top of page
Search

கலைசேத்திரத்தில் கலைபேராசான் மெட்டமைத்த இசையெடுப்பு ! பார் போற்றும் சங்கராபரண பரதநாட்டிய கச்சேரி !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 26, 2022
  • 5 min read

ree

எத்திராஜீக்கு நேரெதிர் பாடற்களம் ! அங்குலம் அங்குலமாய் கலை நயத்தால் வேயப்பட்ட அரங்கு ! நம் அரங்கனுடன் வரதர் நெய்வேலியார் ஆலத்தூர் ராஜகணேஷ் , ரேதஸ் ராகுல் , 6மணிக்கு துவங்க வேண்டிய கச்சேரி , சேத்திரத்து காரியதரிசி சூரியனுக்கு டார்ச் அடித்து காட்டியதால் 6.05க்கு துவங்கியது ! அவை நிறைந்து , தரை நிறைந்து , மேடைக்கு இடமும் புறமும் நிறைந்து , ரஸிகர் கூட்டத்தால் அலைமோதியது கலா சேத்திரம் ! திருமலையப்பனும் கோபாலரும் ஒட்டுமொத்த கூட்டமும் வைணவம் , சவைம் என்று அழமை போல் அழிச்சாட்டியம் !


1) சுப்ரமணியர் துவக்கியது பட்டிணம் சுப்ரமணியரின் நாட்டுகுறிச்சி கண்ட அட தாள வர்ணம் சாமினி வேகமே , நாட்டுகுறிச்சி படகு பிரயாணம் அருமையாக அரங்கேற , நாதம் நம் நம்மை மயக்கிட வரதர் வாசிப்பு மனதில் மயிலிறகு வீசிட , முக்தாய் , சிட்டை ஸ்வரங்கள் அரங்கின் வசீகரத்திற்கு மேலும் கட்டியம் கூறியது. அடுத்த சுற்றில் வேகமெடுத்தது சாமினி வேகமே ! பிரமாதப்படுத்தப்பட ஸ்வரபிரயோகம் தலைவரின் வாடிக்கை விநோதம் , நம் சிந்தா குலந்தனை சிலிர்படையச் செய்தது.


2) மீண்டும் கலாவதி மீண்டும் தண்டபாணி தேசிகர் , மீண்டும் சித்திவிநாயகனே ஆனால் மீண்டும் கேட்கும் பேராவலை மட்டுமே தூண்டியது பாடல். ஒப்பற்ற ஒத்திசைவு , ஆழமான தமிழ் உச்சரிப்பு , சுதி சுத்த சங்கீதம் , நம்மை மிரள செய்தது.சக்தி அங்கநற்கன்னி முன் தொழுதோம். அரங்கமே பொற்றாமரை கரையில் காத்திருந்தது தலைவரின் ஸ்வரத்திற்காக. அந்த மதுர சொக்கலிங்கத்தில் சொக்கியது அரங்கு , தலைவரின் கல்பனாஸ்வரம் எல்லையில்லா ஆனந்தம் , உற்சாகம் கரைபுரண்டோடும் தருணங்கள் அரங்கில் அரங்கேறின.ஒரு இசை சுழல் அரங்கையே சுழற்றியது , மேலே ராட்சத விசிறி இந்த சுழலில் அகப்பட்டு சுழல நாம் ஏதோ ரங்கராட்டிணத்தில் ஏறிய உணர்வைப்பெற்றோம்.


3) கலைசேத்திரத்து தர்பாரில் சஞ்சய் தர்பார் ஆலாபனை , அலை அலையாய் தார்பார அரங்கை ஆக்ரமித்தது , தர்பாரை சஞ்சய் அணுகும் விதம் படு அற்புதம் , எடுத்த எடுப்பிலேயே அதன் சொரூபத்தை காட்டி ஆலாபனை புரிவார். கேட்கும் போது நம்மை அறியாமல் தர்பாரில் இணைந்துவிடுவோம். அப்படித்தான் இணைந்தோம் இந்த ஆலாபனையிலும். தொடர்ந்து வரத தர்பார் வானளந்தது , மேன்மையான வாசிப்பென்றால் அது வரத வாசிப்பு. மீண்டும் ஸ்வாதி மாமன்னர் பாடல் ஸ்மரமானஸ பத்மநாப சரணம் பாடினார் தலைவர் , அருண வாரி ரூஹவில் உத்தரம் சென்றார் தலைவர். உச்சாணி பாடும் திறன் சஞ்சய் தனிப்பெரும் அடையாளம். இரண்டாம் சரணம் படாகாதிபவில் தலைவர் நங்கூரம் வீசினார் , தர்பார் தென்றல் அரங்கில் வீச வீச அனைவர் மனமும் அத்தனை திருப்தியடைந்தது.


4) மீண்டும் வராளி , அரியகக்குடி பாடிய அரும்பெரும் பண் நே பொகட தியாகையர் பாடல் , வராளியின் வனப்பும் ஆழமும் , இந்த சிறிய இடைவெளியிலும் எத்தனை அழகாய் காட்டுகிறார் தலைவர். வரதர் அருமையாக வாசிக்க , தலையாட்டியார் ரசித்தபடி தாளம் தந்தார். நீரஜ நயன ஸ்ரீ தியாகராஜவில் நிரவல் அமைத்தார் தலைவர், நீரஜ நயனர் மகிழ்ந்துலாவினார் அரங்கில் , அத்தனை ரம்மியமாய் வராளியில் நிரவல் நிகழ்ந்தேறியது.சஞ்சய் நிரவலில் , நெய்வேலியார் , வரதர் ராஜகணேஷ் பங்கேற்ற பாங்கு அருமையிலும் அருமை. அதற்காகவே காத்திருந்தார் போல் பிரமாதப்படுத்தினர்.ஏறத்தாழ நான்கைந்து நிரவலை தொடர்ந்து பாடல் முடிவுக்கு வந்தது. சஞ்சய் இசையின் பிரமிப்பிற்கு முடிவேது.


5) அடுத்து பஹூதாரி , வெண்புறா நன்றாக சிறை விரித்தது. கேட்பவரை கவரும் ராகம் இது. வெகு எளிதாக நாம் தொடர்பு படுத்திக்கொள்ளலாம். சின்ன சின்ன பிரிவுகளாக ஆலாபனை அமைந்தது , அடுத்து வேகத்தை குறைத்து ஆலாபனை ஆழத்தை கூட்டினார். மனோதர்ம சங்கீத மாமன்னர் பஹூதாரியை பிரமாதப்படுத்தினார். நாநன்னா நாநன்னா என்று தலைவர் செல்லம் கொஞ்சிட வரதரும் படுஅமர்களமாய் வாசித்தார். தொடர்ந்து வரதர் புறா பறக்கவிட்டார் அரங்கெங்கும். ஒரு புறா இரண்டு புறா என புறாக்கள் கூட கூட அரங்கெங்கும் பறந்தன கேட்போர் மனம் மெய்மறந்தன.ராமசாமி தூதன் நானடா அடடா ராவணா என்று தலைவர் அருணாசல கவியை பாடினார். லாக்டவுன் ஆன்லைன் கச்சேரியில் முன்பே பாடியுள்ளார். அரங்கில் பாடும் போது இன்னமும் குறும்பு கொப்பளித்தது. மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும் மறைந்துநின்று தந்தநான் அல்லடா புறம்பே நின்று வந்தநான் அல்லடா , என்று தலைவர் அடாபுடா அற்புதமாய் அரங்கேறியது. கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதங்களைச் சூழ்கிறாய் கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில் மூழ்கிறாய் , மாதர் மோகத்திலே , துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய் மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலேஏன்வீழ்கிறாய். கிணற்றிலே ஏன் வீழ்கிறாய் என்று அனுமன் ராவணனை கேட்டு , ஆதிமூர்த்திதானே உத்தண்ட மாகவந்தான் அரக் கரைமண்ட சீதையை விட்டுப்பிழையடா சீதையை விட்டுப்பிழையடா என்று தலைவர் படுபிரமாதமாய் பாடலை செய்தார். அந்த முடிப்பில் வெங்கடேசர் சிரித்து சிரித்து வாசித்தார். வரதர் பார்த்தால் சிரித்து விடுவேன் என்று குனிந்த தலை நிமிராது வாசித்தார்.


6) பைரவி மெயினுக்கு நாம் தயாராக , தலைவர் ராமா ராமா ப்ராண சகி என்று சேத்ராஜ்னா என்ற அதிகம் அறியப்படாதவர் பாடலை பாடினார் , நெய்வேலியார் அதி அற்புது லயம் தர , தமர சாக்ஷினி அனுபல்லவி பாடினார் தலைவர். கலிகி சிலுக பலுகு என்ற முதல் சரணத்தை தலைவர் பைரவியில் பட்டை தீட்டினார். பாடல் மின்னியது நம் மனதில் . தீட்சிதர் போல் சாஹித்யத்திற்கு முக்கியத்துவம் நிறைந்த க்ருதி.


7) ராகம் தானம் பல்லவி சங்கராபரணம் , ஆம் ஆலாபனையை இரண்டாக சுருக்கி ஒட்டுமொத்த கவனத்தையும் சங்கராபரணம் பால் திருப்ப திட்டமிட்டு அதை செயல்படுத்தினார் தலைவர், டூரல்லா என்று நம்மை சங்கராபரண டூர் இட்டுசென்றார், வழமையான ப்ருஹா நிறைந்த , எம்டிஆர் வகையறா ஆலாபனை தந்தார் தலைவர். ஏறத்தாழ 13 நிமிடங்கள் சங்கராபரண சண்டமாருதம் அரங்கில் வீச வீச , அது வரை தெளிவாக இருந்த வானில் கருமேகங்கள் சூழ்நதன , மேகம் ஒரு மாமழைக்கு சூல் கொண்டது , தலைவரோ ஒரு மகோன்னத ராகம் தானம் பல்லவிக்கு ஆலாபனையில் கட்டியம் கூறினார். தொடர்ந்து வரதர் வானை மேலும் கருப்பாக்கினார் , கருமேகம் எப்போது வேண்டுமானாலும் பொழிவதற்கு தயாரானது , மழை என்றாலே மின்னல் இடி வேண்டும் , மாமழை என்றால் சொல்லவும் வேண்டுமா , தலைவர் சங்கராபரணத் தானத்தை துவக்கினார் இடி மின்னலாய் , தலைவரின் தானம் அரங்கில் ஒரு மின்னல் கீற்றின் தொகுப்பை வழங்கியது , பளீர் பளீர் என்று வாள் வீச்சாய் தானத்தை தானம் செய்தார் தலைவர் வரதர் கூட்டணி , எந்நேரமும் உந்தன் சன்னிதியிலே இருக்கவேண்டும் அய்யா பொன்னைய்யா என்ற கோபாலகிருஷ்ண பாரதி வரிகளை பல்லவி ஆக்கினார் தலைவர். கச்சேரி ஆரம்பம் முதல் இதுகாறும் பெரும்பாலும் பாடல் தேர்வு அதை படைக்கும் விதம் எல்லாவற்றிலும் ஒரு நாட்டிய பின்புலத்தை உணர்ந்தோம். அதிலும் ஆடும் கூத்தனை குறித்த இந்த பல்லவி வரிகள் படுபிரமாதம். ஆடும்பாம்பை அணிந்தவன் சிலையாய் வீற்றிருந்த அரங்கில் தலைவர் வரமாய் பல்லவி பாடினார். சந்நிதியில் ஒரு ஜாலத்தை துவக்கினார் தலைவர். மேலே வானில் கருமேகம் இன்னமும் கார்முகிலாய் மாறி குளுமையான தட்பவெட்பத்தை உருவாக்கிக்கொண்டது. வானை கண்டால் எங்கும் குளிர்ச்சி , இருட்டு அவ்வப்போது மின்னல் கீற்று . தலைவர் ஸ்வரம் துவக்கவும் அரங்கிற்கு வெளியே பெருமழை பெய்யவும் சரியாக இருந்தது , அப்பப்பா உள்ளே ஸ்வர மழை வெளியே வான்மழை இரண்டிற்குமான போட்டி படுபிரமாதம். மெல்ல மெல்ல ஸ்வரம் ஜூரவேகத்தில் பயணித்தது , அரங்கில் இருந்த நாற்றுக்கணக்காணோர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஸ்வராட்சியில் கட்டுண்டனர். பா ம க ரி ஸவில் தலைவர் நெய்வேலியாரோடு விளையாடினார். மெல்ல மெல்ல கணக்கை துவக்கினார் நெய்வேலியாருடன். அதற்காகவே காத்திருந்த நெய்வேலியார் வாசித்து பிரமாதப்படுத்தினார். ஸ்ப்தஸ்வர பிரஸ்தாரத்தை வழமை போல் அமர்களப்படுத்தினார் தலைவர். அடுத்து 15 நிமிடங்கள் உலகத்தரம் வாய்ந்த தனி தந்தனர் நெய்வேலியார் ராஜகணேஷ் இணையர். வாசிப்பென்றால் அப்படி ஒரு அசுர வாசிப்பு , பல்வேறு கணக்குகளை உள்ளடக்கிய தனி தந்தார் நெய்வேலியார். ராஜகணேஷ் வம்புல மாட்டிவிடறீங்க என்பது போல் சிரித்தவாறு வாசித்தார் தன் பதிலுரையில். இருவரும் தத்தம் வாத்தியத்தில் வானை அளந்தனர். மக அபூர்வமான துவந்தம் நடந்தேறியது.ராகம் தானம் பல்லவி சங்கராபரணம் எந்நேரமும் கேட்க வேண்டும் என்பதை அறுதியிட்டது.


8)தலைவரின் சொந்த மெட்டமைத்த அடுத்த பண் துர்கா ராகத்தில் கண்டேனா உடுப்பிய கிருஷ்ண ராயன பாடல் , புர்நதர தாசர் உடுப்பி கிருஷ்ணனை கண்டதை விவரிக்கிறார். அதற்கு முன் எந்தெந்த தெய்வங்களை கண்டேன் என்பதையும் பகர்கிறார். அந்த ஸ்நானதிகளை மாடி ஆமேல நா பந்து அனந்தேஷ்வரனை கண்டு கேட்டு கேட்டு திளைத்தோம். திம் திம் திம்க்கெந்து அருமையிலும் அருமை அதிலும் நெய்வேலியார் வாசிப்பை வரதர் வயலினிசையை என் சொல்ல.


9) அடுத்து ஜாவளி கமாஸ் அபதூருகி லோனைதினோ பட்டாபிராமைய்யர் பாடல் , வேடுகல ஜூடனேவில் அந்த கமாஸ் நடன நளினத்தை என் சொல்வது . ஒய்யாரப்பாடல் மிக ஒய்யாரமாய் அரங்கேறியது.நெய்வேலியார் அக்மார்க் முடிப்பு மிக அருமை.


10) விருத்த நாயகன் நேரம் அடுத்து , முந்தைய கச்சேரியில் சிறுமணவூர் முனுசாமி முதலியார் விருத்தம் , கலாசேத்திரத்தில் தாச்சி அருணாசல முதலியார் விருத்தம் பூரணி மனோன்மணி , காப்பியில் துவக்கினார். காப்பி சஞ்சய் கூட்டணி மிக அருமையானது , தேஹி என்றால் சிந்து பைரவியில் தொடர்ந்தார். ஆம் மீண்டும் சிந்து பைரவி , ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை ஆதரிப்பவர் சொல்லுவாய் என்று கசிந்தார் தலைவர் என்னே வீச்சு , கண்டாய் மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே என்று பெஹாக்கில் தலைவர் எதிர்பார்த்தபடி வானளந்தார் , இந்த விருத்தத்தை பன்முறை பல்வேறு ராகங்களில் பாடினாலும் பெஹாக்கில் மாத்திரம் கை வைக்க மாட்டார் அந்த வைகியில் மகிழ்ச்சி நமக்கு. தொடர்ந்து பாபநாசம் சிவனின் பெஹாக்கில் மணம்பரப்பி , மனம் நிறைத்தது. கல்பகாம்பிகை நீயல்லவோ பாடல் நாம் என்றும் மறவா மாமருந்து , அந்த அல்பமதி கொண்டுன்னையும் வரிகளில் கரைவது தின அனுபவம்.


11) மாருபெஹாக் தில்லானா , அது தலைவரே எழுதி மெட்டமைத்த தில்லானா , சதாப்தி ரயிலில் தலைவர் பெங்களூரிலிருந்து சென்னை வரும் வழியில் 1994இல் இயற்றிய தில்லானா இது, ஆனால் மக்கள் முன் 2019இல் பிரம்ம கான சபை பொன்விழா கச்சேரியில்தான் இதைப் பாடினார் தலைவர். தீம் தீரதாணி என்று தலைவர் பாட அரங்கே தாளம் போட்டது , உண்மையை தொடரும் போது இன்னல்கள் வரும்போது நம் மனது சாந்தியடைய சுனாதமே உன்னை பூஜித்து பாடுவேன் மாருகபெஹாக் ராகத்தில் என்று தலைவரின் வைர வரிகள் அருமையாக பாடப்பட அனைவரும் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் நனைந்தோம்.


கச்சேரி மூன்று மணிநேரத்தை முடித்து மங்களம் பாடப்பட கானமழை முடிவுக்கு வர , இன்னுமும் வெளியே கனமழை பெய்து கொண்டிருந்தது. நம் மனமோ அந்த மழையில் நனையும் ஆபாயத்தை காட்டிலும் இசைமழையில் நனைந்த இன்பத்தோடு இல்லம் புறப்பட்டோம். அடேய் எங்களை திருவான்மயூர் திருப்பத்தில் விட்டுச்செல் என்று என்னை விடாமல் துரத்தி வந்து தொற்றிக்கொண்டனர் கோபாலகிருஷ்ண பாரதியும் ஆழ்வார்கடியான் நம்பியும்.

 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page