சாஸ்திரியில் சாஸ்திரியத்தில் சஞ்சய் தந்த பங்காரு பொம்மா , தன்னேரில்லா தர்மவதி !
- ARAVINDAN MUDALIAR
- Nov 20, 2021
- 7 min read

மீண்டும் ஓர் ஆராதிகே தருணம் ! இம்முறை தலைவர் பாடியது சரித்திர புகழ்மிக்க சாஸ்திரி அரங்கில் . அதிலும் இங்கு , 7 வருட இடைவெளிக்குப்பின் நேரடி கச்சேரி. இன்னும் என்ன வேண்டும் மானிட ஜென்மத்திற்கு என்று சாஸ்திரி அரங்கு வந்தோம் . அங்கு கீழ்தளத்தில் இருந்த ராணடே புத்தகசாலையிலிருந்து பிசாசுகள் இரண்டு நம்மை நோக்கி வர , ஆம் நம் இம்சை அரசர்கள் கோபாலகிருஷ்ண பாரதியும் , ஆழ்வார்கடியானும் தான் . இருவரையும் நோக்கி , இன்றைய பாடல் பட்டியலும் வெளியிட்டு விட்டாரே தலைவர் , பின் உங்களுக்கு என்ன வேலை என்று வினவ, இருக்கட்டும் பாட்டை கேட்டு பரவசமடைதலே எம் பணி என்று அவர்கள் வம்பு வளர்க்க, நங்கைநல்லூர் ரசிகத்தம்பதியர் சுவாமிநாதன் சுபாவுடன் அரங்கப்பிரவேசம் புரிந்தோம். தரையில் உட்கார ஆயத்தமாய் வந்த தமக்கு தரைகால் புரியவில்லை , வெண்ணிற வேந்தர்களை கேட்க வெள்ளை மெத்தை விரித்திரிந்தனர் ஏற்பாட்டாளர்கள் , வாழிய அவர்கள் நல்லெண்ணம் , இல்லையென்றால் இருக்கிற குளுருக்கும் வரதுவின் வாசிப்பிற்கும் பனிக்கட்டியாய் மாறியிருப்போம். அரங்கின் பெரும்பாலான இடம் மெத்தை வெகு சில ஆசனங்கள் . தலைவருக்கு இதற்கு மனதார நன்றி சொல்லி உட்கார்ந்து அரங்கை கூர்ந்து நோக்கினோம். கயிற்றுக்கட்டிலில் இருக்கும் கயறு போல் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு அதில் வானம்பாடிகளையும் , உலக உருண்ட போல் சிலவற்றையும் அந்தரத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். இதன் உள்ளார்ந்த அர்த்தம் உள்ளபடியே நமக்கு தெரியாததால் இதை இப்படியே விட்டுவிடுவோம்.
தலைவரின் தம்பூரா பற்றியது ரேதஸ் , வரதர் , நெய்வேலியார் , தலைவர் என வெண்மை கூட்டணி மேடையை ஆக்ரமிக்க , மேடையில் மேதையை கேட்ட நாம் , மெத்தையில் அமர்ந்து மேதையை கேட்க ஆயத்தமானோம் , மிகவும் ஜனரஞ்சக பாடல் பட்டியலில் நம்மை பறிகொடுத்து மழைநீற்று சென்னையிலிருந்து மாயாலோகம் சென்றோம் , அங்கு மழை தலைவரின் கர்நாடக இசை மழை.
1) வர்ணம் வனஜாக்ஷா ரீதிகௌளை வீணை குப்பையர் பாடல் , இப்போது ஜலஜாக்ஷீ தானே பாடவேண்டும் என்று வம்பிழுத்தார் கோபாலர். குப்பையர் திருவொற்றியூர்காரர் , திருவாரூர்காரரான நாத பிரம்மம் தியாகராயரின் நேரடி சீடர் . ஒரு முறை சென்னை குப்பையர் இல்லத்துக்கு தியாகராஜர் வந்த வருகையை நினைவுகொள்ளும் விதமாக தனது 3 மகன்களில் ஒருவருக்கு 'தியாகராஜர்' எனப் பெயரிட்டார் குப்பய்யர். இந்தக் குழந்தையே பின்னாளில் ‘திருவொற்றியூர் தியாகையர்’ என்றழைக்கப்பட்டது . என்று ஒரு புது செய்தியை நமக்களித்தான் திருமலை நம்பி , இதற்குள் தலைவர் ரீதிகௌளை என்னும் வெஞ்சாமரத்தை வீசினார் , கண்ட ஜாதி அடதாள வர்ணம் நம்மை சொர்க லோகத்திற்கு இட்டுச்சென்றது , முக்தாய் ஸ்வரத்தில் அந்த நி நி சாவில் ஒரு சொக்கல் தந்தாரே அடடா , அடுத்து சரணத்திலும் தலைவர் துள்ளல் ப்ரீதிகௌளை தொடர நெய்வேலியார் அரும்பெரும் நாதத்தை அழகாய் தர , வரதர் வாரி வாரி வழங்கினார் வயலினில்.மீண்டும் ஒரு முறை ஸ்வரத்தில் சஞ்சாரித்து , அந்நிதிகி நீவே திக்கே என்று மாயத்தை சரணத்தில் தொடர்ந்தார் தலைவர் , தொடர்ந்து சிட்டை ஸ்வரம் சித்தம் குளிர குதித்து வந்தது.ஐந்து சிட்டை ஸ்வரத்தையும் பாடி கச்சேரியின் முதல்பண்ணில் நம்மை மூழ்கடித்தார் தலைவர்.தாயாரை குறித்த பாடல் என்பதால் சைவ வைணவ சிகாமணிகள் அமைதியடைந்தனர்.
2) சித்திவிநாயகனே , கலாவதி ராகம் , கவிகுஞ்சர பாரதி பாடல் அடுத்து. ஆம் தெள்ளு தமிழ் சாஸ்திரி அரங்கை அணுகியது. அணுக அணுக பக்தி பரவசம் பீரிட்டது அவையோருக்கு. தொந்திவிநாயகனை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் குளித்துவிட்டு தேசிகர் தொழுது பாடும் பாடல் , இந்த பாடலைத்தான் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தண்டபாணி தேசிகர் பாடி மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதற்குப்பின் சொல்லோனா செயல்கள் நடைபெற்றது என்று, கோபாலகிருஷ்ணபாரதி வரலாற்று பக்கங்கள் நமக்கு திருப்பிக்காட்ட , தலைவர் பன்முறை பாடிய கலாவநி சித்தி விநாயகனேவை திருப்பி கேட்க என்ன புண்ணியம் செய்தோமோ என்று கேட்டோம். அப்போது தான் வர்ணத்தில் 5 சிட்டை ஸ்வரம் பாடி முடித்திருந்தார் அதற்குள் உடன் துவக்கினார் ஸ்வரத்தை , தலையாட்டியார் சும்மா விடுவாரா பிரமாதப்படுத்தினார். நாம் பெரிதும் எதிர்பார்க்கும் செக்கர் வார் நிறை சடை சொக்கலிங்கேஸ்வர் ! தலைவர் பாட அரங்கமே ஆடியது . அடுத்து பாடல் முத்திரை தலைவர் சொக்கவைத்து பாடினார். ஐங்கரன் அருள் அனைவரும் பெற்றோம் தலைவர் பாடலால்.சித்தி விநாயகனேவில் நிரவல் ஸ்வரம் துவக்கினார் ஸ்வரப்பேரரசு , வரதர் வயலின் காமிரா போல் படமெடுத்தது ஒரு ஒரு ஸ்வரத்தையும் , அப்புறம் எனக்கு என்ன வேலை என்று ராஜப்பன்னா ராஜீ க்ளிக்த்துவங்கினார். ஸ்வர பட்டாசு மீண்டும் தீப ஒளியை அரங்கில் அரங்கேற்றியது. அந்த அண்ணன் தம்பிகளின் முடிப்பு எப்போதும் போல் சிலிர்ப்பு.
3) மீண்டும் மீண்டும் தீண்டும் மயிலிறகு ரீதிகௌளையை இன்னமும் அசைபோடும் அவையோரை தலைவர் இந்தாருங்கள் யதுகுலகாம்போதியில் நனையுங்கள் என்று நனைய நனைய ஆலாபனை புரிந்தார். என்னவானாலும் சரி கரங்களை தூக்குவதில்லை என்று கையை கட்டி ஆலாபனை கேட்ட திருமலை தன்னையும் அறியாமல் காற்றில் கோலமிட்டான். ததரணன்னோ என்று ஏறத்தாழ 7 நிமிட வான்வழி பயணம் முடிவுக்கு வர , வரதர் வயலின் மீண்டும் யதுகுலத்தை ஏரில் பூட்டி உழுதார் , விளைந்தது யதுகுலகாம்போதி பயிர் கண்ணை கவரும் விதத்தில். இந்த பாடலை நாம் பலர் பல முறை பாடி அறிந்துள்ளோம் , பல முறை மாமிகள் நேத்தைக்கு வாணில திவாகர தனுஜம் என்று வியந்து பேசுவர். அத்தகைய அரும்பெரும் பாடல் முதல் முறை தலைவர் பாட கேட்டோம் , முத்துசாமி தீட்சிதர் பாடல். சரி ஸ்வரம் இருக்காது பாடல் மந்தரஸ்தாயியில் நம்மை மதிமயக்கிடும் என்று கேட்க தயாரானோம்.தலைவர் திவாகர தனுஜம் சனீச்சரம் என்று பாட துவங்க அப்போதுதான் நம் புத்திக்கு புலப்பட்டது , ஆஹா நம் சூழ்நிலைக்குப்பாடும் சூரர் , சனியன்று மங்களம் பொங்க மனம் வைத்தருளும் சனீஸ்வர பகவானை பாடுகிறார். தீட்சிதர் நவகிரக கிருதியில் ஒன்றான இதை தலைவர் யதுகுலகாம்போதியில் பாங்குடன் பாட அனைவரும் கண்களை மூடி ரசித்தனர். பாடலுக்கு தக்கவாறு அருமையான இடப்பக்க மிருதங்கத்திலிருந்து தந்தார் நெய்வேலியார். தலைவர் சரணத்தை அங்குலம் அங்குலமாக அழகாய் பாடி அருளினார்.வரதர் வாசிப்பு வழக்கம் போல் பலே . பாடல் முடிவடைய உள்ளது என்று எண்ணும் நேரத்தில் தலைவர் ஸ்வரம் துவக்கினார்.வரதரும் நெய்வேலியாரும் புன்சிரிப்போடு பின்தொடர்ந்தரின் தலைவரின் ஸ்வரஜாலத்தை , ஒரு துள்ளலுடன் விழுந்தன ஸ்வரங்கள் .சில விநாடிகள் நீடித்தாலும் மனதை வருடிச்சென்து ஸ்வரம் . இந்த சனீஸ்வர பகவானிடம் தப்பித்தவரே இல்லை நளன் முதல் யமன் வரை என்று சிரித்தான் திருமலை , உன்னை ஏன் விட்டுவைத்திருக்கிறார் என்று வினவினார் கோபாலர் , சனிபகவானாவது நிம்மதியாக இருக்கட்டுமே என்று என பகர்ந்தேன் நான் , பள்ளை இளித்தான் திருமலை.
4)கச்சேரி மெயின் அடுத்து , பைரவியை தலைவர் பன்முறை ஆலாபனை செய்து கேட்டிருந்தாலும் அதில் இருக்கும் ஒரு இனம் தெரியாத பரபரப்பு நம்மை எப்போதும் சுண்டி இழுக்கும்.தலைவரின் வழமையான நகாசு வேலைகளை முழுதுமாய் களமிறக்கி மிக அற்புதமான ஆலாபனையைத் தந்தார் , அவரின் விரல்கள் காற்றில் இட்ட கோலங்களை மணக்கண்ணில் அழகு பார்த்தோம். கமகங்களின் பரிமளம் அவையெங்கும் வீசியது.அடிக்கடி இடமும் வலமும் அண்ணணையும் தம்பியையும் தன் கூர்மையான பார்வையால் பார்த்தபடி ஆலாபனை வீச்சை தொடர்ந்தார் தலைவர். மேலே செல்வார் என்று எதிர்பார்த்த இடங்களிலெல்லாம் அங்கேயே நின்று அழகு கொஞ்சினார்.தலைவர் எதிர்பார்த்தவாறு ஆலாபனையின் பரிணாமத்தை மாற்றியபடி இருந்தார் , உச்சம் சென்று வழக்கம்போல் தீப்பொறி பறக்கும் ஆலாபனை தந்து மெல்ல மெல்ல தரையிறங்கினார்.அடுத்த வரதரும் பைரவியை தன் வயலின் வசமாக்கி நம் இதயங்களை அவர் வசமாக்கிட வாசித்தார் , வழமை போல் அசந்து நின்றோம் இவரின் அசாதாரண வாசிப்பில் , தலைவர் ஆலாபனையின் மறுபதிப்பாய் அதே பரபரப்பு சிலிர்ப்போடு ஆலாபனை தந்தார், பல்லவி கோபலைய்யரின் மஹா திரிபுரசுந்தரி பாடினார் தலைவர், சகல லோல ஜனனியின் முழு அருளை பெற்றோம் நாம். சரணத்தில் உன் பாதத்தை நம்பினேன் அம்மா என்கிறார் கோபலைய்யர் , நானு காபாடுடகு இப்புட் சமயம் அம்மா என்று ப்னமுறை பாடிவிட்டு , கமனியமகு பங்காரு பொம்மா என்று தன் வழமையான சேட்டைகளோடு பாடிவிட்டு , பங்காரு பொம்மாவில் நிரவல் அமைத்துக்கொண்டார் தலைவர். வரதரும் சளைக்காமல் நிரவல் வாசிக்க இருவருக்கும் ஏற்றமிகு உறுதுணை புரிந்தார் தலையாட்டி சித்தர். அடுத்தடுத்த சுற்றுகளில் பங்காரு பொம்மா படு வேகபொம்மாவாய் அரங்கு வலம் புரிய , பைரவி திரிபுரசுந்தரி மிக அருமையாக அமைந்தது.
5) அடுத்து துள்ளலின் துவக்கம் ஆம் தலைவர் பாடியது மஹாராஜா ஸ்வாதி திருநாளின் மாமவ ஜகதீஸ்வரா ஸரஸ்வதி மனோகரி ராகம் , ஸம புவனா ஷரணா 5 முறை பாடி புவனா புளகாங்கிதம் அடைய வைத்தார் தலைவர், இந்த ராகத்தை பாடுவது எளிதல்ல ஆனால் தலைவர் அதை அநாயாசமாக செய்தார் , மிருதங்க வயலின் வாசிப்பு மிளிர பாடல் வெகு குஷியாக பாடினார் தலைவர். ஒரு கட்டத்தில் அது வாய்பாட்டு போல் இல்லாமல் ஏதோ இசைக்கருவியை கேட்பது போல் உணர்ந்தோம் அத்துனை அருமையாக பாடினார் தலைவர். கோபால கிருஷ்ண பாரதியின் பிரகாசம் அதிகரிக்க தலைவர் நாரத முக முனி பாடினார் அவரின் வழமையான நையாண்டிகளுடன். கமாஸ் போன்று உட்கார்ந்த நிலையை நன்றாக தொடர்ந்தார். பாடியது 6 நிமிடம் என்றாலும் அரங்கையே ஒரு துள்ளலை போடச்செய்தது தலைவரின் மாமவ ஜகதீஸ்வரா , அதிலும் கடையில் கா , ரீ என்று தலைவர் வரதரோடு போட்ட வம்பு இருக்கே , பிரமாதம். இதையெல்லாம் ஆன்லைன் கச்சேரியில் நாம் பெற முடியாது. இதை தலைவர் ரஸிகர்களின் பிரதிபலிப்பை கண்டு அங்கேயே உருவாக்கி பாடுவது.
6) எட்டுமணியளவில் தலைவர் தர்மவதியை துவக்கினார் ராகம் தானம் பல்லவியாக , உருக்கம் மிக்க ராகம் இந்த தர்மவதி , மிகவும் புகழ் பெற்ற நந்தா நீ என் நிலா பாடல் இந்த ராகம் தான் . என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஏக்கம் பாடலும் தர்மவதி தான் , இந்த இரண்டு பாடல்களிலும் உருக்கமும் இருக்கும் உள்ளூற ஒரு வலியும் உணரலாம் , தலைவர் ஆலாபனையிலும் அது பிரதிபலித்தது , ராகத்தை தூரத்தில் இருந்து ரசிப்பதெல்லாம் சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரியில் நடவாத காரியம். நாம் எப்போது உள்ளே நுழைந்தோம் என்று தெரியாத அளவில் ராகத்தின் பிடியில் இருப்போம் நாம். தலைவர் ராகத்தை அசைக்க அசைக்க தாமும் அசைவோம் , அவர் உயரே தூக்கி பிடிக்க நாமும் மேலே செல்வோம். ஆலாபனையின் பிற்பாதியில் தலைவர் நுணக்கமிகு ராகப்பிரவாகம் ஊற்றெடுத்து ஓடியது , என்னமாய் மெனக்கெடுகிறார் ராகத்தை என்று அரங்கமே அதிர்ந்தது , உச்சஸ்தாயில் தர்மவதியை துதித்தார் தலைவர் , வேண்டிய வரத்தைப்பெற்றார்.அந்த உயரத்தில் சென்று நிற்பது ஒரு வித்தை கயிற்றின் மேல் நடப்பது போல் அதை சரியாக செய்தார் தலைவர். தர்மவதி தற்போது வரதுவிடம் தஞ்சம் புக நெஞ்சம் தனில் வாத்தியத்தை வைத்து வஞ்சம் இல்லாமல் வாசித்தார் வரதாழ்வார். அடடா என்னே வாசிப்பு என்று மலைத்தனர் கோபாலரும் திருமலையும் , தலைவர் ஆலாபனையில் வாய் திறவாதவர்கள் இப்போது ஏன் இந்த பாராட்டு என்றேன். கோபாலகிருஷ்ணர் புன்சிப்பை உதித்தார். திருமலை அவர் ஆலாபனையில் ஒரு விநாடியாவது யோசிக்க விட்டால் தானே யோசித்து பாராட்டுவதற்கு என்றான். வரதர் வயலினும் அப்படித்தான் ராகத்தில் நுழையும் முன்பே பாராட்டி விட வேண்டும் , பின்னர் நம் மனது நம் கட்டுபாட்டில் இருக்காது என்றார் கோபாலர், ஆம் அத்தகைய வாசிப்பைத்தந்தார் வரதர், தொடர்ந்து தானத்தை துவக்கினார் தலைவர் , தர்மவதி தானத்தை அண்ணனும் தம்பியும் ரசித்து ரசித்துத் தந்தனர். இருவருக்கும் பெரியண்ணன் தலையாட்டி சித்தர் கண்களை மூடி ரசித்தவண்ணம் இருந்தார். தானத்தின் கடை பகுதியில் வழமை போல் தலைவர் பிரமாதப்படுத்தினார். தலைவர் தானத்தை முடிக்கும் தறுவாயை ஊகித்து , மிருதங்கம் வாசிக்க தன் கால்களை தலைவர் முன் சற்றே நீட்டி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டார் நெய்வேலி வெங்கடேஷ் , தலைவர் இதை கண்டதும் கொப்பளிக்கும் சிரிப்பை வெளிப்படுத்தினார் , இதற்கு ஏன் இப்படி சிரிக்கிறார் என்று நாம் தலையை பியத்துக்கொண்டோம் , மேடை கச்சேரிக்குப்பின் மிகுந்த எதிர்பாப்புடன் காத்திருந்த பல்லவி ,உனது பாதம் உறுதுணை என நம்பினேன் சதா தயைபுரியும் சரவணபவகுஹனே என்று தலைவர் பாடினார். தலைவரின் சிரிப்பின் அர்த்தம் இப்போது புரிந்தது நமக்கு . அதை மேலும் அவையோருக்கு அறிவிக்க தலையாட்டியாரை பார்த்தவாறு மீண்டும் உனது பாதம் உறுதுணை என நம்பினேன் பாட அரங்கமே குலுங்கியது சிரிப்பொலியில். வழமை போல் பல்லவியில் பட்டையைக் கிளப்பினர் மூவர் கூட்டணி . தலைவர் ஸ்வரத்தைத் துவக்கினார் சிறிது நேரத்தில் நீ யில் மையம் கொண்டு சுழன்றார். சனி அன்று சா நி பாடினார். ஸப்தஸ்வர பிரஸ்தாரம் புரிந்து பல்லவிக்கு திரும்பி வர ஆஹா இன்று ராகமாலிகை ஸ்வரமும் இல்லை என்றுணர்ந்தோம். தொடர்ந்து நெய்வேலியாரின் தனி முத்திரை பதிக்க துவங்கியது. கடந்த கால கச்சேரிகள் போலில்லாமல் இம்முறை 11 நிமிடம் வரை வாசித்தார் தலையாட்டியார். இதே அரங்கில் 2014இல் தலைவர் கச்சேரியில் தனி வாசித்தபோது , தலைவர் இருக்கற அத்தனை சம்பிரதாயமும் வாசிச்சுட்டார் என்று பாராட்டி கூறினார் தலைவரை அது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது , அன்று படிக்கட்டுகளிலெல்லாம் ரஸிகர்கள் அமர்ந்து கேட்டனர் அத்துனை கூட்டம் , அதே போன்ற சரிநிகர் தனி தந்து நம்மை பரவசப்படுத்தினார் , நந்தி தேவர் பெருமிதம் கொள்ளத்தகும் நெய்வேலியார்.
7) அடுத்து கமாஸ் மாத்தாட பாரதேனோ மா ரமணா , பெங்களூர் நாகரத்தினம்மாள் பாடல் , இறைவனை கன்னடத்தில் இறைஞ்சும் அருமையான பாடல் , அதன் அத்தனை சரணங்களையும் மிகவும் அழகாய் தலைவர் பாட கமாஸி கசிந்துருகியது அவை.
8) அடுத்து பாடல் பட்டியல் வெளியிடப்பட்ட கச்சேரி என்று அறியாத ரஸிகை ஒருவர் பாரதியார் பாட்டு பாடுங்கோளேன் என்று கேட்ட , அடுத்த நொடி தலைவர் , அதைத் தான் பாடப்போறேன் என்று சொல்ல அரங்கில் சிரிப்பொலி , ராகமாலிகையாக தலைவர் பாடியது திக்குத்தெரியாத காட்டில் , பெஹாக்கில் பாடலை துவக்கி , கால்கை சோர்ந்துவிழ லானேன் பௌலியிலும் பெண்ணே உனதழகைக் கண்டு -மனம் குந்தளவராளி கண்ணே,எனதிருகண் மணியே-உனைக் கட்டித் தழுவமனங் கொண்டேன் ஒரு நளினம் காட்டி ,சஹானாவில் மீண்டும் தலையாட்டியாரை வம்பிழுத்து அண்ணா உனதடியில் வீழ்வேன் என்று பாட அவர் நாணிக்கோண -எனை அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா என்று மேலும் வம்பு செய்தார் தலைவர். பிறன் கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன் கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ என்று தலைவர் பாட , பாரதி பலே ஆள்தான் என்று நினைத்துக் கொண்டோம். அடுத்து நம் காப்பியில் சாத்திரங்கள் வேண்டேன்-நின தின்பம் வேண்டுமடி,கனியே , நின்தன் மோடி கிறுக்குதடி காப்பியில் தலைவர் ரசித்து பாடி காப்பியின் நெடியைத் தூக்கினார். மோடி கிறுக்குதடிக்கு புரிந்தவர் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தோம். காதா லிந்தவுரை கேட்டேன்-‘அடகண்ணா’வென் றலறி வீழ்ந்தேன் பராசில் பாடினார் தலைவர் . மொத்தத்தில் அடுக்கடுக்காய் ராகங்களின் அணிவகுப்பை நடத்தி நம்மை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
9) கடந்த கச்சேரி விட்ட குறையான விருத்தத்தைத் துவக்கினார் தலைவர் அடுத்து , பெற்றதாய் தனை மக மறந்தாலும் என்று வள்ளலாரின் வரிகளை பாட சிலிர்த்தது அவைக்கு அருகில் இருந்தோருக்கு கண்ணீர் பீறிட்டது , சில சமயம் இரண்டு வரி பாடிவிட்டு பாடலுக்கு செல்வார் ஆனால் இம்முறை , விருத்தத்தை தொடர்ந்தார் தலைவர். நமச்சிவாயத்தை நாம் மறவா வண்ணம் விருத்தமதை தந்தார் மேதை. தொடர்ந்து சிந்து பைரவியில் இதுவோ தில்லை சிதம்பர சேத்திரம் , சிவனின் ஆகப்பெரும் அடியார் , கோபாலகிருஷ்ணபாரதி பாடல் , வரிகள் ஒவ்வொன்றும் நம்மை உருக வைத்திடும். மதுரம் பொழிந்திடும் தலைவர் இந்த பாடலை பாடும் போது. பல தெய்வமும் தொழும் சிதம்பர தெய்வத்தை அனைவரும் துதித்தோம் தலைவர் பாடல் மூலம்.
10) நாம் இத்தனை நாள் பிம்பளாஸ் என்று நினைத்துக்கொண்டிருந்த மனமே கணமும் மறவாதே , பாபநாசம் சிவன் பாடலை தலைவர் ஆபேரியில் துவக்க , அரங்கமே கணமும் மறவாமல் சிவனை துதித்தது. நாதன் நாமத்தை பஜித்தோம் மகிழ்வோடு தலைவர் மூன்று நிமிட பாடலில். அடேயப்பா என்னே ஒரு நாதம் தருகிறார் நெய்வேலியார் , பிரமாதமாய் வாசித்தனர் இருவரும். நடையும் தளர தேகம் ஒடுங்கவை இத்தனை குஷியாய் பாடுபவர் தலைவர் ஒருவரே . நீ என்ன செய்வாய் பாடும் போது தன்னை நோக்கி விரல் காட்டி அரங்கை மகிழ்வித்தார் , வம்புக்கு பெயர் போன மனிதர்.
பவமான சுதுடு பட்டி பாடி கச்சேரியை நிறைவு செய்தார் தலைவர்.கச்சேரி முடிந்தும் சண்டையிடாமல் அமைதியே உருவாய் கோபாலகிருஷ்ணபாரதியும் ஆழ்வார்கடியான் நம்பியும் வெளிப்பட்டனர் , என் ஆச்சர்யம் என்று நான் வினவ , முன்பெல்லாம் அடுத்தடுத்து கச்சேரி இருக்கும் இருவரும் சவால் விடுவோம் இப்போது கச்சேரி கேட்பதே சவாலாகிவிட்டதே என்று கூறிவிட்டு அமைதியாக சென்றனர் பட்டப்பா நோக்கி. சென்னை சாலையில் மழைநீர் தேங்கினால் இரண்டு நாட்களில் சூரியன் கபளீகரம் செய்யும் , ஆனால் தலைவர் இசை மழையும் இன்னும் நம் நெஞ்சில் நீக்கமற தேங்கியுள்ளது.இதில் சிலிர்ப்புக்கும் சிரிப்பிற்கும் சிந்தை மகிழ்விற்கும் பஞ்சமில்லாதது தலைவர் இசை வெள்ளம்.மீண்டும் எப்போது வெள்ளம் வரும் என்று காத்திருக்கிறோம்.
Comments