top of page
Search

ஓஹோ சஹானா-கருணை பொழிந்த கரஹரப்பிரியா , இதுவோ நாயகரின் நாயகி கச்சேரி!

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Mar 14, 2023
  • 6 min read

நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் கண்டுள்ளோம் , மாற்றம் என்ற சொல் ஒன்றை தவிர அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டது என்பார்கள் , அதில் மாற்றம் சொல்லோடு நாயகி சபாவையும் அபிராமி சிதம்பரம் அரங்கையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் , நாம் 2013 முதல் இங்கு கச்சேரி கேட்டு வருகிறோம் , எவ்வித மாற்றமும் இன்றி அதே வாசலில் ஒரு மேசை , காரியஸ்தர்கள் , அதே அரங்கு , அரங்கினுள் அதே நெகிழி இருக்கைகள் , அதே மேடை என எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்ட தலைவர் பாடும் களத்தில் , மாற்றத்தை மிக அழகாய் ரசிக்கத்தகுந்தவாறு தரும் மகோன்னதராம் நம் தலைவர் கச்சேரிக்கு ஞாயிறு அன்று ஆஜரானோம் , தலைவரின் நிரந்தரி இசையணி நெயவேலியார் , வரதர் , அவ்வப்போது சேரும் வெங்கட்ரமணன் கஞ்சீரா , பின்பாட்டு ரேதஸ் , தம்பூர் ராகுல் , வழமை போல் என்னை பிராண்டி இன்பம் காணும் ஆழ்வார்கடியான் நம்பி , கோபால கிருஷ்ணபாரதி என அனைவரும் கச்சேரிக்கு தயாராக , இனிது துவங்கிற்று செவ்விசை 6.15மணிக்கு.


1) சைவ வணைவ பாக்களை நேர்த்தியாக திட்டமிட்டு பாடல் வெளியிட்டிருந்தார் தலைவர். முதலில் வைணவம் , சுவாதி திருநாள் பாடல் ஸரஸிஜனாப மாயமாளவ கௌளை வர்ணம் , தலைவர் வழமை போல் மாயமாளவத்தில் மாயத்தை துவக்கினார். வர்ணத்தை ஒரு அருமையான குறு ஆலாபனையோடு துவக்கினார் , ஸ்வாதியார் பெருமை கொள்ளத்தகு வகையில் அவரின் பண்களை தலைவர் பாடி வருகிறார் , உடன் வாசிப்போர் உவகையோடு வாசித்தருளினால் இன்னமும் உத்வேகம் ஊற்றெடுக்காதா , எடுத்தது தலைவரின் முக்தாய் சிட்டை ஸ்வரங்களில் , வேகத்தில் தலைவர் ஒரு சூறாவளி என்றால் ஸ்வரகட்டுக்களை கணக்குகளை கட்டவிழ்பதில் புலி , புலியோடு சேர்ந்து வரதசிறுத்தை வயலினில் பாய , மிருதங்க சிங்கம் கம்பீரமாய் வாசிக்க , இவர்களிடையே சிக்கிய வெங்கட்ரமண முயல் கஞ்சீராவில் முயல ஸ்வரம் கச்சேரியின் முதல் பாடலிலேயே அரங்கை ஸ்தம்பிக்க வைத்தது.


2) குன்னக்குடி கிருஷ்ணையரின் ஸ்ரீ பார்வதி பரம த்வைதே ஸ்ரீ ராகத்தில் அடுத்து. நா பரிதாப தீர்ச்சி என்று அனுபல்லவியில் தலைவர் ஸ்ரீ ராகத்தை சீராய்த்தந்தார். தொடர்ந்து சிட்டை ஸ்வரம் படுவேகத்தில் அருமையான நாதத்தோடு வாரி வழங்கினார் தலைவர், பராசக்தியை பரம பக்தியோடு கேட்டது அவை. சரணத்தில் ஸ்ரீ கிருஷ்ண சஹோதரி என்று வர , அது தான் இவர் முத்திரை என்றார் திருமலை ஓ ஸ்யாம கிருஷ்ண சோதரி போல் என்று உணர்ந்தோம். தலைவர் இதனிடையில் நிரவல் ஸவரத்தில் மீண்டும் ஒர் வலம் வந்தார். இந்த ஸ்ரீ ராகத்தை கேட்பதில் என்றும் ஓர் அலாதி ஆனந்தம்.


3) ஆலாபனை பூர்வி கல்யாணி , தலைவர் பூர்வி கல்யாணி கேட்ட மாத்திரத்தில் ஆலயத்தில் மூலவர் முன் நிற்கும் உணர்வு தானே வந்துவிடும். இந்த இராகம் பெயர் பூர்வி கல்யாணி என்று தெரியாத காலம் முதல் இந்த உணர்வை தவறாமல் பெறுகிறோம் . பூர்வியை ஆசை தீர ஆலாபனை செய்து அதன் உள் புகுந்து அதிலேயே சுழன்று பின் உன்னில் புகந்த நான் என்னுள் புகுத்தினேன் பார் உன்னை என்று விஸ்வரூபம் எடுத்தார் ஆலாபனையில் , அப்படியே மேலே கொண்டு சென்றார் பூர்வி கல்யாணியை நாங்களை அண்ணாந்து பார்த்து ஆனந்தம் கொண்டும். மிக பக்தி தோய்ந்த தூய்மையான ஆலாபனை தந்தார் தலைவர். வரதர் அடுத்து பூர்வி கல்யாணியை பூரணமாய் தந்தார் அவைக்கு , வரதர் வழமை போல் தலைவரோடு ஆலாபனை வாசிக்கும்போதே எப்படி கட்டமைக்க வேண்டும் ராகத்தை என்று திட்டமிட்டு அதை அங்குலம் கூட பிறழாமல் இசைத்தார். துரைசாமி கவிராயரின் அப்பனே பழனியப்பனே பாடினார் தலைவர் , அடையாற்று இளைஞர் விடுதியில் மார்கழி மகோற்சவத்திற்கு தலைவர் பல்லாண்டுகளுக்கு முன் பாடிய அரும்பா இது. செப்பும்‌ நின்னருளால்‌ மானிடம்‌ பெற்றும்‌ என்று அனுபல்லவியை தலைவர் பூர்வி கல்யாணியில் பாடியபோது பலர் கண்கள் பனித்தன. துரைசாமி கவிராயர் இதை இந்துஸ்தானி காப்பியில் இராகம் அமைத்ததாக தெரிகிறது. சரணத்தை தலைவர் தமிழ் மணக்க பாட பாட அரங்கில் அத்தனை மகிழ்ச்சி , பாலதண்டாயுதபாணி அருளை அனைவரும் பெற்றோம்.


4) முத்துசாமி தீட்சிதரின் சேதஸ்ரீ பாலகிருஷ்ணம் துவக்கினார் அடுத்து , த்வஜாவந்தி இராகம். இந்த பாடல் நமக்கு என்றும் பிடிக்கும் , அரவிந்தம் என்று பாடுவார் என்பதாலா என்று பழிப்பு காட்டினான் திருமலை. அட ஆமாம் அதுவும் தான் என்று கேட்டு திளைத்தோம். தீட்சிதர் பாடல் என்றாலே ஒரு ஒர் வரியிலும் ஒலி கணக்குகளான அக்ஷ்ரத்தை நிரப்பி வைத்திருப்பார், இதை பாடுவதற்கு தனி திறன் வேண்டும். தீட்சிதர் ஒரு அருமையான இசைப்பயணி , ஆயிரம் கோவில்களுக்கு மேல் சென்று அதன் வனப்பில் வியந்து பாடல்களை எழுதிதள்ளியுள்ளார். அப்படி குருவாயூர் சேத்திரம் சென்று கோபாலகிருஷ்ணரை துதித்து பாடிய பாடல் இது. இராகம் பாடல் வரி இரண்டும் பின்னிப்பிணைந்த இந்த பாடலை சஞ்சயன்றி வேறே யார் அத்தனை அர்பணிப்போடு பாடுவார் என்று புளகாங்கிதம் கொண்டார் கோபாலகிரஷ்ணபாரதி. ஹூம் உம் பெயரை பாடினால் வைணவமாய் இருந்தாலும் இனிக்கிறதாக்கும் என்று வம்பளந்தான் திருமலை.


5) கச்சேரி கதாயாகன் அடுத்து , கரஹரப்பிரியா , நங்கை நல்லூர் சுவாமிநாதனைக்காக சீசனில் தலைவர் தமிழிசை சங்கத்தில் கரஹரத்தை பாடினார் ஆனால் அன்று வரமுடியாத சுவாமி , இன்று தவறாது வந்து கேட்காமல் விடுவதில்லை என்று மேடையிலே அமர்ந்துவிட்டார். அவர் அகமகிழ தலைவர் ஆலாபனையை துவக்கினார். எங்கள் கணிப்பு சித்தருக்கும் மிகவும் பிடித்த இராகமிது , தலைவர் தியான நிலைக்கு ஒர் இராகத்தை எடுத்துச்சென்றால் இதை லேசில் விடுவாரில்லை. கோடிப்பாலை இராகத்தை தலைவர் மெய்மறந்து ஆலாபனை புரிந்தார். தலைவர் சீசனில் கேட்ட நேசல் ஆலாபனை மீண்டும் , அவரின் கரங்கில் கிடைமட்டத்தில் வாள் சுழற்றின , வரதரோடு விரல்களில் கோலமிட்டவாறு ஆலாபனையை மேல மேல கொண்டு சென்றார். சம்பூர்ண இராகத்தை படு சௌக்கியமாய் தலைவர் பாட வரதர் தூண்டுதலால் மேறக்கத்திய நோட்டுகள் தெளித்து ஒரு எம்டிஆர் தும்மலோடு தொடர்ந்தார் கரஹர ஆலாபனையை , ஸ்ரீ ஆபோகி நாயகி தர்பார் ஆபேரி ஆந்தோளிகா என பல பிரபல இராகங்களின் தாய் இந்த கரஹர , தலைவர் ஏறத்தாழ 13 நிமிடங்கள் ஆலாபனை புரிந்து கடையில் இந்துஸ்தானி நெடியோடு ஆலாபனையை தந்து மேலே சென்றார் இராகத்தில். படு பிரமாதமாய் ஆலாபனையை நிறைவு செய்தார் தலைவர் , இந்த கரஹர காலங்களுக்கு நிலைக்கும் முடிவில் மாதவி பொன்மயிலாள் வர அரங்கமே உற்சாகத்தில் துள்ளியது. அண்ணன் ஆலாபனையை சுவாசித்து தம்பி வாசித்தார் அடுத்து , என்னே வாசிப்பு , கரஹரப்ரியாவை இப்படி மாறி மாறி உன்னதப்படுத்துவோரும் உளரோ என்று வகையில் அமைந்தது வாசிப்பு. தியாகராஜரின் கோரி சேவிம்பராரே பாடினார் தலைவர் , வழமையான திருப்புலம்பல் இல்லாமல் வாருங்கள் கூடி வழிபடுவோம் என்று அனைவரையும் கூட்டு சேர்க்கிறார் தியாகராஜர். ஆம் தியாகையர் பாடிய வெகு சில சைவப் பாடலில் ஒன்று இந்த சிவனார் பண் , அதிலும் நம் குன்றத்தூரை அடுத்துள்ள கோவூர் சுந்தரேஸ்வரரை குறித்த பாடல். கோவூர் கீர்த்தனைகளில் ஒன்று. அனுபல்லவி சரணத்தை பாடி மகிழ்ந்து கோர்கலிடேர கோரி சேவிம்ப வரிகளில் நிரவல் அமைத்தார் தலைவர். கோரிக்கைகள் அஃதாவது வேண்டுதல் நிறைவேற சேவிப்போம் என்கிறார் தியாகையர் , நம் கோரிக்கை ஒன்றே சீசன் தவிர சென்னையில் மாதம் ஒரு கச்சேரியாவது பாடவேண்டும் தலைவர். பெங்களூருக்கு பொய் சொல்லி சென்று , சும்மா இருக்காமல் கச்சேரி வீடியோ எடுத்து மாட்டி , எதற்கு இந்த வீண் வம்பு என்று சேவிம்பை தொடர்ந்தோம். தலைவர் இதற்குள் நிரவல் என்னும் பிரம்மாண்ட சுழலில் அரங்கை ஈர்த்திருந்தார். மதுரை சோமூ நிரவலில் ஒவ்வொரு விநாடியும் தன் உடல்மொழியால் காண்போரை கவர்வார் என்பார்கள் அது போல் தலைவர் பிராமதப்படுதினார் ஆசை தீர நிரவல் புரிந்து நிரவல் ஸ்வரத்தை துவக்கினார், நிரவல் ஸ்வரத்தில் ஒரு பரிமாணத்தை காட்டி , கல்பனாஸ்வரத்தில் அடுத்த பரிணாமத்தை நிர்மானித்தார்.இவரின் இந்த ஆளுமைக்கு ஈடு தர வரதர் நெய்வேலியார் இருவரால் மட்டுமே முடியும் , முதலில் வரதரோடு வம்பிழுத்துவிட்டு பின் நெய்வேலியார் பக்கம் திரும்பினார். வெங்கட்ரமணன் எதற்கு ஒம்பு என்று நிமிரவே இல்லை. ஸ்வரப்பிரஸ்தாரம் துவங்கியது தநிதா வில் , பதநிக்காக அனைவருக்கு காத்திருந்தோம். தா வில் தலைவர் த்வந்தம் புரிந்தார். அரங்கை மேடையை இராகத்தை ஸ்வரத்தை அத்தனையையும் தன் கட்டுக்கள் வைத்திருக்கும் ஆளுமையில் சாலச்சிறந்தவர் சஞ்சய் . எதிர்பார்த்த பதநிதா வந்தது , வரதர் கடையோர புன்னகையோடு அனைத்தையும் வாசித்தார். தலைவர் ஸப்தஸ்வரபிரஸ்தாரம் புரிந்து நிறைவு செய்தார் க்ராண்ட் கரஹரப்பிரியாவை.பாடலை மீண்டும் பாட மிருதங்க சக்கரவர்த்தி ஒரு முடிப்பு வாசித்தாரே அடேயப்பா என்னே வாசிப்பு.


6) ஓரு காலத்தில் மனவியாலகிஞ்சரா , நரஸிம்முடு உதயின்சனு , பணமே , சீர்வளர் பசுந்தோகை மயிலோன் , நூலைப்படி போல் கடந்த பருவத்தை தொடர்ந்து தலைவர் பாடுவது ராமசாமி தூதன் நானடா பஹூதாரி இராகம் அருணாசல கவி பாடல். நல்ல துள்ளலான பாடல் , நெய்வேலியாருக்கு வாசிக்கும் போதே அத்தனை மகிழ்வு , தலைவர் இந்த பாடலை பாடும் அழகே அழகு 2021 ஆன்லைன் கச்சேரியில் கேட்டோம் இப்பாடலை முதன்முறை , தம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதங்களைச் சூழ்கிறாய் கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில் மூழ்கிறாய் மாதர் மோகத்திலே துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய் மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலேஏன்வீழ்கிறாய் என்று அனுமன் அறிவுரை தரும் சரணத்தை பாடினார் தலைவர். ஆதிமூர்த்திதானே உத்தண்ட மாகவந்தான் அரக்கரை மண்ட சீதையை விட்டுப்பிழை அடாகண்டசேதியைச்சொன்னேன் வீரகோதண்ட ராமசாமி தூதன் நானடா என்று தலைவர் பிரமாதாய் அனுமனே நேரில் வந்தார் போல் பாடினார் , அத்தனை கம்பீரம்.


7) சுப்ரமணியர் அடுத்து சுப்பராமரின் எத்தனை சொன்னாலும் தெரியாதவரோடு பாடினார் சாவேரியில் பதவர்ணம் , இதுவும் மார்கழி மகாஉற்சவத்தில் முதல் முறை அரங்கேற்றி அதன் பின் பன்முறை பாடியுள்ளார். நாட்டியத்தில் பேர் பெற்ற தாய் தன் மகளுக்கு அறிவுறுத்தும் பாடல் , ஆத்திரம் கொள்கிறாய் பெண் புத்தியாலே என்று 19நூற்றாண்டில் எழுதிய சுப்பராமரின் தீரம் ஒரு புறம் அதை 21ஆம் நூற்றாண்டில் பாடும் தலைவர் வீரம் என புளகாங்கிதம் கொண்டோம். கொண்டவர் நயத்திலும் பயத்திலும் என்று சாவேரி தோய்த்து பாடினார் சரணத்தை. துடுக்கு முடுக்கு குலுக்கு என்று பாடல் ஓர் மார்கமாக செல்ல ஆழ்வார்கடியான் கோபாலர் முகத்தில் அசடு கிலோ கணக்கில் வழிந்தது.


8) நீண்ட நெடிய நாட்களுக்குப்பின் ஓர் சஹானா ஆலாபனை. இல்லையில்லை சஹானா குளிர்மழை , மார்சு மாதத்திலும் அதிகாலை பனி தொடர , அதை பின்மாலைப்பொழுதிலும் தொடர்கிறேன் என்று தலைவர் ஆலாபனையை கட்டமைத்தார். ஆலாபனையின் நீள அகலம் அனைத்தும் குழைவை கோட்டி வைத்து ஆலாபனை தந்தார் தலைவர் , ஒரு ஆலாபனையை நாம் கேட்பதற்கும் சங்கீத ஞானம் உள்ளவர் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு , என்பதை தலைவர் பல்லவி பாடும் போது அறிந்தோம் . சஹானாவை ஆசை தீர ஆலாபனையில் கட்டியாண்டார் தலைவர் , லேசில் விடுவதில்லை என்று வரதரும் பிரமாதப்படுத்தினார் தன் ரீப்பெளேயில் , அடுத்து துவங்கியது அருமையான தானம் ஆம் சஹானா தானம் செல்லம் கொஞ்சியது. அடுத்தடுத்த சுற்றுகளிலும் அண்ணனும் தம்பியுத் சஹானா தானத்தை கொஞ்சி கொண்டே இருக்க , வேகமெடுக்குமா என்றே தோன்றியது , கடைப்பகுதியில் எடுத்தார் வேகத்தை சஹானா விரைவுத்தானம் படுஸ்வாரஸ்யமாய் பயணித்தது அவையெங்கும். பல்லவி தலைவர் பாடிய போது ஸ்ரீவித்யா கூறினார் இந்த பாடலைத்தான் ஆலாபனையிலேயே கோடிட்டு காட்டினார் என்று ஆம் , தலைவர் அமைத்த பல்லவி மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ஓஹோ காலமே உன் போல் எவர்குண்டு இந்திரஜாலமே அட ஆமாம் என்று உரைத்தது நமக்கு , பூனை போல் இருந்து நீ புலியைப்-போல் பாய்வாய் என்று பாடி நெய்வேலியாரை வம்பிழுத்தார். புலிபோல் பாய்வாயில் புலிபோலவே பாய்ந்தார் தலைவர். இவருக்கு வாசிப்பதெல்லாம் லேசுபட்ட காரியமில்லை. ஊர் எல்லாம் தூங்கினும் உனக்கில்லை தூக்கம் ஓயாமல் ஓடுவாய் என்று அடுத்து தொடுத்துவிட்டு ஓடுவாய் ஓடுவாய் என்று சிரித்தவாறு ஓட்டினார் பல்லவியை , தொடர்ந்து ஸ்வரம் துவக்கி காலத்தை அருமையாய் பயன்படுத்தினார் , ஆசை தீர சஹானா ஸ்வரம் பாடிவிட்டு , மீண்டும் புத்தாண்டை கொண்டு வர சுத்தன்யாஸிஇல் ராகமாலிகை துவக்கினார் , இளமை இதோ இதை என்று , அடுத்தடுத்து நாட்டுக்குறிச்சி , ஹம்ஸநந்தி , அடாணா , பிலஹரி , ஹசைனி ,கதனகுதூஹலம் என்று ராகமாலிகையில் அரங்கையே ஆட்டிப்படைத்தார் தலைவர். அடுத்தடுத்து ராகங்களை கணப்பொழுதில் மாற்ற , பிரமாதமாய் வாசித்தனர் வரதரும் நெய்வேலியாரும். அடுத்து காப்பியில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி அசத்தினார் தலைவர், இந்த காப்பி மீது அவருக்கு தனி காதல் உண்டு. அதை ஸ்வரத்தில் உணரலாம் , இந்துஸ்தானி கூறுகளை உள்ளடக்கிய அருமையான ஸ்வரம் , தொடர்ந்து தனி , நெய்வேலியார் வழக்கம் போல் அசுர வாசிப்பு , வெங்கட்ரமணன் நேர்த்தியான கஞ்சீரா , கிடைத்த 11 நிமிடங்களில் இருவரும் மிக அருமையாய் வாசித்தனர். இரங்கோ மிகச்சிறியது , இதிலும் தனியின்போது அத்தனை பேர் எழுந்து செல்வது மிகவும் வேதனையாக இருந்தது. நெய்வேலி வெங்கடேஷ் என்னும் மகா வித்வானின் அருமை உணர்ந்தவர்களா இந்த ரஸிகர்கள் என்பது ஐயமே. என் பணி வாசித்திருப்பதே என்று தலையாட்டியார் கம்பீர தனி தந்தார். மொத்தத்தில் ராகம் தானம் பல்லவி சஹானா ஓஹா என்று அரங்கேறியது.


9) இந்தோளத்தில் அமைந்த புரந்தர தாஸரின் யாரே ரங்கண்ணா யாரே கிருஷ்ணண பாடினார் தலைவர் என்ன திருமலை யார் என்று தெரியாமலா பாடியுள்ளார் புரந்தரர் என்று கோபாலகிருஷ்ணபாரதி நையாண்டி செய்ய திருமலை கோபமாமலையானான். கோபா மாட போது என்று அவனுக்கு அறிவுரை வழங்கி பாடலில் ஈடுபடுத்தினேன். கோபாலகிருஷ்ணணா என்று தலைவர் பாட கோபாலருக்கு வாயெல்லாம் பல். வேணு விநோதனை ஆசை தீர தலைவர் பாடல் மூலம் தரிசித்தது அவை.


10) பெஹாக் அடுத்து , வந்தருள்வாய் சுந்தரிமணி பட்டாபி ராமைய்யர் பாடல் காதில் தேனாய் பாய்ந்தது ப்ரஹந்நாயகியின் பாலனை பாலித்து மகிழ்ந்தோம் பெஹாக்கில் , ஜாவளி வகை பாடல் இது , பெஹாக் கேட்பது ரம்மியம் என்றால் இந்த ஜாவளி இன்னமும் அமிர்தமாய் அமைந்தது.


11) பெற்றதாய் தனை மக மறந்தாலும் என்று தலைவர் சிந்துபைரவியில் கசிந்துரிக் பாடினார் வள்ளலாரின் விருத்தத்தை , உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே என்னே வரிகள் என்னே உருக்கம் என்னே பக்தி , அடடா விருத்தம் என்றால் அது சஞ்சய் விருத்தம் ஒன்றே , எதிர்பார்த்தபடி கோபாலகிருஷ்ணபாரதியின் இதுவோ தில்லை சிதம்பர சேத்திரம் பாடினார் , ஈசன் இருப்பிடம் தில்லை இதுவா என்கிறார் கோபாலர் ஆனால் நமக்கு சஞ்சய் எங்கு இதை பாடுகிறாரோ அங்கே சிதம்பர சேத்திரம் கண் முன் வந்துவிடும் , அத்தனை அர்பணிப்பு பாடலில் , உருக்கமாய் சென்ற பாடலில் நெய்வேலியாரை காட்டி இதுவோ தில்லை என்று பாட அவர் சிரித்தவாறு வாசித்தார் , மதுரம்பொழிந்திடும் மறையோரிருப்பிடம் வரிகளில் மதுரத்தை பொழிந்து பாடினார் தலைவர் மாமுனிவர்தவம் வாழும்பெருமிடம் இந்த வரி கேட்ட மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் பொங்கியது , ஆம் எங்கள் சங்கர் இருந்திருந்தால் இந்த வரிக்கு நிச்சயம் விழியோர கண்ணீர் துடைத்திருப்பார் , ஒரு கணம் அரங்கில் அவர் இருந்தது போலவே உணர்ந்தோம். பதவிபெறுந்தொண்டர் பணிந்துவருமிடம் பலதெய்வமுந்தொழும் பரகதிதருமிடம் என்று தலைவர் உருகி பாட மருகி கேட்டு ஆன்ந்த கண்ணீர் உகுத்தோம்.


மங்களம் பாடி முடிக்க மணி 9.15 மூன்று மணிநேரம் மிக அழகாய் திட்டமிட்டு செயலாற்றிய கச்சேரி , நாயகனின் இந்த நாயகி கச்சேரி தம் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது , ரஸிகர்களின் ப்ரியனான தலைவரின் அடுத்த ரஸிகபிரியா கச்சேரி நம்மை அழைக்க அலுவலகத்திலிருந்து 85கிலோமீட்டரில் உள்ளது சிறுசேரி சிறுவா என்று பேய் போல் நகைத்தனர் திருமலையும் கோபாலரும்.

 
 
 

Comentarios


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page