிக நீண்ட அனுபல்லவி மொத்தம் பாடிவிட்டு சரணம் தயஜேசி நன்னு யேலுகோமன்னவே நாபை என்று பாடிவிட்டு சிட்டை ஸ்வரத்தை துவக்கினார் தலைவர், வயலினும் மிருதங்கமும் முழுவீச்சில் இறங்கியது , இந்த வரண்த்தை லேசில் விடமாட்டார் என்பதை அவை அறிந்தது , தலைவரின் அடுத்தடுத்த ஸ்வரஜாலங்கள் மிக நீண்ட வர்ணம் என்பதை கட்டியம் கூறியது. என்னே அசாத்தியமாக இந்த வர்ணத்தை பாடுகிறார் , இத்தனை சரளமாக பாட எத்தனை ஆயத்தம் செய்திருப்பார் என்னும் நினைப்பே பிரமிப்பை தந்தது.


2) கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்றார் பொய்யாமொழிப் புலவர் , ஒருவர் கற்ற கல்வி அழிவில்லா செல்வம் , அது போல் கலை என்பது ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றம் மட்டுமல்ல அதை ரசித்து கேட்டு மகிழும் ஒரு பெருங்கூட்டத்தை ஆற்றுப்படுத்தும் மாமருந்து , அத்தகு கலையை அளித்து காக்கும் பெருந்தெய்வமாம் கலைவாணியை தொழ தெய்வத்தின் பெயரிலிருக்கும் ராகத்தையே கையிலெடுத்தார் தம் பாவேந்தர். சரஸ்வதி ராகத்தில் தண்டபாணி தேசிகரின் கலைமகளே என்னை காத்தருள்வாய் பாடினார் அடுத்து. படிப்பென்றால் பிடறி தெறிக்க ஓடும் நீயெல்லாம் கலையை பற்றி பேசுவது சரஸ்வதி தேவிக்கே பொறுக்காது என்றான் திருமலை, மீண்டும் ஒரு லட்டுக்கான விண்ணப்பம் என்பதை அறிந்து அளித்தேன் லட்டை , இதுவும் கலையின் வெளிப்பாடு அஃதாவது சமையல் கலை என்று லாடை விழுங்கிவிட்டு தாளம் போட்டான் அனுமதியின்றி எனது தொடையில், தலைவர் இதற்குள் அனுபல்லவி நிலவுகலகம் தன்னில் பல கலையும் உணர்ந்த புலவர் அவையினிற் தலைமை பெற்றோங்கிடும் பாடிட பின்புலத்தில் நெய்வேலியார் அருமையான நாதத்தை தந்தார் , லயத்தை இவர் போல் வழங்கிட மூவுலகிலும் எவரும் இலர். அந்த கலைமகளே என்ன காத்தருள்வாயில் தலைவர் ஒரு மயக்கத்தை தந்தார் நமக்கு, சரணம் சிற்பியின் உளமகிழ் சிறந்திடும் செல்வியாம் , செவி கொளும் இசையினில் சீருடனே இருப்பாய் என்று பாடினார் தலைவரின் இசை கேட்டால் கலைவாணி செவி கொளும் இசையினில் மகிழ்ந்தாள். பொற்புறும் கூற்றினில் பிடிநடையாய் இருப்பாய் குறையில்லா ஓவியந்தன் கைத்திறனாய் இருப்பாய் என்று காற்றில் வரைந்து காட்டினார் , கலைமகளேவில் ஸ்வரத்தை துவக்கினார் , பாடல் முழுதும் தலைவருடன் அமர்களமாய் பயணித்த நெய்வேலியாரும் வரதரும் ஸ்வரம் வரவும் மேலும் உற்சாகமடைந்தனர் , புத்தாண்டு சரவெடியை தலைவர் சாஸ்திரி அரங்கில் அரங்கேற்றினார், அரங்கில் இருந்தோர் மிரண்டனர் தலைவரின் அசாத்திய ஸ்வர ஆளுமையால், பக்கவாத்தியங்களின் உந்துதல் தலைவரை மேலும் உச்சம் செல்ல வைத்தது , கீழே ராணடே நூலகத்தில் இருந்த கலைமகள் மேலே வந்து உன்னை என்று காத்தருள்வேன் சஞ்சய் ஏனெனில் நீ இந்த பாரம்பரிய கலையை காக்கும் பண்ணிசை தூதுவன் என்று ஆசி தந்தாள்.கலைஞன் வாழ்ந்தால் தான் கலை வாழும் , இந்த கொடும் தொற்றால் எத்தனை எத்தனை கலைஞர்கள் நலிவுற்றுவிட்டார்கள் , கலைமகள் அவர்கள் அனைவரையும் காத்தருள வேண்டும் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி.


3) புவனா இல்லாத அரங்கில் தலைவர் ஜனரஞ்சனி ஆலாபனை துவக்கினார் , அடடா என்னே துவக்கம் , சங்கராபரணத்தின் சேய் அரங்கையே மயக்கியது. இதுவும் கன்னடா ராகம் போல் கேட்க கேட்க நமக்குள் ஒரு கிறக்கம் தரவல்ல ராகம், சில ராகங்களில் நம்மையும் அறியாமல் அதிலே நாம் நம்மை இழந்துவிடுவோம் அத்தகு ராகம் ஜனரஞ்சனி என்பதை தலைவர் ஆலாபனையில் காண்பித்தார் , பாடல் நாடாடின என்பது தெரிந்திருந்தபடியால் அதை அப்படியே ஆலாபனை செய்வது போல் இருந்தது , தலைவர் ஜனரஞ்சனி வெஞ்சாமரம் வீசிட அது குளிர்தென்றலாய் அரங்கை வலம் வந்தது , கண்மூடி கேட்டு மகிழ்ந்தது அவை. தேனீக்களின் விருப்ப இடம் வரதுவின் வயலின் , மயிலை மூலை முடுக்கெல்லாம் இருந்த தேனீக்கள் சாஸ்திரி அரங்கிற்கு வந்து தேன் உண்டன . உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பதால் தேனீக்கள் தொடர்ந்து வரதர் வாசிப்பை கேட்டு மயங்கின , தேனீக்களுக்கே இந்நிலையில் எனில் நம் நிலையை என் சொல்வது , மனிதர் எப்படித்தான் வாசிக்கிறாரோ இப்படி என்று காதினிக்க கேட்டோம் வரது ஜனரஞ்சனியை.தியாகராஜரின் நாடாடின மாட்ட நேடு தப்ப வலது ஸ்ரீராமா பாடினார் தலைவர் , ஏடாதி நாடுக ஏட பாயனி வாடு என்று அனுபல்லவியில் தலைவர் பாட பாட கரைந்தோம் நாம். சரணம் தலக்கு வச்சின பாத தலபாகதோ ஜேது பாடினார் தலைவர் , தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்றான் திருமலை , கோரோனாவிலிருந்து மீண்டோர் சொல் போன்றது இது , ஆம் தீவிர சிகிச்சை பிரிவில் தான் எத்தனை வேண்டியவர்கள் இருப்பதை அறிந்து வேதனை அடைந்தோம் என்று எண்ணிணோம். பெரும்பாலும் அனைவரும் தலைப்பாகையோடு திரும்பியது பெரும் மகிழ்ச்சி என்றாலும் , ஸ்டான்லியில் மனைவியை சேர்த்த கணவர் , மகனை சேர்த்த தந்தை , தாயை சேர்த்த தனயன் என பலரும் திகிலோடு மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்ததெல்லாம் என் கண் முன்னே வந்து சென்றது. தலைவர் இதற்குள் தலக்கு வச்சின பாதவில் நிரவல் அமைத்து களமாடினார். வரதரின் நிரவலும் அருமையிலும் அருமையாக அமைந்தது , தலகு வச்சின பாத எங்ளுக்கு வரமாக அமைந்தது . தலைவர் நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலகுவில் , நல்ல நீண்ட ஸ்வரத்திற்கான அடையாளங்களோடு துவங்கியது ஸ்வரஜாலம் , பாவிலும் மாவிலும் தலைவர் விளையாடிவிட்டு , மெல்ல மெல்ல எக்ஸ்பிரஸானார் , பின் மீண்டும் சௌக்கியமாய் பாடி முடித்தார் நாடாடின மாட்ட வை.இந்த ஜனரஞ்சனி நம் நினைவில் நீண்ட நாள் நிலைத்திருக்கும். ஏனெனில் அரை மணி நேரம் இந்த பாடலுக்கே எடுத்துக்கொண்டார் தலைவர்.


4) தானே பாடுவது போல் தொண்டையை செருமிக்கொண்டு அங்கவஸ்திரத்தை சரி செய்து கொண்டார் கோபாலகிருஷ்பாரதி , ஓஹோ உம் பாட்டிற்கு ஆலாபனை கூட உண்டோ என்று எக்களித்தான் திருமலை. கோபாலர் என்னை முறைக்க நான் கண்களால் கெஞ்சி திருமலைக்கு ஒரு திருக்கொட்டு தந்தேன். தலைவர் படுகம்பீரமாக தேவகாந்தாரி ஆலாபனை துவக்கினார் , நான்கு நிமிடமே நீடித்தாலும் ஆலாபனை நம்முள் பக்தி மணம் கமழச்செய்தது , கோபாலகிருஷ்ணபாரதியின் ஆகச்சிறந்த படைப்பான திருநாளே போவாரின் கதை நாயகன் , சிவப்பெருமானின் பெருந்தொச்டன் நந்தன் மருகி உருகி பாடும் பாடலுக்கான மிகச்சிறந்த அச்சாராமாக அமைந்தது தலைவரின் ஆலாபனை, வரதர் வாசிப்பு மிகவும் கருணை ரசம் நிறைந்திருந்தது. சென்ற பாடலுக்கு வரதாழ்வாராய் இருந்தவர் இந்த பாடலுக்கு வரதநாயனானார். எந்நேரமும் உந்தன் சந்நிதியில் பாடலை துவக்கினார் தலைவர் , கோபாலகிருஷ்ணபாரதி கண்கள் நயாக்கரவாயின , அந்த அய்யா பொன்னைய்யாவில் சொக்கியது அவை. இந்த பொன்னையா தலைவரின் பிறச்சேர்க்கை. அனுபல்லவி தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே யென்னரசே என்று தலைவர் உருகிப்பாட கோபாலகிருஷ்ணர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார் , க்ராதகன் திருமலையோ கிஞ்சித்தும் அதைக்கண்டு மனமிரங்காமல் , எந்நேரமும் அவர் சந்நிதியில் இருக்கவேண்டும் என்று ஏன் நந்தன் விரும்புகிறான் , அங்கும் அன்லிமிடெட் ரவாலாடு , திருக்கண்ணமுது , பொங்கல் இத்யாதிகள் இருக்குமோ என்றான் , அவனை எரிப்பது போல் பார்த்துவிட்டு எனைக்கண்ட கோபாலர் , நந்தன் உத்தாரம் தாரும் என்று தன் ஆண்டையிடம் கூறிவிட்டு சிதம்பர தரிசனம் பெற சிதம்பரம் நோக்கி பயணித்து ஒரு வழியாக நகரின் நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தாலும் , ஈசனின் அனுமதியன்றி நுழைவதில்லை என்று நகரை சுற்றி சுற்றி அவர் அனுமதிக்காக பாடிய பாடல் இது என்றார். இரக்கம் வராமல் போனதென்ன காரணம் பாடல் கூட இந்த தருணத்தில் பாடியதே என்றார் , இதற்குள் தலைவர் சரணம் துவக்கினார் , திசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும் தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும் பசியெடாது பார்த்த பேர்க்குக் கலக்கங்கல் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு என்று தலைவர் பாட பாட , பசியெடாது வரிகளை பாடும் போது ஆழ்வார்கடியான் ஆந்தை முழி முழித்தான். பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும் கோவிலழகும் அரி தானரகசியமும் அஞ்சல்கூறும் வீர மணிகளோசையும் அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு என்று தலைவர் தேவகாந்தாரியில் பாட பாட அரங்கமே சைவமடமானது. சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும் தேரருலகில்கிடை யாதவசியமும் பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு என்று அவர் பாட பாட கோபாலர் அங்கவஸ்திரம் , அவர்தம் கண்ணீர் துடைக்கும் அஸ்திரமானது. அடேயப்பா இது போன்ற சௌக்கியம் நிறைந்த பாடலுக்கு வாசிப்பது மிகவும் சவாலான காரியம் , அதை வரதரும் நெய்வேலியாரும் மிகவும் அழகாய் செய்தனர் , நெய்வேலியார் அதிகம் இடக்கையில் லயம் அமைத்து அமர்களப்படுத்தினார்.


5) ஆலாபனை ஆனந்தபைரவி ஆம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆலாபனை செய்தார் தலைவர் , வழமையான பூ மேல் வளரும் அன்னையே போன்ற ஆலாபனையாக இந்த ஆனந்தபைரவி ஆலாபனை , மிகவும் கருணை ரசம் சொட்டுவதாக தலைவர் ஆலாபனை செய்தார் , தொடர்ந்து வரதரும் ஆனந்தபைரவியை அதே தொனியில் வாசித்தார் , விட்டால் பூ மேல் வளரும் அன்னையே பாடிவிடுவார் போலிருந்தது இருவரின் ஆலாபனையும் , ஆனால் தலைவர் அறிவித்தபடி புரந்தரதாசரின் ராம நாம பாயஸகே கிருஷ்ண நாம் சக்கரகே பாடினார் , இனிக்கும் ஆனந்தபைரவியில் மேலும் இனிப்பைக் கூட்டும் பாடல் வரிகள் , புத்தாண்டும் அதுவும் அருமையான பாடல் என்று சப்புகொட்டினான் திருமலையப்பன். பாடல் கன்னடத்தில் அருமையாக பாடப்பட பொருள் அறியவிடினும் ஆனந்தபைரவியில் நனைந்தது அவை. முன்பெல்லாம் பெங்களூரி வருடத்திற்கு 4 முதல் 5 கச்சேரி பாடுவார் அதற்கு சில சமயம் இங்கு ஒத்திகை நடைபெறும் அத்தகைய ஓத்திகையோ இது என்றான் திருமலை , கோபாலரோ விடல நாம துப்பவா சப்பரிசு என்றார் சத்தமாக.


6) தொடர்ந்து மூன்று ஆலாபனை பாடியதால் தோடி பாடல் மட்டும் பாடுவார் என்று எண்ணிய நமக்கு பல்பளித்து தொடர்ச்சியாக 4வது ஆலாபனையாக தோடியைத்துவக்கினார் , சரிதான் இன்றைய மெயின் தோடி என்பதை அறிந்து கொண்டோம்.வெளிப்படையாக சொல்வதென்றால் நமக்கு இந்த தோடி , பைரவி இரண்டும் தலைவர் பாடி நிறைய கேட்டாச்சு , அதுமட்டுமல்லாமல் இணைய வழி கச்சேரிகளிலும் அனைத்து பாடகர்களுக்கும் பெரும்பாலும் தோடி அல்லது பைரவி தான் மெயின் , ஆனால் இந்த எண்ணமெல்லாம் ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான் , அதற்குப்பின் தலைவரின் தோடியில் நம்மையும் அறியாமல் உட்புகுந்தோம். தலைவர் அவையை கானகவாசத்திற்கு இட்டுச்சென்றார் , அந்த வனத்தில் பகலாக இருந்தாலும் கும்மிருட்டு , சூரிய கதிர்கள் உட்புகா அடர்வனம் , நல்லநாளும் அதுவுமா இது என்ன இருட்டுல கூட்டிக்கிட்டு போறார் என்றான் ஆழ்வார்கடியான் நம்பி , கோபாலர் பேசாமல் வா என்று அவன் முதுகில் ஏறிக்கொள்ள , திருமலையப்பன் என் முதுகில் ஏறிக்கொண்டான் , நான் அடிமைப்பன் இராமசந்திரன் போல் நடந்தேன் ஒரு கட்டத்தில் தலைவரின் வெள்ளை வேட்டி சட்டை கூட தெரியவில்லை அப்படி ஒரு இருட்டு , ஆனால் அவரின் குரல் மட்டும் முன் செல்ல நாம் பின்தொடர்ந்தோம் நாவுக்கரசரை , அடேயப்பா என்னே நாதஸ்வர பிடிகள் , நீர்வீழ்ச்சியை விஞ்சியது தலைவரின் பிருகாக்கள் , முன்னால் சென்று கொண்டிருந்தவர் திடீரென்று குரல் மேலே கேட்டது நாம் அங்கேயே நின்று நிமிர்ந்து பார்க்க முன்பட்டோம் ஆனால் என் முதுகில் இருந்த சைவ வைணவ மகாதொண்டர்களின் பளுவோடு நிமிர இயலவில்லை , நல்ல வேளையாக மீண்டு கீழே வந்து நடையைத் தொடர்ந்தார் , அந்த காட்டின் இருட்டில் மயிற்கூச்செரிந்தது வனத்தின் குளிராலா அல்லது தலைவரின் ஆலாபனையால் என்று விக்கித்தோம் , தலைவரின் தோடி ஆலாபனை தொடர்ந்து கொண்டே இருந்தது திடீரென கண்ணை பறிக்கும் வெளிச்சம் ஆம் தலைவர் வந்து சேர்ந்தது தோடி வைரமலைக்கு , அந்த வைரமலையில் ஆங்காங்கே புகைப்படங்கள் இருந்தன உற்றுப்பார்த்தோம் ,ஒன்றில் மதுரை சோமு , ஒன்றில் ராஜரத்தினம் பிள்ளை , ஒன்றில் ராம்நாட் கிருஷ்ணன் , தலைவரின் மானசீக குரு ஜி.என்.பி. , டி.கே.ஜெயராமன் எஸ்.இராமநாதன் என்று பல ஜாம்பவான்கள் புகைப்படங்கள் . சஞ்சய் அங்கு வந்து ஆலாபனையை முடிக்கவும் அந்த புகைப்படங்களெல்லாம் பெருமிதத்தோடு புன்னகைத்தது போல் இருந்தது எனக்கு. மீண்டும் வரதர் காட்டுவழிபயணம் செய்தார் தோடியில் , அண்ணன் வழி வாசித்து பிராமதப்படுத்தினார் , தலைவர் போலவே நீண்ட ஆலாபனை , வரதர் முன்பெல்லாம் சோலோ கச்சேரி தருவார் , அது இல்லாத குறை போக்கினார் இந்த ஆலாபனை மூலம் , பிரமாதம் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி.ஸ்ரீ சுப்ரமண்யோ மாம் ரக்ஷத்து முத்துசாமி தீட்சிதர் பாடல் பாடினார் , திருச்செந்தூர் முருகனை துதிக்கும் பண் , ஆறுநாட்கள் சூரபத்மனை போரிட்டு அழித்த சுப்ரமணியரை பாடியுள்ளார் தீட்சிதர், தோடி போன்ற கணராகத்திலும் அருமையான மெல்லிசை வர பாடல் எழுதியுள்ளார் தீட்சிதர் , ஆறுமுகத்தின் சக்தீ ரூபத்தை சமஸ்கிருதத்தில் பாங்குற பாடினார் தலைவர், அனுபல்லவியில் குறிப்பாக வஸவாதியில் நளினம் காட்டினார். சரணத்தை தலைவர் ரஸித்துப்பாடினார், ஸதகோடி பாஸ்கர ஷோபகர வரியில்தான் எத்தனை சங்கதிகள் , ஷடாயுஹூ பிரத பக்த மந்தாராஹா சங்காபிஷேகவில் நிரவல் அமைத்தார். அடுத்த ஆறு நிமிடங்கள் நிரவலில் அரங்கையே மயக்கினார் தலைவர் , தொடர்ந்து நிரவல் ஸ்வரமும் பிரமாதப்படுத்தின , அவ்வப்போது சுப்ரமண்யா மாம் என்று தனக்கே உரிய நகாசு வேலைகளுடன் பாடினார் ஸ்வரத்தை , எதிர்பார்த்தபடி மெல்ல ஸ்வரங்கள் ஜெட் வேகமெடுத்தன , வழமைபோல் நெய்வேலியாருடன் கணக்குகளை துவக்கினார், இருவரும் புத்தாண்டு கணக்குகளை நன்றாக பரிமாறினர் , ஆசை தீர கணக்கு முடித்து தனிக்கு அச்சாரமிட்டார், நான்கு கச்சேரிக்குப்பின் ராகம் தானம் பல்லவியில் இல்லாமல் தனி வசித்தார் நெய்வேலியார் , சம்பிரதாயங்கள் மிக அழகாக வாசிக்க சொற்களாக வந்து விழுந்தன தனி வாசிப்பு , நெய்வேலியார் வாசிப்பு தனி வாசிப்பு என்றார் கோபாலர், தொடர்ந்து வெங்கட்ரமணனும் அருமையாக வாசித்தார் , தலைவரும் , நெய்வேலியாரும் , வரதரும் அவரை உற்சாகப்படுத்த மேலும் வீறு கொண்டு வாசித்தார் , நெய்வேலியாரின் வாசிப்பில் வழக்கம் போல் தீப்பொறிகள் பறந்தன , மனிதருக்குத்தான் எத்தனை அசாத்திய திறன் , கம்பீர வாசிப்பு என்றால் அது தலையாட்டி சித்தர் வாசிப்புத்தான். மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரின் சீடர்கள் புளகாங்கிதம் அடைந்தனர் வாசிப்பைக்கேட்டு. தனியையும் சேர்த்து மொத்தமாக 1 மணி நேரத்தை தாண்டியது தோடி , மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் தோடியை மிஞ்சிவிட்டது என்றே சொல்லலாம் என்றார் கோபாலகிருஷ்ண பாரதி. சுப்பனை சுப்பர் பாடினால் நீர் இதையும் சொல்வீர் இதற்கு மேலும் சொல்வீர் என்றான் ஆழ்வார்கடியான்.


7)தலைவர் லேசாக ஆலாபனை தொடங்க ஆறாவது ஆலாபனையா என்று நினைக்க , இன்னமும் தாமதம் ஏன் ஸ்வாமி பாடினார் மாயுரம் வேதநாயகம் பிள்ளை பாடல் , பாடல் தேவமனோகரியில் படு வேகமாக பாடப்பட்டது , நெய்வேலியார் வாசிப்பும் ஏழுபாய்ச்சலில் இருந்தது , அந்த ஸ்வாமியில் கிறங்கடித்தார் நம்மை . அனவரத சுகிர்த்த ஆத்ம சொரூப , என்று சமஸ்கிருத சொற்களை அள்ளித்தெளித்து எழுதியுள்ளார் வேதநாயகம் , தினகரன் அதிகரனில் நெய்வேலியார் தந்த நாதம் படு பிரமாதம்.


8) அடுத்து தலைவர் துவக்கியது ராகம் தானம் பல்லவி ஹம்ஸவிநோதினி , மங்களம் பள்ளி பாலமுரளி கிருஷ்ணாவின் இராகம் இது , சுஷாமா , மஹதி , வல்லபி என எண்ணற்ற ராகங்களை உருவாக்கிய இந்த மகாவித்வானின் ஹம்ஸவிநோதினி தலைவர் ஆலாபனை புரிய மிகவும் இதமான ராகமாக இருந்தது செவிக்கு, சங்கராபரணத்தின் சேய் இந்த ராகம் என்றாலும் நிறைய இந்துஸ்தானி நெடி தெரிந்தது , தலைவர் மெய்மறந்து ஆலாபனை புரிந்தார் , வரதர் அருமையாக ராகத்தை வாசிக்க அரங்கமே சொக்கியது , இந்த ராகத்திலும் மேலே சென்றார் தலைவர் , இதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார் இந்த பருவத்தில் , கார்வை கோர்வை நாயகன் மிகவும் உன்னதமாக எடுத்துச்சென்றார் இராகத்தை , அந்த நிறைவு பகுதியில் நெகிழ்வுகள் வளைவுகள் குழைவுகள் படுபிரமாதம் , வரதர் வாசிப்பில் பெரும்பாலும் இந்துஸ்தானி ஜாடை நிரம்பியிருந்தது , ஆனம்த தானோம்த என்று தானத்தை துவக்கினார் தானாதிசூரர் , இனிமைத்தானம் இழைந்தது அவையெங்கும் , அருமையான தானம் வழமை போல் வேகமெடுத்து நம்மை வியர்க்கவைத்தது தானத்தின் நிறைவில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்று ஒரு நாள் போதுமா தானத்தில் கொண்டுவந்து , பாலமுரளிகிருஷ்ணாவிற்கு இசை அஞ்சலி செய்தார். நடனம் ஆடினார் கனகசபையில் நடனமாடினார் , என்று கோபாலகிருஷ்ணபாரிதியின் வரிகளில் பல்லவி அமைத்துக்கொள்ள கோபாலருக்கு வாயெல்லாம் பல் , க்ரீடதீம் க்ரீடதீம் எல்லாம் தலைவர் சொந்த தயாரிப்பா தெரியாது. ஜதி நிறைந்த பல்லவியாக புத்தாண்டு புதுமை பல்லவி தந்தார் தலைவர் , நெய்வேலியாரும் வரதரும் பிரமாதப்படுத்தினர் பல்லவியை , தீம் தீம் எனத் தலைவர் பாட கோபாலகிருஷ்ணபாரதி தீம் தீம் என ஆட , ராணடே நூலகத்தில் படித்துக்கொண்டிருந்தோரெல்லாம் பூகம்பம் என்று தெரித்து ஓடினர். மூச்சு வாங்க உட்கார்ந்து தாளம் போட்டார் கோபாலர் , தலைவர் இதற்குள் ஸ்வரம் துவக்கினார் , கனகசபையில் நடனம் ஆடும் தில்லை கூத்தன் அகமகிழ்ந்து ஆடினார் , காலைத்தூக்கி நின்றாடும் தெய்வத்தை , ராகமாலிகையில் போற்ற தலைவர் ஹிந்தோளத்தை தேர்ந்தெடுத்தார் லேசாக இளமை இதோ இதோ எட்டிப்பார்த்தது , குறும்பர் இந்த சுப்பர் என்று அவை சிரிக்க இந்துஸ்தானி கஜல் போல் எடுத்துச்சென்றார் , அடுத்து மேளகர்த்தா ராகம் , இந்த ஸூசரித்ரா வகையறா என்று நினைத்தோம் நம்மைப்போலவே பலர் முகத்திலும் பல்வி எரிவதைக்கண்ட தலைவர் இது தர்டி செவன்த் மேளா சாலகம் என்றார் , சாலகம் மிகவும் அழுத்தமாக பாடப்பட்டது , அடுத்து தன் வாத்தியாரின் நேசத்திற்குரிய கதனகுதூஹலத்தில் ஸ்வரம் தந்தார் அம்பலவாணனை பாடும் சுப்பர், கடந்த இராகத்தை யாரும் கணிக்க இயலவில்லை இந்த ராகத்தை அனைவரும் கணித்தோம் , இந்த புத்தாண்டில் மேலும் எளிதாக்குகிறேன் என்று தலைவர் அடுத்து ஸ்வரம் பாடியது சிந்து பைரவி , ஆம் தலைவர் எடுத்த எடுப்பிலேயே தில்லான மோகனாம்பாள் பாடி அரங்கை நகைக்க வைத்தார் , தொடர்ந்து சிந்து பைரவியை பெரிதாய் ஸ்வரம் பாடினார் , மிகவும் அருமையான ராகம் தானம் பல்லவி ஹம்ஸவிநோதினி நிறைவுக்கு வந்தது.


9) தலைவரின் பழைய பாணியான ராகமாலிகை கடைசி ஸ்வரத்தில் அப்படியே துக்கடா பாடும் வழக்கத்தை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வந்தார் , அருணகிரிநாதர் திருப்புகழ் அமுத மூறுசொ லாகிய தோகையர் பொருளு ளாரையெ னாணையு னாணையெ பாடினார் , என்னே அருமையான சந்தத்தோடு எழுதியுள்ளார் அருணகிரிநாதர் அதை என்னமாய் பாடுகிறார் தலைவர் , அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள் என்று பாட கேடி போல் விழித்தான் திருமலை , அவனக்கு கச்சேரி சைவமாகப்போவதில் பெருத்த கோவம், கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி வரிகளில் கண்களில் கண்ணீர் வரவைத்தார் தலைவர். திருவு லாவுசொ ணேசர ணாமலை முகிலு லாவுவி மானந வோநிலை சிகர மீதுகு லாவியு லாவிய பெருமாளே என்று தலைவர் உருகி பாட கையெடுத்து கும்பிட்டோம் முருகப்பெருமாளை.


10) ஆழ்வார்கடியான் அகம் மகிழ ஆண்டாள் வந்தாள் சபைக்கு , ஒருத்தி மகனாய் பிறந்து பெஹாக்கில் தலைவர் பாட நான் திருமலையுடன் குதித்து குதித்து ஆடினேன் , ஆடேய் நீ அவரோடும் ஆடுகிறாய் என்னோடும் ஆடுகிறாய் என்று குட்டினான் திருமலை , நான் நெருப்பென நின்று முறைத்துவிட்டு பாடலில் என்ன பறிகொடுத்தேன். திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் வரிகள் என்றும் நம்மை கிறங்கடிப்பவை , பெஹாக்கிற்கு ஈடான ராகம் ஏது நம்மை சிலிரிக்கவைக்க.கச்சேரியின் பெரும்பாலான நேரங்களில் எனக்காக கச்சேரிக்கு வந்திருந்த ஸ்ரீதேவி அமைதியாக அமர்ந்திருந்தாலும் , இந்த பெஹாக் அதிகம் கேட்ட பாடல் என்பதால் நன்றாக ரசித்து கேட்டது எனக்கு மனமகிழ்வை தந்தது.


11) அடுத்து கருணாநிதான் ஸ்வாதி மாமன்னர் பாடல் சாருகேசியில் பாடினார் தலைவர் , இந்த பாடல் என் வாழ்வின் ஒரு அங்கம் முதன்முதில் 2012 பாரத் உத்சவ் நவம்பர் 7ஆம் தேதி ஸ்ரீதேவியுட்ன கேட்ட பாடல் , ஒருத்தி மகனாய் போன்றே இதுவும் ஸ்ரீதேவிக்கு பரிச்சயப்பட்ட பாடல் , அந்த துமாரி பன்ஸிலாலா வரிகள் எப்போதும் கரைவோம் இருவரும். கண்ணனை எப்படியெல்லாம் ரஸித்து ரஸித்து எழுதியுள்ளார் ஸ்வாதி திருநாள் ,ஜப் ஸ்யாம் சுந்தர் கேதான் வரிகளில் என்னையும் அறியாமல் விம்மல் , ஜனமு ஜனமு இவர் பேரிசையிலேயே இருந்தது விட வேண்டும் என்று தோன்றும் வகையில் பாடினார் பாவை. அந்த பதுமனாபு பிரபு எல்லா பாடலில் வந்தாலும் இந்த பாடலில் தலைவர் பாடும் போது கண்ணீர் கசிந்தோடியது.


12) தொடர்ந்து வைஷ்ணவம் தேரில் ஏறினான் வசுதேவ பாலன் ஸ்ரீ கோபாலன் பாபநாசம் சிவன் பாடல் கல்யாணியில் பாடினார் தலைவர் , இகல்கதாதரன் பராக்கு என்றுரைத்த சகாதேவன் நகுலன் சாமரை வீச தனுஞ்செயன் குடை பிடிக்க தேரில் ஏறினான் அடேயப்பா என்னே வரிகள் என்னே விவரிப்பு , அந்த தேரில் ஏறினானில் பல சங்கதிகளை போட்டு அமர்களப்படுத்தினார் தலைவர்.


13) கோபாலகிருஷ்ணபாரதி க்ரோத பாரதியாக ஆகிக்கொண்டிருக்க தலைவர் அகிலசராச்சர என்று விருத்தம் துவக்கினார் கமாஸில் , அடடா இந்த திருவளர் மயிலையின் பாடலை 2014இல் தலைவர் காபாலியில் பாடியது ஒரு தினுசு , தற்போது பாடும் இந்த முறையை ஐஐடியில் பாடியபோது ஆரம்பித்தார் , அதை முதன்முதலில் கண்ணுற்றோரில் அடியேனும் ஒருவன் , என்னே அழகாய் பாடுகிறார் எத்தனை சங்கதிகள் எத்தனை நளினங்கள். பாபநாசம் சிவனை வைணவத்தில் பாடிய கையோடு சைவத்திலும் பாடினார் , அந்த காபாலியில் தான் தலைவர் எத்தனை மாற்றங்களைத் தருகிறார் , அவையே 500 மீட்டர் தொலைவில் இருந்த காபாலியை தொழுதது , அரிபிர மனும்திரு வடிமுடி தொடர்வரும் அடியவ ரெளியை. எனையாள வா என்று தலைவர் பாட அரங்கமே எங்களை இப்படியே ஆண்டு கொண்டிரு சஞ்சய் என்றது . ஒரு பிக்ஷாடந உருவொடு தெருவில் உலாவரும் சந்த்ர கலாதர பரதேவதை தாக்ஷாயணி கற்பகப் பச்சைக் கொடிபடர் ஜடாதர வரிகளில் நிதானம் அடுத்த வரிகளான அழகும் உருவும் எழுதரிய துரீயாதீத. ஜடதிமிர திவாகர மழு திரிசூலம் புலியதள் பூதி மயங் கெழில் வதந நிசாகர வரிகளில் மித வேகம் , உனை மறவாதருள் உன தடியாரொடும் உறவு மறாதருள் கபாலியே எனை யுனதத்புத சரண மலர்ப்பத நிழலினில் வைத்தருள் கபாலியே வரிகளில் உட்சபட்ச வேகம் இப்படி இவர் பாடுவதற்கெல்லாம் வாசிக்க நெய்வேலியார் வரதரால் மட்டுமே முடியும் , கபாலி தெய்வம் என்றும் மறவாதே இவரின் பேரிசையை.


14) அமைதியாய் கேட்டுகொண்டிருந்த கோபாலர் துள்ளி குதிக்க வைத்தார் எப்போ வருவாரோ எந்தன் கலிதீர பாடி , ஜோன்புரியில் தலைவர் பாட , இப்போ வருவார் என்று அனைவரும் அரங்கின் வாயிலை பார்த்தனர் சிதம்பரநாதன் வருகையை எதிர்பார்த்து , தில்லை அம்பலத்தான் வந்தார் மீண்டும் அரங்கிற்கு , கோபாலரை கட்டியணைத்து மகிழ்ந்தான் திருமலை .


மணி 13.50 இன்னமும் 10 நிமிடம் இருக்கிறது யாராவது நேயர் விருப்பம் ஆரம்பித்தால் நம் பங்கிற்கு பாரதஸாம்ராஜ்ய சுகி கோரலாம் என்று காத்திருந்த அந்த விநாடியில் நமக்கு பல்பு வழங்கி மங்களம் பாடி முடித்தார் கச்சேரியை , வழக்கமாக சனவரி 1 கச்சேரி மகிழ்வு தந்தாலும் என்ட் கார்டு போடும் போதும் சோகம் கப்பிக்கொள்ளும் இனி , ஆஞ்சநேயர் கோவிலிலா அல்லது நாயகியா என்று அடுத்த கச்சேரி கவலை கண்முன் வரும் , தற்போது தமிழும் நானும் வாணி மஹால் , மீண்டும் சஞ்சய் சபா போன்ற அறிவிப்புகளால் , அந்த தருணத்தை மாத்திரம் மகிழ்ந்து அனுபவித்து கைவலிக்க கரவொலி எழுப்பினோம். கோபாலகிருஷ்ணபாரதியும் , ஆழ்வார்கடியானும் பட்டப்பா நோக்கி படையெடுக்க நாம் இல்லாளோடு இல்லம் நோக்கி நடந்தோம் , தந்தோம் தொந்தோம் என்று . போதும் போதும் , வந்தோம் கேட்டோம் சென்றோம் என்று இரு என்பது போல் முறைத்தாள் ஸ்ரீதேவி .சரிதான் சூலிசுடாரணியாமளி ...... மகமாயி என்றோம் நாம்.






 
 
 

コメント


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page