top of page
Search

சஞ்சய் சபா(ஷ்) ! பாரதியை பாடுவதில் சஞ்சய்க்கு நிகர் சஞ்சயே !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 15, 2021
  • 10 min read



ree

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்ற முண்டாசு கவியின் வைர வரிகளை நெஞ்சிலே இருத்தி , புறப்பட்டோம் நாரதகானசபைக்கு , சபாநாயகர் சஞ்சய் , இடமும் அதே நாரத கானசபை இங்கே இவரை இதற்கு முன் எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம் . இருந்தாலும் இது ஒரு புதுவித அனுபவம் , தலைவரின் சஞ்சய் சபா நடத்தும் கச்சேரி , கானசபை அரங்கெங்கும் தலைவரின் சஞ்சய் சபா பாதாகைகள் , முகப்பில் பேனர்கள் என களைகட்டியது நாரதசபை வளாகம் , கச்சேரிக்கு முன்பே சென்றுவிட்டோம் , முன்பே என்றால் சிற்றுண்டி சிப்பந்திகள் வருவதற்கெல்லாம் முன்பு.மெல்ல மெல்ல தலைவரின் ரஸிகப்பட்டாளம் வந்து சேர வளாகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நம் சகாக்கள் வந்து சேர இன்னிக்கு காப்பி பாடல் இல்லை காப்பியாவது குடிப்போம் என்று ஜனாவுடன் காபி முடித்து , வரிசையில் நின்று முன்பதிவு சீட்டை பெற்று அரங்கில் நுழைந்தோம் , நுழைவுச்சீட்டிலும் புதுமை ஆம் பாடல் இ, யற்றியவர் , ராகம் என அத்தனையும் அச்சிட்டு தந்துவிட்டனர் , அடுத்த விநாடி ஆச்சர்யம் இல்லையென்றாலும் பலருக்கு இப்படி பாடல் பட்டியல் தருவது சரியென படும்போது நமக்கேன் வம்பு என்று அமைதியானோம். நாரதகான சபை கிடைத்த நீண்ட இடைவெளியில் அரங்கை நன்றாக புதுப்பித்திருந்தார்கள் ஆனால் பால்கனி சேர்களை அப்படியே விட்டுவைத்துள்ளார்கள் புண்ணியவான்கள். நாம் முன்வரிசையில் உட்கார பின்வரிசையில் கையில் எம்.ஜி.எம் காப்பு கட்டிக்கொண்டு கோபாலரும் , ஆழ்வார்கடியானும் வந்து அமர்ந்தார்கள். பிசாசுகளுக்கு கூட ஆன்லைன் சீட்டு உண்டு போலும் என்றேன். உதைப்பேன் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி, ஆழ்வார்கடியான் உதைத்தேன் என்று என் முதுகை நையப்புடைத்தான். இதற்குள் திரை விலக ஆஹா தலைவர்! என்று பார்த்தால் , வெற்று மேடை பின்னாலே திரை , அதில் எம்.ஜி.எம் விளம்பரம் . நல்லை வேளையாக அது சீக்கிரம் விடைபெற திடீரென அரங்கில் கும்மிருட்டு , மேடையிலும் கும்மிருட்டு , ரஜினிகாந்த் பெயர் சூப்பர் ஸ்டார் என்று வருமே அதுபோல சஞ்சய் சபா அதன் இலச்சினையுடன் காட்டினார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , பார்த்தவுடன் பரசவம் அடைந்தோம். தொடர்ந்து மேடை பின்புலமாக அழகிய 500 புள்ளி கோலம் அதில் சஞ்சய் சபா இலச்சினை , எத்தனை நேர்த்தியாக செய்துள்ளனர் என வியந்தோம். கட்டாயம் ஒரு 10 முறையாவது ஒத்திகை பார்த்திருப்பர் , ஏனெனில் இந்த சஞ்சய் சபா எழுத்திற்கு மையமாக தம்பூராவை ராகுல் பற்றியுள்ளார் பாருங்கள் என்றான் திருமலை. தலைவரை ஆக்டோபர் மாதம் அலைந்து திரிந்து மேடையில் கேட்டோம் , நவம்பரில் நம் சாஸ்திரி அரங்கில் கேட்டோம். சீசனில் கேட்வில்லையே என்ற மனக்குறை தீர இதோ சஞ்சய் கச்சேரி , வழமையாக கார்த்திக் பைன் ஆர்ட்ஸில் துவங்கி ஒரு 12 கச்சேரி நடைபெறும் , துவக்கமானது நாரதகான சபையில் , அதே சபையில் இன்றும் துவக்குகிறார் என்று நினைத்த மாத்திரத்தில் நம்மையும் அறியாமல் ஒரு புளகாங்கிதம் பெற்றோம். தலைவரின் நிரந்திர உறவுக்கூட்டணி நெய்வேலி வெங்கடேஷ் மிருதங்கம் , வரதராஜன் வயலின் , நாம் எப்போதும் ரசிக்கும் இன்முகதம்பி அனிருத் ஆத்ரேயா கஞ்சீரா , தம்பூரா எடை அதிகமா அதை மீட்டுபவர் எடை அதிகமா என தம்பூராவிற்கு சவால் விடும் ராகுல் கிருஷ்ணா தம்பூரா. எளிதாக ஆயிரம் பேர் அமர்ந்து கேட்கும் நாரதகான சபையில் இந்த கோவிட் ஒமிக்கிரான் மிரட்டலிலும் ஏறத்தாழ அனைத்து சீட்டுக்களும் நிரம்பியிருந்தது , பால்கனியில் ஒரு சீட்டும் காலியில்லை. கீழே முன் வரிசையில் சில சீட்டுக்கள் விளம்பரதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கோபாலர் கூறினார். ஒரு மகோன்னத கச்சேரிக்கான அனைத்து கூறுகளும் தாயாராக , நாமும் அதை கேட்ட தயாரானோம். தொல்லை தாராதீர்கள் என்ற என் சொல்லை சைவ வைணவ பிரயர்கள் கேட்க தாயாராயில்லை.


1) வர்ணம் விரிபோனி , இந்த பைரவி ராக வர்ணத்தை தலைவர் முன்னறிவிப்பு செய்திருந்தாலும் அவர் பாடி நாம் கேட்பது இதுவே முதல் முறை. இந்த அறிவித்துப் பாடுவது என்பது எத்தனை நெஞ்சுறுதி மிக்க செயல் என்பதை சிந்தித்து பார்க்கிறோம். கச்சேரி வரும் முன்னரே கூகுளார் , உன்குழாய் என அனைத்திலும் ஆராய்ச்சி செய்துவிட்டு அமர்ந்திருக்கும் , கர்நாடக சங்கீதத்தை கரைத்துக்குடித்திருக்கும் ஆன்றோர் சபையில் பாடுவதென்றால் அது தலைவர் போல் கரை கண்ட ஒருவரால் தான் இயலும் என்பதை வர்ணம் முழுதும் காட்டினார் தலைவர். பைரவியை சில விநாடிகள் ஆலாபனை செய்துவிட்டு , பச்சிமிரியம் ஆதியப்பாவின் தெலுங்கு வர்ணமான விரிபோணியை பாடினார் தலைவர். தஞ்சாவூரில் மராத்தியர் அரசவையில் அரசவை கலைஞனான இவர் கன்னட மாதவ பிராமனர் பாடல் எழுதியது தெலுங்கில் , இவர் ஸ்யாமா சாஸ்திரி கணம் கிருஷ்ணையர் போன்றோருக்கு குரு என தகவலை அடுக்கினார் கோபாலகிருஷ்ணபாரதி. பல்லவி அனுபல்லவி தொடர்ந்து முக்தாய் ஸ்வரத்தில் தலைவர் நம்மை முக்கியெடுக்க முந்தை வினைப்பயனாய் இந்த பண் கேட்கும் பாக்கியம் பெற்றோம். விரிபோணிக்கு ஏற்ற வயலின் மிருதங்கம் என தரமாய் வாசித்தனர் இருவரும் கஞ்சீராவும் சேர அமைர்களப்பட்டது வர்ணம்.சிருநவ்வு மோமுன்னா என்று தலைவர் சரணத்தை பாட அர்ஙிகல் இருந்த அறிஞர் மாமா மாமிகள் முகங்களில் பெருநவ்வு வந்தது. அந்த சிருநவ்வுவில் தான் எத்தனை நகாசு வேலைகள் செய்கிறார் தலைவர் , சிட்டைஸ்வரம் மூன்றையும் மத்தாப்பு போல தலைவர் பின்னி எடுக்க அரங்கமே முதல் பண்ணிலேயை தலைவர் மேதன்மைக்கு மண்டியிட்டது. பத்து நிமிடம் கடந்து வர்ணம் அரங்கை வசீகரித்தது , நெய்வேலியார் ரசித்தபடி வாசிக்க அதை காணும் அழகே அழகு. மூன்றாம் சிட்டையில் தலைவரின் குறும்பும் வெளிப்பட தவறவில்லை. முதல் பாடல் முத்தப்பாடலாக அமைந்தது.


2) அடதாள வர்ணத்தை அடுத்து தலைவர் ஹம்ஸத்வனி ராகம் , ரகுநாயக பாடினார் ஆதி தாள பாடல் நாதபிரம்மம் இயற்றிய புகழ்பெற்ற பண். இராமர் புகழ் பண் வழக்கமான தியாகையர் திருப்புலம்பல் என்றாலும் அதில் ஒரு வித துள்ளலை நாம் உணர்கிறோம். ஹம்ஸத்வ்னிக்கு மிக முக்கியமான மிருதங்க நாதத்தை பாடல் முழுதும் பிரமாதப்படுத்தினார் , வணங்கும் முடியார் வரதர் தலைவர் பாடலுக்கு அரும்பெரும் வாசிப்பை வழங்கினார் தலைவரும் முத்தாய்ப்பாக அனுபல்லவி வரிகள் நன்னு ஆதரிம்ப கதி நீவே என்று சிரித்தார் , சரணத்தில் அவனிஜாதி பா ஆஸ்ருத ரக்ஷகாவில் பிரமாதப்படுத்திவிட்டு ஸ்வரத்தில் இறங்கினார் , ரகுநாயக நிரவல் ஸ்வரம் அரங்கை வருடியது , அனைவருக்கும் சிலிர்த்தது . ஸ்வரங்களில் தலைவர் சர்வ அதிகாரம் செலுத்தும் ஸ்வரஅதிகாரி , வரதரும் நெய்வேலியாரும் சளைத்தவர்களா என்ன , மூவரும் ஒருவரை ஒருவர் மிக அழகாக உற்சாகப்படுத்திட , அநிருத் நேநு உன்னானு என்று புக தலைவர் கல்பனாஸ்வரம் கட்டுகடங்காமல் பிறந்த அடுத்த நொடி பறந்தது , மிக மிக உயர்தர ஸ்வரத்தை தலைவர் அரங்கில் வழங்கி கொண்டிருந்தார் , அவருக்கே உரிய மேற்கத்திய பாணிகளை ஆங்காங்கே தெளித்து வழங்கினார். நெய்வேலியார் ஸ்வரத்தில் மட்டும் ஒரு 200 தலையாட்டல்களை புரிந்து அசுரவேகத்தில் வாசித்தார் . வரதர் சும்மாவே சூரப்புலி தலைவரின் ஸ்வர ஊந்துதல் வரதருள் உத்வேகத்தை ஊற்றெடுக்க வைத்து தலைவர் பாணியில் சரவெடியாய் வாசித்தார் ஸ்வரத்தை , ரகுநாயக நம்மை வெகுவாக ரசிக்க வைத்தது.


3) பாரதியின் பிறந்தநாளில் பெரும்பாலும் தலைவர் கச்சேரி இருக்காது , ரஸிகர்களின் பெருந்தவப்பயனாய் இவ்வாண்டு , எட்டயப்புரத்து சூரியனின் பிறந்தநாளில் தலைவர் கச்சேரி , கச்சேரி முன்னோட்ட காணொளியில் இது குறித்து அவர் அறிவித்திருந்தபடியால் , நமக்கு எதைப் பாடுவார் என்ற வினா எழ , ஹரிகாம்போதி பாமாலை என்றவுடன் மகிழ்வின் உச்சாணி கொம்பில் இருந்தோம். தலைவர் ஹரிகாம்போதியை பாங்குற ஆலாபனை செய்தார், சேயான ஹரிகாம்போதியை விஞ்சி புகழ்பெற்ற காம்போஜி , தலைவரும் காம்போஜ மாமன்னர் என்பதை கடந்த கால வரலாறு நமக்கு உரக்கச் சொல்லாம் என்றாலும் , ஹரிகாம்போதியை தலைவர் மிகவும் ரசித்து ரசித்து ஆலாபனை புரிந்து , தன் வழமையான நவீனங்களை புகுத்தி அமர்களப்படுத்தினார் , உச்சஸ்தாயியில் வானமும் இல்லை தனது எல்லை என்பதை விளம்பினார். ஆலாபனையின்போது தலைவரது கரங்கள் சுழல கேட்போர் உள்ளங்கள் மகிழ , மிக அருமையாக ஆலாபனை தொடர்ந்தது , மிக வேகமாக பயணிக்கும் பந்தய காரை இடையில் பிட்ஸ்டாப் என்பார்கள் அங்கே நிறுத்தி எரிபொருள் அல்லது டயர் மாற்றுவார்கள் தலைவருக்கானத அத்தகைய பிட்ஸ்டாப் நெய்வேலியார் , தலைவர் ஆலாபனை புரிய புரிய அதை தலையாட்டியார் ரசிக்கும் ரசிப்பிலேயே தலைவருக்கு மேலும் உந்துவிசை கிடைக்கும் , அதைத்தான் தலைவர் ஆலாபனை ஹரிகாம்போதியில் அரங்கேற்றினார் , ஆலாபனையில் கடை பகுதியில் தனது முத்திரை பிடிகளை போட்டு அரங்கமே அதிக ஆலாபனையை முடித்தார். அண்ணன் காட்டிய வழியம்மா என்று தம்பி வரதர் தொடர்ந்தார் ஹரிகாம்போதியை , ஆம் ராமருக்கு ஒரு பரதர் தலைவருக்கு ஓர் வரதர் , அடேயப்பா என்ன வாசிப்பு எத்தனை நினைவாற்றல் , தலைவர் செய்த அத்துனை நகாசு வேலப்பாடுகளையும் இவரின் வாசிப்பில் நாம் மீண்டும் கிடைக்க்பெறுகிறோம். அருகே ஒரு மூத்த மாமி தன்னை மறந்து ஹம்மிங் துவக்க ஆஹா நம் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் மாமியா என்று அதிர்ந்தோம். நல்ல வேளையாக தலைவர் பாடலைத்துவக்கினார் , நாரதகானசபையில் தலைவர் பாபநாசம் சிவனை பாடாமல் விடுவாரா , துவக்கினார் பாடலை ஆனால் அதிலும் ஓர் புதுமை , நீ பக்தியுடன் தொடுத்த பாமாலைக்கிணை உண்டோ சுப்ரமணிய பாரதியே என்று பாட அரங்கெங்கும் பூரிப்பு , பாரதியின் ஜதிபல்லக்கை திரு அல்லிக் கேணியில் காணாதோர் , மயிலையில் கண்னடோம். பூமாலை மணமழகும் அழியும் கணம் புவனமுள்ள வரைக்கும் கமழும் எளிய நடை , ஆஹா என்னே வரிகள் , அடுத்து நாம் பெரிதும் எதிர்பார்த்த தமிழ்நாடு பாடினார் தலைவர் , அது தமிழ் நாடா , அல்லது தமிழ் நாடு என்கிறாரா , வம்பர் இந்த சுப்பர் , என்றான் திருமலை , கோபாலகிருஷ்ணபாரதி எல்லாவற்றையும் அரசியலாக்காதே திருமலை என்று இடித்துரைக்க , திருமலை என்ன இடித்து , சொல் தமிழ் நாடா அல்லது தமிழ் நாடு என்கிறாரா என்றான். நான் தமிழ்நாடு ஊஊஊஊ என்று பாடத்துங்கினேன் , திருமலை கையெடுத்து கும்பிட்டு விவாதத்தை முடித்தான். தலைவர் தமிழ்நாடு செய் தவப்பயனாய் வந்தவதரித்தாய் வரிகளை நிரவலாக எடுத்துக்கொண்டார். இவரின் தமிழை நாடாமல் இருப்பவர் எவரும் இருக்க முடியாது , இசை நாட்டின் பேரரசு சஞ்சய் சுப்ரமணியன் என்பதில் தமிழ்த்தாய்க்கே மாற்றுக்கருத்து இருக்க முடியாது . அத்தகை நிரவலை தலைவர் தர , வரதரும் அருமையாக வாசித்தருளினார். இருவருக்கும் தலையாட்டியாரும் அநிருத்தும் அருமையாக களம் அமைத்தனர். அமிழ்தினும் இனிது நின் கவிதையின் நயமே என்று தலைவர் பாடினார் , அது போல் அமிழ்தினும் இனிது தலைவரின் இசை , அதைமீண்டும் பாமாலை உறுதிசெய்தது.


4) தமிழ்நாட்டில் தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை பல்லாண்டுகளாக கிடப்பில் போட்டாலும் இதொ காவேரி நதியை சென்னையில் பாய்ச்சுகிறேன் எனத் தலைவர் துவக்கினார் ஆலாபனை சாவேரியை , ஹம்ஸத்வனி , ஹரிகாம்போதியில் துள்ளலில் துள்ளித்திருந்தோரை , சற்று என் உருக்க மாரியில் நனையுங்கள் என்று தலைவர் சாவேரி உருக்க மாமழை பொழிய ரஸிகர்களை கரைந்தே போனார்கள் , உப்பரிகையில் இருந்து கீழே பார்த்தபோது சாவேரி வெள்ளம் அரங்கில் மூழ்கடிக்க துவக்கிட , தலைவர் ததரணண ததரணண வை துவக்கினார் வெறும் வம்பர் இவர் என்றார் கோபாலர். ஜனா 2018 புத்தாண்டில் இதை ஏற்கனவே செய்துள்ளார் என்றார். வரதரின் ததரணணவிற்காக காத்திருந்த நமக்கு நான் வம்பு வளக்க மாட்டேன் என்று சாவேரியின் உருக்கத்தை மட்டும் உளமாற மனதார வாசித்தளித்தார். தலைவர் முத்துசாமி தீட்சிதரின் ஸ்ரீ ராஜகோபால பால சிருங்காரவை பாடினார் , மன்னை பெருந்தெய்வத்தை தீட்சிதர் மனதுருக இயற்றி பாடிய பண் , சற்று நேரத்திற்கு முன் ததரணண என்று விளையாடிக்கொண்டிருந்தவரா என்று வியக்கும் வகையில் நல்ல பிள்ளையாக அதாவது சமத்து பிள்ளையாக தீட்சிதரை பாடினார் தலைவர்.திருமலை உனக்கு தெரியுமா இந்த மன்னார்குடி கோயில் 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பெற்றது ஆனால் ஆழ்வார்கள் இதை மங்களாசாசனம் செய்யாததால் இது 108 திவ்ய தேசத்தில் இடம்பெறவில்லை , அந்நாளில் இது முழுக்க செண்பக மரங்கள் அடர்ந்த வனம் இதன் ஸ்தல விருட்சமும் செண்பக மரம் தான், அதுமாத்திரமல்ல இங்கே மூலவரை விட ருக்மிணி சத்யபாமாவுடனான உற்சவர் பிரசித்தி , இந்நாளில் மட்டுமல்ல தீட்சிதர் காலத்திலேயே பிரசித்தி , அதனால் தான் சரணத்தில் தீட்சிதர் ஸ்ரீவித்யராஜஹரே ஸ்ரீ ருக்மிணி சத்யபாமாஸ்ருத என்று பாடியுள்ளார் என சைவப் பெரியவர் கோபாலகிருஷ்ணபாரதி பகர , அரண்டு போனான் திருமலை , இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு , ஆம் தீட்சிதர் இந்த மன்னை கண்ணனை இன்னும் இரண்டு பாடலில் போற்றியுள்ளார் தெரியுமோ , சந்தான கோபாலகிருஷ்ணம் மற்றும் ஸாரஸ தளநயன என்று அவன் போட்டிக்கு அடுக்க பித்துக்குளிகளே பாடலை கேட்க விடுங்கள் என்று நான் கர்ஜித்தேன். இதற்குள் தலைவர் அனுபல்லவி முடித்து சரணத்தில் அரங்கை மயக்கிக்கொண்டிருந்தார், சரணத்தில் நிர சம்பூர்ண ஹரித்ரா நதி தீர மஹோத்ஸ்வ வைபவ மாதவா வரிகளை பாடியபோது , நம் முகநூல் நண்பர் வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தியின் பளீர் சிரிப்பு முகம் கண் முன் வந்தது , கல்கி காவேரியை மாய்ந்து மாய்ந்து விவரிப்பது போல்தனது பால்ய நாட்களை குறித்து அவரின் முகநூல் பதிவுகளில் இந்த ஹரித்ராநதியை அப்படி வர்ணித்திருப்பார் ஆர்.வி.எஸ் , ராஜகோபால ஸ்வாமி கோயிலின் பிரம்மாண்டத்திற்கு சற்று குறைந்ததில் அதன் குளம் , தமிழ்நாட்டின் ஆகப்பெரிய குளம் போல் பிரம்மாண்டத்தை தந்தார் தலைவர் சாவேரி பாடல் மூலம் , இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற மயக்க நிலைக்கு சென்றது நாரத கானசபை.


5) அடுத்து அக்கம்மாவின் பெட்டட மேலொந்து மனையை மாடி நாராயணியில் துவக்கினார் தலைவர் ,இந்த அரும்பாடலை நாங்கள் முன்பே பன்முறை கேட்டிருந்தாலும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திரு வாசுதேவ் அவர்களின் கலையரங்கு திறந்தவெளியில் தலைவர் பாடி கேட்டது தான் ஆகச்சிற்ப்பு, அக்கம்மா மலை மேல் வீடு கட்டி விலங்குக்கு அஞ்சலாமா , சமுத்திரத்தின் அருகே வீடு கட்டி அலைகளுக்கு அஞ்சலாமா , சந்தையில் வீடு கட்டி சத்தத்திற்கு அஞ்சலாமா , என்று வரிசையாக பாடியுள்ளார் , நம் தலைவர் வாசுதேவ் அவர்கள் ஏற்பாடு செய்த அரங்கில் இருந்து 100 மீட்டரில் கடற்கரை அங்கே அமர்ந்து கொண்டு சமுத்துரத தடியல்லி மனைய மாடி நொர தெரகளுகு அஞ்சினோடேந்தையா என்று பாடி அவரை சிரிக்க வைத்த காட்சிகள் வந்து சென்றன , இதற்கிடையில் தலைவர் மல்லிகார்ஜுன தேவாவில் நளினங்கள் புகுத்தி , நம்மை அந்த தெய்வத்தின் முன் நிறுத்தினார், அக்கம்மா சொல்வது போல் சுருதி நிந்தைகள் நிறைந்த உலகில் மனதில் கோபத்தை விடுத்து சமாதனாத்தோடு இருப்போம் என்று உறுதி கொண்டோம்.


6) நாராயணியில் ஆலாபனை செய்யாதது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏனெனில் இதில் ஆலாபனை இல்லையென்றால் அடுத்து பூலோக குமாரி ரஞ்சனி ஆலாபனை உண்டு , சுந்தரா அகம் மகிழ தலைவர் ஆலாபனை ரஞ்சனி செய்வார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு பல்பளித்து தலைவர் பூலோக குமாரியை துவக்கினார் .பாரதியாரின் மிக குறைந்த ஸமிஸ்கிருத பாடலில் ஒன்று இந்த பூலோக குமாரி , அனுபல்லவி ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே, கால பய குடாரி காம வாரி வரிகளில் ஒரு பிரளயத்தையே மேடையில் நிகழ்த்தினார். நாம் எந்த பாடகரை குறைத்து கூற விரும்பவில்லை ஆனால் சஞ்சய் பாரதியை பாடுவது வேறு பிறர் பாடுவது வேறு , பாரதியை தன்னுள் முழுதாய் உள்வாங்கி பாரதியாகவே பாடுவது தான் சஞ்சய் சிறப்பியல்பு என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , திருமலையும் தலையை ஜோராய் ஆட்டினார். அரங்கமே தலையாட்டியது தலைவரின் சரண வரிகள் பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,சங்கதிகளை போட்டு பிராமதப்படுத்தினார். லீலா ஜ்வாலா வில் மீண்டும் ஒரு சண்டமாருதம். அரங்கில் ஆயிரம் பேர் இருந்தாலும் தலைவர் பாடியது அந்த பூமித்தாயின் முன் தன்னை அர்பணித்து பாடியது போல் இருந்தது , பாடல் கடை பகுதியில் ரஞ்சனியை ஆலாபனை செய்தது அருமையென்றால் , ரஞ்சனி ராகத்தை அணுஅணுவாய் ரசித்து கேட்கும் பரமரசிகை சுந்தாரா அருகில் அமர்ந்து அந்த பாடலை கேட்டது மிகவும் உணர்வுபூர்வமாய் அமைந்தது.


7) சில ராகங்கள் நம்மை ஸ்தம்பிக்க செய்துவிடும் , அத்தகைய ராகங்களின் ராணி ரேவதி , அடேயப்பா என்னே ஒரு வீச்சு இந்த ராகத்திற்கு , இந்த ரேவதியை முதல்முறை வாணியில் கேட்டுள்ளேன் 2013இல். 2019திலும் கேட்டுள்ளோம் , வழமை போல் கேட்போர் கண் இமைகள் மட்டுமல்ல விழி திறை கூட ஆடாமல் அசையாமல் கேட்க வைத்தார் தலைவர் தம் ரேவதி ஆலாபனை மூலம் ,இந்த பூலோகத்திற்கு மேலே புவர்லோகம் , சுவர்லோகம் , மஹர் லோகம் , ஜனோலோகம் , தபோலோகம் , சத்யலோகம் என ஆறு லோகம் , பூமிக்கு கீழே அதல லோகம் , விதல லோகம் , சுதலலோகம் , தலாதல லோகம் , மகாதல லோகம் பாதாள லோகம் , ரஸாதல லோகம் என ஏழு லோகம் பூமியையும் சேர்த்து பதினான்கு லோகம் தலைவர் ரஸாதல லோகம் வரை சென்று துவக்கிய ரேவதியை சத்யலோகம் வரை மேலே கொண்டு சென்றார் , மேலே கொண்டு சென்று அங்கேயே நிறுத்தி ரேவதி ராகத்தை அசைத்தார் அரங்கமே அசைந்தது நடுவே தன் முத்திரை குறும்பு ரிட்டீரி ரிட்டீரி எல்லாம் செய்துவிட்டு இன்னும் மேலே சென்றார் , ஆம் அண்டத்தையும் ஆகாசத்தையும் விஞ்சி நின்றார் நம் அசகாயசூரர் , ரேவதி பாடுவது மிகவும் கடினமான ஒரு செயல் , சங்கீதத்தில் கரை கண்டவர்களால் மட்டுமே சாத்தியம் என்றார் கோபாலர் கண்களை துடைத்துக்கொண்டு , வரது எப்போதுமே தலை குனிந்து கர்மசித்தையாக வாசிப்பவர் , ரேவதி என்றால் சொல்லவும் வேண்டுமா மனிதர் , குனிந்த தலை நிமிராமல் நம்மை விரிந்த விழிகள் விரிந்தவாறே இருக்கவல்ல ஆலாபனை தந்தார் தன் வயலினில் , தானாதிசூர் தலைவர் துவக்கினார் தானத்தை , தானத்திலும் மெல்லிய ஆலாபனை செய்து ஆனம்த தானம்த என்று துவக்க அரங்கில் ஒரு பெரிய தீ வட்டத்தை உருவாக்கி அதில் இருந்த உணர்வு பெற்றோம் , கீழே குளிர்சாதனத்தின் வீச்சில் சால்வை போர்த்தியோரெல்லாம் அதை விலக்கி விட்டு ரேவதி தானதீயில் குளிர் காய்நதனர் , தானத்தின் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கி தானம் பல்வேறு சுற்றுகளை கடந்து முடிவுக்கு வர , சஞ்சய்க்கு நிகர் சஞ்சயே என அரங்கு அதிர்ந்தது , பாரதிக்கு நிகர் பாரதியே மண்ணில் மக்கள் சீர் உயர்த்தும் பணியில் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளை தனது பல்லவி வரிகளாக அமைத்து தலைவர் பாட , ரேவதியில் பாரதியின் தீரம் நாரத சபையில் கோலோச்சியது , யார் எதிர்த்தாலும் என்று தலைவர் துவக்க தலைவரின் இடைசெருகலோ என அனைவரும் வியப்படைந்தனர் , ஆனால் பட்டுக்கோட்டையார் அப்படித்தான் எழுதியுள்ளார் , அடுத்த வேளை உணவிற்கு உணவில்லா நிலையிலும் இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு வல்லமை தாராயோ பராசக்தி என்று பாடிய பெருங்கவிஞனை தலைவர் மிக அருமையாக பல்லவி பாடிவிட்டு , நெய்வேலியாரிடம் கணக்கு வழக்கு செய்து வம்பிழுப்பார் என்று நாமும் நெய்வேலியாரும் எதிர்பார்த்திருக்க ஸ்வரத்தில் இறங்கினார் , ரேவதி ஸ்வரம் வரமாய் அரங்கில் வலம் வந்தது தவமாய் தவமிருந்து ரஸிகர் பட்டாளம் அதை மனதார கேட்டு மகிழ தலைவர் , ராகமாலிகையில் பிலஹரியைத் துவக்கினார் , அன்று குறுநோட்டு வெளியிட்டு அதையே ராகமாலிகையாக பாடினார் குறும்பர் , பிலஹரியின் முத்திரையான மேற்கத்திய நோட்டுக்கள் வந்து விழுந்தன , நீண்ட ராகமாலிகையாக பாடினார் பிலஹரியை , அடுத்து துர்கா , துள்ளலுடன் வந்து விழுந்தது துர்கா ஸ்வரங்கள் , இந்துஸ்தானிய ராகங்களை பாடுவது தலைவருக்கு தனி பிரியம் அதிலும் ராகமாலிகையில் ரசித்து ரசித்து பாடுவார், ராதே ராதே நீ எங்கேவும் வந்து சென்றது , வரது துர்கா வசமாய் நம்மை மயக்கியது. அடுத்து கல்யாண வசந்தம் துவக்கதில் பிரியதர்ஷினி என்று உணரப்பட்டு பின் கல்யாண வசந்தம் என்று அறிஞர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு காற்றில் எந்தன் கீதம் வந்தது , வரதுவும் அதை வருட கல்யாண வசந்தம் களைகட்டியது தொடர்ந்து மீண்டு ரேவதி வந்து ஸ்பதஸ்வரபிரஸ்தாரம் புரிந்து ராகம் தானம் பல்லவியை முடித்தார் தலைவர் , தொடர்ந்து இளைமையின் பரபரப்பு அனுபவத்தின் அசுரவாத்தியம் அரங்கேறியது மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் இதே அநிருத் தலையாட்டியார் இணை தந்த தனியை இன்னும் பித்தர் குழுவில் பலர் பேசவர் , அதை விஞ்சியது நாரத சபை தனி , நெய்வேலியாரின் பெரும் ஆளுமை என்னவென்றால் , அநிருத் ஆனாலும் சரி , புதுமுகம் சுனில் ஆனாலும் சரி அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வாசிக்க வைப்பார் , தலையாட்டி சித்தரே கஞ்சீரா கலைஞனாக இருந்ததால் அவர் மிகவும் ரசிப்பார் , பொதுவாக தனியாவர்த்தனம் என்பது பக்கவாத்தியம் உபபக்கவாத்தியத்தின்கான போட்டி போல் இருக்கும் , இங்கேயும் அந்த போட்டி என்ற உணர்வை தந்தாலும் ஒரு சிங்கம் தன் இளஞ்சிங்கத்தை உற்சாகப்படுத்த அதனோடு சண்டையிடுவது போல் நெய்வேலியார் தனி அமைந்தது , அநிருத் எப்போதும் மிகவும் சமத்துப்பிள்ளை , வாசிக்கம்போது புன்சிரிப்பு இருக்கும் நெய்வேலியாரை பார்த்து பார்த்து பரவசத்தோடு வாசித்தார் , ஏறத்தாழ 10 நிமிடம் நீடித்த தனி முடிந்ததும் அதை விட அதிகமோ என்று தோன்றும் விதத்தில் ரஸிகர்கள் கைத்தட்டினர். நெய்வேலி தனிக்கு நிகர் நெய்வேலியே என்பதை மீண்டும் பதிவு செய்தார்.


8) அரவிந்தன் நேரம் அடுத்து ஆம் மீண்டும் ஓர் பெஹாக் ஆனால் இதுவரை நாம் கேட்டிராத பாடல் ஜெயதேவர் அஷ்டபதி , தலைவரின் தலைவர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி மெட்டமைத்தது , அந்த மினி ஆலாபனை ஒன்று போதும் நம் ஜென்மம் சாபல்யம் அடைய , ராமகிரியா யதியில் சந்தன சர்சித என்ற ஆஷ்டபதியில் கடை பகுதி வரிகளை முதலில் பயன்படுத்தினார் தலைவர், பிருந்தாவன கண்ணன் கோபியருடன் கொஞ்சி விளையாடுவதை விளக்கும் பாடல் இது என்றான் திருமலை , இது சிருங்கார நெடியில் இருக்கிறது ஆனால் கண்ணன் 8வயதிலேயே பிருந்தாவனத்தை விட்டு சென்றுவிட்டாரே என கோபாலர் கேள்வி எழுப்ப திருமலை என்ன முறைத்தான் நான் பெஹாக்கில் மிதந்தேன். வரிகள் எதுவாகினும் பொருள் எதுவாகினும் ராகம் என் பெஹாக் எனும்போது நாம் கரைந்தே போகிறோம்.


9) தலைவர் கச்சேரி என்றாலே அடுத்த விநாடி ஆச்சர்யம் , பாடல் பட்டியலை வெளியிட்டு அதை இல்லாமல் செய்துவிட்டாரே ராகமாலிகை என்ன பாடுவார் என்பதைத்தான் ஊகிக்க வேண்டி இருக்கிறது என்ற புலம்பல் பெரும்பாலானோரிடம் இருப்பதை ஊகித்து தலைவர் தந்தார் அடுத்த விநாடி ஆச்சர்யம் , அனைவருக்கும் பரமானந்தம் , அன்றைய நாள் முழுதும் பாரிதக்கே என்பதை பறைசாற்றும் பாங்கில் தலைவர் சின்னஞ்சிறு கிளியே துவக்கினார் , எனக்குதெரிந்தவரை நான் அவரை அறிந்த வரை இந்த பாடல் அந்த நிமிடம் ரஸிகர்களை கண்டு மனமகிழ்ந்து பாடியதாக இருக்க வேண்டும். காப்பியில் துங்கியது சின்னஞ்சிறு கிளி , நம் கலிதீர்த்தார் தலைவர் , காப்பியில் துவங்கி மாண்ட், வசந்தா , திலங் , இந்தோளம் , நீலிமணி என தலைவர் வரிசையாக அனைத்து சரணங்களையும் பாட உன்மத்தம் கொண்டது அவை. அந்த நீலம்பரியில் நமக்கு என்றுமே ஒரு மோகம் , இன்பக்கதைகளே வலஜியில் கேட்டுவிட்டு , மார்பில் அணிவதற்கே தேஷ்யில் கேட்டு மகிழ்ந்தோம் , பெண் பிள்ளை தந்தைகளுக்கு உரிய வரிகள் அது , இன்றும் அட்சயாவை மார்பில் அணிவதே நம் அனைத்து வலிகளுக்கும் மாமருந்து. எதிர்பாரா இன்பமாய் தலைவர் தந்த சின்னஞ்சிறு கிளி பெரிய அளவில் நம்மை மகிழ்வில் ஆழ்த்தியது.


10) தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பகதோட்டத்திலே என்று துவக்கினார் விருத்தத்தை இதுவும் நாம் எதிர்பாராதது , காத்திருந்தாலில் ஒரு ஐந்தாறு சங்கதிகளை போட்டு தாக்கினார்

வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மாவில் என்னே ஒரு ஏக்கத்தை காட்டுகிறார் , பாயும் ஒளி நீ எனக்கு பாய்ந்தது அவையில் , கமாஜ் ராகத்தில் தலைவரே மெட்டமைத்த பாடல் இது , அந்த கண்ணம்மாவில் கரைய வைத்தார் அரங்கை , அரங்கில் இருந்தோர் அனைவரும் தாளம் போட மிக ரம்மியமாக அமைந்தது பாடல் , இந்த கண்ணம்மாவை நம் கோவை ராஜலட்சுமி பைன் ஆர்ட்ஸ் கச்சேரியில் கேட்டு கிறங்கியிருக்கிறோம் , பாரதியின் வரிகளை இப்படியெல்லாம் ரசித்து பாட இன்னும் ஒருவர் பிறந்து வருவது கூட சாத்தியமில்லை என்றார் கோபாலர் , அந்த காணும் இடம் தோறும் நிந்தன் கண்ணின் ஒளியில் தான் எத்தனை ஒளி புகுத்துகிறார். வாழ்வநிலையேவில் நம் வாழ வைத்து கண்ணம்மாவில் கலக்கினார் தலைவர்.கைத்தட்டல் நிற்க கணநேரம் ஆனது.

11) ஸ்வாதி மாமன்னரின் தனஸ்ரீ தில்லானா அடுத்து அரங்கை ஆக்ரமித்தது , பாஜுபாயலில் பாயந்தது நம் மனம் , தானு காவே யில் கரைந்த நாம் பதுமநாபுவில் கைகூப்பினோம் , தனஸ்ரீயில் தன்னேரில்லா தில்லானாவை பாடி முடித்தார் தலைவர்.


பவமான பாடி கச்சேரியை முடிப்பார் என்று எதிர்பார்தோருக்கு மேலும் ஒரு ஆச்சர்யம் தலைவர் வாழிய செந்தமிழ் பாட உப்பரிகையில் நாங்கள் யாவரும் எழுந்து நிற்க தரைதளத்து கோமான்கள் சிலர் யோசித்தாலும் பின் அனைவரும் எழுந்து நின்றனர் , ஏறத்தாழ 2.45 நிமிட கச்சேரி , நான் தலைவரை 2011 முதல் கேட்டு வருகிறேன் பத்தாண்டுகள் ஒரு ரஸிகனாய் இதுவரை கச்சேரி முடிந்து இப்படி ஒரு ஆர்பரிப்பை ரஸிகர்களிடம் நான் கேட்டதில்லை , கைத்தட்டல் பறக்கும் ஆனால் ஆராவார கோஷங்கள் விசில்கள் பறந்தது , இது சற்று வரம்பு மீறல் என சில மாமா மாமிகள் நினைக்கலாம் , ஆனால் ரஸிகர்களின் இரண்டாண்டு பசி நிறைவடைந்ததின் பூரிப்பு அது , மக்களின் ஏக்கதாகம் தீர்ந்த நன்றி அறிவித்தல் அந்த சப்தங்கள் , நாம் அனைவரும் வாழ பணம் அத்தியாவசியம் அதற்குத்தான் போராடுகிறோம் பல நேரங்களில் திண்டாடுகிறோம் , பெரும்பாலும் பணத்தை தந்து அதற்கு பெருமானமான பொருளை வாங்குகிறோம் அல்லது நுகர்கிறோம் , ஆனால் இந்த சஞ்சய் சபா கச்சேரி நாம் தரும் பணத்தை ஈடு செய்யும் கச்சேரியல்ல , மாறாக நாம் ஈடு இந்த பிறப்பில் அல்ல இன்னும் ஏழு பிறப்பு எடுத்தாலும் ஈடு செய்ய இயலாத நிலையில் கச்சேரி அமைந்தது , தலைவர் , நெய்வேலியார் ,வரதர் இவர்களெல்லாம் விரும்புவது விரும்பியது இத்தகைய ரஸிகர்களின் மனத்திருப்தி தான் அதற்கு மிஞ்சி இந்த உலகில் எதுவும் இல்லை , மீண்டும் மனத்திருப்தியை வாணி மஹாலில் பெற காத்திருப்போம்.

 
 
 

टिप्पणियां


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page