top of page
Search

சாஸ்திராவில் கந்தர்வ கான லோலனின் என்றும் இன்பமான சக்கனி ராஜ மார்க கச்சேரி !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 31, 2023
  • 6 min read

ree

தலைவரின் ஆண்டின் நிறைவுகச்சேரி வழமையாக வித்யாபாரதி திருமண மண்டபத்தில் பார்த்தசாரதி சாமி சபாவில் நடைபெறும் , அந்த இடம் இருப்பது ஒரு சந்தில் , மண்டபமும் அத்தனை வசதியாய் இராது ,ஆனால் அங்கே நடைபெறும் கச்சேரிக்கு ஈடு இணையில்லை , கடந்த சில ஆண்டுகளாக இங்கே கச்சேரி இல்லை , எனவே இவ்வாண்டு எங்கே நிறைவு கச்சேரி என எதிர்பாரத்திருந்த நமக்கு , சாஸ்திர சத்சங் என்று தலைவர் பட்டியலில் வெளியிட , ஏற்கனவே ராமகிருஷ்ணமூர்த்தி கச்சேரியை கோடம்பாக்கம் கர்ணன் தெருவில் இருக்கும் அரங்கில் நாம் சென்றுள்ளதால் , அத்தனை சிறிய அரங்கில் தலைவர் கச்சேரியா என வியந்தோம் , வியப்பிற்கு விடை கொடுத்து சாஸ்திரா சென்னை வளாகம் வடபழனியில் கச்சேரி 400 மேற்பட்ட இருக்கு உண்டு என்ற பால் வார்க்கும் செய்தி அறிந்து 6 மணிக்கு சென்றால் , வரவேண்டிய 400 பேரும் வந்தாகிவிட்டது என கேட்டை இழுத்தி சாத்தினர் சாஸ்திராவினர் , என்ன இந்த சோதனை என்று எண்ணிக்கொண்டே இருக்கும் போது ஒரு மகிழுந்து செல்ல கேட்டை திறக்க , சொர்க்க வாசல் திறப்பாய எண்ணி உள்ளே நுழைந்தோம் , ஏற்கனவே ஒரு 12 மாமா மாமிகள் , ஏற்பாட்டாளருடன் விவாதித்திருக்க , ஒரு கட்டத்தில் காத்திருங்கள் அனுப்புகிறேன் என அவர் திருவாய் மலர் , ஆங்கே ஒரு ஓரத்தில் அமெரிக்க எம்பஸில் அழைப்பிற்கு காத்திருப்பது போல் அமர்ந்து காத்திருந்தோம் , சிப்பந்தி ஒருவர் நீங்கள் சிங்களா என்றார் , திருமணமாகி 13 ஆண்டுகள் கடந்து இரண்டு குழ்ந்தைகளின் அப்பனை பார்த்து கேட்கும் கேள்வியா என துணுக்குற்றேன் பின உள்ளே அழைக்க தனியாக வந்துள்ளீர்களா என விவனவுகிறார் என்பதை உணர்ந்து ஆமாம் சிங்கள் என்றேற் சிங்கள் திமிடத்தில் அரங்கில் ஓரத்தில் ஓரிடம் கிட்டியது , நல்லை செவ்வகம அரங்கு உயர்தர சீட்டுக்கள் , ஒலி அமைப்பு இரண்டு தொலைக்காட்சி வேறு இருபுறமும் , தலைவருடன் தலையாட்டி சித்தர் வரதாழ்வாருடன் மீண்டும் ஒரு முறை ராஜகணேஷ் . ராகுல் கிருஷ்ணா தம்பூரா . இரண்டு மணிநேர கச்சேரி இனிதாய் துவங்கிற்று 6.30 மணிக்கு.


  1. ஒரு வழியாக தலைவர் பருவத்தின் பத்தாவது கச்சேரியில் ரீதிகௌளையை களமிறக்கினார் , தும்பிக்கை நாயகனை போற்றும் பாபநாசம் சிவனின் தத்வமரியா தரமா மூலதார கணபதே பாடல் மூலம். அந்தே மூலாதார கணபதே பாடி சுரபதே என ரீதிகௌளையை குழைத்தளிக்கும் அழகே அழகு , நெய்வேலியார் மிக சௌக்கியமான தாளத்தை நல்கினார் , வரதர் வயலினோடு விளையாடினார் ரீதிகௌளை கிடைத்த மகிழ்வில் வரது வயலின் கொஞ்சியது , சத்வகுணமும் ஜீவதயையும் வரிகளில் ஜீவனுடன் தலைவர் பாட பாட நமக்கு ஞானமும் கிட்டியது சற்றுமில்லாத கிராதகனுக்கு உனது வரி உனக்குத்தான் என்று கூறியவாறு வந்தமர்ந்தான் திருமலை , கோபாலர் தொடர்ந்து வந்து அமர்ந்தார் , மதுர பரிபூர்ண மோதக கரனே மகா விக்ன வண கூடாரவரனே நிதியோன்பதும் அன்பர்க்கருள் பரனே என்று பாபநாசம் சிவன் பிள்ளையாரப்பனை எத்தனை அழகாய் பாடியுள்ளார் என்று சிலாகித்தார் கோபாலர் , நிகில சராசர பிஜா குசனே மதிசேகரன் மகனே சுமுகனே மதவாரன முகனே ஸ்ருதி முடிவுனர் வரும் சித்பரனே குகசோதரனே ராமதாசனே என்று வரிகள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்ந்தது காதில் என்னே வரிகள் என்னே ரீதிகௌளை பேரிசை, இரண்டு மணி நேர கச்சேரி எனவே முடித்துவிடுவார் என்று எண்ணி தருணத்தில் கண்பதேவில் ஸ்வரம் துவக்கினார் , என்னே நம் பாக்கியம் என்று மகிழ்ந்தோம் ஏறத்தாழ் 4 நிமிடங்கள் ஸ்வரத்தில் அரங்கையே ஆட்டிப்படைத்தார் தலைவர் , இது போன்று புதுகளங்களில் தலைவர் பாடும் போது அந்த புது ரஸிகாக்களின் உணர்வுகளை காணுவது தனி இன்பம் , நாம் கேட்டு பழகிய தலைவரின் குறும்பு கொப்பளிக்கும் புதுமையான யுக்திகளை அவர்கள் வியந்து வரவேற்றனர் , இப்படியெல்லாம் கூட கர்நாடக சங்கீதத்தில் பாடலாமா என ஆச்சர்யப்பட்டனர்.

  2. அடுத்து ஏழிசை ஏந்தல் பாடியது நவரச கானடா , அதிலும் ஸ்வாதி திருநாளின் வந்தே சதா பத்மநாபம் , திருமலை ஒரு வழியாக பட்டியலில் போட்ட பாடலை பாடுகிறாரே அந்த வகையில் மகிழ்ச்சி என்றான் , நாம் என்றும் கிறங்கும் குந்தமதபாஹ மோஹனம் தந்தத்திற்கு காத்திருந்து உறுகினோம் , அதில் ஒரு நொடியில் மேற்கத்திய இசை போல் கொண்டு செல்வார் , சங்கதிகள் சாணாக்கியன் சஞ்சய் சுப்ரமணியன் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தார் , வழமை போல் முதல் சரணமான புரிகிரபா ரஸ விலஸத பாங்கம் பாடினார் தலைவர் , மீண்டும் மேற்கத்தியத்திற்கு சென்றார் நாரண முகமுனி ஹிருதாப்ஜ ப்ரிங்கம் வரிகளில் , பத்மநாபரை எத்தனை அழகாய் துதிக்கிறார் ஸ்வாதி மாமன்னர் என்னே அவரின் மேதைமை . வரதரும் நெய்வேலியாரும் மிக அருமையாக பின்புலம் தந்தனர் பாடலுக்கு.

  3. ஹமீர்கல்யாணியில் ஆலாபனை செய்வார் என்ற நப்பாசையை நனோசெகண்டில் இல்லமலாக்கி பிலஹரியில் ஆலாபனை துவக்கினார் , எத்தனையோ வருடங்களுக்குப்பின் பிலஹரி ஆலாபனை கேட்டோம் , வழமைபோல் தலைவரின் முத்திரை ப்ருஹாக்கள் , கார்வை , கோர்வை , நாதஸ்வர பிடிகளோடு , சாஸ்திராவை ஒரு பிடி பிடித்தது ஆலாபனை , இந்த பருவத்தில் அடிக்கடி மதுரை மணி அய்யரின் தரலல்லாக்களை இறக்குகிறார் தலைவர் , சங்கராபரணத்தின் சேய் இந்த பிலஹரி மனதை வருடும் இராகமாக ஆலாபனையில் காட்டினார் தலைவர் , மிக அற்புதமான ஆலாபனை எட்டு நிமிடங்கள் நீடித்தது , தொடர்ந்து வரதர் பிலஹரியை ஒரு பிடிபிடித்தார் , நான் முன்பு கூறியது போல் , பக்கவாத்தியம் கேட்டு பழக்கப்பட்ட சாஸ்திராவினர் இந்த பக்கா வாத்தியம் கேட்டு வாயைப்பிளந்தனர் , இது என்ன வாய்ப்பாட்டு ஆலாபனை போல் உள்ளது என்று மூக்கின் மேல் விரல் வைத்தனர் அப்படி வாசித்தார் , வாசிக்கவரம் வாங்கி வந்த வரதர் ,இனி நமக்கொரு கவலையும் இல்லை என்றும் இன்பமே மனமே என்ற பாடலை பாடினார் தலைவர் , பட்டியல் தராமல் இருந்திருந்தால் இது பாபநாசம் சிவன் பாடல் என்ற முடிவுக்கு வந்திருப்போம் , ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் கோடீஸ்வர அய்யர் பாடல் , ரூபக தாளத்தில் அருமையான பின்புலம் நெய்வேலியார் தர , தலைவர் புனித த்யாகராஜ ஸ்வாமி நம் கனவில் வந்து காக்ஷி தந்ததால் என்று அனுபல்லவி பாடினார் , திருமலை எந்த தியாகராஜர் என வினவ திருவாரூரார் என்றார் கோபாலர் , கந்தர்வ கானலோல கனஸீல த்யாகராஜ சுந்தரர் சேவை கண்ட நம் சுகீர்த்தமே சுகீர்த்தம் என்ற சரணத்தை பாடினார் அடுத்து , அதிலும் சுந்தரர் சேவையில் உச்சம் சென்று நிலை நிறுத்த அரங்கம் அரண்டது இவரின் பேராற்றல் கண்டு , என்றும் இன்பமே என இன்பத்தை கூட்ட நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர் , கபமாகரிகளை இறக்கினார் தலைவர் , இன்பமாய் கேட்டது அவை , இப்படி ஸ்வரம் பாடினால் என்று இன்பமே என்றார் கோபாலர் , புத்தாண்டின் துவக்கித்திற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில் இந்த வரிகள் அனைவருக்கும் அத்தனை நம்பிக்கையைத்தந்தது.

  4. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் அவன் செயலன்றி ஓர் அணுவும் அசையா பாடினார் அடுத்து ஹமீர்கல்யாணியில் , திருமலை முகத்தில் அத்தனை நேரம் இருந்த பரிதவிப்பு விடைபெற்று மகிழ்ச்சி கரைபுரண்டது , தவமுனிவரும் தொழும் சஜ்ஜனபாலன் வரியில் பல்வேறு சங்கதிகளை இறக்கி உவமை இல்லா எங்கள் வேணுகோபாலன் என்று பாட , திருமலை வாயெல்லாம் பல் , கச்மூடி ரசித்தான் , இந்த பாடலில் நமக்கு எப்போதும் இருக்கும் குழப்பம் பாடல் வரிக்கு மயங்குவதா அல்லது ஹமீர்கல்யாணியின் இனிமைக்கு மயங்குவாதா என்பததே , சரணம் உனக்குத்தான் திருமலை என்றார் கோபாலர் , மதமும் கர்வமும் கொண்டார் வாழ்வென்ன வாழ்வோ வஞ்சகம் அசூசையால் வந்திடும் தாழ்வே என்னே வரிகள் , நிதம் ஹரிகேசன் பதம் பணிந்திடுவோமேவில் , ஒட்டுமொத்த ஹமீர்கல்யாணியையும் பிழிந்தளித்து பாடினார் தலைவர் , வரதரும் நெய்வேலியாரும் மிக அருமையாய் வாசித்தனர் , ராஜகணேஷ் கஞ்சீராவும் சீராய் பின்தொடர்ந்து , ஆதிதாளம் நம்மை தாளம் போட வைத்தது , தலைவரின் இசையால் ஏதும் அசையாததென்று இல்லை .

  5. எதிர்பார்த்தபடி நங்கைநல்லூர் ஸ்வாமிநாதன் தருணம் அடுத்து , இந்த பருவத்தில் தொடர்ந்து தலைவரின் பத்தாவது கச்சேரி கேட்பவர் நம் ஸ்வாமி , தலைவரும் கடந்த சில கச்சேரிகளில் ஸ்வாமி ஸ்வாமி என்று பாடி வருகிறார் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கரஹரப்பிரியா ஆலாபனையை கச்சேரியின் பிரதானியாக எடுத்துக்கொண்டார் , தலைவரின் கரஹரம் சும்மா 5 நிமிட ஆலாபனையாக வருவதில்லை , வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்பது போல் 13 நிமிட ஆலாபனையாக வந்தது , தலைவர் தம் கற்பனை மனோதர்ம ஏவுகணை தரையில் புற்பட்டு ஸத்யலோகம் வைகுண்டம் கைலாசம் என அனைத்தையும் சுற்றி வந்தது , அவருக்கே உரிய நாதஸ்வர பிடிகளுக்கு பஞ்சமில்லை , அதிஅற்புதமான ஒரு நீண்ட விஸ்தார ஆலாபனை வழங்கினார் , வடபழனி இதுவரை கேட்டிராத நிலையில் அமைந்தது கரஹரப்பிரியா ஆலாபனை. தொடர்ந்து வரதரின் கரஹரம் கனஜோராய் அரங்கேறிற்று , பாதை தொடர்வது எளிது என எண்ணுவோருக்கு , தலைவர் தொட்ட இடத்தையெல்லாம் தொடவும் வேண்டும் அவரது ஆலாபனையின் நேரத்தில் பாதி நேரத்திலே இதை செய்யவேண்டும் , ஆனால் எத்தனையோ ஆண்டுகளாய் வரதருடனான தலைவரின் இணைப்பு அதை எளிதாக்கியது , தலைவர் புள்ளி வைத்தால் வரதர் கோலம் போடுவார் , ஆனால் தலைவர் எற்கனவே வண்ணக்கோலமிட்டுவிட்டார் வரதரின் பணி அங்கங்கே கோலத்தின் ஓரங்களை பாங்காய் இணைப்பது , மேலும் தலைவர் தொட்ட இடங்களை தொட்டுகாட்டுவது என் பிரமாதப்படுத்தினார். மீண்டும் அரங்கிற்கு ஆச்சர்யம் என்னமாய் வாசிக்கிறார் என்று , அடுத்த பருவத்தில் இங்கே வரதருக்கு சோலோ கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . தியாகராஜரிடன் படைப்புகளில் பிரம்மாண்டமான சக்கனி ராஜா மார்கமும் உண்டக்கா பாடினார் தலைவர் , எனக்குத்தெரிந்து பலர் இந்த பாட்டை சக்கனி ராஜா என்பார்கள் , சக்கனி ராஜா என்றால் அருமையான மன்னன் என்று பொருள் ஆனால் தியாகராஜர் கூறுவது , மிக அருமையான ராஜாபாட்டை இருக்கும்போது குறுகிய சந்து வழி எதற்கு ராமனை அடைய என்கிறார் , சக்கனி வரியில் ஒரு பத்து சங்கதிகளை போட்டு அரங்கை பிரமிப்பில் ஆழ்த்தினார் தலைவர் , அனுபல்லவி சிக்கனி பாலு மிகடா உண்டகா சீயனி கங்கசாரா மேலா பாடினார் , அஃதாவாது சுத்தமான இனிப்புமிக்க பாலிருக்க கள்ளு விரும்புதல் முறையா என்கிறார் தியாகராஜர் , இன்றை சூழலுக்கு அது நேரெதிராக மாறிவிட்டது என்று அறிந்தால் பாவம் வருத்தப்படுவார் என நினைத்தோம் , தலைவர் இதற்குள் கண்டிக்கி சுந்தர தாரமகு ரூபமேவில் ஒரு அருமையான நிரவலை அமைத்தார் , நிரவல் என்றால் இந்த பருவத்தின் தலை சிறந்த நிரவல் என்றே சொல்லிவிடலாம் அத்தனை அருமையான நிரவல் , முந்ததைய நாள் 2.30 மணிநேர கச்சேரி பாடிவிட்டு அடுத்த நாள் இப்படி ஒரு நிரவல் தர இவர் ஒருவரால் தன் முடியும் அசுர சாதகம் செய்தாலன்றி இத்தனை ஆற்றல் அரிது , அத்தனையும் உழைப்பு என்றார் கோபாலர் , மொத்த சரணத்தையும் பாட , நிரவல் ஸ்வரம் இல்லை போலும் என எண்ணியோருக்கு பல்பளித்து , மகாரிகரிச சக்கனி என்று நிரவல் ஸ்வரம் துவக்கினார் , ஆக 2 மணிநேர கச்சேரியில் தனியும் சேர்த்து 55 நிமிடம் ஆகிவிடும் என்பதை உணர்ந்தோம் , ஒன்று தந்தாலும் அதை நன்கு தரவேண்டும் என்று முடிவெடுத்து மிக சமர்த்தாய் மிக மெதுவாய் ஸ்வரங்கள் வந்து விழுந்தன , மாமாம மாமிகள் என்னே சோக்கியம் என்னே பொறுமை என்று மகிழ்ந்தனர் அடுத்த சில நிமிடங்களில் சக்கனி சூப்பர்சோனிக் வேகதத்தில் செல்வதை நாம் உணர்ந்துள்ளதால் மனதிற்குள் சிரித்துக்கொண்டோம் , நெய்வேலியாரும் இத்தனை நிதானம் நம்மை உசுப்பவே என்பதை உணர்ந்து நமட்டுச்சிரிப்பு சிரித்தவாறு வாசித்தார் , எதிர்பார்த்தவாறு வேகமெடுக்கவில்லை என்றாலும் ரீ யில் விளையாடினார் தலைவர் , ஸரிக ஸாகரிகள் வந்தவண்ணம் இருந்தாலும் , ரீக மப என நெய்வேலியாருடன் செல்ல துவந்தம் தொடர்ந்து , பின் பிரம்மாண்ட ஸப்தஸ்வர பிரஸ்தாரம் தந்து தனியை துவக்கி வைத்தார் தலைவர் , கிடைத்த 10 திமிடங்களில் நெய்வேலியாரும் ஆலத்தூர் ராஜகணேஷும் மீண்டும் ஒரு அருமையான தனி தந்தனர் முன்னதாக வாணி அரங்கில் இருவரும் இப்பருவத்தில் வாசித்துள்ளனர் , அருமையான நிதான தனியாக துவங்கி இருநூறு மைல் வேக்த்தனியாக முடித்தனர். வடபழனியில் ஓங்கி ஓலித்த சக்கனி ராஜ மார்கம் மெட்ரோ பணியின் பாதாளத்தில் பாய்ந்து மயிலையில் வெளி வந்து , மயிலையையே திரும்பி பார்க்க வைத்திருக்கும்.

  6. அடுத்து புரந்தரதாஸரின் லாலிசிதலு மகனே ராகமாலிகை பாடினார் தலைவர் , மாயக்கண்ணனை பாடும் பா , தேஷில் துவங்கி சந்திரகவுன்ஸ் காப்பி என்று தலைவர் பாட பாட அரங்கே கரைந்தது அவரின் பேரிசையில். திருமலையில் மகிழ்ச்சி தாண்டவமாடியது . மீண்டும் அந்த தேஷில் வந்து முடித்த அழகை என்ன சொல்வது , இனிமையில் தேஷூக்கு விஞ்சிய ராகமில்லை.

  7. கொசுறு பாடலாக பெஹாக்கில் கோபாலகிருஷ்ணபாரதியின் ஆடும் சிதம்பரமோ பாடினார் தலைவர் , திருமலை மகிழ்ச்சி எல்லாம் கோபாலருக்கு டிரான்ஸ்பர் ஆனது , ஆடும் சிதம்பரம் அன்பர்கள் களிக்கவே என்று தலைவர் பெஹாக்கில் பாடுவார் என்று அன்றே எழுதினேன் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , யாரும் அறியாமல் அம்பலவாணன் சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கி நின்று ஆடும் சிதம்பரமோ என்று தலைவர் பெஹாக்கில் பாட பாட அரங்கமே ஆடியது தலைவரின் இசையில் பாலகிருஷ்ணன் போற்றும்

ree

8.இந்த பருவத்தின் முதல் தில்லான பத்தாவது கச்சேரியில் வந்தது , தலைவரின் மானசீக குருக்களில் ஒருவரான தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனின் த்வஜாவந்தி தில்லானா , தோம் தோம் தோம்ததரி ததமி என்று தலைவர் பாட பாட அரங்கமே சொக்கியது , என்னே ஒரு மேதை இந்த எஸ்.கே.ஆர் ஒருபுறம் மேளகர்த்தா இராகங்களில் மேதன்மை மறுபுறம் புது ராகங்கள் உருவாக்கியுள்ளார் இதற்கிடையே இத்தகு அருமையான தில்லானாக்கள் தந்துள்ளார் , ஓம் என்னும் ப்ரணவ மெய்பொருளை அன்று ஓதியே தந்தைக்கு உபதேசம் செய்தாய் , ஓம் சரவணபவ குகனே என்று ஓயாமல் துதிக்க எனக்கருள்வாய் என்று தலைவர் தில்லான வரிகளை பாட பாட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது , ஆம் தஞ்சாவூர் கல்யாணராமனை இருக்கும் போது பெரிதாய் மதிக்காத சங்கீத உலகம் அவர் சென்ற பின் அவர் புகழ் பாடுகிறது , தலைவர் ஒருவர் தான் தொடர்ந்து அவர் தில்லானாக்களை அரங்கேற்றி வருகிறார்.


மங்களம் பாடி கச்சேரியை முடித்தார் தலைவர் , மிக மிக குறுகிய நேரத்தி குறுகிய அரங்கில் நெஞ்சார விசாலமாக கச்சேரி தந்தார் தலைவர் , தலைவர் போல் கச்சேரியை திட்டமிடுவார் யாரும் இல்லை , சாஸ்திரா சத் சங்கத்தின் முதல் தலைவர் கச்சேரி இது , இது போல் தொடர்ந்து பாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் காரியதரிசி , அவரின் தீரக்கதரிசனம் தொடரட்டும் , ஒரு சிறிய கோரிக்கை பலர் பலமைல் பயணித்து கச்சேரி கேட்க வந்து இடமின்றி திருமப்இ சென்றனர் , ஆனால் கச்சேரி மேடையில் இளைஞர்கள் மாணாக்கர்கள் எளிதாய் 30 பேர் வரை அமரலாம் வரும் காலங்களில் இதை தலைவர் கச்சேரியின் போது கருத்தில் கொள்க . புத்தாண்டு கச்சேரிக்கு புதுநம்பிக்கையோடு இனி என்றும் இன்பமயமே என கீழே வந்து சேமியாவை விழுங்கிவிட்டு சக்கனி ராஜா மார்கமு போல் இருந்த ஜாங்கிரியும் புசித்துவிட்டு , சைவ வைணவ பித்துக்குளிகள் தம்மு பிடுங்கும் முன்பு நடையைக்கட்டினோம்



 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page