top of page
Search

பெங்களூரில் தலைவரின் நினைக்கத்தகுந்த ராகேஸ்ரீ கானடா வராளி பொன் நேரங்கள் இந்துஸ்தானி இன்ப உலா!

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Feb 10, 2023
  • 7 min read

ree

ree

சனவரி 1ஆம் தேதி இசைத்திருவிழாவிற்குக்ப்பின் , சஞ்சய் இசையின்றி பாலைவனமானது சென்னை , பெங்களூரூ இதோ சோலைவனம் என்று ஸ்ரீராம லலிதா கலா மந்திரம் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் வசந்தகால திருவிழா நமக்கு சிகப்பு ஜமக்காளம் வீசியது , நான் ஜனா சுவாமி மூவரும் இரண்டடுக்கு விரைவுந்தில் விரைந்திட திட்டமிட , கணைசி விநாடியில் ஜனா முன்பே சென்றுவிட , கடைசிவிநாடிக்கும் அடுத்த விநாடிக்கிடையே லட்சுமி நரசிம்மர் சேர்ந்துகொள்ள மொத்தத்தில் மூவரணி புறப்பட்டோம் லூரூ. இருபதாம் முறையாக சோதித்து மகிழ்ந்தோம் நல்ல வேளை கோபாலகிருஷ்ண பாரதி , ஆழ்வார்கடியான் வரவில்லை. வழமை போல் சங்கொலி ராயன்னா நிலையத்தின் எதிரிலிருக்கும் பெங்களூர் சந்தித்தவரிசையயில் (மெட் ரோ) வெறும் பதினைந்தே ரூபாயில் கயசசமாஜம் அருகிலுல்ல மெட்ரோ நிறுத்தமான தேசியக்கல்லூரி இறங்கி அரங்கு வந்தோம். வழக்கம் போல் நாம் தான் முதலில் அடியெடுத்து வைத்த ரஸிகர்கள் , மண்ணின் மைந்தர்கள் பெங்களூரார்கள் கூட வரவில்ல , சிற்றுண்டி குழாம் மாத்திரம் வந்திருந்தனர் , மிக அருமையாக நேர்த்தியாக சுவையாக சுகாதாரமாக அவர்கள் தரும் உணவுப்பண்டங்கள் மிகவும் பிரசித்தி , விலை நம்ப முடியாத அளவு குறைவு. அரங்கில் சென்றால் முதல் ஐந்தாறு வரிசைகள் கலா மந்திரத்தாருக்கு ஒதுக்கி விட்டு மீதமிருந்த அனைத்து இருக்கைகளும் அனுமதி இலவசம் அடிப்படையில் தந்திருந்தார்கள். வழக்கமாக சபாரி உடையில் சன்னமான உருவமானாலும் கம்பீரமாய் பேசும் திருவாளர் ஜி.வி. கிருஷ்ணபிரசாத் இம்முறை சக்கரநாற்காலியில் கொண்டவரப்பட , காலம் மிக வேகமாக சுழல்கிறது என்பதை உணர்ந்தோம்.மூன்றாண்டுக்கு முன் நடையுடையாய் இருந்த இந்த நல்ல மனிதருக்க இந்த நிலை என்று மனம் வருந்தினாலும்.இத்தருணத்திலும் இவரின் இசையார்வம் கண்ணீர் வரவழைத்தது.மெல்ல மெல்ல அரங்கம் நிறையத்துவங்கியது , எங்கிருந்தோ வந்த காப்பி மணம் லாடு , பேடா , போண்டா இத்யாதிகளின் மணம் ஒரு பக்கம் இழுக்க , காட்டிரைச்சலாக பேச்சு சத்தம் கேட்க புரிந்தே விட்டது . கோபாலகிருஷ்ணபாரதியும் ஆழ்வார்கடியான் நம்பியும் வந்தே பாரத்தில் வந்து இங்கே வெந்தவற்றையெல்லாம் விழுங்கிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக அனைத்து களேபரங்களும் 5.30மணிக்கு அடங்கி , இசைமாமல்லர்கள் தலைவர் , நெய்வேலி வெங்கடேஷ் , வரதராஜன் , மோர்சிங் ராஜசேகர் உள்ளிட்ட கோஷ்டியார் காட்சி தர , திரை விலகியது.பாடல் பட்டியல் பார்த்த மகிழ்வை வெளிப்படுத்த இயலா நிலையில் இந்த சைவ வைணவ பித்துக்குளிள் நம்மை மிரட்டி உருட்ட , பெங்களூர் பெரியவர் செல்லப்பா அவர்கள் நம் இருக்கைக்கு அருகே அமர்ந்திட சற்றே அமைதி கொண்டனர் கோபாலர் திருமலை எதிரெதிர் துருவ இணையர்.


1) தரங்கம்பாடி பஞ்சநாத அய்யரின் ஆஹிரி வர்ண்ம் நின்னே கோரியுடன் துவங்கிற்று கானாசுரரின் கச்சேரி. வழமை போல் ஆஹிரி நீரோடையாய் துவங்கி சுழலாகி புனலாகி அருவியாய் பாய்ந்தது , முக்தாய் ஸ்வரம் சௌக்கியமாய் அரங்க வலம் புரிந்தது , தரங்கம்பாடியார் அருமையாக இயற்றிய இப்பண்ணை தலைவர் அழகாய் பண்பாடினார், அந்த நீவேயில் அரங்கே நீவே கதி என சரணடைந்தது தொடர்ந்து சிட்டை நிரவல் ஸ்வரங்கள் என் வழமையான வர்ணத்திற்குரிய உள்ளீடுகளுடன் வரதர் நெ்யவேலியார் ராஜசேகர் இசைக்கருவிகளும் களமாட அமர்களமாய் துவங்கிற்று கச்சேரி.


2) முத்துசாமி தீட்சிதரின் ஆனைமுகத்தானை போற்றும் பண் , சித்தி விநாயகம் அனிஷம் , ஷண்முகப்பிரியா ராகம். ஷண்முகப்பிரியாவை தலைவர் கையாளும் முறையே தனி இன்பம். எங்கு தொட்டாலும் பற்றிகொள்ளும் பெரும் நெருப்பு இந்த ஷ்ணமுகப்பிரியா , அதை பக்குவமாய் கையிலெடுத்து அதில் சமஸ்கிருதத்தில் ஓவியம் தீட்டினார் தலைவர் , நெய்வேலியாருக்கு திருநெல்வேலி அல்வா வா அல்லது ஷண்முகப்பிரியாவிற்கு வாசிப்பா என்றால் பிந்தையதையே தேர்ந்தெடுப்பார். அத்தனை வாஞ்சையுடன் வாசித்தார் பாடலுக்கு , தரைவர் சரணத்தை அருமையாக பாட மோர்சிங்கும் வயலினும் அருமையான சிங்குடன் பின்தொடர்ந்தது , தாஸ ஜனா ஹிருதய விராஜிதத்தில் தலைவர் ஜனாவை அகமகிழச்செய்து , ஷண்முகப்பிரியாவின் முழு பரிமாணத்தையும் கொட்டி தொடர்ந்தார் சரணத்தை . மெல்ல பாடல் முடிவுக்கு வருகிறது என்று எண்ணிய தருணத்தில் நிரவல் ஸ்வரத்தைத் துவக்கினார். அதானே லேசில் விடுவாரா சோமு ராகத்தை என்று கூறினார் கோபாலகிருஷ்ணபாரதி. கச்சேரியின் இரண்டாம் பண்ணிலேயே கணக்கு வம்பிழுப்பை துவக்கினார் நெய்வேலியாருடன் , மோர்சிங்காரும் சேர்ந்து கொள்ள வரது உதட்டோர புன்னகையுடன் மேலும் மெருகேற்ற , அரங்கமே ஸ்தம்பித்தது இசைப்பேராசான் சஞ்சய் சுப்ரமணியனின் ஷண்முகப்பிரியா ஸ்வரத்தில். கல்பனாஸ்வரத்தில் பாடல் அடுத்த கட்டத்திற்கு சென்றது , கயனசமாஜம் சஞ்சய் காடத்தில் திளைத்தது , வாயிலில் இருந்த மெட்ரோ சுரங்கத்தில் எதிரொலித்தது , இசையரசின் ஸ்வரத்தை. வரதரின் பதிலுரை படு அமர்களமாய் தரப்பட்டது , தரம் என்றும் நிரந்திரம் வரது வாசிப்பில். இந்த இருவருக்கும் அருமையான நாதம் தரும் பெருவாய்ப்பை விநாடி விநாடியாய் அனுபவித்தளித்தார் நெய்வேலியார். இரண்டாவது பாடலிலேயே கச்சேரி உச்சம் பெற்றது இந்த உன்னதர்களின் உயர்தர இசையால்.முடிப்பில் அதுவரை செய்தவற்றிற்கு நேரெதிராய் அனிஷம் அனிஷம் என்று மெல்லிய தென்றலாய் தலைவர் முடிக்க ,அதெல்லாம் முடியாது என்று ஷண்முகப்பிரியாவை ஆக்ரோஷமாய் வாசித்து முடித்தார் நெய்வேலியார்.


3) புயலுக்குப்பின் அமைதி , இசைப்பிரளயத்திற்குப்பின் சில்லென்ற பெங்களூர் சீதோஷ்ணத்தை ஒத்த சூழலை அரங்கில் பாய்ச்சினார் தலைவர் தனது மோஹன ஆலாபனை மூலம். சஞ்சய் மோஹன ரூபம் அரங்கில் அமுதை பாய்ச்சியது. காதினிக்க கேட்டோம் மோஹன ஆலாபனையை , தலைவரின் வழமையான உடல்மொழியான காற்றில் விரலால் கோலமிடுதலை அழகாய் செய்தவாறு ஆலாபனையை விரிவாக்கினார். கூரைவரை நம் பார்வை செல்லும் தலைவரோ கூரைக்கு அப்பால் நம்மை இட்டுச்செல்வார் , உப்பரிகையின் உச்சாணியில் அமர்ந்து பார்த்தால் வான் வீதி , கண்ணை கொள்ள கொள்ளும் மேககூட்டம் அதில் ஒன்றை பிடித்து அதில் நம்மை உட்கார வைத்து வீதி உலாவ செய்தார். என்னே இனிமை என்னே குளுமை , எங்கும் பனிமயம் வெண்மை என்று மனம் எங்கோ சென்றது. வான்வெளி மேகத்தின் மீதேறி பெங்களூரை கண்டு களித்து இறங்கினோம் , வரதர் அதுக்குள்ள என்ன அவசரம் என்று தன் வயலின் வானை காண்பித்தார்.கண்டு கண்டு என புரந்தர தாசர் பாடலை பாடினார் தலைவர் , நாம் கேட்டு கேட்டு திளைத்தோம் , முதல் சரணத்தில் மோஹனைத்தை கொட்டி பாடி , தந்தே தாயேயில் நிரவல் அமைத்தார். சொந்தமில்லை மந்தமில்ல தந்தைய தாயூம் நீயே கிருஷ்ணா என்று மருகி பாடியுள்ளார் புரந்தரர் , தலைவர் அதை அழகாய் உள்வாங்கி அவை சிலிர்க்க பாடினார் நிரவலில் . வரதரும் ராஜசேகரும் அருமையான நிரவலை திருப்பியளிக்க திருப்தியாய் இருவருக்கும் வாசி்த்தார் தலையாட்டியார் , மிக அருமையாக அரங்கேறியது கண்டு கண்டு எனும் மோஹன கற்கண்டு.


4) மோஹனத்தை தொடர்ந்து காதினில் தேன் பாய்ச்ச நானடா இது என் கானடா என்று தலைவர் கானடா ஆலாபனையை துவக்கினார். எத்தனை அழகு இந்த ஆலாபனை , கானடாவில் யாரும் தலைவரை நெருங்கக்கூட முடியாது , கற்பனை வளம் நிறைந்ததோர் ஆலாபனை , பெங்களூரின் குளுமையை விஞ்சியது. வழமையாக 6 அல்லது 7 நிமிடங்கள் நீடிக்கும் கானடா 10 நிமிடத்தை தாண்டு நம்மை பரவசப்படுத்தியது , நீண்ட ஆலாபனை நம்மை தீண்ட தீண்ட இன்பம் புசித்தோம். ராகத்தை எங்கெல்லாம் தட்ட எண்ணினாரோ அங்கெல்லாம் தட்டினார் ஜலதரங்கம் கலைஞர் போல. ஆசை தீர தலைவர் ஆலாபனை புரிய வரதர் சமர்தராய் மறுஒலிபரப்பு செய்து , ஆஹா எத்தனை சௌக்கியமான ஆலாபனை வரது ஆலாபனை. பராமுகமேலானம்மா கிருதி ஜி.என்.பி தந்த அரும்பெரும் கலை வடிவை கவனத்தோடு பாடினார் தலைவர், ஜி.என்.பி என்றாலே ஜெட் வேகம் தானே , கானடாவின் பண்பை விஞ்சி பாடல் மிக துரிதமாய் அமைத்துள்ளார் தலைவரின் மானசீக குரு. நெய்வேலியார் பாடல் முழுதும் பறந்து பறந்து வாசித்தார். சரணத்தில் சற்றே வேகத்தை குறைத்து ராகத்தை அருமையாக தந்தார் தலைவர் , பாடலில் . மஹாதேவரின் மதிரஞ்சித்தவதனி அகம் மகிழ அமைந்தது கானடா.


5) அடுத்த ஒரு குரு ஆலாபனை , சுசரித்ரா போல கேட்க ஒருமுறை பட்டியலை சரிபார்த்தோம் , மாரரஞ்சனி ராகம் , தலைவர் இதற்குள் மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை என்று கந்தர் அநுபூதி பாடிவிட்டு வடிவேல் முருகையனே பாடினார் கவி குஞ்சர பாரதி பாடல் , பன்னிரு கையோடு வந்து என்ன ரட்சி என்கிறார் கவிகுஞ்சரர் , நம் சுப்ரமணி பாடினார் வடிவேல் வாராமலும் இருப்பாரோ , வந்தார் சரவணபெலகொலாவிலிருந்து . தலைவர் இதற்குள் ஸ்வரத்தில் நம் மனதை அள்ளினார். கணக்குகள் நிறைந்த ஸ்வரம் . நெய்வேலியாருக்கு நல்ல தீனி , மெல்ல மெல்ல தலைவரின் கல்பனாஸ்வர குதிரை அரங்கில் பாய்ந்தது , அதை அடக்க யாரால் தான் முடியும் மூச்சிரைக்க பின்தொடர்ந்தனர் நெய்வேலியாரும் வரதரும்.


6) அடுத்து வராளி , இந்த வராளி சீசனில் தலைவர் பாடி கேட்ட இராகம் , வராளியின் கருணையும் உருக்கமும் கேட்போர் ஸ்தம்பிக்கச்செய்யும். அதிலும் இவர் இராகத்தில் அடி ஆழத்தை அலசி ஆராயந்து ஆலாபனையை மிக அருமையாக வழங்க , சபை வராளியில் கசிந்துருகி மெய் சிலிர்த்தது. தொடர்ந்து வரது வராளி ஆழியிலிருந்து வந்த நல்முத்தாய் பிரகாசித்தது , என்னே ஈடுபாட்டுடனான வாசிப்பு , தலைவர் ஆலாபனையில் எல்லையில் , வரதர் வாசிப்பிலும் அது வெளிப்பட்டது , அதே நேரத்தில் தலைவர் பயணத்தடத்தையும் தவறவிடாமல் வாசித்தார் வரதர். நோரேமி தியாகராஜர் பாடல். ஸ்ரீராமர் பண்பாடும் பாடல் , என் போன்ற பாபங்கள் செய்யும் பாபிக்கு உன்னை குறித்து சொல்ல வாயேது என்கிறார் தியாகையர். உன்னை விட பாபி இருக்க முடியாது திருமலை என்றார் கோபாலகிருஷ்ணபாரதி. திருமலை என்னை முறைத்தான். நான் தான் பாபி என்று ஒப்புக்கொண்டேன். பாபுலாருகுரு வஸ்யுலு காக பண்ட்லிகிலிஞ்சுசு தருணுலகையில் நிரவல் அமைத்தார் தலைவர். பாவிகள் அறுவர் - உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, மோகம், செருக்கு, காழ்ப்பு. என்று திருமலை நீண்ட விளக்க்த்தை துவக்கினான் வேணாம் பாபி என்று அமைதிபடுத்தினார் கோபாலர்.தலைவர் இதற்குள் வராளி சுனாமியில் அரங்கை மூழ்கடித்து ஸ்வரமின்றி பாடலை நிறைவு செய்தார்.


7) சமயோசித பாடகர் என்றால் அது தலைவர் தான் , அரங்கில் உள்ளோர் வதனங்களை கண்டே அறிந்து கொள்வார் . நோரேமி வராளி சற்றே உருக்கத்தில் அரங்கை உலுக்கியிருக்க , அவைக்கு ஒரு புது தெம்பு தர , பட்டியலில் இல்லாத பஹூதாரியை இறக்கினார் , ராமாசாமி தூதன் நானடா அடடா இராவணா , அருணாசல கவி பாடல் . நெய்வேலியாருக்கு அல்வாவின் மீது பனிக்கூழ் தந்தது போல் பாடல் அமைய பிரமாதமாய் வாசித்தார் . பாடல் முழுதும் அனுமன் இராவணனை நல்ல அதிகார முறையில் அறிவுறுத்தும் வகையில் எழுதியுள்ளார் அருணாசல கவி. நாம் பெரிதும் விரும்புவது அந்த சீதையை விட்டு பிழையடா . 5நிமிடத்திற்கு முன்னால் இருந்த உணர்வு நிலையை புரட்டி போட்டது ராமசாமி தூதன் நானடா.


8) மீண்டும் புரந்தர தாசர் பாடல் , முகாரி நின நம்பிதே நீரஜசாமா , அடுத்து . சரணம் பந்தேனோ பஹூஜன்மதல்லி அருமையாய் தந்தார் தலைவர் வழமை போல். அங்கேயே ஸ்வரத்தை துவக்கி பிரமாதப்படுத்தினார் பாடலை . நின்னே நம்மிதே பாடல் புரந்தரர் ஆனந்தபைரவியில் மெட்டமைத்த பாடல் , அதை நேரெதிர் சுவையான முகாரியில் எத்தனை அழகாய் தருகிறார் பார் என்று மெய்சிலிர்த்தார் கோபாலர். தலைவர் இதற்குள் முழுவீச்சாய் கல்பனாஸ்வரத்தில் சண்டமாருதம் புரிந்தார். ஏறத்தாழ நான்கு நிமிடத்தை கடந்தது தலைவரின் ஸ்வராபிஷேகம் , இசையின் உச்சத்தை இவர் போல் தொடுவார் யாருளர். ஏழிசையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த பெருமகனுக்கு ஈடு தந்து வாசிப்பது சாதாரண காரியமல்லை , வரதர் நெய்வேலியார் போன்ற ஜாம்பவான்களுக்கே அது சாத்தியம் என்று வாசித்துக்காட்டினர்.


9) அந்த நாளின் கதாநாயகி ராகம் தானம் பல்லவி ராகேஸ்ரீ , பாகேஸ்ரீயின் ஒன்று விட்ட அக்காள் மகள் இந்த ராகேஸ்ரீ , கேட்கும் விநாடியிலேயே நம்மை நாம் இழக்கச்செய்யும் ஒரு அதி அற்புதமான மெல்லிசை ராகம் , நாம் பல முறை பதிவிட்டபடி தலைவர் மாத்திரம் இந்துஸ்தானியில் சென்றிருந்தால் அதை தோற்றுவித்த தான்சேன் முதல் படே குலாம் அலி கானை நினைவுபடுத்தும் நிலையில் பாடகர் ஆகியிருப்பார். அத்தனை சரளமாய் இந்துஸ்தானி ராகங்களை தலைவர் அநாயசமாய் கையாளுவார் , சாருகேசி பெஹாக் என்று சொல்லிக்கொண்டே போகலாம் , இந்த ராகேஸ்ரீயை விட்டு வைப்பாரா , விந்திய மலையில் கொண்டு நிறுத்தினார் நம்மை , அவர் உருவாக்கிய பனிப்புயல் நம்மை சுழற்றி எடுத்தது , நேரே செல்லும் பாதையே தெரியாமல் , அதே நேரத்தில் அந்த பயணத்தின் ஒவ்வொரு விநாடியும் மனம் மகிழ்ந்து குளிர்ந்து பயணித்தால் எப்படி இருக்கும் , அப்படி இருந்தது தலைவரின் ராகேஸ்ரீ ஆலாபனை , வரதர் பனிப்புயலில் பனிக்கூழை தந்து ருசித்து கொண்டே பயணம் செல்லுங்கள் என்று நம் மகிழ்வை இரட்டிப்பாக்கினார். தொடர்ந்து தானிதசூரர்களின் தானம் துவங்கியது , சமீப காலமாக தானத்தை துவங்கும் போது மிக மிக நிதானமாக துவக்கும் முறையை பின்பற்றுகிறார் தலைவர் , இந்த தானமும் விதிவிலக்கல்ல , நீரோடையில் ஓடத்தில் ஓய்யார பயணம் போல் இருந்தது தானம் , மெல்ல மெல்ல அருவி நோக்கி நீர் பயணிக்க தானமும் சுழன்றாடியது , தானத்தில் சிறந்த தானம் சஞ்சய்தானம் என்பதை மீண்டுமோர் முறை அவைக்குக்காட்டினார் தலைவர். என்னதான் ராகேஸ்ரீ இந்துஸ்தானியாக இருந்தாலும் நம் அசுரசாதகர் மதுரை சோமுப்பிள்ளையின் செல்லப்பிள்ளை இந்த ராகம் , சமீபத்தில் தமிழிசை சங்கத்திலும் தலைவர் நினைக்காத நேரமில்லை பாடியது நினைவுக்கு வந்தது , ஆனால் இவர்தான் பல்பளிக்கும் பாகுபலியாயிற்றே , எனவே வேறு ஏதாவது பல்லவி பாடுவார் என எதிர்பார்க்க , தலைவரோ நினைக்காத நேரமில்லை முருகா , நினைந்து நினைந்து உருகிப்பாடி பாடினார் , ஆம் இது சோமு ஸ்பெஷல் , தலைவர் ஒரு முறை கிரிக்கெட் வீரர்களை கர்நாடக சங்கீத பாடகர்களோடு ஒப்பிட கேட்டபோது , சேவக் என்றதும் சோமு என்றார். அத்தனை பிரியம் அவர் மீது , பல்லவி கணக்கீடுகள் கனகச்சிதமாய் அரங்கேறிற்று , வரதரின் பதிலுரை அருமையிலும் அருமை , ஸ்வரம் துவக்கினார் தலைவர். அடடா அதற்குள் ஸ்வரமா , அப்போ ஒரு ஐந்தாறு ராகமாலிகையாவது உண்டு என்று மகிழ்ந்து கேட்டோம். ஆனால் அடுத்த எட்டு நிமிடங்களும் ராகேஸ்ரீ ஸ்வரத்தையே மிக அற்புதமாய் கல்பனாஸ்வரத்தில் பிரமாதப்படுத்தினார் தலைவர். இந்துஸ்தானி பாணியில் அமைந்தது கல்பனாஸ்வரம் , தனி துவங்கியது , நெய்வேலியார் சமீபத்திய பாணியான இடக்கை வித்தை துவங்கிற்று , கும்கி தொப்பி என அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய அருமையான தனி தந்தார் முதல் சுற்றில் , அடுத்து மோர்சிங் கிங் ராஜசேகர் அவர் பாணியில் படு பிரமாதமாய் வாசித்தார். தலைவர் வரதர் நெய்வேலியார் என்று அனைவரும் அவரை ஊக்குவித்த விதம் மிக அருமை. அடுத்து மிருதங்கமும் மோர்சிங்கும் துவந்தம் துவக்கி நம்மை எங்கோ கொண்டு சென்றனர் , இரண்டும் காசாகரங்களின் அருமையான பங்களிப்பு தனியை மிகப்பிரமாதமாக்கின.நினைக்காத நேரமில்லையை தலைவர் பெங்களூர் மக்கள் மறக்காத தருணமில்லையாக்கினார் என்றே சொல்ல வேண்டும்.


10) பனிக்கூழை தொடர்ந்து பால்கோவா தந்தார் தலைவர். ஆம் நம் பேரின்ப பெஹாக்கில் ஜெயதேவரின் ஹரிரிஹ மூக்த வாது நிகரே பாடினார் , இது தலைவரின் தலைவர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்து மெட்டமைத்த பண் , பாடலின் பல்லவி சந்தன சர்சித நீல கலேவர வாகும் , ஜெயதேவர் அஷ்டபதி வேகத்திற்கு பெயர் போனது , இதுவோ இனிமைக்கு சான்று கூறியது. பீன பயோதர பார பரேன என்று தலைவர் பெஹாக்கில் பாட பாட அரங்கில் அனைவரும் சொக்கிவிட்டார்கள்.


11) மேலும் ஓர் தேமதுரம் தந்தார் தலைவர் பிலாவல் ராகத்தில் , சுவாதி மாமன்னரின் ராஜீவாக்ஷ பாரோ , கன்னடத்திலும் எழுதியுள்ளார் போலும் சுவாதி திருநாள் மஹாராஜா . கிருட்டினனை பெங்களூரில் மெய்மறந்து தலைவர் பாட , ராஜாஜி நகரத்து இஸ்கானிலிருந்து கசயசமாஜ் வந்தார் கிருஷ்ணர். அந்த பாரோவில் தான் எத்தனை நளினம். அனுபல்லவி சுதுதி நிலையவில் நம் கண்கள் பனித்தன. மச்ச கூர்ம ரூபதர என சரணத்தை தலைவர் பாட பாட வேணுகானத்தில் பெங்களூரார்கள் அகமகிழ்ந்தனர்.இந்த பாடலுக்கு மெட்டமைத்தவர் கோவா பாலகிருஷ்ணன் என்று உபரி தகவல் தந்தான் ஆழ்வார்கடியான் , என்ன சொல்கிறீர் வைணவரே , கோவாவில் கூட கர்நாட சங்கீதம் இருந்தததா என நாம் ஆச்சர்யப்பட , கோபாலகிருஷ்ணபாரதி , ஓய் திருமலை ஆட்டைக்கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாய் தலைவர் பாடல் பட்டியலையே நையாண்டி செய்கிறாயா , அது கோவா பாலகிருஷ்ணன் இல்லை வரதரின் குரு டி.வி.கோபாலகிருஷ்ணன் என்று கூறினார்.


12) அரங்கு இன்புற முண்டாசு கவியின் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் அடுத்து , தேஷ் ராகம் ஆம் மீண்டும் ஓர் இந்துஸ்தானி ராகம் , சஞ்சய் முத்திரை பதித்த ராகங்களில் ஒன்று இந்த தேஷ் இதில் அதிகம் துன்பம் நேர்கையில் பாடினாலும் , இந்த எத்தனை கோடி இன்பமும் அருமையாக இருக்கும், பாரத சாம்ராஜ்ய சுகி இன்னும்மு சுகம் ஆனால் ஏனோ தலைவர் அதை பாடுவதே இல்லை. அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பல பல நல்லழகுகள் சமைத்தாய் வரியில் நம்மையும் அறியாமல் உணர்வு வயப்பட்டோம். முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய் பக்தியென்றொரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா என்று தலைவர் பாட பாட , தேஷ் ராகத்தை அவர் பாடவில்லை , தேஷ் ராகம் தான் சஞ்சய் உள் புகுந்ததுள்ளது என்பதை ஓவ்வோரு முறையும் உணருவது போல் இம்முறையும் உணர்ந்தோம். இறைவா இந்த இறவாப்புகழுடை கலைஞனை எனக்கு காட்டிய உன் அருளை கனிவை என் சொல்வேன்.


சௌராட்டிரத்தில் மங்களத்தை தலைவர் பாடி முடிக்க 3 மணி நேரம் 5 நிமிட கச்சேரி நிறைவு பெற்றது , வழமையாக 3.30 மணி நேரம் நடக்கும் கச்சேரி ஏனோ சீக்கிரம் முடிந்துவிட்டது என்றான் திருமலை , 3.05 மணிநேரம் உனக்கு குறைவா என்று குட்டினார் கோபாலர் , நாயகனை அடுத்து நாயகியில் காண்போமோ அல்லது முத்தமிழில் வாய்ப்புண்டா என்று எண்ணியவாறு , மெயிலைப்பிடிக்க மெட்ரோ நோக்கி பயணித்தோம்.

 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page