இசை குஞ்சரன் சஞ்சய் தர்பார் ! இசைக்குத்துணை சஞ்சய் சபா , பாக்கியம் என்பது இவர் தரிசனமே !
- ARAVINDAN MUDALIAR
- Aug 19, 2022
- 4 min read


சஞ்சய் சபா புண்ணியத்தில் மீண்டும் ஒரு மாதாந்திர கச்சேரி , நம் பிறந்தநாளுக்கு முந்தைய நாளில் தலைவரின் பரிசாய் அமைய , மயிலை , அடையாற்று மக்களின் வாகன நெரிசலில் அரங்கு வந்து சேர வர்ணம் பாதியில் தான் பாக்கியம் நமக்கு , தலைவருடன் நெய்வேலியார் , வரதர் தங்க ரேதஸ் . பட்டியல் வெளியீட்டு விழா காலையில் நடந்தேரியிருக்க , இத்தனை உருப்படிகள் , பைரவி , ஹமீர் , காம்போஜி என எப்படிப்பாடுவரோ என்று வியந்தோம் , நஞ்சுண்டானை பாடும் நாவலர் பல்லை கடிக்க , திருந்தாதீர்கள் என்றி இருவரையும் திட்டிவிட்டு , நாம் கர்நாடக சங்கீத புலியாரின் வர்ணத்தை நம் அடலேறு பாடுவதை ரசிக்கத்துவங்கினோம்.
1) டைகர் இயற்றினார் பல பண் , என்றாலும் காப்பியில் வைத்தோம் கண் ,
1940களில் தலைவர் குரு கிருஷ்ணமூர்த்திக்கு குரு டைகர் வரதாச்சாரி ,
வரதாச்சாரி அல்ல வர்ணத்தை வரமாய் தரும் இசை ஆச்சாரி ,
டைகர் வர்ணம் வரணும் அஃதாவது அருவி விழவேண்டும் என்பாராம் தலைவரின் முக்தாய்,சிட்டை ஸ்வரங்களும் அருவியென
விழ அள்ளிக்குடித்தோம்
அருவி பாறையில் மோதும் ஓசையை மிஞ்சியது
நெய்வேலியாரின் வாசிப்பு ,
வரதாச்சாரியாரின் காப்பி அருவிக்கு மகுடம் சூட்டி வாசித்தார் வரதர் ,
பாடலின் முடிப்பு காப்பி ரசம் பிழந்து வழங்கினார் பாடற்கரசர்.
2) தலைவர் முன்னோட்டத்தில் பகர்ந்த
சமத்துக்கு வருதல் பாடல் பாடினார்
ஹம்ஸத்வனி வாதாபி கணபதிம் பஜே முத்துசாமி தீட்சிதர் உருப்படி ,
இந்தப்பாடலை ஒரு பிடி பிடித்திருப்பார் சேஷூ ,
தலைவர் தும்பிக்கை நாயகனை பாடி பெற்றார் பேஷூ ,
வாரணாஸ்யம் வரபிரதம் வரமாய் வந்து விழுந்தது ,
பூதாதியில் சேவித்தோம் வினைகளை களையும் மூர்த்தியை ,
வீடராகினம் வினத யோகினத்தில் எத்தனை நளின சஞ்சய் சங்கதிகள்
இவர்தம் பிறப்பே சங்கீத உலகின் விஸ்வகாரணம்
புறா கும்பவில் எதிர்பார்த்தவாறு காட்டினார் விண்ணை
ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டத்தில் தாண்டினார் விண்ணை
வாதாபி கணபதியில் துவக்கினார் நிரவல் ஸ்வரத்தை
ஸ்வரத்தின் ஆளுமை கூட்டியது இசை ஜூரத்தை
வழமைபோல் முதலில் ஸவரத்தோடு செல்ல கொஞ்சினார்
பின் மையல் கொண்டார் , பின் ஸ்வர மலை நிறுவினார் ,
ஸவ்ர மலை , இசை எரிமலையாய் , கல்பனாஸ்வரத்தை கக்கியது ,
மொத்தத்தில் நீண்ட காத்திருப்பின் அரும்பயனாய்
முதலாம் நரசிம்மனை போல்
வாதாபியை கொண்டோம் , கொண்டாடினோம் .
3) சஞ்சய் சபா அடுத்து , அஃதாவது சஞ்சய் சபாவில் சஞ்சய் தர்பார் , தர்பாரை தலைவர் எடுத்த எடுப்பில் அப்படி கொணர்ந்து நிறுத்துவது என்றுமே தனிசிறப்பு , நீண்ட ஆலாபனைக்கு தயாரானோரை ,
ஸ்ரீ வேணுகோபால தேவா நீ வா என்று பாடத்துவங்கினார் ,
கோடீஸ்வர ஐயரின் அரிதான பாடல் ,
ஆம் ஆறுமுகனேயே பாடும் இவர் ,
அரியை பாடுவது அரிதிலும் அரிதல்லவா
நெய்வேலியாரின் அருமையான பின்புலத்தில் பாடல் பிரமாதப்பட்டது
வரதரின் வயலின் வளைந்த வளைந்து தர்பாரை வாசித்தது
சங்கதிகளின் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மமன்னர் சஞ்சய்
முகில் வண்ணனை பாட பாட அரங்கு மகிழ்ச்சியில் மூழ்கியது.
4) ஆலாபனை ஜனரஞ்சனி , அடுத்த நாள் பிறந்தநாளானலும்
இந்த ஒரு ராகத்திற்காகவே வந்தே தீர்வதெனவந்தோம்
அத்தகு அளவிலான ஒரு பிரமாதமான ராகம் ,
அதிலும் தலைவரின் முத்திரைகள் நிரம்பி வழியும் இந்த ஜனரஞ்சனி ,
இவரின் நாடாடின , விடஜாலதுராவில் சொக்கிய நாட்கள் தான் எத்தனை ,
ஆலாபனை ஜனரஞ்சனி நம்மை வழமை போல் திக்குக்காடச்செய்தது ,
எத்தனை வனப்பு மிக்க ஆலாபனை , எத்தனை நளினங்கள் , கார்வைகள்
மேலே சென்றாலும் கீழே சென்றாலும் தலைவரின்
அந்த நகாசு வேலைகள் தரும் பிரமிப்பு
வரதர் வாசிப்பில் மீண்டும் ஜனரஞ்சனி
நமக்கு ஜென்ம சாபல்யத்தை அளித்தது ,
அம்பர சிதம்பரம் சதானந்தமே என
முத்துத்தாண்டவர் பாடலை துவக்கினார் ,
மனம் தானே செம்பொற்மலை வழிக்கு காத்திருந்து கசிந்தோம் ,
சம்போ சிவசங்கரவில் கோபாலகிருஷ்ணபாரதியை தேடியது கண்கள் ,
அந்த சம்போ சிவசங்கரவில் தலைவரின் சங்கதிகள்
அரங்கை புரட்டியெடுத்து ,
சிட்டைஸ்வரம் இன்னும் மெருகு கூட்டியது தில்லை கூத்தன் பாடலுக்கு ,
சரணத்தில் அந்த பொங்கு புவி அசையவில்
அரங்கையே அசைத்துப்போட்டார்,
மங்கை சிவகாமி மாத்திரம் அல்ல
அனைவரின் மனம் மகிழவைத்தார் தலைவர்,
நெய்வேலியாருக்கு வரதருக்கு இந்த பாடலெல்லாம்
இசை இனிப்பு போல் அள்ளிவிழுங்கினார் வாசிப்பில்.
5) அடுத்து ஹமீர் கல்யாணி அல்ல அல்ல இது ஹனிகல்யாணி
ஒரு இரண்டு நிமிட குறுஆலாபனையில்
நம்மை இமயத்தின் உச்சியில் உட்காரவைத்தார் அத்தனை குளுமை
ஸ்வாதி மாமன்னரின் காங்கேய வசனதராவை துவக்கினார் தலைவர்
அந்த ரங்க ஸ்தலவில்தான் எத்தனை சௌக்கியம் ,
சரணத்தில் மோஹன ம்ரிது ரஸவில் எங்கேயே வானத்தில் பறந்தோம்,
தலைவரின் பேரின்ப வெள்ளத்தில்
ஆங்காங்கே நீர்சுழல் அமைத்து நம்மை இசையில் சிக்க வைத்து
இன்பம் தந்தனர் வரதரும் நெய்வேலியாரும்.
6) ரவிச்சந்திரிகா நிரவதி சுகதா தியாகைய்யர் பாடல் அடுத்து
தனக்கே உரிய தனித்னமையான பாங்கில்பாடலை தொடுத்து
வான்வழிக்கு இட்டுசெச்னறார் நம்மை அரங்கிலிருந்து எடுத்து
நெய்வேலியார் துள்ளல் இசை இங்கே வரதரின் வசீகரவாசிப்பு அங்கே
இசை தேவதை மூவரில் யாரைத்தான் நான் லயிப்பது என திகைத்தாள்
முடிவில் மாமத மரகதவில் மனதை தொலைத்தாள்
சற்றே பொறு தாயே சிட்டை ஸ்வரத்தையும் கேட்டுவிட்டு செல்லென
ஸ்வரச்சொல்லை எடுத்து வாய்ப்பாட்டு சிற்பி சஞ்சய்
எத்தனை எத்தனை முறை கேட்டாலும் பிரதிமுறையும் புதுமை புகுத்தி
முடிப்பில் ஒரு சண்டமாறுத்ததை நிகழ்த்தி
பேரிசையில் நம்மை நிறுத்தி கிறுகிறுச்செய்தார் இசைப்பேரரசு !
7) இசைநாயகன் அடுத்து தந்தது கச்சேரி கதாநாயகன் பைரவி ஆலாபனை நாதஸ்வர பிடிகளின் ராஜா சஞ்சய் சுப்ரமணியன் எடுத்த எடுப்பிலேயே ஏற்றம் தந்தார் பைரவி ஒரு ஊழிக்காலத்து பெருமழைக்கான அத்தனை குணாதிசயங்களோட் அரங்குவலம் வந்தது, தலைவர் ஆலாபனையில் இசை ஜாம்பவான்களையெல்லாம் நினைவு படுத்தினார் , அந்த தரல்லாவிற்கு தஞ்சை ஜில்லாவையே எழுத்தி வைக்கலாம் . பிருகாக்கள் தலைக்காவேரி போல் பாய்ந்தது , தனக்கே உரியே மேற்கத்திய நோட்டுக்கள் விளாசினார் தலைவர். எதிர்பார்த்தபடி முடிப்பில் ரோணன்னா தாரண்ணாக்கள் வர ஒரு எம்.டி.ஆர் தும்மலும் போட்டார்.வரத பைரவி வகையாய் அமைந்தது , தலைவர் போல் வரதரின் இசையாளுமை வார்த்தைக்கு அப்பாற்பட்டது , இவரின் இசை ஞானம் நாம் என்று சிலிர்க்கும் ஒரு விடயம், அருணாசல கவியின் யாரோ இவர் யாரோ துவக்கினார் தலைவர் , நாம் பன்முறை கூறியபடி , ஆதி தமிழ் இசை மூவரை ஏதோ பெயருக்கு பாடிவிட்டு செல்லாமல் , கச்சேரியின் பிரதானப்பாடலிலேயே பாடும் தமிழ் ஆர்வலர் சஞ்சய் , பாடல் துவங்கியதும் சந்தி பிம்பத்திற்கு காத்திருந்தோம் , என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார் என்று தலைவர் பாட இதையே நிரவல் ஆக்குவார் என்பதை உணர்ந்தோம் , எதிர்பார்த்தபடியே அந்த வரிகளை நிரவலாக்கி பிரமாதமாய் செய்தார் பாடல் , இது போன்ற பாடலுக்கு தலைவருக்கு நெய்வேலி , வரதர் போல் வாசித்தளிப்பவர் யாருமில்லை , என்னமாய் இசை துவந்தம் புரிந்தனர் மூவரும் , தலைவரின் கிரியாஊக்கிகள் இருவரும் என்பதை மீண்டும் நிரூபித்தனர் , தலைவர் மதப்பா மப்பாத பா என்று அப்படியே ஸ்வரப்பிரஸ்தாரம் சென்று முடித்தார் , அருமையான பைரவி கிருதியை , தொடர்ந்து நெய்வேலியாரின் எட்டு நிமிட தனி எட்டாத இடமெல்லாம் எட்டி வாசித்தார் , இவர் தொடாத சம்பிரதாயம் இல்லை , வாசிக்காத வாசிப்பு இல்லை , பொதுவாக ஒன்றை சொல்வார்கள் , கர்நாடக இசை கச்சேரியில் வயலினிஸ்டும் மிருதங்கிஸ்டும் மெழுகுவர்த்திகள் என்று ஆனால் தலைவரின் மேடையில் இருவரும் ஒளி தரும் அகல்விளக்குகள் தலைவர் எண்ணெயாக இவர்களை சுடர்விடச்செய்கிறார் , இத்தனை சுதந்திரம் வேறு எந்த வாய்ப்பாட்டு வித்வானும் தருவதில்லை , அதே போல் இந்த மூவரின் ஒத்திசைவு போல் நாம் கண்டதில்லை காணப்போவதுமில்லை.
8) யாரோ என்று கேட்டது போதாதென்று
இவனாரோ என்று காம்போதியில் தொடர்ந்தார் ,
தலைவர் பாடுவார் ஆயிரம் கிருதி
அரங்கை அதிரவைப்பார் அனேக ஆலாபனையால்
ஆனாலும் அவரின் காம்போதிக்கு ஏதிணை
அந்த ராகத்தின் சொரூபத்தை காட்டும் கலை
காம்போதியின் கருணை ரசத்தின் நிலை
சஞ்சய் சுப்ரமனியன் காம்போதி பாடுவதில் மலை
கவிகுஞ்சர பாரதி அஃதாவது கோடீஸ்வர அய்யரின் பாட்டனார் பாடல் ,
அந்த யாதொன்றுமில் யாதொரு சந்தேகமும் இல்லாமல்
அரங்கை ஆக்ரமித்தார் ,
சிவகங்கை மன்னர் பாடலாசிரியரின் புலமையில்
மகிழ்ந்தளித்த பட்டம் சவிகுஞ்சரம்
இன்று சிவகங்கை சீமையில் தலைவர் கச்சேரி அமைந்திருந்தால் இசைகுஞ்சராமகியிருப்பார் சஞ்சய் ,
9) விருத்த நாயகன் எடுத்தது கந்தர் அலங்காரம் விழிக்குத்துணை
கேட்டோர் கசிந்து அழத்தக்க விருத்தம்
முருகா முருகா எனத்தலைவர் பாட உருகா மனமும் உருகும்
மாலோன் மருகனை சிந்து பைரவியில் உருக்கித்தந்தார்
அந்த நாலாயிரம் கண்ணில் தான் எத்தனை உருக்கம்
வாவா வேல்முருகா என்று பாட அரங்கே கந்தன் அநுபூதி பெற்றது
மாயூரம் விஸ்வநாதர் பாடலை பாட பாட வேல் முருகன் மயிலேறி வந்தார் மயிலையைத்தாண்டி .
10) துங்கா தீரவிஜாரம் ராகவேந்திர யதிராஜம் கமலேஷ விட்டல பாடல்
தலைவர் இந்த பாடல் பாடி கேட்பது இதுவே முதல் முறை
சாலக பைரவியில் தலைவர் தேனாய் பாடினார்
கச்சேரியின் கடையில் பாடுவதற்கு ஏற்ற பாடலாய் அமைந்தது இனிமை
ராகவேந்திரரை தலைவர் உருகி பாடுவது கேட்டு நாம் மீண்டும் மந்தராலயம் சென்றோம் !
11) அடுத்த இரண்டு நாளில் சுதந்திர நாள்
அதிலும் 75ஆம் சுதந்திர திருநாள்
சூழலுக்கு பாடும் சூரன் சும்மா இருப்பார் திலங்கில் எடுத்தார்
சாந்தி நிலவ வேண்டும் காந்தி மகாத்மா கட்டளை அதுவே
அந்தோ பரிதாபம் நாட்டில் காந்தி படும் பாடு
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி வரிகளில் கண்ணீர் வந்தது
கொடுமை செய் தீயோர், மனமது திருந்த நற்குணம் அது புகட்டிடுவோம்!
என்று சேதுமாதவ ராவ் எழுதியுள்ளார்
ஆனால் இப்போது அப்படியா உள்ளனர்
திடம் தரும் அகிம்சாயோகி நம் தந்தை ஆத்மானந்தம் பெறவே
என்று தலைவர் பாட பாட
நம் நாட்டின் பெருமையை எண்ணி பெருமிதம் கொண்டோம் , கொடியோர் செயல் அறவே
என்ற பாரதிதாசன் வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது !
எங்கும் சாந்தி எங்கும் சாந்தி என்று தலைவர் அருமையாக முடித்தார் !
இந்த பாடல் பட்டியல் வெளியிடும் கலாச்சாரம் துவங்கிய காலத்தில் தலைவர் அறிவித்தது , பட்டியலில் இல்லாத பாடலும் பாடுவேன் ! அந்த அறிவிப்பு கடந்த இரண்டு மூன்று கச்சேரிகளாக அறிவிப்பாய் மட்டுமே உள்ளது , பவமான சுதுடு பாடி எதிர்பார்த்தபடி , வாழிய செந்தமிழ் பாட சஞ்சய் பித்தர் குழாம் முதலில் எழுந்து நிற்க ஏனையோர் நிற்போமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி முடிக்கும் போது எழுந்து நின்றனர் , என்னே இவர்கள் தேசப்பற்று , மொழிப்பற்று ! மீண்டும் ஒரு தலைவர் கச்சேரிக்கு காத்திருக்கத்துவங்கினோம்.
Comments