கோடி புண்ணியம் தந்த தலைவர் தோடி,சௌந்தர்ய கேதார கௌளை,சாகஸ சந்த்ரகவுன்ஸ் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 27, 2023
- 4 min read


கிறிஸ்மஸ் என்றால் நமக்கு இரண்டு மகிழ்வுகள் 4 மணி கச்சேரி எனவே விட்டம்மா அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை , இரண்டாவது கிருஷ்ண கான சபையில் தலைவர் கச்சேரி கேட்பது இனிமையிலும் இனிமை , அந்த காலங்கள் எல்லாம் கடந்தகாலங்கள் ஆகிவிட இதோ சஞ்சய் சபா உன்னை அழைக்கிறது என அழைக்க நான் உத்தாரம் வேண்டி சம்சாரத்திடம் சரணடைய பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டு என் சீமந்த புத்திரன் ஆதித்த சஞசய் மேய்க்கும் பொறுப்புடன் அனுமதி கிடைக்க , வீட்டில் புறப்படும்போது எத்தனை பாட்டு என்று ஆரம்பித்தான் , வா சமோசா உண்டு என்று அழைத்துச்சென்றேன். தலைவருடன் அதே கூட்டணி ராகுல் லீவெடுத்து ஆடியன்ஸ் ஆகவிட்டதால் ரேதஸ் பி்ன்பாட்டு தம்பூரா இரண்டும் செய்ய பணிக்கப்பட்டார். கேதார கௌளை தோடி சந்திரகவுன்ஸ் என மிகவும் கவரும் பட்டியலை கண்டு கோபாலர் திருமலை இருவரும் அகமகிழ்ந்தனர். துவங்கிற்று இனிய கிறிஸ்மஸ் கச்சேரி ஆறரைக்கு நேற்றும் போல் இந்த கச்சேரியும் ஹவுஸ்புல்.
சரியான நேரத்திற்கு நாம் சென்றிருந்தாலும் தலைவர் சரியோ நீ செய்யும் தாமதம் என்பால் பாடினார் பேகடாவில் டைகர் வரதாச்சாரியின் பாடல் , முன்பொரு காலத்தில் பாரத்கலாச்சாருக்கு தாமதமாய் சென்றபோது இப்பாடலை பாடினார் சூழ்நிலை பாடலாக அதெல்லாம் பட்டியல் வெளியிடாத பசுமையான கச்சேரி நாட்கள் , பேகடா ஸ்வரங்கள் வரங்களாக கேட்டது அவை , தலைவர் பேகடா சுப்ரமணியன் என்று அழைக்கப்படுவதின் காரணத்தை பாடலில் உணர்த்தினார். ஸ்வரங்கள் ஸரவெடியாய் வெடித்தது , முந்தைய நாள் பாடிய எந்த வித அறிகுறியும் இன்றி இத்தனை புதிதாய் தலைவர் ஒருவரால் தான் பாட இயலும் , அந்த பேகடா ரஸத்தை பொழிந்துவிட்டு உன்னையல்லால் கதி வேறில்லை என்று தலைவர் பாட , அது நாங்கள் பாட வேண்டியது என்றது அவை.
அடுத்த விநாடி ஆச்சர்யம் அடுத்த பாடலிலேயே தந்தார் தலைவர் நங்கை நல்லூர் ஸ்வாமிநாதன் வாயெல்லாம் பல்லாக காட்சி தர நாட்டையில் ஸ்வாமிநாத பரிபாலயசுமாம் பாடினார் , 2020 புத்தாண்டில் இப்பாடலை பிரம்ம சபையில் பாடியது இன்மும் காதில் ஒலிக்கிறது , முத்துசாமி தீட்சிதரின் அரிய துரித கதி பாடல் இது , சமஸ்டி சரணத்தில் சேவிதவில் நாட்டையை நிலைநாட்டினார் தலைவர் , அந்த வாமதேவாவில் அரங்கையே உச்சிக்கு கொண்டு சென்றார் , நாம் எதிர்பார்த்த ஸ்வரங்கள் துவங்கின , அடடா என்ன சொல்லி வர்ணிப்பது , நம்மை எங்கோ கொண்டு சென்றார் தலைவர் , வரதரும் நெய்வேலியாரும் அருமையான இணையைத் தர தலைவர் பிரமாதப்படுத்தினார் ஸ்வாமிநாத தெய்வத்தை தன் உயரிய ஸ்ரவங்களால். இந்த பருவத்தில் தலைவர் கந்தவேளை மிக அருமையாக திட்டமிட்டு பாடி வருகிறார் , சுப்ரமணியர் சுப்ரமனியரை பாடுவதை கேட்பது தனிப்பெரும் இன்பம்.
மீண்டும் ஓர் ஆபோகி மனயுலகாடா கோவிந்த பாடினார் தலைவர் மீண்டும் புரந்தரதாஸர் பண் , மால்மருகனை பாடி அவர் மாமா கோவிந்தனை பாடுகிறார் , அந்த நம்ம புர்ந்த விட்டலவில் தலைவர் உருகிபாட புரந்தரை அவை நினைவு கூர்ந்தது , எப்படியெல்லாம் பாடியுள்ளார் கோவிந்தனை என்று .ஆபோகியின் அத்தனை சுவையும் பாடலில் இறக்கி தலைவர் பாட அதை வரதர் வாசிக்க அருமையிலும் அருமை.
கேதார கௌளை ஆலாபனை துவக்கினார் தலைவர் , முந்தைய கச்சேரியில் ஒரு துளி பாடப்பட இப்போது முழுகடலையும் இறக்கினார் அவையில் , கரை எது கடலெது என காணது அவை தலைவரி கேதாரகௌளையில் நனைந்தது , அடேயப்பா என்னே ஒரு கம்பீரம் தொனிக்கிறது இந்த ஆலாபனையில் , தலைவர்போல் இதை அருமையாக ஆலாபனை செய்வார் யாருளர் , கேதாரகௌளை என்றாலே எனக்கு மதுரை சோமு தான் நினைவு வரும் , அவர்போல் இதை முயற்சிப்பவர் தலைவர் ஓருவரே ஆம் கேதாரகௌளை ஒரு பிரம்மாண்ட யானை அதன் மேலேறி சவாரி செய்வது அத்தனை சுலபம் அல்ல , ஆகச்சுலபமான காரியம் என்பது போல் தலைவர் ஆலாபனை புரிந்தார் அது தான் அவர்தம் மேதைமை. தொடர்ந்து வரதர் கேதாரகௌளை அதே உணர்வை நம்முள் புகுத்தியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை அத்தனை கம்பீர வாசிப்பு , இதயத்தை ஒரு இனம்புரியாத உணர்வை தரும் வாசிப்பு வரதர் வாசிப்பு , அருணாசல கவியின் இராமநாடக பாடலான அந்த ராமசௌந்தர்யம் பாடினார் தலைவர் அறிந்து சொல்லப் போமோ அம்மா என்பு பல்லவியிலேயே அம்மாவில் ஆரம்பித்தார் தம் நளினத்தை , கந்தம் மேவும் அரவிந்தமலரும் வரியில் சற்றே கர்வம் கொண்டோம் காலுக்கு நிகராமோ கைக்குத்தான் சொல்லப் போமோ என்று பாடி அந்த காலுக்குவில் மொத்த கேதாரகௌளையும் கொட்டினார் தலைவர் , அந்த சஞ்சய் சவுந்தர்யத்தை என்ன சோல்ல என்றான் திருமலை உருண்ட மணிமுழங் காலுக்குவமையவ ருடைய அட்சயதூணி ஏற்குமே திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் திசையானை துதிக்கையும் தோற்குமே என்று கற்பனைக்கும் விஞ்சிய விதத்தில் எழுதியுள்ளார் அருணாசல கவி , தலைவர் அந்த கற்பனையை மெய்பிப்பது போல் பாடினார் , பாடல் முழுதும் நெய்வேலியார் பிரம்மாண்டமாய் வாசித்தார்.
அடுத்து கம்பீரவாணியில் குறு ஆலாபனை புரிந்து சலநாட்டை போல் ஒலித்தது தலைவர் சதாமதின் தலதுகதரா பாடினார் தியாகராஜர் பாடினார் , மீண்டும் ஓர் தியாகராஜரின் ராமர் அல்லாத பாடல் , சதவாசிவனை போற்றும் பண் இது , சரணத்தில் அந்த டிகம்பராவில் தலைவர் நடனம் அருமை , அருமையாக அமைந்தது சதாமதிம் மேலும் மெருகு கூட்ட நரிவல் ஸ்வரம் பாடினார் தலைவர் , அற்புதமாய் வாசித்தார் வரதர் , பாடல் ஏதோ மேற்கத்திய இசை போல் பயணித்தது.
அடுத்து அவையே எதிர்பார்த்த தோடி சஞ்சய் தோடி கேட்க செய்யவேணும் புண்ணியம் கோடி என்பார்கள் அத்தகு தோடியை கம்பீரமாய் துவக்கினார் தலைவர் , கலைஞர் மன்ற முகப்பில் வலது பக்கம் இசைக்குயில் எம்.எஸ் அம்மா புகைப்படமும் வலது பக்கம் நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளை படமும் வைத்திருந்தனர் , எத்தனை பொருத்தம் பாருங்கள் தலைவர் தோடி ஆலாபனை கேட்டு ஒரு கணம் பிள்ளை அவர்களே புகைப்படத்தில் சிலிர்த்ததுபோல் இருந்தது , நாதஸ்வர பிடிகள் வந்த வண்ணம் இருந்தன , ஒரு பெரிய எரிமலை முக்ப்பில் நின்றது போல் உணர்ந்தது அவை , நெருப்புக்குழும்புகளாய் தலைவரின் ஆலாபனை அமைந்தது அவ்வப்போது தரலல்லுக்கள் வந்த சென்றன , இத்தனை பிரம்மாண்ட தோடி ஆலாபனை மதுரை சோமு போன்ற ஜாம்பவான்களுக்கே சாத்தியம் , வரதர் தோடி அடுத்து பறந்தோடி வந்தது , அத்தனை சிலிர்ப்பு தரும் தோடி வாசித்தார் வரதர் , தலைவர் பாதையில் அதே உணர்வை பொங்கச்செய்யும் தோடி , ஸ்ரீ வெங்கடேஷம் பாடினார் தலைவர் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்கார் பாடல் இப்படி அரிய பாடல்களை தூசி தட்டி பாடுபவர் நம் பாடற்கோன் மட்டுமே , தலைவர் மிக உருக்கமாய் பாட திருமலையோ புரிந்தது சைவ சிகாமணிகளே மெயினுக்கெல்லாம் எங்கள் இராமர் வெங்கடேசன்தான் என்று நெஞ்சை நிமிர்த்தினான் , அப்படி செய்த அதே தருணம் தலைவர் மற்றுப்பற்று எனக்கின்றி நின் திருப்பாதம் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் , கோபாலர் ஏதும் சொல்லி பாடலில் கரைந்தார் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே , சற்று முன் வெங்கடேஷம் ஓலித்த அரங்கில் நமச்சிவாயம் ஓங்கி ஒலித்தது , இதெல்லாம் தலைவர் ஒருவருக்கே சாத்தியம் , பாரம்பரியத்தில் சிறிதும் வழுவாமல் அதே நேரம் புதுமை புகுத்துவதில் தலைவர் என்றும் ஓர் அரிமா , நற்றாவவில் அருமையான நிரவலை நிகழ்த்தினார் தலைவர் , மொத்தத்தில் தோடி வைணவத்தில் துவங்கி சைவத்தில் அருமையாய் நிகழ்ந்தேறியது.
வசாஸ்பதி பராத்பராவிற்கு காத்திருந்த அவைக்கு பல்பளித்து சந்த்ரகவுன்ஸ் ராகம் தானம் பல்லவி துவக்கினார் தலைவர் , பட்டியலில் இல்லாதது பாடுவது மட்டுமல்ல புதுமை பட்டியலில் தந்துவிட்டு பாடாது இருப்பதும் புதுமை என்றான் திருமலை , சந்திரகவுன்ஸ் இந்தோளம் போல் உணர்வை தந்தது , ஒரு உற்சாக இராகமாய் ஒலித்தது ஆலாபனையில் தொடர்ந்து வரதரும் உற்சாகத்தை தக்கவைத்து அரங்கை உற்சாகப்படுத்தினார் தொடர்ந்து தானம் துவங்கிற்று , மிக மிக அருமையாக அரங்கேறியது தானம் , நங்கை நல்லூர் சுவாமிநாதன் கணித்தபடி வேலவனை நினைந்திடுவோம் வடிவேலவனை நினைந்திடுவோம் பல்லவி பாடினார் தலைவர் மிஸ்ரசாபு தாளம் , தலைவர் வரதர் இருவரும் எதிர்பார்த்தபடி நெயவேலியாரை வம்புக்கு இழுத்தனர் , இருவரின் கணக்கிற்கு சரியான பதிலுரை தந்தார் தலையாட்டியார் , சந்திரகவுன்ஸ் நிரவல் ஸ்வரம் மிகவும் நேர்த்தியாய் தலைவர் பாட அதி அற்புதமாய் வாசித்தார் வரதர் தொடர்ந்தது நெய்வேலியார் தனி அடுத்தடுத்து நாளில் அற்புதமான இன்னுமோர் தனி தந்தார் நெய்வேலியார் , நேற்றைய தனியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனியாக அமைந்தது இந்ததனி .
அடுத்து மாண்ட் குறுஆலாபனையுடன் துவக்கினார் ராகமாலிகை ஜபத ஜபத ஸ்வாதி மாமன்னர் பாடல் அந்த ஹரமனு பாயம் வரியில் பறிகொடுத்தோம் நம்மை தொடர்ந்து கிம்பஹ தபஸ சுஷ்மாவில் ஸ்னானே பானே பெஹாகில் ஜனிம்ரிதி சிந்துபரைவியில் தலைவர் ஓர் உயரிய ராகமிலையை தந்தார் , கேட்டுக்கொண்டே இருக்கலாம் அதே போல் முடிப்பில் நான்கு இராகங்களிலும் ஜபத ஜபத பாடினார் , அருமையிலும் அருமை.
அடுத்து சிறுமணவூர் முனுசாமி முதலியாரின் மானாட மழுவாட விருத்தம் இலவச இணைப்பாய் வழங்கினார் தலைவர் பூர்விகல்யாணி கானடா மோஹனம் கீரவாணி கமாஸ் காப்பி ஜோன்புரி என்று வரிகள் வந்து விழ விழ அரங்கே கண்ணீர் மல்கியது , குழந்தை முருகேசன் வரிகள் அருமையிலும் அருமை , ஜோன்புரியில் முடித்தபோது உணர்ந்தோம் கோபால கிருஷ்ண பாரதியின் எப்ப வருவாரோ வரும் என்று வந்தது ஜோன்புரியில் அரங்கே ஆடியது அனைவரின் கலியும் தீர்ந்தது . முந்தைய நாள் அத்தனை மணி நேரம் பாடி இன்றும் பாடி இன்னமும் எங்கிருந்து தான் இத்தனை ஆற்றலை மீதம் வைத்துள்ளாரோ தெரியாது நற்பருவம் வந்து நாதனை தேடும் கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் என்று தலைவர் பாட சிவனாரே காட்சி தந்தார்.
சௌராட்டிர மங்களம் பாடி அரும்கச்சேரியை நிறைவு செய்தார் , இரண்டு நாட்கள் எத்தனை தயாரிப்பு எத்தனை திட்டமிடல் எத்தனை அழகாய் அதை அரங்கேற்றினார் சஞ்சய் சபா அடுத்த ஆண்டு இன்னும் இரண்டு கச்சேரி நடத்தை வேண்டும் , மிக மிக அருமையான கச்சேரி கேட் திருப்தியுடன் பருவத்தின் உச்சபட்ச அரங்கான வித்வத் சபை கச்சேரிக்கு தயாரானோம்.இந்த முறையாவது வைணவம் வெல்லுமோ என்று நக்கலடித்தார் கோபாலர்.
Comments