சஞ்சய் சபாவில் சங்கரன் மகனின் சங்கராபரணம் , ராகமாலிகை சதிர் , தித்தித்த துக்கடாக்கள் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 27, 2023
- 5 min read


பருவத்தின் 6வது கச்சேரி , சஞ்சய் சபாவின் பிரத்யோக கச்சேரி , தலைவர் கோவிட் எல்லாம் வருவதற்கு முன்பே துவக்கிய ஒரு புதுமை தான் இந்த சஞ்சய் சபா , பார்கவி மணியுடன் இணைந்து கோவிட் பருவத்திலேயே கச்சேரிகளை நடத்தி அசத்தினார் தலைவர். அந்த வகையில் இந்த முத்தமிழ் மன்றம் கலைஞர் அரங்கு தலைவரின் ஹோம் பிட்ச் ஏறத்தாழ அக்டோபரிலேயே நாம் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளோம் , அரங்கு நிறைந்த கச்சேரி தலைவருடன் நெய்வேலியார் வரதர் ரேதஸ் ராகுல் கூட்டணி , மீண்டும் ஒர் ராதாப இல்லாத கச்சேரி , சங்கராபரணம் மெயின் , ஆந்தோளிகா , கம்பீரநாட்டை என்று பிரத்யேக ராகங்கள் நிறைந்த கச்சேரி. கோபாலர் மிகவும் குதுகலமாய் காணப்பட ஆழ்வார்கடியானும் மகிழ்வுடன் காணப்பட்டான். பட்டியலில் இல்லாத அந்த கொசுரு பாடல் என்னவாய் இருக்கும் என்பதே அரங்கத்தினரின் பேராவலாக இருந்தது , வழமை போல் அதிலும் பல்பளித்தார் தலைவர் என்பது பிற்பாதியில் உணர்த்திய கச்சேரி துவங்கிற்று 18.30க்கு , ஓலியமைப்பு எத்திராஜ் போலில்லாமல் நல்வாய்ப்பாய் அருமையான ஒலிபெருக்கிகள்.
1) தஞ்சை நால்வரின் பந்துவராளி வர்ணம் சலமு பாடினார் தலைவர் மீண்டும் பந்துவராளியா என்று கோபாலர் புருவம் நெரிக்க வர்ணத்தில் தலைவர் தன் விளையாட்டை துவக்கினார் , வழமை போல் முக்தாய் சிட்டைஸ்வரங்கள் வரங்களாக வந்து விழ , நெய்வேலியார் , வரதர் அருமையான பின்புலத்தை அளித்தனர் , வந்துவராளின் ரஸம் சொட்ட சொட்ட ஸ்வரங்கள் தெறித்தன , அரங்கத்தின் குளுமையை விஞ்சியது தலைவரின் பந்துவராளியின் கதகதப்பு .
2) கோபாலர் மகிழும் தருணம் அடுத்து , ராஜகம்பீரர் காம்பீரநாட்டையில் ஹரஹர சிவ கருணாகர பரமேஸ்வர ஆனந்தத்தாண்டவ ராயா பாடினார்.கோபாலகிருஷ்ண பாரதி சிவனாரை அணுஅணுவாய் வர்ணித்து பாடிய பா இது , பரமாநந்த கூபமும் பஞ்சாட்சர படியும் கொடியும் வரமருளும் சந்நிதியும் சிவகங்கையும் மதிளும் பரிவுடன் என்று மஹாதேவரை அணுஅணுவாய் ரசித்துப்பாட , அரங்கமே கைலாய காட்சி கண்டது , இந்த சிவபெருமானை வாசிப்பதில் நெய்வேலியாருக்கு தனி மகிழ்வு உண்டு என்பதை வாசித்துக்காட்டினார். ஸ்வரராஜா ஹரஹர கருணாகரவில் பிரமாதப்படுத்தினார் , வரதர் அவருக்கு வாசிக்கும் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது , கருணாகரன் கருணையினால் இந்த நிரவல் ஸ்வரம் கேட்டு மகிழ்ந்தது அவை.தொடர்ந்து கல்பனாஸ்வரம் நம் கற்பனையை விஞ்சும் நிலையில் தந்தார் தலைவர் , வரதர் அவரை இன்னமும் உசுப்பினார் வாசிப்பில் , மிருதங்கம் மின்னல் வேகத்தில் இயங்கியது , தலைவர் மேலே சென்று மத்தாப்பை சுழற்றினார் , ஸ்வரங்கள் மேகத்திலிருந்து பொழியும் மழைத்துளி போல் அவை எங்கும் பாய்ந்தது , அனைவர் உள்ளத்திலும் ஓளி பெருகியது , என்னே ஒரு அருமையான ஸ்வரப்பிரஸ்தாரம்.
3) ஆந்தோளிக்கா ஆலாபனை அடுத்து , மேகத்திலிருந்து பனிப்பொழிவை விஞ்சியது குளுமை , கரஹரப்பிரியா ஜன்யம் மிக அருமையாக அரங்கில் அரங்கேற்றினார் தலைவர் , குறைவான நேரமே ஆலாபனை புரிந்தாலும் அதன் அடி முடியை தொடுவதில் தலைவர் வல்லார் , வரதர் வயலினும் அந்த வல்லாண்டமையை அரங்கேற்றியது மிக நேர்த்தியாய் , ராக சுதா ரஸ பாடினார் தலைவர் , தியாகராஜர் பாடல் ஆனால் மிகவும் வேறுபாடாய் அமைந்துள்ளது , ஓ மனமே ராகத்தின் எப்பொழுதும் சுவையான சாரத்தை அருந்தி, நீ ஏன் மகிழ்ச்சியடையக்கூடாது என்று வினவுகிறார் தியாகராஜர் வழமையாக ராமரை வினவுவது ராகத்திடமே வினவியுள்ளார் , சதாசிவத்தின் மகிமையான வடிவமான ஓம்காரத்தின் ஒலியை ஜீவனின் முக்தி என்கிறார் என்றார் கோபாலர் , நான் திருமலையை கண்டேன் அவன் முகத்தை திருப்பிக்கொண்டான். இதற்குள் தலைவர் ஸ்வரம் துவக்கி ராகசுதாவை மேலும் ரஸம் கூட்ட ரஸவாதங்கள் புரிந்தார் நிரவல் ஸ்வரத்தில் .அந்த முடிப்பு கல்பனாஸ்வரம் அருமையிலும் அருமை , இந்த மூவரின் ஒத்திசைவிற்கு ஈடு இணையே இல்லை.
4) இந்த பருவத்தில் தலைவர் மலையாளத்தில் ஸ்வாதியையும் கன்னடத்தில் புரந்தரரையும் விடாமல் பாடி வருகிறார் அப்படி அடுத்த பாடல் இந்தோளத்தில் யாரே ரங்கண்ணா யாரே கிருஷ்ணன என்று பாட திருமலை முகத்தில் மகிழ்ச்சி , என்னையா யார் என்கிறார் இருவரையும் என்று வினவு கொட்டினான் என்னை , தலைவரின் இந்தோளத்தில் இணைத்தேன் மனதை மலைத்தேனாய் இனித்தது தலைவர் இந்தோளம் , கோபால கிருஷ்ணணா என்று கோபாலகிருஷ்ணபாரதியை மகிழ்வித்தார் அடுத்து பாபவிநாசனா என்று பாட திருமலை ஆம் பெய்ரை கிருஷ்ணன் என்று வைத்து சிவனைபாடிய இவருக்கு பாபவிநாசம் தேவைதான் என்றான் , தலைவர் இதற்குள் கரிராஜா வதனனாவில் முத்தமிழ் பேரவையின் உச்சிக்கு சென்றார் , இந்த பரம புருஷன் பாட கேட்க என்ன புண்ணியம் செய்தோமா என்று மகிழ்ந்தோம்.
5) அடுத்து ஜாமுன் கல்யாணி எனப்படும் யமுன்கல்யாணி குறுஆலாபனை தந்து அவையையே கரைத்தார் தலைவர் , இந்த கணத்திலேயே இருந்து விடலாம் போலிருந்தது ஆலாபனை , என்னே இனிமை என்னே குழைவு , நனு ப்ரோவமனி செப்பவே பாடினார் பத்ராசல ராமதாஸர் பாடல் , இசையமைப்பு தலைவர் , என்னே கனிவாய் கேட்கிறார் , அதிலும் யாரிடம் கேட்டால் வேலை சுளுவாகும் என்பதை தெரிந்து ஸீதம்மாவிடம் கேட்கிறார் , அந்த நாரி சீரோமணியில் தான் எத்தனை அழகை பொதித்து பாடுகிறார் , அடுத்த சரணம் அந்த சக்கிளியில் கரைந்தே போனது அவை. அத்ரீஜவிநுதுடு பத்ராகிரிஷிடவின் பதம் பணிந்து மகிழ்ந்தோம்
6) மீண்டும் ஒரு குறு ஆலாபனை ஆபேரி , இந்த ஆபேரியில் தான் எத்தனை மகிழ்வு புறப்படுகிறது ஒரு கோயில் பிரகாரத்தில் நிற்கவைக்கும் பேரிசை இந்த ஆபேரி இராகத்திற்கு உண்டு , தலைவர் விஸ்தாரமாய் கொண்டு செல்ல ஆஹா வயலினும் உண்டு என்று நினைத்த மாத்திரத்தில் மலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவரும் தொழும் மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை என்று கந்தர் அலங்காரம் விருத்தம் பாடி சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே என்று வினவு பிரம்மன் பதிலை உரைக்கும் முன் கந்தா வந்தருள் தரலாகாதா என்று பாபநாசம் சிவனாரின் பாடலை பாடினார் , இந்த பருவத்தில் தொடர்ச்சியாய் தமிழ் தியாகராஜரை பாடி வருகிறார் தலைவர் , கந்தா வந்தருள் என்று பார்த்தால் , கட்டளை போல் தெரியும் அடுத்த சொல்லை சேர்த்தாரல் கோரிக்கை போல் தெரியும் கந்தா வந்தருள் தரலாகாதா என்னே தமிழின் சொல்லாடல் என்று மகிழ்ந்தோம் , செந்தூர் வளர் குஹா அடிமையின் சிந்தாகுலம் தீர நீ வலிய வந்தால் உந்தன் மஹிமை குறையுமோ என்று மேலும் மேலும் உருகிறார் பாபநாசம் சிவன் தலைவர் அதை பாடலில் நமக்கு உணர்த்துகிறார் , பச்சிளங் குழந்தையைப் பெற்ற தாய் பரிந்தணைப்பது கடனன்றோ! பரம தயாகரன் என்று பேர் புகழ் படைத்தவன் நீயன்றோ! என்று உருக்த்தை கூட்டி பாடி பாடி அவையை கண்ணீர் சிந்த வைத்தார் நம் பரமதயாகரன்.
7) சஞ்சய் சங்கராபரண சாஸ்திரிகளின் அச்சு அசல் சங்கராபரண ஆலாபனை அடுத்து , இந்த ஆலபனையை எத்தனை முறை கேட்டாலும் மனமும் செவியும் சளைக்காது , அத்தனை சௌக்கியமான ஆலாபனை தந்தார் தலைவர் , இந்த ராகத்தில் புகந்துகொண்டும் அதை சுழற்று் அழகே அழகு ப்ருஹாக்களை எடுத்த எடுப்பிலேயே அள்ளித்தெளித்தார் தலைவர் , கார்வை கோர்வை , ப்ரயோகங்ஙகளுக்கும் பஞ்சமில்லை , அவ்வப்போது நாதஸ்வர பிடிகளும் , எம்டிஆரும் வந்து சென்றார் , தலைவர் யோக நிலைக்கு செல்லும் இராகங்களின் சங்கராபரணம் முதன்மையானது , லேசில் விடமாட்டார் ராகத்தை , மேலே சென்று அங்கேயே தலைவர் நின்ற அழகை என்ன சொல்வது ,ததரி ஊலல்லாக்களை ஒருகை பார்த்துவிட்டு கடையில் ஒரு அருமையான ஆங்கில நோட்டை விட்டார் மதுரை மணி அய்யர் பாணியில் நோட்டுஸ்வரம் தந்து அரங்கையை இன்பபேரலையில் ஆழ்த்தினார் தலைவர் , தொடர்ந்து வரதர் சங்கராபரணம் அரங்கை மீண்டும் பிரமாதப்படுத்தியது , அதே நோட்டை அவரும் வாசிக்க புல்லரிப்பு ஏற்பட்டது , மஹாராஜா ஸ்வாதி திருநாளின் தேவி ஜெக ஜனனி பாடினார் தலைவர் , தேவியை எப்படியெல்லாம் பாடியுள்ளார் ஸ்வாதி மாமன்னர் தலைவர் அத்தனை அழகாய் பாடினார் நிரவல் ஸ்வரத்தில் அரங்கேயை கட்டிப்போட்டார் தலைவர் , ஒரு கச்சேரியில் தலைவர் எப்போது எப்படி அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதை நன்கு அறிவார் , சங்கராபரண ஸ்வரத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தவர் , திடீரென வரளிக்கு தாவினார் ஆஹா இன்று வேட்டை தான் என்று மகிழ்ந்து கேட்டோம் , அடுத்தடுத்து மலைய மாருதம் கானமூர்த்தி என்று பிரமாதப்படுத்தினார் தலைவர் , வரதர் இதற்கெல்லாம் நான் தயார் என்று அருமையாக பதிலுரை வழங்கினார் ,கானடா நாட்டுக்குறிஞ்சி மோஹனம் என்று தலைவர் மரத்தான் ராகமாலிகை ஸ்வரம் தந்தார் நமக்கு போனஸாய் இந்த பெஹாக் என்று தர பாய்ந்து எடுத்துக்கொண்டோம். மீண்டும் சங்கராபரணம் வந்து ரிகஸாரிகாக்களை அளித்து ஸப்தஸ்வர பிரஸ்தாரம் தந்து தனியை துவக்கி வைத்தார் தலைவர் , தலையாட்டியார் மீண்டும் ஓர் தனி தனி தந்தார் இதயத்தை வென்றார் , வழமையான கும்கியில் துவங்கி உட்சபட்ச பாய்ச்சலை தந்தார் .
8) சிந்துபரைவி குறு ஆலாபனை கண்டு நீ சொல்லவேண்டும் சகியே பாடினார் தலைவர் என்.எஸ் சிதம்பரம் பாடல் தலைவரின் தலைவர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பு கந்தனை முகுந்தன் மருகனை இன்று தலைவர் பாட என்ன கந்தனை கேட்டு சொல்ல வள்ளியை அல்லது தெய்வானையல்லவா கூப்பிட வேண்டும் ஏன் சகியை கூப்பிடுகிறார் என்று வம்பு வளர்த்தான் திருமலை , உண்டிட வில்லை உறங்கிட வில்லை என்று தலைவர் உருகி பாடினார் உள்ளமே நொந்தாள் உத்தமனே என என்று சகியின் வேதனை பாடினார் தலைவர் , யாரிந்த சகி என்று புருவம் நெறித்தபடி கேட்டோம் காதலை எண்ணிக் கரைந்திடு கின்றாள் கண்கள் இமையாமல் காத்திருக் கின்றாள் வேதனை கொண்டாள் வேலனே என்பாய் விரைவினில் அன்புடன் வருவீர் என்பாய் என்று மேலும் மேலும் சோக ரஸத்தை பிழிந்தார் தலைவர்.
9) அடுத்து தேஷில் பாட அடடா இன்று கொசுரு அந்த ராகமாலிகை ஸ்வரங்கள்தானா என்று முண்டாசு கவியின் சிறகில் சிலாகித்தோம் , பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா என்று தலைவர் பாரதியை பாடுவதை அதிலும் தேஷில் கேட்பது தனிப்பெரும் மகிழ்வு தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா என்ற வரியில் கண்ணீர் உகுத்தோம் என்னே ஒரு புனைவு பாரதியின் புனைவு என்று விம்மியது உள்ளம் அதிலும் தேஷில் தீயெல்லாம் தீஞ்சுவை பண்டமானது.
10) காண வேண்டாமோ என்றார் தலைவர் அடுத்து , காணவேண்டும் என்று கேட்டோம் நீண்ட நெடுநாளுக்குப்பின் தலைவரின் ஸ்ரீரஞ்சனி ராகம் பாபநாசம் சிவனார் பாடல் வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம் நையப் பிறவாமல் ஐயன் திருநடம் காண வேண்டாமோ? ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன் காண வேண்டாமோ என்ற தத்துவ சரணத்தை தலைவர் பாட கேட்பது போல் இன்பம் பிரிதேது , அதிலும் அந்த வெற்றெலும்பு அருமையிலும் அருமை.
11) மேலும் ஒர் ஆச்சர்யமாக மனமே கணமும் மறவாதே பாடினார் தலைவர் பிம்ப்ளாஸ் ராகம் மீண்டும் சிவனாரின் மூன்றாவது பாடல் நாளை என்பார் யார் அதை கண்டார் ஆதலால் பவ ரொஹம் ஒழிந்திடவே என்று தலைவர் பாட நாளைக்கு கச்சேரி வைச்சுகிட்டு என்ன பேச்சு இது என்றான் திருமலை , நடையும் தளர தேகம் ஒடுங்க நாவது குழர கண்கள் மங்கஎன்ன செய்வார் துணை யார் வருவார் ஈசன் மலர் பதமே என்று தலைவர் பாட திருமலை வரிகள் உனக்குத்தான் என்றார் கோபாலர் சைவம் வென்ற மகிழ்வில்.வடிவேல் போல் தன்னையே நோக்கி விரல் நீட்டி என்ன செய்வாய் துணை யார் வருவார் என்றார் தலைவர்.
12) அருணகிரிநாதரின் நாடிதேடி தொழுவார் பாடி கச்சேரியின் மூன்றாவது கொசுறு பாடல் தந்தார் பாடவற்கோன் ஒரு நிமிடமே நீடித்தாலும் பாகேஸ்ரீ தேனாய் இனித்தது , திருவாணைக்காவல் பெருமான தொழுதது அவை.
அடுத்து விநாடி ஆச்சர்யம் நிறைந்த கச்சேரியாய் தலைவர் தந்தார் சஞ்சய் சபா ஓன்றில் , சஞ்சய் சபா இரண்டு கிறிஸ்மஸ் கச்சேரியில் அடுத்தடுத்த ஆச்சர்யங்களுக்கு காத்திருப்போம்
Comentários