கார்த்திக்கில் மிக்ஜாமுக்கு தேனாய் அருமருந்து , சல்லாப ஆபேரி , தலைவரின் சீரிய சீசன் துவக்கம் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 9, 2023
- 5 min read

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நாரத கான சபை , தலைவர் கச்சேரி , பெருமழை , இவையெல்லாம் நமக்கு புதிதில்லை , கடந்த காலங்களிலும் வெள்ளத்தில் மீண்ட உள்ளங்களுக்கு தலைவர் இசை வெள்ளம் தரும் களம் கார்த்திக் சபா , இந்த முறை ஆகப்பெரும் ஆறுதலாய் சபா காரியதரிசியின் அறிமுக உரை கடையில் சொல்லும் கவிதை இத்தியாதிகள் இல்லாத கச்சேரி , சமீபத்திய வழமையான பாடல் பட்டியல் அறிவுப்புடனான கச்சேரி , காம்போதி , ஆபேரி , ஹம்ஸநாதம் என பட்டியலை காண காண , கேட்க உள்ளம் உவகை கொள்ளவல்ல பாடல் தெரிவு , செறிவு நிறைந்த தலைவரின் நிரந்தர கூட்டணியான நெய்வேலியார் வரதருடன் வெங்கட்ரமணன் கஞ்சீரா ,தீவாகிப்போன பெரும்பாக்கதிலோ பெருங்குடியிலோ அல்லது வேளச்சேரியிலோ இருப்பார்கள் என்று நம்பி வுட்லாண்டிஸில் காலை வைக்க , தலையில் குட்டி ஆஜரானான் திருமலை தொடர்ந்து கோபாலகிருஷ்ணபாரதி , இம்சை அரசர்களோடு அளவளாவி விட்டு ,உப்பரிகைக்கு சென்றோம் , 500 ரூபாய் நுழைவுச்சீட்டுக்கான எந்த ஒரு வசதியிமின்றி ஙே என்று இருந்தது உப்பரிக்கை அதே உடைந்த நெகிழி இருக்கை , காரை பெயர்ந்த தரை . திரை விலகி தலைவர் தரிசனம் அனைத்தையும் மறக்கடிக்கச்செய்தது , ஆராவார கச்சேரி ஆறரைக்கு துவங்கிற்று , சஞ்சய் பித்தர் குழாமிற்கு டிசம்பர் திருவிழா துவக்கம் .
1) பச்சிமிரியம் ஆதியப்பாவின் மகோன்னதப் படைப்பாம் விரிபோனி வர்ணம் பைரவி ராகம் , சஞ்சய் யாகத்தில் முதலாவதாக துவங்கிற்று , பைரவியின் கம்பீரத்தோடு நம் ராஜகம்பீரர் அருமையாக வர்ணத்தை அரங்குக்களித்தார் , சரசூடு என்று தலைவர் அனுபல்லவியில் வரதரோடு அளவளாவினார் , வரதர் நெய்வேலியார் இணையர் அருமையாக பின்தொடர்ந்தனர் தலைவரை , தொடர்ந்து முக்தாய்ஸ்வரம் கம்பீரத்தை தொடர்ந்தது , இவர்கள் மூவரின் கணக்குகள் நம்மை எப்போதும் போல் பிரம்மிப்பில் ஆழ்த்தியது.சிறுநவ்வு மோமுனவில் தலைவர் அரங்கையே கட்டிப்போட்டார் , தொடர்ந்து ஸ்வரம் என்னும் வேள்வி எதிர்பார்த்தாற்போல் தீப்பொறி பறந்தது , இசையாள்வதில் தலைவருக்கு இணை எவருண்டு. தொடர்ந்து சிட்டை ஸ்வரத்தில் அரங்கை எங்கோ கொண்டு சென்றார் தலைவர். எத்தனை மெனக்கெடல் இருந்தால் இத்தகு ஒரு பிரமாத வர்ணம் அர்ஙகேறும் அப்பப்பா என்னே உழைப்பு என்னே அர்ப்பணிப்பு என்று அசந்தோம்.அசராமல் தலைவர் அரங்கை சுழற்றினார் வர்ணம் மூலம்.
2) அடுத்த தலைவரின் பட்டியிலில் தவறாது இடம் பெறும் ஸ்வாதி திருநாளின் தேவ பாலய தந்தார் தலைவர் அசாவேரியில் , கண்ணனை பாடியதும் திருமலைக்கு அத்தனை கொண்டாட்டம் , தலைவரின் பாடலுக்கு ஏற்றார் போல் உடல்மொழி தந்தவாறு வாசித்தார் நெய்வேலியார் , அம்பராண திவஸா எனும் இர்ணாடம் சரணத்தை தலைவர் துள்ளலோடு பாட தலையாட்டியாரும் வரதரும் அரும்பெரும் பின்புலம் தந்தனர் , அந்த அம்புஜாரி குலதீபவில் பலே அருமை என்று கோபாலர் தொடை தட்டினான் திருமலை
3) பருவத்தில் முதல் ராக ஆலாபனை ஹம்ஸநாதம் , தலைவர் துவக்கியதும் அவை எங்கும் புருவங்கள் உயரே சென்றன , இத்தனை கோர்வையாய் இந்த ராகத்தை துவக்குவது சவாலான காரியம் என்பது ஆன்றோர் கருத்து. தலைவரின் ஹம்ஸநாதம் அவையில் பறந்து திரந்தது , எல்லைகள் அதற்கில்லை , அதன் வனப்பிற்க்கு தேடுகிறேன் சொல்லை . ஆலாபனையின் நிறைவு பகுதிக்கு முன் ஒரு சொக்கல் தந்தாரே அடடா கேட்டுக்கொண்டே இருக்கலாம் , வரதர் வாசிப்பு அதி அற்புதம் அருமையான மறுஒலிபரப்பு செய்து அதே சொக்கலை தன் வயனிலளித்தார். பண்டுரீதி கொலுவியவையராம தியாகராஜர் பாடல் , அந்த வியவைய்ய ராமாவில் தான் நம் உள்ளதை நெகிழ வைக்கிறார் தலைவர் என்றான் திருமலை , கிருஷ்ணனை பாடி ராமன பாடினால் அப்படித் தான் இருக்கும் என்று கர்ஜித்தார் கோபாலர். நாம் துண்ட விண்டி வாணிக்கு காத்திருந்து பரவசப்பட்டோம் , ரோமாஞ்சமனமே என்று தலைவர் பாட ரோமாஞ்சனத்தை அரங்கு உணர்ந்தது , இராம பக்தனை அந்த நயத்தோடு பாடுவது அத்தனை சுலபமல்லை , தியாகைய்யரே அரங்கில் அமர்ந்து பாடுவது போல் தலைவர் மெய்மறந்தார் , நம்மையும் மெய்மறக்கச்செய்தார் , ராமா நாமத்தில் சொல்லவா வேண்டும் , அரங்கமே ஆனந்தகண்ணீரில் மிதந்தது. இராமநாமத்தில் அதி அற்புதமான நிரவல் தந்தார் தலைவர் அடுத்த 4 நிமிடங்கள் அரங்கமே அயோத்தியாபட்டிணமானது.
4) அடுத்த விநாடி ஆச்சர்யம் தலைவர் பாடல் பட்டியலால் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது , ஆனால் அடுத்த விநாடி அதிர்ச்சி காத்திருந்தது நமக்கு , ஆம் தலைவர் காம்போதி ஆலாபனை துவக்கினார். சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் என்னும் மாமேத மகாவித்வானின் முத்திரை இராகங்களில் தலையான இராகம் காம்போதி , அதை பருவத்தின் முதல் கச்சேரியிலேயே இறக்கலாமா , ஏதோ அருமருந்து பாடிவிட்டு கடந்து செல்வார் என்று பார்த்தால் , நீண்ட ஆலாபனைக்கு தயாரானார் தலைவர் , திருமலை அப்போ ஓ ரங்க சாயி என்று வினவ கோபாலர் அடேய் நானே திருவடி சரணம் போச்சே என்று இருக்கிறேன் என கூவினார் , நம்க்கு ராஸ விலாச , ஸ்ரீ சுப்ரமணியாய உள்ளிட்ட பிரம்மாண்டங்கள் இனி பருவத்தில் இல்லையா என்று ஒரு பக்கம் ஏங்கினாலும் , தலைவரின் காம்போதியில் வசமிழந்தோம் , இது தலைவரின் வழமையான ராஜகம்பீர காம்போதியல்ல , இனிமை தவழும் காம்போதி , கனிவு தோய்த காம்போதி கற்பனைக்கு எட்டாத கவின் காம்போதி ஆலாபனை தந்தார் தலைவர், இராகத்தில் நாதஸ்வர பிடிகளுக்கும் , கோர்வைகளுக்கும் பஞ்சமில்லை , இந்த இராகத்தை வளைத்து பிரட்டி அதில் நுழைந்து அதை சுழற்றி என என்னென்ன உண்டோ அத்துனையும் செய்தார் தலைவர், மெல்ல மெல்ல இராகத்தின் விஸ்தீரத்தில் தலைவரின் காம்போதி வெளிவந்தது அந்த ஊலாக்கள் நம்மை உற்சாக புரிக்கு இட்டுசெச்ன்றது , அதரலல்லோக்களை போட்டு படு அமர்களமான காம்போதி முடித்தார் தலைவர் , வரதரின் அற்புத பின்தொடரல் மிக நேர்த்தியாய் நிகழ்ந்தேறியது. பருவத்தின் முதல் தமிழ்பா தனியே வருமா , விருத்த்தோடு வரமாய் வந்தது , மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே! என்று கோயில் திருப்பதிகத்தை தலைவர் , உணர்ச்சி பெருங்கடலின் ஊற்றாய் பாடி அப்படியே முத்துத்தாண்டவரின் அருமருந்தொரு தனி மருந்து அம்பலத்தே கண்டேன் பாடினார் , ரூபக தாளத்தில் நெய்வேலியார் அருமையான பின்புலம் தர தலைவர் , உற்சாகமாய் பாடினார் , திரு மருந்துடன் பாடும் மருந்து தில்லை அம்பலத்தாடும் மருந்து !
இரு வினைகள் அறுக்கு மருந்து ஏழை அடியார்க்கிரங்கும் மருந்து , என்று தலைவர் மருந்தை அமுதாய் தந்தார் அவைக்கு , கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து வரிகளில் நிரவல் அமைத்தார் தலைவர் , அருமையாய் அமைந்தது கொன்றை தும்பை நிரவல் மருந்தது தொடர்ந்து ஸ்வரம் துவங்கிற்று , என்னே நேர்த்தி , தலைவரோடு நெய்வேலியார் வரதர் என இந்த மூவர் கானத்தை வேறு தளத்திற்கு எடுத்துச்செல்லும் மாயம் ஒரு ஒரு முறையும் நமக்கு கிட்டிய பெரும்பேறு , ஸ்பதஸ்வரம் முடித்து அருமையாக கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து
மன்றுளே நின்றாடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து என்று தலைவர் முடிக்க அரங்கே அதிர்ந்தது கரவொலியில்.
5) ஆஹிரியில் அடுத்து மாயம்மா எனி என்று தலைவர் பாட என்ன இன்று எல்லாம் எம்.எஸ் பிரபலபாடலாக இருக்கிறதே என்றார் கோபாலர் , சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாம ஸாஸ்திரி பாடல் , அம்பாளை போற்றி பாடும் பாடலில் தலைவர் உருக்கத்தின் உச்சிக்கு இட்டுச்சென்றார் , மும்மூர்த்திகள் போற்றும் தாயை தலைவர் பாடிய பாங்கு கண்களில் கண்ணீரை கொணர்ந்தது , காருண்யத்தின் உச்சமாய் பாடல் அரங்கிற்கு வழங்கப்பட்டது. அந்த திக்கெவரம்மாவில் தான் எத்தனை பொருள் பொதிந்துள்ளது.
6) தலைவரின் பெரும்துள்ளல் இராகங்களில் ஒன்றான ஆபேரி , ராகம் தானம் பல்லவி அடுத்த , சும்மாவே இந்த இராகத்தில் இறக்கை விரிப்பார் , அதிலும் ராதாப என்றால் சொல்லவும் வேண்டுமோ , தேவலோக சஞ்சாரத்திற் அரங்கை அழைத்தார் தலைவர் , அவர் புஷ்பக விமானம் அரங்கு முன் வர ஒருவர் பின் ஒருவராய் ஏறினோம் , புற்பட்டது விமானம் , இந்த புயல் மழையெல்லாம் அதற்கு ஒரு பொருட்டல்ல , தலைவரின் கார்வை கோர்வு ப்ருஹாக்களை எரிபொருளாய் கொண்டு பறந்தது புஷ்பகம் , ஆசை தீர ஆபேரியில் அனைவரும் நனைந்தோம் , மகிழ்ந்தோம் , உவகை கொண்டோம். மெல்ல விமானத்தை ரோலோ கோஸ்டராக்கி நம்மை உற்சாகபுரியில் உலாவச்செய்தார் , இராகத்தின் கடையில் நோட்டுக்கள் வந்து விழுந்தது , வரதரை வம்பிழுக்கும் குறும்பை வெளிப்படுத்தினார் தலைவர். ஹூம் இதெல்லாம் எத்தனை பார்த்திருக்கேன் என்று வரதர் வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு வாசித்தார் , தனது வயலின் ஆலபனையில் அதை வாசித்துக்காட்டி வனப்பை கூட்டினார்.மெல்ல துவங்கிற்று தானம் , ஆம் இந்த தானம் மிகவும் மென்மையான தானம் , தலைவர் நளினத்தை நனைத்துத் தந்தார் தானத்தை , வரதர் தானும் தன் பங்கிற்கு நளினம் கலக்க ஆபேரி தானம் ஆரவாரம் குறைத்து , நெளிவு நிறைந்து காணப்பட்டது , மெல்ல மெல்ல வேகமெடுத்தாலும் இனிமை குறையவில்லை , இந்த இணையருக்கு ஈடு இணையே இல்லை , பல்லவியில் அம்பா மனம் கனிந்து கடைக்கண் பாராய் திருவருள் தரும் ஜெகதம்பா பாடினார். சிவகவி படத்தில் தியாகராஜர் பாடல் வரி இது , தலைவர் பல்லவியை பாங்காய் தந்து பக்தியை கூட்டினார் , ஸ்வரத்தை துரிதமாய் துவக்கி பல்லவியின் அடுத்த பரிமாணத்தை காட்டினார் , இராகமாலிகை ஸ்வரங்களுக்கு காத்திருந்த நமக்கு முதலில் கன்னடா , அடடா என்னே ஒரு குழைவு என்னே ஒரு இனிமை , கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த இராகத்தை , முதன்முதலில் கயனசமாஜத்தில் 2015ஆம் ஆண்டு கீதி சக்ரா கேட்டேன் இந்த இராகத்தில் தலைவர் குரலில் அன்று முதல் இந்த இராகத்தின் அடிமை நான் , அடுத்து துர்கா , ஏற்கனவே கரைந்திருந்த அவையை மேலும் கரைத்தார் தலைவர் , அப்பப்பா அந்த உணர்வை என்ன சொல்லி எழுதுவது , கன்னடத்திலிருந்து கலிங்கத்திற்கு கொண்டு சென்றார் நம்மை துர்கா இராகம் சஞ்சய்காகவே உருவாக்கப்பட்டது போல் பாடினார் , கராணா இசை நாரக சபையில் வியாபித்தது , அடுத்து கேட்டது புதுமையாய் இருந்தது கண்டிப்பாக இந்த இராகத்தோட் பேரு வரும் என்று எதிர்பார்தோம் , அதே போல் இது சல்லாபம் என்றார் , சல்லாபம் ஒரு மிகப்பெரிய குன்றின் மேலேற்றிய தீபம் போல் பிரகாசித்தது , தலையாட்டி சித்தர் வாசிப்பு படுபிரமாதம் , தலைவருக்கு ஈடு தருவது சாதரண காரியமில்லை என்பது இவர் வாசிக்கும்போது நாம் உணரலாம்.தொடர்ந்து நெய்வேலியார் வெங்கட்ரமணன் இணையரின் தனி , கிடைத்த பத்து நமிடத்தில் தீப்பொறி பறந்தது , வாசிப்பின் வெளிப்பாட்டில் மூன்று முக்கிய கூறுகள் உண்டு , ஈர்ப்பு , தெளிவு , தாளலயக்கணக்கு , இந்த கண்க்கெல்லாம் நமக்கு தெரியாது , என்றாலும் நம்மை அந்த தனியில் ஈடுபடச்செய்யும் பாங்கில் , நெய்வேலி வெங்கடேஷ் எப்போதும் ஒரு மகா யோகியாக திகழ்கிறார். மொத்தத்தில் இராகம் தானம் பல்லவி ஆபே சீசனுக்கு மிகப்பெரும் துவக்கம் தந்தது.
7) புரந்தரதாஸரின் ஹரிசித அடுத்து ஜோன்புரியில் தந்தார் தலைவர் , முருகனை பஜி மனமேவை கன்னடத்தில் கேட்பது போல் இருந்தது , புரந்தரின் புலமைக்கு ஏது இணை , அதே போல் தலைவரின் குரலில் இருக்கும் காந்தம் இதில் நம்மை முழுதாய் ஈர்த்தது , திருவாளர் கோவிந்த ராவ் மெட்டமைத்த ஹரிசித்தம் நம் சித்தத்திற்கு மாமருந்தாய் அமைந்தது.
8) சனவரி 1 அல்லது பார்த்தசாரதி சபாவில் தலைவரின் வழமையான பாடல் இந்த காணி நிலம் வேண்டும் , பாரதியின் மகோன்னத படைப்பில் ஒன்று , ஒரு சில பாடல்களை 2022க்குப்பின் நாம் கேட்க தவிர்க்க முனைகிறோம் அதில் ஒன்று இப்பாடல் , சீசன் முழுதும் கச்சேரிகளை கேட்டு விட்டு , சிசனில் கடையில் பாடும் கச்சேரியில் இதில் இடம்பெறும் , அதில் தலைவர் என் பாட்டின் திரத்தாலே என்று பாடும் முன்பு , எங்கள் அனைவரையும் சங்கர் உஷார் படுத்துவார் , அந்த வரி பாடும் போது பித்தர் குழாம் அனைவரும் கைத்தட்டுவோம் , அரங்கமே எங்களை பின்தொடரும் அந்த நாட்கள் கண் முன் வர , இதயம் கனத்தது , தலைவர் பாட பாட பாடலில் நம்மையும் அறியாமல் நுழைந்தோம்.
9) பட்டியலில் இல்லாத பாடலாக திருப்புகழ் அருணகிரிநாதரின் சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ ஹரிகாம்போதியில் துவக்கி இன்ப அதிர்ச்சி தந்தார் , இன்பம் 2 நிமிடம் கூட நிடிக்கவில்லை அப்படியே பவமான பாடி கச்சேரியை நிறைவு செய்தார் தலைவர்.
பிரம்ம சபை கச்சேரி பிற்பகுதிக்குச் செல்ல தமிழும் நானும் ஆறில் மூழ்கித்திளைக்க தயாரானோம் , சைவ வைணவ சிகாமணிகள் பாடல் பட்டியலுக்கு காத்திருக்க , பாவேந்தர் உள்ளிட்ட பாவலர்களும் காத்திருந்தனர் கானாதி ராஜனின் ஞாயிறு கச்சேரிக்கு.
Komen