கொனியாடினவில் கோலோச்சிய சஞ்சய் மாண்டூஸ் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 12, 2022
- 5 min read

நாம் சபரிமலை சென்ற கேப்பில் திடீர் கச்சேரி ஸ்டுடியோவில் , கடந்த சனியன்று நடந்தேறியிருக்க சீசனின் மூன்றாவது கச்சேரி பிரம்ம சபையில் , கடந்த மாண்டூஸ் மாலையான வியாழன் அன்று . இம்முறை பாடற்களம் ரஸிகரஞ்சனி சபை , ஒரு புறம் மணிக்கு 140 கிமீ என்று வானிலை எச்சரிக்க , பிரம்ம சபை நிர்வாகத்தார் கச்சேரி உண்டு என்று அறுதியிட ,தலைவரின் இசைப்புயலில் சிக்குண்டு சித்தம் மகிழ இந்த வாயுப்புயலை எதிர்கொள்வோம் என்று தீர்மானித்து , பெரியபாளையத்திலிருந்து 45 கிமீ பயணத்தை தொடர்ந்தோம் வழியெங்கும் காற்று மழை , நல்ல வேளையாக ரஞ்சனி சபையை 5.45மணிக்கெல்லாம் அடைந்தோம் , கச்சேரி பல்வேறு சவால்களுக்கிடையே வந்திருந்த ரஸிகமணிகள் அனைவரையும் அதிலும் குறிப்பாக வயசாலிகளையும் வாயிலில் நிற்க வைத்து அழகு பார்த்தனர் சபாக்காரர்கள் , சபாஷ் என்று பாராட்டி விட்டு , உள்புகுந்தோம் , தலைவர் , வரதர் , நெய்வேலியார் இந்த 11 கச்சேரிக்கும் நிரந்திர கூட்டணி அமைத்துள்ளனர் , இதை விட பாக்கியம் என்ன வேண்டும் , மேடையில் மேதைகள் அமர்ந்திருக்க , ரேதஸ் தம்பூரா பட்டினார். அடாத மழையிலும் விடாது கருப்பு என வந்தமர்ந்தனர் ஆழ்வார்கடியானும் , கோபாலகிருஷ்ண பாரதியும் , பேஸ்மாஸ்க அணிந்து கொண்டு தும்மி , என்னவெல்லாம் தொல்லைகள் தர இயலுமா அது அனைத்தையும் தந்தான் ஆழ்வார்கடியான்.
1) சாவேரி வர்ணம் , கொத்தவாசல் வெங்கடராமர் உருப்படி , ஸரஸூட என்று தலைவர் சாவேலி எனும் காவேரியை மடை திறந்தார் , சாவேரி என்றாலே அவரின் தததரணணனா தததரணணனா என்று வரதரை வம்பிழுத்தது தான் நினைவுக்கு வருகிறது என்றார் கோபாலர் . ஸரஸூட நின்னே கோரி சாலா மருலு என்று வேங்கடவனை துதித்தார் சுப்ரமணி. முக்தாய் ஸ்வரம் முத்தாய் விழுந்தது , ஆலத்தூர் ராஜகணேஷ் மெல்ல தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு வாசிக்க , வாய்ப்பாட்டோடு பக்க உபபக்க வாத்தியங்கள் ஒருங்கிணைந்து உன்னதம் காட்டின. முக்தாய் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ஆனது . சரணம் தானிபை நேநருணா ஈவேலா இன்னும் வேகமெடுத்தது , தலைவர் சிட்டை ஸ்வரத்தில் அரங்கை சிலிர்த்திட செய்தார் , மாண்டூஸ் குளிர்விட்டுவிட்டது அவைக்கு , அந்த கடையில் ரிஸானிதபவில் ஒரு புன்னகை நெய்வேலியாரை பார்த்து , அவரும் ஆமோதித்து தலையாட்டியவாறு வாசித்தருளினார் அருமையான நாதத்தை.
2) சஞ்சய் மோஹனம் என்னும் வாகனத்தை எடுத்து நாளாயிற்று , ஆனால் எடுத்த எடுப்பிலேயே விண்ணை நோக்கி பாய்ந்தது , பவனுத்த நா ஹிருதயமு . ஆதி தாளம் தியாகராஜர் கிருதி , வேங்கடவனை தொடர்ந்து பதலிக தீரர் ஸ்ரீராமரை பாடினார் தலைவர். மெல்ல ஆழ்வார்கடியான் கர்வம் எட்டிப்பார்த்தது , வரதரும் நெய்வேலியாரும் மிக கோர்வையாக வாசிக்க தலைவர் , வழமையான துள்ளல் உடல் மொழியோடு பாடினார். அனுபல்லவி பவதாரகாவில் நம்மை அந்த தீரத்திற்கே கொண்டு சென்றார். வழமையான நகாசுகளை சரணத்தில் காட்டிவிட்டு , பவனுத்தவில் நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர். வரதர் தலைவரை பின்தொடர்ந்து வாசிப்பதே ஒரு தனியழகு. ஒரு கச்சேரியை தூக்கி நிறுத்துவது கலைஞர்களிடையேயான ஒத்திசைவு , அதில் அசகாயசூரர்கள் மூவரும். வயலினோடு கஞ்சீராவும் கச்சீதமாய் பணியாற்றிட, பட்டையை கிளப்பியது பவனுத. அந்த மோஹனத்தை ஒட்டுமொத்த அழகையும் கல்பனாஸ்வரத்தில் தலைவர் கொண்டு வந்த அழகை என் சொல்வது. மோஹன வாகனம் கானக பயணம் துவக்கியது. நிலக்கல் முதல் பம்பை வரையிலான கானக வனப்பை மிஞ்சியது தலைவரின் ஸ்வாராபிஷேகம், மகா வித்வான் சஞ்சய் சுப்ரமணியனின் இந்த அற்புதத்தை கண்டு மகிழ எத்தனை மழையிலும் பணிக்கலாம். ஸப்தஸ்வர பிரஸ்தாரத்தை பாங்குற பாடி , வயலினின் பதிலுரைக்கு வித்திட , வரதர் வழமை போல் மோஹனத்தையே ஏங்க வைத்தார் தம் வயலினிசைக்கு.
3) ஆலாபனை தர்மவதி , மேளம் 59. ரஞ்சனி , மதுவந்தி , ஹம்ஸாநந்தி ஆகிய முக்கிய ஜன்யங்களின் சேய் இந்த தர்மவதி . நாதஸ்வர கச்சேரிகளில் மிக பிரதானமான உருப்படியாக இதை செய்வார்கள். ராகம் நீண்டு செல்ல அதன் வீச்சு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அத்தனை ஒரு கருணை உருக்கம் நிறைந்த ஆலாபனை தந்தார் தலைவர். தலைவர் போல் ராகத்தை அசைப்பாரில்லை. மெல்ல மெல்ல மதுவந்தி நெடி வீசியது. தொடர்ந்து வரதர் தர்மவதியை தரமாய் வாசித்தருளினார். ஏற்கனவே படு சீரியஸாக வாசிப்பவர் வரதர் தலை நிமிராது வாசித்தார் தர்மவதியை , அத்தனை கண்ணும் கருத்துமாய் மெனக்கெடுவார் இவர் போல் யாருளர். மீண்டும் ஓர் தண்டபாணி தேசிகர் பண் பாடினார் தலைவர். அருள்வாய் அங்கயர் கன்னியே என் அன்னையே . அனுபல்லவி அருவாகி உருவாகியில் உருகிப் போனோம் உருக்கத்தில். திருவார்ந்த தீந்தமிழே தெள்ளமுதே செல்வியே , அடடா என்னே வரிகள் , இப்படியெல்லாம் தூயதமிழில் பாடினால் எப்படி உருப்படவிட்டுருப்பார்கள் தேசிகரை. தலைவர் போல் தமிழாய்ந்த உணர்வாளர்களால் தான் பட்டை தீட்டப்படுகிறார் தண்டபாணியார். தன்மை அறம் தாளாண்மை தக்கோரின் தவ நெறியும் தாயன்பு நல்லொழுக்கம் தன்னலமில்லா செயலும் சரணம் பாடி உண்மை உயர் குணங்களெல்லாம் பாடிட எம் தனிப்பெரும் தமிழ் உயர்ந்து நின்றது. தலைவர் அதையே நிரவலாக்கினார். நெய்வேலி வெங்கடேஷ் இதுபோன்ற நிரவலுக்கே காத்திருந்தாற்போல் லயத்தை கூட்டினார். நெய்வேலியார் வரதர் இருவரின் உண்மை உயர் குணம் தலைவரிடையேயான நட்பு , தொழில் முறை நட்பை தாண்டி ஒரு ஆத்மானுபூதி சொல்லிக்கொண்டே போகலாம் , அப்படி வாசித்தனர் நிரவலில் இருவரும் , தொடர்ந்து நிரவல் ஸ்வரம் துவக்கி தர்மவதிக்கு மேலும் அணிமணி சூட்டினார் தலைவர்.புறத்தில் ஆழிப்பேரலையை ஒத்த பெருங்காற்று அகத்தில் தலைவரின் இசைகூற்று , அமர்களப்பட்டது கச்சேரி மூன்றாவது பாவிலேயே.
4) முகாரி புருந்தர தாஸர் கிருதி நின்னே நம்மிதே நீரஜஷ்யாமா தலைவர் பாட , கோபாலகிருஷ்ண பாரதி நின்னே நம்மிதே சஞ்சய் எங்கே சைவம் என்று நெக்குருகி கேட்க பாடல் பட்டியல் அறிந்த நான் , கூறவும் இயலாமல் கூறினால் கிட்டும் கொட்டை அறிந்து அமைதி காட்டினேன். தலைவர் யன்ன பாலிசோ சீதா ராமா என்று உருக , வைணவன் உன்மத்தம் பிடித்தாடினான் , புயலில் சிக்கிய தென்னை போல். ஐந்தாவது சரணம் பந்தேனோ வை பாடினார் தலைவர் , வந்தேன் நொந்தேன் , முந்தேனு கதியல்லா தந்தே நீநல்லாதே புரந்தர விடலா என்று பாடி அருளியுள்ளால் நம் தாஸர் , சஞ்சய் அந்த வாவத்தோடு பாடிட உருக்கம் விஞ்சியது.
5) நீண்ட நெடிய இடைவேளைக்குப்பின் ஆலாபனை காம்போதி , ராகங்களின் ராசாதி ராசா இந்த காம்போதி , கர்நாடக சங்கீத சாம்ராஜ்யத்தில் இந்த ராகத்தை கையகப்படுத்தி தம் வித்வத்தை காட்டிட விரும்பாத கலைஞர் எவருமில்லை ஆனால் இன்றைய தேதியில் சங்கீத சாம்ராட் சங்கீத கலாநிதி மகா வித்வான் சஞ்சய் சுப்ரமணியன் போல் இந்த இராகத்தின் ச்சி முதல் ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்து ஆலாபனை செய்வாரில்லை . இனி வரும் காலங்களிலும் எவரேனும் அதற்கான பிரம்மப்பிரயத்தனத்தை மேற்கொள்வாராயினும் , அது சஞ்சய் அடிச்சுவட்டிலிருந்தே ஆரம்பித்தாகவேண்டும். அத்தனை அநாயாசமாக இராகத்தை வளைத்து நெளித்து வான்வெளி புயலின் மையத்திற்கு உள் புகுந்து காம்போதி சுழலை ஏற்படுத்தி ஆலாபனை செய்தார் தலைவர். ஆலாபனை முழுதும் நாதஸ்வர பிடிகளும் , பிருகாக்களும் நிறைந்து காணப்பட , நேசல் இன்புளூயன்ஸ் நிறைந்த ஆலாபனை தந்தார் , கானாதிசூரர். தொடர்ந்து வரதர் காம்போதி வனமும் வனம் சார்ந்த இடமுமாக அமைந்தது அத்தனை பசுமையான ஒரு காம்போதி வாசித்தருளினார் வரதாழ்வார். வீணை குப்பையரின் கொனியாடின நாபை கோபம் செய்யம் ஏரா பாடினார் தலைவர். இப்படி காம்போதி பாடினால் யார் கோபம் செய்யப்போகிறார் சுப்ரமணி என்றார் இறைவர் , கொணியாடினவிற்கு அரங்கில் இருந்த அனைவரின் தலையாடிது , தலைவர் காம்போதியை கசக்கி பிழிந்து சாறெடுத்துப் பாடினார். ஆசைதீர பல்லவி பாடிவிட்டு , அனுபல்லவி நினு மிஞ்சின தெய்வமு பாடினார் , ஆம் சஞ்சய் மிஞ்சிய காம்போதி பாடகர் யாருளர். அனுபல்லவியிலேயே மினிஸ்வரம் துவக்கினார் தலைவர் , தொடர்ந்து சரணம் பாட , முத்துசாமி தீட்சிதர் போல் சரணத்தில் அத்தனையும் காம்போதியையும் கொட்டி வைத்துள்ளார் தியாகையரின் சீடர் வீண் குப்பையர் என்பதை உணர்ந்தோம் , நீலகண்ட ஸ்ரீகாளஹஸ்திஸ வரிகள் கேட்டதும் ஓஹோ சிவன் பாடலா என்றார் கோபாலகிருஷ்ணர் , கோபாலதாஸ வரி வேறு வர மனிதர் படுகுஷியாகி விட்டார் , நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர் , மெல்லியா நீரோடையில் வண்ண மீன்கள் போல் நிரவல் ஸ்வரம் அமைந்தது , அத்தனை நிர்மலம் , சட்டென நெய்வேலியார் பக்கம் வம்பிழுக்க சென்றார் தலைவர் கமககரி என்று ஸ்வரம் பாடி . ஆசை தீர கணக்கு வழக்கு விளையாடி விட்டு , தனி துவக்கி வைத்தார் தலைவர் , நெய்வேலியார் ராஜகணேஷ் இருவரும் கிடைத்த குறைந்த நிமிடங்களில் பிரம்மாண்ட தனி தந்தனர். வழமைபோல் நெய்வேலியார் நிதானத்திலும் பிரதானத்திலும் வைரமென மின்னினார்.
6) அடுத்து சலநாட்டை ஜலதிசுதா ரமணே பாடினார் தலைவர் , ஸ்வாதி திருநாள் பா , பாடல் மிகவும் ரம்மியமாக செல்ல செல்ல வான் வீதி ரத யாத்திரை புரிந்தது அவை , ஸரஸி ஜனாபரை தலைவர் ஒரு நளினமாய் துதிக்க நாமும் நம்மை இழந்தோம்.
7) ராகம் தானம் பல்லவி வராளி , வராளி என்றலே உருக்க மாரி , வெளியே புயல் உள்ளே வராளி சுழல் , தலைவர் காம்போதிக்கு நேரெதிராக அரங்கில் வெப்பம் விஞ்ச விஞ்ச ஆலாபனை புரிந்தார் , அத்தனை சூடான ஒரு வராளி ஆலாபனை , தொடர்ந்து வரதர் வராளி வானளக்க , தானம் துவக்கினார் தலைவர் , வராளி தானம் தீப்பொறி பறக்க அரங்கவலம் புரிந்தது , மிக குறுகிய தானமாக இருந்தாலும் மிகவும் விறுவிறுப்பாக அமையப்பெற்றது , அம்பிகை ஜெதம்பிகை வராளி தோ என்று பல்லவியை பாடி அரங்கிற்கு அம்பிகை அருள் தயந்தார் தலைவர் , உடனடியாக ஸ்வரத்தில் இறங்கினார் , வராளி ஸ்வரங்கள் வரங்களாக வந்திறங்கின , தொடர்ந்து முதல் ராகமாலிகையாக தலைவர் களமிறக்கியது மாளவி வழக்கம் போல் ரஸிகர்கள் சற்றே திகைக்க அவரே அறிவித்தார் , அடுத்து சாரமதி நடனமாடியது அரங்கில் மபாதபா வில் விளையாடினார் தலைவர் , அடுத்து பூர்வி ஸ்வரம் ,மிக ஆழமாக பாடப்பட்டது தலைவரால் , இத்தனை அழகாய் ஒரு ராகத்தை 1 நிமிடத்தில் சஞ்சய் போல் செய்வாருண்டோ.
8) அடுத்து ராகமாலிகை கண்ணனை காண்பதெப்போ ஹம்ஸநந்தியில் துவக்கினார் தலைவர் , பாடல் மெட்டமைத்தது ஜி.என்.பி அடுத்து சரணத்தில் நாட்டுகுறிச்சி தலாட்டியது அரங்கை , சுத்த தன்யாசியில் ஜாதி முல்லை சம்பங்கியை தொடுத்தார் மாலையை , இதுவலல்வோ ராகமாலிகை , ஆபோகி தாமதம் இல்லாமல் பாடினார் தலைவர் தாமதம் இல்லாமல் ஆபோகியில் அகமகிழ்ந்தோம்.
9) மோடி ஜேசே வேலரா அடுத்து கமாஸில் ஜாவளி பட்டாபிராமைய்யர் பண் , கமாஸ் பாடுவதென்றால் தலைவருக்கு தனி பிரியம் , ஓய்யாரி மாடலலோ என்று தலைவர் நளினமாய் பாட இந்த பட்டாபிராமையருக்கு இதே வேலைதான் போல் என் கூறினான் திருமலை.
10) முதுவந்தி ஹே கோவிந்த் ஹே கோபால் , என்றும் பசுமையான மதுவந்தி பாடல் , கேட்போரை கிறங்கடிக்கும் ராகம் , அதிலும் தலைவர் பாடும் போது கேட்கவும் வேண்டுமோ , அந்த சூரு கஹேவில் நம்மை எப்படியெல்லாம் கிறங்கடிக்கிறார், நாம் என்றும் மகிழும் மேரா தேரா நாவு வரிகள் அடுத்து , மதுவந்தி போல் மயக்கம் தரவல்ல ராகம் பிரிதொன்று அல்ல.
சௌராட்டிரம் பாடி இசைப்புயலை முடித்தார் தலைவர் ,அடுத்து கார்திக்கிற்கு நாம் இல்லை எனவே வாணிமஹாலுக்கு காத்திருப்போம்.
Comments