top of page
Search

சரவணபவா போற்றிய சஞ்சய் சபா -பேஷ் தேஷ் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 20, 2021
  • 7 min read

ree



சீசனின் இரண்டாம் கச்சேரி , வழமை போல் பாடல் பட்டியல் வெளியிட்டப்பட்ட கச்சேரி , கானடா வர்ணம் , ஆண்டாள் பாசுரம் , சௌந்தர்ராஜம் , காம்போதி , சுபபந்துவராளி , பத்தி முதலாம் ராகமாலிகை இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ராகம் தானம் பல்லவி தேஷ் , பல ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் பாடல் பட்டியலை தலைவர் தயார் செய்திருந்தார் , வாணி மஹாலுக்கு முன்பொருமுறை 6.25மணிக்கு கிரஷ்லேண்டிங் செய்துள்ளோம் , அலுவலகத்தில் கானொளி ஆய்வுக்கூட்டத்தால் அதே போல் இவ்வாண்டும் 6.20 மணிக்குத்தான் செல்ல முடிந்தது ,நம் முன்பதிவை நங்கைநல்லூர் சுவாமிநதருக்கு அனுப்பியிருந்தபடியால் , திருவுளச்சீட்டுடன் காத்திருந்தார் , களம் சென்றோம் உளம் மகிழும் அன்பர் கூட்டத்தோடு

கச்சேரி கானும் நல்வாய்ப்பு , இனம் புரியா மகிழ்வோடு காத்திக்க , மருத்துவமனை கானொளியெல்லாம் முடிந்திருந்தபடியால் திரை விலக , வழமை போல் கும்மிருட்டில் நம் அக இருள் போக்கும் ஆதவர் தம் பரிவாரங்களுடன் காட்சி நல்கினார் , தலையாட்டி சித்தர் , வரதாழ்வார் , ரேதஸ் பின்பாட்டு , ராகுல் தம்பூரா , லயராஜாவின் இசை ஆளுமையில் ஆட்பட்டு மெய்மறக்க தயாரான தருணம் , ஆழ்வார்கடியான் நம்பியும் கோபாலகிருஷ்ணபாரதியும் போண்ட வாய்மணக்க வந்தமர்ந்தனர், பட்டியல் பார்த்தாயா மார்கழி நன்னாளில் எம்மான் ஆண்டாளை பாடி சுவாமி தேசிகனின் அடைக்கலபத்து என எல்லாம் எம் வைஷ்ணவமே இன்று என்று இருமாப்பு காட்ட , கோபாலர் திருமலை உன் பித்தம் தெளி மருந்தொன்று இருக்கிறது என்றார் , இருவரையும் உஷ் என்று எச்சரித்தேன் ஆறரை மணிக்கு ஆற்றலூற்றின் ஆகச்சிறந்த கச்சேரி ஆரம்பமாயிற்று.


1) பூச்சி ஹீநிவாச அய்யங்காரின் நெரநம்மிதி கானடா அடதாள வர்ணம் துவக்கினார் தலைவர் ,கானாட என்றாலே தாலாட்டு தான் அலைமேல் செல்லும் ஓடம் போல் ஒய்யாரமாய் தலையாட்டினோம் , பூச்சி அய்யங்கார் பட்டிணம் சுப்ரமணியரின் சீடர் பூச்சியார் சீடர் அரியக்குடியார் என்றான் திருமலை , அனுபல்லவி தொடர்ந்து முக்தாய்ஸ்வரத்திலும் கானடாவின் நெடி மிக்கதாய் இருந்தது , திருமாலை காக்க கோரும் அரும்பண் இது சரசூட நின்னேவில் எதிர்பார்த்தபடி துவக்கினார் சரவெடியை , சரவெடி சிட்டைஸ்வரவெடியாய் உருப்பெற்றது , வரதரும் நெய்வேலியாரும் இதற்காகவே காத்திருந்தார் போல் ததத்தம் வாத்தியத்தை களமிறக்கினர் , தலைவர் சரசூடவில் வெற்றிக்கொடி சூடினார் தனக்கே உரிய அந்த அசாத்திய ஸ்வர ஆளுமையால் , இவர்களின் ஒத்திசைவு என்னவென்று சொல்வது. மிகப் பிரமாதமான வரண்ம் வாணியை ஆட்கொண்டது.


2) சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அடுத்து அவையை ஆண்டாள் , ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி துவக்கினார் தலைவர் , வாமன அவதாரத்தை குறிக்கும் சொல் இந்த ஓங்கி உலகளந்த உத்தமன் , அதமா அதமன் , அததமன் மத்யமன் உத்தமன் என நால்வர் உண்டு , பிறரையும் வாழவிடாமல் தானும் வாழமல் இருப்பவன் அதமா அதமன் , தான் தன் குடும்பம் என்று வாழ்பவன் அதமன் , தானும் வாழவேண்டும் பிறரும் வாழ வேண்டும் என்று நினைப்பவன் மத்யமன் , தான் கெட்டாலும் பரவாயில் பிறர் வாழவேண்டும் என்று நினைப்பவன் உத்தமன் , தேவர்களை காக்க வேண்டும் என்று தான் யாசகம் பெற்றாலும் பரவாயில்லை என்று அதாவது தன்னை இறைநிலையிலிருந்து தாழ்த்தி, பக்தர்களின் நன்மைக்காக தர்மம் பெற்றார். இதன் காரணமாகவும் ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பித்துப் போற்றுகிறாள் என்றான் திருமலை , இதற்குள் தலைவர் ஸ்வரஜாலம் காட்டி அசத்தினார் , வரதரும் நெய்வேலியாரும் ஆலத்தூர் ராஜகணேஷம் அருமையான பின்புலம் தர அருமையாகக அமைந்தது ஆண்டாள் பாசுரம் , பாடல் முடிய காத்திருந்த கோபாலர் அது சரி திருமலை வாமனர் உத்தமரே ! ஆனால் பிறர் வாழ தன் செல்வம் தீர்ந்தாலும் பரவாயில்லை என்று இருப்பதையெல்லாம் வாரி வழங்கிய மாவலி மன்னனும் உத்தமன் தானே , அவரை என் அதளபாதளத்திற்கு அனுப்பினார் உங்கள் திருமால் என்று வம்பிழுத்தார்.


3) ஆலாபனை அம்ரிதவாஹினி துவக்கினார் தலைவர் , இதுவே முதல் முறை இத் நாம் கேட்பது , நடபைரவி ஜன்யம் , தியாகையர் பாடல் ஒன்றைத் தவிர வேறேதும் இருப்பதாய் தெரியவில்லை , தலைவர் மெய்மறந்து ஆலபனை செய்வதை காண்பதே ஒரு தனி சுகம் , ஆழ்நிலை தியானம் போல் தலைவர் ஆலாபனையை எடுத்துச்சென்றார் , கமக ராஜாவின் அருமையான ஆலாபனை நம்மை புளகாங்கிதம் கொள்ளச்செய்தது , தொடர்ந்து வரதர் அமிர்தத்தை தந்தார் வயலினில் , உருக்கம் மிக்க வரதாலாபனை கேட்போரை தானாக கண்ணை மூடி ரசிக்க வைத்தது. ஸ்ரீராம பாதமா நீ கிருப சாலுனே என தியாகராஜர் பாடலை பாடினார் தலைவர் , ராமப்பாடல், உன் பாதமே கதியென்கிறார் , ஸ்ரீ ராம பாதமாவில் தலைவரின் ஸ்வரம் நிதானமாக வந்து நம் நீ பாதமே கதி என வசீகரித்தது , அந்த பாதமாவில் எத்தனை சங்கதிகள் எத்தனை நளினம் மெல் மெல்ல ஸ்வரம் வேகமெடுத்து உற்சாகப்படுத்தியது நெய்வேலியார். முடிப்பில் அதை வாசித்துக்காட்டினார்.


4) நாகை பெருந்தெய்வம் புகழ்பாடும் தீட்சிதர் கிருதி சௌந்தரராஜம் ஆஸ்ரயே பாடினார் தலைவர் , அடடா இதில் ஆலாபனை செய்திருக்கலாமே என்று அனைவரும் விரும்பும் வகையில் தலைவர் பிருந்தாவன ஸாரங்காவில் ரங்கனை பாடினார் , கோபாலகிருஷ்ணபாரதி நான்காவது வைணவப்பாடலானலும் ரசித்து கேட்டார் , அனுபல்லவி நந்த நந்நன ராஜத்திற்கு காத்திருந்து கேட்டு புசித்தோம் தலைவர் பேரிசையை , வரதரின் வயலின் மிக அருமையாக பயணித்தது தலைவரோடு , இந்த சரணத்தில் கம்பு விதம்பன கண்டம் என்றும் நாம் ரசிப்போம் , தும்புரு நுத ஸ்ரீ கண்டம் என்று கோரஸ் பாடி வைகுண்டத்திற்கே சென்று வந்தான் ஆழ்வார்கடியான். கஜராஜன் அன்று முதலையிடம் அக்ப்பட்டது போல் நாம் இன்று கவலைகள் கோவிட்கள் என்று பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கிறோம் , திருமால் மதகஜத்தை காத்தது போல் தலைவர் இந்த பாடல் மூலம் நம் உள்ளத்து கிலிகளுக்கு மருந்தானார்.


5) தலைவரின் ராக ஆலாபனை எத்தனையோ உண்டு அதை கேட்டு ரசித்து மெய்மறப்பது ஒரு வகை , அந்த ராகத்தில் நம்மை பறி கொடுப்பது மறுவகை , ஆலாபனையில் சிக்குண்டு இதிலேயே அப்படியே இருந்துவிடலாம் என்ற நிலை ஒன்று உண்டு , அப்படிப்பட்ட ராக ஆலபனை அடுத்து , ஆம் தலைவரின் பிரத்யேக சஞ்சுகாம்போதி ,காம்போதி ராகத்தை படைத்தற்கான காரணங்களில் ஒன்று அதை சஞ்சய் ஆலாபனை செய்யவேண்டும் என்பதாகும். நீண்ட ஆலாபனைக்கு தயார் செய்தார் நம்மை , அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே அவைஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய் என்பார் புரட்சி கவிஞர் , காம்போதியில் அத்தகைய அதிகாரம் படைத்தவர் சஞ்சய் அவர் என்ன சொன்னாலும் காம்போதி கேட்கும் , தலைவர் காம்போதி ஆலாபனையை இப்படிச் சொல்லலாம் அது ஒரு மிகப்பெரிய மலை , ஆகப்பெரும் சுழற்காற்று , சூரியன் அருகே சென்றால் வரும் பெருந்தகிப்பு , அது துவக்கம் முடிவு இல்லா ஆகாசம் , சென்னையை மூழ்கடித்த மாமழையினும் மா மாமழை , இந்த பிரம்மாண்ட ராகத்திற்கு தலைவர் ஒருவராலேயே நியாயம் செய்ய முடியும் என்பதை தன் பதினான்கு நிமிட ஆலாபனையில் காட்டினார் தலைவர் , மேலே மேலே அத்றகும் மேலே சென்று ஆலாபனை புரிந்தார் , நாதஸ்வர கருவிகூட எட்டமுடியாத இடங்களை எட்டினார் , கடையில் தன் முத்திரை பிடிகளை போட்டு வரலாற்றில் நீண்ட நாள் பேசப்படும் காம்போதி ஆலாபனை முடித்தார் தலைவர் , வரத காம்போதி அடுத்த அரங்கை கட்டிப்போட்டது , மனிதர் எப்படித்தான் வாசிப்பாரோ தெரியாது , என்னே நேர்த்தி என்னே கற்பனை வளம் , ராகத்தை பேசியது வரதர் வயலின் . எதிர்பார இன்ப அதிர்ச்சியாய் தலைவர் விழிக்குத்துணை கந்தர் அலங்காரத்தை விருத்தம் பாடினார் காம்போதியில் , வடிவேலுவில் வடிவாய் பாடி , பாபநாசம் சிவனின் நீயே சரண் சண்முகா துவக்கினார் , ஆஹா முதல் சைவப்பா என்று சரணாகதி அடைந்தோம். தலைவர் ஸ்வாமிநாதா பாட நங்கைநல்லூர் ஸ்வாமிக்கு வாயெல்லாம் பல் , நீயே சரண் சண்முகாவில் தலைவர் துவக்கினார் நிரவலை , சரண் புகுந்தது வாணி அரங்கு , வரதரும் தலைவரும் தந்த நிரவலுக்கு ஈடு இணை இல்லை , அடுத்து ஸ்வரத்தை துவக்கி வரதருடன் கணக்கு துவக்கினார் தலைவர் , வரதர் அருமையாக பதிலளித்தார் , மெல்ல மெல்ல நாம் என்றும் மகிழும் பதநிதா நொக்கி நகர்ந்தார் தலைவர் , ஸ்பதஸ்வர பதனியை அனைவரும் பருகினர் , ப நி தா மனிதா கேள் நான்கு வைணவ பாடலுக்கு இந்த ஒரு பாடல் போதுமென்றார் கோபாலர் குஷியாக.


6) அடுத்து என்ன ரட்சிஷோ நீனு புரந்தரதாசர் கிருதி , ராகம் சுபபந்துவராளி பாடல் மெட்டமைத்தவர் தலைவர் ,ரூபக தாளத்தில் தலைவர் உருக்கம் என்னும் மயக்கத்தை தந்தார் , அரங்கின் போக்கையே மாற்றியது பாடல் , கண்ணனிடம் மிக மிக அர்பணிப்பு மிக்க வரிகளில் தன்னையே அர்பணிக்கிறார் புரந்தரர் , இனிபகுலாம்புதியில் வரு வித விம்மல் அனைவரிடமும் வெளிப்பட்டது , நெய்வேலியாரின் பின்புலம் பாடலுக்கு மிகப்பெரிய அளவில் அமைந்தது , வரதரின் வயலினும் உருக்கமாரியை வாரி வழங்கியது.


7) கச்சேரி கதாநாயகன் தலைவரின் உன்குழாயில் ஒருமில்லியன் பார்வைகளை விருப்பங்களை பெற்று சாதனை புரிந்த நாம் என்றும் கரையும் அரும் ராகம் , பாரதி முதல் பாரதிதாசன் , மாயுரம் விஸ்வநாத சாஸ்திரி வரை கேட்டு கேட்டு திளைக்கும் மயிலிறகையும் விஞ்சும் மென்மையின் மறுபெயரான தேஷ் ஆலாபனை துவக்கினார் தலைவர் , பாரதியையும் பாரதிதாசனையும் தலைவர் பாட தேர்ந்தெடுக்கும் ராகம் இது , அதை புத்தாண்டில் துன்பம் நேர்கையில் பாடலில் ஸ்வரம் பாடி அசத்தினார் , இம்முறை ராகம் தானம் பல்லவிக்கு எடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் , தேஷில் அரங்கமே கட்டுண்டது , இப்படி அப்படி யாரும் அசையவில் சிரசு மாத்திரம் ஆடியது , மலைத்தேனைக்குழைத்து அதில் மா பலா வழையை கலந்தளித்தார் தலைவர் தேஷை , ஆனால் வழமையை மீறி தேஷில் மேலே சென்று மிரளவைத்தார் , ஏன் இப்படி மெனக்கெடுகிறார் என்று கோபாலர் பதறும் அளவில் தலைவர் தேஷை உயர்த்திப்பிடித்தார் , பத்து நிமிட தேஷில் பறிகொடுத்தோம் நம்மை , தேஷ் ராகம் தானம் பல்லவி என்ற நிமிடமே நாம் மகிழ்நததற்கு இன்னுமோர் காரணம் , வரது தேஷ் ஆலாபனை கேட்கலாம் என்பதாகும். அடடா இந்த வரதுவின் பெஹாக் கேட்டிருக்கிறோம் , நீலாம்பரி , கன்னடா , நளினகாந்தி என்று எத்தனையோ வண்டுகள் மொய்க்கும் ஆலாபனை கண்டுள்ளோம் ஆனால் தேஷ் கேட்கும் பாக்கியத்தை இப்போது தான் பெறுகிறோம் , அடடா அதில் தான் எத்தனை எத்தனை இனிமை , இனிப்பு என்ற சொல்லுக்கு இனி அகராதியில் வரது தேஷ் என்றே கூறலாம் என்று மகிழ்தான் திருமலையப்பன் , தொடர்ந்து தலைவர் தேஷில் தானத்தைத் துவக்கினார் , தானம் வண்டி வானம் பூமி என்று மாறி மாறி சென்று மகிழ்ச்சியூரை அடையச்செய்தது , ஏழு நிமிட தானத்திற்கு ஏழு ஜென்மத்திற்கும் போதும் போல் இருந்தது , எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பு விழி இந்திர நீலப்பூ மகாகவியின் வரிகள் இதை ஏற்கனவே தலைவர் ராகம் தானம் பல்லவி சாருகேயில் பயன்படுத்தியுள்ளார் புத்தாண்டு கச்சேரியில் , அந்த பல்லவி ராகமாலிகையில் தான் தலைவர் ரோஜாப்பூ ராகத்தை புதிதாக கண்டுபிடித்தார் , மீண்டும் கண்ணம்மா அரங்கை அலங்கரித்தாள் , தலைவர் பல்லவியை ஆசை தீர நம் ஆசை தீர பாடிவிட்டு ஸ்வரம் துவக்கினார் , ரோஜாப்பூ போல் பளிச்சென்று இருந்தது ஸ்வரம் , ராகமாலிகை இருக்குமோ இல்லையோ என நாம் யோசித்த கணம் தலைவர் வராளியில் துவக்கினார் ராகமாலிகை வரளியின் உருக்கத்தை மிக அருமையாக தலைவரும் வரதரும் தர , அடுத்த ஆனந்தமாய் வந்தது ஆனந்த பைரவி ஸ்வரம் , வரதரின் ஆனந்த பைரவி ஸ்வரத்திற்குப்பின் , தலைவர் பப்பாப் என்று பாப் பாடினார் ஆஹா ரோஜாப்பூ போல் ஏதும் புதிய ராகம் தரயிருக்கிறாரோ என நாம் எண்ணிய கணம் தலைவர் மதுரை மணி ஆனால் , ஆம் சங்கராபரண நோட்டை எங்கிருந்தோ அரங்கிற்கு கொண்டு வந்தார் , ஒரு கச்சேரியின் சில கணங்கள் இன்னும் பல ஆண்டுகள் வந்தாலும் நிலைத்த நிற்கும் அப்படி நிலைத்து நின்ற கணங்களாக தலைவரின் சங்கராபரணம் ஆங்கில நோட்டுக்கள் அமைந்தது , ஏறிக்கரை பூங்காற்றே பாடி இன்னும் நம்மை வசீகரித்தார் தலைவர். பொதுவாக வரதர் தலைவர் செய்யும் இந்த மாயங்களை வாசிக்க மாட்டார் , கடந்த கச்சேரியல் தலைவர் ஸாவேரியில் செய்த நகாசு வேலையை வரதர் செய்யவில்லை , ஆனால் புத்தாண்டு கச்சேரியில் தலைவர் சலநாட்டையில் பனிவிழும் மலர் வனம் தலைவர் ராகமாலிகையில் பாட வரது அதை அப்படியே எடுத்து வாசிக்க அரங்கமே துள்ளியது அது போல் இந்த மேற்கத்திய நோட்டுகளை வரதர் வாசிக்க அரங்கு குதூகலித்தது. அடுத்து தலைவர் காப்பி ராகமாலிகை ஸ்வரத்தைப்பாடி அருமையாக பாடி தனியைத் துவக்கி வைத்தார் , நெய்வேலியார் புதுமை புகுத்தினார் தனியில் ஆம் மின்பொருமுறை செய்தது போல் தொப்பி வாசித்தார் இடது கையில் மிக அருமையான வாசிப்பு , தனி என்றால் சம்பரதாயங்கள் வாசிப்பது என்றில்லாமல் அதிலும் தன் தனி ஆளுமையைக் காட்டினார் ஆலத்தூர் ராஜகணேஷ் மிக அருமையாக வாசித்தார் , மனிதர் மிகவும் எளிமையானவர் ஆனால் இவர் இசை அபாரமானது. ஏறத்தாழ் பத்துநிமிட தனியில் நம்மை பரவசப்படுத்தினர் இருவரும் , கடந்த தனி ஒரு வித துள்ளலைதந்தது ஆனால் இந்த தனி கணக்குகளின் துல்லியங்களை அள்ளித்தெளித்த ஒன்றாக அமைந்தது . ராகம் தானம் பல்லவி தேஷ பேஷ் என்றார் கோபாலர் , விவரிப்பு தலைப்பை சொல்லவிட்டீர் போல என்று நகைத்தான் திருமலை.


8) அடுத்து தலைவர் ஆஹிரியில் பத்திமுதலாம் அவற்றில் பதி எனக்குக் கூடாமல் எத்திசையும் உழன்றோடி இளைத்து விழும் காகம்போல் அத்திகிரி அருளாளர் புகழ் பாடும் அடைக்கலப்பத்தைப் பாடினார் வேதாந்த தேசிகர் இயற்றிய அருமையான பாடல் இது , இந்த பாவை இதற்கு முன் பார்த்தசாரதியில் பாடியுள்ளார் தலைவர் , அதிலும் ஹமீர் கல்யாணி சடை முடியன் சதுமுகன் என்று இவர் முதலாம் தாம் எல்லாம் அருமையிலும் அருமை , சுருட்டியில் திருமகளும் திருவடிவும் திருவருளும் தெள்ளறிவும் பாடி அருமையான ராகமாலிகையை முடித்தார் தலைவர் , திருமலைக்கு மீண்டும் கொண்டாட்டம்.


9) அடுத்து இதுவரை நாம் கேட்டிராத பாடல் ராகம் ஆனால் இயற்றியவர் நம் ஸ்வாதி மாமனன்னர் , மிகவும் ரம்மியமாக இருந்தது வல்லபி ஜெய் ஜெய் தேவி என்று தலைவர் சரஸ்வதியை போற்றினார் , வாணி மஹாலில் சரஸ்வதி மா பவானியை சர்வாணியை பாடினார் தலைவர் , மிகவும் நிதானமாக ஆனால் நிரந்தரமாக நம்முள் புகுந்தது வல்லபி.


10) கோபாலகிருஷ்ணபாரதி எனும் பரம சிவபக்தரின் பாடல் அடுத்து செஞ்சுருட்டியில் பித்தம் தெளிய மருந்தொன்று தலைவர் பாட கேட்டுக்கொள் திருமலை என்று கர்ஜித்து மகிழ்நார் கோபாலர் , பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு வரிகளில் அரங்கமே மகிழ்ந்தது . நந்தனின் நிலையில் அனைவரும் இருந்து கேட்டோம் பாடலை.


11) அடுத்து தலைவரின் தலைவர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியன் ஆபத்ர தஞ்சை கல்யாணராமனின் சிந்து பைரவி தில்லானா பாடினார் தலைவர் , ஒரு காலத்தில் தில்லானாவே இல்லாமல் சீசன் இருக்கும் இந்த முறை இரண்டு கச்சேரியிலும் தில்லானாவால் திக்குமுக்காடினோம் நாம் , எந்த வேளையும் கந்த வேலை மறவாமல் இருந்தோம். சுப்பர் சுப்ரமணியரை பாடும் அழகே அழகு.


12) பவமான எதிர்பார்த்தோருக்கு தலைவர் இரண்டு நிமிட திருப்புகழ் பாடி இன்ப அதிர்ச்சி தந்தார் , சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ மீண்டும் ஒரு சுப்ரமணியப்பாடல் அருணகிரிநாதர் பழநி மலை மேலுள்ள தெய்வத்தை பாட , நவரோஜில் சுப்பர் அந்த பழநிமலை பாடும் போது நெய்வேலியாரை வம்பிழுத்தார் , அவரின் குரு பெயர் அது பழநி சுப்ரமணியப்பிள்ளை.


ஆறரைக்குத்துவக்கி மங்களம் முடித்தபோது மணி ஒன்பதரை சரியாக மூன்று மணிநேரம் பாடி நம்மை பக்தியில் மூழ்கடித்தார் தலைவர்,கச்சேரி பின்புலத்து கோலத்தில் இரண்டு தூண்கள் இருந்தன , அதன் குறியீடு ஒரு தூணிலிருந்து இன்னோர் தூணிற்கு வர மூன்று மணிநேரம் , அந்த மூன்று மணிநேரத்தில் பல்வேறி இராகங்களை நெளிவுகளோடு , ஆலாபனையில் சுழன்று நிரவலில் ஸ்வரத்தில் வளைந்து தலைவர் அசத்தினார். நாரத சபைபோல் ரஸிகர் பெருமக்கள் மகிழ்வை தியாகராய நகர் மக்கள் வெளிப்படுத்தாவிடினும் கச்சேரி முடிந்து எழுந்து நின்று கரவொளியால் அரங்கை நிறைத்தனர். மீண்டும் மயிலை ரஸிகர்களோடு வித்வத் சபையில் கபாலி பாடும் நம் சஞ்சய் கச்சேரியில் சந்திப்போம் என்று கிளம்பினார் கோபால கிருஷ்ணபாரதி , நாமும் நடையைக் கட்டினோம் வாசலில் வழங்கிய வெள்ள கொண்ட கடலையை மென்றவாறு , அடுத்த வாரம் கேசரி போடவும் என்று உத்தரவு போட்டான் திருமலை.

 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page