top of page
Search

கானநாயகனின் முழுமதி கச்சேரி கண்டே கண்டே !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 21, 2023
  • 5 min read

ree

புகைப்படம் உபயம் புகைப்பட யோகி ராஜப்பன்னா ராஜூ


ஒரு வருடத்தில் என்னென்னவோ மாற்றங்கள் நாம் கண்டுள்ளோம் , அப்படி ஒரு மாமாற்றம் எத்திராஜீல் கண்டோம் , அரங்கத்தையே புணரமைத்துள்ளார்கள் அமர்க்களமாய் , குளிர்சாதன வசதி , தூண்களுக்கெல்லாம் மேற்பறப்பில் பளிங்கு என்று அருமையாக மறுவடிவாக்கி இருந்தார்கள் , மகிழ்வுடன் சென்று உட்கார்ந்தால் ஒலி அமைப்பு மாத்திரம் அப்படியே தான் இருக்கிறது , அகஸ்டிக்ஸ் என்பார்களே அது கிலோ என்ன விலை என கேட்கும் அளவில் இருந்தது , தலைவர் நெய்வேலியார் வரது கேவிஜி ராகுல் மேடையில் அமர்ந்தபோதும் , திருமண மண்டபம் என்பதாலோ என்னவோ நசநசவென அனைவரும் பேசியபடி இருந்தனர் ,நல்ல கூட்டம் வழமையான சஞ்சய் ரஸிகர் அல்லாமல் பிறரையும் காண முடிந்தது , இந்த மண்டபம் பொலிவு பெறுவதை்காட்டிலும் ஆச்சர்யம் தலைவர் ராகம் தானம் பல்லவி இல்லாமல் சீசனில் ஒரு கச்சேரி செய்வது , ஆமாம் என்றவாறு கேண்டினிலிருந்து வந்தமர்ந்தனர் திருமலை கோபாலர். சரியாக 7.03க்கு துவங்கிற்று இந்திய நுண்கலை சமூகத்தார் சபாவின் தலைவர் கச்சேரி .


  1. முத்துசாமி தீட்சிதரின் நவகிரக கிருதி புதமாஷ்ரயாமியுடன் துவக்கினார் கச்சேரியை , நாட்டுக்குறிச்சி ராகம் , சந்திரை தாரையின் புத்திரனாம் புதனை தலைவர் பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதனில் பாடினார் , வார்த்தைகள் மிகவும் சிரமமாக இருந்தது அரங்கின் ஒலியமைப்பால் , இப்படியே 2.30மணி நேர கச்சேரியா என்று பயந்தே போனோம் , மிருதங்கம் கஞ்சீரா ஒலி எதிரொலி போல் கேட்டது , வயலின் கூட கிணற்றிலிருந்து கேட்பது போல் இருந்தது , நுண்கலை கழகத்தார் பல ஆண்டுகளாக கச்சேரி நடத்துபவர்கள் தயவு கூர்ந்து இ்வ்விடத்தை அவர்கள் மாற்ற வேண்டும் என்றார் கோபாலர் , தலைவர் இதற்குள் அனுபல்லவியை முடித்திருந்தார் , நாட்டுக்குறிச்சியின் சாரம் மட்டும் தலைவரிடமிருந்து புறப்பட்டு அரங்கிற்குள் ஊடுருவியது , தலைவர் ஸ்வரம் துவக்கினார் புதமாவில் , பாடல் வரிகளுக்கு ஸ்வரம் தேவலாம் என்பது போல் உணர்ந்தோம் , எப்பேர்பட்ட கலைஞன் அவரை இப்படி அகஸ்டிக்ஸே இல்லாத இடத்தில் போட்டு இப்படி பாடுபடுத்திகிறார்களே என மனம் கொதித்தது , தலைவர் ஸ்வரமெனும் மாயக்குதிரையை எதையும் யோசிக்காமல் செலுத்தினார் , நெய்வேலியாரும் பிரமாதமாய் வாசித்து வளம் கூட்டினார் பாடலுக்கு, வரதர் அருமையாக நாட்டுகுறிச்சியில் தன் திறமையை நிலைநாட்டினார்.

  2. அடுத்து சஞ்சய் சாவேரியி முருகா முழுமதி பாபநாசம் சிவன் பாடல் , ஒருகால் சரவணபவா என்றோதும் மெய்அன்பரை ஆள வலிய வரும் வேல் என்று அனுபல்லவியில் தலைவர் சாவேரியை கரைத்தளித்தார் , அரங்கு கரைந்தே போனது , உன் பெருமை புகலும் தரமோ ஹரன்உமை பாலா பரம தயாளா குறமின் கலந்த குமரா குஹா தீன சரண்யா சுப்ரமண்யா வேல் சரணத்தில் பரம தயாளவில் தலைவர் பரம தயாளாய் பாடினார் , இங்கே பாட மிகுந்த தயை மனம் வேண்டும் என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினான் திருமலை , சுப்ரமணியன் சுப்ரமணியரை பாடும் அழகே அழகு என்று மகிழ்ந்தார் கோபாலர்.

  3. ஆலாபனை கன்னடா , தேவலோகத்திற்கு நேரடி ஊர்த்தி இந்த கன்னடா , கரையடா என் ஆலாபனையில் என்று தலைவர் கன்னட ஆலாபனையில் அரங்கை அமிழ்த்தினார் , சூழல் எத்தகையதாக இருந்தாலும் தன் மேதைமையால் அதை மாற்றி அமைக்கும் தீரர் தலைவர் , அந்த திருமண மண்டபத்தை கணப்பொழுதில் அடர் கானகமாக்கி நிலா ஓளியில் குன்றின் உச்சிக்கு அழைத்து சென்றார் கன்னடாவில் , வரதர் வயலின் கானக வாசத்தை தொடர்ந்தது , வரது வயலின் என்றாலேயே இனிமை தான் அதிலும் கன்னடாவெல்லாம் கிட்டினார் விடுவாரா மனிதர் , பிரமாதப்படுத்தினார் , கண்டே கண்டே என்ற புரந்தரதாஸர் பாடலை பாடினார் , கண்டே கண்டே ஸ்வாமியே என்று தலைவர் பாட அருகிலிருந்து சுவாமிநாதனுக்கு வாயெல்லாம் பல் , புர்நதரதாஸர் திருமலை சென்று வெங்கடாசலபதியை கண்டு பாடும் பாடல் , இப்போதிருந்திருந்தால் 2 மாதத்திற்கு முன் 25ஆம் தேதி தேவுட காத்து ஆன்லைனில் 300 ரூபாய் டிக்கெட் எடுப்பதற்குள் நுரை தள்ளியிருக்கும் புரந்தரருக்கு , கண்டே கண்டே ஆன்லைனில் அவைலபிலிடி கண்டே என்று பாடியிருப்பார் என்றார் கோபாலர் , திருமலை கண்கள் சிவந்தன , தலைவரின் கண்டே கண்டேயில் அரங்ககு திருமலையைக்கண்டது.கண்டேவில் ஸ்வரம் செய்தார் தலைவர் , மிருதங்கத்தை விட கஞ்சீரா ஓங்கி ஓலித்தது .

  4. முகாரி ஆலாபனை அடுத்து , உருக்க ராகங்களை தேர்தெடுத்து உருக வைக்கிறார் இந்தப்பருவத்தில் தலைவர் , கருணை உருக்கம் சோகம் என பல்வேறு உணர்வுகளை தூண்டியது முகாரி , முகாரி ஏக்கமா சோகமா அல்லது உள்ளத்தயக்கமா என சொல்லத்தெரியாத நிலையில் நம் மனதை கவ்வும் இராகம் , இராகத்தை தலைவர் கொண்ட சென்ற அழகில் பல மாமிகளுக்கு கண்கள் கசிந்தன , ஒலியமைப்பு ஓழுங்காய் இருந்திருந்தால் இன்னும் அருமையாக அமைந்திருக்கும் , தலைவர் என்ன நினைத்தாரோ , வயலின் ஆலாபனைக்கு விடாமல் , எந்தனி நேவர்நிந்து சபரி என்று பாடலை துவக்கிவிட்டார் , தன்யனானேன் என்று மகிழ்ந்தார் வரதர், தியாகையர் சபரியை கண்டு பொறாமையுடன் பாடும் பாடல் இது என்றார் கோபாலர் , அவரை பொசுக்குவது போல் பார்த்தான் திருமலை , தாந்துல வரகாந்துலு ஜெகமந்தா வரிகளில் உணர்ச்சி பெருங்கடலில் முக்கி எடுத்தார் அரங்கை , எதிர்பார்த்தவாறு சரணம் பாடி கணுலார சேவிஞ்சுவில் நிரவல் அமைத்தார் , மிகப்பிரமாதமான நிரவாலக அமைந்தது , சற்றுமுன் சோகம் ததும்பிய முகாரியில் தலைவர் அசுரவேகத்தில் நிரவல் தந்தார் , அவருக்கு வாசிப்பது பெரும் சவாலாக அமைந்தது நெய்வேலியார் , வரதர் , கேவிஜி இணையருக்கு.கணுலாராவை காதார கேட்டு மனதார மகிழ்ந்தது அவை .

  5. சரஸ்வதி மனோகரி ஆலாபனைக்கு காத்திருந்த அவைக்கு மேலே தொங்கிய பல்புகளை காட்டிவிட்டு தலைவர் மாமவஜெகதீஸ்வர என்று ஸ்வாதி மாமன்னர் பாடலை பாடினார், உட்சபட்ச வேகத்தில் பறந்தது சரஸ்வதி மனோகரி , அரங்கின் சொதப்பலால் வார்த்தைகள் பிடிபடவில்லை , ஸ்வரம் எப்போது துவக்கினார் என்று தெரியாத நிலையில் ஸ்வரத்தாக்குதலுக்கு உள்ளாகி மகிழ்ந்தோம் , நாரத முக முனிகயசரிதா சரணத்தை பாடிட , நெய்வேலியார் பிரமாதமாய் உதட்டை கடித்தவாறு வாசித்தார் , ஜெட் வேகத்தில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் முடிந்தது மாமவஜெகதீஸ்வரா .

  6. ஆலாபனை ரிஷபப்பிரியா ,சாருகேசியின் உறவின்ர் இந்த ரிஷபப்பிரியா , மீண்டும் ஒரு மேளகர்த்தா ராகத்தை தலைவர் பிரதான ராகமாய் எடுத்து விஸ்தாரமாக்கினார் , ராக ஆலாபனையில் ஒரு நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ராகங்களை தலைவர் கையாளும் விதமே அலாதி , ராகத்தின் மெல்லிசைக் கட்டமைப்பின் ஊடே சென்று வழங்கும் பாங்கு என்றும் ஆச்சர்யத்தை தருகிறது ஒரு தியான நிலைக்கு அவையை கொண்டு சென்றார் தலைவர் , தன் வழமையான சொற்றொடர்களை தலைவர் மேலே மேலே கொண்டு சென்றார் ,ரிஷபப்பிரியாவின் ராகத்தின் நுணுக்கங்களையும் ஆராய்கிறார் , அந்த ஆராய்ச்சியைத்தான் நாம் ஆலாபனையாக கேட்கிறோம் ராகத்தின் மனநிலையையும் சாரத்தையும் கட்டமைக்கப்பட்ட கலவையை அரங்கிற்கு தலைவர் போல் வழங்க யாருளர் , ரிஷபம் தலைவர் சொல்லியதெல்லாம் கேட்டு தலையசைத்து தன் பிரம்மாண்ட உருவத்தில் அரங்கில் உலா வந்தது , அதற்கு முக்கணாங்கயிறு தலைவர் ஒருவரால் மட்டுமே இட முடியும் என்பது போல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் தலைவர் , தொடர்ந்து இதோ என் முக்கணாங்ககயிறு என்று வயலின் சுழற்றினார் வரதர் , மிக மிக உருக்கமான , ஆழ்நிலை தியான உணர்வைத்தரவல்ல ஒரு ஆலாபனையைத் தந்தார் அவைக்கு , கோடீஸ்வர அய்யரின் கானநாயகா தேசிகா பாடினார் தலைவர் , கான ரஸிக வில் தான் எத்தனை நளினம் , சிகாமணி நியே என்று கேட்டோம் பாடலை , கனிநய சொல்பொருள் கான கம்பீரம் இனிய சுருதியோடு இயை லயதீர என்னும் அனுபல்லவி தலைவர் கனிநயமாய் சொற்பொருளை உணர்ந்த கான கம்பீரத்தோடு சுருதியோடு இயையும் லயத்தோடு பாட நெய்வேலியார் அதை அப்படியே வாசித்தருள அரங்கே தலைவரின் மாபெரும் இசையில் மயங்கியது , ஷட்ஜ ரிஷப பிரிய காந்தார மத்யம பஞ்சம பஞ்சம தைவத நிசாத வித என தலைவர் சரணத்தை ஸப்ரஸ்வரத்தில் பாட அரங்கில் அத்தனை அமைதி கவி குஞ்சர தாஸரின் மேதைமை நம்மை புளகாங்கிதம் கொள்ளச் செய்தது , நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர் அடுத்த எட்டு நிமிடங்கள் அரங்கமே புரடட்டிப்போடப்பட்டது தலைவர் பேரிசையில் அடுத்த சுற்றாக பாத பாத என்று பா வைப்பிடித்தார் தலைவர் , பப்பாத மப என்று பாவில் தலைவர் விளையாட நெய்வேலியார் கேவிஜி வரதர் அருமையானன ஒருங்கிணைப்பை தந்தனர் , அப்படியே ஸ்வரப்பிரஸ்தாரம் சென்று ரிஷப்பிரியாவை அதி அற்புதமாய் செய்தார் தலைவர் ,அடுத்து தனி , பருவத்தின் நான்காவது கஞ்சீரா தனி , கே.வி.கோபாலகிருஷ்ணன் பல ஆண்டுகளாக சீசனில் அதிகமாக கச்சேரி செய்பவர் , அவர் ஷெட்யூல் பார்தாலேயே நமக்கு மயக்கம் வரும் , அத்தனை கச்சேரிகளில் எப்படித்தான் வாசிப்பாரோ , நெய்வேலியார் அரங்கு எதுவாகினும் என் பணி தரமாய் தனி தருவதே என வாசித்தார் , இருவரும் தத்தம் சுற்றுகளில் சமர்த்தாய் வாசித்து பின் மெல்ல மெல்ல பதிலுரையில் பட்டையை கிளப்பினர் , வாசிப்பென்றால் அப்படி ஒரு வாசிப்பு , ஏறத்தாழ 17 நிமிடங்கள் தொடர்ந்தது இவர்களின் சம்பர்தாயங்கள் , அரங்கதிர தனி என்பார்களே உண்மையிலேயே இருவரும் நேற்று தந்தது அத்தகைய தனிதான். பலே பலே படு பிரமாதம்.

  7. புளிப்பு மிட்டாய் நேரம் பட்டியலில் இல்லாத பாடல் , திருமலை தித்திக்கும் பாடல் , மன்னுபுகழ் கவுசலை தன் மணி வயிறு வாய்த்தவனே , குலசேகர ஆழ்வார் பாடல் , ராமனை அணுஅணுவாய் ரஸித்து பாடப்பட்ட பாடல் துர்கா மாயமாளவ கௌளா சாரங்க இந்தோளம் என அனைத்து ராகங்களிலும் ராமரை ராகவரை பாடினார் தலைவர் நமக்கு என்றுமே மகிழும் நீலாம்பரி தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும் வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே பாடிட திருமலை போல் நாமும் மகிழ்ந்தோம்.காவிரி நல்நதி பாயும் கணபுரத்தென் கருமணியே ஏவரிவெண் சிலைவலவா ராகவனே தாலேலோ என்று தலைவர் அழகாய் இராமபிரானுக்கு தாலாட்டினார்.

  8. அடுத்து சிந்துபைரவி குருயுது நந்தன , இதை வேறு சபாவில் பாடினாலே வரிகள் புரியாது இங்கே கேட்கவும் வேண்டுமா அத்தனை வேகமாய் தலைவர் பாட பாட , நெய்வேலியார் நாதத்திற்கு தலையாட்டியது அவை , நிஜகாத சாநகு நந்தனாவில் தான் எத்தனை அழகாய் வைக்கிறார் சிந்துபைரவியை , என்ன வேகமெடுத்தாலும் பாடல் நம் உள்ளத்தை கசியவைக்க தவறவில்லை.12ஆம் நூற்றாண்டை சார்ந்த ஜெயதேவர் பாடல் இது , இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் தலைவர் போல் பல தலைமுறையாக இதை கொண்டு செல்வதே காரணம் என்றான் திருமலை.

  9. நிறைவுப்பாடலாக ஒருமையுடன் விருத்தம் துவக்கினார் தலைவர் , கேதாரகௌளை , சாவேரி , சிந்துபைரவி , ஹம்ஸாநந்தி என வள்ளலார் வரிகளை அருமையாக பாடினார் தலைவர் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும் என்று அன்றே பாடினார் வள்ளலார் , அந்தோ பரிதாபம் அவரையும் தங்களில் ஒருவர் என்று பிதற்றுகிறது மூடர் கூட்டம் , மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும் என்று ஹம்ஸநந்தியில் பாடிவிட்டு காப்பியில் தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே என்று பாட பாட மீண்டும் கண்கள் ஈரமாய் சங்கரை தேடியது , தொடர்ந்து காப்பியில் பாடலை பாடினார் தலைவர் , உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதார் உறவே தேடி அலையும் உலகில் இருக்கிறோம் என்பதை இன்றும் உணர்த்தும் பாடல்.

 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page