அகடமியில் அபூர்வ அக்ஷயலிங்க விபோ தன்மையான தன்யாசி ராதாப எந்நேரமும் கேட்கவல்ல நிஷா கச்சேரி !
- ARAVINDAN MUDALIAR
- Dec 29, 2023
- 4 min read

பணியிடம் பெரியபாளையமாகிவிட்ட காரணத்தால் கடந்த ஆண்டு முதலே பருவத்தில் தலைவர் கச்சேரி கேட்பதே பிரம்மப்பிரயத்தனம் ஆகிவிட்ட நிலையில் , சந்தீப் உள்ளிட்ட யார் கச்சேரியும் கேட்க இயலாத நிலை , கடந்த ஆண்டு வித்வத் சபையில் நிஷா ராஜகோபாலன் கச்சேரி கேட்டதோடு சரி , இடையில் ஒரு சுனாதலஹரி கச்சேரி கேட்டோம் , 27ஆம் தேதி நமக்கு போனஸாக தலைவர் கச்சேரிக்கு முன் நிஷா கச்சேரி , ஆகையால் முதல் கச்சேரிக்கு ஆஜர் , ஸ்மிதா வயலின் , மஞ்சுநாத் மிருதங்கம் , வியாஸ விட்டலா கஞ்சீரா .
1) அரங்கின் குளுமைக்கு குளுமை சேர்க்க நிஷா எடுத்துக்கொண்ட வரணம் சஹானாவில் அமைந்த கருணிம்ப திருவற்றியூர் தியாகராஜர் உருப்படி , வேணுகோபால் கருணை புரி இதுவே அதற்கு சரியான வேளை என்கிறார் திருவற்றியூரார் , நிஷாவின் சஹானா ஆம் இது தான் சரியான தருணம் என்பது போல் அமைந்தது , சஹானாவின் பலமே அதை பாடும் போது ஏற்படும் மென்மை கல்ந்த பக்தி உணர்வு , அது நிஷாவின் இனிமையான குரலில் மேலும் இனித்தது முக்தாய் சிட்டை என பிரமாதப்படுத்தினார் முதல் பண்ணிலே.
2) நிஷா அண்ணனை பாடிய கையோடு தங்கையை பாடினார் அடுத்து பரசு ராகத்தில் அமைந்த நிலாயதக்ஷி நீவே ஸ்யாமா சாஸ்திரி பாடல் , கம்பீரமாய் புறப்பட்டது பரஸ் ராகம் இது மாயமாளகௌளையின் சேய் என அறிந்தோம் , நிஷா ராஜகோபாலன் இது வரை கண்ட கச்சேரிகளில் எனக்கு ஆகக்கவர்ந்தது அவரின் பாடலின் அணுகுமுறை தான் , எங்கே மென்மைக்கு இடம் தரவேண்டுமா அங்கே மென்மை தருவார் எங்கே கம்பீரம் காட்ட வேண்டுமோ அங்கு கம்பீரம் காட்டுவார் , பரஸ் நிரவல் ஸ்வரம் ராஜகம்பீரமாய் அவைக்களித்து , பலரது புருவத்தை உயர்த்திடச்செய்தார்.
3) அடுத்து ஆலாபனை ரீதிகௌளை அடடா இந்த ராகத்தை கேட்டுத்தான் எத்தனை நாளாயிற்று , சர்வ அலங்கார பூஷிதையாய் ரீதிகௌளையை அரங்கேற்றினார் ரிஷா , இந்த ராகம் ஒரு தென்றல் , ஆம் தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசில என்ற பாடல் வரி இந்த இராகத்திற்குத்தான் சாலப்பொருத்தம் , அப்படி நம்முள் பல வண்ணங்களை தன் ஆலாபனையில் உருவாக்கினார் நிஷா , ஸ்மிதா மிக அருமையான வயலின் ஆலாபனை பதிலுரை அளிக்க , படலிக தீரா பாடினார் நிஷா , தியாகராஜர் பண் , ஸர்வக்ஞான கர்த்தாவே! சாகேத ராமா! உனது தாழ்வான படுக்கையில் ஓய்வெடு, சோர்வின்றி இரு, உங்களுக்கு ஓய்வு தேவை. பிரம்மாவின் பரிதாபமான அவலத்தைக் கண்டு மனம் வருந்திய நீங்கள், உங்கள் வான வாசஸ்தலத்திலிருந்து கீழே இறங்கி சூரிய இனத்தில் அவதரித்தீர்கள். சீதையுடன் பயமுறுத்தும் காடுகளில் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. சீதையிடமிருந்து உன்னைப் பிரிக்கும் தீய நோக்கத்துடன் தங்க மான் வடிவில் வந்த ஒரு ராட்சசனை அங்கே சுட்டு வீழ்த்தினாய். பிறகு, ஆணவமிக்க ராவணனின் வலிமையைக் குறைக்க இடைவிடாத போரில் ஈடுபட்டு, உனக்கு விசுவாசமாக இருந்த அவனது சகோதரன் விபீஷணனுக்கு லங்கா ராஜ்ஜியத்தை அளித்தாய். இவ்வாறு தேவர்களைக் காக்கும் கடினமான பணியை நீங்கள் நிறைவேற்றினீர்கள். இதற்கெல்லாம் எவ்வளவு உழைப்பு இருந்திருக்க வேண்டும், மாசற்ற இறைவா! படுத்து நிம்மதியாக தூங்குங்கள் என்று தியாகராஜர் ராமருக்கு தாலாட்டு பாடும் பாடல் , தாலாட்ட ரீதிகௌளை விட பொருத்தமான இராகம் ஏது , நிஷா வை விட பொருத்தமான குரல் ஏது என்பது போல் பாடினார் .
4) ஒருமுறை கோபாலகிருஷ்ணபாரதி தினம் வித்வத் சபையில் கொண்டாடப்பட்டு நிஷா கச்சேரி நடந்தது , அன்று முதல் தான் நாம் நிஷாவிற்கு ரஸிகனானோம் , அழகுத்தமிழில் கோபாலரை பாடும் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது , தேவகாந்தாரியில் எந்நேரமும் உந்தன் சந்நிதியில் இருக்க வேண்டும் அய்யா பொன்னையா பாடினார் நிஷா , தலைவர் இப்பாடலை பாடி பன் முறை கேட்டிருக்கிறோம் , தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே யென்னரசே வரிகளில் பிராமதப்படுத்தினார் நிஷா , ஆருத்ரா தரிசனம் கண்டது வித்வத்சபை.
5) கைகவசி இராகத்தில் வாசாமகோசரமே பாடினார் அடுத்து மீண்டும் ஓர் இராமர் பாடல் நீதிமதி ஜன்மயம் இந்த கைகவசி நல்ல வேகம் இருந்தது பாடலிலும் ப்ரயோகத்திலும் , மாரிச மாயாமான் போல் கைகவசி அரங்கை சுற்றி சுற்றி வந்தது நிஷாவின் மனோதர்மத்தில்.
6) ஆலாபனை சங்கராபரணம் , சங்கரனின் ஆபரணம் சர்ப்பம் , அந்த சர்ப்பம் போல் சங்கராபரண ஆலாபனை நீண்டதாய் வளைத்து குழைத்து , கார்வை , கோர்வை நாதஸ்வர பிடிகள் மற்றும் இன்னபிற கணக்குகளை உள்ளடக்கி படு அற்புதமான ஆலாபனை வழங்கினார் நிஷா , ஆலாபனை முழுவதும் சௌக்கியம் இழைந்தோடியது , கம்பீரம் + சௌக்கியம் + இனிமை = சங்கராபரணம் என்று தன் ஆலாபனையில் அறுதியிட்டார் நிஷா. தொடர்ந்து லயலினும் அருமையாய் செலுத்தி சங்கரரின் ஆபரணத்தை அழகேற்றினார் ஸ்மிதா , அக்ஷயா லிங்க விபோ பாடினார் நிஷா , முத்துசாமி தீட்சிதர் பாடல் அனுபல்லவி சரண் மத்யமகால என அத்தனையும் சங்கராபரணத்தில் அலசி ஆராய்ந்து விட்டு பல்லவி அகிலாண்ட கோடீ ப்ரோபவில் நிரவல் அமைத்து கச்சேரியின் உச்சத்தை தொட்டார் , தொடர்ந்து நிரவல் ஸ்வரம் அருமையாக வழங்கி ஸ்பதஸ்வர பிரதஸ்தாரம் புரிந்து அருமையான சங்கராபரணத்தை நிறைவு செய்தார் நிஷா , மஞ்சுநாத் வியாஸ விட்டலா இணை அருமையான தனி தந்தனர் .
7) அடுத்து ராகம் தானம் பல்லவி தன்யாஸி ,ஸஹானா பாடிய நிஷாவா என்பது போல் அமைந்தது நிஷாவின் தன்யாசி ஆலாபனை அத்தனை கம்பீரம் , ஹனுமதோடியின் ஜன்யம் இந்த தன்யாசி , அரங்கின் குளுமையை ஒன்றுமில்லாமலாக்கியது ஆலாபனையின் வீச்சு , வியர்த்தே விட்டது அதன் கதகதப்பில் , ஆலாபனை என்பது மனோதர்மம் மாத்திரமல்ல பாடுபவரின் ஞானத்தின் வெளிப்பாட்டின் மேம்பாட்டின் ஒரு வடிவமாகும், தன்யாசி ராகத்தின் அனுமதிக்கப்பட்ட கூறுகளை உள்ளடக்கி ஆலாபனை தந்தார் நிஷா அவரின் தன்யாசி பேசியது , உரையாற்றியது , நம்முள் பல் உணர்வுகளை தூண்டியது , அத்தகு கிரியாஊக்கி ஆலாபனை தந்தார் நிஷா , தொடர்ந்து தானம் கேட்க வேண்டுமா அதுவும் ராஜகம்பீரம் , வேகமே பிரதானமனே வாள் வீச்சாய் தானம் தந்து அசத்தினார் நிஷா , ஸ்மிதாவிற்கு நிஷாவிற்குமான வேதியல் அருமையாக தெரிந்தது தான பரிமாற்றத்தின்போது , சதுராஷ்ட ஜதி திருபுட தாளத்தில் தன்யாஸி ஜடாமத்யகே கங்கே துங்க தங்கே என பல்லவி பாடினார் நிஷா , மிகவும் ஏற்புடையதாய் அமைந்தது பல்லவி , கணக்குகள் அருமையாக வாசித்தார் மஞ்சுநாத் , தொடர்ந்து ஸ்வரத்தில் பிரமாதப்படுத்திய நிஷா ராகவர்த்தினி , சிவரஞ்சனி , குந்தளவராளி என ராகமாலிகையில் இன்னமும் மேன்மை கூட்டினார் ராகம் தானம் பல்லவிக்கு . தன்யாஸி ராகம் தானம் பல்லவி தன்னிகரில்லாத ஒன்றாய் தந்தார் அவைக்கு.
8) துக்கடாவாக துங்கதரங்கே கங்கே என குந்தளவராளியில் பாடினார் அடுத்து , ஸதாஸிவி பிரம்மேந்திரர் பாடல் இது , போகீந்த ஸாயினம் , கந்தனை வந்தனை செய் தலைவர் பாடி கேட்டுள்ளோம் இந்த ராகத்தில் முதன்முறை இந்த துங்கதரங்கே கங்கேவை கேட்டோம் , துள்ளல் இராகம் என்றால் அது குந்தளவராளிதான் , அருமையாய் அமைந்தது பாடல் , நதிநீர் இணைப்புத்திட்டம் ஏதுமின்றி வித்வத் சபைக்கு கங்கையை கொண்டு சேர்த்தார் நிஷா.
9) மீண்டும் ஓர் கோபாலகிருஷ்ணபாரதி பாடல் வருகலாமோ அய்யா மாஞ்சி இராகம் , அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான் என்று நந்தன் கோருவது போல் பாடுகிறார் கோபாலர் , அதை அருமையாக உணர்ந்தளித்தார் நிஷா , அந்த உந்தன் பரமானந்தத் தாண்டவம் பார்க்கவே நான் அங்கே வரிகளில் நமது கண்கள் கசிந்தன , ஒரு பாடகரின் வெற்றி அதுதான் , கச்சேரி பாடுவது 2023 இல் ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன் நந்தன் சரித்திரத்து காட்சியை நம் மணக்கண் முன் கொண்டு வருகிறார் என்றால் , நிஷா எத்தனை அழகாய் அந்த சொல்லின் பொருள் உணர்ந்து பாடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2.30 மணிநேர கச்சேரி அதிலும் அடுத்த கச்சேரிக்காக வருவோர் , எழுந்து செல்வோர் , என அவ்வப்போது அரங்கில் ஏற்பட்ட சலசலப்பையெல்லாம் தன் ஏகாக்கிரசித்தத்தை சிறிதும் பாதிக்காமல் ஒரு மிக அருமையான கச்சேரி தந்த நிஷாவின் மேதைமை வர்ணிக்க வார்த்தை இல்லை , வாழ்த்துக்கள்.
Comments