ஆரவார ஆபேரி ! முருகாவதாரம் எடுத்த சுப்ரமணியர் கச்சேரி !
- ARAVINDAN MUDALIAR
- Dec 30, 2021
- 5 min read


ராஜாஅண்ணாமலை மன்றம் பாரிமுனையின் தவிர்க்க இயலாத பிரம்மாண்ட கலைவேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் , தமிழிசைக்கு எண்ணற்ற ஆண்டுகளாக தன் பங்களிப்பைத் தரும் களம் , தலைவர் இங்கு வருடந்தோறும் பாடுவார் நாமும் வருடந்தோறும் பிள்ளை குட்டிகளோடு வந்துவிடுவோம் , கடந்த ஆண்டு மாத்திரம் கோரோனா கோரத்தாண்டவத்தால் வரும் வாய்ப்பை இழந்தோம். இவ்வாண்டு வழமை போல் அலங்கார விளக்குகள் ஜொலிக்க அருமையான ஒளியமைப்பில் மிளிர்ந்தது அண்ணாமலை மன்றம். அரங்கில் கடந்த முறை வந்தபோதே இருக்கைகள் மாற்றியிருந்தனர் , தரை புதிதாக போடப்பட்டது போல் இருந்தது. மேடையில் தலைவரோடு தலையாட்டி சித்தர் வரதநாயனாருடன் கஞ்சீரா கலைஞர் கே.வி.கோபாலகிருஷ்ணன் , ராகுல் தம்பூரா , பாரம்பரியம் மிக்க அரங்கில் பாராம்பரியம் காக்கும் நாம் பாவுக்கரசின் கச்சேரி துவங்கிற்று ஆறரை மணிக்கு , வழமை போல் சைவ வைணவ குண்டோதரர்கள் வந்து சேர்ந்தனர் அவைக்கு , அட்சாய ஆதித்தயாவை வம்பிழுத்துவிட்டு , ஏதும் தெரியாதது போல் அமர்ந்தனர்.
1) மாலை நேரத்தில் முதல் பண்ணாக காப்பி தந்தார் தலைவர் , நம் சங்கீதவயமா பாடியது தீவி வரதாச்சாரியின் பாடல் , தேவாதி தேவா எங்கேயோ கேட்ட வர்ணமாய் இருக்கிறது என திருமலை யோசிக்க , இங்கேயே தான் பாடினார் 2018இல் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , அடடே ஆமாம் என்றும் நானும் திருமலையும் திருத்தலைகளை ஆட்டினோம் , தலைவர் இதற்குள் காப்பியில் ஸ்வரத்தில் அரங்கை ஆட்டுவிக்க ஆரம்பித்தார் , வர்ணம் வரணும் என்பாராம் டைகர் , அதாவது வர்ணம் பாடும் போது அது நதி பாய்வதைப்போல் பாய வேண்டும் , தலைவரின் குரு 1940களில் அண்ணாமலை பல்கலையில் டைகரிடம் படித்தாராம் , அப்போது டைகர் டேய் பசங்களா ஒரு வர்ணம் வருதுடா எழுதிக்கோங்க என்பாராம். அதுபோல் பாய்ந்தது தலைவரின் ஸ்வரங்கள் , நெய்வேலியாரும் வரதரும் அருமையாக பாய காப்பி அரங்கெங்கும் பாய்ந்தது.
2) அடுத்து தலைவர் நாலந்திருமுறை நாவுக்கரசர் பெருமானின் தலையே நீவணங்காய் பந்துவராளியில் பாடினார் , தலையே தலை பற்றி பாடியதும் நமக்கு தலைகால் புரியவில்லை , நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ என்று தலைவர் பாட , திருமலை முறைக்க , ஓ சைவப்பாடல் அல்லவா என்பதை உணர்ந்தோம். தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன் என்று தலைவர் பாட பாட திருமலை தன் திருபற்களை நறநறவென கடிக்க துவங்கினான் , தலைவர் என்னுள்ளே தேடி கண்டு கொண்டேனில் நிரவல் அமைத்தார் , நாம் தலைவர் பாடலின் உள்ளே தேடி இவரின் பேரிசையை கண்டு கொண்டோம், முந்தைய நாள் ஒரு மூன்று மணி நேர கச்சேரி தந்த எந்த அறிகுறியும் காட்டாமல் இப்படி பாட இவர் ஒருவரால் தான் முடியும் என்பதை தேடி கண்டு கொண்டோம் , தேடினாலும் கிடைப்பதற்கரிய பொக்கிஷம் சஞ்சய் என்றால் கோபாலகிருஷ்ணபாரதி ,ஹூம் ஆமாம் இப்போ சொல்லுவீர் என்றான் திருமலை. வரதரும் கேவிஜியும் அருமையான நிரவல் வழங்கிட தலையாட்டியார் உற்சாக ஊற்றானார். தலைவர் அவரின் உற்சாகத்தை இரட்டிப்பாக்க நிரவல் ஸ்வரம் தந்து கச்சேரியின் இரண்டாவது பாடலிலேயே அரங்கை தன் முழு ஆளுமைக்குள் கொண்டுவந்தார் , பந்துவராளியில் தலைவரின் அசுர வேகஸ்வரம் கேட்போரை சிலிர்க்க வைத்தது. ஸிலிர்ப்பை தொடருங்கள் என்று வரதநாயனார் அருமையான வாசிப்பைத் தர நமக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தேடி தேடி தலைவரை கேட்கும் பித்தர் கூட்டம் குதூகலத்தின் உச்சத்தில்.
3) ஆலாபனை முகாரி , பல்வேறு முகாரிகள் தலைவர் பாடி கேட்டிருந்தாலும் அதன் உருக்கம் என்றுமே நம்மை உருக்கும்.எனக்கு என்னவோ ஆலாபனை துவக்கம் முதல் எந்த நீ வர்நிந்து சபரி கேட்டது , அடேயப்பா என்னமாய் ஆலாபனையில் ஒரு ராகத்தின் மொத்த பாவத்தையும் இப்படி துவக்கத்தில் இவரால் மட்டுமே காட்ட இயலும். பக்தியின் மிக முக்கிய உருப்பொருள் கருணை ரசம் அதை காட்டுவதில் முகாரிக்கு ஈடு இணையில்லை . வரதர் முகாரியில் மீண்டும் நம்மை உருக்கி எடுத்தார் , கோபாலகிருஷ்ணரும் திருமலையும் ஒருவர் துண்டில் ஒருவர் மூக்கை சீந்தினர். தலைவர் பாடியது ராம நாடகர் அருணாசல கவிராயரின் அறிவார் யார் உன்னை அறிவார் , வனவாசத்திற்கு செல்லும் வழியில் விராடனை வென்ற பின் விராடன் சாபவிமோசனம் பெற்று ராகவனை நோக்கி பாடும் பாடலாக இயற்றியுள்ளார் அருணாசல கவி. தலைவர் பல்லவி அனுபல்லவியில் முகாரியில் அளவளாவி விட்டு சரணத்தில் வேதத்தின்மேலே வேதாந்த நாதத்தின் மேலே ஞானிகள் போதத்தின் மேலே விளங்கும் பாதத்தை என்மேலே வைத்தாய் வரிகளை பாடி அந்த காட்சியையே நம் கண் முன் நிறுத்தினார். தலைவர் பாடல் கேட்க கேட்க நாமும் சாபவிமோசனம் அடைந்தோம். திருமலையும் கோபாலரும் அது எப்படி நாங்கள் உன் கூட இருக்கும்போது அப்படி சொல்லலாம் என்று மிரட்டினர்.
4) பாரிமுனையை தழுவியது ஆலாபனை சங்கராபரணம் , அருகில் இருந்த கடற்கரையின் குளுமையை விஞ்சியது தலைவரின் ஆலாபனை , நீண்ட நாளாயிற்று இவரின் சங்கராபரணம் கேட்டு என்று மெய்மறந்தோம். கார்வைகள் நிறைந்த ஆலாபனை தந்தார் தலைவர் , நாதஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டில் தலைவர் தந்த சங்கராபரணம் மிகவும் ஏற்புடையதாக இருந்தது , என்னமாய் பிருகாவுடன் தருகிறார் ஆலாபனையை , அரங்கில் மிக மெல்லிய அளவில் இருந்த குளுகுளு வசதியை மட மட வென விஞ்சியது தலைவர் ஆலாபனை , கட கட வென குளிர் நம்முள் பாய அட அட என்று கேட்டோம் சுப்ரமணியர் சங்கராபரணத்தை ஏறத்தாழ13 நிமிடங்கள் தலைவர் ஆலாபனை என்னும் மாயப்பரியில் நம்மை அமர வைத்து பாரிமுனை சுற்றி வந்தார் . வரதர் சங்கராபரணத்தை வயலினில் தவழவிட மீண்டும் குளிர்ந்தோம். தலைவர் ராமசாமி சிவனின் முத்துகுமாரையனே பாடினர் பக்தர்கருள் மெய்யனேவில் மெய்சிலிர்க்க பாடினார் தலைவர். அனுபல்லவி நித்தம் அன்பு செய் குறத்தி ஒருத்தியுடன் சித்த வாழும் நாதா , உத்தமர் மனத்தில் வாழும் பாதா வரிகளை பாடும் போது துள்ளினார் , பாடலின் பொருள் உணர்ந்து பாடுதல் எனும் பேராளுமை தலைவரின் சொத்து. சரணம் ஆசையோடு குகதாசன் வாழ்த்தும் வரிகளில் நெய்வேலியாரின் நாதம் கேட்போரை பித்துக்கொள்ள செய்தது. முத்துகுமாரைய்யனேவில் நிரவல் ஸ்வரம் துவக்கினார் தலைவர் , தன்னையும் அறியாமல் ஒரு வித குஷி மூடுக்கு வந்தார் அது வரதர் நெய்வேலியாருடன் செய்த பார்வை பரிமாற்றத்தில் தெரிந்தது , சரவெடி கட்டாயம் உண்டு என்று அவை உற்சாகமாய் கேட்டது தலைவர் ஸ்வரத்தை , எதிர்பார்த்தபடி உட்சபட்சம் சென்று பிரமாதப்படுத்தினார் சங்கராபரணத்தை.
5) குந்தளவராளியில் ஒரு மினி ஆலாபனை செய்துவிட்டு திருவள்ளுவரின் ஒழுக்கம் உடைமை அதிகாரத்தை மெட்டமைத்த மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் பாடினார் தலைவர். பாடல் துவக்கியதும் ஆதித்யா என்னப்பா திருக்குறள் பாடுறார் என்றும் ஆச்சர்யப்பட்டான். ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் அடுத்து குந்தளவராளியில் குதூகலமாய் வந்தது , பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை பாடிவிட்டு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலர் தார் குறளில் விளையாடி விட்டு ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் பாடுபாக் கறிந்து பின் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி பாடினார் தலைவர் , இப்படி இவர் எல்லா குறளும் பாடினால் மாணக்கர் மனப்பாடப்பகுதியில் மதிப்பெண்களை வாரிக்குவிப்பர் என்றார் கோபாலர்.
6) அடுத்து அரங்கை நாடியது ஆபேரி , பொன்னி எனும் காவேரி பாரிமுனை வந்தது போல் இருந்தது , ஆபேரியில் நகுமோமு கேட்டு சிலிர்த்த நொடிகளெல்லாம் கண்முன் வந்து சென்றது. காருக்குறிச்சியாரும் ஆபேரியில் அசுர சாதகம் செய்துள்ளதாக திருமலை நவிலினான். தலைவரின் ஆபேரி ஆபரணங்கள் பூண்ட அழகு மங்கையாக நாட்டியம் ஆடியது , கமக நாயகன் ஆலாபனையில் தனக்கே உரித்தான நகாசு வேலைகள் புரிந்து தந்தார் , சமீப கச்சேரிகளாக தலைவர் உச்சஸ்தாயி சென்று அங்கேயே நின்று அரங்கை பரவசப்படுத்துகிறார் அது ஆபேரியிலும் பாங்குற அரங்கேறியது. அரங்கமே தலைவரின் ஆபேரியில் ஆனந்தக்கூத்தாடியது , தொடர்ந்து வரதர் ஆபேரி வர்ணஜாலம் காட்டியது , கேட்போரை கிறங்கடிக்கும் தனிப்பெரும் திறமை வரதுவின் சொத்து. தலைவர் ஆபேரி தானத்தை துவக்கி மீண்டும் ஒரு அதி அற்புத தானத்தை அரங்கிற்கு வழங்கினார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் இந்த தான் நிதானத்தையே கையிலெடுத்தது , தானத்தின் கடை பகுதியில் தலைவர் வேகத்தை எடுக்க நாம் உற்சாகத்தில் துள்ளினோம். அம்பா மனம் கனிந்து கடைக்கண் பார் திருவருள் தரும் ஜெகதம்பா எனும் பல்லவியை அருமையாக அளித்தார் ஆபேரியில் , பாபநாசம் சிவன் பாடல் வரிகள் இது , பல்லவியில் பளீச்சென்று வாசித்தார் கே.வி.ஜி , வயலின் பல்லவி வரிகளை அப்படியே பாடியது , தலையாட்டி சித்தர் அருமையான நதா ஜாலத்தை தர பல்லவி படு ஜோராய் அரங்கேறியது , அம்பா பாரிமுனை வந்து அருள்பாலித்தார். தலைவர் ஸவரம் துவக்கி அம்பாவில் மேலும் அம்ருதம் தந்தார் , ஸ்வர ஜாலத்தை நெய்வேலியாரை வரதரை வம்பிழுத்து விட்டு , ராகமாலிகையில் முதலாவதாக நாட்டுகுறிச்சியில் தலைவர் நம்மை வழிமறைத்திருக்குதேவிற்கு கொண்டு சென்றார் , ஒரு காலத்தில் துரை முருகன் அவர்கள் கேட்டும் தலைவர் இதே அவையில் பாடினார் , அதற்குபின் நாட்டுகுறிச்சி வாய்ப்பை நாம் பெறவில்லை , என்னே சவுக்கியம் தலைவர் ஸ்வரத்திலும் வரதர் ஸ்வரத்திலும் , அடுத்து வராளியில் வளம் காட்டியது ஸ்வரம் , மீண்டும் ராகமாலிகையில் தலைவர் வராளி பாடினார் , அடுத்ததாக மிஷ்ர சிவரஞ்சனி , சுந்தராவிற்கு உற்சாக தர தலைவர் அடுத்து அதை ஸ்வரம் பாடினார் , என்னே ஒரு வேறுபாடு காட்டுகிறார் ஒரு ஒரு ராகத்திலும் என்று கோபாலர் உணர்ச்சி வசப்பட்டார், மீண்டும் ஆபேரி வந்து ஸ்வரப்பிரஸ்தாரம் , மீண்டும் ஓர் தன்னேரில்லா தனி , இம்முறை நெய்வேலியாருடன் கோபாலகிருஷ்ணன் , இந்த இருவர் கூட்டணி என்றுமே அருமை , இருவரும் தத்தம் வாத்தியங்களில் அரங்கை அப்படி இப்படி நகரவிடாமல் தனியால் ஆண்டனர் .
7) ஆபேரியைத் தொடர்ந்து சஹானாவில் இனி என்ன பேச்சிருக்குது போம் போம் என்றார் தலைவர் , வைத்தீஸ்வரம் கோவில் சுப்பராம அய்யர் பாடல் , பக்தை கனவில் கண்ட முருகரை குறித்த பாடல் , மாண்பமை அமைச்சர் துரை முருகன் முன் தலைவர் தப்பிதம் போதாதோ முத்தய்ய வேலரே பாடினார் , மனதிற் கிசைந்த படியாச்சே மட்டுமீறிப் போச்சே வரிகளில் குறும்பு கொப்பளித்தது , குசும குந்தள வள்ளி மணாளரே சுப்பராமன் தமிழ்க் கிசைந்த வேலரே என்று சஹானாவில் நீண்ட நாளைக்குப்பின் நம்மை நனைத்தார்.
8) அடுத்து அரங்கே எதிர்பார்த்த காணி நிலம் வேண்டும் பாரதியார் பாடல் தமிழிசை சங்க கச்சேரியில் , ராஜாஅண்ணாமலை மன்றத்தில் ,அடடா வேறென்ன வேண்டும் இந்த மானிட ஜென்மத்திற்கு . ராகமாலிகை பாகேஸ்ரீ ஹரிகாம்போதி சிந்துபைரவியில் தலைவர் பாட பாட நமக்கு பூரிப்பு , நம்மை எப்போதும் உலுக்கும் உன்னத வரிகள் என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும் அதை தலைவர் பாடும் போது கைதைதட்டலில் அவை தெறிக்கும் ஆனால் இப்போது எல்லாம் பக்குவப்பட்டு விட்டோம் ஆகவே அமைதியாக பாடலை மாத்திரம் கேட்டோம்.
9) அடுத்து ஜோன்புரியில் முருகனை பஜி மனமே திருமால் பஜி மனமே , பாபநாசம் சிவன் பாடல் , துள்ளல் உற்சாகம் ஒட்டுமொத்த கலவை இப்பாடல் , முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை வரிகளில் இன்னும் துள்ளினார் தலைவர் , உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாத உத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து செந்தில் நாதனை அரவிந்த பாதனைசிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை , வரிகளை பாடும் போது வழக்கம் போல் நமக்கு ஒரு அல்ப சந்தோஷம் , சரியாக அரவிந்த பாதனை பாடும் போது அரவிந்த் ஸ்ரீநிவாசன் ரீஎண்டரி தர , தலைவர் அவரைப் பார்த்து பாட ஒரே அமர்களம் தான் அரங்கில்.
10) ஒருமையுடன் தலைவர் விருத்தம் துவக்கினார் , கரஹரப்பிரியாவில் துவக்கி சாவேரி காப்பி சென்று பாடலை காப்பியில் பாடினார் , இராமலிங்க அடிகளாரின் அருமையான வரிகள் எக்காலத்திலும் எல்லா இடத்திலும் சாலப்பொருந்தும் வரிகள் என்றார் கோபாலர் , திருமலை ஆம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசித்திரியும் உலகம் என்றான் எங்கோ பார்த்தபடி. அந்த தருமமிகு சென்னையில் கந்தக்கோட்டத்தில் வரிகளில் நமக்கு கண்கள் கசிந்தன.
11) மங்களம் பாடினார் , வழக்கமாய் வாழிய செந்தமிழ் 2 நிமிடம் பாடுவார் இம்முறை கோடீஸ்வர அய்யரின் மங்களம் மயிலவாகனாம குமாரருக்கு மங்களம் பாடலை சுருட்டியில் அனைத்து சரணங்களிலும் பாடி புதுமை புகுத்தினார். தலைவர் .
இந்த சீசனின் மிகச்சிறந்த கச்சேரிகளில் ஒன்று என்பதை யாருலும் மறுக்க முடியாது , ஆனால் நம் மயிலை ரசிகர்கள் ஏனோ இங்கே அதிகம் வருவதில்லை , வந்திருந்தோர் பாக்கியசாலிகள் அவ்வளவே நாம் சொல்ல முடியும் என்று கோபாலகிருஷ்ணபாரதி கூற ஆமோதித்தான் திருமலை , சுண்டல் இல்லை சாக்குப்பை இல்லை ஆனால் உயர்தனித்தமிழ் இசை நம்முள் நீக்கமற நிறைந்தது. இந்த ஆண்டின் தலைவரின் நிறைவுக்கச்சேரி கேட்ட மகிழ்வோடு , கோரோனா ஒமிக்கிரான் இன்னபிற துஷ்ட ஜீவராசிக்கள் அல்லல் படுத்தா இனிய இசையாண்டாக 2022 அமைய வேண்டியவாறு இடைத்த காலிசெய்தோம் , ஆதித்தயா வழக்கம் போல் அப்பா நெக்ஸ்ட் ஓட்டல் என்றான்.
Comments