top of page
Search

அரும்பொன்னாய் TMT நூற்றாண்டு - சிஎஸ்கே வெற்றி முன்னோட்ட கச்சேரி !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Jun 2, 2023
  • 5 min read



நீண்ட இடைவெளிக்குப்பின் தலைவர் கச்சேரி சென்னையில் நாரத சபையில் , தஞ்சை மஹாலிங்கம் தியாகராஜன் , சங்கீத கலாநிதி பெற்ற இசைமல்லர் , முற்பாதியில் கச்சேரி மேடையில் மேன்மைசால் கலைஞராய் திகழ்ந்து பிற்பாதியில் தலைவர் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்த பேராசான். தலைவர் ஆன் தட் நோட்டில் இவர் குறித்து புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்தகு இசை ஆளுமையின் நாற்றாண்டு விழாவில் தலைவர் கச்சேரி அமைவதன்றோ ஆகப்பொருத்தமான செயல். அந்த செயலை அவரின் உற்றார் உறவினர் சீடர்கள் முன்னெடுத்து நாம் கச்சேரி கேட்கும் இந்த 12 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக வீட்டிற்கே விரைவு தபாலில் நுழைவுச்சீட்டை அனுப்பி நம்மை திக்குமுக்காட வைத்தனர். நாம் பணிக்கு பெரியபாளையம் வர என் மனைவி தபாலை பெற , அனுமதியில்லா கச்சேரிக்கு ஆகப்பல பொய்களை நாம் கற்பனையில் வைத்திருந்ததெல்லாம் வீணாயிற்று , வழமையாக கச்சேரி சென்று தான் மாட்டுவோம் , இம்முறை கச்சேரி துவங்குவதற்கு முன்பே மாட்டிக்கொண்டோம். ட்டிக்கொண்டும் , டிக்கொண்டோம் , கொண்டோம் , டோம் , ம். அர்சனைகள் பல ஸ்ரீதேவி செய்ய பூதேவியாய் அருளால் அதை தாங்கி பாளையத்திலிருந்து 4 மணிக்கு துவங்க திட்டமிட 5மணிக்கே புறப்பட்டோம் , பீச் சாலை அடைய 6 மணி ஆனால் அங்கிருந்த கூட்டத்தால் நாரத சபை அடைய 6.35 வர்ணம் போச்சு என்று வந்துசேர்ந்தால் நல்ல வேளையாக 6.45த்தான் கச்சேரி துவங்கிற்று ,நமக்கு முன் திருமலையும் கோபாலரும் அமர்ந்திருந்தனர் , என்ன லேட்டு என்று தலையில் வேட்டு சத்தம் வர கொட்டினான் திருமலை . தலைவர் , நெய்வேலியார் , வரதர் , ரேதஸ் கூட்டணி , பின்புலத்தில் நல்ல வேலைப்பாடு. இடது புறம் இருந்த புகைப்படத்திலிருந்த TMT அப்பா சுப்ரமணியம் பாடு என்றார். துவங்கிற்கு கத்தரி வெயிலை காணாமல் அடிக்கச்செய்த கானராஜாவின் கச்சேரி.


1) முதல் பண்ணாய் மீனலோசனே பாடினார் தலைவர் , நாராயன கௌளை ராகம் , TMT அவர்களால் பண்ணப்பட்ட பண் , மெல்லிசை ராகத்தில் நல்லிசை தந்தார் தலைவர் ,முக்தாய் ஸ்வரம் எடுத்த எடுப்பிலேயே ஏற்றம் தந்தது பாடலுக்கு நெய்வேலியார் வழமைபோல் வளம் காட்டினார் மந்தகாசினி மதுரவாசினியில் தலைவர் சிட்டைஸ்வரம் துவக்கி மந்தகாச புன்னைகை புரிந்தார் , அடுத்த 3 நிமிடங்கள் ஸ்வரப்பிரளயத்தை அரங்கில் நிகழ்த்தினர் கச்சேரி கோஷ்டியார். மூவரின் உடல் மொழியில் ஒத்திசைவும் எத்தனை சொன்னாலும் போதாது.அப்படி இருந்தது மூவரின் பங்களிப்பு , கேட்டோருக்கு பூரிப்பு.


2) கௌரி மனோகரி குறு ஆலபனை தொடர்ந்து ஸாரஸ சமாம்ருது பாடினார் தலைவர் ஸ்வாதி மன்னர் பாடல் இது அதிகம் பாடப்படாத பாடல். தூசு தட்டுவதில் தலைவர் சூராதிசூரர் அல்லவா , அருமையாய் தந்தார் மேன்மை இசையை . மார ஜனகாவில் மனதை அள்ளினார். வரதரின் வயலின் கொஞ்சியது பாடல் முழுதும். பாடல் முழுதும் அந்த சௌக்கியத்தில் சொக்கியது அவை நிறைந்த ரஸிகர் கூட்டம். நெய்வேலியார் தொப்பியில் மேலும் கிறங்கினோம். சாமஜ பரிவித சரணத்தை பாங்குற பாடி பாரயவில் கௌரி மனோகரியின் ஆழத்தையும் உயரத்தையும் அவைக்களந்தார் தலைவர்.


3) ஆலாபனை வசந்த பைரவி வசந்த வானில் நம்மை நிறுத்தியது , ஆம் தலைவர் ஆலாபனையின் துவக்கத்திலேயே நம்மை எங்கொ கொண்டு சென்றார் , வழமை போல் அவரின் ப்ருகாக்கள் உள்ளிட்ட அனைத்து நகாசு வேலைகள் நிறைந்து காணப்பட்டது வசந்த பைரவி ராக ஆலாபனை , வரதர் வசந்தத்தை வாரி தந்தார் அடுத்து சொக்கல் இசை என்றால் அது வரதர் வாசிப்பு , அவரின் பிடிலில் அம்பை கொண்டு நகர்த்துவது நம் இதயத்திலேயே வருடுவது போல் உள்ளது. தாட்சிதர் க்ருதி பிரச்சன்ன வேங்கடேச பஜரே பாடினார் தலைவர். அந்த ப்ரசீதவில் அரங்கையே தன்வசப்படுத்தினார் தலைவர். தஞ்சை மாநகர் பாடல் இது , ஆம் தஞ்சை தியாகராஜர் நூற்றாண்டில் பாடத்தக்க பாடல் அல்லவா கேட்க அனைவருக்கும் அவா , மிக அரிதாய் தீட்சிதர் பாடல் விறுவிறுப்பாய் பாடப்பட்டது.


4) சஞ்சய் மோஹனம் அடுத்து , அடேயப்பா எத்தனை மோஹனங்கள் தலைவர் ஆலாபனையில் கேட்டிருந்தாலும் இந்த மோஹனம் மோஹம் விடாது என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , அதனே ப்ரசன்ன வெங்கடேஷ்வரம் போல் எதாவது வைத்திருப்பார் மோஹனத்தில் என்றான் திருமலை , இருவரும் பாடல் பட்டியல் பார்க்காமல் நம்மை பாடாய் படுத்துகிறார்கள் , இதற்குள் தலைவர் மோஹனாபுரிக்கு அரங்கை அழைத்து சென்று சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தார். வைரம் வைடூரியம் பதித்த சுவர்கள் , தரையெங்கும் முத்துக்களும் இரத்தினங்களும் சிதறி கிடக்கின்றன. சொக்கத்தங்கத்தால் ஆன அரியாசனை அதில் யாரும் அமரவில்லை , இல்லை சட்டென்று பார்த்தால் அரியக்குடி காட்சி தந்தார் பின் மதுரை மணி செம்மங்குடி எம்.டிஆர் , ராம்நாட் கிருஷ்ணன் , சோமு என்று ஓவ்வொருவராக அந்த தங்கசிம்மாசனத்தில் காட்சி தந்தனர். தலைவர் மோஹனம் அடுத்த நிலையை எட்டியது , நான் கண்ணை கசக்கி கசக்கி பார்ப்பதை கவனித்த , கோபாலகிருஷ்ணபாரதி அரவிந்தா ஒரு மிக்ஸியில் ஓரு ஸ்பூன் ARI SSI MMI MSP MDR DKJ RAMAND KRISHNAN TNS SANTHANAM போட்டு நாலு சுத்து சுத்தி எடுத்து அதிலே ஒரு ஸ்பூன் SKR தூவி பார்த்த அது தான் தலைவர். இந்த நூற்றாண்டில் ஈடு இணையில்லா பொக்கிஷம் அவர். இந்த தலைவமுறைக்கு ஒரு ஆதர்ச நாயகனாய் இருக்கிறார் மறுபுறம் கடந்த நூற்ற்றாண்டின் ஜாம்பவான்களை நம் கண் முன் கொண்டு வருகிறார் என்று புளகாங்கிதம் கொண்டார் கோபாலர் , திருமலை கூட கேவி அழுதான் அத்தகு உருக்கமான இனிமையான மோஹனத்தை தந்தார் தலைவர்.தொடர்ந்து வரதர் வயலினை பிடித்து சௌடையா லால்குடி என அனைவரையும் நமக்கு காண்பித்தார் தன் வாசிப்பில் , இவர்கள் இருவரின் இடையே மோஹனம் தன் ஜென்ம சாபல்யத்தை அடைந்தது. தொடர்ந்து அன்னை பராசக்தி அகிலாண்ட ஈஸ்வரி பாடினார் தலைவர் , இந்த பாடல் TMT அவர்களால் பண்ணப்பட்டது . மோஹனத்தில் அன்னை அருள் கொண்டாள் நமக்கு அருள் பாலித்தாள் , சிட்டைஸ்வரத்தோடு பாடலை கொண்டு சென்றார் பட்டியலில் க்ரஹ பேதம் குறித்து அறிவிப்பு நினைவிற்கு வந்தது , மத்யமாவதிக்கு எப்போது தாவினார் என்று தெரியாத வண்ணம் மத்யமாவதிக்கு சென்றார் ஸ்வரத்தில் அடுத்து இந்தோளம் மிக நளினமாய் க்ரஹபேதம் அவையில் அரங்கேறியது , அடுத்து சுத்த சாவேரி அஃதாவது க்ரஹ பேதத்தின் ஊடே காச்சி காசி என தாய் குடியிருக்கும் சேத்திரத்தையும் பாடினார் தலைவர் மயிலை கற்பகம் வந்தார் அவைக்கு கயிலை பார்வதி அடுத்து என அம்பாளை அரங்கத்தினர் கசிந்துருகி கேட்டு மகிழச்செய்தார் தன்யாஸி ஸ்வரம் நமக்கு வரமாய் வாய்த்தது நெல்லை காந்திமதி கல்யாணியில் , எல்லையில் குமரியாய் கண் முன் நிற்பாள் என்று பாடி அமர்களப்படுத்தினார் தலைவர், இதையெல்லாம் சிந்தித்து செய்த தஞ்சை மஹாலிங்கம் தியாகராஜரை என்ன சொல்வது , அந்த பேராளுமையை எத்தனை ரஸித்திருந்தால் தலைவர் இப்படி பாடுவார் என்று நினைக்கும் மாத்திரத்தில் நாம் வியந்தோம் இவரின் வித்வத்தின் வீரியத்தை.


5) ஆலாபனை பைரவி , தலைவர் தோடி சங்கராபரணம் போல் இந்த பைரவியையும் லேசில் பாடி விடுவாரில்லை , பிரதானி ஆக்கி பாடாந்தரத்தை பறை சாற்றினார். மோஹனத்திற்கு நேரெதிராக கதகப்பான ஆலாபனை இந்த பைரவி , தலைவரின் முத்திரைகள் நிறைந்து காணப்பட்டது , லே க்கள் அங்கங்கே வீசப்பட மதுரை மணி அய்யரை கண்டனர் அவையில் . வரத பைரவி அடுத்து வகையாய் அரங்கேறிட , பெரியசாமி தூரனின் பழம் நீ பழனிவாழ் பாடினார் தலைவர், அனுபல்லவி அழகின் வடிவே அருளின் வடிவே அடியார் என்றும் அடையத்-தேடும் வரிகளில் முருகனின் அழகையும் அருளையும் அவை கண்கூடாய் கண்டது . சரணம் ஆலம் உண்ட அரனார் மகிழ அமுதம் பாடி பழம் நீயில் நிரவல் அமைத்தார் தலைவர் , ஔவை பாட்டி விஞ்சியது தலைவரின் நிரவல் பழம் , பழம் நழுவி பாலில் விழுவது போல் வரதர் நிரவலை வாசிக்க அரங்கத்தின்ர நாற்காலியின் நுனிக்கு வந்தனர், தொடர்ந்து ஸ்வரம் துவக்கு துவந்தத்தை துவக்கினார் தலைவர் , வரதர் அவரை தொடர்ந்து நெய்வேலியார் என்று மூவரும் ஸ்வரப்பழத்தை பிழிய அரங்கெங்கும் பழரசம் விநியோகிக்கப்படடது. ஸப்தஸ்வரம் புரிந்து தனி துவக்கி வைத்தார் தலைவர், நேரமின்மை காரணமாய் துவங்கிய தனி 4.30 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது , என்னே நெய்வேலியாரின் பெருந்தன்மை , என்னே அழகாய் அரங்கில் இருப்போரின் உள்ளத்தை படித்து , மினியிலும் மின தனி தருகிறார் , அருமை. சுப்ரமணியர் பழம் நீ பழநி , அருட்பழமாய் அவைக்கு அமைந்தது.


6) கோடீஸ்வர அய்யர் சலநாட்டை ஏதைய்யா கதி , பித்தர் குழாமின் தீம் பாடல் இது , தலைவர் விட்டால் வேறேது கதி எங்களுக்கு , ஒரு குறு ஆலாபனையுடன் துவங்கியது ஏதைய்யா கதி , மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி என்று தலைவர் பாட பாட தலையாட்டியது அவை , நெய்வேலியார் பின்புலம் அருமையாக அமைத்தார் பண்ணுக்கு , பேதை எனக்குன்னருள் காட்டாது என்னோடேதைய்யா விளையாட்டா என்று தலைவர் நெய்வேலியாரை பார்த்தவாறு பாடினார் , பூதல சலநாட்டா நின் தாள்தான் கதி புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா கதி என்று தன் வழமையான சங்கதிகளை போட்டு சலநாட்டையில் சக்கை போடுபோட்டார் தலைவர் , வரதர் , நெய்வேலியார் கூட்டணி.அந்த புகழ் கவி குஞ்சர தாஸனில் தான் எத்தனை நகாசுகளை புரிகிறார் அருமையிலும் அருமை.


7) மேலும் சைவமயமாக்க தலைவர் காம்போதியில் தாயுமானவர் அரும்பொன்னே விருத்தம் துவக்கினார் , என்னே வரிகள் இதை விஞ்சி யாராலும் இறைவனை தொழுதிடவும் முடியுமோ என்னும் நிலையில் பாடலை படைத்துள்ளார் தாயுமானவர் சுவாமிகள் , தலைவர் போல் அதை உருக்கத்துடன் அளிப்பவர் தான் யாருளர். அரும்பொனே! மணியே! என் அன்பே! என் அன்பான அறிவே! என் அறிவில் ஊறும் ஆனந்த வெள்ளமே! என்றென்று பாடினேன்; ஆடினேன்; நாடி நாடி விரும்பியே கூவினேன்; உலறினேன்; அலறினேன்; மெய் சிலிர்த்து இருகை கூப்பி விண்மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன்; யான் இரும்பு நேர் நெஞ்சகக் கள்வன். ஆனாலும் உனை இடைவிட்டு நின்றதுண்டோ? என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ? யாதேனும் அறியா வெறும் துரும்பனேன் எனினும் கை விடுதல் நீதியோ? தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்குணமான பரந்தெய்வமே பரஞ்சோதியே சுகவாரியே! என்று தலைவர் மெய்யுருகி பாட அரங்கில் இருந்தோர் கண்கள் கசிந்தன. தொடர்ந்து வரதர் வயலினில் அரும்பொன்னை அள்ளித்தர நாம் ஆனந்த கூத்தாடி ஆனந்த கண்ணீர் உகுத்தோம். பாடலை துவக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அரும்பொன் மீதான காதலை தொடர்ந்தார் தலைவர் ஹம்ஸாநந்தியில் நம்மை உருக்கி எடுத்தார் , ஆனந்த வெள்ளமாய் தலைவர் விருத்தம் நாரத கான சபையில் பெருக்கெடுத்து ஓடியது.


8) பட்டியிலில் இல்லாத பண் அதுவும் சவைப்பண் அடுத்து நாடித் தேடித் தொழுவார்பால் அருணகிரிநாதர் திருப்புகழை பாடினார் தலைவர் தேமதுர பாகேஸ்ரீயில் , ஆழ்வார்கடியான் அழுதவாறு கேட்டான் திருமையில் இத்தனை மாற்றமா என்று மகிழ்ந்தோம் ,அவன் கடையில் பெருமாளே வரிக்காக அழுவதாய் கூறினான் கோபாலர் அடேய் நிர்மூடா இது திருவானைக்காவல் பெருந்தெய்வத்தை போற்றும் பாடல் என்று கூறி தேற்றினார் , ஆனைகாவின் பெருமானை நாமும் ஆசை தீர வழிப்பட்டோம் தலைவர் இசையால்.


மங்களம் பாடி TMT அவர்களின் நூற்றாண்டு கச்சேரியை அதிஅற்புதமாய் படைத்தார் தலைவர், வண்ணமாடங்கள் சூழ் பாடியிருக்கலாம் என்று அலுத்துக்கொண்டான் திருமலை , அடேய் இனி சென்னையில் தலைவர் எப்போது பாடுவார் என்றே தெரியவில்லை அதை யோகி என்று கோபாலர் குண்டை போட்டு விட்டு நடையை காட்டினார் , நாமும் கட்டினோம் நடையை.அடு்த்த நாள் நடுநிசி தாண்டி உற்சாக கூச்சலிடும் அளவில் அனைவரின் இதயத்துடிப்பும் ஜெட் வேகத்தில் இயங்கும் என்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை , தலைவர் அறிந்திருந்ததால் தான் தோனிக்கு நாடித் தேடி பாடினாரோ.



 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page