சிறந்த எங்களது ஐந்திணை சேயோனின் தெள்ளுதமிழ் கச்சேரி !
- ARAVINDAN MUDALIAR
- Dec 15, 2023
- 9 min read

எனது உறவினர்கள் எல்லாம் பொதுவாய் நல்லவர்கள் தான் , ஆனால் இந்த சீசனில் சில சமயங்களில் குடும்பவிழா வைத்து சோதனை தருவார்கள் , இம்முறை தமிழும் நானும் அன்று சித்தூரில் தங்கையின் இளைய குமாரன் பெயர் சூட்டுவிழா , தவிர்க்க இயலாத சூழல் , மனமோ தமிழும் நானும் இழக்க கூடாது என்பதில் திண்ணமாக இருக்க , நானும் ஆதித்ய சஞ்சயும் என் இளைய சோதரியும் காலை டபுள் டெக்கரில் கட்பாடி சென்று அவசர கதியில் மதிய விருந்தை முடித்து அரக்க பரக்க காட்பாடி சேரும்போது 2.00 மணி , 2.05 பெயர் தெரியாத ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக ஏசியில் ஏறி வசவுகள் வாங்கி ஒரு வழியாக பெரம்பூரை மிதிக்கும் போது மாலை 4 மணி , இல்லம் சென்று இல்லாள் பிள்ளைகளோடு வித்வத் சபைக்கு வந்து சேர்ந்தோம். ஆம் வேறு ஒரு கச்சேரி என்றால் கூட ரன்னிங் , ஜம்பிங் ட்ரெக்கிங் போன்ற வீரசாகசங்களை தவிர்த்திருக்கலாம் , நடப்பதோ , தமிழும் நானும் , தவற விடுவோமா ! ஒரு காலத்தில் தலைவர் முழுத்தமிழ் கச்சேரி என்றால் தமிழ் இசை சங்கம் அல்லது சுபஸ்ரீ நடத்தும் மார்கழி மஹா உற்சவம் , அந்த உற்சவத்திற்கு அனுமதி இலவசம் , ஆகவே செட்டிநாடு பள்ளியானாலும் , அடையார் இளைஞர் விடுதியானாலும் திருவிழா போல் கூட்டம் , தலைவர் மிகவும் மெனக்கெட்டு புது புது தலைப்புக்களில் கச்சேரி தருவார், ஆழ்வார்கள் , துரைசாமி கவிராயர் , வேதநாயகம் பிள்ளை , பதவர்ணப் பாக்கள் என , ஒரு கட்டத்தில் இலவசம் என்றால் தான் கூட்டம் வருமா என்ற கேள்வி எனக்குகள் உதிக்க , அதற்குள் தலைவர் , தமிழும் நானும் என்று ஒரு நிகழ்வை அறிவித்து நடத்தினார் , அதிலும் சீட்டுக்கு நள்ளிரவே சீட்டு போடும் வித்வத் சபையில் , எந்தவித கடினமும் இல்லாமல் ஆன்லைனில் சீட்டு , இப்போது தலைவரின் சஞ்சய் சபாக்கெல்லாம் முன்னோடி தமிழும் நானும் , கூட்டம் இலவசக் கச்சேரியை விட பன்மடங்கு வந்தது , வருகிறது , வரும் . ஆயிரம் சொன்னாலும் தமிழில் பாடும் போது உணர்ந்து கேட்பது போல் வேறு மொழிகளில் வராது. அதிலும் ஞாயிறு பாடல் பட்டியலில் ,பூமேல் வளரும் அன்னையே , உன்னை அல்லால் , வடிவேல் முருகையனே ராதாப நாட்டுக்குறிச்சி , சின்னச்சிறு கிளியே , முத்தாய்ப்பாய் உறுதி ! பாடல் , தமிழும் நானும் கச்சேரிக்கு எத்தனை தயார் செய்து வருகிறார் தலைவர் என்று எண்ணும் போது பிரமிப்படைந்தோம். நிர்மூடா தேவ ஜெகன்னாநாதா உன் கண்களுக்கு புலப்படவில்லையோ என்று கோபலார் , கோவபாலராய் கர்ஜித்தார் , ஒரு வைணவப்பாடு கூட இல்லை என்று தன் பங்கிற்கு பஞ்ச் விட்டான் திருமலை என் முகத்தில் , அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அவையுள் நுழைந்தோம் , மெல்ல மெல்ல அவை நிறைந்தது , அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய பூவுலகில் இந்த கர்நாடக சங்கீதத்தில் தமிழுக்கான இடத்தை விடாப்பிடியாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கச்சேரியிலும் ஓங்கி ஒலிக்கும் இசை கோ ! சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரியைத் துவக்க ஆயத்தமானார் , தலைவரோடு நிரந்திர கூட்டணி , நெய்வேலியார் , வரதர் , கஞ்சீராவில் அனிருத் ஆத்ரேயா , பின்பாட்டு ரேதஸ் , ராகுல் தம்பூரா பற்றினார். தெள்ளு தமிழ் கச்சேரி தன்னுள் இரண்டு ஆச்சர்யங்களை புதைத்திருப்பதை அறியாத ரஸிகர் குழாம் ஆயத்தமானது இசை வேள்வியில் இன்புற.
தேவா ஜெகன்னாதா சரணம் பாடினார் தலைவர் , ஹம்ஸத்வனி ராகம் , தலைவரின் சரணத்தில் அரங்கும் சரணடைந்தது , ஹம்ஸத்வனியுடன் கச்சேரி துவக்கம் என்றுமே ஒரு இதயத்திற்கு இதமான உணர்வை தரும். ஆழ் கடலில் அமைதியான படகாய் தேவா ஜெகன்னாநாதா சரணம் சென்று கொண்டிருக்க , திடீரென ஆழிப்பேரலையாய் தேவா சங்காதியர்கள் மகிழும் மூவாயிரவர்கள் நாவால் துதி செய்யும் என்று அனுபல்லவியில் முழங்கினார் , முழவும் உடனே முழங்கியது அதே தொனியில் , பிடிலும் பிடித்துக்கொண்டது நடையை . அனுபல்லவியை அனுபவித்துக் கேட்டு தில்லை மாநகர் சிவபெருமானே என்ற சரணத்தில் சிரம் தாழ்த்தி சிவபெருமானை துதித்தோம். தலைவர் சிவபெருமானில் பல்வேறு சித்துக்களை காட்டினார் , எல்லை இல்லா இன்பம் தரும் தேனை பருகினோம் , பாடல் முழுதும் முழவு அருமையாக ஒலித்தது , தலைவரோடு இந்த ஒட்டப்பந்தயத்திற்கு தயாராய் இருப்பார்கள் சோதரர்கள் இருவரும். இவர்களோடு அனிருத்தும் அருமையாய் பயணித்தார். ஸ்வரம் துவக்கி வரத்தை தொடர்ந்தார் தலைவர், ஹம்ஸத்வனி ஸவரங்கள் காதிற் அருங்கலணாய் அமைந்தது , நிரவல் ஸ்வரத்தில் தலைவரை விஞ்ச ஆளேது , தொடர்ந்து கல்பனாஸ்வரம் , ஸ்வரப்பிரஸ்தாரம் என்று அமர்களப்படுத்தினார் தலைவர் , முதல் பண்ணிலேயே அரங்கை அசரவைத்தார் நம் அசரா நாயகராம் இசை வேழம் .
ஆனந்த கச்சேரியில் அடுத்து ஆனந்த பைரவியில் பூமேல் வளரும் அன்னையே , மழவை சிதம்பர பாரதி பண் , ஆம் இன்று மூன்று பாரதி பாடல் என்று கொக்கரித்தார் , கோபால கிருஷ்ணபாரதி. காமேவும் மலரினில் தேமேவும் சுரைநகர் வரிகளில் தலைவர் ஆனந்த பைரவியின் மொத்த ரஸத்தையும் பிழிந்து பாடினார் , காட்சியாய் வந்தருள் மீனாட்சி மணம் பொருந்தும் என்று தில்லைக்கூத்தனை பாடிய கையோடு மீனாட்சி அன்னையை போற்றினார். மானே சொக்கேசர் பங்கில் தானே வளரும் கிருபை வானே மாமுகன் மயிலின் முருகோனே தாயென்ன வளர் என்று தலைவரின் தீந்தமிழ் அர்ஙகத்தினரை இன்பத் தீண்டல் தீண்டியது , மீனேர் விழியே உன்னை நானே மிக வணங்கினேனே சிதம்பரம் சொல் தேனே பருகி நிதம் என்று பருகினோம் தமிழை , வாணி புவி மகிழ் சர்வாணி மதுரமலர் வேணி மங்கள வசன சுகபாணி நித்யகல்யாணி ஐந்தொழிலும் த்ராணி பெரும் சுந்தர ராணி வேதாகம புராணி அனுதினம் , அடடா மழவையார் என்னமாய் எழுதியுள்ளார் , அதை எத்தனை அழகாய் தருகிறார் நம் இசைசிகி.
ஆலாபனை மாரரஞ்சனி அடுத்து , 25வது மேளம் , விவாதி ராகம் , அதை விஸ்தீரமாய் தருபவர் நம் தலைவர் , கோடீஸ்வர அய்யர் போல் மேளகர்த்த மோகனர் சஞ்சய். சாருகேசிக்கு முந்தைய ராகம் இது , உருக்கம் பக்தி கருணை யாவையும் உள்ளடக்கி வெளிவந்தது தலைவர் ஆலாபனையில் , தொடர்ந்து வரதரிடம் மாரரஞ்சனி மதிமுகம் காட்ட அவர் ஆழமாய் வாசித்தருளினார் , மீண்டும் மாரரஞ்சனிமயமாக்கினார் வித்வத் சபையை.வடிவேல் முருகையனே பாடினார் தலைவர் , அன்றைய தினத்தில் மூன்றாம் பாரதி கவிகுஞ்சர பாரதி பாடல் , தந்தையை பாடி தாயாய் பாடி பிள்ளையை பாடினார் தலைவர் , பன்னிரு கையனை வணங்கி மகிழ்ந்தோம். படி புகழ்ந்திடும் சந்தத்தடவரையில் அமர்ந்து பங்கஜ வதனா விங்கிட சுதனா துங்கஜய கரா மங்கள வரதா என்று அனுபல்லவியை ஆசை தீர பாடி ஸ்வரம் சென்றார் தலைவர் , நெய்வேலியாருடன் துவந்தத்தை கச்சேரியின் முதலிலேயே ஆரம்பித்துவிட்டார், தலையாட்டியார் உதட்டை கடித்தவாறு அருமையாக வாசித்து ரஸித்தார் , துவந்தத்தை , பாதி மதி அணிந்த ஆதி சக்தி தன் பாலா , பகரும் கவி குஞ்சரம் புகழ் தமிழுக்கு அனுகூலா தடிலிங்கிய குழல் மாது வள்ளி மணாள , தண்டரளமணி தண்டிரையோடு திறந்தொளி பரவி மணிவளர் செந்தில் என்று சரணத்தை தலைவர் பாடிய வேகத்தை என் சொல்வது , மீண்டும் சிட்டஸ்வரம் நம் மதிக்கு மாமருந்தாய் அமர்ந்தது.பதநிதப பாடி பாடி நம்மை கிறங்கடித்தார் , மீண்டும் ஒரு குறு த்வந்தம் பன்னிருகையில் நெய்வேலியாருடன் நடாத்தினார் இசைப்பரி.
அனைவரும் அடுத்த ஆவலுடன் காத்திருந்த , கல்யாணி ஆலாபனை துவங்கிற்று , மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் , சீசனின் இரண்டாம் கச்சேரியிலேயே தலைவர் கல்யாணியை களமிறக்கிவிட்டார் , காம்போதி பாடியாச்சு கல்யாணி பாடி இன்னும் நாட்டுக்குறிச்சியும் முடிச்சு , எல்லா இரகாத்தையும் பாடிட்டா வேறென்ன பாடுவார் 11 கச்சேரியில என்ற் திருமலை கேட்க நம் திரும்பாமல் கல்யாணியில் கசிந்துருகினோம்.ஆஹா என்னே உருக்கம் என்னே பக்தி , கல்யாணியில் சஞ்சய்க்கு நிகர் கல்யாணியே , இருக்காத பின்னே கல்யாணியில் பிறந்தவராயிற்றே என்று உபரி தகவல் தந்தார் கோபாலர் , கல்யாணியில் இனி என்ன இருக்கு என்று கேட்கும் நிலையில் பாடி திடீரென ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள் நாடி விருத்தம் துவக்கினார் அடுத்த விநாடி ஆச்சர்யங்களின் நாயகன் சஞ்சய் , அம்மா அம்மா என்று பாடி பாடி பாடி பாடி உருகினார் , கேட்டு கேட்டு கேட்டு நாம் உருகினோம் என்று சொல்லவும் வேண்டுமோ அப்படியே பாபநாசம் சிவனின் உன்னயல்லால் வேறே கதி பாடினார் தலைவர் , என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் என்று பாடி நம்மை கல்யாணியில் ஆடவிட்டார் தலைவர் , அம்மா இனி ஆடமுடியாது திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க என்று தலைவர் கல்யாணியில் சங்கதிகளை போட்டு போட்டு பாட அரங்கில் ஆடாத ஆளில்லை இசையில் , நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி வரியில் நிரவல் அமைப்பார் தலைவர் என் முடிவு செய்து , ஆக கல்யாணி சப்மெயின் என்பது திண்ணமானது , அடுத்த ஐந்து நிமிடங்கள் அவையில் அத்தனை பூரிப்பு மகிழ்வு உணர்ச்சிவயப்படல் என்று தலைவர் , மயிலையில் அமர்ந்து மயிலை கற்பகாம்பாளை தன் நாவாண்மையால் அர்ச்சித்தார் , எங்கும் நிறைந்தவள் அரங்கில் வந்தமர்ந்து ரசித்தாள் இசைத்தாய் , தலைவரின் மனக்கோவில் தாய் , திருமயிலை தேவி அருள் அனைவரும் பெற்றோம். உன்னையல்லாலில் தலைவர் நிரவல் அமைத்தார் , எதிர்பாராததை எதிர்பார் என்பதை மீண்டும் ஊர்ஜிதப்படுத்தினார். உலகெல்லாம் ஈன்ற அன்னை நம் மனமெல்லாம் நிறைந்தார் , மீண்டு்ம் மீனாட்சி காமாட்சியில் மிரள வைத்தார் அவையை , எங்கும் கல்யாணி மணம் கமழ கமழ நிரவல் அமைந்தது , நிரவல் ஸ்வரம் இன்றி பாடல் நிறைவு பெற்றது , உன்னயல்லால் , தலைவரல்லால் வேறே எவர் இத்தனை அழகாய் இதை செய்யமுடியும் , கல்யாணியில் சஞ்சய் என்றும் இசைகேசரி.
அடுத்த விநாடி ஆச்சர்யம் ராமசாமி தூதன் நானடா அடடா ராவண என்று தலைவர் பஹூதாரியில் துவக்கினார் , அருணாசல கவியின் ராமநாடகப்பாடல் , தலைவரின் பணமே , நூலைப்படி , சீர்வளர்பசுந்தோகை மயிலான் ,பட்டியலில் சமீபத்திய பாடல் இந்த பஹூதாரி இதை தன் ஆசை தீர பாடி வருகிறார் , பலரின் நேயர் விருப்பமாகவும் இருக்கிறது , தலைவரின் துள்ளல் பாடல் உச்சரிப்பே பிரதான காரணம் , மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும் மறைந்துநின்று தந்தநான் அல்லடா , புறம்பே நின்று வந்தநான் அல்லடா என்று தலைவர் அமர்க்களமாய் பாட அரங்கில் ஆடாத தலையில்லை , இராமனை பாடாவிட்டாலும் , அனுமனையாவது பாடினாரே என்று மகிழ்ந்தான் திருமலை , கோபாலரும் உற்சாகமாய் துள்ளினார். அந்த வீர கோதண்ட பாடும் போதே தம்முள் உத்வேகம் பிறக்கிறது , பாடல் கடையில் மீண்டும் செல்ல சீண்டல் நெய்வேலியாருடன். இந்தப்பாடலை கேட்டிருந்தால் இராவணணும் ரசித்திருப்பான் அப்படி பாடினார் இசை வேங்கை.
துள்ளலுக்குப்பின் உருக்கத்தின் பிடியில் அவை ஆம் தலைவர் புது முயற்சியாய் இராமலிங்க அடிகளாரின் கல்லார்க்கும் கற்றவர்க்கும் புஷ்பலதிகாவில் பாடினார் , கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே என்று பாடல் மிகவும் மெல்லிய கதியில் பாடப்பட , சற்றுமுன் அத்தனை பரபரப்பாய் பாடிவிட்டு அத்தனை அமைதியை தன்னுள் தாங்கி எப்படி முடிகிறது என்று வியந்தோம், இதென்ன கானா பாடல் போல் உள்ளது என்றான் திருமலை , கோபாலர் அவனை முறைத்து இதெல்லாம் பாட பாடத்தான் அனைவருக்கும் பிடிபடும் என்றார் , நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே என்று தலைவர் பாட , திருமலை உனக்குத்தான் என்றார் கோபாலர் , எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே என்று பாடலை தலைவர் முடிக்க , சிவம் எல்லார் உள்ளத்திலும் வீற்றிருந்தது , பக்தியை கசிய கசிய கேட்கவைத்தார் நம் இசைப்புறா .
ஆலாபனை நாட்டுக்குறிச்சி அடுத்து , இசை உலா இப்போது கடலில் படகில் தலைவர் துடுப்பாய் ஆலாபனையில் நம்மை உலாவச்செய்தார் , நாட்டுக்குறிச்சி என்றுமே நம்மை மயக்கத்தவறாது , இன்று வரை 2012இல் பாரத் கலச்சார் வழி மறைத்திருக்குதே பாடுவதற்கு முன் செய்த ஆலாபனை என் காதில் ஓலிக்கிறது , அடடா என்னே இவர்தம் பேரிசை , என்னே ஒரு கற்பனை என்னே ஒரு குழைவு , பிடிகளை போடுவதாகிலும் , உச்சிக்கு செல்வதாகிலும் , ப்ருஹாக்களிலும் நம்மை கிறங்கடிக்கிறார் ர, சஞ்சய் ப்ரதர் வரதர் ஆக சொல்ல வேண்டுமா , அதே வெஞ்சாமரம் அதே வசீகரம் அவையை மீண்டும் தாக்கியது , காதுகள் தெவிட்ட தெவிட்ட தந்தார் ஆலாபனையை வரதாழ்வார். நாடுடுக்குறிச்சி தானம் தமிழும் நானுமில் தரணியாள வந்தது , வழமையான நிதானம் பின் ப்ரதானம் பின் உச்சபட்ச வேகமென் இருவரின் தானமும் தரமாய் அமைந்தது , சிறந்த எங்களது நாட்டை குறிச்சி என்பார் என்ற தலைவரின் மானசீக குருக்களான ஆலத்தூர் சோதரர்கள் பிரபலப்படுத்தி பாடல் வரிகளை பல்லவியாய் பாடினார் தலைவர் , பல்லவி பல முறை ஆசை தீர பாடுபவர் திடீரென சிறந்த எங்களது நாட்டை குறிஞ்சி என்பார் என்று பாடிவிட்டு நயன மொழியில் வரதர் நெய்வேலியாருடன் ஏதோ சம்பாஷித்து , எங்களது மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்பார் என்று பாட அரங்கில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை , தொடர்ந்து எங்களது காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பார் , இவை இரண்டுக்கும் இடையில் இருக்கும் பால நிலைத்தை பாலை என்பார் , எங்களது வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் என்பார் , எங்களது கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்பார் என்று ஐந்திணை பாடி , சிறந்த எங்கள் நாட்டை தமிழ் நாடு என்பார் என்று பாட எனக்கு மயிக்கூச்செரிந்தது , அவையில் கரகோஷம் விண்ணை பிளந்தது , இதான் சஞ்சய் , இசையின் இலக்கணத்தை மீறாமல் அதே நேரத்தில் புதுமையை அனைவரும் ஏற்கும்படி புகுத்துபவர் , ஒரு நிமிட பல்லவி கச்சேரியின் உச்சத்தை தொட்டது , தொடர்ந்து எங்களது நாட்டை இசை நாடு என்பார் , இந்த ராகத்தை நாட்டை குறிச்சி என்பார் என்று பாடி அரங்கையே அசரவைத்து , ஸ்வரம் துவக்கினார் , ஆனால் என்னுள் உணர்வுப்பேரலையை உருவாக்கியது பல்லவி , கோபாலர் செருமிக்கொண்டு , தம்பி அரவிந்தா ! உண்மையில் தமிழன் ஐந்திணையாக தன் நிலப்பரப்பை இப்படி பிரித்து வாழ்ந்து வந்தான் தொல்காப்பியர் கூட மாயோன் மேய காடு உறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும் வேந்தன் மேய தீம் புனல் உலகமும் வருணன் மேய பெரு மணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனப்பாடியுள்ளார் , இன்று நமக்கு ஆட்சி முறை பற்றி கூறுவோர்க்குஇங்கே குடவோலை முறையில் தேர்தல் நடத்தி அரசாண்ட கதையெல்லாம் தெரிவதில்லை , இந்தியா என்னும் ஒரு நாடு உருவாவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர சோழ பாண்டியர் என பெரும் மன்னாதி மன்னர்கள் ஆண்ட தமிழ்நாடு நம் நிலம் , அதை மதராஸ மாகாணம் என்று மாற்றிய மங்குனிகளையெல்லாம் நைய்யப்புடைக்க பிற்காலத்தில் காஞ்சித் தலைவன் அண்ணாதுரை தமிழ்நாடு என்று பெயரை மாற்றினார் , இதற்கான ஒப்புதலை ஒன்றியம் தரக்கூடாது என்று சதிகார சக்கரவர்த்திகள் எத்தனையோ புரட்டுக்ள செய்தாலும் இந்திய நாட்டில் நாடு என்கிற பெயருள்ள ஒரு மாநிலம் நம் மாநிலம் அதை கண்டு இன்று வரை பொருமுகிறார்கள் , தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று அண்ணா முழங்கியது எல்லாம் வரலாறு என்று என்று நா தழுதழுக்க கூறினார் கோபாலகிருஷ்ணபாரதி , வித்வத் சபையில் சிறந்த இந்த நாட்டை தமிழ்நாடு என்பார் என்று பாட சஞ்சய் ஒருவரால் தான் முடியும் என்று தீர்கமான குரலில் கூறினார் , ஆம் இது ஒரு போல்ட் பொலிட்டிக்கல் ஸ்டேட்மெண்ட் என்றான் திருமலை ,நெஞ்சம் விம்ம விம்ம நானும் கொஞ்சம் ஆனந்தக்கண்ணீர் விட்டு ஸ்வரத்தில் ஆழ்ந்தேன் , தலைவர் கல்பனாஸ்வரம் கட்டவிழ்த்தது , நாட்டைகுறிச்சி ஸ்வரம் இசை நாட்டை தமிழ் நாட்டை ரஸிகர் நாட்டை கிறங்கடித்தது , ராகமாலிகை எதிர்பார்த்து ஏமாந்தோம் என்பது வேறு கதை , அடுத்து இந்தப்பருவத்தின் இரண்டாம் கச்சேரி என்றாலும் இனி வரும் 9 கச்சேரிகளுக்கும் ஆகப்பெரும் சவாலாய் தனி தந்தார் நெய்வேலியார் , முதலில் சாதுப்பிள்ளையாய் தொப்பி வாசித்தார் கும்கிகள் நிறைந்த தின மெல்ல மெல்ல விஸ்வரூபமாய் காட்டாற்று வெள்ளமாய் சண்டமாருதமாய் ஆழிப்பேரலையாய் , எரிமலையாய் தெறித்தது , அனிருத் ஆனமட்டும் பங்களித்து தலையாட்டியாரின் வேகத்திற்கு ஈடு செய்தார் , இருவரும் மிகப்பெரும் த்வந்தத்தை நிகழ்த்திக்காட்டினர் என்றே சொல்லவேண்டும். மொத்தத்தில் யாரும் எதிர்பாரா ராகம் தானம் பல்லவியை தந்தார் தலைவர் என்னும் இசைஅரிமா.
நான்காம் பாரதி பாடல் அடுத்து ஆம் சுப்ரமணிய பாரதியின் சின்னஞ்சிறு கிளியே ராகமாலிகை பாடினார் தலைவர் , காப்பியில் பிள்ளைக்கனி அமுத தர , மாண்டில் ஓடி வருகையிலே- கண்ணம்மா ஓடிவந்தாள் அவைக்கு நமக்கு உள்ளம் குளிர்ந்தது ,இந்த பாடல் பாடும் போது அட்சயஸ்ரீ நம் அருகில் இருக்க வேறென்ன வேண்டும் , வசந்தாவில் உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி பாடி , திலங்கில் கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ , இந்தோளத்தில் சற்று முகம் சிவந்தால் , நீலமணி உன் கண்ணில் நீர் வழிந்தால் அதிலும் அந்த கண்ணம்மாவில் ஒரு அழுத்தம் அப்பப்பா பேரிசை ,அடுத்து நீலாம்பரிக்கு காத்திருந்தது , சொல்லும் மழலையில் சொக்கிப்போனம் , வலஜி இன்பக்கதை கேட்டு கேட்டு மகிழ்ந்தோம் , கடை சரணம் தேஷில் மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகள் உண்டோ அடடா இந்த தேஷில் தான் எத்தனை இனிமை என்று அரங்கு சொக்கியது , சுப்ரமணிய பாரதியின் மகோன்னத படைப்பு இந்தபா , அதிலும் தலைவர் பாடினால் தான் எத்தனை அழகு , எத்தனை முறை பாடினாலும் நம்மை மிரட்சியடையச்செய்கிறார் நம் இசைஅன்னம்.
அரங்கை தன் இசையால் சுருட்ட அடுத்த களமிறக்கினார் சுருட்டியை , தலைவரின் இசை மாணாக்கர் சீன்ரோல்டன் என்னும் ராகவேந்திர ராவின் இசை தொகுப்பில் தலைவர் பாடிய பாடல் உறுதி , கிருத்திகா நெல்சன் என்பார் இயற்றிய பண் , நீயின்றி வேறேது உறுதி யாதுமாகி என் யாவுமாகி யாவும் மாற என் யாகமாகி இகமாகி என் ஏகமானதுவே என்று தலைவர் சுருட்டியில் நம்மை சுகிக்க வைத்தார் , யாயாகி சேயாகி தீயாகி நீராகி ஊனாகி விந்தையானதுவே உண்மையானதுவே என்ற பொருள் பொதிந்த வரிகள் கர்நாடக கச்சேரி மேடைக்கு புதிது என்றே சொல்ல வேண்டும், அடுத்து சுருட்டியிலிருந்து சிந்து பைரவிக்கு தாவிய இடம் அருமையிலும் அருமை , ஆணை உன் மேல் ஆணை ஒரு கணமும் உனைப் பிரிந்தே இனி இருக்க மாட்டேன் என்று தலைவர் பாட , அந்த தொகுப்பில் பாடிய அரிப்புல்லா ஷா ரஃபி யானை உன் மேல் யானை என்று பாடுவது போல் இருக்கும் , அந்த வரிகளை தலைவர் பாடும் போது கேட்க வித்தியாசமாய் தான் இருந்தது . உறுதி இனி பல கச்சேரி களங்களில் ஒலித்து புகழ்பரப்பும் என்பது உறுதி , அதை செய்துவிடுவார் நம் இசைகுயில்.
மீண்டும் ஒரு பாரதி பாடல் வாழிய செந்தமிழுக்கு எழுந்து நிற்க காத்திருந்த நமக்கும் இல்லாள் ஸ்ரீதேவி சுபுத்ரன் ஆதித்ய சஞ்சய் சுபுத்ரி அட்சய ஸ்ரீ அகமகிழ தலைவர் பாரதிதாசனின் இறவாப்புகழ் துன்பம் நேர்கையில் பாடினார் அவையில் அத்தனை கரகோஷம் , அதானே தமிழும் நானும் கச்சேரியில் புரட்சி கவிஞர் இல்லாமலா என்று உற்சாக குதி போட்டு தேஷில் கரைந்தோம் , தமிழின் ஒட்டுமொத்த இனிமையும் வரு பாடலில் உணரலாம் என்றால் அது இந்த பாடல் தான் என்றே கூறலாம் , மாமேதை தண்டபாணி தேசிகர் தேஷை தேர்ந்தெடுத்தமைக்கு தமிழ் கூற் நல்லுலகு என்றும் கடமைப்பட்டுள்ளது , பாரதிதாசனின் அரும்பா , இதய கவலைக்கெல்லாம் இதமான மருந்து , சற்று முன் பாடிய சின்னஞ்சிறு கிளியும் தந்தை சேயிடம் பாடுவது இதுவும் அஃதே ஆனால் என்னே ஒரு வேறுபாடு , என்னே அருமையாய் அமைத்துள்ளார்கள் தத்தம் பாடலை , வன்பும் எளிமையும் சூழும் நாட்டில் , தமிழ்நாட்டில் நற்றமிழ் பாவால் நம் இன்னல் மறைந்து இன்பம் பூத்தது.திறமை காட்டி உன்ன ஈன்ற என்னுயிர் செல்வமாக மாட்டாயா கண்ணே தமிழ் செல்வமாக மாட்டாயா வரிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது , அத்தகு பேரிசை தந்தார் நம் ஆசை ஆரி.
வாழிய செந்தமிழுக்கு வழக்கம் போல் பித்தர் குழாம் மாத்திரம் எழுந்து நிற்க , இன்னும் பலர் எழுந்தனர் , அடடா என்னே இவர்கள் தமிழ் பற்று என்று எணத்துவங்கும் முன் அவர்கள் , கார் பார்க்கிங் நோக்கி சாவியை சுழற்றி செல்வது கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே , இந்த முறை கெட்ட மனிதர்களை கண்டு என்று மனம் வலித்தது. எத்தகைய கச்சேரி எத்தனை திட்டமிடல் , எத்தனை அர்ப்பணிப்பு , கச்சேரி முடிந்து ஒரு நிமிடம் நின்று கைதட்டி செல்ல முடியாத இவர்களை என்ன சொல்வது என்று கோபாலர் கொந்தளித்தார். அவரை மடை மாற்றும் விதமாய் பல முறை கூறிய அதே வாக்கியத்தை கையிலெடுத்தேன் , கர்நாடக சங்கீத உலகில் தமிழுக்கு தனி அரியாசனை வழங்கிய சஞ்சய் புகழ் இந்த புவி உள்ளளவும் இருக்கும் , காலங்கள் மறையலாம் , புதியவர்கள் வரலாம் ஆனால் இந்த லெகசி என்பார்களே மரபு , இந்த சஞ்சய் மரபு என்றும் நிலைத்திருக்கும் , இன்று நான் எழுதும் கிறுக்கல்களை பலர் படிக்காமல் கடந்து விடலாம் , இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து , ஒரு நாள் என் வரிகளை படிப்பவர்கள் சஞ்சய்சுப்ரமணியன் என்னும் மகா வித்வான் தன்னந்தனியராக இந்த தமிழுக்கான அங்கீகரத்திற்காக செய்ததையெல்லாம் தேடி தேடி எடுத்து பார்த்து வியந்து , அவரை போற்றுவார்கள் , ஏதோ சிசனுக்கு சீசன் கச்சேரி செய்தோம் என்று பத்தோடு பதினொன்று அல்ல என் தலைவன் , தமிழன்னையின் தவப்புதல்வன் தமிழாய்ந்த தலைமகன் தெள்ளு தமிழ் கச்சேரி தரும் ஐந்திணை சேயோன் சிறந்த இசைநாடு தமிழ்நாட்டின் இசைசிங்கம் சிறந்த எங்கள் சஞ்சய் .
Commenti