top of page
Search

தமிழிசை வேந்தரின் மோஹனம்-கமாஸ்-கரஹரப்ரியா விஸ்வரூபம் ! சிலிர்ப்பளித்த சின்னஞ்சிறு கிளியே!

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 31, 2022
  • 8 min read

ree

ree

மதராஸ் வித்வத் சபை கச்சேரிக்குப்பின் ,பாரிமுனை ராஜா அண்ணமலை மன்றம் தமிழிசை சங்கத்தின் முழுத்தமிழ் கச்சேரி ! தலைவர் இந்த பருவம் முழுதும் தமிழ் பாக்களை பாங்குற பாடினாலும் , இங்கு தமிழ் பா பாடும்போது நமக்கு என்றும் சிலிர்க்கும். வித்வத் சபை போல் நவீன கட்டக்கலையை தெரிவு செய்யாமல் , தமிழ் நிலத்திற்கே உரிய பண்பாட்டை அடித்தளமாய் கொண்டு கட்டபெற்ற பிரம்மாண்ட அரங்கம் இந்த ராஜா அண்ணாமலை மன்றம் , நான் பெரும்பாலும் இங்கு குடும்ப சகிதமாய் கச்சேரி கேட்பது வழக்கம். முழுத்தமிழ் என்பதால் ஸ்ரீதேவிக்கும் வர விருப்பம். ஆதித்ய சஞ்சய் அட்சய ஸ்ரீ க்கு கச்சேரி முதல் பா முதல் இன்னும் எத்தனை பாட்டு என்று கேட்டாலும் , இங்கு வந்து கச்சேரி கேட்டு புகைப்படம் எடுப்பதென்றால் கொள்ள பிரியம். அட்சயா வழக்கமான கேள்வி துன்பம் நேர்கையில் பாடுவாரா ? இல்லம்மா இரண்டு வாட்டி பாடிட்டார் சீசனில் ! அப்போ நூலைப்படி ? அப்படியெல்லாம் இப்ப நினைச்ச பாட்டு பாட மாட்டார் , லிஸ்டு போட்டு பாடுவார் ! நூலைபடி லிஸ்டில் எப்போ வரும் ? இதே கேள்வி எனக்கும் இருந்தபடியால் , இன்னிக்கு சின்னஞ்சிறு கிளி பாடறார் என்றதும் மகிழ்வாய் வந்தாள் அட்சய ஸ்ரீ ! ஆமாம் சின்னஞ்சிறு கிளி பாடிட்டு பெரும்பெரு கோட்டான்னு உன் அப்பாவை பாடுவார் என்று வந்தமர்ந்தான் திருமலையப்பன். கோபாலகிருஷ்ண பாரதியோ கோட்டான் இனத்தை கேவலப்படுத்தாதே என மேலும் என்னை டேமேஜ் செய்தார். மேடையில் தலைவருடன் நெய்வேலியார் வரதர் கஞ்சீராவில் கோபாலகிருஷ்ணன் , ரேதஸ் ராகுல் இணையர். இந்த பருவத்தில் வயலின் மிரதங்கம் மாற்றமில்லை என்றாலும் , உபபக்க வாத்தியத்தில் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கி வருகிறார் தலைவர். வழமையாக 7 மணிக்கு துவங்கும் கச்சேரி இம்முறை 6.30மணிக்கே ஆராவாரத்துடன் துவங்கிற்று , வழமையான கூட்டத்தை விட இம்முறை கூட்டம் அதிகம். வித்வத் சபைக்கு நிரம்பி வழிந்த மயிலாப்பூர் வாசிகள் ஏனோ பக்கிங்காம் கால்வாயை கடந்த வர யோசிக்கிறார்கள் . நட்டம் யோசிப்பவர்களுக்கேயன்றி தமிழிசைக்கல்ல.


1) தலைவர் இந்த பருவத்தில் பாபநாசம் சிவன் பாடல்களை அதிகம் பாடுகிறார். அந்த வரிசையில் கபாலி பெருந்தெய்வத்தை காபாலி என்று மோஹனத்தில் எடுத்துக்கொண்டார். அடடா மோஹனம் கேட்ட நிமிடம் நம்மை சிக்கென பற்றிக்கொள்ளும் ராகம். அனுபல்லவி ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும் , அந்த ஆழி சூழில் தனக்கே உரிய முத்திரை பதித்தார் தலைவர். பூபாலரும் அட்டதிக் பாலரும் போற்றும் அற்புத சஞ்சய் மோஹனத்தை வழமை போல் பெரிதாய் செய்ய தீர்மானித்தார். ஸ்வரத்தை துவக்கி முதல் பண்ணையே பெரிதாய் விஸ்தாரமாக எடுத்துக்கொண்டார். நெய்வேலி வரது கோபாலகிருஷ்ணன் கூட்டணி மிக அருமையாக அவரின் உள்ள ஓட்டத்தை அறிந்து செயலாற்றினர் தத்தம் வாத்தியங்களில். மதி புனல் அரவு கொன்றை தும்பை அருகு மத்தை புனை மாசடையான் பாட பாட கோபாலர் அகமகிழ்ந்தார். விதி தலை மாலை மார்பை உரித்த கரிய வெம்புலியின் தோலுடையான் என்று தலைவர் சரணத்தை அழகுறபாட அரங்கம் தில்லைக்கூத்தனை எண்ணி திளைத்தது. அதிர முழங்கும் உடுக்கையும் திரிசூலமும் அங்கியும் குரங்கமும் இலங்கிடும் கையான் , துதி மிகு திருமேனி முழுதும் சாம்பல் துலங்க, எதிர் மங்கையர் மனம் கவர் ஜகன் மோகன ! ஆஹா என்னே அழகாய் இயற்றியுள்ளார் தமிழ் தியாகராஜர். தென்னாடுயை சிவன் அரங்கில் அனைவருக்கும் அருள்பாலித்தார் , எங்கே எங்கே என்று திருமலை நக்கலடிக்க , கோபாலர் உன்மத்தக்கார உச்சத்தில் பார் என்று மேலிருந்து தூக்கிய திருவடியான் சிலையைக்காட்டினார் , தலைவர் நிரவல் ஸ்வரத்தை அற்புதமாய் அரங்கேற்றினார். காபாலித் தெய்வம் மயிலையிலிருந்து பாரிமுனைக்கு பயணித்தது. முதல் பாடலே 10 நிமிடத்தை தாண்டி பயணித்துக்கொண்டிருந்தது. அற்புதமான நிரவல் ஸ்வரத்தை தொடர்ந்து தலைவரின் முத்திரை க்லபனாஸ்வரம் , அரங்காண்டது. சஞ்சய் சுப்ரமணியனுக்கு வாசிப்பது கடினம் , அதிலும் கல்பனாஸ்வரத்துக்கு வாசிப்பது ஆகக்கடினம் அதற்கு ஆகச்சிறந்தவர்கள் வரதரும் நெய்வேலியாரும். என்னே வேகமாக பாடுகிறார் அவருக்கு ஈடு தந்து வாசித்தல் அடேயப்பா மகா வித்வத் வேண்டும் இந்த இருவருக்கும் அது நிரம்பவே உள்ளது. கபாலியில் தலைவர் ஒரு இசைப்பிரளயத்தையே உருவாக்கிவிட்டார்.


2) அடுத்து நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் ஆனந்தபைரவி ஆலாபனை. என்னே சுகம் என்னே சுகம் , அத்தனை அழகாய் தலைவர் இந்த ராகத்தை தரும்போது அள்ளி அள்ளி பருக பேரவா கொண்டது இசைப்பேரவை. ராகத்தை வளைதத்து நெளித்து உருட்டி நிமிரத்தி அதன் அழகை காட்டுவதில் தலைவருக்கு இணை தலைவரே . வரதர் ஆனந்தபைரவியாய் ஆனந்தமாய் வாணித்தருளினார். அதே சுகவாசிப்பு இசை சுவாசிப்பு. காப்பதுவே உனது பாரம் தஞ்சை நால்வர் கிருதி. ஆம் நால்வர் தந்த பண் இது தஞ்சையா சின்னையா பொன்னையா சிவானந்தம் வடிவேலு இயற்றியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது , வேறொரு கூற்றில் தஞ்சைய பொன்னையா தன் தந்தை சிவானந்தத்திற்கு பாடியதாக அறிகிறோம் . கோபாலரைக் கேட்டால் ஞே என்று விழித்தார். தலைவர் பாடலில் எடுத்த எடுப்பிலேயே ஸ்வரத்தில் இறங்கி எழில் கூட்டினார். நெய்வேலியார் நாதம் படுபிரமாதம். இன்ப மென்பது அறியாத ஏழை எனை மறந்திடாமல் நின் புகழைப் பாடிடவே நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா ! என்று தலைவர் பாட தஞ்சை பிரகதீஸ்வர பெருந்தெய்வத்தை மனதார தொழுதோம். தஞ்சயை பெருவுடையார் சமீபத்தில் கண்டதால் அதன் பிரம்மாண்டம் வசீகரம் கீர்த்தி அனைத்தும் பாடலில் உணரப்பெற்றோம். நின் புகழைப் பாடிடவே வரியில் ஒரு மகோன்னதத்தை நிகழ்த்தினார் தலைவர், அடுத்தடுத்து சிவபெருமான் பாடலால் அரங்கமே சைவை கேந்திரமாயிற்று. திருமலை முகம் அஷ்டகோணலாயிற்று. மீண்டும் ஸ்வரத்தை பாடி , பாடலை அருமையாய் நிறைவு செய்தார் ஆலவாயானை பாடும் நம் ஆலாலசுந்தரனார். அந்த உனது பாரத்தில் தான் எத்தனை அழகாய் காட்டுகிறார் ஆனந்தபைரவியின் சௌக்கியத்தை.


3) ஆலாபனை லதாங்கி அடுத்து , மிக மிக உருக்கம்மான இராகம் இது. இப்பாடலையும் ஆலாபனையும் முன்பே கேட்டிருந்தாலும். இன்னமும் கேட்க தூண்டும் வசீகரம் நிறைந்த இராகம் இந்த லதாங்கி. வீணை கலைசர் பெரிதும் விரும்பி வாசிக்கும் இராகம் இந்த லதாங்கி. தலைவர் தனக்கே உரிய கம்பீரத்துடன் இராகத்தை மிக நுண்ணிய முறையில் அணுகினார். 7 நிமிடங்கள் நீடித்த இராகம் நமக்குள்ள பக்தி பரவசத்தை விளைவித்தது. தொடர்ந்து வரதர் லதாங்கியை வயலினில் அங்கியாக மாட்டி பாங்குற வாசித்தார். உருக்க நாயகனின் உற்ற சோதரர் அல்லவா அவரும் உருக்கத்தை வாரி வழங்கினார். முத்துத்தாண்டவரின் தரிசித்தளவில் முக்திபெறலாம் பாடினார் தலைவர் .மூன்றாம் சிவப்பாடல் , திருமலை மூக்கில் புகை வந்தது. மெல்ல மெல்ல தெய்வத்தன்மை இழந்து அரக்க உருவெடுத்தான் . கோபாலகிருஷ்ண பாரதியோ , சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான் என்று விளக்கமளித்தார். தரிசித்த அளவில் முக்தி என்பது எத்தனை பெரும் பேறு.தலைவரை கேட்டளவில் பக்தி பெறலாம் நாம்.


4) என்ன புண்ணியம் செய்தாயோ நெஞ்சமே சிவநாம யோகியின் பாடல் ஹூசைனி ராகம். அப்பனை பாடிய பின் சுப்பனைப்பாடினார் தலைவர். நான்காவது சைவப்பாட்டைக் கேட்டு நாற்பதாவது முறையாக பல்லைக்கடித்தான் திருமலையப்பன். முன்னம் இல்லாத அன்பு முறைத்து பொருளில் சென்று என்று அனுபல்லவியை அழகாய் விஸ்தாரப்படுத்தினார் தலைவர். கோபாலகிருஷ்ணன் ஓங்கி ஓலித்தார் . முருகா முருகாவென்று அவை வாழ்த்தியது. முடவன் வாயில் கொம்புத்தேனில் விளையாடினார் தலைவர். இந்த சொல்லாடலின் பொருள் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா , அஃதாவது அத்தனை உயரத்தில் இருக்கும் கொம்புத்தேன் எப்படி கிடைக்கும் முடவனுக்கு என்று நினைத்த மாத்திரத்தில் அதிலிருந்து ஒரு சொட்டு அவன் நாவில் விழதல் போன்ற தலைவரின் இசை கணக்குகள் தெரியாமல் போனாலும் ஏதோ நமக்கு தெரிந்த ஒன்றிரணட்டு ராகங்களில் பாடல்களை பாடி இந்த முடவனுக்கு தேனளிக்கிறால் தலைவர்.


5) மீண்டும் ஒரு சஞ்சய் கமாஸ் , கமாஸ் ராகத்தை பாடுவதென்றால் தலைவருக்கு தனி குஷி , சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பருவத்தில் தலைவர் கச்சேரிகளில்ல பெஹாக்கும் கமாஸூம் போட்டியிட்டு , கமாஸ் வெற்றி பெற்றது , அத்தனை கமாஸ் பாடினார். அவரின் கற்பூரம் நாருமோ , திருவளர் மயிலை என்று சொல்லி கொண்டே போகலாம். இந்த கமாஸ் ஆலாபனை பிரம்மாண்ட கரியை நினைவு படுத்தியது , நன்றாக அலங்காரம் செய்த் வேழம் ஆடி அசைந்து வீதி உலா வருவது போல் அமைந்தது தலைவரின் கமாஸ் ஆலாபனை. அம்பாரி சவாரி ஏழெட்டு நிமிடம் நடந்தேறியது.வரத கமாஸ் அண்ணனைப்போலவே கமழ்ந்தது வேழம் மீண்டும் வீதி உலா. சாமி மயூரகிரிவடிவேலா என்று அன்றைய 5வது சைவப்பண்ட , இரண்டாவது முருகப்பண் பாட திருமலையப்பன் தன் தண்டத்தை எடுத்து தனக்குத்தானே திருத்தாக்குதல் புரிந்து கொண்டான். புளகாங்கிதம் கொண்டோம் நானும் கோபாலரும். மழவை சிதம்பர பாரதி பாடல்.சோமசேகர குமாரா என்று தலைவர் அனுபல்லவியில் கமாஸை மேலும் மெருகூட்டினார். செந்தமிழ்கு அருள் புரி சாமியில் நிரவல் அமைந்து சுப்ரமணியசாமி , ஓம் சரவணபவகுருசாமி என்று தலைவர் கமாஸில் தன் நளின நடனத்தைத் துவக்கினார். குருவையும் சாமியையும் ஓருங்கிணைத்து குருசுவாமி என்று தொழுது , சுப்ரமணியசாமியை அரங்கிற்கு வரவழைத்தார் தலைவர். வரதர் நிரவல் பதில் அருமையாக அமையப்பெற பாடல் கடையில் சரவணபவ குருசாமியில் சற்று பக்கவாத்திக்காரர்களை வம்பிழுத்து கமாஸை முடித்தார் தலைவர்.

6) அன்றைய மாலையில் ஆறாவது சைவப்பண் தந்தையைப்பாடி தனையனைப்பாடி மீண்டும் தாயயை பாடினார் தலைவர். தண்டபாணி தேசிகரின் மாட்சிமிகுந்த தாயே , மீனாட்சி தெய்வம் நீயே , இந்தோளம் , இந்திரஜாலம் காட்டியது. காட்சியினாலுன்னைக் காண்பதற்கே அக

கண்ணில் நிறைந்து கருத்தில் உறையும் என்று அனுபல்லவியை இந்தோளத்தில் பிரமாதப்படுத்தினார் தலைவர், கஞ்சீரா மிருதங்கம் அருமையாக மின்னியது. அல்லும் பகலும் உள்ளங்கனிந்து அன்போடுன்னை பாடி நின்றேன் எல்லையில்லா இன்பம் தந்து ஏழையேனை வாழச் செய்வாய் என்று என்னே உருக்கமாய் உருகுகிறார் தண்டபாணியார். அவரை இத்தனை அழகாய் தலைவர் போல் உணர்ந்து பாடுவோர் யார். மீனாட்சி தெய்வம் மிகுந்த அன்போடு அருள் பாலித்தது அண்ணாமலை மன்றத்தில்.


7) ராகம் தானம் பல்லவி கரஹரப்பிரியா ,எந்த ராகம் பாடினால் நங்கை நல்லூர் சுவாமினாதன் முப்பத்தியிரண்டு பற்களும் ஒருங்கே காணலாமோ அந்த இராகம். ஆனால் கச்சேரி சுவாமி வரவில்லை. சரி அவருக்கும் சேர்த்து நாம் ரசிப்போம் என்று சுபா கூற அதானே என்று கரஹரத்தில் கவனம் செலுத்தினோம் , என்னே பிரம்மாண்ட துவக்கம் , மெல்ல மெல்ல இராகத்தை தலைவர் போல் அடுக்கி செல்வோர் யார். இந்த பருவத்தில் நாம் உணரும் அந்த நேசல் ஆலாபனை , எம்.டி.ஆர் தும்மல்கள் என்று அமர்களப்படுத்தினார் இராகத்தை. தொடர்ந்து பிருஹாக்களை வீசிட அது அவையெங்கும் மின்னியது. ஏறத்தாழ 13 நிமிடங்கள் அற்புதமாய் ஆலாபனை புரிந்து கடையில் முடித்த அழகை என்ன சொல்லி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. வரத கரஹரப்பிரியா வாஞ்சையோடு வாசித்தருளப்பட்டது , வரதுவின் ஞானத்திற்கு ஏது ஒப்பீடு . அமர்க்களமாய் வாசித்தார் இராகத்தை , எத்தனை தாக்கம் தருகிறார் என்பதை சொல்ல முடியவில்லை , அதுவும் தலைவர் எங்கெல்லாம் நகாசு வேலைகள் செய்தாரோ எங்கெல்லாம் தங்க முலாம் பூசினாரோ அங்கெல்லாம் செய்து மீள்செல்லல் நிகழ்வை ஏற்படுத்தினார் வரதாழ்வார். தொடர்ந்து தானம் எக்ஸ்பிரஸ் துவங்கியது , நல்ல தரமான தானம் சஞ்சய் வரத தானம். தானம் என்பது தாளத்தோடான ஆலாபனை என்றே சொல்லலாம். அஃதாவது தாளத்தை எந்த ராகத்தில் ராகாம் தானம் பாடுகிறோமோ அந்த ராகத்தில் ஆலாபனை செய்யுதல் . சொற்கட்டுக்களை கவனமாக செயலாற்ற வேண்டும் அதே நேரத்தில் இராகத்திலிருந்து பிறழக்கூடாது , தலைவர் இதில் கரை கண்டவர் என்பதால் மிரட்டினார் தானத்தில். அப்படியா சேதி என்று வரதர் அருமையாக பின்தொடர்ந்தார். வரதர் போல் வயலினில் தலைவரை அக்குவேராக ஆணிவேராக அறிந்தார் இல்லை , மிக உன்னதமான தானத்தை வழங்கினார் . வழமை போல் தானத்தின் கடை பகுதியில் ஜெட்வேகத்தில் பயணித்து தரையிறக்கினார் தானத்தை ஆநம்த அந்ம்த என்று விளையாடி தானம் முடித்தார் தலைவர்.பல்லவியில் முருகா ஒருகாலும் உன்னை மறவாமல் உனது திருவடியை நினைப்போம் என்று சைவக்கச்சேரி தான் என்பதை அறுதியிட்டார் தலைவர். திருமலை முகத்து திருப்பிக்கொண்டான். வழமைபோல் கண்ககுகளை திருப்தியாக பல்லவியில் முடித்து நிரவல் ஸ்வரம் பாடினார் தலைவர். கச்சிதமான கல்பனாஸ்வரத்தை தொடர்ந்து பந்துவராளியில் ஸ்வரம் துவக்கினார் ராகமாலிகையில் , இந்துஸ்தானி நெடி வீசியது , கா பா மா க ரீ ச ச என்ற தொனியில் ஸ்வரம் செய்து நுஸ்ரத் பதே அலிகான் போல் ஸ்வரத்தில் சிலேடைகள் செய்தார் தலைவர். .தொடர்ந்து வரதர் பந்துவராளியை பதமாய் வாசிக்க இதமாய் விழுந்தது செவியில், கே.வி.ஜி அருமையாக வாசித்தார் வரதர் நெய்வேலியாருடன் . அடுத்து தலைவரின் முத்திரை பதித்த தர்பாரி கானடா ,ஆரம்பித்த அடுத்த விநாடியே நம்மை திக்குமுக்காடச்செய்தது இராகம் , துவக்கம் என்னவோ கோவர்த்தனகிரியை நினைவுப்படுத்தினாலும் , ஸ்வரம் மெல்ல மதுரை சோமுவை அவைக்கு அழைத்து வந்து மருதமலையை காட்டியது. அப்படி அப்படி அருமை அருமை சஞ்சய் என்று தாளம் போட்டார் சோமு , இசை அசுரன் மதுரை சோமுவை இந்த அவையில் தலைவர் நினைவு படுத்தியது , நமக்கு இனப்புரியா இன்பத்தை தந்தது , மகிழ்ச்சி தொண்டைய அடைத்தது. பொதுவாக வரது சமத்து தலைவர் திரைப்பட பாடலை கோடிட்டு காட்டினாலும் இவர் வாசிக்க மாட்டார் , ஒரு முறை மாத்திரம் பனிவிழும் மலர் வனம் வாசித்தார் சனவரி 1 கச்சேரியில் ஆனால் இந்த தர்பாரி கானடாவில் தலைவரை காட்டிலும் வெளிப்படையாக மருதமலை மாமணியே முருகைய்யா என்று வாசித்தள்ளினார் வரதர். அரவிந்தன் தருணம் அடுத்து பெஹாக் ஸ்வரங்கள் வரங்களாக வந்து விழுந்தது , தேஷிலிருந்து இன்னமும் மீண்டாபாடில்லை அதற்குள் பெஹாக்கா , இருக்கட்டும் என்று வடிவேலு போல் உளமகிழ்ந்து கேட்டோம். கடையில் கல்பனாஸ்வரத்தை என்ன சொல்வது அப்படியே இமயத்தின் உச்சயில் அமர்ந்து பனிக்கூழ் உண்டது போல் பிரமாதப்படுத்தினார் தலைவர் . வரதர் பெஹாக்கை ஆசை தீர வாசிக்க எம் சுவாசமெல்லாம் பெஹாக்கானது. அடுத்து தனியாவர்த்தனம் நெய்வேலியார் , கோபாலகிருஷ்ணன் இணையர் . இந்த பருவத்தில் ஆகச்சிறந்த இணை என்றால் மோர்சிங் இராஜசேகர் , திருப்பனித்துரா இராதாகிருஷ்ணன் என்று சொல்லலாம் ஆனால் கேவிஜி சஞ்சய் போல் வித்தியாசமான போக்குடன் செயலாற்றுபவர். இத்தகு சூழலுக்காகவே காத்திருக்கும் நம் தலையாட்டி சித்தர் , பிரமாதமான தனியைத் தந்தார். கம்பீர வாசிப்பு என்றால் அது வெங்கடேஷின் சொத்து. அவர் தனி வாசிக்கும் போது விரல்களை அல்ல அவரின் கண்களை பார்க்க வேண்டும் அதில் தான் எத்தனை ஆர்வம் , எத்தனை வேகம் , எத்தனை துல்லியம். இந்த பருவத்தில் நடைபெறும் அத்தனை சஞ்சய் கச்சேரியிலும் வாசிக்கிறார் , அதனால் ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை புகுத்தவேண்டும் என்பதை உணர்ந்து மிக அருமையான வேறுபாட்டை காட்டி வாசிக்கிறார். கேவிஜியும் கஞ்சீராவை விசிறி விசிறி அருமையானதொரு தனியைத்தந்தார். தலையாட்டியாரின் சோதரியார் கூறியது போல் பாட்டுலதான் அழவைப்பாங்க இவன் தனிவாசிச்சே அழவைக்கிறான் . அப்படி ஒரு தனி தந்தார் நெய்வேலியார்.


8) தமிழிசை மன்றக் கச்சேரி முழுத்தமிழ் கச்சேரி என்பதாலேயே விருப்பத்துடன் ஸ்ரீதேவி வருவதுண்டு.இதுவரை வந்த பாடல்களை தமிழ் என்றாலும் , இந்த பாடலுடன் இணைவது போல் பிற பாடல்களில் இணைய முடியாது , ஆம் நம் வீட்டில் தொடர்ந்து ஒலிக்கும் சின்னஞ்சிறு கிளியே பாடல் அடுத்து , ஆதித்யா ,அட்சயா செய்த் அட்டகாசத்தில் பாடல் ஏற்கனவே பாடிவிட்டார் என்று நினைத்த ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சியாய் பாடினார் தலைவர் , முண்டாசு கவியின் காலத்தினால் அழியா காவியப்பண். அதுவரை தாயுடன் இருந்த அட்சயா என் மடியில் அமர்ந்து கேட்க , இதை விட என்ன வேண்டும் நமக்கு. காப்பியில் துவங்கிய ராகமாலிகை கேட்போர் மதிமயக்கியது. காப்பியில் தொடர்ந்து பிள்ளை கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே ! மாண்டில் ஓடி வருகையிலே – கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய் ஆவி தழுவு தடீ !வசந்தாவில் உச்சி தனை முகந்தால் – கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ ! திலங்கில் கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா ! உன்மத்த மகுதடீ ! இந்தோளத்தில் சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது சஞ்சல மாகு தடீ ! நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ ! நீலமணியில் உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ ! எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா ! என்னுயிர் நின்ன தன்றோ ? நீலம்பரியில் சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லை சிரிப்பாலே , வலஜியில் இன்ப கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ? அன்பு தருவதிலே – உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ? நாம் பெரிதும் மகிழும் வரிகள் தேஷ்ஷில் மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ? என்னே அருமையான பாடல் தந்தைக்கும் மகளுக்குமான உறவின் இனிமையை மேன்மையை கனிவை பாசத்தை அன்பை இதை விஞ்சி சொல்லவும் முடியாமா . அதை இதைவிட இனிமையாய் யாராகினும் பாடத்தான் முடியுமா.


9) ஒருவழியாய் கச்சேரியின் முதல் வைணவப்பண் , திருமலை கண்ணீர் உகுக்க வைக்க தலைவர் ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை , நம்பெருமாள் பாசுரம் சுத்ததன்யாசியில் பாடி பிருந்தாவனம் இதுவோ பாடினார் தலைவர். சுத்தானந்த பாரதி பாடல். பொருந்தும் அன்பருக் கின்ப விருந்தாய்க் கவலை மாற்றும் கோவிந்தன் இருந்தே குழல் ஊதிய என்று அனுபல்லவியை தனக்கே உரிய குறும்புடன் பாடினார் தலைவர். தானவர் செருக்கினைத் தகர்த்துப் ப்ரியமான தாச கோபியருடன் ராச க்ரீடை செய்து வரியில் தானவரில் ஒரு குழைவை காட்டினார் பாருங்கள் அருமை. இது சிருங்கார பாடல் என்று அறிவித்தார் கோபாலர். கானத்திலே கோபாலன் கன்றுகளை மேய்த்துக் காதலர் சித்தத்தைக் காந்தம் எனக் கவர்ந்த என்று பாடி அதை உறுதிப்படுத்தினார் தலைவர் , தலைவர் பாடியவுடன் அண்ணாமலை மன்றம் பிருந்தாவனமாகி , மாடுகள் மேயத்துவங்கியது அரங்கெங்கும் , திருமலை ஆனந்தமாய் மாடு மேய்தான்.


10) மாவூர் வளம் பெருக வந்த காளி அன்னையே , ஆம் மீண்டும் ஒரு சிந்து பைரவி , ஹரிகேஸ நல்லூர் முத்தைய்யா பாகவதர் பண் கச்சேரியின் எட்டாவது சவைப்பண் , முக்கண்ணன் பத்தினியை தலைவர் பாட , அம்மனருள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றோம். அந்தரி நிரந்தரி சுதந்தரி கௌமாரியை தலைவர் பாட பாட கண்கள் கசிந்தது அரங்கத்து பெரியோர்களுக்கு . அந்தி வண்ணன் சோதரியே வரியில் அரங்கே ஸ்தம்பித்தது . அருமையானை சிந்து பைரவி பாடி கச்சேரியை நிறைவு செய்தார் தலைவர்.


தொடர்ந்து வாழிய செந்தமிழ் பாட , அரங்கமே எழுந்து நின்றது சிறப்பு. வித்வத் சபையில் நடைபெற்ற தமிழும் நானில் நான் மட்டுமே எழுந்து நின்றேன் , இங்கும் சில பிரஹஸ்பதிகள் ஏன் எழுந்து நிற்கவேண்டும் என்று அமர்ந்திருந்தனர். தமிழிசை இயக்கம் என்பது அப்பர் , சம்மந்தர் காலத்திலிருந்து துவங்கி , பின் அருணகிரிநாதர் குமரகுருபரர் திதிரிகூடராசப்பக்கவிராயர் போன்றோர் பெருமுயற்சியாலும் , தமிழ் மூவர் அருணாசலக்கவிராயர் ,மாரிமுத்தாபிள்ளைமுத்துத் தாண்டவர் போன்றோர்களாலும் இந்த நாட்டார் இசைக்காக எத்தனையோ இன்னல்களுக்கிடையே எண்ணற்ற பாக்களை இயற்றி சென்றனர். அதையெல்லாம் தூசு தட்டி தேடிப்பிடித்து , தமிழ் இசை என்பது வியாபாரரீதியிலும் வெற்றியைத்தரும் என்று நிரூபித்து , இசைப்பேரறிஞர் பட்டத்தை பெயரளவில் வாங்காமல் , ஒவ்வொரு கச்சேரியிலும் தமிழை ஓங்கி ஒலிக்க செய்கிறார் மகா வித்வான் சஞ்சய் சுப்ரமணியன் , இந்த அரங்கில் அவரை கேட்பது போல் வராது. வழமை போல் உணர்ச்சி குவியலாய் இல்லம் நோக்கி பயணித்தோம். திருமலையப்பனும் கோபாலகிருஷ்ணபாரதியும் , சனவரி 1க்கான பாடல் பட்டியல் தயாரித்து தலைவரிடம் தரச்சென்றார்கள் , பித்துக்குளிகள்.

 
 
 

コメント


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page