அண்ணாமலை மன்றத்தில் திருவண்ணாமலை ஜோதி ! சுந்தர சுத்ததன்யாஸி ! திருமலை வெந்தபுண்ணில் பாய்ந்த வேல் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 30, 2023
- 7 min read

தமிழிசை சங்கம் , ராஜா அண்ணாமலை மன்றம் , பாரிமுனை , இந்த பாடுகளம் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது , முழுத்தமிழ் கச்சேரி , பாரம்பரியம் மிக்க சபை , ஆண்டுதோறும் நாம் குடும்ப சகிதமாக பங்கேற்கும் கச்சேரி மேலும் இங்கே எங்கள் குடும்ப புகைப்படம் படு பிரசித்தம் , ஆனால் ஓரே ஒரு சிக்கல் , ஓலி அமைப்பு , சமீபகாலமாக இருக்கையெல்லாம் மாற்றி இருந்தாலும் இந்த ஒலிப்பெருக்கிகள் இம்சை தருவது இன்னும் தொடர்கிறது . தலைவருடன் நெய்வேலியார் வரதர் ராகுல் கூட்டணி. அறிவித்ததை கணக்கிட்டால் மூன்றுக்கு மூன்று என்று சைவ வைணவ பாடல் பட்டியல் , கொசுறு முடிவு செய்யும் என்று வந்திருந்தனர் கோபாலகிருஷ்ணபாரதியும் திருமலையும். 7 மணிக்கு வழமையாக துவங்கும் கச்சேரி 6.30 என அறிவித்து 6.27க்கே துவக்கினார் தலைவர் , என் போல் அலுவலகத்திலிருந்து க்ராஷ் லேண்டிங் செய்வோர் 6.30 என்று எண்ணியல்லவா வருவார்கள். இவ்வளவு முன்பங்க்ட்சுவாலிடி இருக்க வேண்டாம்.
1) எதிர்பார்த்தபடி குறு நாட்டை ஆலாபனையோடு பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பிய சொல் என தலைவர் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் பாசுரத்தை விருத்தமாய் துவக்கினார் , எதிர்பார்த்தவாறே ஒலிப்பெருக்கு சொதப்பியது , திருமலைக்கு வந்ததே கோபம் தன் தடியை சுழற்றிக்கொண்டு அரங்க சிப்பந்திகளை நோக்கி பாய்ந்தான் , தலைவர் இதற்குள் விருத்தத்தை முடித்து பாடலில் பாய்ந்தார். அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே என்று தலைவர் பாட பாட அரங்கை விஷ்ணு சேத்திரமானது , கோபாலர் கூட தலையாட்டி ரசித்தார் , தலையாட்டியாருக்கு இந்த பாடலுக்கு வாசிப்பதில் தனி மகிழ்வு , அடியோங்களுக்கும் உனக்கும் உள்ள பிரிவில்லாத தொடர்பு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கட்டும். உன் வலது திருமார்பில் வாழுகின்ற மகாலட்சுமித் தாய், உன்னுடன் நித்தியமாகக் கூடியிருக்கட்டும். உன் வலது கரத்தினில் ஒளி வீசி விளங்கும் சக்கரம் பல்லாண்டுகள் நிலைத்திருக்கட்டும். போரினில் பகைவர் அஞ்ச முழங்கும் பாஞ்ச சன்னியச் சங்கும் பல்லாண்டு நிலைத்திருக்கட்டும் பகவானே! என்று பொருள் தந்தான் திருமலை , இதற்குள் தலைவர் நிரவல் ஸ்வரம் துவக்கினார் , நாட்டை சஞ்சய் சபாவில் ஸ்வாமிநாதாவில் பிரமாதப்படுத்தினார் ஆனால் அதை விட இது கூடுதல் வேகம் , பல்லாண்டு பல்லாண்டு ஓங்கி ஒலிக்கும் ஸ்வரங்களாக தலைவர் தந்தார் , கல்பனாஸ்வரம் இன்னுமும் நளினத்தை கூட்டியது , வரதர் படு பிரமதாமாய் தலைவரை பின்தொடர்ந்தார் , நாட்டையின் வீச்சு வேறு பரிமாணத்தை எடுத்தது , சலநாட்டையில் பில்டப் புரிவது போல் உருவாக்கினார் ஸ்வரத்தை , எதிராபார்த்தவாறு ஸ்வரவேள்வி திகுதிகு வென எரிந்தது , முதல் பண்ணிலேயே ஸ்பதஸ்வரபிரஸ்தாரம் புரிந்து மிக மிக உன்னத பல்லாண்டை தந்தார் , தலைவர் , திருமலை கோபாலரை பார்த்த பார்வை இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமா உன் சிவகானம் என்பது போல் இருந்தது , வரதர் அடுத்து ஸ்வராட்சி புரிந்தார் . அண்ணனை போல் பிரமாதப்படுத்திட பல்லாண்டு பல நூறாயிரம் ஆண்டு பேர் சொல்லும் வகையில் அமர்ந்தது , நெய்வேலியார் தன் முத்திரை வாசிப்போடு நிறைவு செய்தார் பாடலை.
2) இரண்டாவது பாடல் நிச்சயம் ஆலாபனை இராது என எதிர்பார்த்த நமக்கு பூர்விகல்யாணி ஆலாபனை அளித்தார் தலைவர் , குறு ஆலாபனையாக இருக்கும் என்று எண்ணிணோம் அதற்கும் பல்பளித்து நீண்ட ஆலாபனையாய் விஸ்தாரித்தார் , பூர்விகல்யாணிகுகு உத்திரம் காட்டி அங்கிருந்து புதிய மெட்ரோ நிறுத்தம் , உயர்நீதிமன்ற கோட்டை புணரமைப்பு பணியெல்லாம் காட்டிவிட்டு கீழிறக்கினார் , வழமை போல் பூர்விகல்யாணி நம்மிடையே மிக மிக பக்தி உணர்வு தூண்டியது , தொடர்ந்து வரதர் அதே பக்தியை வயலினில் கூட்டினார் , என்னே வாசிப்பு , வரதர் வாசிப்பை கண்மூடி கேட்பது ஒரு தனி பேருணர்வு , இராமலிங்க அடிகளாரின் அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் பாடினார் தலைவர் , அடுத்த வரி ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும் அடிகளார் எத்தனை உணர்வோடு எழுதியுள்ளார் என்று சிலாகித்தார் கோபாலகிருஷ்பாரதி , அடுத்து எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும் என்று தலைவர் தன் வழமையான நகாசு வேலைகளோடு பாட பாட அரங்கு சிவஸ்தலமானது , செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும் என்று பாட திருமலை கேட்காதது போலும் காணாததும் போல இருந்தான் , உனக்கு நன்றாய் வேண்டும் என்றேன் , அடுத்து வாரன் ரோடு புகழ் வரிகள் தப்பேதே நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும் பாடினார் தலைவர் , நீ பொறுத்தல் வேண்டும் என்று தலைவர் பாட அடுத்த பாடலுக்காக பொறுத்துக்கொள்கிறேன் என்றான் திருமலை , தப்பேது நீ செய்யினும் வரிகளில் அருமையான நிரவல் அமைத்தார் தலைவர் , தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே அந்த அரங்கத்தில் இருந்த அனேகருக்கு பொருந்தும் , தலைவர் வேண்டுமில் ஒரு புளகாங்கித உணர்வு தந்து பாடலை நிறைவு செய்தார். இரண்டு பாடலுக்கே 30 நிமிடம் சென்றுவிட்டது.
3) திருமலை யதுகுலகாம்போதி ஆலாபனை இல்லையா என்பது போல் மிகவும் சோர்வுடன் காத்திருந்தான் , தலைவர் ஆலாபனை துவக்கியவுடன் குதிக்காத குறையாக மகிழ்ந்தான் , தலைவரின் யதுகுலகாம்போதி பிரவாகமாய் வழிந்தோடியது , இதே பாரிமுனை சாலைகளில் மிக்ஜாமில் ஓடிய வெள்ளத்தை விஞ்சியது , தொடர்ந்து வரதர் யதுகுலம் குதூகலத்தைத் தந்தது , வாசிப்பின் நெளிவுகள் குழைவுகள் அப்பப்பா சொல்லில் அடிக்க முடியா அமிர்தம் , அருணாசல கவியின் ராமநாடகம் சிதைக்கு இலக்குவன் பாடும் ஆரென்று ராகவனை எண்ணிணீரம்மா ராகவனை பாடினார் தலைவர் , ஏறாவார்த்தையிது வரியில் மேலே உயரே சென்றார் தலைவர் வசையோ டொக்குமே-போரில் எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ என்று தலைவர் பாட , திருமலையின் திமிர் அதிகரித்தப்படி இருந்தது கோபாலரை நோக்கி சுண்டுவிரல் காட்டினான் , என்ஆர்ஐ களிடம் காட்டாதே இதுபோல் சிறை செல்வாய் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , ஆத்திருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல வேதண்டம் எ ன ப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன் காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே என்று தலைவர் பாட பாட கண் முன்னே அடர்வனமும் இலக்குவன் சீதையும் கண் முன் வந்தனர். நெய்வேலியாரின் வாசிப்பை இங்கே சொல்லியே ஆகவேண்டும் , என்னே வாசிப்பு என்னே பின்புலம்.
4) கச்சேரியின் நான்காவது உருப்படி , மூன்றாவது ஆலாபனை ஆரம்பித்தார் கீரவாணியில் , யுதுகுலகாம்போதியின் குளுமைக்கு நேரெதிராக கீரவாணி கதகதப்பைத் தந்தது , உணர்ச்சி பொங்க ஆலாபனை புரிந்தார் தலைவர் , மிகமிக உருக்க இராகமாக விளங்குகிறது இந்த கீரவாணி , பாரிமுனை முதல் குமரிமுனை வரை உலுக்கியது தலைவர் கீரவாணி காற்றில் எந்தன் கீதம் லேசாக வந்து சென்றது , ஏறத்தாழ பத்துநிமிட ஆலாபனை தொடர்ந்து வரதர் வாசிப்பில் மீண்டும் கீரவாணியில் கிறங்கினோம் , அப்பர் தேவாரம் வாணனனை மதிசூடிய மைந்தனை பாடினார் தலைவர் ,தேனனை, திரு அண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்தஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ என்று திருவண்ணாமலை அண்ணாமலையாரை , அண்ணாமலை மன்றத்தில் பாடினார் , கோபாலகிருஷ்ணபாரதிக்கு அத்தனை மகிழ்வு , வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்- தீரனை, திரு அண்ணாமலையனை,ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ என்று பாட பாட அரங்கில் அனைவரும் மேலிருந்த தில்லை அம்பலத்து நடராசரை கண்டு தொழுதோம் மனதார.
5) சிதம்பரம் என மனம் கனிந்திட என்று கல்யாணியில் துவக்கினார் அடடா இந்த கல்யாணியில் தான்ன எத்தனை இன்பம் என்று மகிழ்வுடன் கேட்டோம் , பதஞ்சலியும் வரியில் தலைவர் கல்யாணியை கரைத்தளித்தார் என்றே சொல்ல வேண்டும் , பாபநாசம் சிவன் ஏன் சிதம்பரம் போறார் இங்கே கபாலி போறாதோ என்று பொருமினான் திருமலை , அவன் பொருமலை விரிவாக்க தலைவர் ஸ்ரீகாந்தனும் சரஸ்வதி காந்தனும் பணிய தேகாந்தத்துள் நடிக்கும் ஆடந்த தாண்டவன் என்று பாட , திருமலை க்ரோத மலையானான் , தலைவர் தத்தமிகிட திம் தரிகிட எனப்பாட கோபாலர் ஆட அரங்கமே தில்லைஸ்தலமானது , ஜனன மரண பயம் அகலியது தலைவர் பாட பாட , சிதம்பரத்தில் நிரவல் ஸ்வரம் துவக்கினார் ஆலவாயனை பாடுவார் , கல்யாணியின் ஸ்வரங்கள் நாம் செய்த தவத்திற்கான வரங்கள் , நிரவல் கல்பனா ஸ்வரம் என கல்யாணியை அரங்கில் அத்தனை அழகாய் தந்தார் தலைவர் , ரிகஸாரிக துவக்கி இன்னமும் மேன்மை கூட்ட கோபாலர் எள்ளி நகையாடினார் திருமலையை , நான் இரு திருமலை சிந்துபைரவி இருக்கே என் தேற்றினேன், தலைவர் இதற்குள் வேண்டும் அளவில் நெய்வேலியாரை வம்பிழுத்து , ஸ்பதஸ்வர பிரஸ்தாரம் சென்றார். தொடர்ந்து மீண்டும் ஒரு உன்னத தனி தந்தார் நெய்வேலியார் , உபபக்கவாத்தியம் இல்லையானாலும் அவருக்கு ஆற்றல் ஊற்றாய் தலைவரின் ஊக்கம் போதாதா , வரதரும் சபாஷ் சபாஷ் என கூறி தனிக்கு மெருகேற்றினார் , சம்பிரதாயங்களை படு அமர்க்களமாய் வாசித்தளித்தார் தலையாட்டி சித்தர்.
6) அடுத்து ஹூசைனியில் தலைவர் நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரை தனிலே பாடினார் , பதவர்ணப்பாடல் நாட்டியத்திற்கு ஏற்ற வரிகள் என்றான் திருமலை , அது சரிதான் திருமலை ஆனால் இது எங்கள் முருகப்பெருமான் பாடல் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , திருமலை கண்கள் கொவ்வை பழமாய் மாறியது , நரநரவென பல்லைக்கடித்தான் ரவிதாஸன் போல் , நேர்த்தி மாமயிலேறும் கந்தா நீரவளும் எதிர்முழியாய் நிற்க மையலிலே சொக்கையிலே பக்கந்தனில் இருந்தேன் ஸ்வாமி என கந்தனை எண்ணிய பாவையின் கனவுக்காட்சியினை விவரித்தார் தலைவர் , ஆனால் நம் நங்களை நல்லூர் சுவாமிநாதனோ காரணமின்றி பல்லை இளித்தார் , முன்னாளில் என்னிடத்தில் சொந்தம் போல கிட்ட வந்து முத்து முத்தாய் சரசமாடி மோஹமதைத் தந்த மன்னவா உன் நினைவு கொண்டு,அன்னம் கண்டொரு மாதமுண்டு வாருமய்யா என் துரையே, தீருமய்யா என் கவலை என்று தலைவர் ஹூசைனியில் அரங்கை பக்தியிலிருந்து சற்றே மாறுபட்ட ரஸத்தை காட்டினார்.
7) ராகம் தானம் பல்லவி சுத்த தன்யாஸி , தலைவர் ஆலாபனையில் பிரம்மாண்டமாய் துவக்கினார் , ஒரு துள்ளல் உணர்வு மேலோங்கியது , கற்பனை பரி பறந்துவந்து அரங்கை சுற்றி வந்தது , இறக்கை உள்ள பரி அது ஏறிக்கொண்டு சுத்தன்யாஸி சுற்றுலா சென்றோம் , தலைவர் அடிக்கடி உச்சம் சென்றார் , பரியும் சென்றது , பிரவாகமாய் வந்தது தலைவர் ஆலாபனை , அவரின் வழமையான நாதஸ்வர பிடிகள் படு அழகாய் அரங்கேறிற்று ,தொடர்ந்து வரதர் வாசிப்பில் மீண்டும் சுத்ததன்யாசியில் சுகவாசியானது அவை , அத்தனை அழகான வாசிப்பு , என்னே ஈர்ப்பு , தானம் சோதரர்கள் அடுத்தோர் அருமையான தானத்தை தந்தனர் , சற்றே சிறய தானம் என்றாலும் மிகவும் அருமையாய் இருவரும் பரிமாறினர் , அகத்தின் அழகு முத்தில் தெரியும் என்று பல்லவியை துவக்கினார் தலைவர் , இவரின் குறும்பிற்கு எல்லை இல்லை என்றார் கோபாலர் நான் திருமலை முகத்தை பார்த்தவாறு இருந்தேன் , பார்க்க பார்க்க புரியும் என்றார் எனக்கோ புரியவில்லை மேலும் தொடர்ந்து திருமலை முகத்தை பார்க்கவும் முடியவில்லை , வழமைபோல் நெய்வேலியாருடன் துவந்தத்தை துவக்கினார் , தெரியும் , புரியும் என்று வம்பிழுத்தார் நல்லவேளை யும் , ம் என்று பாடவில்லை , ஸ்வரம் துவக்கினார் அடுத்து , சிறிது நேரம் சுத்ததன்யாசி ஸ்வரம் நீடித்தது இளமை இதோ இதோ இரும் என எதிர்பார்த்து ஏமாந்தோம் , ராகமாலிகையில் நாட்டுக்குறிச்சி , இந்த பருவத்தில் நாட்டுகுறிச்சி அடிக்கடி வெளிவருகிறது ஐந்திணை புகழ் நாட்டுக்குறிச்சி ,அடுத்து வலஜில் ஸ்வரம் அடடா கேட்க இரண்டு காது போதாது , கூவி அழைத்தால் குரல் கொடுப்பார் சஞ்சய் என்றார் கோபாலர் , அடுத்து தலைவர் துவக்கி இராகம் போன போக்கை பார்த்தும் கண்டிப்பாக இந்த ராகத்தோடு பேரு வரும் என எதிர்பார்த்தோம் அதே போல் இது சாளகம் இராகம் 37வது மேளகர்த்தா என்றார் தலைவர் , மிகவும் உருக்கமாக தலைவர் ஸ்வரம் தந்தார் இராகத்தை , அடுத்து அரவிந்தன் நேரம் ஆம் தலைவர் அரிதிலும் அரிதாய் பெஹாக்கில் ஸ்வரம் துவக்கினார் , என் முகமெல்லாம் பல் , ஆயிரம் இராகம் இருந்தாலும் பெஹாக் போல வருமா என அடுத்த பல்லவி தலைவர் பாட வேண்டும் , காதில் பாய்ந்து இதயத்தை பிழியும் ராகம் நம் பெஹாக் , மார்கழி குளிரை விஞ்சும் அதன் குளுமை , நடனம் ஆடியபடி தலைவர் ஸ்வரம் பாடியது அதிலும் அந்த ஒரு தும்மல் போல் தந்தார் பெஹாக்கில் அருமையிலும் அருமை , வயலினுக்கு தராமல் தொடர்வார் போல் தெரிந்தது மனிதர் ஸ்வரப்பிரஸ்தாரமே புரிந்தார் பெஹாக்கில் என்னே என் பாக்கியம் .
8) அப்படியே திக்குத்தெரியாத காட்டில் பாடினார் பெஹாக்கில் இந்த பாடல் பட்டியல் கலாச்சாரம் எல்லாம் வருவதற்கு முன் இப்படித்தான் , ராகம் தானத்திலிருந்து ராகமாலிகையில் கடைசி ஸ்வரத்திலிருந்து துக்கடா எடுத்துப்பாடுவார் , அதெல்லாம் ஒரு காலம் , கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு கண்ணும் துயில்படர லானேன் - ஒரு என முண்டாசு கவியை பௌளியில் பிராமதப்படுத்தினார் தலைவர் அடுத்து பெண்ணே உனதழகைக் கண்டு - மனம் பித்தங்கொள்ளு'' தென்று நகைத்தான் - ''அடி கண்ணே, எனதிருகண் மணியே என்று குந்தளவராளியில் குதூகலித்து அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - சஹானாவில் கரைந்தோம் அடுத்து , காப்பியில் ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போலே நிறைவாய் பராஸில் காதா லிந்தவுதை கேட்டேன் - 'அடகண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப் போதாக வில்லையிதற் குள்ளே - என்றன் போதந் தெளியநினைக் கண்டேன் என்று மீண்டும் ஓர் பக்தி இரசத்திலிருந்து , சற்றே மாறுதலுடன் பாடி மகிழ்வித்தார் தலைவர்.
9) போதும் உன் தலைவர் பெருமை என்று திருமலை மனமே இராமனை கேட்க தயாரானான் , ஆனால் தலைவர் சிந்துபைரவியை குறுஆலாபனை புரிந்து வா வா வேல் முருகா என்று திருமலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார் , திருமலை சொல்வதறியாது விழித்தான் கோபாலர் கலங்காதே பாடுவார் இதற்குப்பின் என்றார் , மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி பாடல் இது , ஆடி துதி செய்து அன்புமிகுந்துன்னை நாடி வந்த என்னை காப்பது பாராமா வேடிக்கையாய் வேடம் பூண்டவா தேசிகதோடிப்பதம் விஸ்வநாத என்று தலைவர் பாடல் , பாடல் சிந்துபைரவியின் உச்சத்தை காட்டியது , தேவா குருநாதனே என்னை காவாய் வெகு துரிதமாய் என் மிக துரிதமாய் பாடினார் தலைவர் , இங்கு வா வா என்று பாட பாட இனி முடிந்தது இராமனை பாடல் என்று திருமலை அரங்கை விட்டு வெளியே செல்ல எத்தனித்தான். கோபாலர் சமாதானப்படுத்தி கூட்டிவந்தார் , நான் லிஸ்டில் ஒன்னு போடுவோம் மேடையில் வேற பாடுவோம் என்று வெறுப்பேத்தினேன் திருமலையப்பனை.
10) பத்தாவது பாட்டாக பனியின் விண் துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் என்று பாடினார் ஹரிகாம்போதியில் தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி என்று தாளம் போட வைத்தார் அவையை அப்படியே சுருதி முடி மோனம்ஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே என்று அருணகிரிநாதர் திருப்புகழ் பாட , திருமலை கோபாலரை பார்த்து சஞ்சய் சுப்ரமணியனுக்கு நல்ல முருகப்பித்து பிடித்துள்ளது இந்த பருவத்தில் என்று கொக்கரித்தான். கோபாலகிருஷ்ணபாரதி திருநீறு பூசிவிட்டார் அவனுக்கு, திருமலையும் ஆச்சர்யம் ஊட்டும் வகையில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டான் , அடுத்த பருவம் வைணவமே என அடித்துச்சொன்னான்.
வாழிய செந்தமிழ் தலைவர் மத்யமாவதியில் பாட, அதுவரை பள்ளியிலிருந்து வந்த களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த ஆதித்ய சஞ்சயும் அட்சய ஸ்ரீயும் , வந்தே மாதிரம் பாடுறாரு என்று எங்களுடன் எழுந்து நிற்க மெல்ல மெல்ல அனைவரும் எழுந்து நின்றனர் , மீண்டும் ஓர் அற்புத தனித்தமிழ் கச்சேரி நிறைவு செய்தார் பாரிமுனையில் நம் பரிமேல் அழகர்.சாஸ்திராவில் இவ்வாண்டி நிறைவுக் கச்சேரிக்காக தயாரானோம் அப்பா ஓட்டல் என்றான் ஆதித்தய சஞ்சய்.
Kommentit