top of page
Search

சிம்மத்தின் சிம்மேந்திரமத்யமமும் மத்யமாவதி , ராகமாலிகைகளும் , வண்ணமாடங்களும் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Sep 13, 2022
  • 6 min read

ree

டிசம்பர் சீசனுக்கு முன் தலைவரின் சென்னை கச்சேரி என்பதால் சீக்கிரம் சென்றடையவேண்டுமென பிரம்மப்பிரயத்தனம் செய்தும் வழமைபோல் ராஜரத்தினத்தை அடையும் போது வர்ணம் முடிந்து நாவுக்கரசரை பாடிக்கொண்டிருந்தார் நம் பாவுக்கரசர். ராஜலட்சுமியில் காட்சிதராத ஆழ்வார்கடியானும் , கோபாலகிருஷ்ணபாரதியும் முன்னமே வந்த வீற்றிருந்தனர் . மேடையில் தலைவர் வரதர் நெய்வேலியார் ராகுல் .


1) தலைவரின் முகாரி மோகம் தீராததால் , மதிராக்ஷி பாடியுள்ளார் வர்ணத்தில் திருவற்றியூர் தியாகராஜர் பாடல் , வழமை போல் முக்தாய் சிட்டைஸ்வரங்கள் பிரமாதப்படுத்தப்பட்டதாக ஆழ்வார்கடியான் அறிவித்தான்.


2) மாயமாளவகௌளையில் தலைவர் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் பாடினார் தலைவர் , ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் வரிகளில் தான் எத்தனை நெகிழ்ச்சி , பூம்பாவாய் உயிர்தெழ நாவுக்கரசர் பெம்மான் பாடிய வரிகளை தலைவர் போல் உயிர் தந்து பாடுவார் யாருளர் , கானமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான் , தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் , ஆறாம் நூற்றாண்டிலேயே செந்தமிழ் சொல்லாடல் இருந்திருக்கிறது , ஞானசம்பந்தரின் அருமையான வரிகளை தலைவர் சொல்லிசையோடு பாட அரங்கு பக்தி பரவசத்தில் மகிழ்ந்தது , கச்சேரி வாகன நெரிசலில் அவசரமாய் வரும்போது கபாலி கோபுரம் கண்ட காட்சி வந்து சென்றது.தேவாரம் போன்ற ஒரு இசை இல்லை என்றால் தமிழின் உன்னதம் உலகத்தாருக்கு எப்படி உரைத்திருக்கும் என்று உரைத்தார் கோபாலகிருஷ்ணபாரதி , ஏன் எங்கள் பாசுரம் மூலம் உரைத்திருக்கும் என்று பல்லை இளித்தான் திருமலை.


3) நீண்ட நெடிய நாளுக்குப்பின் சஞ்சய் கேதாரம் , நாம் முன்பே பதிவிட்டபடி சேதாரமில்லா தங்கம் இந்த கேதாரம் , தலைவர் ஒரு வித குஷியோடு ஆலாபனை புரிய அரங்கும் துள்ளியது , தலைவரின் முத்திரை நகாசு வேலைப்பாடுடன் அமைந்தது ஆலாபனை , ப்ருஹா நாயகன் நம்மை எங்கோ கொண்டு சென்றார் , கமகங்களும் பாய்ந்து வந்து இசைப்பந்தாடின , வரதரின் வகையான கேதாரம் முறையாய் வந்து அரங்கை மூழ்கடித்தது , அடடா என்னே வாசிப்பு , குழைந்து குழைந்து வாசித்தருளியது வரதரின் வாத்தியம் . தியாகர குருமாஸ்ரய பாடினார் தலைவர் , தலைவர் மானசீக குருவில் ஒருவரான எம்.டி.ராமநாதன் இயற்றிய பாடல் , தலைவர் சதா முதா என்றுபாட பாட மயங்கினோம் கேதாரத்தில் , நாகராஜ சயனதாஸ்த்தில் தலைவர் உப்பரிகைக்கு சென்றார் , ராகபாவ லயோலாஸம் , ஸாமகான ஸப்தஸ்வர என்று என்னமாய் எழுதியுள்ளார் எம்.டி.ஆர் , நம் ஸாமகானலோலனுக்கு இதைப்பாடுவது என்றால் சொல்லவா வேண்டும் , எம்.டி.ஆர் பிடிகளையும் போட்டு பாடினார் ஸ்வரத்தில் , சரணத்தில் வர பஞ்சரத சேத்திரம் என்று தலைவர் பாட பஞ்சநாதீஸ்வரரை தொழுதோம் , அந்த வரததாஸ சன்னுதத்தில் மீண்டும் எம்.டி.ஆர் , சிட்டைஸ்வரம் அரங்கை துளைத்தது அடுத்து , மொத்தத்தில் கேதாரம் நீண்ட நாளுக்குப்பின் வந்தாலும் நீடித்த மகிழ்வை தந்தது.எம்.டி.ஆர் பாடுவதில் மாத்திரமல்ல எழுதுவதிலும் ஏற்றம் கண்டவர் என்றார் கோபாலகிருஷ்ணர் ஆமாம் அதனால் தான் கோவிந்தனை எழுதியுள்ளார் என்றான் திருமலை எகத்தாளமாக.


4) ஆலாபனை சிம்மேந்திரமத்யமம் , திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம் கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம். பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது. என்று திருமலை அடுக்கிக்கொண்டு போக , தலைவர் ராகத்தை எங்கேயோ கொண்டு சென்றார் , என்னே ஓர் கருணை சுவை மேலிடும் ராக ஆலாபனை , ஆலாபனையை மொத்தமாக தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து ஆலாபனை புரிந்தார் தலைவர் , வழமை போல் அவரின் கரங்கள் வாள் வீசியது , விரல்கள் காற்றில் பித்தோவான் நோட்டுக்களை கோலமிட்டது , இருந்த இடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து ஆலாபனை செய்தார் , ஒர் உயர்தர சிம்மேந்திரமத்யமத்தை அவை கேட்டது , பன்னீர் புஷ்பங்கள் ஆனந்த ராகம் சில விநாடிகள் வந்து சென்றது , தொடர்ந்து வரதரின் வசீகர வயலின் ஆலாபனை சிம்மேந்திரமத்யமத்தில் நம் சிந்தைக்கு விருந்தாகியது , நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் வாசித்தார் வரதர் , தலைவரின் உயரிய இசைக்கு எந்தவித வேறுபாடுமின்றி வாசித்து வருகிறார் வரதர் , படு பிரமாதமான வாசிப்பு என்று சொன்னால் மிகையில்லை , இகபரமெனும் இரு உலகிலும் பரசுகம் உலவும் சுகுணசீலா , பாபநாசம் சிவனார் பாடல் , அக்காலத்தில் எம்.எஸ் பாடிய பண் இது , தலைவர் குகசரவணபவ சிவபாலாவில் ஒரு சுழலை ஏற்படுத்தினார் , அதையே நிரவலாக அமைத்துக்கொண்டு அமர்களப்படுத்தினார் தலைவர் , வரதரும் நெய்வேலியாரும் வித்தகத்தை முழுவீச்சில் காட்ட கச்சேரி உச்சம் பெற்றது , வழக்கம் போல் நெய்வேலியாருடன் வம்பு வளர்த்தார் நிரவலில் , தலையாட்டியார் ரசித்துக்கொண்டே வாசித்தார் , ஆசை தீர் நிரவல் புரிந்து ஸ்வரம் துவக்கினார் குகசரவணபவாவில் , ஸ்வரம் ஜெட் வேகத்தில் பயணிக்க அரங்கே அந்தரத்தில் பயணித்தது , தலைவர் முழுவீச்சில் பாடலை கொண்டு சென்றார் வரதர் நெய்வேலியாரின் முழு ஈடுபாட்டுடன் , ஸ்பதஸ்வர பிரஸ்தாரம் முடித்துவிட்டு நிதானமான சரணத்தை பாடினார் , ஆம் அனுபல்லவியிலேயே பாடலின் பெரும்பகுதி அமைந்துவிட்டது . சிம்மேந்திர மத்யமத்தில் சிங்கமென பாடிவிட்டாரே தலைவர் என்றான் ஆழ்வார்கடியான் நம்பி , சிவபாலனை பாடினால் சிங்கம்போல் தானே பாடவேண்டும் என்று கர்ஜித்தார் திருநாளை போவார் எழுதிய சீலர் .


5) கமாஸை ஆலாபனை புரிய ஆஹா என்று மனம் மகிழ்ந்தாலும் அய்யகோ நளினகாந்தி ஆலாபனை இல்லையா என்று மனம் பரிதவித்தது , வருவது வரட்டும் முதலில் கமாஸை ரஸிப்போம் என்று மயங்கினோம் சஞ்சய் கமாஸில் , கமாஸுக்குத்தான் எத்தனை வரலாறு உண்டு தலைவரோடு , ஐஐடி முதல் கபாலி வரை கமாஸில் தலைவர் செய்யாததில்லை , மனமார கமாஸை ஆலாபனை புரிந்து விட்டு , முத்துசாமி தீட்சிதரின் ஸாரஸ தளநயனாவை பாடினார் தலைவர் , அப்பாடா குறுஆலபானை போலும் நளினகாயந்தி ஆலாபனை உண்டு என்று மனதை தேற்றிக்கொண்டோம் , கோவிந்தரின் புகழ்பாடும் பண் , சங்கடம் நீக்கும் இறைவா என்கிறார் தீட்சிதர் , அனுபல்லவியில் சரணத்தில் வழமைபோல் தலைவர் தீட்சிதரின் வரிகளுக்கு உயிர்ப்பைக் கொட்டி பாடினார் , ஸாரஸதளநயனம் நம்முள் நீக்கமற நிறைந்தது.கமாஸ் என்றாலே சாமி மயூரகிரி வடிவேலா தான் நினைவுக்கு வருகிறது என்றார் கோபாலர் , சரி இனிமேல் ஸாரஸ தளநயனாவை நிலை நிறுத்திக்கொள் என்றான் திருமலை.


6) நளினகாந்தி ஆலாபனைக்கு காத்திருந்த நமக்கு அரை நிமிடத்திற்கும் குறைவான ஆலாபனை தந்து பல்பளித்து ஸ்வாதி மாமன்னரின் பாலயசதாவைப்பாடினார் தலைவர் , ஒரு முறை இதை நாதசுதாவில் பாடியது வாழ்வில் மறக்க இயலா தருணம் , அந்த மோகள நயனாவில் அப்பப்பா அருமை , நீலாம்போதரவில் தலைவரின் முத்திரை சங்கதிகள் , அந்த ஷௌரேவில் நம் உணர்வை உலுக்கினார் தலைவர் , பூரி முதித ப்ரந்தாகரவில் நெய்வேலியார் அமர்களப்படுத்தினார் , வெறும் 5 நிமிடம் பாடப்பட்டாலும் படு பிரமாதமாய் செய்தார் தலைவர் , வரதர் வாசிப்பு இன்னுமும் மயக்கத்தை கூட்டியது இருவருக்கும் தலையாட்டியார் பேரிசை அருமை . என்ன தொடர்ந்து வைணவமாய் இருக்கிறது என்றார் கோபாலர் , ஓய் நளினகாந்தியில் மனவியாலகிஞ்சரா பாடினாலும் எங்கள் ராமரைத்தான் பாடி இருப்பார் என்றான் ஆழ்வார்கடியான்.


7) ஆலாபனை மத்யமாவதி கச்சேரி கதாநாயகி , வழமையாக காடெனவே பொழில்சூழ் என்று பாடிவந்த தலைவர் சமீப காலமாக மத்யமாவதியை ஆலாபனை செய்து வருகிறார் , இதே அவையில் சில மாதங்களுக்கு முன் பாலிஞ்சு காமாட்சியைப்பாடினார் , இங்கே மீண்டும் அரங்கேற தயாராய் காத்திருந்தது பாடல் , நீட் ஆலாபனை என்பதை கட்டியம் கூறுவது போல் ஆலாபனையை துவக்கி எடுத்துச் சென்றார் தலைவர் , பல்வேறு கட்டங்களாக அரங்கேறிய மத்யமாவதி மிகவும் உன்னதமாய் அரங்கை அரவணைத்தது , வரதர் மந்யமாவதி வளமாய் வாசித்தருளிட , ராஜாதி ராஜா மகுடீடத என்று தலைவர் விருத்தமாய் துவக்கினார் பாலிஞ்சு காமாட்சியை , ஸ்யாமா ஸாஸ்திரி கிருதி , காஞ்சி பெருந்தெய்வத்தை போற்றும் பண் , அந்த பிரச்சன்ன பராசக்தியே அரங்கில் வந்து கேட்டாள் தலைவரின் பாலிஞ்சு காமாட்சியை , நெய்வேலியாரும் அருமையான நாதம் தலைவரை மேலும் உற்சாகப்படுத்தியது , அனுபல்லவி சாலா , வெகு சாலா அரங்கேற்றினார் தலைவர் , காந்தமகுவில் நிரவலை அமைத்தார் தலைவர் , மிகவும் ரம்மியமாய் அமைந்தது நிரவல் , தொடர்ந்து ஸ்வரத்தைப்பாடினார் காந்தமகுவில் , மத்யமாவதி ஸ்வரங்கள் அருமையாய் வந்து விழ கச்சேரி பிரமாதப்பட்டது , நெய்வேலியாருடன் மத்யமாவதி கணக்குகளை துவக்கினார் தலைவர் ,இந்த பாடல் பட்டியல் வெளியீட்டால் அடுத்த விநாடி ஆச்சர்யம் என்பது சமீப காலமாய் தலைவரிடம் எதிர்பார்க்கமுடியவில்லை , ஆனால் தீடீரென நம்மை ஸ்தம்பிக்க செய்தார் தன் பேகடா ஸ்வரத்தால் , என்னே அருமையான பேகடா அடுத்து வரதர் வாசிக்க தலைவர் ரீதிகௌளையில் ஸ்வரம் பாடினார் , ஆஹா நல்ல வேட்டை என்று மகிழ்ந்தோம் , அடுத்து தலைவரின் முத்திரை பதித்த சாவேரி இன்பக்காவேரியாய் பாய்ந்தது , எல்லாம் ஒரு நிமிட ஸ்வரம் ஆகவே நிறைய உண்டு என்பதை உணர்ந்தோம் , அடுத்து யதுகுலகாம்போதி யாவரையும் மகிழ்விக்க வந்தது , தொடர்ந்து சஹானா சாறல் அரங்கையே குளிர்வித்தது , அடுத்து தன்யாசி நம்மை உலுக்கியது , தொடர்ந்து வந்தது நாட்டுக்குறிச்சி , அடுத்து பூர்விகல்யாணி என அடுத்தடுத்து தொடுத்தார் இன்ப அம்புகளை, நாம் என்றும் மகிழும் காப்பி அடுத்து , மீண்டும் மத்யமாவதி வந்து தனியைத் துவக்கி வைத்தார் தலைவர் , எதிர்பார்த்து காத்திருந்த நெய்வேலியார் அடுத்த 9 நிமிடங்கள் பேரின்ப தனி தந்தார் , சம்பரிதாயங்கள் மிக அருமையாக அரங்கேறியது , மனிதரின் அர்பணிப்பை என்ன சொல்லி விவரிப்பது , வாசிப்பில் அப்படியே சொல்லாக வந்து விழுந்தது , தலைவர் மிகவும் ரசித்தார் தலையாட்டியாரின் தனியை , மிக அற்புதமான பாவாய் அமைந்தது மத்யமாவதி.ஹூம் காஞ்சிபுரத்திலேயே எங்கள் அத்தி வரதரையும் பாடி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தான் திருமலை, ஸ்யாமா சாஸ்திரிக்கு தெரியும் எங்கள் ஏகாம்பரேஸ்வர் மகிமை என்றார் கோபாலர்.


8) அடுத்து விருத்த நேரம் பூரணி மனோன்மணி என்று தலைவரின் பாகேஸ்ரீயில் நம்மை கிறங்கடித்தார் , தாச்சி அருணாசல முதலியாரின் அருமையான பக்தி ரசம் சொட்டும் வரிகள் ,சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற் கேறவிலையோ? என்ற தலைவர் வினவ சுப்ரமணியா இத்துனை நேரம் காஞ்சிபுரவிலாசினியை அல்லவா அழைத்துக்கொண்டிருந்தாய் என்று கற்பகாம்பிகை அவை வந்து புன்னகை புரிந்தாள் , தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ

தீனரக்ஷகி அல்லையோ ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை ஆதரிப்பவர் சொல்லுவாய் அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல் அடியனை ரக்ஷி என்று சிந்து பைரவியில் தலைவர் பாட அரங்கத்து மாமிகளின் கண்கள் குளமாக தயாராயின , தொடர்ந்து நம் பெருமிகழ்வு பெஹாக்கில் கண்டாய் மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரிபொழிற் திருமயிலை வாழ் விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி விமலி கற்பகவல்லியே பாடிவிட்டு கற்பகாம்பிகை நீயல்லவோ பாடினார் , பாபாநாசம் சிவனார் பாடல் , அல்ப மதி கொண்டு வரியில் சொக்கி விட்டோம் , அந்த பிழை பொறுக்கும் தெய்வம் நீ வரியில் தான் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது .ஹரி மகிழும் சகோதரி கபாலி மனோகரி அருள் அரங்கிலிருந்தோம் அனைவருக்கும் கிட்டியது. நல்ல விருத்தம் என்று கோபாலகிருஷ்ண பாரதி சிரிக்க எள்ளும் கொள்ளும் வெடிக்க பார்த்தான் திருமலையப்பன்.


9) திங்கள் மறு ஒலிபரப்பு ஏனு மாதிடரேனு சாலகை பைரவி புரந்தர தாஸ்ர பாடல் , கேட்க கேட்க காது இனித்து , ஸ்ருதி சாஸ்திரத்தில் உருக்கி எடுத்தார் நம்மை , த்யானவனு மாடிதேனு மௌனவனு என்று தலைவர் பாட பாட சாலக பைரவி இசையில் நனைந்தோம் , நெய்வேலியார் வாசிப்பு அமர்களப்படுத்தியது . புரந்தரர் என்னமாய் பாடியிருக்கிறார் எம் பெம்மானை என்று ஓங்கி ஒலித்தான் திருமலை , இதற்கே இப்படி என்றால் அடுத்த பாட்டிற்கு என்ன செய்வானோ என அதிர்ச்சியாய் பார்த்தார் கோபாலர்.


10) நில்லுப்பா சுப்ரமணியம் என்று டி.எம்.தியாகராஜன் அழைத்து வண்ணமாடங்கள் சூழ் பாடச்சொல்ல தலைவர் மோகத்தில் துவக்கினார் பெரியாழ்வார் திருமொழியை , எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடகண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே என்று தலைவர் அரங்கையே கட்டிப்போட்டார் , ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார் கானடாவில் தலைவர் பாட அரங்கு தலைவர் காடனாவில் கரைந்த்து , சஞ்சய் சுப்ரமணியன் கானடா இன்பத்தேனடா என்பதை நிரூபித்தார் , பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே என்று பெரியாழ்வார் கண்ணனால் ஆயர்பாடி அடைந்த மகிழ்வை என்னமாய் எழுதியுள்ளார் என்று திருமலை மகிழ்நநான் , ஹம்ஸா நந்தியில் பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார் என்று தலைவர் பாட கண்ணனே அரங்கு வந்தது போல் இருந்தது , ஆணொப்பார் இவன் நேரில்லை காண் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்று தலைவர் பாடி முடிக்க அரங்கெங்கும் பலநூறு டி.எம்.தியாகராஜன்கள் , மார்க் போட்டாச்சு சுப்ரமணியன் தான் முதல் பரிசு என்பது போல் இருந்தது . இன்னும் சுருட்டி இருக்கே என்று தலைவர் செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டுசித்தன் விரித்தயிப் பன்னுபாடவல்லார்க்கு இல்லை பாவமே என்று பாடி முடித்தார் , பாடல் முடிந்ததும் அழுது புரண்ட திருமலையை தேற்றினார் கோபாலகிருஷ்ணபாரதியார்.


பத்துப்பாடலை தொடர்ந்து மங்களத்தை பாடினார் தலைவர் , கொங்குவில் தந்த சர்பரைஸ் இங்கு இல்லையாக்கும் என்று எழுந்து நின்று கைவலிக்க கைத்தட்டினோம் , இன்னும் சில மாதங்களாகும் தலைவரின் தரிசனத்திற்கு , காத்திருப்போம் , காத்திருப்பு போல் இனிமையானது ஏது இந்த உலகிலே ! ஏன் இல்லை உன்னை திருச்சாத்து சாத்தும் போது கிடைக்கும் இன்பம் பெரிது என்றான் திருமலை , இல்லை இல்லை உன்னை கொட்டினால் கிட்டிடும் இன்பமே பெரிது என்றார் கோபாலர் , பேயும் பிசாசும் இனிமை குறித்து பேசுவது ஆகச்சிறந்த கொடுமை என்று ஓடினேன்.

 
 
 

Commentaires


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page