கனிவு தோய்ந்த காம்போதி , கோலோச்சிய கோகிலபிரியா , மதராஸ் வித்வத் சபையில் நிஷா ராஜகோபாலன் கான மழை !
- ARAVINDAN MUDALIAR
- Dec 20, 2022
- 4 min read
Updated: Dec 21, 2022

புகைப்பட உபயம் : ராமநாதன் ஐயர் போட்டோகிராபி !
நமது பணியிடம் பெத்தபாளையம் அருகே என்பதால் தலைவர் கச்சேரி கேட்பதற்குள்ளாகவே வாயில் நுரை தள்ளி விடுகிறது , இதில் இன்னபிற வித்துவான்கள் கச்சேரி என்பது கனவிலும் நடவாத ஒன்றாகிவிட்டது. இருந்தபோதிலும் செவ்விசையில் பெண் பாடகியருள் நாம் பெரிதும் விரும்பும் பாடகி திருமதி நிஷா ராஜகோபாலன் அவர்கள் கச்சேரி வித்வத் சபையில் நேற்று , எப்படியும் கேட்டே விடுவோம் என்று விட்டோம் சபாவிற்கு வண்டியை. The Air was carrying the carnatic fever என்று சொல்வார்களே அது போல் இருந்தது வித்வத் சபை வளாகம் . மாலை 3.45மணிக்கு இத்தனை ரஸிகர்கள் , முண்ணனி பாடகர்கள் என அகடமி எங்கும் மனித தலைகள் , நாம் அங்கே டயாஸில் கேட்டது 2019இல் அதற்குப்பின் கொரோனா தடைபோட இம்முறை டயஸில் கேட்போம் என்று நுழைவுச்சீட்டை வாங்கி நுழைந்தோம் மேடைக்கு. நிஷா அவர்களுடன் திருமருகல் தினேஷ் குமார் வயலின் , பாளையங்கோட்டை குரு ராகவேந்திரன் மிருதங்கம் , பிரஸன்னா கடம். அகடமியின் சம்பிரதாய மைக் டெஸ்டுக்கள் முடிந்து , துவங்கிற்று கச்சேரி 4 மணிக்கு.
1) தத்வமரியா தராமா ரீதிகௌளையில் அமர்களமாய் துவக்கினார் நிஷா , தும்பிக்கை நாயகனை நம்பிக்கையோடு தொழுவார் என்றும் இடர்படார் , என்பதாய் அமைந்த பாடலில் மிக அருமையான உச்சரிப்போடு ரீதிகௌளையின் சாறை பிழிந்து பாடி அசத்தினார் நிஷா. சத்வகுணமும் ஜீவதயையும் ஞானமும் வரிகளில் பிரமாதப்படுத்தினார் , மிருதங்கம் நல்லதொரு பின்புலம் வழங்க வயலின் கடம் சிறப்பாக அமையப்பெற்றது , நிரவல் ஸ்வரம் ஜம்மென்று துவக்கி வேகத்தைக் கூட்டி மின்னல் ஸ்வரமாக்கி அதிஅற்புத துவக்கத்தை தந்தார் நிஷா ராஜகோபாலன்.
2) நேநெந்து வெதகுதுரா ராமா நேநெந்து வெதகுதுரா கர்நாடக பெஹாக் அடுத்து , தியாகையர் சோதரர் அவர் வழிபட்ட ராமர் சிலையை காவேரியில் போட்டதாகவும் , அதை தேடுங்கால் இதை பாட்டியதாகவும் கூறுவர். நிஷா ராஜகோபாலன் பாட பாட இதோ இருக்கிறேன் என்று ஸ்ரீராமரே மேலெழுந்து வந்தது போல் பாடலை அற்புதப்படுத்தினார் , கலுஷாத்முடை துஷ்-கர்ம யுதுடையில் கர்நாடக பெஹாக்கின் இனிமையும் பக்தியின் உச்சத்தையும் ஒருங்கே சேர்த்தளித்தார். தினேஷ் மிக அருமையாக வாசித்து பாடலுக்கு வளம் சேர்த்தார்.
3) ஆலாபனை கல்யாணி , ஆம் காதினிக்கும் கல்யாணி தந்தார் நிஷா ராஜகோபாலன் , அரங்கின் குளுகுளு வசதியை விஞ்சியது இவரது கல்யாணி , என்னே ஞானத்தோடு ஆலாபனையை விரிவு படுத்துகிறார் , அரங்கில் ரஸிகர் பலவிதம் , ஆலாபனை துவக்கிய விநாடி ராகம் கண்டு கொள்வோர் உண்டு , பாடலை வைத்து ராகம் தேடும் என் போன்றவரும் உண்டு (கல்யாணி ஆலாபனையிலேயே கண்டு கொண்டோம்) அப்படி உயரிய ஞானஸ்தர்களையும் திருப்தி படுத்தி , கர்நாடக இசையின் ஆழ்ந்த புலமை இல்லாதோரையும் கவர்ந்து பாடுவது எளிதல்ல , ஆனால் அத்தனை அநாயாசமாக கல்யாணி ஆலாபனை மூலம் அனைவரயையும் கட்டிப்போட்டார் நிஷா ராஜகோபாலன்.தொடர்ந்து ஸ்வாதி மாமன்னரின் பங்கஜ லோசன பாஹி முராந்தக பாடினார் , அது இன்னும் கல்யாணியின் இனிமைக்கு வித்திட்டது , க்ரதவி வதி சுக விஹாரவில் அருமையான நிரவலை அளித்து கல்யாணிக்கு மேலும் அழகு செய்தார் , நிரவல் ஸ்வரமும் வரமாய் வந்து விழ அரங்கே நிஷா ராஜகோபாலன் கல்யாணியில் கசிந்துருகியது.
4) ஆஹிரி அடுத்து அனுபல்லவி நியாயமா மீனாக்ஷி என்று துவக்கி பின் மாயம்மா யனி பிலசிதே மாடாத ராதா என்று ஆஹிரியில் அம்பாளை அழைத்தார் நிஷா ராஜகோபாலன் , மதுரை மீனாட்சி மயிலை கற்பகாம்பாளுக்கு சேதியனுப்ப , கற்பகவல்லி சபாவந்து அருள்பாலித்தார் , ஸ்யாமா சாஸ்திரியின் இந்த வரலாற்றுச்சிறப்பு கிருதி முன்மாலைப்பொழுதில் கேட்க மிக ரம்மியமாய் இருந்தது.
5) ஆலாபனை காம்போதி , ஆம் கச்சேரி கதாநாயகன் காம்போதி நிஷா ராஜகோபாலன் ஆலாபனை புரிய வழமையான கம்பீர சுவையை புறம் தள்ளி கனிவு கொஞ்சும் காம்போதி ஆலாபனையாக உணர்ந்தோம். இப்படி ஒரு காம்போதி பாட எத்தனையெல்லாம் மெனக்கெட்டிருப்பார் என்னும் நினைப்பே மலைப்பைத் தந்தது , மிக அருமையானதொரு காம்போதி ஆலாபனை கிடைக்கப்பெற்றோம் அதன் குளுமையில் ஒரு வேளை ஓ ரங்க சாயி பாடுவாரோ என்று நினைக்கு அளவில் இருந்தது கனிவு காம்போதி. தீட்சிதரின் ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே பாடினார் நிஷா , சுப்ரமணியக்கடவுள் விஸ்வரூப தரிசனம் தந்தபோது இருந்தது சாஹித்யத்தை நிஷா கையாண்ட விதம் , தீட்சிதர் கிருதி என்றாலே அங்கே கொஞ்சம் நிதானத்திற்கே பிரதானம் , விறுவிறுப்பெல்லாம் எதிர்பார்க்க இயலாது , முந்தைய பாடல் ஆஹிரி ஏறத்தாழ அதே தன்மையுடையதாக இருந்தாலும் , இரண்டிற்கு என்னே அழகாய் வேறுபாட்டை காட்டி பாடினார் நிஷா ராஜகோபாலன் என்று மலைத்தோம். வஸவாதி சகல தேவ வந்திதவில் பிரமாதமாய் ஒரு நிரவல் அமைத்தார். நிரவல் என்றால் மேம்போக்காய் அல்ல காம்போதியை அலசியெடுத்துவிட்டார். மண்ணிலிருந்து பொன்னை எடுப்பர் ஆனால் நிஷா ராஜகோபாலன் பொன்னிலிருந்து வைரத்தை எடுத்தார் போல் நிரவல் செய்தார் , தொடர்ந்து நிரவல் ஸ்வரம் கல்பனாஸ்வரம் என்று கச்சேரியின் உச்சத்தை அரங்கத்தினர் அனைவரும் அனுபவிக்கச்செய்தார் என்றால் அது மிகையல்ல. அதிலும் அந்த தநித பதநிதாவில் அரங்கில் ஆடாத தலையில்லை, தொடர்ந்து ஸப்தஸ்வர பிரஸ்தாரம் செய்து தனி துவக்கி வைத்தார். குருராகவேந்திரன் பிரஸன்னா இணையர் ஒத்திசைவை மிக நேர்த்தியாக தந்தனர். இருவரின் வாத்தியத்திறனையும் மிக அழகாய் ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தினார் நிஷா. மொத்தத்தில் சித்தத்திற்கு கனிவுசால் காம்போதி தந்தனர் கச்சேரி குழுவினர்.
6) ராகம் தானம் பல்லவி கோகிலப்பிரியா , 11வது மேளம் கருணை சுவை நிறைந்த ராக ஆலாபனை தந்தார் நிஷா , மிக ஆழமாக ஆலாபனை அமையப்பெற்றது , மேலே பாடும் போதும் ராகத்தின் பேரில் அசாத்திய கட்டுப்பாட்டை காட்டினார். ராகத்தை அசையச் சொன்னா அசையும் என்பார்கள் அது போல் கோகிலபிரியாவை அவக்களித்தார் நிஷா. தானம் படுகம்பீரமாய் துவக்கி மெல்ல வேகமெடுத்து உச்சம் சென்றார் , தானம் எக்ஸ்பிரஸ் மயிலையில் புறப்பட்டு மாயவரம் வரை சென்று வந்துவிட்டது கணப்பொழுதில் , தொடர்ந்து பல்லவியின் பூர்வாங்கம் உத்தராங்கம் மிஸ்ரம் என்று பல்வேறு கூறுகளை விளக்கி கூறி விட்டு ஆர் கே ஸ்ரீராமின் பல்லவி வரிகளான பிரியே கலாப்பிரியே கவி கோகிலப்பிரியே கலாப்ரியே கமலஸம்ப பிரியே அருமையான கணக்குகளுடன் பாடினார் , குரு ராகவேந்திரர் புன்னகைத்தவாறு வாசித்தார் , இந்த பல்லவியி்ல் வாய்ப்பாட்டுக்காருக்கும் மிருதங்கக்காரருக்குமான சங்கேத மொழி அவர்களைத் தவிர வேறு எவருக்கும் புலப்படாது , புலப்பட்டு என்னவாகப்போகிறது கேட்க நன்றாய் இருந்தால் போதும் , அதிலும் இந்த பல்லவி கேட்க மிக நன்றாய் அமைந்தது , தொடர்ந்து ஸ்வரம் பாடினார் கோகிலபிரியாவில் , அடுத்து ராகமாலிகை எம்போன்ற ஞானசூன்னியங்கள் மேல் தயை புரிந்து அவரே அறிவித்தார் முறையே பவபிரியா கோகில வராளி கலாவதி என அனைத்து ஸ்வரங்களும் மத்தாப்பாய் மின்னின. மீண்டும் ஒரு குறு தனி அளித்து பல்லவியை நிறைவு செய்தார் .
7) இந்த துக்கடா கேட்பதில் ஒரு இன்பம் உண்டு ,ராகம் தானம் பல்லவி போன்ற அதிபிரயத்தனத்திற்குப்பின் பாடுபவர் நல்ல மனநிம்மதியோடு பாடுவார் நமக்கு ஒரு பெரிய பாடலுக்குப்பின் கேட்க ரம்மியமாகவும் இருக்கும் , அப்படிப்பட்ட துக்கடாக்களின் ராணி இந்த பெஹாக் ராகம் கேட்ட விநாடி நம்முள் இனம்புரியா இன்பம் விளையும் , அம்புஜம் கிருஷ்ணா அம்மையின் காட மழை பொழிகின்றானை ராகமாலிகையில் முதலாவதாக பெஹாக்கில் துவக்கினார் நிஷா , தீஞ்சுவை என்பார்களே அது தான் நம் பெஹாக் , ஜாமூன் சாப்பிட்டவரிடம் காலா ஜாமூன் தந்து பாருங்கள் அது போன்றது பெஹாக் அதிலே கரைவது போல் ஒரு மகிழ்வு பிரிதில்லை , அதிலும் அந்த யமுனா தீரத்தில் வரியில் அடேயப்பா என்ன சொல்லவி விவரிப்பது , அடுத்து பௌளியில் குயிலினம் கூவிட மயிலனம் ஆடிட அருமையாக அரங்கேறியது , அம்பரம் தன்னிலே தும்புரு நாரதர் மணிரங்குவில் மனதை மயக்கியது , மொத்தத்தில் அருமையான ராகமாலிகை தந்தார் நிஷா.
8) அடுத்து சிந்துபைரவியில் ஸ்லோகம் பாடி புரந்தரரின் தம்பூரி மீட்டிதவா பவாப்தி தாடிதவா பாடினார் மிக அருமையான நாதத்தோடு அமைந்தது சிந்துபைரவி பாடல் , விட்டலன நோடிதவா வைகுண்டகே ஓடிதவா வரியில் பக்திபரவசம் கொண்டது அவை.
2.30 மணிநேர கச்சேரியை இத்தனை அழகாக திட்டமிட்டு , திட்டமிடலை செயல்படுத்தி செம்மார்ந்த கச்சேரி தந்த நிஷா ராஜகோபாலன் மற்றம் குழுவினரை மனதார வாழ்த்திவிட்டு நடையைக்கட்டினோம் .வரும் காலங்களில் இவர் பல்வேறு உச்சங்களை அடைவது திண்ணம் .
Comentarios