top of page
Search

கடவுள் ஏன் கல்லானான் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Oct 10, 2022
  • 6 min read

ree

கடந்த அக்டோபர் 2ஆம் தேதியுடன் என்னுடைய தலைவர் சங்கீத பயணம் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது , இந்தப் பெரும் பயணத்தில் ஐநூறுக்கும் மேல் ரஸிகர்கள் வதனபுத்தகத்தில் நண்பர்கள் ஆனார்கள் , கச்சேரியின் போது நூறுக்கும் மேல் நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது , ஐம்பதற்கும் மேல் நண்பர்கள் வாட்ஸப் விசாரிப்புகள் உண்டு , நெருங்கிய நண்பர்கள் பத்து , அதில் மிகநெருங்கிய ஆப்த நண்பர்கள் மூவர் அதில் ஒருவரை இன்று இழந்து நிற்கிறேன் , என் உயரம் 178 செ.மீ அஃதாவது ஆறடிக்கு 2 செ.மீ குறைவு , இருந்த போதிலும் என் உயரம் மீது எனக்கு தனி கர்வம் உண்டு , ஆகையினால் என்னை விட உயரமானோர்களை ஏனோ எனக்கு பிடிக்காது, தலைவரின் சென்னை கச்சேரிகளை 2012 முதல் ஒரு கச்சேரி விடாமல் செல்லும் அதி தீவிர ரஸிகனாக இருந்த போது , நான் அடிக்கடி பார்த்த முகங்கள் பல , அதில் ஆறாடிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஓடிசலான தேகம் , மிக நேர்த்தியாய் உடையணிந்து தன் மனைவியுடன் அத்தனை கச்சேரிக்கும் வருவார் , வருடங்கள் உருண்டன , நாம் கச்சேரி அரங்கு வந்ததும் தேடும் நபராக இருந்தார் பெரும்பாலும் வந்துவிடுவார் ,வதனபுத்தகத்தில் அந்த காலகட்டதில் யூ மே நோவில் வரும் அத்தனை பேருக்கும் நட்பு விண்ணப்பம் தந்த காலம் , இவருக்கும் தந்தேன் ஆனால் ஏற்கவில்லை , 2015இல் குதிரமாளிகாவில் தலைவரின் ஸ்வாதி சங்கீதோற்சவம் , சென்னையிலிருந்து நான் மட்டுமே வந்திருக்கிறேன் என்ற அகந்தையோடு அரங்கில் நுழைந்தால் நமக்கு முன் தம்பதியர் முன் வரிசையில்காத்திருந்தனர் கச்சேரிக்கு. அனுராதா கண்ணன் அவர்களை என்னை பார்த்து புன்னகைக்க எப்போ வந்தீர்கள் என்று விசாரித்துவிட்டு கச்சேரி கேட்டேன் , பின் அன்றிரவு 3.30க்கு ரயிலுக்கு காத்திருக்கும்போது என் ப்ரெண்டு ரிக்வஸ்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது அவரால் ,


பின் மெல்ல மெல்ல கச்சேரிகளில் புன்முறுவல்களுடன் நட்பு தொடர , ஒரு கட்டத்தில் எப்போது நண்பர்களானோம் என்றே தெரியாமல் நெருங்கிவிட்டிருந்தோம் , அதே 2015இல் தலைவருக்கு சங்கீத கலாநிதி அறிவிக்கப்பட , தலைவர் நேரில் சென்று வாழ்த்துவது என்று ஒரு குழு அமைத்து தேதியும் நிர்ணயித்தோம் , ஆனால் நீலா மாமி , ஷங்கர் அனு ஊர்ல இல்ல அவா வரட்டும் அடுத்த வாரம் போலாம் , அவா ரெண்டு பேரும் பைத்தியம் மாதிரி சஞ்சய பல வருஷமா கேட்டுண்டிருக்கா என்று கூற , ஷங்கர் அனுவோடு தலைவரை இன்னபிற சஞ்சய் பித்தர்கள் சென்று சந்தித்தோம் , 10 நிமிடம் அனுமதி பெற்று 2.30மணி நேரம் அளவளாவி விட்டு , இதை செலிப்பிரேட் பண்ணியே ஆகனும்னு சங்கீதா விற்கு இட்டு சென்றார் , அன்று தொட்டு அதற்குப்பின் எத்தனை முறை எங்களை உபசரித்தார் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை , சங்கர் சுப்ரமணியன் ஒரு டிபிகள் சென்னை நடுத்தர பிரமாண குடும்பத்தில் பிறந்து , நடுத்தர வர்கத்திற்கே உரிய சவால்களுடன் படித்து , உழைத்து முன்னேறி , உலக அளவில் முண்ணனி நிறுவனமான SAPஇல் மிக உயர்ந்த இடத்தை அடைந்தவர் , இது எனக்கு அவருடன் பழகி பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் தெரியும் , ஆம் அவர் அந்த நிறுவனத்தில் சௌத் ஏசியா பசிபிக்கின் முதன்மை அதிகாரி , ஆனால் அதை அவரின் சொல்லிலோ செயலிலோ ஒரு விநாடியேனும் நான் கண்டதில்லை .


சங்கருக்கும் எனக்குமான அரசியல் தளங்கள் நேரெதிரானவை , எங்கள் அரசியல் சித்தாந்தங்கள் வட துருவம் தென் துருவம் , ஆரம்ப நாட்களில் வதனப்புத்தத்தில் எங்களிடையே கமெண்ட் போர் பயங்கரமாக நடக்கும் , ஒரு கட்டத்தில் இருவரும் முடிவு செய்தோம் , இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டது நம் நட்பு நம் இருவரையும் பின்னி பிணைய வைத்தது சஞ்சய் இசை , எனவே ஒருவரின் வதன புத்தகத்தை பிரிதொருவர் அன்பலோ செய்து விட்டு , நட்பை தொடரலாம் என்று செயல்படுத்தினோம் , அத்தகைய நட்பு எங்கள் நட்பு , பிறர் விளையாட்டாக கூறுவர் , சங்கரும் அரவிந்தும் ஒருமணிநேரம் அரசியல் பேசினால் பின் ஜென்மத்துக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொள் மாட்டார்கள் என்று .


சங்கர் அனு இருவரும் கச்சேரிக்கு வந்தோம் கேட்டோம் சென்றோம் வகையறாவைச் சேர்ந்தவர்கள் அல்லர் , இருவரும் 99% கச்சேரிக்கு ஒரு மணிநேரம் முன்னதாக வந்துவிடுவர் , டிக்கெட் வாங்கி வைத்தல் , துண்டு போட்டு வைத்தல் என்று அவர்களின் அன்பு எங்களை போல் வேலையிலிருந்து கச்சேரி வருவோர்க்கு நெகிழவைக்கும் , சனவரி 1 கச்சேரிக்கு திட்டமிடுதல் டிக்கெட் வாங்குதல் , ம்யூசிக் அகடமியில் அதிகாலை 2.30 மணிக்கு வந்து வரிசையில் நிற்பது , நாரதகானசபையில் 8 மணிக்கு வந்து முன்னால் நிற்பது , அந்தகாலத்தில் மார்கழி மகா உற்சவத்திற்கு யூத் ஆஸ்டலில் முதல் கச்சேரிக்கே வந்து காத்திருத்தல் என சொல்லிக்கொண்டே போகலாம் , நட்பு தொடர தொடர அவர்கள் இருவரின் தாயன்பும் எங்களுக்கு புலப்பட்டது , சஞ்சய் ரஸிகர்கள் என்பதை தாண்டி குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம் , என் பிள்ளைகள் இருவர் மீதும் கொள்ள பிரியம் சங்கருக்கு , ஒவ்வொரு ஆண்டும் தமிழிசை சங்கம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நான் ஸ்ரீதேவி ஆதித்யா சஞ்சய் அட்சயா ஸ்ரீயை அழகாய் படமெடுப்பார் , அதே போல் சனவரி 1ஆம் தலைவருடனான குருப் போட்டோ மிகப்பிரசித்தம் , அதில் ஒவ்வொரு ஆண்டும் சங்கர் எடுக்கும் இடத்தில் இருப்பாரே ஒழிய ஓரு நாளும் தலைவர் அருகில் நிற்க மாட்டார் , திருப்தியாக புகைப்படத்தை எடுத்துவிட்டு கடைசியாக பெயருக்கு வந்து பின்னால் தலை மட்டும் தெரிய நிற்பார் , கிருஷ்ண கான சபை கச்சேரி அன்று காலை பல ஆண்டுகளாய் சுந்தராவின் ரஞ்சனி ஆர்டிபிக்கு தலைவரிடம் ட்விட்டர் விண்ணப்பம் போட்டு பாட வைத்த நாளெல்லாம் எளிதல் மறக்கக்கூடியதல்ல , அன்று சுந்தராவின் ஆனந்த கண்ணீர் சங்கரின் மீதான என் மதிப்பை எங்கேயோ எடுத்து சென்று சங்கர் இன்னமும் உயரமாக காட்சி தந்தார் .


பெங்களூர் , மதுரை , கும்பகோணம் என்று கூட்டம் கூட்டமாய் பயணித்து கச்சேரி கேட்போம் அதற்கான முன்னெடுப்புக்கள் அனைத்தும் சங்கர் அனு இணையரே எடுப்பர் , சங்கர் ஒரு குழந்தை மாதிரி அவரைப் போல் ஒரு இளகின மனது உள்ளவரை நான் கண்டதில்லை , சுபபந்துவராளி யானுலும் , காம்போதியானாலும் , ஒருமையுடன் விருத்தமானாலும் , சங்கர் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கும் , பாயும் ஒளி கேட்டால் அத்தனை பரவசம் , நின்னேயே ரதியென்று கேட்டால் மகிழ்ச்சி கண்ணீர் இரண்டும் , தோடி , சங்கராபரணம் ஆலாபனை என்றால் ஒரு பார்வை பார்பார் எங்களை , அதற்கான பொருள் நெருங்கியோருக்கே தெரியும் , ஒரு கச்சேரி விடாமல் தலைவர் வரதர் நெய்வேலியார் என அனைவரையும் பாராட்டாமல் வந்ததே இல்லை , சீசனில் சஞ்சய் மட்டுமல்ல ஏறத்தாழ ஒரு 100 கச்சேரியாவது கேட்பார்கள் இருவரும் , அனு அக்காவிடம் பாடல் பட்டியல் டைரிகளே ஒரு 50ஆவது இருக்கும் , வளர்ந்து வரும் பாடகர்கள் அத்தனை பேரையும் கேட்டு அவர்களை ஊக்குவிப்பதில் சங்கர் அனு இணையர் பணி அதி அற்புதம் ,2019 சனவரி 1 புத்தாண்டு கச்சேரி தொடர்ந்து கிருஷ்ணன் சார் ஏற்பாட்டில் , மயிலாப்பூர் கிளப்பில் மதிய உணவு விருந்தோடு கேக் வெட்டி பாட்டு பாடி அன்றைய நாளை பித்தர்கள் அனைவரும் சந்தோஷமாய் செலவழித்த கணங்கள் , 2019இல் கிறிஸ்மஸ் அன்று ஒரு நாள் முழுதும் சங்கர் அனுவுடன் , ஜெயந்த் கச்சேரி பின் பட்டப்பாவில் விருந்து பின் கிருஷ்ண கான சபையில் தலைவர் கச்சேரி என்று மிக அருமையாக சென்றது இன்றும் நினைவில் உள்ளது ,அன்று என் பார்த்தசாரிதி சபை பெஹாக் ராகம் தானம் பல்லவிக்கான விவரிப்பை படித்துவிட்டு கண்ணீர் விட்டார் சங்கர் , நான் விவரிப்பில் கற்பனையாய் எழுதிய நிலையைக்காட்டிலும் பால்ய காலத்தில் வறுமையை அனுபவித்துள்ளார் , ஆனால் வசதி வந்ததால் அதை என்றும் மறந்ததில்லை , பகட்டை அவரிடம் பார்க்கவே இயலாது , எப்போதும் அவரின் டூவிலரில் தான் கச்சேரிக்கு பயணம் , என் அழைப்பை ஏற்று என் புதுமனை புகுவிழாவிற்கு அம்பத்தூருக்கு காலையிலேயே தம்பதியாக வந்து ஆசிர்வதித்தோடில்லாமல் என் தாய் தந்தையருடனும் பேசிவிட்டு சென்றார்கள் .

கடவுள் யாருக்கும் மகிழ்ச்சியை தொடந்து தருவதில்லை , ஏன் உலகிற்கே ஒரு சோதனை வைத்தார் கொரோனா மூலம் அப்போது கூட தன்னால் இயன்றோருகக்கு உதவி செய்துள்ளனர் , வாழ்வாதாரம் பாதித்த கலைஞர்களுக்கு உதவி செய்தார் , கண்ணுக்கே தெரியாத எங்கோ இருப்போருக்கும் உதுவி செய்தார் சங்கர் அனு , 2020இல் கச்சேரி கானல் நீரானது ,2020இல் ஆன்லைன் கச்சேரி சங்கர் அனு வீட்டில் சென்று கச்சேரி கேட்கிறோம் பேர்வழி என்று நன்றாக அறுசுவை உண்டு மகிழ்ந்தோம் கோவிட் கட்டுப்பாடுகள் 2021இலும் அது தொடர ஒன்றிரண்டு கச்சேரிகள் அரங்கேறியது அதில் ஒன்று வாணி மஹால் தலைவர் இசையோடு சங்கீதாவில் எங்கள் ட்ரீட் என்று சங்கர் அனு அழைக்க கூட்டம் அங்கு அலைமோத 11 மணிவரை சாப்பிட்டுவிட்டு அரட்டையடித்த நாளை என்று மறக்க இயலாது , இங்க பலூடா ரொம்ப நல்லாயிருக்கும் ப்ளீஸ் சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தி சங்கர் அளித்த விதம் அன்பின் உச்சம் , 2016 வாக்கில் திநகர் சரவணபவன் ராஜஸ்தானி உணவகத்திலும் ஒருமுறை இந்த அன்பு உபசரிப்பை அளித்தார் சங்கர் , சாப்பிட வைப்பதில் சங்கர் தாய்க்கு நிகரானவர் , தாயன்பில் கூட தன் குழைந்தையென ஒரு சுயநலம் இருக்கும் ஆனால் சங்கர் அனு உபசரிப்பில் அன்பு மட்டுமே விஞ்சி நிற்கும் , ம்யூசிக் அகடமியில் அன்று மாலைக்கான கச்சேரி டிக்கெட் பெற்ற மகிழ்வோடு காலை சிற்றுண்டிகள் சரிவர சப்ளை செய்யவில்லை என்று முரளி அவர்களிடமே சங்கர் முறையிட்ட தருணங்கள் , என்.ஆர்.ஐ ஒருவர் மே ஐ கெட் ஏ எக்ஸ்டிரா டிக்கெட் ஐ டோண்ட மைண்ட் பெயிங் மோர் மணி என்று அகந்தை காட்ட அவரை சங்கர் லெப்ட் ரைட் வாங்கிய தருணங்கள் , நாரதகான சபை உட்லாண்டில் உபசரிப்புகள் , பார்த்தசாரதியில் ஓ ரங்க சாயிக்கு உருகிய சங்கர் நாட்கள் , நாரத கான சபையில் முன்வரிசையில் கிடைத்த சீட்டில் அமர்ந்து கொண்டு அவரும் நானும் பிற சஞ்சய் பித்தர்கள் வெறுப்பேற்றிய கணங்கள் , இந்த அனு இருக்காளே அநியாயத்துக்கு அடுத்தவங்களுக்கு நல்லது செஞ்சு வாங்கி கட்டிப்பா என்ற சங்கரின் அக்கறையான புலம்பல்கள் , 6 மணி கச்சேரிக்கு பெங்களூர் கயன சமாஜத்தில் 4மணிக்கு சென்று ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சி அளித்த நாட்கள் , இப்படியே இன்ப நிகழ்வுகளை மட்டும் நினைத்துக்கொண்டு இருந்துவிடலாம் என்றே தோன்றுகிறது .


இந்த வரி வரை எதற்காக இதை எழுதுகிறோனோ அதை பற்றி யோசிக்கக்கூட மனம் பதறுகிறது , சங்கரை சனவரி 1 2022இல் தலைவர் கச்சேரியில் கடைசியாய் கண்டேன் , ஸ்ரீதேவியின் ரவா லட்டை அத்தனை ஆர்வமாய் ரசித்து உண்டார் , அதற்குப்பின் அலுவலக வெளிநாடு பயணம் என்று சற்று பிஸியாசிவிட மார்ச்சில் துவங்கியது சோதனை காலம் , ஏழு மாத காலம் காலனோடு போராடி நம்மையெல்லாம் ஏமாற்றி விட்டு தான் பெரிதும் வணங்கும் பெருமாளின் புரட்டாசி சனியன்று வான் உலகம் சென்றுவிட்டார் சங்கர் , காலன் மார்ச்சில் வீசிய பாசக்கயிற்றை ஏழுமாத காலமாக ஒற்றையாளாக மறுபுறம் பிடித்து தன் ஊனை உருக்கி போராடி விதியிடம் தோற்று விட்டார் அனு அக்கா , அனுராதா கண்ணன் சங்கருக்கு மனைவி மாத்திரமல்ல அவரின் பிரிதொரு தாய் , ஏழு மாத காலம் மருத்துவமனை அமைவிடம் போரூருக்கும் இல்லாமான திநகரக்குமான போரட்டம் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது, உடலளவில் மனதளவில் நொறுங்கிவிட்டாலும் , முகத்தில் அதைக்காட்டாமல் கடைசி விநாடி வரை சங்கருக்கு ஆறுதலாய் , மருத்துவமனை சூழலால் ஏற்படும் சலிப்பை வெளிக்காட்டும் போது அதை ஏற்று அனுசரணையாய் நம்பிக்கை ஊட்டி , ஒரு தாரமாய் , தாயாய் , மருத்துவராய் , செவிலியராய் எத்தனை எத்தனை அவதாரம் எடுத்து போராடியுள்ளார் அனு அக்கா , நினைத்தாலே மலைப்பு , அத்தனையும் பழாச்சே என்று நினைக்கையில் மனம் வலிக்கிறது , நான் நாத்தீகன் அல்லன் , மாறாக இறை நம்பிக்கை உள்ளவன் , வருடா வருடம் சபரிமலை செல்பவன் , புரட்டாசி விரதம் மேற்கொள்பவன் , பல மாதங்களாய் தொடர்ந்து அண்ணாமலை கிரிவலம் சென்றவன் , எங்கள் சித்தூர் கங்கம்மாவிற்கு வருடா வருடம் கூழ் வார்பவன், தீவிர சாய்பாபா பக்தன் , நாள் தோறும் சத்சரித்திரம் படிப்பவன் , ஆனால் கடவுளர்களிடம் எனக்கு ஒரே ஒரு கேள்வி உண்டு , தன் வாழ்நாளில் ஒரு புல் பூண்டு , எறும்பு , துரும்பிற்கும் கேடு நினைக்காத மனிதர் , கர்நாடக சங்கீதம் அல்லது ஆலயம் செல்லுதல் இந்த இரண்டிற்கும் நடுவே பிறருக்கு உதவுதல் என்பதை தவிர சங்கர் என்ன செய்துவிட்டார் ஆண்டவர்களே ? நான்கு முறை 106 திவ்ய தேசம் சென்றவர் , பாடல் பெற்ற சிவஸ்தலம் அனைத்தும் சென்றவர் , கைலாஷ் யாத்திரை முடித்தவர் , தேசபக்தி அருகி வரும் இந்நாட்களில் அதற்காக எங்கெங்கோ இருப்பவர்களை ஒன்றிணைத்து ஒரு அருமையான தேசபத்தி பாடல் படைத்தவர் , தன் வாழ்நாளில் நெறி தவறாது வாழ்வை வாழ்ந்தவர் , உலகில் அவர் செல்லாத நாடில்லை ஆனால் தான் கொண்ட ஆச்சாரத்திலிருந்து ஒரு நூலிழை கூட பிறழாதவர் , அவருக்கு எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் , இத்தனை நல் உள்ளங்களின் பிரார்தனைகள் , நம்பிக்கைகள் அத்தனையும் மறுத்தளித்து அவரை கொண்டு சென்றுவிட்டீர்கள் , இதன் மூலம் ஒரு நாணயமான , நேர்மையான , பக்திசிரத்தையாக வாழ்ந்த ஒரு வாழ்வியலுக்கு இது தான் உங்கள் வினையாடலா , கடவுளே பதில் கூறுங்கள் ? இந்த பூமிபந்தில் மாந்தர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்வதர்கான ஆதார வழிமுறைகளை கடைபிடித்த ஒரு மிக உன்னத மாண்பு நேயம் மிக்க ஒருவருக்கு இந்த முடிவு சரிதான சொல்லுங்கள் , தங்கள் இல்லற வாழ்வில் அடுத்தவருக்கு அன்பு காட்டல் , உதவுதல் என்பதை தவிர வேறு ஏதும் தெரியாத அந்த தம்பதியில் ஒருவர் இன்று தன் கணவனை தொலைத்து நிற்கிறார் அதற்கு பதில் என்ன பகவானே ? வழக்கம் போல் மௌனமாய் இருப்பாய் , இந்த பூ உலகில் சுபபந்துவராளி உள்ளவரை காம்போதி உள்ளவரை சங்கர் எங்களோடு இருப்பார் , அவர் எடுத்த புகைப்படங்களில் எங்கள் சங்கர் வாழ்கின்றார் , ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் எங்கள் சங்கர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அறியார் எங்கள் சங்கர் , கருணை நிதி நிறைந்தவர் எங்கள் சங்கர் ,இறைவா ஆனால் நீ நோயற்ற வாழ்வை அவருக்கு வழங்க மறுத்துவிட்டாய் , தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே எங்கள் சங்கர் சுப்ரமணியே நீ வாழி ! நீ வாழி ! நீ வாழி!


 
 
 

1 Comment


Ramesh Rangan
Ramesh Rangan
Oct 10, 2022

உள்ளத்தின் ஆதங்கத்தை நேர்த்தியாக வடித்த பதிவு. ஶ்ரீ ஸங்கர் ஸுப்ரமண்யம் இறைவனடி சேரப் பிரார்த்திக்கிறேன். 🙏

Like
Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page