top of page
Search

சித்திரையில் , முத்தமிழில் , தமிழ் செல்வத்தின், சொல்நயம்-பொருள்நயம்-தொடைநயம் , செந்தமிழ் சௌந்தர்யம்!

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Apr 18, 2022
  • 7 min read

ree

சென்னையில் அலுவலக நாளில் தலைவர் கச்சேரி கேட்பது , தேஷ் அல்லது பேகடா ராகத்தை கண்டுபிடிப்பது போல் மிகவும் எளிதான காரியம் , ஆனால் விடுமுறை நாளில் இல்லத்திலிருந்து கச்சேரி செல்லது , தலைவர் இந்த ராகத்தோட பேரு என்று அவரே அறிவிப்பது வரை ராகத்தை நாம் கண்டுபிடிக்க இயலாதது போன்ற கடினமான காரியம் , சித்திரை 1ல் தலைவர் கச்சேரிக்கு இல்லத்திலிருந்து கிளம்பும்போது மணி 5.45 காரணம் எத்தனையோ சவால்கள் நிறைந்த நாட்களில் தலைவர் கச்சேரி எப்படியாவது வந்து சேர்ந்துவிடுவேன் , ஆனால் அன்று மனைவியின் உடன் பணியாற்றுபவர் மகள் திருமண வரவேற்பு , அனுமதி கோரியபோது உடனடியாக நிராகரிக்கப்பட , மீண்டும் கருணை மனு போட்டு , உரிய நேரத்தில் ஓலா புக் செய்து தரவேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் கிட்டியது , 5.45 மணிக்கு கிளம்பி அறக்க பறக்க வண்டியோட்டி முத்தமிழ் அரங்கடைந்தபோது 6.32 , தலைவர் அதற்கும் முன்பாகவே கச்சேரி துவக்கி இருந்தார் , தலைவருடன் நிரந்தர கூட்டணி நெய்வேலியார் , வரதர் மற்றும் தம்பூராவில் ரேதஸ் . அரங்கு நிறைந்திருந்தது . ஏன் லேட்டு என்று கொட்டு வைத்தான் திருமலை , கோபாலகிருஷ்ணபாரதி தட்டிக்கொடுப்பது போல் முதுகில் அறைந்தார்.


1) வர்ணம் முக்தாய் தவழ்ந்தோடியது தலைவர் இன்னிசை குரலில் , கணநாதாவை கௌளையில் ஓங்கி ஒலித்தார் , மாயுரம் விஸ்வநாத சாஸ்திரி பாடல் , குணநிதியே குவளயம் பணி என்று தலைவர் சரணம் பாடி சிட்டைஸ்வரத்தில் அரங்கிற்கு சிலிர்ப்பூட்டினார் , நெய்வேலியார்இன் தாள லயம் அருமையான பின்புலம் அளிக்க , வரதரும் வாஞ்சையுடன் வாசித்தார் , மத்தாப்பு சரவெடியாய் தலைவர் ஜொலித்தார் , இது வரை எத்தனையோ வர்ணங்களை கேட்டுள்ளோம் ஆனால் இந்த மூவரின் ஒத்திசைவு நம்மை ஒவ்வொரு முறையும் மயக்க தவறுவதில்லை.


2) அருமையான ஸ்ரீரஞ்சனி குறு ஆலாபனை அளித்தார் தலைவர் , இன்னிசை தமிழ் அமுதம் அம்மா , கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் அழகு வரிகளில் கச்சேரியின் இரண்டாவது பாடலும் தமிழில் ஒங்கி ஒலித்தது , இன்னிசை அமுதம் இரங்கி நீ எனக்குருள் செய்வாய் அம்மா என்று பாடுகிறார் தலைவர் , தமிழ்த்தாயோ , சஞ்சய் இனி நீ தமிழில் பாட என்ன அருள் வேண்டும் , நின் போல் தமிழை பாடுவோரும் உண்டோ என்று புன்னகைத்தாள் , தலைவரோ கன்னலும் , தேனும் , முக்கனியும், கனிந்தொழுகு , சொல்நயம் , பொருள்நயம், தொடைநயம் பெருகவே என்று பாடி தமிழன்னையை ரசிக்க வைத்தார் , கோபால கிருஷ்ணபாரதி , தம்பி இன்றைய பாடகர்கள் சொல்நயம் , பொருள்நயம், தொடைநயம் பொருந்த பாடுவது இருக்கட்டும் , இதற்கெல்லாம் அர்த்தமாவது தெரியுமா என வினவினார், திருமலை திருட்டுவிழி விழித்து , தமிழை தமிள் என்று கூறுவோர் இருக்கும் உலகமைய்யா இது என்றான் , இதற்குள் தலைவர் நாத்தழும் பேறக்கவி நவநவ மாகப்பாடி தோத்திரம் செய்துன்பாதம் தொழுதிட வேண்டும் அம்மா! வாய்த்தவென் தாமரையும் வணங்கும் அடியருளம் பூத்தபொற் றாமரையும் பொலிய விளங்கும் தாயே ! என்று உருக்கமாய் பாடிட அரங்கெங்கும் தமிழ் உலா வந்தது . தமிழர் என்பதில் இதை விட பெருமிதம் கொள்ள என்ன உள்ளது , அப்படியே ஸ்வரம் சென்றார் தமிழரசர் , வழக்கம் போல் தலைவர் கல்பனாஸ்வரங்கள் அவையோருக்கு வாய்த்த வரங்கள் ! வரதர் அருமையான மறுபதிவு செய்ய இன்னிசை தமிழ் அமுதம் மூலம் கச்சேரியின் இரண்டாம் பாடலிலேயே உச்சம் தொட்டர் தலைவர், வேறு யாரும் தமிழ் பாடுவதில்லையா என கேட்கலாம் , நிறைய பேர் பாடுகிறார்கள் , சஞ்சய் பாடுவதால் பாடுவோரின் எண்ணிக்கையும் , துக்கடா பாடும் போக்கும் மாறியுள்ளது என்றாலும் , தலைவர் கர்நாடக சங்கீதத்தில் தமிழ் பாடல் பாடுவதில் என்றும் ஓர் அரிமா , லயன் கிங்கடமில் முபாஸா மலையின் முகட்டில் கம்பீரமாய் நிற்குமே அது போல் தலைவர் தமிழை பாடுவதில் கம்பீரம் காட்டுவார், துள்ளல் மிக்க ஸ்வரம் நீண்டு ரஸிகர்களை மிகழ்வின் உச்சாணிக்கொம்பில் உட்கார்த்தியது , ஸப்தஸ்வரம் சென்று பிரமாதப்படுத்த , வரதரும் அருமையான பதிலுரை தந்ததார்.


3) சித்திரை வெயிலின் தாக்கத்தை தலைவர் தணிக்க விழுமி , மல்யமாருதத்தை ஆலாபனை புரிந்தார் , மலைத்தேனின் வாசத்தை தாங்கியவாறு மாருதம் அடையாற்றை கடந்து அரங்கில் வீசியது , தலைவர் இந்த ராகத்தை விஸ்தாரமாய் ஆலாபனை புரிந்து கேட்டது , இதே அடையாற்று யூத் ஆஸ்டலில் ஹம்ஸத்வனியில் , தன்னுடைய வசீகர ஆலாபனை பாணியில் தன்னேரில்லா தலைவர் கிடைத்த 5 நிமிடங்களில் விளையாடினார் மலையமாருதத்தோடு , மூலிகை வாசம் கலந்த காற்று உடலுக்கு எத்தகைய சுகமும், ஆரோக்கியமும், நோய் தீர்க்கும் வலிமையும் உடையதோ அது போன்று மலையமாருதம் ராகம் மனச்சுமை தீர்த்து சுகமளிக்கும் என்ற கூற்றை மெய்பித்தார் தலைவர். வரதரின் வயலின் தென்றல் அரங்கை அழகாய் வருடியது , தொடர்ந்து முண்டாசு கவியின் சந்திரன் ஒளியில் அவளை கண்டேன் பாடினார் தலைவர், கச்சேரியின் மூன்றாவது தமிழ்பா , சரண மென்று புகுந்து கொண்டேன் , இந்த சரண மென்று புகுந்து கொண்டேனில் தான் எத்தனை சங்கதிகளை காட்டுகிறார் என்று வியந்தார் கோபாலர் , இந்திரியங்களை வென்று விட்டேன் , எனதெனாசையைக் கொன்று விட்டேன். வரியில் மலையமாருதத்தில் சண்டமாருதம் புரிந்தார் இசை மல்லர் சஞ்சய் சுப்ரமணியன் , பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள் , பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள் இந்த வரிக்காகத்தான் காத்திருந்தோம் என்று இன்பத்தமிழில் திளைத்தார் கோபாலகிருஷ்ணபாரதி , தலைவர் எதிர்பார்த்தபடி அதையே நிரவலுக்கு எடுத்துக்கொண்டார் , இது போன்ற நிரவல்களில் மிருதங்கத்தின் பணி அளப்பரியது , அதிலும் தலைவர் தமிழ் பாடலில் நிரவல் செய்தால் என்னென்ன சேட்டைகள் செய்வார் அதிலும் பாரதி பாடல் வரி என்றால் சொல்லத்தான் வேண்டுமோ , அத்தனைக்கும் ஈடு தருபவர் நம் தலையாட்டி சித்தர் , அருமையாக உழைத்தார் அவரோடு வரதரும் பிரமாதமாக உழைக்க , பலன் நன்றாக கிடைத்தது , தலைவர் கபதப என்று நிரவல் ஸ்வரம் செல்ல அரங்கும் பக்தி கொண்டது தலைவரின் இசைபால் , வழமை போல் நெய்வேலியாருடனும் வரதருடனும் இசை துவந்தம் புரிந்து முடித்தார் , சந்திரன் ஒளி தலைவரின் வதனத்தில் தெரிந்தது.


4) மாநாடு ரிப்பீட் மோடுக்கு சென்றார் தலைவர் , ஆம் இந்த கச்சேரியில் மூன்று ரிப்பீட் உள்ளது எனக்கும் ஸ்வாமிக்கும் ஜனாவுக்கும் , சலமு எலாரா மார்க்க இந்தோளத்தில் பீறிட்டு கிளம்பியது , தியாகராஜர் பாடல் தலைவர் பாட பாட , மாமா மாமிகள் கண்கள் அகல விரிந்தது , மேடையில் தலைவருக்கு பதிலாக சப்பளாக்கட்டையுடன் தியாகையரை கண்டனர் அனைவரும் , தலைவர் சரணத்தை பாட பாட அரங்கே அமர்களப்பட்டது , முடிப்பில் ராரர என்று ஒரு நகாசு வேலை புரிந்தார் பாருங்கள் பலே.


5) ஸ்ரீதர் கல்யாணராமன் , தலைவர் இசைப்பயணத்தில் வாய்த்த அன்பர்கள் ஒருவர் , சமீப காலங்களாக காண்பதற்கரியவரானார் , காலையில் பாடல் பட்டியல் கண்டதுமே வந்துவிடுவார் என்று உறுதியாக நம்பினோம் , எண்ணியபடி வந்திருந்தார் அவரின் இதயத்திற்கு நெருக்கமான கேதாரகௌளையை தலைவரிடம் கேட்க , பின்னிருக்கையில் இருந்தபடியால் அவரின் மெய்மறந்த ரசிப்பை காண இயலவில்லை , இருந்தாலும் எப்படியெல்லாம் ரசித்திருப்பார் என்பது சஞ்சய் பித்தர்கள் அறிந்த ஒன்று, அப்படி ரசிக்க வைக்க தலைவர் போல் வேறே யாருளர் , கேதாரகௌளை இராகத்தில் தான் சரகுணபாலிம்பவை முதன்முதலாய் தனது குரு கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியிடம் பயின்றதாக தலைவர் சிலாகித்து கூறுவார் , அத்தகைய அருப்பெரும் இராகம் இது , எப்படி காம்போதி ஒரு பிரம்மாண்ட இராகமோ அது போல் கேதாரகௌளை , இதை சும்மா நான்கைந்து நிமிடங்கள் ஆலாபனையில் அடக்கிட இயலாது , தலைவர் தன்னை மறந்து ஆலாபனையை என்னும் வேள்வித் தீயை மூட்டினார் , மலையமாருதம் வந்த நாவாவிது என்பது போல் வேறொரு பரிமாணத்தை காட்டினார் ஆலாபனையில் , சமீபத்தில் வீதி உலா வந்த திருவாரூர் தேர்போல் பிரம்மாண்டம் காட்டி வலம் வந்தது கேதாரகௌளை , பல நேரங்களில் அவையோர் செல்லிடைபேசியை நோண்டியவாறு கச்சேரி கேட்பதுண்டு , அத்தகைய வேலையெல்லாம் இந்த கேதார கௌளையில் எடுபடாது , அப்படி ஆலாபனை தந்தார் தலைவர் ஒருவரும் வைத்த கண் அகற்றவில்லை , மேலை அநாயசமாக சென்று வெற்றிக்கொடி நாட்டினார் தலைவர் , அந்த லல்லாவில் ஒரு மயக்கம் தந்தார் பாருங்கள் , அப்படியே இராகத்தை சுழற்றி எடுத்தார் தலைவர் , இது போல் ஒரு ஆலாபனையை கேட்பதற்கு என்ன தவம் புரிந்தோமோ என்று புளகாங்கிதம் கொண்டது அவை.வரதர் ஆலாபனை அடுத்து , தலைவர் போல் வசீகரம் பிரம்மாண்டம் மேதைமை சிலிர்ப்பு உயிர்ப்பு அத்தனையும் கொட்டி வாசித்தார் , அதே நெளிவு சுளிவுகள் குழைவுகள் கார்வைகள் கோர்வைகள் என்று அணுஅணுவாய் ரசித்தளித்தார் , வயலின் சக்கரவர்த்தி வரதாழ்வார்.அருணாசல கவியின் அந்த ராமசௌந்தர்யம் அறிந்து சொல்லப்போமோ அம்மா பாட , அரங்கு தலைவரின் இசை சௌந்தர்யத்தில் சொக்கியது.கந்த மேவும் அரவிந்த மரும் பாட நாமும் கொஞ்சம் சொக்கினோம் , அவர் காலுக்கு நிகராமோ கைகக்குத்தான் சொல்லப்போமோ , வரியில் கேதாரகௌளையில் கொட்டிப்பாடினார் தலைவர். முதல் சரணத்தை தலைவர் விஸ்தாரமாக பாடி அருளினார் , அருணாசல கவி உருண்ட முழங்கால் , திரண்ட பெருந்தொடை , வரிந்த மருரி இடை , விரிந்த மார்பு என்று இராமனின் ஒவ்வொரு அங்கத்திற்கும் விவரிப்பு செய்கிறார் பிரம்மாண்டமாய் , பரந்த புஜங்களில் மேரு மலை நாணும் ,இராமனை பார்க்க பதினாயிரம் கண் வேண்டும் என்று எழுதியுள்ளதை , அந்த பிரம்மாண்டம் குரலில் தொணிக்க பாடினார் தலைவர் . கேதார கௌளை எப்போதோ வரும் குறிஞ்சி மலர் இம்முறை கேட்ட பாக்கியத்தை மெச்சினோம்.


6) சிறுமணவூர் மினிசாமி முதலியாரின் , மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட, மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட, ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட, வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே என்று வரிக்கு வரி பக்தி ரசம் சொட்ட சொட்ட கல்யாணியில் விருத்தம் பாடி , அரங்கை அப்படியே தன் இசையாளுமையில் கொண்டுவந்தார் , ஒரி சில நிமிடங்களுக்கு முன் இராமனை போற்றி அவன் அல்லால் ஏது தெய்வம் என்று எண்ணிடச்செய்து விட்டு அடுத்த பாடலில் தில்லைவாழ் நடராசனே ஆகச்சிறந்த தெய்வம் என்று பாடும் இசையாளுமை சஞ்சயின் தன்னேரில்லா திறன் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , பின்புலத்தில் திருமலை திருப்பல்லை தற தறவென கடித்தான். அறிவித்தபடி ஆனந்த கூத்தாடினார் அம்பலம் தன்னிலே பொன்னம்பலம் தன்னிலே பாடினார் தலைவர் , உருகி உருகி கேட்டார் பாடல் ஆசிரியர் கோபாலகிருஷ்ண பாரதி , மீண்டும் ஒரு மறு ஒலிபரப்பு என்றாலும் , எத்தனை வேறுபாடு காட்டுகிறார் என்று வியந்தவாறு கேட்டு திளைத்தோம். அந்தரங்கமாகச் சிந்தித்த பேர்க்கருள் நந்தோந் நந்தோம் என்று தொந்தோம் தொந்தோமென்று வரிக்கு காத்திருந்து இன்பக்கூத்தாடினார் கோபாலர் , பதஞ்சலிமா முனியை நோக்கிப் பார்த்த பேர்கள் குறையைப் போக்கி இதமகித மென்றறிவை நீக்கி ஏகமாகக் காலைத் தூக்கி , அந்த காலைத்தூக்கியில் அப்படியே அம்பலக்கூத்தனை அரங்கின் முனி நிறுத்தினார் தலைவர், பாடல் முழுதும் நெய்வேலியார் , வரதரின் பங்களிப்பு அளப்பரியது.


7) ராகம் தானம் பல்லவி சாருகேசி அடுத்து , நம் அன்பிற்கினியார் வெங்கடகிருஷ்ணனை நினைத்துக்கொண்டோம். மனிதர் என்னமாய் உருகி உருகி தலைவரை ரசிப்பார் அதிலும் சாருகேசி என்றால் சொல்லவும் வேண்டுமோ , மதுரை மணி , ஜி.என்.பி , சோமு உள்ளிட்ட பிரம்மாண்ட இமயங்களை கேட்டு ரசித்த ரசிமணி , சாருகேசி மேல் தனிவாஞ்சை உண்டு , தலைவரிடம் மிக சாராதரணமாக பேசவல்லார் , பேச்சோடு பேச்சாக சாருகேசிக்கு விண்ணப்பமிடுவார், தலைவரோ ஹம் பாடலாம் , பாடலாம் என்று கூறிவிட்டு செல்வார் , ஆலாபனை முழுதும் வெங்கடகிருஷ்ணன் சார் தான் தெரிந்தார் , என்னே பக்தி ரசம் , கருணை ரசம் பீறிட ஆலாபனை புரிகிறார் என்று வியந்தோம் சாருகேசி அரங்கை அப்படியே விக்கித்துப்போக செய்தது ஆச்சர்யத்தில் , இத்தனை மாறுபட்ட உணர்வுகளை தரவல்லார் தலைவர் ஒருவரே என்றான் திருமலை , தன் முத்திரை பிருஹாக்களை இறக்கினார் தலைவர் , உச்சத்தில் சென்று பல்வேறு பிரயத்தனங்களை செய்தார் அரங்கம் வியந்தது அந்த 13 நிமிடங்களும் , வரதர் ஆலாபனையை அழகாய் செதுக்கினார் சாருகேசியில் , தலைவர் இசை போலவே உயர் இசை வரதர் இசை , மிக உன்னதமாய் வாசித்தார் , அப்படி ஒரு கருணை ரசம் சொட்டியது வாசிப்பில்.தானத்தில் மிக வித்தியாசமான யுக்தியை கையாண்டார் தலைவர் , நிதானத்திலும் நிதானமாக தானம் வந்து விழுந்தது , மெல்ல மெல்ல தானத்தை திட்டமிட்டு இறக்கினார் தலைவர் , அடுத்த அடுத்த சுற்றுக்களில் நிதானம் வேகமெடுத்து பின் விஸ்வரூபமெடுத்தது , செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ,மீண்டும் முண்டாசு கவியின் வைர வரிகளை தலைவர் பல்லவியில் பறை சாற்றினார் , எங்கும் தமிழ் எதிலும் தமிழானது கச்சேரி , வழமை போல் கணக்குகளை கட்டவிழ்த்து விட்டு ஸ்வரம் சென்றார் தலைவர் , நெய்வேலியாரை ரசித்து ரசித்து வாசித்தார் , முதலாவது ராக மாலிகையாக ஆனந்த பைரவி தந்தார் தலைவர் , ஆனந்தமாய் அவை கேட்டது , பூ மேல் வளரும் அன்னையே ஒலித்தது ஸ்வரத்தில் , அடுத்து ஸ்வரம் பாட அனைவரும் விழிக்க வழக்கம் போல் தலைவர் இந்த ராகத்தோட பேரு என்று அறிவித்தார் , மைசூர் துரைசாமி அய்யங்கரின் நினைவாக மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா உருவாக்கி துரை ராகம் , சங்கராபரணம் ஆங்கில நோட்டுக்கள் போன்ற சாயல் தென்பட்டது , அடுத்து சுத்யதன்யாசியில் தலைவர் ஸ்வரம் தொடுத்து அழகாய் மாலையிட்டார் பாரதிக்கு , அடுத்து எடுத்த எடுப்பிலேயே இளையராஜாவை கொண்டு வந்தார் அவைக்கு , மோஹன கல்யாணி என்று நங்கைநல்லூர் ஸ்வாமிநாதன் உறுதிபட கூறினார் , அடுத்து தில்லானா மோகனாம்பாள் சிந்துபைரவி சித்து துவங்கியது , தலைவரை கடந்த சில ஆண்டுகளாக கேட்டுவருவோருக்கு இந்த ப்ரேஸஸ் நன்கு பரிச்சயமானவை , நம்மை சுழட்டி எடுப்பார் சிந்து பைரவியில்.அதைத்தான் இப்போதும் செய்தார் , கொஞ்சியது சிந்து பைரவி தலைவர் ஸ்வரத்தில் , இதிலும் மேலே சென்று நம்மை வியப்பில் ஆழ்த்தினார் இப்படியெல்லாம் ஒருவரால் பாட இயலுமா என்று , அப்படியே சிந்து பைரவியில் முடித்து தனி துவக்கினார் , நெய்வேலியார் வழமை போல் தனிக்காட்டுராஜாவாய் மிளிர்ந்தார் , தானம் போல் நெய்வேலியாரும் மெதுவாக துவக்கி பின் தன் மின்னல் வேக விரல்களாள் இந்திரஜாலம் காட்டினார் தனியில் . பத்து நிமிட தனியில் அரங்கம் அப்படியே ரசித்து புசித்தது.எங்கோ மதுரையில் அமர்ந்து கொண்டு சென்னை சாருகேசியை மனதார ரசித்தார் வெங்கடகிருஷ்ணன் சார்.


8) மீண்டும் தீண்டும் இன்பம் தேஷ் , தலைவர் மிக அருமையான குறு ஆலாபனை முடித்து பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் பாடினார் , பலர் இப்பாடலை பாடியுள்ளனார் , மஹாராஜபுரம் சந்தானம் உள்ளிட்ட ஜாம்பவான்களும் பாடியுள்ளனார், என்றாலும் நமக்கு சஞ்சய் பாடும் போது தான் விவரிக்க இயலாத இன்பம் , தலைவர் போல் உணர்ந்து பாடுவார் யாருளர் , வாழ்வில் உணர்வு சேர்க்க என்று தலைவர் பாட பாட நம் வாழ்வி உணர்வு சேர்கிறது , பல முறை பலவாறு விவரித்தாலும் தேஷ் சஞ்சய் பாரதிதாசன் துன்பம் நேர்கையில் இந்த கூட்டணிக்கு ஈடு இணையில்லை . மெட்டமைத்த தண்டபாணி தேசிகருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.


9) அடுத்து படு வேகமாய் வந்தது திலங் ராமகிருஷ்ணரு மனகே பந்தரு வாகில பாடல் , எக்ஸ்பிரஸ் வேகத்தில் பாடினாலும் உச்சரிப்பு பலே , புரந்தர தாசர் பாடலை தலைவர் தொடர்ந்து பாடி வருகிறார் , ம்னறாம் சரணம் ரங்கநாதனுவில் தான் எத்தனை சொக்கல் வைக்கிறார்.


10) மீண்டும் ஜோன்புரி , அருணகிரிநாதரை விருத்தமாய் பாடினார் சேலார் வயலில் நாம் சென்று கண்டு தொழுதோம் , முருகனை பஜி மனமே திருமால் மருகனை பஜி மனமே , பாபநாசம் சிவன் பாடல் , அரவிந்த் ஸ்ரீநிவாசனோடு பங்கு போட்டு கேட்டோம் , முக்கண்ணன் மகனை அறுமுகனை எல்லாம் கேட்டு விட்டு , உருகாத நெஞ்சத்தை ஒருகாலும் எட்டாத உத்தமர் திருத்தணி கருத்தினை கேட்டுவிட்டு என் மைத்துனன் செந்திலநாதனை பாடி அரவிந்த பாடதனை பாடியபோது மீண்டும் ஓர் அல்ப சந்தோஷம் பெற்றோம் , கடந்த முறை 3 முறை அரவிந்தன் ஒலிக்க , இம்முறை 5 முறை ஓலித்தது , நான் இரண்டு எடுத்துக்கொண்டு பிரிதோர் அரவிந்திற்கு மூன்று தந்துவிட்டோம்.


11) ஸ்வாதி மன்னர் மங்களத்தில் பாடினார் யதுகுலகாம்போதியில் புஜகசாயினோ நம மங்களம் என்று , இனிமையான மங்களத்தை தொடர்ந்து , பாரதியின் வாழிய செந்தமிழ் பாடினார் ஒட்டுமொத்த அவைக்கு ஒரே ஆளாய் நான் மாத்திரம் எழுந்து நின்றேன் , சங்கர் அனு இருந்திருந்தால் அவர்களும் எழுந்து நின்றிருப்பர் , வரலாறை நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதற்கு சான்று வாழிய செந்தமிழுக்கு எழுந்து நிற்காமல் இருப்பது என்று கோபால கிருஷ்ணபாரதி வருத்தமுற்றார்.


சித்திரை 1ல் தலைவர் தந்த தமிழசையை யாரும் எளிதல் மறக்க இயலாது , அத்தகையை திட்டமிடல் , அதனையும் கடந்து எண்ணியவற்றை எண்ணியாங்கு செய்து முடித்த பெரும்திறன் இந்த மூவரின் ஆளுமை , மீண்டும் ஒரு அறிவிப்பிற்கு காத்திருந்தோம் , இல்லை சீறிப்பாய்ந்தோம் , திருமண வரவேற்பு அரங்கிற்கு , கடைசி பந்தி முடியும் முன் களமாட வேண்டாமா .



 
 
 

Commentaires


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page