சஞ்சயும் மதுரையும் ! விஸ்வரூபமெடுத்த சஞ்சய் வாமனன் ! மாயயை மறுத்தளித்த சலநாட்டை !
- ARAVINDAN MUDALIAR
- Jan 14, 2022
- 6 min read
Updated: Aug 18, 2022

தமிழும் நானும் , இந்த இசைச் சாறலை தனது நான்காவது நேரடி கச்சேரியாக தலைவர் அறிவித்த நொடியில் அகமகிழ்ந்தோம் , ஒரு காலத்தில் மார்கழி மஹா உற்சவத்தில் முழுத்தமிழ் கச்சேரி 2 மணிநேரம் கிட்டியபோது ஏற்பட்ட இன்ப பேரலை இன்னும் பெரிதாக தலைவர் முதலில் 2018இல் முதல் தமிழும் நானும் நடாத்தினார் , பின் 2019இல் இரண்டு தினங்கள் நடத்தி நம்மை இன்புற வைத்தார், 2020இல் இணைய வழியில் மகிழ்வு தந்தார் , இவ்வாண்டு கொரோனா ஒமிக்கிரான் தொல்லைகளுக்கு இடையே இருக்குமோ இருக்காதோ என்ற கிலியோடு இருந்தோர்க்கு , உண்டு என்று உறுதிபடைத்த நெஞ்சினாய் அறிவித்தார் தலைவர். வித்வத் சபையில் கச்சேரி , நாம் உப்பரிகையில் பதிவு செய்திருந்தோம் ஆனால் அன்பர் ஒருவர் தந்துதவிய தரைதளத்து க்யூஆர் கோடுகளோடு , நான்,ஸ்ரீதேவி , சீமந்தன் , சீமந்திரியுடன் அரங்கு வந்தோம். மேல்தளத்திலிருந்து தரை தளத்திற்கு ஒரே தாவாய் தாவின இரண்டு பைசாசங்கள் , தேடிப்பிடித்து என் பிள்ளைகள் திண்பண்ட பையில் கையைத் துளாவின இரண்டும். இதற்குள் திரை விலக கும்மிருட்டு மேடையில் வெளிர் பச்சை ஓளியில் தலைவர் , நெய்வேலி வெங்கடேஷ் , வரதராஜன் , வெங்கட் ரமணன் மற்றும் ராகுல் காட்சி தந்தனர் , வழமை போல் வெள்ளுடை வேந்தர்கள். கோவிட் புரோட்டோகால்கள் கடைபிடிக்கப்பட்ட அவையில் ஒரு வித பயத்துடனே அனைத்து ரஸிகர்களும் முககவசம் அணிந்துகொண்டு மனதிற்குள் கந்தசஷ்டி கவசம் கூறியவாறு அமர்ந்திருந்தனர். புரோட்டாவா எனக்கு கொடுக்கவே இல்லை என்றான் திருமலை. கோபாலர் அதெல்லாம் SOP உமக்கு புரியாது என்றார். இதற்குள் VVSS கச்சேரியைத் துவக்கினர்.
1) சுப்ரமணியர் முதலில் பாடியது மதுரை சுப்ரமணியரின் உந்தன் பாத வர்ணம் , சங்கராபரண ராகம் , ஓய்யாரமாய் தலைவர் துவக்க , புஷ்பேக் இருக்கையில் ஓய்யாரமாய் கேட்டோம் ஸ்வரங்களை , தலைவர் வழமை போல் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டார் , நெய்வேலியார் நானும் தான் என்று மிருதங்கத்தில் மிளிர வரதர் உற்சாகத்தை வாசித்து காட்டினார். தலைவர் ஸ்வரங்கள் மிகவும் பாய்ச்சலாக வெளிப்பட்டன , நாத வேத கீதனே நானிலம் போற்றும் பாலனே வரிகளில் நம் நானிலம் போற்றும் நாவுக்கரசர் அருமையான சிட்டைஸ்வரம் தந்தார் . நீண்ட வர்ணமாக அமைந்தது சங்கராபரணம் , நெய்வேலியார் தரும் தலையசைப்பும் மிருதங்க ஒலியசைப்பும் சங்கராபரணத்தை நன்றாக ஆட்டியது , வரதர் அருமையான வாசிப்பு வழமை போல். அந்த பாடலின் கடையில் ஒரு அருமையான சங்கராபரண ராகத்தை கோடிட்டு காட்டினார் ராகங்களின் ராஜா.
2) மீண்டும் ஒரு முறை சித்திவிநாயகனே பாடினார் தலைவர் , கவிகுஞ்சர பாரதியின் பாடல் , மதுரை பாடலாசிரியர் பாடலை தொடர்ந்து மதுரை பெருந்தெய்வம் சித்தி விநாயகனை தொழுதார் தலைவர், நாமும் பொற்றாமரை குளத்தில் நீராடி வழிபட்டோம் வினைகளை களைவோனை , செக்கவார் நிறைசடை சொக்கலிங்கசேர் வரிகளில் சொக்கினோம் , அங்கயற்கன்னியின் அருளையும் பெற்றொம் தலைவர் , தலைவரோடு நெய்வேலியார் வரதர் கூட்டணியில் மனதார தொந்தி கணபதியை தொழுதோம் , கலாவதியை தலைவர் பாடலின் கடை பகுதியில் பாடிய அழகை அழகர்கோயில் பிரம்மாண்டத்திற்கு ஈடு சொல்லாம்.
3) யதுகுலகாம்போதி ஆலாபனை அடுத்து , வெஞ்சாமரம் வித்வத் சபையெங்கும் வீசியது , ஆற்றங்கரையில் நம்மை வசீகரிக்கும் தென்றலை விஞ்சியது தலைவரின் யதுகுலகாம்போதி , வழமையான தலைவரின் குத்தல் குறும்புகளுடன் ஆலாபனை அரங்க அலங்கரித்தது , மாலையின் ரம்மியத்தை விஞ்சியது தலைவரின் சௌக்கியம் , வரதர் யதுகுலம் அடுத்து யாவரையும் வசீகரித்தது, தலைவரின் வளைவு நெளிவு சுளிவுகளை தன் வாத்தியத்தில் வாசித்தியம்பினார் வரதர் , நாவுக்கரசர் பெருமானின் அடுத்தானை யுரித்தானை யருச்சுனற்குப் பாசுபதம் பாடினார் , தன்னை எதிர்க்க நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும், அருச்சுனனுக்குப் பாசுபதப் படை நல்கியவனும், மேருமலையையே வில்லாகக் கொண்டு கூரிய அம்பினை மும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனாய், சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை நசுக்கி செயற்பட முடியாதவாறு தடுத்தவனுமான பெருமானை என் மனத்தே வைத்தேனே என்று பாடியுள்ளார் நாவுக்கரசர் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , வோய் தலைவர் அர்சுணர் என்கிறார் நீர் பொழிப்புரை தருகிறீர் இது ஏதோ வைணவப்பாடல் போல் உளதே என்றேன் , வழமை போல் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் என்னை கொட்டிய திருமலை , பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக்கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள்.சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிந்தார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் திருவேட்களம் தீர்த்தத்தில் விழுந்தான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்து அருளினார். என்று மூச்சிரைக்க நவிலினான் திருமலை இதற்குள் தலைவர் , உரித்தான் அர்சுணர்க்கு கொடுத்தானை பாசுபதம் கொடுத்தானை என்று அருமையாக முழங்கினார் , அடுத்தான் உரித்தானை என்று தலைவர் பாங்குற பாடினார். கைலாயத் தெய்வத்தை கைகூப்பி வணங்கினோம் தலைவர் பாடல் மூலம்.
4) அடுத்து நீண்ட நெடிய நாளுக்குப்பின் இந்திரஜாலம் , ஆம் சஞ்சய் இந்தோளம் , ராகம் தேராக நம்மை சொர்கலோகத்திற்கே இட்டுச்சென்றது , அங்கே பெரிய பனிமலை , அந்த மலையடிவாரத்தில் நாம் நின்றோம் எங்கிருந்தோ நறுமணம் கமழும் இளங்காற்று , பின் மெல்ல தென்றல் இந்தோளப் புயலானது , புயலால் சிக்கி புளகாங்கிதம் கொண்டோம் , புனல் நம்மை பூரிக்கச்செய்தது , தலைவரின் உற்சாகம் மேலோங்கி ஆலாபனை இது , பனிக்காற்றின் குளிரில் நாம் குளிர்ந்து போனோம். வரதர் வயலினும் இளந்தென்றல் புயல் என மாறி மாறி வாசித்தது , ரம்மிய வாசிப்பு என்றால் அது வரதர் வாசிப்பு தான். மீண்டும் மதுரை பெருந்தெய்மான மதுரை மீனாட்சியை பாடினார் தலைவர் , மாட்சி மிகுந்த தாயே தண்டபாணி தேசிகர் பாடல் , அனுபல்லவி காட்சியினால் உனை காண்பவதர்கே கண்ணில் நிறைந்து கருத்தில் உறையும் என்று தலைவர் உருகி பாடினார் , அல்லும் பகலும் உள்ளம் கனிந்து அன்போடு உன்னை பாடி நின்றேன் எல்லையில்லா இன்பம் தந்து ஏழை என்னை வாழச்செய்வாய் என்று சரணத்தில் தண்டபாணி தேசிகர் வரிகளில் உருகினார் தலைவர் நம்மையும் உருக்கினார் , அப்படியே நிரவல் ஸ்வரம் சென்றார் , இந்தோள ஸ்வரங்கள் நாம் பெற்ற வரங்கள் , ஒவ்வொருமுறையும் மாட்சி மிகுந்த தாயே என்று தலைவர் முடிப்பு அருமையிலும் அருமை . நெய்வேலியார் வரதர் மிக அருமையாக வாசித்தருளினர். ஏறத்தாழ நான்கு நிமிடங்கள் தலைவர் ஸ்வரஜாலத்தை நிகழ்த்தினார், மாட்சி மிகுந்த மீனாட்சி தெய்வம் நம்மை பரவசப்படுத்தியது அவைக்கு வந்து.
5) அடுத்து சுபா சுவாமிநாதன் தருணம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர் கோரிக்கை தலைவருக்கு வைத்து வைத்து அலைகள் ஓய்வதில்லை போல் , மாயா வாமனனே கோரிக்கை ஓய்வதில்லை என்று கோரிவந்தார் , தலைவர் அதை பாடத்துவங்கும் முன் விருத்தமாக , நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே மதுரகவி பாசுரத்தை தலைவர் , உருகி பாட ஆழ்வார்கடியார் நம்பி அழுது தொழுதான் தலைவரை , விளக்கம் சொல்லிவிட்டு அழு திருமலை என்றார் கோபாலகிருஷ்ணபாரதி ,ஆசிரியர் அல்லாது வேறு தெய்வம் அறியேன் என்று சொல்கிறார். குருபக்தியின் உச்சம் இது. அதனாலேயே அதன் முதல் வார்த்தையைக் கொண்டு “கண்ணிநுண் சிறுதாம்பு” என்றே அழைக்கப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்பது ஆழ்வார்கள் ஸ்ரீமன்நாராயணனைத் துதித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பே. அதில் ஒரு ஆழ்வாரான நம்மாழ்வார் என்ற சடகோபரைத் துதித்த இப்பாசுரமும் இடம்பெற்றது மதுரகவிகளின் ஆசிரியர் பக்திக்கு அங்கீகாரமே. இன்னொரு சிறப்பாக, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் மதுரகவிகள் இடம்பெற்றார் என்று மூச்சு வாங்கினான் திருமலையப்பன் இதற்குள் தலைவர் ஏற்கனவே அறிவித்தபடி மாய வாமனனே மதுசூதா பாடினார் சிம்மேந்திர மத்தியமத்தில் , மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் கால் ஆய் தாய் ஆய் தந்தை ஆய் மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய் நீ ஆய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே என்ற நாலாயிர திவ்ய பிரபந்தம் நம்மாழ்வார் பாடல் இது , எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல் இந்த பாடலின் கருத்தியல் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , ஓஹோ திருமலை புலம்புவது போல் அன்றே நம்மாழ்வாரும் புலம்பியுள்ளார் என்பதை அறிந்தோம். தலைவர் நியாயம் கேட்பது போல் பாடாமல் குதூகலமாய் பாடினார் , மாயா வாமனனே மதுசூதா வரிகளில் அருமையான நிரவல் தந்தார் தலைவர். மதுசூதாவில் ஒரு மாயத்தை நிகழ்த்தி மனதை கவ்வினார் ,மாயா வாமனா நிரவலை தலைவர் மிகுந்த ஒய்யாரமாய் தர வரதர் படுஓய்யாரமாய் வாசித்தார் , நெய்வேலியார் இருவருக்கும் ஈடில்லா நிலையில் வாசித்தருளினார், தலைவர் நிரவல் ஸ்வரத்தை துவக்கினார் , வழமையான நகாசு வேலைகள் சரவெடிகள் நிறைந்த ஸ்வரங்கள் , எங்கிருந்தோ மேற்கத்திய நோட்டுக்களை இறக்கினார் , அந்த குறும்பு கொப்பளிக்கும் ஸ்வரங்கள் என்றும் இனிக்கும் , ஸ்வரப்பிரஸ்தாரம் சென்ற விதம் அருமையிலும் அருமை , எட்டாண்டுக்கு பின் கிடைத்தாலும் முழுத்திருப்தியான மாயா வாமனனை பெற்றார் சுபா அவர் புண்ணியத்தில் நாமும்.
6) சஞ்சய் சஹானா அடுத்து , தலைவர் ஆலாபனை பாடினார் சில விநாடிகள் பின் நம்மை சிவனின் பெருந்தொண்டர் ஆனைதாண்டவபுரம் கோபாலகிருஷ்ணபாரதியின் தில்லை அம்பலத்தானை கோவிந்தராஜனை பாடினார் , தொல்லுலகமும் படி அளந்து வரிகளில் அடேயப்பா சிலிர்த்துக்கொண்டார் கோபாலகிருஷ்பாரதி , முதல் சரணத்தை மாத்திரம் பாடினார் தலைவர் , அம்பல ரகசியம் வரியில் தான் எத்தனை இனிமை , ஆஷ்டாச்சரம் பஞ்சாட்டசரம் இரண்டையும் தலைவர் ஒன்று சேர்த்தார் கோபாலகிருஷ்ணபாரதி பாடல் மூலம் ஆனந்த கண்ணீர் விட்ட இரண்டு சைவ வைணவ சிகாமணிகளுக்கு ஒருவரை ஒருவர் தேற்றினர்.
7) அனைவரும் எதிர்பார்த்த சலநாட்டை ஆலாபனை துவக்கினார் தலைவர் , ராகம் தானம் பல்லவியில் முதல் கட்டமாக , சலநாட்டை மயிலைநாட்டை மயக்கியது , மிகவும் நளினமாக தலைவர் ஆலாபனை தந்தார் , வழக்கமான கோடீஸ்வர அய்யர் பாடல் ஏதைய்யா கதி வரிகள் தலைவரின் ஆலாபனைக்கு பொருந்தும் இந்த ராகத்தை இந்த அளவில் செய்வதற்கு நியல்லால் ஏதையா கதி ! எதிர்பார்த்த பனிவிழும் மலர் வனம் கோடிட்டு காட்டினார் , மேலே அதிகம் செல்லாமல் மிகவும் நளினமாக சென்றது ஆலாபனை , மிக மிக நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றினார் ஆலாபனையை தலைவர் , ஆலாபனையின் நிறைவில் சற்றே மேலே சென்று மாயாஜாலம் நிகழ்த்தினார்,வழக்கம் போல் தன் டுட்டூக்கள் போட்டு பத்து நிமிட ஆலாபனையை முடித்தார் , வரதர் சலநாட்டை வசமாய் வாசித்தார் , நம்மை தன் வசப்படுத்தினார் , நாம் அவர் வயப்பட்டோம் , தானம் துவக்கினார் தலைவர் துள்ளலாய் துவங்கிற்று , வழமை போல் அண்ணனும் தம்பியும் சுற்று சுற்றாய் நம்மை சுழற்றி எடுத்தனர் தானத்தில் , ரோலோகோஸ்டர் ரைட் என்பார்கள் அது போன்ற ஒரு பயணத்தை தலைவர் தந்தார் தானத்தில் ,மிகவும் குறுகிய தானமாயிருந்தாலும் தரமானதாக இருந்தது. உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே என்னும் முண்டாசு கவியின் வரிகளை பல்லவியாக்கினார் தலைவர் , மாயயை பழித்தலில் பாடியுள்ளார் அன்றே பாரதி , இந்த கோரோனா என்னும் மாயை நம்மை விடாமல் துரத்துவதை , தலைவர் பாடி நமக்கு நெஞ்சுரம் நல்கினார் , சட்டென ஸ்வரம் சென்றார் , அருமையான சலநாட்டை ஸ்வரத்தை தொடர்ந்து தலைவரை அறிந்தவர் அவரின் ராகமாலிகை ஸ்வரத்திற்கு காத்திருந்தோம் , ஆனந்தபைரவியை முதலில் கையிலெடுத்தார் , ஆனந்தமான தருணமாக்கினார் நமக்கு , அடுத்து அரவிந்தன் தருணம் பெஹாக் ஸ்வரம் , அடடா என்னே இன்பம் , தேனை பாய்ச்சினார் செவிகளில் , இந்த இந்துஸ்தானி ராகங்கள் மீது தலைவருக்கு தனி காதல் , அடுத்து வந்த பாகேஸ்ரீயும் அதை உறுதி செய்தது , தலைவர் வழமை போல் நுஸ்ரத் பதே அலிகானானார் , அடுத்த சில நிமிடங்கள் வித்வத் சபை க்வாலியர் கராணாவனது , மிக மிக உன்னதமான பாகேஸ்ரீயை தலைவர் அரங்கிற்கு விருந்து படைத்தார் , அப்படியே தனிக்கு வழிவிட , நெய்வேலி தலையாட்டி மிருதங்க மாமன்னர் வெங்கடேஷ் மிக உன்னதமான தனி தந்தார் , நாமும் மேடையில் துவங்கி நெய்வேலியாரின் எட்டாவது தனி கேட்கிறோம் , ஒரு ஒரு தனியும் ஒரு விதம் , இப்படி புது விதமாய் எப்படித்தான் தருகிறாரோ என்று மலைத்தோம். வெங்கட்ரமணனும் மிகவும் உற்சகமாய் வாசிக்க அருமையாக அரங்கேறியது தனி.
8) அடுத்து சிந்துபைரவியில் தஞ்சை சங்கர ஐயரின் மனதிற்குகந்தது முருகனின் ரூபம் பாடினார் தலைவர் , அந்த தினமும் காப்பது அவன் கை வேல் எத்தனை சத்தியமான வரிகள் , தீர வினைகளை தீர்க்கும் கதிர்வேலை ஒமிக்கிரானை தீர்க்க வேண்டினோம் , எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும் பண்ணும் பூசையினால் பலன் உண்டாகும் என்று நமக்கு நம்பிக்கை நல்கினார் தலைவர். அடுத்த வரிதான் எத்தனை அழகாய் பொருந்துகிறது . மண்ணில் நாம் படும் துயர் தீரும் , சூழ்நிலைக்கு பாடும் சூரர் இந்த சஞ்சய் சுப்ரமணியன்.
9) அடுத்து ஆடுகிறான் கண்ணன் பாடினார் தலைவர் , தலைவரின் குரு மெட்டமைத்த பாடல் சுத்தானந்த பாரதி இயற்றியது , தலைவர் காப்பியில் பிரம்மாண்டமாய் பாடினார் , காற்றேன வந்து அரங்கை கட்டி அணைத்தார் தலைவர் , கூற்றென வந்துமிந்த வரியில் நம்மை எங்கோ கொண்டு சென்றார்.
10) மேலும் ஓர் சூழ்நிலை பாடல் , பாபநாசம் சிவனின் ராமனை பஜித்தால் நோய் வினை தீரும் மாண்ட் ராகம் , தலைவர் இதைப்பாடி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது , உந்தன் ராமாமிர்தம் பிணக்கு திவ்ய ஔஷதம் வரிகள் எத்தனை அழகாய் எங்கள் பித்தர்களுக்கு பொருந்துகிறது .
11) அடுத்து வாழிய செந்தமிழ் என்று நாம் நினைக்க அரங்கில் கரவொலி பறந்தது , ஆனந்த கூச்சலும் பீறிட்டது , ஆம் தலைவர் இன்பஅதிர்ச்சி தந்தது , துன்பம் நேர்கையில் தேஷ் ராகம் , புதுவை பெரும் நெருப்பு பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டு , அதானே தமிழும் நானும் தலைப்பில் பாவேந்தர் இல்லாமல் எப்படி என்றார் கோபாலர், அந்த புலவர் கண்ட நூலில் நமக்கு நம்மையும் மீறி விம்மல் , எத்தனை சங்கதிகள் எத்தனை குழைவு அருமை , துன்பம் நேர்கையில் பாடல் எந்த சூழலுக்கு எழுதப்பட்டதோ ஆனால் நமக்கு எவ்வளவு அழகாய் இப்போது பொருந்துகிறது .தலைவர் ஒரு பாடலை பாடி அது முடிவே அடையகூடாது என்று நாம் விரும்பும் பாடல் இது.
வாழிய செந்தமிழ் தலைவர் அடுத்து மத்யமாவதியில் பாட தரை தளத்தில் எழுந்து நீன்ற நால்வர் நான் ஸ்ரீதேவி ஆதித்தயா சஞ்சய் அட்சயா ஸ்ரீ , இந்த பண்பாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை, அந்த காலத்தில் சுதந்திர போராட்டத்தின் போது , தெரு நாடகங்களில் இறுதியில் இது பாடப்பட்டு மக்களுக்கு சுதந்திர வேட்கை ஏற்படுத்திய பாடல் இது , இதற்கான மரியாதையை எப்போது தான் மக்கள் தருவார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் நாம் இந்த பருவத்தில் கேட்ட ஆறு கச்சேரியில் தமிழும் நானும் மிக அருமையான ஒன்றாக அமைந்த திருப்தியோடு இல்லம் நோக்கி நகர்ந்தோம் , திருமலையும் கோபாலரும் பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து விவாதித்துக்கொண்டு நகர, இனி அடுத்து தலைவரை எப்போது நேரடியாக கேட்போம் என்ற ஏக்கத்தோடு.
Commentaires